google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: ஜனவரி 2022

ஞாயிறு, 30 ஜனவரி, 2022

பெண்வழிச் சேறல்

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது.
901

மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர், சிறந்த பயனை அடையமாட்டார், கடமையைச் செய்தலை விரும்புகின்றவர் வேண்டாத பொருளும் அதுவே.

பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்.
902

கடமையை விரும்பாமல் மனைவியின் பெண்மையை விரும்புகின்றவனுடைய ஆக்கம், பெரியதொரு நாணத்தக்க செயலாக நாணத்தைக் கொடுக்கும்.

இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.
903

மனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை ஒருவனுக்கு எப்போதும் நல்லவரிடையே இருக்கும் போது நாணத்தைத் தரும்.

மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்தல் இன்று.
904

மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.

இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.
905

மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.

இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்.
906

மனைவியின் தோளுக்கு அஞ்சி வாழ்கின்றவர் தேவரைப் போல் இவ்வுலகில் சிறப்பான நிலையில் வாழ்ந்த போதிலும் பெருமை இல்லாதவரே ஆவர்.

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.
907

மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தை தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது.

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர்.
908

மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தமது நண்பர்க்கு உற்ற குறையையும் செய்து முடிக்க மாட்டார், அறத்தையும் செய்ய மாட்டார்.

அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்.
909

அறச் செயலும் அதற்குக் காரணமாக அமைந்த பொருள் முயற்சியும், மற்ற கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை.

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்(கு) எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.
910

நன்றாக எண்ணுதல், பொருந்திய நெஞ்சத்தோடு தக்க நிலையும் உடையார்க்கு எக்காலத்திலும் மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை.

இறந்தவருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி

என் அப்பா திரு மு. நடராஜன் ஆச்சாரி. அவர் வயது மூப்படைந்து 
தன் 93 ஆம் வயதில் 15.08.2021 அன்று காலமானார். 

முன்னதாக அவருக்கு 26.06.2021 இல் பொன்னமராவதி புதுப்பட்டியில் அவர் வாழ்ந்த வீட்டிலேயே கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. அதனால் நன்மையே.

இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்படவில்லை.

மகன்களும் மகளும் மருமகனும் சூழ 
இயற்கை எய்தினார்.

அவரது இறப்பை நான் ஆன்லைனில் பதிவு செய்து இருக்கிறேன். அதற்கான ரெஃபரன்ஸ் நம்பர் 38238 ஆகும். இன்னும் ஊருக்குப் போய் இறப்புச் சான்றிதழைப் பெறவில்லை.

ஆனால் அவர் இரண்டாம் முறையாக காரையூரில் தடுப்பூசி போட்டுக் கொண்டார் என சில மாதங்களுக்கு முன்பு சர்ட்டிபிகேட் வந்தது. அதை கோவின் இணையதளத்தில் சொல்லி நீக்கினேன். 

ஆனால் அவர் இரண்டாம் தடுப்பூசியை 29.01.2022 ஆம் தேதி அன்று பொன்னமராவதியில் போட்டுக் கொண்டார் என்று மறுபடியும் சர்ட்டிபிகேட் வந்துள்ளது.

மீண்டும் நான் இதை கோவின் தளத்துக்குச் சென்று சொல்ல வேண்டியுள்ளது. அப்படிச் செய்தால் மறுபடியும் சில நாட்களுக்குப் பின் ஒரு நாளில் எங்கோ போட்டுக் கொண்டார் என்று வருமா?

சொல்லாமல் இருந்தால் பின்னர் மூன்றாம் ஊசி போடப்பட்டது என்று வருமா?
மறைந்தவரின் பழைய ஃபோட்டோ.

 பிற பின்பு
அன்புடன்
ஆறுமுகம் நடராஜன்
தற்போது மதுரையிலிருந்து.

புதன், 26 ஜனவரி, 2022

கொடியது, இனியது, பெரியது, அரியது

முருகன் கொடியது, இனியது, பெரியது, அரியது எவை என்று ஒளவையாரிடம் கேட்டான். அதற்கு ஒளவையார் விடையாக நெடிய வெவ்வேலோய், தனிநெடு வேலோய், எரிதவழ் வேலோய், வரி வடிவேலோய் என்று தொடங்கும் நான்கு பாடல்களைப் பாடினார்.

முருகனே வேலை ஏந்தியுள்ள வேலவன் ஆவான். 

கொடியது

கொடியது கேட்கின் நெடியவெவ் வேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது;
அதனினும் கொடிது இளமையில் வறுமை;
அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்;
அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்;
அதனினும் கொடிது இன்புற
அவர்கையில் உண்பதுதானே.

இந்த உலகில் மிகவும் கொடுமையானது வறுமைதான். அந்த வறுமையும் இளமைப் பருவத்தில் வந்தால் மிக மிகக் கொடுமையானது. அத்தகைய வறுமையை விடக் கொடுமையானது தீராத கொடிய நோய் ஆகும். தீராத கொடிய நோயைவிடக் கொடுமையானது அன்பே இல்லாத பெண்ணுடன் வாழ்வது. அதைவிடக் கொடுமையானது அந்தப் பெண்ணிடம் உணவைப் பெற்று உண்பது ஆகும்.

இனியது

இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
இனிது இனிது ஏகாந்தம் இனிது;
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்;
அதனினும் இனிது அறிவினர்ச் சேருதல்;
அதனினும் இனிது அறிவுள்ளாரைக்
கனவினும் நனவினும் காண்பது தானே!

இந்த உலகில் மிகவும் இனிமையானது தனிமையில் இருப்பதுதான். அதைவிட இனிமையானது இறைவனை வணங்குவது. இறைவனை வணங்குவதை விட அறிவு உடையவர்களைச் சேர்ந்து வாழ்வது இனிமையானது. அதைவிட இனிமையானது கனவிலும் நனவிலும் அறிவு உடையவர்களைப் பார்த்துக் கொண்டு இருப்பது ஆகும்.

பெரியது

பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்!
பெரிது பெரிது புவனம் பெரிது;
புவனமோ நான்முகன் படைப்பு;
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்;
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்;
அலைகடல், குறுமுனி அங்கையில் அடக்கம்;
குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன்;
கலசமோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்;
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்;
உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்;
இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்;
தொண்டர் தம்பெருமை சொல்லவும் பெரிதே!

உலகில் மிகப்பெரியது இந்த உலகம்தான்.  இந்த உலகமோ நான்முகனால் படைக்கப்பட்டது. எனவே நான்முகன்தான் பெரியவன். நான்முகனோ திருமாலின் கொப்பூழில் (தொப்புள்) தோன்றியவன். திருமாலோ அலைகடலில் தூங்குகிறவன். திருமாலைத் தாங்கும் கடல்தான் பெரியது என்றால், அந்தக் கடலும் அகத்தியனின் உள்ளங்கையில் அடங்கியது. அந்த அகத்தியரும் கலயம் எனப்படும் சிறு மண்குடத்தில் அடங்கி இருந்தவர். அந்தக் கலயமோ இந்தப் பூமியில் உள்ள மண்ணால் செய்யப்பட்டது. பூமிதான் பெரியது என்றால், இந்தப் பூமியை ஆதிசேடன் என்னும் பாம்பு தனது ஒரு தலையில் தாங்கியிருக்கிறது. அந்தப் பாம்பை, சிவபெருமானின் மனைவியாகிய உமா என்னும் உமையவள், தனது விரலில் மோதிரமாக அணிந்துள்ளாள். அந்த உமையவளோ சிவனது உடலின் ஒரு பாதியில் ஒடுங்கியிருக்கிறாள். அந்தச் சிவனோ அடியவர்களின் உள்ளத்தில் ஒடுங்கியிருக்கிறான். எனவே அடியவர்களின் பெருமைதான் உலகில் பெரியது.

அரியது

அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிது அரிது மானிடர் ஆதல் அரிது;
மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது.
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது;
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வராயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே.

உலகில் மிகவும் அரியது மானிடராகப் பிறப்பது தான். மானிடராகப் பிறந்தாலும் கூன், குருடு, செவிடு முதலிய குறைகள் இல்லாமல் பிறத்தல் அரியது. இந்தக் குறைகள் நீங்கிப் பிறந்தாலும் அறிவும் கல்வியும் விரும்பிக் கற்றவனாக ஆதல் அரியது. அறிவும் கல்வியும் பெற்றாலும் பிறருக்குக் கொடுக்கும் ஈகையும் நோன்பும் உடையவராய் இருத்தல் அரியது. ஈகையும் நோன்பும் உடையவராக வாழ்கின்றவர்களுக்கு வான்உலகப் பெருவாழ்வு கிடைக்கும்.

பெரியவை எவை?

1. உலகத்தை விடப் பெரியது எது?
2. கடலை விட ஆழமானது எது?
3. மலையை விடப் பெரியது எது?

பதில்களாக மூன்று குறள்கள்:

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் 
நன்மை கடலின் பெரிது.

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் 
மலையினும் மாணப் பெரிது.

கருத்து:

1. உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.

2. இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிடப் பெரிதாகும்.

3.  நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.

செவ்வாய், 25 ஜனவரி, 2022

கொடி ஏற்றுதலும் பறக்கவிடுதலும் வேறுபாடு

சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றுவதைப் போல குடியரசு தினத்தன்று செய்வது இல்லை. இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது.

சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றப்படும். அதாவது கொடியானது கொடிக்கம்பத்தின் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் இருந்து மேல் நோக்கி ஏற்றப்பட்டு, கொடியை மடித்திருந்த சுருக்கு அவிழ்க்கப்பட்டு பறக்கவிடப்படும். இது கொடி ஏற்றுதல் (Flag hoisting) எனப்படும் . 

குடியரசு தினத்தன்று தேசியக் கொடி பறக்கவிடப்படும். அதாவது, முன்னரே கம்பத்தின் உச்சியில்  ஏற்றிக் கட்டப்பட்டுள்ள  கொடி, சுருக்கு அவிழ்க்கப்பட்டுப் பறக்கவிடப்படும். இது "கொடியைப் பறக்கவிடுதல்" (flag unfurling) எனப்படும்.

We hoist the flag on Independence Day, but unfurl it on Republic Day.


திங்கள், 24 ஜனவரி, 2022

புதிர்

இரண்டு அப்பாக்கள் தங்களுடைய மகன்களுக்கு ரொக்கப் பரிசு கொடுத்தனர். ஒருவர் தன் மகனுக்கு 150 ரூபாயும், மற்றொருவர் 100 ரூபாயும் கொடுத்தார்கள். இரண்டு மகன்களும் சேர்ந்து தங்கள் கையிருப்பை எண்ணிப் பார்த்தபோது, மொத்தமாக 150 ரூபாயே இருந்தது. இது எப்படி?

விடை :
தாத்தா, தன் மகனுக்கு 150 ரூபாய் கொடுக்கிறார். அதிலிருந்து அப்பா (தாத்தாவின் மகன்), தன் மகனுக்கு (தாத்தாவின் பேரனுக்கு) 100 ரூபாயைத் தருகிறார். எனவே, மொத்தமே 150 ரூபாய்தான்.


வியாழன், 20 ஜனவரி, 2022

மூன்றாம் முறை தடுப்பூசி

மூன்றாம் கோவிட் தடுப்பூசியை இன்று நான் போட்டுக் கொண்டேன். இது பூஸ்டர் டோஸ். முன்ஜாக்கிரதைக்காகப் போடப்படுவது. ஒரே சான்றிதழில் மூன்று முறை போட்டுக்கொண்ட விபரம் உள்ளது.
அன்புடன் 
பொன்னமராவதி புதுப்பட்டி ஆறுமுகம் நடராஜன், மதுரை சம்பந்தர் ஆலங்குளத்தில் இருந்து.

புதன், 19 ஜனவரி, 2022

இலக்கணப் பிழை தடுப்பூசி

எல்லோரும் தடுப்பூசி செலுத்துங்கள் என்பதும், தடுப்பூசி போடுங்கள் என்பதும் தவறாகும். 

எல்லோரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் என்பதும், எல்லோரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்பதும் சரி. 

தனக்குத் தானே போட்டால் கூட, போட்டுக் கொண்டேன் என்று சொல்வதே சரி.

வேறு எடுத்துக்காட்டு:

முடி வெட்டப் போகிறேன். (தவறு)

முடி வெட்டிக் கொள்ளப் போகிறேன். (சரி)



செவ்வாய், 18 ஜனவரி, 2022

ஆறிரு தடந்தோள் வாழ்க

ஆறிரு தடந்தோள் வாழ்க
அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க
குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க
யானை தன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க
வாழ்க சீர் அடியாரெல்லாம்.

பொருள்:
பன்னிரு தோள்கள் வாழ்க; ஆறுமுகம் வாழ்க; மலைபிளந்த வேல் வாழ்க; சேவல் வாழ்க; மயில் வாழ்க; தெய்வயானை தேவியார் வாழ்க; வள்ளியம்மை வாழ்க; நல்லடியார் அனைவரும் வாழ்க!

விளக்கம்:
ஆறுமுகப்பெருமானின் பன்னிரண்டு அகன்ற பெரிய தோள்கள் வாழ்க; அவருடைய ஆறுமுகங்களும் வாழ்க; கிரௌஞ்ச கிரியைப் பிளந்திடும் ஒப்பற்ற வேல் வாழ்க; சேவற்கொடி வாழ்க; செந்நிறமுள்ள முருகன் அமர்ந்துள்ள மயில் வாழ்க; ஐராவதம் என்னும் யானைக்குரிய தெய்வயானை அம்மையார் வாழ்க; மாறுபாடு இல்லாத வள்ளி நாயகியார் வாழ்க; சிறப்புடைய முருகன் அடியார்கள் எல்லோரும் வாழ்க.


       Salutations to the twelve broad arms of Lord Shanmukha! Salutations to His Six Faces! Salutations to His Incomparable Vel that split the (Krauncha) mountain! Salutations to the Cock (in His banner)! Salutations to the Divine Peacock on which the Lord rides! Salutations to Devi Deivayaanai, fostered by Indra’s Elephant Iraavatam! Salutations to the unchanging Divine Mother Valli Devi! Glory and Prosperity be to all devotees of the Lord!

ஞாயிறு, 16 ஜனவரி, 2022

முதலியார்

முதல் தமிழ் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம்.

நீதிக்கட்சியை ( திராவிட இயக்கம் -  1912) நிறுவியவர் டாக்டர் சி நடேச முதலியார்.

தமிழ் நாடக தந்தை பம்மல் சம்பந்த முதலியார்.

தமிழ் திரைப்பட முன்னோடி நட்ராஜ் முதலியார்.

சிவாஜி கணேசன் அவர்களை அறிமுகப்படுத்தியவர் பெருமாள் முதலியார்.

எம் ஜி ஆரின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்தவர் கந்தசாமி முதலியார்.

நவீன கோவையின் தந்தை என அழைக்கப்படுபவர் திவான் பகதூர் சபாபதி முதலியார்.

21 ஆண்டு காலம் சென்னை பல்கலைக்கழக வேந்தராக இருந்தவர் ஆற்காடு லட்சுமணசாமி முதலியார்.

இந்திய அளவில் புகழ்பெற்ற வழக்கறிஞர் ஆற்காடு இராமசாமி முதலியார்.

இட ஒதுக்கீட்டின் முன்னோடி முத்தையா முதலியார்.

காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் வளர உறுதுணையாக இருந்தவர் முத்துரங்க முதலியார்.

திருநெல்வேலி பாளையங்கோட்டை இடையே உள்ள பாலத்தை தனது சொந்த செலவில் கட்டிக் கொடுத்தவர் சுலோச்சனா முதலியார்.

நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்குத் தனது சொந்த நிலத்தை இலவசமாக கொடுத்தவர் ஜம்புலிங்க முதலியார்.

பெங்களூர் நகர சின்னசாமி ஸ்டேடியத்தைக் கட்டுவதற்கு தன்னுடைய சொந்த நிலத்தை இலவசமாகக் கொடுத்தவர் சின்னசாமி முதலியார்.

தன்னுடைய சொத்து முழுவதையும் கல்வி மற்றும் கோயில் வளர்ச்சிக்காகக் கொடுத்தவர் பச்சையப்ப முதலியார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கியவர் திரு சி என் அண்ணாதுரை முதலியார்.

தந்தை பெரியார் அவர்களுக்கு மருத்துவம் பார்த்தவர் டாக்டர் பி எம் சுந்தரவதனம் முதலியார்.

இந்தியாவில் முதன்முதலில் ஒரு ரூபாய்க்கு தொலைபேசியில் பேசலாம் என்ற திட்டத்தைக் கொண்டு வந்தவர் ஏர்செல் நிறுவனத்தை உருவாக்கிய சிவசங்கர முதலியார்.

உலகத்திலே கணவன் மனைவி இரண்டு பேரும் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களாக இருந்தவர்கள் டாக்டர் சண்முகசுந்தரம் முதலியார் மற்றும் யசோதா சண்முகசுந்தரம் முதலியார்.

மதிய உணவுத் திட்டத்தை காமராஜர் கொண்டு வந்தாலும் அந்த திட்டத்தை செயல்படுத்திக் கொடுத்தவர் நெ து சுந்தரவடிவேலு முதலியார்.

பெண்கள் கல்லூரி அமைப்பதற்கு தன்னுடைய சொத்து முழுவதையும் கொடுத்தவர் வழக்கறிஞர் எத்திராஜ் முதலியார்.

புதிய நீதிக் கட்சியின் நிறுவனர் ஏ சி சண்முகம் முதலியார்.

தமிழ் வளர்ச்சிக்கு  மாபெரும் தொண்டாற்றியவர் திரு வி கல்யாண சுந்தர முதலியார்.

மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு முதல் துணைவேந்தர் டாக்டர் மு வரதராஜன் முதலியார்.

தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர் பக்தவச்சலம்  முதலியார்.

திராவிடர் கழகத்தின் முதல் பெண் தலைவர் மணியம்மை முதலியார்.


சனி, 15 ஜனவரி, 2022

V.V.H.S. Craft Period

பொன்னமராவதி V.V. ஹையர் செகண்டரி ஸ்கூல், நான் படிக்கும் போது ஹைஸ்கூல். க்ராஃப்ட் பீரியட் (Craft period) என்று ஒன்று இருந்தது. இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆசிரியரின் பெயர் க்ராஃப் வாத்தியார். செக்கச்  செவேல் என்று இருப்பார். உடுத்தியிருக்கும் ஆடை வெள்ளை வெளேர் என்றிருக்கும். மிகவும் நல்லவர். தங்கமானவர். பலவித நெசவுத் தொழில்களைச் சொல்லிக் கொடுப்பார்.

பஞ்சை தக்கிளியின் துணைகொண்டு நூல் நூற்று மகிழ்வோம். பூக்கடைகளில் நூல் கட்டை மிஞ்சும். அதை வைத்து மாலை செய்யக் கற்றுக் கொடுத்தார்.

Plywood எனப்படும் மூவொட்டுப் பலகையை வைத்துக் கொண்டு இடுப்பு பெல்ட் செய்வது எப்படி என்று சொல்லிக் கொடுத்தார்.

அவர் பாடம் நடத்தும் இடமே ஒரு தறி நெசவுக் கூடம் ஆகும். கையையும் காலையும் வைத்து எப்படி நெசவு செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பார்.

உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?

பொதுவாக அவருக்குக் கோபம் வராது. வந்தால் நூல் கண்டால் அடிப்பார். அது நம் நன்மைக்கே ஆகும்.

"அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள். "

"கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்; கவலை உனக்கில்லை  ஒத்துக்கொள்"
என்பதற்கு ஏற்ப நான் படித்த பள்ளியில் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தார்கள்.

இப்போது கைத்தொழில் அற்றுப் போய்விட்டது. சுவரில் ஆணி அடிக்கக் கூட மின்சாரம் தேவை. 

மரம் வெட்டுதல், கடைதல், தங்க நகை செய்தல், சிலை செய்தல், வீடு கட்ட கலவை ஆக்குதல், ரோடு போடுதல், எல்லாமே இயந்திரமயமாகி விட்டது.

விசைத்தறி கம்ப்யூட்டர் மயம் ஆகிவிட்டது.

இருப்பினும் என்னிடம் ஊசிநூல் இன்னும் உள்ளது. A stitch in time saves nine. ஆகவே அப்போதைக்கப்போது கிழிந்த துணிகளை நானே கைத்தையல் போட்டுக்கொள்வேன்.

என்னுடைய ஹீரோ ஹோண்டா CD 100 SS மோட்டார் பைக்கின் பேட்டரி டெர்மினல்களை நானே Soldering iron கொண்டு பற்றவைத்துக் கொள்வேன். 

பழைய டிரான்ஸிஸ்டர் ரேடியோவை நானே பழுதுபார்த்துக் கொள்வேன்.

இதற்கு எல்லாம் உறுதுணை என் அப்பா மட்டும் அல்ல. V.V.H.S. Craft period ம் ஆகும்.

பிற பின்பு. 
வணக்கம்.
அன்புடன்
பொன்னமராவதி புதுப்பட்டி ஆறுமுகம் நடராஜன் மதுரை சம்பந்தர் ஆலங்குளத்தில் இருந்து...

மாட்டுப்பொங்கல்

வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப் பள்ளி, முன்பு உயர்நிலைப் பள்ளியாய் இருந்தது. அப்போது நான் அங்கே மாணவன். காலையில்  ஸ்கூலுக்குப் போனால் மாலையில் வீடு திரும்பலாம். ஆனால் அதிகாலையில் நான் போவேன். இரவில் வீடு திரும்புவேன். ஏன்?... வாலிபால். அது இலவச விளையாட்டு. பள்ளிக்கூடத்துப் பந்து. சொல்லிக் கொடுக்க விளையாட்டு ஆசிரியர்கள். ஒருவர் மகா கோபக்காரர். அவர் பெரிய P.E.T. ஜெயபாலன் சார். சாதுவான சின்ன P. E. T. அவர் பெயர் மறந்துவிட்டது. பின்னர் மேலும் ஒரு P. E. T. வந்தார். அவர் திரு. வில்லியம் என்று நினைக்கிறேன். எனக்குப் பழக்கம் இல்லை.

காலையில் ஸ்கூலுக்குப் போனால் கேம்ஸ் ஆடிய பின் இரவில்தான் வீட்டுக்குத் திரும்புவேன். ஆகையால் போகும்போதே கட்டுச் சோற்றை எடுத்துச் செல்வேன்.

மதிய இடைவேளையின் போது சாப்பிட்டவுடன் வாலிபால் விளையாடுவோம். பின்னர் ஸ்கூல் முடிந்தவுடன் மேலும் விளையாடுவோம்.

மதியம் எடுத்துச் செல்ல கட்டுச் சோறு இல்லாவிட்டால் என் தந்தையின் பட்டறைக்குச் செல்வேன். அவர் 30 காசு கொடுப்பார். அதை உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண பவனில் கொடுத்து பொங்கல் வாங்கி அதை சைக்கிள் ஃபிரேமில் மாட்டிக்கொண்டு பள்ளிக்குச் செல்வேன். பொங்கலை சைக்கிளில் மாட்டியதால் அதுவே எனது மாட்டுப் பொங்கல் ஆகும்.

இதுவே பொன். புதுப்பட்டி உடுப்பி பொங்கல் மாட்டுப் பொங்கல் ஆன வரலாறு.

 ந. ஆறுமுகம் மதுரை S. ஆலங்குளத்தில் இருந்து.

ஞாயிறு, 9 ஜனவரி, 2022

பழிக்குப் பழி சிறுகதை

“நினைத்துப் பார்த்தால் நெஞ்சு கொதிக்கிறது சாமீ. எத்தனை பேர் என்னை கேலி செய்திருக்கிறார்கள்? எத்தனை பேர் வசை பாடியிருக்கிறார்கள்?
எத்தனை பேர் என் முதுகில் குத்தியிருக்கிறார்கள்? அவர்கள் ஒவ்வொருவரையும் பழி
வாங்காமல் ஓயமாட்டேன்” என்று
அந்த சாமியார் முன் வந்து பொருமினான் ஒரு சீடன்.
“ஏதாவது மந்திரம் கிந்திரம் இருந்தா சொல்லுங்க சாமி” என்றான்.
சாமி யோசித்தார்.
“சரி… ஒன்று செய்யலாம்” என்று கோணிப்பையை சீடன் கையில் கொடுத்தார் சாமி.
“நீ யாரையெல்லாம் பழி வாங்கவேண்டும் என நினைக்கிறாயோ, அவர்கள் பெயரை ஒரு உருளைக்கிழங்கில் செதுக்கி இந்த கோணிப்பையில் போட்டுக்கொண்டே வா” என்றார்.
“ஆனால் இரண்டு நிபந்தனைகள்” என்று தொடர்ந்தார்…. “ஒரு உருளைக்கிழங்கில் இரண்டு மூன்று பெயர்களை செதுக்கக்கூடாது. ஒவ்வொரு பெயரையும் தனித்தனியாய் செதுக்க வேண்டும்”.
“சரி… அப்புறம்?”
“நீ எங்கெல்லாம் போகிறாயோ அங்கெல்லாம் இந்த கோணியை தூக்கி கொண்டு போகவேண்டும்”..

“ப்பூ, இவ்வளவுதானா? நான் என்னமோ பெரிசா ஏதோ சொல்லப்போறீங்கன்னு நினைச்சேன்”
என்று சீடன் எழுந்து போனான்.
அன்றிலிருந்து யார் மீதெல்லாம் ஆத்திரமோ யார் யாரை பழிவாங்க வேண்டும் என்று நினைப்பு வருகிறதோ, அப்போதெல்லாம் ஒரு உருளைக்கிழங்கை எடுத்து பெயரை செதுக்கி கோணிப்பையில் போட்டுக்கொண்டே வந்தான்.
ஆரம்பத்தில் கோணியை தூக்கி கொண்டு திரிவது ஒன்று பெரிய சிரமமாய் தெரியவில்லை.
ஆனால் நாளாக .....நாளாக, அது சுமையாக தோன்றியது. இன்னும் கொஞ்சநாள் போனதும் தூக்குவதே சிரமமாகிவிட்டது.
இதனிடையே சில நாட்களுக்கு பின் அந்த உரித்த உருளைக்கிழங்குகளிலிருந்து வாசனை வர ஆரம்பித்தது. நாள் போக போக அது சகிக்க முடியாத அழுகிய நாற்றமாக வீச ஆரம்பித்தது.
அவன் மூட்டையை தூக்கி கொண்டு வந்தாலே, எல்லோரும் – நெருங்கிய நண்பர்கள், கட்டிய மனைவி, பெற்ற பிள்ளைகள் என எல்லோரும் ஓட ஆரம்பித்தார்கள்.
அவனிடம் பேசவோ, அவன் சொல்வதை யாரும் காதுகொடுத்து கேட்கவோ கூட தயாராக இல்லை.
சீடன் மறுபடியும் சாமியிடம் வந்தான்.
“என்ன சாமி இப்படிப் பண்ணிட்டீங்களே..?” என்றான்.
“என்ன புரிந்தது?” என்றார் சாமி.
“பழி வாங்கும் குரோத உணர்வை சேகரித்துக்கொண்டே வந்தால் அது சுமையாகிவிடும்.
துர்நாற்றம் வீசும். யாரும் பக்கத்தில் வரமாட்டார்கள். அதை எனக்கு விளக்கத்தானே இப்படி செய்தீர்கள்?” என்றான் சீடன்.
“ம்… சரி. ஆனால் நீ இன்னும் முழுக்கிணற்றை தாண்டவில்லை” என்றார் சாமி.
“புரியலையே…?”
“உன் பிரச்னை சுமை கூடி போச்சே என்பதும் நாற்றமடிக்கிறதே என்பதும் தான் என நீ நினைக்கிறாய், இல்லையா?”
“ஆமாம்”
“சரி… அந்த உருளைக்கிழங்குகளை அவ்வப்போது கொட்டி அந்த கோணியை காலி செய்து கொண்டே வந்தால் இந்த சுமைப் பிரச்னை, நாற்றப் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நினைக்கிறாய் இல்லையா?”
“ஆமாம்.”
“மகனே, பிரச்சனை உருளைக்கிழங்கில் இல்லை. கோணிப்பை. ?!
கோணி இருப்பதால் தானே அதில்
உருளைகிழங்கை சேர்க்க ஆரம்பித்தாய்?
எனவே,
உனக்கு சுமையில்லாமல் இருக்க வேண்டுமானால், அந்த சுமை நாற்றமெடுக்காமல் இருக்க
வேண்டுமானால் கோணியை முதலில் தூக்கி எறி. உனக்கு துன்பம் இழைத்தவர்கள் தண்டனை பெற்றே தீருவார்கள்.. நீ உன் வேலையில் கவனம் செலுத்தி உன் கடமையை சரியாக செய்து வா.”..என்றார்..

மறக்க வேண்டியவற்றை நினைத்துக்கொண்டே
 இருப்பதும் நினைக்க வேண்டியவற்றை மறப்பதும்
 துன்பமாகும்.

குட்டிக் கதை

அரண்மனையையொட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன், அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான். அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பிச்சைக்காரன், தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டான். நிச்சயமாக அரசரும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணினான்.
திடீரென அவனுக்குள் ஓர் எண்ணம்... அந்த மாதிரி எண்ணுகிற அளவுக்குத் தனக்குள் ஏற்பட்ட துணிச்சலைப் பற்றி யோசித்த போதே, அவனுக்குள் நடுக்கம் ஏற்பட்டது. இருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அரண்மனை வாசலை அடைந்தான்.
வாயிற்காவலனிடம், ''ராஜாவைப் பார்க்க வேண்டும்'' என்றான். அந்தக் காவலன், அரசரிடம் அனுமதி வாங்கி வந்தான். உள்ளே வந்த பிச்சைக்காரனிடம், ''என்னைப் பார்க்கவேண்டும் என்றாயாமே?'' என்றார் அரசர். ''ஆமாம்! நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள எனக்கும் ஆசை. ஆனால், என்னிடம் ராஜ உடைகள் இல்லை. என்னை அதிகப்பிரசங்கி என நினைக்காவிட்டால், உங்களது பழைய ஆடையை அளித்து உதவினால், அதனை அணிந்துகொண்டு விருந் துக்கு வருவேன்'' என்றான் மிகவும் பவ்வியமாக.
அதே நேரம், மன்னர் என்ன சொல்வாரோ என நடுங்கியபடி, அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் மன்னர், அவனுக்கு ராஜ உடை ஒன்றை வழங்கினார். அந்த உடையை உடுத்திக்கொண்டவன், கண்ணாடி முன் நின்று கவனித்தான்; தோற்றத்தில் கம்பீரம் மிளிர்வதைக் கண்டு வியந்தான்!
அப்போது மன்னர் அவனிடம், ''விருந்தில் கலந்து கொள்வதற்குத் தகுதி உடையவனாகி விட்டாய். அதைவிட, முக்கியமான ஒன்று... இனி உனக்கு வேறெந்த உடையும் தேவைப் படாது. உன் ஆயுள் முழுவதும் இந்த உடை அப்படியே இருக்கும். துவைக்கவோ தூய்மைப் படுத்தவோ அவசியம் இருக்காது'' என்றார். கண்ணீர்மல்க, மன்னருக்கு நன்றி கூறி விட்டுக் கிளம்ப யத்தனித்தவன்,
மூலையில் கிடந்த தனது பழைய ஆடைகளைக் கவனித்தான். அவனது மனம் சற்றே சலனப்பட்டது. 'ஒருவேளை, அரசர் கூறியது தவறாக இருந்து, இந்த உடைகள் கிழிந்துவிட்டால்... அப்போது நமக்குப் பழைய உடைகள் தேவைப்படுமே?!' என யோசித்தவன், சட்டெனச் சென்று தன் பழைய உடைகளை வாரிக்கொண்டான்.
வீடு வாசல் இல்லாத அவனால் பழைய துணிகளை எங்கேயும் வைக்க முடியவில்லை; எங்கே போனாலும் பழைய ஆடைகளையும் சுமந்தே திரிந்தான். மன்னர் அளித்த இரவு விருந்தையும் அவனால் மகிழ்ச்சியாக ஏற்க முடியவில்லை. அடிக்கடி கீழே விழுந்துவிடும் பழைய துணிகளைச் சேகரிக்கும் மும்முரத்தில், பரிமாறப்பட்ட பதார்த்தங்களைச் சரிவர ருசிக்க முடியவில்லை. அரசர் சொன்னது உண்மை என்பது நாளடைவில் அவனுக்குப் புரிந்தது.
அவர் கொடுத்த ஆடை அழுக்காகவோ, கிழியவோ இல்லை. ஆனாலும், அந்த யாசகனுக்குப் பழைய உடைகள் மீது நாளுக்கு நாள் பிடிப்பு அதிகமானது. மக்களும் அவனது ராஜ உடையைக் கவனிக்காமல், அந்த கந்தல் மூட்டையையே பார்த்தனர். அவனைக் 'கந்தல் பொதி கிழவன்' என்றே அழைத்தனர். இறக்கும் தருணத்தில் இருந்த அவனைப் பார்க்க, அரசர் வந்தார். அவனது தலைமாட்டில் இருந்த கந்தல் மூட்டையைப் பார்த்து, அரசரின் முகம் சோகமாவதைக் கண்டான்.
ஆரம்பத்திலேயே அரசர் சொன்ன செய்தி நினைவுக்கு வந்தது. பழைய துணி மூட்டை, அவனது வாழ்நாளின் மொத்த மகிழ்ச்சியையுமே பறித்து விட்டது. அந்த யாசகனிடம் மட்டுமல்ல, நம் எல்லோரிடமும் அப்படியரு மூட்டை இருக்கிறது.
அதனுள் விரோதம், கோபம், கவலை, சோகம், பகைமை... எனப் பல பெயர்களில் வேண்டாத பொருட்கள் இருக்கின்றன. அவற்றைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்துவதால், நமது வாழ்வில் வீசுகின்ற மகிழ்ச்சித் தென்றலை நுகர முடியாமல் இருக்கிறோம். நம்முடைய தீராத கோபம், எத்தனை இன்பம் வந்தாலும், அதை ஏற்றுக் கொண்டு ஆனந்தப்பட முடியாமல் செய்துவிடுகிறது.
அரண்மனைகளில்கூட, இன்றும் பலர் பிச்சைக்காரர்களாகவே வாழ்கின்றனர். அனாதை ஆஸ்ரமங்களில் அரசர்களாக வாழ்வோரும் உண்டு.
மனதில் இருக்கிறது மகிழ்ச்சி. வாழ்க்கை தினமும் நமக்கு புதுத் துணிகளை நெய்து தருகிறது. நமக்கோ, பழைய துணிகளில் ஒரு நூலைத் தூக்கி எறியவும் மனமில்லை. நம் வீடுகளில், என்றோ வாங்கிய பல பொருள்கள் நிரம்பி இருக்கின்றன.
அவற்றால் எந்தப் பயனும் இல்லாவிட்டாலும், தூக்கி எறிய மனமில்லை. வீடையே குடோனுக்கு இணையாக மாற்றிக் குடித்தனம் நடத்துபவர்களும் இருக்கின்றனர்.
இல்லத்தை மட்டுமல்ல, உள்ளத்தையும் குடோனாக்கி பழைய சரக்குகளைப் பத்திரப்படுத்தினால், அவற்றின் அழுகல் நாற்றம் உதடுகளின் வழியே சொற்களாகவும் கரங்களின் வழியே செயல்களாகவும் வெளிப்பட்டு வேதனையையே விநியோகிக்கும்; வெளிச்சத்தை வழங்காது.
மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் தேவையே இல்லை. மகிழ்ச்சியாக இருப்போம்.

பணிந்தவர்களும் துணிந்தவர்களும்

மவுரிய சாம்ராஜ்யத்தின் மன்னர் அசோகர் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக புத்த பிக்ஷூ மன்னரும் அவரது ஆட்களும் செல்ல வழிவிட்டு, ஓர் ஓரமாக ஒதுங்கி நின்றார். அசோகக் சக்கரவர்த்தி அவரைப் பார்த்து விட்டார். உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு, இறங்கிச் சென்று புத்த பிக்ஷூவின் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தார். அவரது சிரம் துறவியின் காலில் பட்டது. துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசிர்வதித்தார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் சங்கடப்பட்டார். "ஒரு மண்டலாதிபதி ஒரு பரதேசியின் காலில் விழுவதா? அரச பாரம்பாரியக் கவுரவம் என்னாவது?' என்ற எண்ணம் அவரை அலைக் கழித்தது. அரண்மனைக்கு சென்றதும் அரசரிடம் தமது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட அசோக மன்னர் சிரித்தார்.
அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்காமல், ஒரு விசித்திர கட்டளையைப் பிறப்பித்தார். "ஒரு ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை, மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள் அமைச்சரே,'' என்றார்.
மன்னரின் கட்டளை அமைச்சரைத் திகைக்க வைத்தது. எனினும் அரச கட்டளையாயிற்றே! அதை நிறைவேற்ற ஏவலர்கள் நாலாபக்கமும் பறந்தனர்.
ஆட்டுத்தலை கிடைப்பதற்கு அதிகச் சிரமம் இருக்கவில்லை. ஓர் இறைச்சிக் கடையில் அது கிடைத்து விட்டது. புலித் தலைக்கு அலைந்தனர். அது ஒரு வேட்டைக்காரனிடம் கிடைத்தது. அன்றுதான் அவன் ஒரு புலியை வேட்டையாடியிருந்தான்.
மனிதத் தலைக்கு எங்கே போவது? கடைசியில் சுடுகாட்டிற்குச் சென்று ஒரு பிணத்தின் தலையை எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தனர் மூன்றையும் பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம், ""இம்மூன்றையும் சந்தையில் விற்றுப்பொருள் கொண்டு வாருங்கள்.'' என்றார். மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவன் திணறினான்.
ஆட்டுத் தலை அதிகச் சிரமமின்றி விலை போனது. புலியின் தலையை வாங்க ஆளில்லை. பலர் அதை வேடிக்கைத் தான் பார்த்தனர்.
கடைசியில் ஒரு வேட்டைப் பிரியரான பிரபு அதனை வாங்கித் தன் வீட்டில் அலங்காரமாக மாட்டி வைக்க எடுத்துப் போனான்.
மீதமிருந்த மனிதத் தலையைப் பார்த்த கூட்டம்
அருவருப்புடன் அரண்டு மிரண்டு பின்வாங்கியது. ஒரு காசுக்கு கூட அதை வாங்க யாரும் முன்வரவில்லை.
அரண்மனை திரும்பிய அமைச்சர் ஆட்டுத் தலை உடனே விலை போனதையும், புலித்தலை சற்றுச் சிரமத்துடன் விலை போனதையும் மனிதத் தலையை வாங்க ஆளில்லை என்பதையும் தெரிவித்தார்.
""அப்படியானால் அதை யாருக்காவது இலவசமாகக் கொடுத்து விடுங்கள்!'' என்றார் அசோகர்.
இலவசமாகக் கூட அதனை வாங்கிக் கொள்ள யாருமே முன்வரவில்லை. இப்போது அசோக மன்னர் கூறினார்...
""பார்த்தீரா அமைச்சரே! மனிதனின் உயிர்
போய்விட்டால், இந்த உடம்பு கால் காசு கூடப் பெறாது. இலவசமாகக் கூட இதனை யாரும் தொடமாட்டார்கள். இருந்தும் இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது!
செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது, தம்மிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவர்கள் தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதில் என்ன தவறு? சொல்லப் போனால் அதுதான் ஞான வாயிலின் முதல் படி!'' என்றார்.
தன் தவறை உணர்ந்தார் அமைச்சர்.

நீதி: பணிந்தவர்களும் துணிந்தவர்களும் வாழ்வில் தோற்றதாக சரித்திரம் இல்லை.

வெள்ளி, 7 ஜனவரி, 2022

நல்லதங்காள் கதை

நல்லதங்காள் பிறந்த ஊர் அர்ச்சுனாபுரம். வளம் நிறைந்த ஊர். இது விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு என்னும் ஊருக்கு அருகில் உள்ளது.

நல்லதங்காள் பிறந்தது பதினைந்தாம் நூற்றாண்டில்.

நல்லதங்காளின் தந்தை ராமலிங்க ராஜா. தாயார் இந்திராணி. அண்ணன் நல்லதம்பி.

நல்லதங்காள் சின்னப் பெண்ணாக இருந்தபோது தாயும் தந்தையும் இறந்துவிட்டார்கள். நல்லதம்பிதான் தங்கச்சியை செல்லமாக வளர்த்தான். மானாமதுரை ராஜா காசிராஜனுக்கு நல்லதங்காளைக் கட்டிக்கொடுத்தான். கல்யாணம் ஆகும்போது நல்லதங்காளுக்கு ஏழு வயது. காசிராஜன் நல்லதங்காளுக்கு நிறைய பரிசுப் பணம் கொடுத்தார். சித்திரை மாதம் கல்யாணம் நடந்தது. செல்வக் கல்யாணம்.

பனைமரம் பிளந்து பந்தக்கால் நட்டார்கள்.
தென்னைமரம் பிளந்து தெருவெல்லாம் பந்தல் இட்டார்கள்.
நல்ல தம்பி தங்கச்சிக்கு நிறைய சீதனங்கள் கொடுத்தான்.
வேலி நிறைய வெள்ளாடுகள்
பட்டி நிறைய பால்மாடுகள்
மோர் கடைய முக்காலி பொன்னால்
அளக்குற நாழி பொன்னால்
மரக்கால் பொன்னால்.

இன்னமும் சீதனங்கள் நிறைய உண்டு. சொல்லிக்கொண்டே போகலாம். கல்யாணம் முடிந்தது. விருந்துச் சாப்பாடு முடிந்தது.

நல்லதங்காளும் காசிராஜனும் மானாமதுரைக்குப் புறப்பட்டார்கள். நல்லதங்காளுக்கு அண்ணனைப் பிரிய மனம் இல்லை.

அழுதுபுரண்டு அழுதாள்,
ஆபரணம் அற்று விழ,
முட்டி அழுதாள்.
முத்து மணி அற்று விழ.

நல்லதம்பி தங்கச்சிக்கு ஆறுதல் சொன்னான். ஒருவழியாக நல்லதங்காள் மானாமதுரைக்குப் புறப்பட்டுப் போனாள்.

நல்லதம்பிக்கு ஒரு மனைவி உண்டு. அவள் பெயர் மூளி அலங்காரி. அவள் கொடுமைக்காரி. நல்லதங்காள் போன பிறகு நல்லதங்காளைப் பார்க்க நல்லதம்பி ஒரு தடவைகூட மானாமதுரை போகவில்லையாம். அதற்கு மூளி அலங்காரிதான் காரணமாம்.

நல்லதங்காளுக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன. பிள்ளை குட்டிகளுடன் அவள் சந்தோஷமாக வாழ்ந்தாள். இதெல்லாம் கொஞ்ச காலம்தான்.

மானாமதுரையில் மழை இல்லை. 12 வருடமாக நல்ல மழை இல்லை. வயல்களில் விளைச்சல் இல்லை. மக்கள் பசியால் வாடினார்கள். பட்டினியால் தவித்தார்கள்.

பஞ்சமோ பஞ்சம்.
மரக்கால் உருண்ட பஞ்சம்
மன்னவரைத் தோற்ற பஞ்சம்
நாழி உருண்ட பஞ்சம்
நாயகரைத் தோற்ற பஞ்சம்
தாலி பறிகொடுத்து
கணவரைப் பறிகொடுத்து
கைக்குழந்தை விற்ற பஞ்சம்

இப்படி மக்கள் பஞ்சத்தில் செத்தார்கள். நல்லதங்காள் வீட்டையும் பஞ்சம் விடவில்லை. தாலி தவிர மற்றது எல்லாம் நல்லதங்காள் விற்றாள். குத்தும் உலக்கை, கூடை, முறம்கூட விற்றுவிட்டாள். எல்லாம் விற்றும் பஞ்சம் தீரவில்லை. குழந்தைகள் பசியால் துடித்தன.

நல்லதங்காள் யோசித்து யோசித்துப் பார்த்தாள். இன்னும் கொஞ்ச நாள் நீடித்தால் பிள்ளைகள் பசியால் செத்துப்போகும் என்று பயந்தாள். ஒரு முடிவு எடுத்தாள். அண்ணன் வீட்டுக்குப் பிள்ளைகளுடன் கொஞ்ச நாள் போய் இருக்கலாம் என்று முடிவு எடுத்தாள்.

காசிராஜனிடம் தன் முடிவைச் சொன்னாள். காசிராஜன் நல்லதங்காள் சொன்ன முடிவை ஒப்புக்கொள்ளவில்லை.

“அடி பெண்ணே! வாழ்ந்து கெட்டுப்போனால் ஒரு வகையிலும் சேர்க்கமாட்டார்கள். கெட்டு நொந்துபோனால் கிளையிலும் சேர்க்க மாட்டார்கள். கை கொட்டிச் சிரிப்பார்கள். நீ போக வேண்டாம். கஷ்டம் வருவது சகஜம். நாம் பிடித்து நிற்க வேண்டும். சாணி எடுத்தாவது தப்பிப் பிழைப்போமடி! வேலி விறகொடித்து விற்றுப் பிழைப்போமடி’’ என்று காசிராஜன் தன் மனைவி நல்லதங்காளிடம் பலவாறு சொன்னாள்.

காசிராஜன் சொன்னதை நல்லதங்காள் கேட்கவில்லை. இனியும் தாக்குப்பிடிக்க முடியாது என்று நினைத்தாள்.

சந்தனம் தொட்ட கையால் - நான்
சாணி தொட காலமோ!
குங்குமம் எடுக்கும் கையால் - நான்
கூலி வேலை செய்ய காலமோ
என்று சொல்லி நல்லதங்காள் அழுதாள்.

இதற்குமேல் நல்லதங்காளைச் சமாதானப்படுத்த முடியாது என்று காசிராஜன் தெரிந்துகொண்டான். “சரி போய் வா. பிள்ளைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்’’ என்று சொல்லி வழியனுப்பி வைத்தான்.

நல்லதங்காள் பிள்ளைகளைப் பாசத்தோடு அழைத்தாள். “வாருங்கள் பிள்ளைகளா! உங்கள் மாமன் வீட்டுக்குப் போவோம். அங்கே தின்பதற்கு தேங்காய் கிடைக்கும், மாங்காய் கிடைக்கும், ஓடி விளையாட மான் கிடைக்கும்’’ என்று சொல்லி அழைத்தாள். பிள்ளைகள் ஆசை ஆசையாகப் புறப்பட்டன.

நல்லதங்காளும் பிள்ளைகளும் மானாமதுரையில் இருந்து அர்சசுனாபுரத்துக்குப் புறப்பட்டு வந்தார்கள். காடு மலையெல்லாம் தாண்டி வந்தார்கள். வனாந்திரங்களைக் கடந்து வந்தார்கள்.

அர்ச்சுனாபுரம் பக்கம் வந்துவிட்டார்கள். ஆனால் பிள்ளைகளுக்கு நடக்க முடியவில்லை. பசி பசி என்று கத்தினார்கள். அழுதார்கள்.

அந்த நேரம் பார்த்து நல்லதம்பி அந்தப் பக்கம் வந்தான். படை பரிவாரங்களோடு வந்தான். வேட்டையாட வந்தான். வந்த இடத்தில் நல்லதங்காளையும் பிள்ளைகளையும் பார்த்தான்.

அந்தக் கோலத்தில் அவர்களைப் பார்த்ததும் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.

குதிரை அரிதாச்சோ
குடி இருந்த சீமையிலே!
பல்லக்குதான் பஞ்சமோ
பத்தினியே உனக்கு!
கால்நடையாய் வர
காரணம் ஏன் தங்கச்சி?

என்று அழுது புலம்பினான். நல்லதங்காள் தன் வீட்டு நிலைமைகளைச் சொன்னான். நல்லதம்பி அவளைத் தேற்றினான். “சரி தங்கச்சி நம் வீட்டுக்குப் போ. தெற்குமூலையில் தேங்காய் குவிந்திருக்கும் வடக்குமூலையில் மாங்காய் குவிந்திருக்கும். காட்டு யானை வாசலில் கட்டி இருக்கும் காராம் பசுவும் உண்டு. போ தங்கச்சி போ! போய்ப் பிள்ளைகளுடன் பசியாறி இரு’’ என்று நல்லதம்பி சொன்னான்.

நல்லதங்காள் அண்ணன் இல்லாத வீட்டுக்குப் போக தயங்கினாள். அண்ணா! நீயும் கூட வா! என்று அண்ணனைக் கூப்பிட்டாள்.

“அம்மா நல்லதங்காள் நீ முதலில் போ. உன் அண்ணி மூளி அலங்காளி உன்னையும் பிள்ளைகளையும் நன்றாக கவனித்துக்கொள்வாள். நான் பின்னால் வருகிறேன். சீக்கிரன் வந்துவிடுவேன். உன் பிள்ளைகளுக்கு விளையாட புள்ளிமான் கொண்டுவருவேன்’’ என்று சொல்லி சமாதானப்படுத்தினான்.

நல்லதங்காள் அண்ணன் வீட்டுக்கு அரை மனதுடன் புறப்பட்டாள். அப்போது மூளி அலங்காரி வீட்டு மாடியில் இருந்தாள்.

நல்லதங்காளும் பிள்ளைகளும் பசியோடு தன் வீடு வருவதைப் பார்த்து விட்டாள். வேகவேகமாக இறங்கி வந்தாள். கதவுகளை அடைக்கச் சொன்னாள். இறுக்கிக் கதவை அடைத்தாள். ஈர மண் போட்டு அடைத்தாள். சோற்றுப் பானையை ஒளித்து வைத்தாள். பழந்துணி ஒன்றை உடுத்திக்கொண்டான். முகத்தில் பத்துப் போட்டு மூலையில் படுத்துக்கொண்டாள்.

நல்லதங்காள் வந்தாள். அண்ணி அண்ணி என்று ஆசையாகக் கூப்பிட்டு கதவைத் தட்டினாள். கதவு திறக்கவில்லை.

கால் கடுக்குது அண்ணி கதவைத் திற, தண்ணீர் தண்ணீர் என்று தவிக்கிறார்கள் பாலகர்கள். அன்னம் அன்னம் என்று சொல்லி அலைகிறார்கள் பாலகர்கள். புத்திரர் பசியாற கதவைத் திறவாயோ?

என்று அழுது அழுது கூப்பிட்டாள். அதற்கும் கதவு திறக்கவில்லை. நல்லதங்காளுக்கு கோபம் வந்தது.

நான் பத்தினியானால் கதவு படீர் என்று திறக்கட்டும் என்று கட்டளையிட்டாள். 

கதவுகள் திறந்தன. 

பிள்ளைகள் உள்ளே ஓடினார்கள். சுற்றிச் சுற்றி வந்தார்கள். ஒரு பண்டமும் இல்லை. மூளி அலங்காரி படுத்திருந்த இடத்தில் தேங்காயும், மாங்காயும் குவிந்து கிடந்தன.

ஓடிச்சென்று ஒரு பிள்ளை தேங்காயை எடுத்தது. தாவிச்சென்று ஒரு பிள்ளை மாங்காயைக் கடித்தது. மூளி அலங்காரி விருட்டென்று எழுந்தாள். மாங்காயைப் பறித்துப் போட்டாள். ஆயிரம் அழுகல் மாங்காயில் ஒன்று எடுத்துக் கொடுத்தாள். தேங்காயைப் பறித்துப் போட்டாள். ஆயிரம் தேங்காயில் அழுகல் தேங்காய் ஒன்று எடுத்துக் கொடுத்தாள்.

பார்த்தாள் நல்லதங்காள். மனம் பதறினாள். அண்ணி என் மக்களின் பசியை ஆத்துங்க என்று கெஞ்சினாள்.
மூளி அலங்காரி ஏழு வருசம் மக்கிப்போன கேப்பையைக் கொடுத்தாள். திரிப்பதற்கு உடைந்த திருகையைக் கொடுத்தாள். உலை வைக்க ஓட்டைப் பானையைக் கொடுத்தாள். நல்லதங்காள் பொறுமையாகக் கேப்பையைக் திருகையில் போட்டு அரைத்தாள்.

எப்படியே கஷ்டப்பட்டு கஞ்சி காய்ச்சினாள். ஈரமட்டைகளை வைத்து எரித்தாள். கூழும் கொதிக்கணும், குழந்தை பசியாறணும் என்று தெய்வங்களை வேண்டிக்கொண்டாள்.

ஒருவழியாகக் கஞ்சி கொதித்தது. ஆனால் பிள்ளைகள் கஞ்சியைக் குடிக்கப் போகும் நேரத்தில் மூளி அலங்காரி வந்தாள். பானையைத் தட்டிவிட்டாள். பானை உடைந்தது. கூழ் வழிந்து ஓடியது. பிள்ளைகள் அதை வழித்துக் குடித்தார்கள்.

நல்லதங்காளுக்கு இந்தக் காட்சியைப் பார்க்க சகிக்கவில்லை. இனியும் அவமானப்பட வேண்டாம். செத்துவிடலாம் என்று முடிவு எடுத்தாள்.

பிள்ளைகளைக் கூப்பிட்டு தெருவில் இறங்கினாள். வீதியில் நடந்தாள். அவளைப் பார்த்தவர்கள் பரிதாபப்பட்டார்கள். சாப்பிடுவதற்கு தங்கள் வீட்டுக்கு அழைத்தார்கள்.

பச்சரிசி குத்தித் தாரோம்
பாலும் கலந்து தாரோம்!
பாலரும் நீயும்
பசியாறிப் போங்க!

என்று கூப்பிட்டார்கள்.

 நல்லதங்காள் மறுத்துவிட்டாள்.

அரச வம்சம் நாங்கள்
அண்டை வீட்டில்
தண்ணீர் குடிக்க மாட்டோம்.
என்று சொல்லிவிட்டாள்.

காட்டு வழியே பிள்ளைகளைக் கூட்டிப் போனாள். பாழும் கிணறு தேடிப் போனாள். அண்ணன் வந்தால் அடையாளம் தெரியட்டும் என்று ஆவாரம் செடிகளை ஒடித்துப் போட்டுக்கொண்டே போனாள்.

நல்லதங்காளும் பிள்ளைகளும் நெடுந்தூரம் வந்து விட்டார்கள். ஒரு கிணறும் காணோம். அப்போது சிறுவர்கள் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தார்கள். அவர்களைப் பார்த்து நல்லதங்காள் கேட்டாள்.

“தண்ணீர் தாகமப்பா. தண்ணீர் குடிக்கணும். பாழும் கிணறு இருந்தால் பார்த்துச் சொல்லுமப்பா!’’ என்று கேட்டாள். ஒரு சிறுவன் ஓடிச்சென்று ஆழமுள்ள பாழும் கிணற்றைக் காட்டினான்.

நல்லதங்காள் பிள்ளைகளோடு அங்கு போனாள். கணவன் கண்ணில் படுமாறு தாலியைக் கழற்றி கிணற்றுப் படியில் வைத்தாள். அண்ணன் கண்ணில் படுமாறு பாலூட்டும் சங்கை கிணற்று மேட்டில் வைத்தாள். அண்ணி கொடுத்த அழுகல் தேங்காயை ஓர் ஓரத்தில் வைத்தாள்.

ஒவ்வொரு பிள்ளையாக கிணற்றில் தூக்கிப் போட்டாள். ஒவ்வொரு பிள்ளையும் பயந்து பயந்து அம்மாவின் காலைக் கட்டிக்கொண்டன. காலைக் கட்டிய பிள்ளையை பிடித்து இழுத்து கிணற்றில் போட்டாள். இப்படி ஆறு பிள்ளைகளைப் போட்டுவிட்டாள்.

மூத்த பிள்ளை நல்லதங்காளுக்குப் பிடிபடாமல் ஓடினான். என்னை மட்டும் கொல்லாதே என்னைப் பெற்ற மாதாவே! என்று கெஞ்சினான்.

தப்பிப் பிழைத்து அம்மா - நான்
தகப்பன் பேர் சொல்லுவேன்
ஓடிப் பிழைத்து அம்மா - நான்
உனது பேர் சொல்லுவேன்

என்று சொல்லி தப்பித்து ஓடினான். ஓடிய பிள்ளையை நல்லதங்காள் ஆட்டு இடையர்களை வைத்துப் பிடிக்கச் சொன்னாள். இடையர்களுக்கு விசயம் தெரியாது. தாய்க்கு அடங்காத தறுதலைப் பிள்ளை என்று நினைத்து அவனைப் பிடித்துக்கொண்டுவந்து நல்லதங்காளிடம் விட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.

நல்லதங்காள் கதறி அழுத மூத்த மகனையும் பிடித்து கிணற்றுக்குள் போட்டாள். பிறகு தானும் குதித்தாள். நல்லதங்காளும், ஏழு பிள்ளைகளும் இறந்து மிதந்தார்கள். நல்லதங்காளுக்கு 16 அடிக் கூந்தல். அவள் கூந்தல் கிணறு பூராவும் பிரிந்து பரந்து கிடந்தது. பிள்ளைகளும் தெரியவில்லை. கிணற்றுத் தண்ணீரும் தெரியவில்லை. நல்லதங்காளின் கூந்தல் மட்டுமே கிணறு பூராவும் தெரிந்தது.

நல்லதங்காள் குடும்பம் இப்படி பட்டினியால் செத்து முடிந்தது.

நல்லதங்காள் புறப்பட்டு வந்த சில நாட்களிலேயே மானாமதுரையில் நல்ல மழை பெய்தது. பயிர்கள் திகிடுமுகடாக விளைந்தன. நாடு செழிப்பு அடைந்தது. காசிராஜன் தன் மனைவி நல்லதங்காளையும் தன் பிள்ளைகளையும் அழைப்பதற்கு புறப்பட்டு வந்தான்.

நல்லதம்பி வேட்டை முடித்து வீட்டுக்கு வந்தான். தங்கச்சியைக் காணவில்லை. தங்கச்சி பிள்ளைகளையும் காணவில்லை. பதறிப்போனான்.

மூளி அலங்காரியைப் பார்த்து என் தங்கச்சியையும், தங்கச்சி பிள்ளைகளையும் எங்கே என்று கேட்டாள். மூளி கூசாமல் பொய் சொன்னாள்.

“சீரகச் சம்பா சோறு ஆக்கிப் போட்டேன்
பத்து வகைக் காய்கறி வைத்தேன்.
சாப்பிட்டுப் போனாங்க’’
என்று பொய் சொன்னாள்.

நல்லதம்பி இதை நம்பவில்லை. பக்கத்து வீடுகளில் போய்க் கேட்டான். அவர்கள் நடந்து நடந்தபடி சொன்னார்கள். பிள்ளைகளைப் பட்டினி போட்டதைச் சொன்னார்கள். அவ்வளவுதான் நல்லதம்பிக்கு மீசை துடித்தது. கண் சிவந்தது. பக்கச் சதை எல்லாம் பம்பரம் போல் ஆடியது. தங்கையைத் தேடி காட்டுவழியே போனான். பதறிப் பதறிப் போனான். நல்லதங்காள் ஒடித்துப் போட்ட ஆவாரஞ் செடிகள் வழிகாட்டின. நல்லதம்பி பாழும் கிணற்றின் பக்கம் வந்தான். உள்ளே எட்டிப் பார்த்தான். அய்யோ தங்கையும் பிள்ளைகளும் செத்து மிதந்தார்கள். நல்லதம்பி ஓங்காரமிட்டு அழுதான்.

தங்கச்சி தங்கச்சி என்று தரையில் புரண்டு அழுதான். அம்மா அம்மா என்று அடித்துப் புரண்டு அழுதான். இப்படி அவன் அழுது புரண்டு கொண்டு இருந்தபோது காசிராஜனும் அங்கே வந்து விட்டான். பிள்ளைகளையும் மனைவியையும் பிணமாகப் பார்த்தான். மனைவியைக் கட்டிக் கொண்டு கதறி அழுதான்.

நல்லதங்காளையும் பிள்ளைகளையும் வெளியே எடுத்து தகனம் செய்தார்கள். நல்லதம்பி தன் மனைவி மூளி அலங்காரியைப் பழிவாங்க நினைத்தான். அவளை மட்டுமல்ல. அவள் குலத்தைப் பழிவாங்க ஏற்பாடு செய்தான். தன் மகனுக்கு உடனடியாக திருமணம் ஏற்பாடு செய்தான். மூளி அலங்காரியின் உறவினர்கள் உட்காரும் இடத்தில் இடிப்பந்தல் போட்டான். இடிப்பந்தலைத் தட்டிவிட்டு எல்லோரையும் கொன்றான். மூளி அலங்காரியையும் அரிவாளால் வெட்டிக் கொன்றான்.

இத்துடன் கதை முடியவில்லை. நல்லதம்பி ஈட்டியில் பாய்ந்து தன் உயிரை விட்டான். அதேபோல் காசிராஜனும் ஈட்டியில் பாய்ந்து தன் உயிரை விட்டான். இவ்வாறு இரண்டு குடும்பங்களும் பூண்டோடு அழிந்தன. இதற்கு அடிப்படையான காரணம் என்ன?

வறுமை ஒரு பக்கம். மூளி அலங்காரியின் கொடுமை மறுபக்கம். வறுமை கொடியது. பசி கொடியது. பட்டினி கொடியது. அதைவிடக் கொடியது மனிதத்தன்மையற்ற செயல்.

நல்லதங்காள் பட்ட துன்பத்தை இந்த நாடு மறக்காது.


திங்கள், 3 ஜனவரி, 2022

குறள் 1309

நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.

[காமத்துப்பால், கற்பியல், புலவி]

கலைஞர் உரை:
நிழலுக்கு அருகில் உள்ள நீர்தான் குளிர்ந்து இனிமையாக இருக்கும்; அதுபோல அன்புள்ளவர்களிடம் கொள்ளும் ஊடல்தான் இன்பமானதாக இருக்கும்.

மு.வரதராசனார் உரை:
நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது.

சாலமன் பாப்பையா உரை:
நீரும்கூட வெயிலுக்குக் கீழ் இராமல் நிழலுக்குக் கீழ் இருப்பது இனிமை; ஊடலும் அன்புள்ளவரிடம் மட்டுமே இனிமை ஆனது.

புலியூர்க் கேசிகன் உரை: நிழலிடத்தே உள்ளதானால் இனியதாகும்; அதுபோன்றே, ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தே நிகழுமானால், இனிமையைத் தருவதாகும்.

ஞா.தேவநேயப் பாவாணர் உரை:
நீரும் நிழலதே இனிது - உயிர்வாழ்க்கைக் கின்றியமையாத நீரும் நிழலடியுள்ளதே குளிர்ந்து இன்பந்தரும்; வெயிலிற் காய்ந்தது இன்பந்தராது; புலவியும் வீழுநர் கண்ணே இனிது - அதுபோலக் கலவியின்பத்தை மிகுக்கும் புலவியும் அன்புடையாரிடத்தே இன்பத்திற் கேதுவாகும்; அன்பிலாரிடத்தோ துன்பத்திற்கே யேதுவாகும். இது வெப்பநாடாதலின் முது வேனிற்கால நண்பகற் காட்டு வழிப்போக்கன் நீர் வேட்கை, நிலைமை நோக்கி 'நிழலதே இனிது ' என்றான். தழைத்தடர்ந்த தண்கா நிழலில் தங்கிய நீர் பனிநீர் போற் குளிர்ச்சிமிக்குத் தாகமுங் களைப்புந் தணித்தலின் இனிதாயிற்று, "காவோ டறக்குளத் தொட்டானும்" (திரிகடுகம் 70) என்றதை இத்தொடர்பில் நோக்குக. 'வீழுநர்' காதலரின் ஆற்றாமைக்கு நோதலும் கலவியின்கண் வேட்கையுமுடையவர். இவளுக்கு அவ்விரண்டுமின்மையின் இப்புலவி இன்னாதாயிற்று என்பதாம். ஏகாரம் ஈரிடத்தும் பிரிநிலை. இவற்றுள் முன்னது பிரித்துக் கூட்டப்பட்டது.

பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) நீரும் நிழலதே இனிது - உயிர்க்கு இன்றியமையாத நீரும் நிழலின் கண்ணதே இனிதாவது, ஏனை வெயிலின் கண்ணது ஆகாது; புலவியும் வீழுநர்கண்ணே இனிது - அது போலக் கலவிக்கு இன்றியமையாத புலவியும் அன்புடையார்கண்ணே இனிதாவது, ஏனை அன்பிலார்கண் ஆகாது. (நிழற்கண் இருந்த நீர் குளிர்ச்சிமிக்குத் தாகம் தணித்தலின், இனிதாயிற்று. வீழுநர் - ஆற்றாமைக்கு நோதலும் கூடுதற்கண் வேட்கையும் உடையராவார். 'இவள் நம்மாட்டு அவ்விரண்டும் இன்மையின் இப்புலவி தானும் இன்னாதாகா நின்றது', என்பதாம்.).

மணக்குடவர் உரை:
ஊடல் செய்யின் இன்பம் உண்டாயினும், அதன் கண்ணும் ஒரு துன்பம் உண்டு: புணருங்கால் அது நீட்டிக்குங்கொல்லோ? நீட்டியாதோ? என்று ஐயுறுதலால். இது தலைமகள் ஆற்றாமை வாயிலாகப் புலக்கத் தலைமகன் அது கண்டு சொல்லியது.

Tamil Transliteration:
Neerum Nizhaladhu Inidhe Pulaviyum
Veezhunar Kanne Inidhu.

Couplet :
Water is pleasant in the cooling shade;So coolness for a time with those we love.

Translation :
Water delights in a shady grove And sulking in souls of psychic love.

Explanation :
Like water in the shade, dislike is delicious only in those who love.

ஞாயிறு, 2 ஜனவரி, 2022

நம் பணம் எதிரியை அடக்கி வைக்கும்

பொருள்செயல்வகை
குறள் 759:
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்

கலைஞர் மு.கருணாநிதி உரை:
பகைவரின் செருக்கை அழிக்கும் தகுதியான கருவி பொருளைத் தவிர வேறொன்றும் இல்லாததால் அதனைச் சேமிக்க வேண்டியுள்ளது.

மு.வரதராசனார் உரை:
ஒருவன் பொருளை ஈட்டவேண்டும், அவனுடைய பகைவரின் செருக்கைக் கெடுக்க வல்ல வாள் அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை.

சாலமன் பாப்பையா உரை:
எதையும் சாதிக்க எண்ணுவோர் பணத்தைச் சம்பாதியுங்கள்; பகைவரின் அகங்காரத்தை அறுக்கும் கூரிய ஆயுதம், பணத்தைவிட வேறு இல்லை.

பரிமேலழகர் உரை:
பொருளைச் செய்க - தமக்கொன்றுண்டாகக் கருதுவார் பொருளை உண்டாக்குக; செறுநர் செருக்கு அறுக்கும் எஃகு - தம் பகைவர் தருக்கினை அறுக்கும் படைக்கலம் அதுவாம்; அதனிற் கூரியது இல் - அதற்கு அதுபோலக் கூரிய படைக்கலம் பிறிது இல்லை. ('அதுவாம்' 'அதற்கு' என்பன அவாய் நிலையான் வந்தன. பொருளைச் செய்யவே பெரும்படையும் நட்பும் உடையராவர். ஆகவே, பகைவர் தருக்கு ஒழிந்து தாமே அடங்குவர் என்பார், 'செறுநர் செருக்கு அறுக்கும் எஃகு' என்றும், ஏனை எஃகுகள் அதுபோல அருவப்பொருளை அறுக்க மாட்டாமையின் 'அதனிற் கூரியது இல்' என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை:
பொருளையுண்டாக்குக; பகைவரது பெருமிதத்தை யறுக்கலாங் கருவி அப்பொருள்போலக் கூரியது பிறிது இல்லை. இது பொருளீட்டல் வேண்டுமென்றது.

புலியூர்க் கேசிகன் உரை:
பகைவரின் மனச் செருக்கை அழித்து வெற்றிபெரும் ஆயுதம், பொருளைக் காட்டிலும் கூர்மையானது வேறில்லை.

சி இலக்குவனார் உரை:
பொருளை உண்டாக்குக; அது பகைவருடைய தருக்கினைப் போக்கும் கூரிய கருவியாகும்; அது போலக் கூர்மையுடையது வேறொன்றும் இல்லை.

Translation:
Make money! Foeman's insolence o'ergrown
To lop away no keener steel is known.

Explanation:
Accumulate wealth; it will destroy the arrogance of (your) foes; there is no weapon sharper than it.


ஏன் இப்படி?

இவ்வளவு சிறியதாக இந்தத் தேங்காய் ஏன் இருக்கிறது?