google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: பாரதிதாசன்
பாரதிதாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாரதிதாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 16 அக்டோபர், 2022

சிற்றூர், பேரூர், பட்டணம்

சிற்றூர்

சின்னப் பள்ளி ஒன்றுண்டு
பெரிய கோயில் பல உண்டு.
நன்செய் புன்செய் நாற்புறமும்
நடவும் உழவும் இசைபாடும்
தென்னையும் பனையும் பலமரமும்
செடியும் கொடியும் அழகு தரும்
நன்னீர் வாய்க்கால் ஏரிகுளம்
நலம் கொழிப்பது சிற்றூராம்.

மச்சு வீடு ஏழெட்டு
மாடி வீடு நாலைந்து
குச்சு வீட்டு வாயில்கள்
குனிந்து போகப் பலவுண்டு
தச்சுப் பட்டறை ஒன்றுண்டு
தட்டார் பட்டரை ஒன்றுண்டு
அச்சுத் திரட்டும் கருமாரின்
பட்டறை உண்டு சிற்றூரில்.

காக்கா ஒருபுறம் கா கா கா
குருவி ஒருபுறம் கீ கீ கீ
மேய்க்கும் ஆடு மே மே மே
மின்னும் கோழி கோ கோ கோ
பாக்கும் பூனை மீ மீ மீ
பசுங் கன்றும் மா மா மா
ஆக்கும் இந்தக் கச்சேரி
அங்கங் குண்டு சிற்றூரில்.

கம்பும் தினையும் கேழ்வரகும்
கட்டித் தயிரும் சம்பாவும்
கொம்பிற் பழுத்த கொய்யா மா
குலையிற் பழுத்த வாழையுடன்
வெம்பும் யானைத் தலைபோல
வேரிற் பழுத்த நல்லபலா
நம்பிப் பெறலாம் சிற்றூரில்
நாயும் குதிரை போலிருக்கும்.

பேருர்

நிற்க வரும் புகை வண்டி
நிலையம் உள்ள பேரூர்!
விற்கத் தக்க விளைவை எல்லாம்
வெளியில் ஏற்றும் பேரூர்!
கற்கத் தக்க பள்ளிக்கூடம்
கச்சித மாய் நடக்கும்.
உற்றுப் பார்க்கக் கோயில் - மட்டும்
ஊரிற் பாதி இருக்கும்!

பத்துத் தெருக்கள் மிதிவண்டிகள்
பவனி வரும் எங்கும்.
முத்து வெள்ளைச் சுவர்வீட்டின்
முன்னால் பொறியியங்கி!
கத்தும் இரிசு கட்டைவண்டி
கடைச் சரக்கை ஏற்றி
ஒத்து நகரை நோக்கி ஓடும்
உள்ளூ ரைஏ மாற்றி!

(பொறியியங்கி-கார்)

செட்டுத் தனம் இல்லை பல
தேவை யற்ற உடைகள்.
பட்டணம் போகா தவர்கள்
பழங்காலத்து மக்கள்.
கட்டு டம்பு வற்றிப் போகக்
கையில் வெண்சு ருட்டுப்
பெட்டியோடும் உலவ வேண்டும்
இதன் பேர்தான் பேரூர்.

பட்டணம்

பல்கலைக் கழகம்
உயர்நிலைப் பள்ளி
செல்வச் சிறுவர்
செல்லும் பள்ளிகள்
நல்ல நூல்கள்
படிக்கப் படிப்பகம்
எல்லாம் இருக்கும்
அமைதி இராது!

பாட்டை நிறையப்
பலவகை வண்டிகள்
காட்டுக் கூச்சல்
கடமுடா முழக்கம்
கேட்டால் காதே
கெட்டுப் போகும்
ஈட்ட ஆலைகள்
இருபது கூவும்.

தூய ஆடைத்
தோகை மாரும்
ஆய உணர்வின்
ஆடவர் தாமும்
ஓயா துழைக்கும்
பலதுறை மக்களும்
தேய வழிகள்
செல்வார் வருவார்.

வெள்ளி மலையும்
தங்க மலையுமாய்
உள்ள வீடுகள்
வானில் உயரும்
அள்ளும் அழகுடை
அலுவல் நிலையம்
கொள்ளா வணிகம்
கொண்டது பட்டணம்!

நாடக சாலைகள்,
நற்படக் காட்சிகள்
ஆடல் பாடல்
அமையும் அவைகள்
ஈடிலாப் புலவர்
பேச்சுமன் றங்கள்,
காடுகள் சோலைகள்
கவிந்தது பட்டணம்.

- பாவேந்தர் பாரதிதாசன்

ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

திராவிட நாட்டுக் கொடி வணக்கம்

 

வானில் உயர்ந்த திராவிட நாட்டு
மணிக்கொடி தன்னை வணங்குவோம்!
நானில மேல்அதன் மாண்பினைக் காண்பதில்
நாம் நன்றுசேர இணங்குவோம்.

ஊனுடைமை உயிர் யாவும் திராவிடர்
மானத்தைக் காப்பதற் கல்லவோ?
ஆனதைப் பார்க்கட்டும் ஆளவந்தார் -- அவர்
ஆர்ப்பாட்டங்கள் நமை வெல்லவோ?

விண்ணிடை ஏறிய எங்கள் மணிக்கொடி
வெல்க வெல்க வெல்க வெல்கவே!
மண்ணில் உயர்ந்த திராவிட நாட்டினர்
மாட்சி மணிக்கொடி வெல்கவே!

திண்மையும் உண்மையும் வண்மையும் கொண்ட
திராவிடர் மாக்கொடி வாழ்கவே!
ஒண்சுடர் வான்நிலை உள்ளளவும் புகழ்
ஓங்கித் திராவிடம் வாழ்கவே!

                                                                     _பாரதிதாசன்



திராவிட நாட்டுப் பண்

திராவிட நாட்டுப் பண்

[இசை - மோகனம்] [தாளம் - ஆதி]

 (பல்லவி)

வாழ்க வாழ்கவே

வளமார் எமதுதி ராவிடநாடு

வாழ்க வாழ்கவே!

 

(சரணங்கள்)

சூழும் தென்கடல் ஆடும் குமரி

தொடரும் வடபால் அடல்சேர் வங்கம்

ஆழும் கடல்கள் கிழக்கு மேற்காம்

அறிவும் திறலும் செறிந்த நாடு. (வா)

 

பண்டைத் தமிழும் தமிழில் மலர்ந்த

பண்ணிகர் தெலுங்கு துளுமலை யாளம்

கண்டை நிகர்கன் னடமெனும் மொழிகள்

கமழக் கலைகள் சிறந்த நாடு. (வா)

 

அள்ளும் சுவைசேர் பாட்டும் கூத்தும்

அறிவின் விளைவும் ஆர்ந்திடு நகடு

வெள்ளைப் புனலும் ஊழித்தீயும்

வேகச் சீறும் மறவர்கள் நாடு. (வா)

 

அகிலும் தேக்கும் அழியாக் குன்றம்

அழகாய் முத்துக் குவியும் கடல்கள்

முகிலும் செந்நெலும் முழங்கு நன்செய்

முல்லைக்காடு மணக்கும் நாடு. (வா)

 

அமைவாம் உலகின் மக்களை யெல்லாம்

அடிநாள் ஈன்ற அன்னை தந்தை

தமிழர்கள் கண்டாய் அறிவையும் ஊட்டிச்

சாகாத் தலைமுறை ஆக்கியநாடு. (வா)

 

ஆற்றில் புனலின் ஊற்றில் கனியின்

சாற்றில் தென்றல் காற்றில் நல்ல

ஆற்றல் மறவர் செயலில் பெண்கள்

அழகில் கற்பில் உயர்ந்த நாடு. (வா)

 

புனலிடை மூழ்கிப் பொழிலிடை யலவிப்

பொன்னார் இழையும் துகிலும் பூண்டு

கனிமொழி பேசி இல்லறம் நாடும்

காதல் மாதர் மகிழுறும் நாடு. (வா)

 

திங்கள் வாழ்க செங்கதிர் வாழ்க

தென்றல் வாழ்க செந்தமிழ் வாழ்க

இங்குத் திராவிடர் வாழ்க மிகவே

இன்பம் சூழ்ந்ததே எங்கள் நாடு. (வா)


                    _பாரதிதாசன் 



திங்கள், 21 டிசம்பர், 2020

தமிழனே இது கேளாய்


தமிழனே இது கேளாய் தமிழிசைப் பாடல்கள்

பாடல்: தமிழனே இது கேளாய்
ஆல்பம்: தமிழிசைப் பாடல்கள்
பாடியவர்: புஷ்பவனம் குப்புசாமி
இயற்றியவர்: புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்
ராகம்: சிந்துபைரவி
தாளம்: ஆதி
முன்னுரை: நா அருணாச்சலம் (தலைவர், தந்தை பெரியார் தமிழிசை மன்றம்)
விஜய் மியூஸிக்கல்ஸ்
வீடியோ: கதிரவன் கிருஷ்ணன்

Song: Thamizhane Idhu Kelaai
Singer: Pushpavanam Kuppusamy
Lyrics: Puratchikavingar Pavendhar Bharathidasan
Raga: Sindhubhairavi
Tala: Adhi
Introduction: Na Arunachalam (Leader, Thandhai Periyar Thamizhisai Mandram)
Vijay Musicals
Video: Kathiravan Krishnan

பாடல்வரிகள் (LYRICS):

தமிழனே இது கேளாய்
உன்பால் சாற்ற நினைத்தேன் பல நாளாய்

கமழும் உன் தமிழினை உயிரென ஓம்பு
காணும் பிற மொழிக ளோவெறும் வேம்பு

நமையெலாம் பிறமொழி துாக்கிடும் தாம்பு
நம்உரி மைதனைக் கடித்ததப் பாம்பு

தனித்தியங் கும்தன்மை தமிழினுக் குண்டு
தமிழே ஞாலத்தில் தாய்மொழி பண்டு

கனிச்சாறு போற்பல நுாலெலாம் கண்டு
காத்ததும் அளித்ததும தமிழ்செய்த தொண்டு

வந்தவர் வஞ்சகர் தமிழாற் செழித்தார்
வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார்

நம்செயல் ஒழுக்கங்கள் பற்பல அழித்தார்
நாமுணர்ந்தோம் இந்நாள் அவரஞ்சி விழித்தார்

From: https://www.youtube.com/watch?v=EZC02kaCryo

Makkal Nalaththirku


தமிழிசைப் பாடல்கள்
பாடல்: மக்கள் நலத்திற்கு மதமா
ஆல்பம்: தமிழிசைப் பாடல்கள்
பாடியவர்: புஷ்பவனம் குப்புசாமி
இயற்றியவர்: புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்
ராகம்: சிந்து இசை
தாளம்: ரூபகம்
முன்னுரை: நா அருணாச்சலம் (தலைவர், தந்தை பெரியார் தமிழிசை மன்றம்)
விஜய் மியூஸிக்கல்ஸ்
வீடியோ: கதிரவன் கிருஷ்ணன்

Song: Makkal Nalathirku Madhamaa
Singer: Pushpavanam Kuppusamy
Lyrics: Puratchikavingar Paavendhar Bharathidasan
Raga: Sindhu Isai
Tala: Rupakam
Introduction: Na Arunachalam (Leader, Thandhai Periyar Thamizhisai Mandram)
Vijay Musicals
Video: Kathiravan Krishnan

பாடல்வரிகள் (LYRICS):

மக்கள் நலத்திற்கு மதமா - இல்லை
மதத்தின் நலத்திற்கு மக்களா

சொல்வீர் மக்கள் நலத்திற்கு மதமா - இல்லை
மதத்தின் நலத்திற்கு மக்களா

திக்கெட்டும் உள்ளவர் யாவரும்
ஒன்று சேராது செய்வதே மதமாகுமானால்

பொய்க்கட்டு நீக்குதல் வேண்டும் - அந்த
பொய்க்கட்டு நீக்குதல் வேண்டும்

அப்பொல்லாங்கில் எல்லாரும் நீங்குதல் வேண்டும்

எல்லா மதங்களும் ஒன்றே - அவை
எல்லாரும் இன்புற்று வாழ்வீர்கள் என்றே

சொல்லால் முழங்குவது கண்டீர் - அவை
துன்புற்று வாழ்த்திடச் சொல்லியதுமுண்டோ

எல்லாரும் மக்களே ஆவர் - இங்கு
எல்லாரும் நிகராவர் எல்லாரும் உறவோர்

எல்லாரும் ஒருதாயின் செல்வர் - இங்கு
எல்லாரும் ஒருதாயின் செல்வர்

இதை எண்ணாத மக்களை மாக்கள் என்போமே

வழிகாட்டும் மதமெல்லாம் இங்கே - நல்ல
பழிகாட்டி ஆனபின் வழிகாட்டிடாமலே

பழிகூட்ட வைத்திருப்பீரோ - நீர்
பகைகூட்ட மதமென்ற மொழிகூட்டலாமோ

பிழியாக்கரும்பினிலே சாற்றை - நீர்
பெற்றபின் சக்கையை மக்களுக்கு அளித்தே

அழிவைப் புரிந்திடுதல் நன்றோ - நல்
அன்பால் வளர்ந்திடுக இன்பநல்வாழ்வை

மதத்தின் நலத்திற்கு மக்களா - இல்லை
மக்கள் நலத்திற்கு மதமா

From: https://www.youtube.com/watch?v=yro1zRbVA_Y

சனி, 9 நவம்பர், 2019

பாவேந்தர் பாரதிதாசனின் சிறந்த திரையிசைப்பாடல்கள்



பாவேந்தர் தமிழுக்கு மயங்காதவர்கள் இருக்க முடியாது . ஆழம் பொதிந்த இலக்கிய நடையுடன் கவிநயம் படைக்கும் கவிஞரின் பாடல்களில் சில திரையிசையாக ஒளிக்கின்றன . அவற்றில் சிலவற்றை தொகுத்து தந்துள்ளோம் . தமிழுக்கும் அமுதென்று பேர் ... சங்கே முழங்கு .. புதியதோர் உலகம் செய்வோம் ...
From: https://www.youtube.com/watch?v=_7qy_W5n8G8

இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரத்திற்கு அனுமன் ஏன் தலை வணங்கினான்?

இராமாயணத்தில் , இந்திரஜித்தின் மிக வலிமையான பிரம்மாஸ்திரத்திற்கு அனுமன் கட்டுப்பட்டுத் தலைவணங்கியதன் பின்னணியில் மிக ஆழமான , சுவாரச...