google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: ஃபேஸ்புக்கில் கண்ட மூட நம்பிக்கைகள்

ஞாயிறு, 8 மே, 2022

ஃபேஸ்புக்கில் கண்ட மூட நம்பிக்கைகள்

இராவணனின் மனைவி மண்டோதரி, கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள்.

எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில் இராவணன் தனது குல குருவான சுக்கிராச்சார்யாரைச் சந்தித்தான்.

 யாராலும் வெல்ல முடியாத வீரமும், மிகுந்த அழகும், நிறைந்த அறிவும் கொண்ட மகனே தனக்குப் பிறக்க வேண்டும் என்று குலகுருவிடம் கேட்டுக் கொண்ட இராவணன் அதற்கு வழிமுறைகள் என்ன என்றும் அவரிடம் கேட்டான்.

அதற்குப் பதில் அளித்த சுக்கிராச்சாரியார், "கிரகங்கள் அனைத்தும் ஒரே கட்டத்தில் இருக்கும் நேரத்தில் உனக்குப் பிள்ளை பிறந்தால், அந்தக் குழந்தை நீ விரும்பிய எல்லாச் சிறப்புகளும் கொண்டதாக இருக்கும்"என்று யோசனை கூறினார்.

உடனடியாக, நவக்கிரகங்கள் அனைத்தையும் சிறைப்பிடித்து, ஒரே அறைக்குள் அடைத்துவிட்டான் இராவணன்.

ஒரே அறையில் இருந்த நவக்கிரகங்கள் யாவும் தவித்துப் போயினர்.

இந்த யோசனையைச் சொன்ன சுக்கிராச்சாரியாரைக் கடிந்தும் கொண்டனர்.

தாங்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருப்பதால் நடக்கப்போகும் தீமைகளை எண்ணிக் கவலை கொண்டனர்.

அதே நேரத்தில் குழந்தை பிறக்க முடியாமல் மண்டோதரி பெருமளவு தவித்தாள்.

வலி அதிகம் இருந்த போதிலும் குழந்தை பிறக்கவே இல்லை.

இந்தச் செய்தி நவக்கிரகங்களை எட்டியதும், 

அதற்குத் தாங்கள்தான் காரணம் என்று இராவணன் தண்டிப்பானோ என்று அச்சம் கொண்டனர்.

இது குறித்து சுக்கிராச்சாரியாரிடம் ஆலோசனை கேட்டனர். 

"இந்தச் சிக்கலில் இருந்து விடுபட வேண்டுமானால், உங்கள் ஒன்பது பேரைத் தவிர, நல்ல செயல் புரியவென்றே இன்னொரு புதியவன் ஒருவனை சிருஷ்டித்து, ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவனுடைய ஆளுகைக்கு உட்பட்ட நேரமாக மாற்றிக் கொடுத்தால், உங்களுக்கு நன்மை உண்டாகும். அவனை சிருஷ்டிக்கும் அதே வேளையிலேயே மண்டோதரிக்கு சுகப்பிரசவம் உண்டாகும். நீங்களும் இராவணின் சிறையிலிருந்து விடுதலை பெறலாம்’’ என்றார்.

சுக்கிராச்சாரியாரின் வாக்கின்படி சனீஸ்வர பகவான் சிறையில் இருந்தபடியே தன் சக்தியால் தன் மனைவி ஜேஷ்டாதேவிக்கு ஒரு மகன் பிறக்கும்படி செய்தார்.

சனீஸ்வரன்-ஜேஷ்டாதேவி தம்பதியின் புதல்வனுக்கு குளிகன் என்று பெயரிடப்பட்டது.

குளிகன் பிறந்த அதே நேரம் மண்டோதரிக்கும் அழகான ஒரு ஆண் மகவு பிறந்தது.

குழந்தை பிறந்து முதன்முதலில் அழுதவுடன் ஒரு மாபெரும் வீரன் பிறந்துள்ளான் என்பதைக் குறிக்கும் வகையில் இடி, மின்னலுடன் அடர்மழை பெய்தது.

அதனால் அக்குழந்தை மேகநாதன் எனப் பெயரிடப்பட்டது.

அவனே இராவணனின் தவப்புதல்வனான மேகநாதன். 

பின்னாளில் கடும் தவம் செய்து பிரம்மாவிடமிருந்து பல அபூர்வமான அஸ்திரங்களைப் பெற்று இந்திரனையே வென்று இந்திரஜித் என்று அழைக்கப்பட்டான்.

இந்திரஜித் என்ற மேகநாதன் பிறந்த நேரம் தான் குளிகை நேரம் எனப்படுகிறது. 

தான் பிறக்கும்போதே நல்லதை நடத்தி வைத்ததால், குளிகன் நவக்கிரகங்களால் பாராட்டப்பட்டார்.

குளிகை நேரம் என்றே தினமும் பகலிலும் இரவிலும் ஒரு நாழிகை நேரம் குளிகனுக்காக வழங்கப்பட்டது.

குளிகை நேரத்தை, “காரிய விருத்தி நேரம்” என்று ஆசீர்வதித்தார் சுக்கிராச்சாரியார்.

அதனாலேயே குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும் தொடர்ந்து நடைபெற்று அந்தக் குடும்பமே செழிக்கும் என்றும் கூறப்பட்டது.

குளிர்விக்கும் தன்மையைக் கொண்ட குளிகன் ஒவ்வொரு நாளிலும் நல்ல காரியங்களைத் தொடங்கவே உருவாக்கப்பட்டான்.

குளிகனை சனிக்கிழமைகளில் மாலை வேளைகளில் வணங்கலாம்.

சனீஸ்வரனை வணங்கும்போது மனதினில் குளிகனை எண்ணி வணங்கலாம்.

 இராகுகாலம், எமகண்டத்தில் எப்படி ஒரு நல்ல செயலை செய்ய மாட்டார்களோ, அதைப் போல குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும் திரும்பத் திரும்ப நடக்கும் என்ற நம்பிக்கை வெகு காலமாக இருக்கிறது.

இதனால் நல்ல காரியங்களுக்கு குளிகை நேரம் உகந்ததாகவும், ஈமச்சடங்கு போன்ற கெட்ட காரியங்களுக்கு இது பொருத்தமில்லாததாகவும் கருதப்படுகிறது.

குளிகை நேரத்தில் ஒரு காரியத்தைத் தொடங்கினால், அது வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை.

குளிகை என்ற நல்ல வேளையில் சொத்து வாங்குவது, சுப நிகழ்வுகள், கடனைத் திருப்பிக் கொடுப்பது, பிறந்தநாள் கொண்டாடுவது போன்றவற்றைச் செய்வதால், 

அவை எந்தத் தடையும் இல்லாமல் நடப்பது மட்டுமின்றி, இது போன்ற நல்ல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டும் இருக்கும்.

ஆனால் அடகு வைப்பது, கடன் வாங்குவது, வீட்டைக் காலிசெய்வது, இறந்தவர் உடலைக் கொண்டு செல்வது போன்றவற்றை குளிகை நேரத்தில் செய்யக் கூடாது. தொட்டதைத் துலங்கச் செய்யுமாம் குளிகன் என்ற மாந்தனின் நேரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

ஏன் இப்படி?

இவ்வளவு சிறியதாக இந்தத் தேங்காய் ஏன் இருக்கிறது?