google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: மே 2022

திங்கள், 23 மே, 2022

குன்றக்குடி முருகன் கோயில்

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி எனும் ஊரில், குன்றின் உச்சியில் சண்முகநாதர், வள்ளிதெய்வானையுடன், ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார்.

மதுரையிலிருந்து காரைக்குடி செல்லும் வழியில், திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் வழியாக, எண்பது கிலோ மீட்டர்  தொலைவில் இந்த முருகன் கோயில் உள்ளது.

பிள்ளையார்பட்டியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்குடியில் இருந்து பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. பிள்ளையார்பட்டி கோயில் திருப்பத்தூரில் இருந்து பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

குன்றக்குடி முருகன் ஆலயத்தில் காவடி வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். மயில் உருவம் கொண்ட மலை மீது இந்த மூலவரான சண்முகநாதர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். முருகப்பெருமானின் சாபத்தால் மயிலே, மலையாகிப்போனதாகவும், அந்த மலைமீதுதான் முருகப்பெருமான் வீற்றிருப்பதாகவும் தலபுராணம் கூறுகிறது.

ஒரு முறை அசுரர்கள், தேவர்களை அழிக்கும் நோக்கில் செயல்பட்டனர். அப்போது முருகப்பெருமானின் மயிலிடம் அசுரர்கள், ‘நான்முகனின் வாகனமான அன்னமும், திருமாலின் வாகனமான கருடனும் நாங்கள்தான் மயிலை விட சக்தி படைத்தவர்கள், வேகமாக பறக்கக் கூடியவர்கள் என்று கூறுகின்றனஎன்று பொய் கூறினர். இதைக் கேட்டு கண் மூடித்தனமாக கோபம் கொண்ட மயில், பிரம்மாண்ட உருவம் எடுத்து, கருடனையும், அன்னத்தையும் விழுங்கிவிட்டது.

இதுபற்றி பிரம்மனும், திருமாலும், முருகப்பெருமானிடம் சென்று முறையிட்டனர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற முருகப்பெருமான், மயிலிடம் இருந்து அன்னத்தையும், கருடனையும் மீட்டுக் கொடுத்தார். மேலும் தவறான வார்த்தைகளைக் கேட்டு, கண்மூடித்தனமாக நடந்துகொண்ட மயிலை, மலையாக மாறிப்போகும்படி சாபமிட்டார். மயிலும் தன் தவறை உணர்ந்து அரச வனத்துக்கு (குன்றக்குடி) வந்து மலையாகிப்போனது. மலையாக இருந்தபடியே முருகப்பெருமானை நோக்கி தவம் இருந்தது. தவத்தில் மகிழ்ந்த முருகப்பெருமான், மயிலுக்கு சாபவிமோசனம் அளித்தார். பின்னர் மயில் உருவத்தில் இருந்த அந்த மலை மீதே எழுந்தருளி அருள்புரிந்தார்.

இங்கு முருகப்பெருமான், சண்முகநாதர் என்ற திருநாமத்துடன், ஆறுமுகங்களோடும், பன்னிரு கரங்களோடும் எழுந்தருளியுள்ளார். செட்டி முருகன், மயூரகிரிநாதர், மயில் கலைக்கந்தன், குன்றை முருகன், குன்றையூருடையான், தேனாறுடையான் என்பது இத்தல முருகனின் வேறு பெயர்களாகும்

இத்தலம் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற ஸ்தலம். அருட்திரு பாம்பன் குமரகுருதாச சுவாமிகளும் முருகனைப்பற்றிப் பாடியுள்ளார்.

இங்கு நாரதர், கண்ணபிரான், சூரியன், விஸ்வாமித்திரர், வசிஷ்டர், கருடன், மன்மதன் மற்றும் இந்திரனும் தேவராதியருடன் செட்டிமுருகனை வழிபட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

பங்குனி உத்திரத்திலும், தைப்பூசத்திலும் பக்தர்கள் சேவடி தேய காவடியும், பால் போல் பெருகிவாழ பாற்குடமும் எடுத்து தேனாற்றுடையானை வணங்குகின்றனர்.

மேலும், சித்திரையில் பால் பெருக்குவிழா, வைகாசி விசாகம், ஆனி மகாபிஷேகம், ஆடியில் திருப்படி பூஜை, ஆவணி மூலப்பிட்டுத் திருவிழா, புரட்டாசி மாதம் அம்பு போடும் திருவிழா, ஐப்பசியில் சூரனை வேலால் சம்கரிக்கும் கந்தர் சஷ்டி விழாவும் மிக மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.

இங்கு சண்முகநாதரும், அவர்தம் துணைவியரும் தனித்தனி மயில் வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பது ஆணும், பெண்ணும் சரிசமம் என்பதை உணர்த்துகின்றது.

தோல் வியாதிகள் நீங்க, சரவணப் பொய்கை தீர்த்தத்தில் நீராடி, இடும்பன் சன்னதியில் உப்பும், மிளகும் போட்டு வணங்குகின்றனர்.

நல்ல மகசூல் பெற்ற விவசாயிகள் தானியங்களை காணிக்கையாகச் செலுத்துகின்றனர். மேலும் நெல் மணிகளையும், அரிசியையும் மலைப்படிகளில் தூவி வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.

உயிர்காக்க விரும்பி ஈடாக, ஆடு, மாடு, கோழி முதலிய கால்நடைகளை மயூரகிரிநாதனுக்கு நேர்த்திக் கடனாகச் செலுத்துகின்றனர்.

அன்னதானம் செய்து ஏழைகளின் அரும்பசி ஆற்றுகின்றனர்.

ஜாதகம் சாதகமாய் இல்லாக் குழந்தைகளை, சண்முகநாதனுக்கு தத்துக் கொடுத்துவிட்டு, அக்குழந்தைகளை அவர்கள் திருமணத்திற்குச் சிலநாட்கள் முன்பு, அவனிடமிருந்து  தத்தெடுத்து பெற்றுக் கொண்டு குழந்தைகளின் தலை எழுத்தையே மாற்றும் விந்தை இக்கோவிலின் தனிச்சிறப்பு

அருணகிரிநாதர், திருப்புகழில் பல இடங்களில் குன்றைநகர் வேலனைகுருநாதாஎன்று வர்ணிப்பதின் மூலம் சண்முகநாதர் உலக மாந்தர்க்கு ஞானத்தை வழங்கும் குருவாக இங்கு எழுந்தருளியுள்ளார் என்பது கருத்து.

அதேபோல, குன்றக்குடிப் பதிகமும் முருகனை குருநாதனாக வர்ணிக்கிறது. இப்பதிகத்தைப் படித்தால் மனிதர்க்கு இவ்வுலகில் தேவையான செல்வம், புகழ், வெற்றி ஆகியன தங்குதடையின்றிக் கிடைக்கும். முக்கியமாக, குழந்தை வரம் வேண்டும் தம்பதியர் மனமுருகிப் பாடினால் நல்ல அழகான, ஞானத்தோடு கூடிய பிள்ளைகள் பிறக்கும் என்பது திண்ணம்.

இந்த ஆலயம் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.


ஆறிரு தடந்தோள் வாழ்க; அறுமுகம் வாழ்க;

வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க; குக்குடம் வாழ்க;

செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க; யானைதன் அணங்கு வாழ்க;

மாறிலா வள்ளி வாழ்க; வாழ்க சீர் அடியாரெல்லாம்!

                                   __கந்தபுராணம்

பொருள்:

பன்னிரு தோள்கள் வாழ்க; ஆறுமுகம் வாழ்க; மலைபிளந்த வேல் வாழ்க; சேவல் வாழ்க; மயில் வாழ்க; தெய்வயானை தேவியார் வாழ்க; வள்ளியம்மை வாழ்க; நல்லடியார் அனைவரும் வாழ்க!

 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

 பிற பின்பு, வணக்கம்.

அன்புடன்

ஆறுமுகம் நடராஜன்

பொன்னமராவதி புதுப்பட்டி, தற்போது மதுரையில் இருந்து.



திங்கள், 16 மே, 2022

ஃபேஸ்புக்கில் என் பதிவு

நான் படித்துக்கொண்டிருந்தபோது பொன்னமராவதி புதுப்பட்டியில் பேட்டையார் மண்டகப்படி என்று ஒரு திருவிழா விடியவிடிய நடக்கும். பெரிய பெரிய வித்வான்களின் இசைக் கச்சேரி, நாடகம், பாட்டுக் கச்சேரி, கரகாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், த.பி. சொக்கலால் ராம் சேட் பீடிக்காரனின் 16 மிமீ திரைப்படம், நிஜாம் லேடி புகையிலைக்காரனின் 16 மிமீ திரைப்படம், தண்ணீர்ப் பந்தல், பானகம், நீர்மோர், பலூன், ஊதல், சவ்வு மிட்டாய், என்று ஒரே கொண்டாட்டம். பொன்னமராவதி பட்ட மரத்தான் திருவிழா, வலையபட்டி மலையாண்டி திருவிழா, கொன்னையூர் முத்துமாரி திருவிழா, குன்னக்குடி வயலின் வலையபட்டி தவில் என்று அமர்க்களப்படும். தினமும் மூன்று ஷோ சினிமா. லீவு நாட்களில் 4 ஷோ. ரெண்டு சினிமாக்கள். 40 பைசாவிலிருந்து ஒன்னேகால் ரூபாய் வரை டிக்கெட். 24 மணி நேரமும் எங்கு சுற்றினாலும் உணவு, டீ, காபி, உண்டு. புதுப்பட்டி டீ கடைகளில் கதவுகள் இல்லை. அரசியல் மேடைகள் மாலையில் முழங்க ஆரம்பித்தால் அதிகாலை 3 மணிவரை நடக்கும். தீப்பொறி ஆறுமுகம், நன்னிலம் நடராஜன், போலீஸ் கண்ணன், சிதம்பரம் வீரக்கனல் ஜெயவேல் என்று பேச்சாளர்கள் சும்மா விளாசித் தள்ளுவார்கள். எம்ஜிஆர் வருகிறார், வந்து கொண்டிருக்கிறார், இதோ வந்துவிட்டார் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். பண்டிகைக் கால இரவுகளில் துணிமணிகளை காண்டா விளக்கு வெளிச்சத்தில் ஏலம் விடுவார்கள். நேபாளத்து ஸ்வெட்டரும், லண்டன் எவர்சில்வரும், மலிவாகக் கிடைக்கும். ரேடியோ மைதானத்தில் பாவைக்கூத்து நடக்கும். சைக்கிள் சந்திரன் ராப்பகலாக தரையில் கால் ஊன்றாமல் சைக்கிள் ஓட்டி சாகசம் செய்வார். மேல்நிலை நீர்த்தேக்க பில்டிங்கில் லைப்ரரி செயல்படும். ஷோ கொட்டகையில் சூதாட்டம் நடக்கும். சின்னமனூர் ஃபேமஸ் சர்க்கஸ் நடக்கும். வெளியூர் வியாபாரிகள் அண்டர்வேர் நிரம்பப் பணத்துடன் செகண்ட் ஷோ படத்தை ராத்திரி பார்த்து விட்டு அதிகாலை பஸ் பிடித்துப் போவார்கள். பொன்னமராவதி to மெட்ராஸ் பஸ் கட்டணம் 20 ரூபாய். இராமாயண மடத்தருகில் உள்ள க்ளப்பில் சீட்டாட்டம் நடக்கும். மணி வண்டியில் பக்கோடா மிக்சர் காராச்சேவு முருக்கு அதிரசம் 10 பைசா. உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணபவனில் ரெங்கையர் போடும் 50 பைசா காபியை காலையில் 5 மணிக்கு பித்தளை வட்டாக்கப்பில் குடித்தால் 8 மணி வரைக்கும் பசிக்காது. பிற பின்பு அன்புடன் ஆறுமுகம் நடராஜன்.

( ஃபேஸ்புக்கில் 2021 மே 15 அன்று நான் இட்ட பதிவு)


வெள்ளி, 13 மே, 2022

ஃபேஸ்புக்கில் கண்ட மூட நம்பிக்கை

🌹🌿பசுவைப் பார்த்தால் சுப சகுனம் ............🌿🌹

🌹🌿தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பாற்கடலில் இருந்து ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன. அவை நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை ஆகியவை. இவை பொன்னிறம், கருமை, வெண்மை, புகை, சிவப்பு நிறம் கொண்டிருந்தன. இவற்றின் சந்ததிகளே பூலோகத்தில் நமக்கு உதவியாக இருந்து வருகின்றன.

🌹 🌿 இவற்றில் இருந்துவரும் கோமயம்(சாணம்), கோமூத்திரம் (கோமியம்), பால், தயிர், வெண்ணெய் ஆகிய ஐந்தும் புனிதமானவை.

🌹 🌿 இவற்றை குறிப்பிட்ட அளவில் கலந்து சிவபெருமானுக்கு செய்யும் அபிஷேகமே "பஞ்சகவ்ய அபிஷேகம்' எனப்படுகிறது.

🌹 🌿 இப்பசுக்களில் மும்மூர்த்திகள், சத்தியம், தர்மம் என்று எல்லா தேவதைகளும் வசிக்கின்றனர்.

🌹 🌿 செல்வவளம் தரும் திருமகள் இதன் பிருஷ்டபாகத்தில்(பின்பாகம்) வசிக்கிறாள். இப்பகுதியை தொட்டு வழிபட்டால் முன்ஜென்ம பாவங்கள் விலகும்.

🌹 🌿 காலையில் எழுந்ததும் பசுவைத் தொழுவத்தில் காண்பது சுபசகுனம்.

🌹 🌿 தெருக்களில் கூட்டமாகப் பார்த்தால் இன்னும் விசேஷம்.

🌹 🌿 பாற்கடலில் பிறந்த ஐந்து பசுக்களும் கோலோகம் என்னும் பசுவுலகில் இருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம்.

🌹 🌿 பசுவைத் தெய்வமாக வழிபட்டால் கோலோகத்தை அடையும் பாக்கியம் உண்டாகும்.



ஞாயிறு, 8 மே, 2022

ஃபேஸ்புக்கில் கண்ட மூடநம்பிக்கை

ஸ்ரீரங்கத்தின் பெருமைகளில் ஒன்றான ரங்க விமானம் சுயம்புவாக உருவானது. இந்த விமானத்தைச் சுற்றி 24 கி.மீ. தூரத்துக்குள் எங்கிருந்து வழிபட்டாலும் முக்தி நிச்சயம் என்கிறது ஸ்ரீரங்கத் தலவரலாறு. 

இந்த விமானம் பொன்னால் வேயப்பட்டு ஓம் என்கிற பிரணவ வடிவில் எழுந்தருளி உள்ளது. இந்த தங்க விமானத்தில் உள்ள பரவாசு தேவர், கையில் அமுதக் கிண்ணத்துடன் காட்சியளிக்கிறார். அந்த அமுதக் கிண்ணம் மெல்ல அவர் வாயை நோக்கி நகர்ந்து போவதாகவும், அது வாயருகில் சென்று சேர்க்கையில் இந்த உலகம் அழியும் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது.

.. பேஸ்புக்கில் கண்ட மூடநம்பிக்கை

அத்திமரங்கள் நிலத்தடி நீரை மேலே கொண்டு வரும் ஆற்றல் உடையவை. அத்திமரங்களை வளர்த்தால் குடிநீர் பிரச்சினை தீரும். விவசாய பூமி, தோட்டங்களில் வளர்க்கலாம். இதன் கிளைகள் பக்கவாட்டில் செல்வதால் வீடுகளில் வளர்க்க முடியாது. 

இருந்தாலும் தோட்டம், கம்மாய், ஓடை, கிணறு ஆகிய இடங்களில் வளர்க்க வேண்டும். இதன் மூலம் நமக்குக் குடிநீர் கிடைக்கும். 

இதை ஏதோ சாதாரணமாக நினைக்காமல் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். தண்ணீர் பிரச்சினைக்காக சண்டையிடுவதை விட,  தீர்த்துவையுங்கள்.

உங்கள் அனைத்து நண்பர்கள்களுக்கும் குருப்களுக்கும் தெரியப்படுத்தி அத்திமரங்களை வளர்க்கத் தொடங்குங்கள்.

நம் நாட்டின் பொருளாதாரமும் விவசாயமும் வளரும். விவசாயப் பிரச்சினை தீரும். தோட்டங்களில் நீர் கிடைக்கும். வறண்ட பூமியும் சோலை வனமாக மாறும்.

ஃபேஸ்புக்கில் கண்ட மூட நம்பிக்கைகள்

இராவணனின் மனைவி மண்டோதரி, கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள்.

எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில் இராவணன் தனது குல குருவான சுக்கிராச்சார்யாரைச் சந்தித்தான்.

 யாராலும் வெல்ல முடியாத வீரமும், மிகுந்த அழகும், நிறைந்த அறிவும் கொண்ட மகனே தனக்குப் பிறக்க வேண்டும் என்று குலகுருவிடம் கேட்டுக் கொண்ட இராவணன் அதற்கு வழிமுறைகள் என்ன என்றும் அவரிடம் கேட்டான்.

அதற்குப் பதில் அளித்த சுக்கிராச்சாரியார், "கிரகங்கள் அனைத்தும் ஒரே கட்டத்தில் இருக்கும் நேரத்தில் உனக்குப் பிள்ளை பிறந்தால், அந்தக் குழந்தை நீ விரும்பிய எல்லாச் சிறப்புகளும் கொண்டதாக இருக்கும்"என்று யோசனை கூறினார்.

உடனடியாக, நவக்கிரகங்கள் அனைத்தையும் சிறைப்பிடித்து, ஒரே அறைக்குள் அடைத்துவிட்டான் இராவணன்.

ஒரே அறையில் இருந்த நவக்கிரகங்கள் யாவும் தவித்துப் போயினர்.

இந்த யோசனையைச் சொன்ன சுக்கிராச்சாரியாரைக் கடிந்தும் கொண்டனர்.

தாங்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருப்பதால் நடக்கப்போகும் தீமைகளை எண்ணிக் கவலை கொண்டனர்.

அதே நேரத்தில் குழந்தை பிறக்க முடியாமல் மண்டோதரி பெருமளவு தவித்தாள்.

வலி அதிகம் இருந்த போதிலும் குழந்தை பிறக்கவே இல்லை.

இந்தச் செய்தி நவக்கிரகங்களை எட்டியதும், 

அதற்குத் தாங்கள்தான் காரணம் என்று இராவணன் தண்டிப்பானோ என்று அச்சம் கொண்டனர்.

இது குறித்து சுக்கிராச்சாரியாரிடம் ஆலோசனை கேட்டனர். 

"இந்தச் சிக்கலில் இருந்து விடுபட வேண்டுமானால், உங்கள் ஒன்பது பேரைத் தவிர, நல்ல செயல் புரியவென்றே இன்னொரு புதியவன் ஒருவனை சிருஷ்டித்து, ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவனுடைய ஆளுகைக்கு உட்பட்ட நேரமாக மாற்றிக் கொடுத்தால், உங்களுக்கு நன்மை உண்டாகும். அவனை சிருஷ்டிக்கும் அதே வேளையிலேயே மண்டோதரிக்கு சுகப்பிரசவம் உண்டாகும். நீங்களும் இராவணின் சிறையிலிருந்து விடுதலை பெறலாம்’’ என்றார்.

சுக்கிராச்சாரியாரின் வாக்கின்படி சனீஸ்வர பகவான் சிறையில் இருந்தபடியே தன் சக்தியால் தன் மனைவி ஜேஷ்டாதேவிக்கு ஒரு மகன் பிறக்கும்படி செய்தார்.

சனீஸ்வரன்-ஜேஷ்டாதேவி தம்பதியின் புதல்வனுக்கு குளிகன் என்று பெயரிடப்பட்டது.

குளிகன் பிறந்த அதே நேரம் மண்டோதரிக்கும் அழகான ஒரு ஆண் மகவு பிறந்தது.

குழந்தை பிறந்து முதன்முதலில் அழுதவுடன் ஒரு மாபெரும் வீரன் பிறந்துள்ளான் என்பதைக் குறிக்கும் வகையில் இடி, மின்னலுடன் அடர்மழை பெய்தது.

அதனால் அக்குழந்தை மேகநாதன் எனப் பெயரிடப்பட்டது.

அவனே இராவணனின் தவப்புதல்வனான மேகநாதன். 

பின்னாளில் கடும் தவம் செய்து பிரம்மாவிடமிருந்து பல அபூர்வமான அஸ்திரங்களைப் பெற்று இந்திரனையே வென்று இந்திரஜித் என்று அழைக்கப்பட்டான்.

இந்திரஜித் என்ற மேகநாதன் பிறந்த நேரம் தான் குளிகை நேரம் எனப்படுகிறது. 

தான் பிறக்கும்போதே நல்லதை நடத்தி வைத்ததால், குளிகன் நவக்கிரகங்களால் பாராட்டப்பட்டார்.

குளிகை நேரம் என்றே தினமும் பகலிலும் இரவிலும் ஒரு நாழிகை நேரம் குளிகனுக்காக வழங்கப்பட்டது.

குளிகை நேரத்தை, “காரிய விருத்தி நேரம்” என்று ஆசீர்வதித்தார் சுக்கிராச்சாரியார்.

அதனாலேயே குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும் தொடர்ந்து நடைபெற்று அந்தக் குடும்பமே செழிக்கும் என்றும் கூறப்பட்டது.

குளிர்விக்கும் தன்மையைக் கொண்ட குளிகன் ஒவ்வொரு நாளிலும் நல்ல காரியங்களைத் தொடங்கவே உருவாக்கப்பட்டான்.

குளிகனை சனிக்கிழமைகளில் மாலை வேளைகளில் வணங்கலாம்.

சனீஸ்வரனை வணங்கும்போது மனதினில் குளிகனை எண்ணி வணங்கலாம்.

 இராகுகாலம், எமகண்டத்தில் எப்படி ஒரு நல்ல செயலை செய்ய மாட்டார்களோ, அதைப் போல குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும் திரும்பத் திரும்ப நடக்கும் என்ற நம்பிக்கை வெகு காலமாக இருக்கிறது.

இதனால் நல்ல காரியங்களுக்கு குளிகை நேரம் உகந்ததாகவும், ஈமச்சடங்கு போன்ற கெட்ட காரியங்களுக்கு இது பொருத்தமில்லாததாகவும் கருதப்படுகிறது.

குளிகை நேரத்தில் ஒரு காரியத்தைத் தொடங்கினால், அது வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை.

குளிகை என்ற நல்ல வேளையில் சொத்து வாங்குவது, சுப நிகழ்வுகள், கடனைத் திருப்பிக் கொடுப்பது, பிறந்தநாள் கொண்டாடுவது போன்றவற்றைச் செய்வதால், 

அவை எந்தத் தடையும் இல்லாமல் நடப்பது மட்டுமின்றி, இது போன்ற நல்ல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டும் இருக்கும்.

ஆனால் அடகு வைப்பது, கடன் வாங்குவது, வீட்டைக் காலிசெய்வது, இறந்தவர் உடலைக் கொண்டு செல்வது போன்றவற்றை குளிகை நேரத்தில் செய்யக் கூடாது. தொட்டதைத் துலங்கச் செய்யுமாம் குளிகன் என்ற மாந்தனின் நேரம்.

ஃபேஸ்புக்கில் கண்ட மூடநம்பிக்கைகள்

இராமேஸ்வரம் கோவிலில் எவருக்குமே தெரியாத சில அற்புத சக்தி வாய்ந்த சன்னிதிகள்:

ராமேஸ்வரத்தில் பிரகாரங்களில் சுற்றி வரும்போது நிறைய லிங்கங்கள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

இவற்றில் சில லிங்கங்கள் கோவில் நிர்வாகத்தாலும்,
பக்தர்களாலும் கவனிக்கப்படாமலும் பூஜைகள் நடைபெறாமலும் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

அப்படி ஒரு லிங்கம் பல நூறு வருடங்களாகப் பராமரிக்கப்படாமல் உள்ளது.

சிவராத்திரி அன்று மட்டும் பக்தர் ஒருவர் கோவில் நிர்வாகிகளிடம் அனுமதி பெற்று அந்தச் சிவலிங்கத்தைத் தனது சொந்த முயற்சியால் சுத்தம் செய்து லிங்கத்தை நன்றாக வில்வ இலைகளால் அலங்காரம் செய்து வருகின்றார்.

மூன்றாம் பிரகாரத்தில் நளன், நீலன், கவன் ஆகியோரால் பூஜிக்கப்பட்ட சிவன் சன்னதிகளுக்கு அருகில் உள்ள இந்த லிங்கத்தின் பெயர் நீலேஸ்வரர் லிங்கம்.

இந்த நீலேஸ்வரர் லிங்கத்தின் சிறப்பு என்னவென்றால் பல நூறு வருடங்களுக்கு முன்பு சீதையால் பிரதிஷ்டை செய்யபட்ட தற்போதுள்ள ராமநாதர் லிங்கத்திற்குப் பதிலாக‌இருந்த மூலவர் லிங்கம் இவர்தான் என்று கூறப்படுகிறது.

இந்த லிங்கத்தை இராமநாதபுரத்தில் வசிப்பவர்கள் யாரும் தரிசித்தது இல்லை.

இந்த லிங்கத்தைத் தரிசிப்பதற்குரிய
பிராப்தம் இருந்தால் தரிசிக்க முடியும்.

மேலும் ராமேஸ்வரம் கோவிலில் ராமநாதர் சன்னிதிக்குப் பின்புறம்
உப்புக்கல்லால் செய்யப்பட்ட ஒரு பழமையான லிங்கம் உள்ளது.

பல வருடங்களாக அந்த உப்புக்கல்லால் செய்யப்பட்ட உப்புலிங்கம் கரையாமல் அப்படியே உப்புக்கல்லாகவே இருப்பது மிகவும் அதிசயமாகும்.

இந்த லிங்கம் வந்ததற்கு ஒரு கதை கூறப்படுகிறது.

ஒரு முறை சிலர், ராமேஸ்வரம் கோவிலில் உள்ள லிங்கம் மணலால் ஆனது அல்ல என்றும், அப்படி மணலால் செய்யப்பட்டது என்றால், அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் வாதம் செய்தார்கள்.

அந்த நேரத்தில் பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். ஆனால் அந்த லிங்கம் கரையவில்லை.

அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கமே கரையாதபோது, காக்கும் கடவுளின் மனைவியான சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாமல் இருப்பதில் என்ன அதிசயம் இருக்கிறது’ என்று கூறினார்.

அவர் செய்த உப்பு லிங்கத்தை இப்போதும் நாம் தரிசனம் செய்யலாம்.

மேலும் இராமேஸ்வரம் கோவிலில் அநேகம் பேருக்கு தெரியாத சேதுமாதவர் சன்னதி ஒன்று உள்ளது.

காலில் சங்கிலியுடன் பெருமாள்-சேதுமாதவர் சன்னிதி

சுந்தரபாண்டியன் என்னும் மன்னன், பெருமாளின் தீவிர பக்தராக விளங்கினான்.
அவனது குழந்தை பாக்கியம் இல்லா
குறையைத் தீர்க்க மகாலட்சுமியையே
அவரது மகளாக அவதரிக்கும் படி செய்தார் பெருமாள்.

அவள் மணப்பருவம் அடைந்த போது, பெருமாள் ஒரு இளைஞனின் வடிவில் வந்து அவளிடம் வம்பிழுத்தார்.

மன்னன் அந்த இளைஞனைச் சிறையில் அடைத்து, சங்கிலியால் காலைக் கட்டிப் போட்டான்.

பக்தனின் பக்திக்கு கட்டுப்பட்ட பெருமாள், அவ்வாறு சங்கிலியால் கட்டுவதற்கு இடமளித்தார்.

அன்றிரவில் மன்னனின் கனவில் இளைஞனாக வந்து சிறையில் அடைபட்டிருப்பது தானே என்று மன்னனுக்கு உணர்த்தவே, இருவருக்கும் திருமணம் செய்விக்கப்பட்டது.

இளைஞராக வந்த சுவாமி, இங்கு சேதுமாதவராக அருளுகிறார்.

அவரது காலில் சங்கிலி கட்டப்பட்டிருக்கிறது.

இவரது சன்னதி அருகில் லட்சுமி நாராயணர், யோக நரசிம்மர் இருவரும் அருகருகில் காட்சி தருகின்றனர்.

கடுமையான பிதுர்தோஷம் உள்ளவர்கள் இராமேஸ்வரம் கோவிலில் உள்ள அனைத்து தீர்த்தத்திலும் நீராடிவிட்டு இந்த சேதுமாதவர் சன்னதியின் முன்பு, கடல் மணலில் லிங்கத்தைப் பிடித்து வைத்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்லி வணங்கினால் மட்டுமே கடுமையான பிதுர்தோஷம் நீங்கும் என்பது எவருக்குமே தெரியாத தேவ ரகசியமாகும்.

ராமர் இங்கு சிவபூஜை செய்த போது அவரைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்த பாவம்) விலகியது. அந்த தோஷம் எங்கு செல்வதென தெரியாமல் திணறியது. அதனால் வேறு யாருக்கும் பாதிப்பு உண்டாகாமல் இருக்க, சிவன் பைரவரை அனுப்பினார். அவர் பிரம்மஹத்தி தோஷத்தை தன் திருவடியால் அழுத்தி, பாதாளத்தில் தள்ளினார். பின்னர் இத்தலத்திலேயே அமர்ந்து, இங்கு வரும் மனம் திருந்திய பக்தர்களின் கொடிய பாவங்களைப் பாதாளத்தில் தள்ளுபவராக அருள் செய்கிறார். இவருக்கு “பாதாள பைரவர்’ என்று பெயர். இவரது சன்னதி கோடிதீர்த்தம் அருகில் உள்ளது.

இந்த பைரவரை வழிபட்டால் கொடிய தோஷமான பிரம்மஹத்தி
தோஷம் (கொலை செய்த பாவம்) வறுமை, நோய் யாவும் உடனடியாக அகலும்.

இராமேஸ்வரம் கோவிலுக்குச் செல்பவர்கள் பல நூறு வருடங்கள் பழமையான நீலேஸ்வரர் லிங்கம், உப்புக்கல்லால் செய்யப்பட்ட உப்பு லிங்கம், சேது மாதவர் சன்னதி மற்றும் பாதாள பைரவர் ஆகிய சன்னதிகளுக்கு சென்று தரிசித்து பயன் பெறுவதற்காக இந்த விபரங்கள் பதிவிடப்பட்டுள்ளன.

ஞாயிறு, 1 மே, 2022

மீனையும் பாலையும் ஒரே உணவில் சேர்க்கலாமா?

மீன் சாப்பிட்டவுடன் பால் குடிக்கலாமா?

மீனையும் பாலையும் ஒரே உணவில் சேர்க்கலாமா?

இதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

சிலர், "மீன் மற்றும் கருவாடு போன்ற மீன் வகைகளை சாப்பிட்டதும் பாலோ தயிரோ அருந்தக்கூடாது. அப்படிச் செய்தால் உடலில் வெண் மேகம் தோன்றும்." என்கிறார்கள்.

சிலர், "உடம்புக்கு ஒத்துக்காது" என்பர்.

சாப்பிடுவதில் தவறில்லை என்கிறது அறிவியல்.

தமிழ்நாடு அரசு இலவசமாக வழங்கிய பன்னிரண்டாம் வகுப்பு (Higher Secondary Second Year) Nutrition and Dietetics என்னும் பாடநூலின் ஒன்பதாம் பக்கம் Food Fads என்னும் தலைப்பில், மீன் பால் ஆகிய இரண்டையும் ஒரே உணவில் சேர்க்கலாம் என்கிறது. சேர்க்கக் கூடாது என்பது அடிப்படையற்றது என்றும் சொல்கிறது. மேலும் இதைப்  போன்ற தவறான தற்காலிக நம்பிக்கைகளை  நாம் ஊக்கப்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்துகிறது.

இந்நூல், SCERT (State Council of Educational Research and Training) யின்படி Tamil Nadu Textbook and Educational Services Corporation ஆல் அச்சிட்டு வழங்கப்பட்டதாகும்.

Definition of fad diet: It is a diet that becomes popular for a short time, similar to fads in fashion, without being a standard dietary recommendation, and often making unreasonable claims for fast weight loss or health improvements.

பிற பின்பு, வணக்கம்.

அன்புடன் 

ஆறுமுகம் நடராஜன்


தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012 உடன்பிறப்பே, பேரவையில்  நியாயமான  பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூ...