google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: ஆகஸ்ட் 2018

வியாழன், 30 ஆகஸ்ட், 2018

சிறுபாணாற்றுப்படை தொடர்ச்சி


தமிழ் உரை சிறுபாணாற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
எளிய உரை வைதேகி
பாடியவர் – இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்
பாடப்பட்டவன் – ஓய்மான் நாட்டு நல்லியக்கோடன்
திணை – பாடாண் 
துறை – ஆற்றுப்படை
பாவகை – ஆசிரியப்பா
மொத்த அடிகள் – 269

முந்தைய பதிவின் தொடர்ச்சி:
  
வேலூர் செல்லும் வழியும்
 எயினர் தரும் விருந்தும்

பைந்நனை அவரை பவழம் கோப்பவும்,
கரு நனைக் காயா கண மயில் அவிழவும்,   165
கொழுங்கொடி முசுண்டை கொட்டங் கொள்ளவும்,
செழுங்குலைக் காந்தள் கை விரல் பூப்பவும்,
கொல்லை நெடு வழிக் கோபம் ஊரவும்,
முல்லை சான்ற முல்லை அம் புறவின்
விடர் கால் அருவி வியன் மலை மூழ்கிச்   170
சுடர் கால் மாறிய செவ்வி நோக்கித்
திறல் வேல் நுதியின் பூத்த கேணி,
விறல் வேல் வென்றி வேலூர் எய்தின் [164-173]
பொருளுரை:  பசிய அரும்புகளையுடைய அவரைக் கொடி பவளம் போன்ற பூக்களைத் தொடுப்பவும்கருமையான காயா மலர்கள் கூட்டமாக இருக்கும் மயிலின் கழுத்தைப் போன்று மலரவும்தடித்த முசுண்டைக் கொடிகள் சிறிய பனை இலைப் பெட்டியைப் போலும் உள்ள மலர்களை மலரவும்பெரிய காந்தள் மலர்க் குலைகள் கைகள் போன்று மலரவும்கொல்லையில் உள்ள நீண்ட வழியில் இந்திரகோபம் (மூதாய்) ஊர்ந்து இருக்கவும்முல்லை ஒழுக்கம் பொருந்திய முல்லைக் கொடிகள் உடைய முல்லைக் காட்டில்மலை இடுக்குகளில் குதிக்கும் அருவிகளையுடைய பெரிய மலையில் ஞாயிறு மூழ்கிய நேரத்தில் வானை நோக்கிவலிமை மிக்க வேலின் நுனியைப் போல உள்ள மலர்கள் பூத்த குளங்களையுடைய வெற்றியடைய வேலால் வெற்றி பொருந்திய வேலூரை நீங்கள் அடைந்தால்,
குறிப்பு – கொட்டம் (166) – நச்சினார்க்கினியர் உரை – பனங்குருத்தால் செய்விக்கப்படும் சிறிய பெட்டிகொட்டை – நூற்கின்ற கொட்டையுமாம்.  முல்லை சான்ற முல்லை அம் புறவின் (169) – நச்சினார்க்கினியர் உரை – கணவன் கூறிய சொற்பிழையாது இல்லிலிருந்து நல்லறம் செய்து ஆற்றி இருந்த தன்மை அமைந்த முல்லைக் கொடி படர்ந்த.  அகநானூறு 274 – முல்லை சான்ற கற்பின்நற்றிணை 142 – முல்லை சான்ற கற்பின்பரிபாடல் 15 – முல்லை முறைசிறுபாணாற்றுப்படை 30 – முல்லை சான்ற கற்பின்,  சிறுபாணாற்றுப்படை 169 – முல்லை சான்ற முல்லை அம் புறவின்மதுரைக்காஞ்சி 285 – முல்லை சான்ற புறவு.
பதவுரை:  பைந்நனை அவரை பவழம் கோப்பவும் – பசிய அரும்புகளையுடைய அவரைக் கொடி பவளம் போன்ற பூக்களைத் தொடுப்பவும்கரு நனைக் காயா கண மயில் அவிழவும் – கருமையான காயா மலர்கள் கூட்டமாக இருக்கும் மயிலின் கழுத்தைப் போன்று மலரவும்கொழுங்கொடி முசுண்டை கொட்டம் கொள்ளவும் – தடித்த முசுண்டைக் கொடிகள் கொட்டம் போலும் உள்ள மலர்களை மலரவும், Rivea ornata, Leather-berried bindweed, செழுங்குலைக் காந்தள் கைவிரல் பூப்பவும் – பெரிய காந்தள் மலர்க் குலைகள் கைகள் போன்று மலரவும்கொல்லை நெடுவழிக் கோபம் ஊரவும் – கொல்லையில் உள்ள நீண்ட வழியில் இந்திரகோபம் (மூதாய் ) ஊர்ந்து இருக்கவும்முல்லை சான்ற முல்லை அம் புறவின் – முல்லை ஒழுக்கம் பொருந்திய முல்லைக் கொடிகள் உடைய முல்லைக் காட்டில்விடர்கால் அருவி – மலை இடுக்குகளில் குதிக்கும் அருவிவியன் மலை மூழ்கிச் சுடர் கால் மாறிய செவ்வி நோக்கி – பெரிய மலையில் ஞாயிறு மூழ்கிய நேரத்தில் வானை நோக்கிதிறல் வேல் நுதியின் பூத்த – வலிமை மிக்க வேலின் நுனியைப் போல பூத்தகேணி – குளம்நீர்நிலைஊற்று நீர்க் கூவல்விறல் வேல் வென்றி – வெற்றியடைய வேலால் வெற்றி பொருந்தியவேலூர் எய்தின் – வேலூரை அடைந்தால்
உறுவெயிற்கு உலைஇய உருப்பு அவிர் குரம்பை
எயிற்றியர் அட்ட இன் புளி வெஞ்சோறு,   175
தேமா மேனி சில் வளை ஆயமொடு,
ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவிர் [174-177]
பொருளுரை:  மிகுந்த வெயிலுக்கு வருந்துகின்ற வெப்பம் விளங்குகின்ற குடிசைகளில் உள்ள எயினக் குலத்து மகளிர் இனிய புளியை இட்டுச் சமைத்த வெப்பமான சோற்றைஇனிய மாமரத்தின் தளிர்போன்ற மேனியையும் சில கை வளையல்களையும் அணிந்த நும் குடும்பத்தின் பெண்களோடுநீவீர் ஆமான் சூட்டு இறைச்சியுடன் பெறுவீர்.
பதவுரை:  உறு வெயிற்கு – மிகுந்த வெயிலுக்குஉலைஇய உருப்பு – வருந்துகின்ற வெப்பம்அவிர் விளங்கும் – வெப்ப விளங்குகின்றகுரம்பை – குடிசைஎயிற்றியர் – எயினக் குலத்து மகளிர்அட்ட  இன் புளி வெஞ்சோறு – ஆக்கிய இனிய புளியை இட்டுச் சமைத்த வெப்பமான சோறுதேமா மேனி – இனிய மாமரத்தின் தளிர்போன்ற மேனிசில் வளை ஆயமொடு – சில வளையல்கள் அணிந்த நும் மகளிருடன்,  ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவிர் – ஆமான் சூட்டு இறைச்சியுடன் பெறுவீர்

ஆமூர் வளமும் உழத்தியரின் உபசரிப்பும்
நறும் பூங்கோதை தொடுத்த நாட் சினைக்
குறுங்கால் காஞ்சிக் கொம்பர் ஏறி,
நிலை அரும் குட்டம் நோக்கி நெடிது இருந்து,  180
புலவுக் கயல் எடுத்த பொன் வாய் மணிச்சிரல்,
வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை,
முள் அரைத் தாமரை முகிழ் விரி நாட் போது
கொங்கு கவர் நீலச் செங்கண் சேவல்,
மதி சேர் அரவின் மானத் தோன்றும்,   185
மருதம் சான்ற மருதத் தண் பணை,
அந்தணர் அருகா அருங்கடி வியன் நகர்,
அம் தண் கிடங்கின் அவன் ஆமூர் எய்தின் (178-188)
பொருளுரை:  நறுமணமான மலர்களை மாலையாகத் தொடுத்தது போலப் பூக்களைக் கொண்ட கிளைகளையும் குறிய தாளினையுமுடைய காஞ்சி மரத்தின் கிளையில் ஏறிஎல்லாக் காலத்திலும் நிலையாக இருத்தல் அரிதாகிய உள்ள குளத்தின்கண் கூர்ந்து நோக்கிபுலவு நாற்றமுடைய கயல் மீனை மூழ்கி எடுத்த நீலமணியைப் போன்ற வாயை உடைய கிச்சிலியின் (kingfisher bird) பெரிய நகம் கிழித்த வடு அழுந்திய பச்சை இலையையும்முள்ளுடைய தண்டினையுடைய தாமரையின் அரும்பு மலர்ந்த அதிகாலை மலரில்தேனை நுகரும் நீல நிறத்தையும் சிவந்த கண்ணையுமுடைய ஆண் வண்டு நிலாவைச் சேர்கின்ற கரும்பாம்பை ஒக்கும்மருத ஒழுக்கம் நிலைபெறுதற்கு அமைந்த மருத நிலத்தின் குளிர்ந்த வயல்களையும் அந்தணர்கள் குறைதல் இல்லாத அரிய காவலையுடைய பெரிய ஊர்களையும் அழகிய குளிர்ச்சியான அகழியுடைய அவனுடைய ஆமூரை நீவீர் அடைந்தால்,
குறிப்பு:  மருதம் சான்ற – மதுரைக்காஞ்சி 270, சிறுபாணாற்றுப்படை 186.  மருதம் சான்ற மருதத் தண் பணை (186) நச்சினார்க்கினியர் உரை – ஊடியும் கூடியும் போக நுகரும் தன்மையமைந்த மருத நிலத்தின் குளிர்ந்த வயலிடத்து.  குறுந்தொகை 395 – அரவு நுங்கு மதியினுக்குஅகநானூறு 114 – அரவு நுங்கு மதியின்அகநானூறு 313 – அரவு நுங்கு மதியின்நற்றிணை 377 – அரவுக் குறைபடுத்த பசுங் கதிர் மதியத்துபுறநானூறு 260 – பாம்பின் வை எயிற்று உய்ந்த மதியின்கலித்தொகை 15 – பாம்பு சேர் மதி போலகலித்தொகை 104 – பால் மதி சேர்ந்த அரவினைபரிபாடல் 10-76 – அரவு செறி உவவு மதியெனசிறுபாணாற்றுப்படை 84 – மதி சேர் அரவின்.
பதவுரை:  நறும் பூங்கோதை தொடுத்த நாட் சினைக் குறுங்கால் காஞ்சிக் கொம்பர் ஏறி – நறுமணமான மலர்களை மாலையாகத் தொடுத்தது போல மலர்ந்துள்ள கிளைகளையும் குறிய தாளினையுடைய காஞ்சி மரத்தின் கிளையில் ஏறிநிலை அரும் குட்டம் நோக்கி நெடிது இருந்து – நிலையாக இருத்தல் அரிதாகிய குளத்தின்கண் கூர்ந்து நோக்கிபுலவுக் கயல் எடுத்த பொன் வாய் மணிச்சிரல் – புலவு நாற்றமுடைய கயல் மீனை மூழ்கி எடுத்த நீலமணியைப் போன்ற வாயை உடைய கிச்சிலிவள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை – பெரிய நகம் கிழித்த வடு அழுந்திய பச்சை இலைமுள் அரைத் தாமரை – முள்ளை உடைய தண்டினை உடைய தாமரைமுகிழ் விரி நாட்போது – அரும்பு மலர்ந்த அதிகாலை மலரில்கொங்கு கவர் நீலச் செங்கண் சேவல் – தேனை நுகரும் நீல நிறத்தையும் சிவந்த கண்ணையுமுடைய ஆண் வண்டுமதி சேர் அரவின் மானத் தோன்றும் – நிலாவைச் சேர்கின்ற பாம்பை ஒக்கும்மருதம் சான்ற மருதத் தண் பணை – மருத ஒழுக்கம் நிலைபெறுதற்கு அமைந்த மருத நிலத்தின் குளிர்ந்த வயல்அந்தணர் அருகா – அந்தணர்கள் குறைதல் இல்லாதஅருங்கடி வியன் நகர் – அரிய காவலையுடைய பெரிய ஊர்அம் தண் கிடங்கின் – அழகிய குளிர்ச்சியான அகழிஅவன் ஆமூர் எய்தின் – அவனுடைய ஆமூரை நீவீர் அடைந்தால்
வலம்பட நடக்கும் வலி புணர் எருத்தின்
உரன் கெழு நோன் பகட்டு உழவர் தங்கை,   190
பிடிக்கை அன்ன பின்னு வீழ் சிறுபுறத்துத்
தொடிக் கை மகடூஉமகமுறை தடுப்ப,
இருங்கா உலக்கை இரும்பு முகம் தேய்த்த
அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு
கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவீர். (189-195)
பதவுரை:  வெற்றி உண்டாகும்படி நடக்கும்வலிமையான கழுத்தினைக் கொண்டஉடல் வலிமையுடைய எருதினை உடையஉழவரின் தங்கைபெண் யானையின் தும்பிக்கையைப் போன்ற பின்னின மயிர் வீழ்ந்து கிடக்கின்ற சிறிய முதுகையும் வளையல்கள் அணிந்த கையையுடைய பெண்தன்னுடைய மக்களைக் கொண்டுநும்மைப் போகாது தடுக்ககரிய வைரம் பாய்ந்த உலக்கையின் பூணின் முகத்தைத் தேயச் செய்த குற்றுதல் அமைந்த மாட்சிமைப்பட்ட அரிசியினால் செய்த கட்டியாகிய வெள்ளைச் சோற்றைபிளந்த காலையுடைய நண்டின் கலவையுடன் உங்களுக்குத் தருவாள்.
குறிப்பு :  மகமுறை தடுப்ப (192) – நச்சினார்க்கினியர் உரை –  உழவர் தங்கையாகிய மகடூ தான் உள்ளே இருந்து தன் பிள்ளைகளைக் கொண்டு நும்மை அடைவே எல்லாரையும் போகாது விலக்குகையினாலே.  இனிப் பிள்ளைகளை உபசரிக்குமாறு போல உபசரித்து விலக்கவென்றுமாம். கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவீர் (195) – நச்சினார்க்கினியர் உரை – கவைத்த காலினுடைய ஞெண்டும் பீர்க்கங்காயுங் கலந்த கலப்புடனே பெறுவிர்.  பெரும்பாணாற்றுப்படை 275 – அவையா அரிசிஅகநானூறு 394 – அவைப்பு மாண் அரிசியொடுசிறுபாணாற்றுப்படை 193 – உலக்கை இரும்பு முகம் தேய்த்த அவைப்பு மாண் அரிசி.
பதவுரை:  வலம் பட நடக்கும் வலி புணர் எருத்தின் உரன் கெழு நோன் பகட்டு – வெற்றி உண்டாகும்படி நடக்கும் வலிமையுடைய கழுத்தையுடைய உடல் வலிமையுடைய எருதினையுடையஉழவர் தங்கை – உழவருடைய தங்கைபிடிக்கை அன்ன பின்னு வீழ் சிறுபுறத்து – பெண் யானையின் தும்பிக்கையைப் போன்ற பின்னின மயிர் வீழ்ந்துகிடக்கின்ற சிறிய முதுகையும்தொடிக் கை மகடூஉ – வளையல்கள் அணிந்த கையையுடைய மகள்,  மகமுறை தடுப்ப – மக்களைக் கொண்டு நும்மைப் போகாது தடுக்கஇருங்காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த  – கரிய வைரம் பாய்ந்த உலக்கையின் பூணின் முகத்தைத் தேயச் செய்தஅவைப்பு மாண் அரிசி  அமலை வெண் சோறு – குற்றுதல் மாட்சிமைப்பட்ட அரிசியினால் செய்த கட்டியாகிய வெள்ளைச் சோற்றை,  கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவிர் – பிளந்த காலையுடைய நண்டின் கலவையுடன் பெறுவீர்கள்

நல்லியக்கோடனின் ஊர்ச்சிறப்பும் அதன் அண்மையும்
எரி மறிந்தன்ன நாவின்இலங்கு எயிற்றுக்
கரு மறிக் காதின்கவை அடிப் பேய் மகள்,
நிணன் உண்டு சிரித்த தோற்றம் போல,
பிணன் உகைத்துச் சிவந்த பேர் உகிர் பணைத்தாள்
அண்ணல் யானை அருவி துகள் அவிப்ப,  200
நீறு அடங்கு தெருவின்அவன் சாறு அயர் மூதூர்
சேய்த்தும் அன்றுசிறிது நணியதுவே (196-202)
பொருளுரை:  நெருப்பு சாய்ந்ததை ஒத்த நாக்கினையும்வெள்ளாட்டுக் குட்டிகளை அணிந்த காதுகளையும்பிளவுபட்ட கால்களையும் உடைய பேய் மகள்இறந்தவர்களின் கொழுப்பை உண்டு விட்டு ஒளியுடைய பற்களுடன் சிரித்த தோற்றம் போல இருந்ததுபிணங்களைப் பெரிய காலினால் உகைத்துச் சிவந்த நிறத்தைப் பெற்ற களிற்று யானைகளின் நகங்கள்.  தலைமையுடைய இந்த யானைகளின் வடியும் மதம்தூசியை அடக்கபுழுதி அடங்கின தெருக்களையுடைய நல்லியக்கோடனின் விழாக்கள் கொண்டாடப்படும் பழமையான ஊர்தொலைவில் இல்லை. சிறிது அண்மையில் தான் உள்ளது.
பதவுரை:  எரி மறிந்தன்ன நாவின் – நெருப்பு சாய்ந்ததை ஒத்த நாக்கினையும்இலங்கு எயிற்று – ஒளியுடைய பற்களையும்கருமறிக் காதின் – வெள்ளாட்டுக் குட்டிகளை அணிந்த காதுகளையும்கவை அடிப் பேய் மகள் – பிளவுபட்ட கால்களையுடைய பேய் மகள்நிணன் உண்டு – இறந்தவர்களின் கொழுப்பை உண்டுசிரித்த தோற்றம் போல – சிரிக்கும் பொழுது தோன்றுவதைப் போலபிணன் உகைத்துச் சிவந்த பேர் உகிர்  பணைத்தாள் – பிணங்களைக் காலால் உதைத்துச் சிவந்த பெரிய நகங்களையுடைய பெரிய கால்கள்,  அண்ணல் யானை – தலைமையுடைய யானைஅருவி – வடியும் மதம்துகள் அவிப்ப- தூசியை அடக்கநீறு அடங்கு தெருவின் – புழுதி அடங்கின தெருக்களையுடையஅவன் – நல்லியக்கோடன்சாறு அயர் மூதூர் சேய்த்தும் அன்று – விழாக்கள் கொண்டாடப்படும் பழமையான ஊர் தொலைவில் இல்லைசிறிது நணியதுவே – சிறிது அண்மையில் உள்ளது

நல்லியக்கோடனின் அரண்மனை வாயில்
பொருநர்க்கு ஆயினும்புலவர்க்கு ஆயினும்,
அருமறை நாவின் அந்தணர்க்கு ஆயினும்,
கடவுள் மால் வரை கண்விடுத்தன்ன, 205
அடையா வாயில் அவன் அருங்கடை குறுகி, (203-206)
பொருளுரை:  கிணைப் பறையைக் கொட்டுபவர்கள் ஆயினும்புலவர்கள் ஆயினும்அரிய மறையை இசைக்கும் நாவினையுடைய அந்தணர் ஆயினும்கடவுள்கள் இருக்கும் உயர்ந்த மேரு மலை ஒரு கண்ணை விழித்துப் பார்ப்பதுபோல் உள்ள அடைக்கப்படாத வாசலையுடைய அவனது அரிய காவலுடைய தலைவாயிலை நெருங்கி,
பதவுரை:  பொருநர்க்கு ஆயினும் புலவர்க்கு ஆயினும் அருமறை நாவின் அந்தணர்க்கு என்றாலும் – கிணைப் பறையைக் கொட்டுவார்கள் ஆயினும் புலவர்கள் ஆயினும் அரிய மறையை இசைக்கும் நாவினையுடைய அந்தணர் ஆயினும்கடவுள் மால் வரை கண்விடுத்தன்ன – கடவுள்கள் உடைய உயர்ந்த மேரு மலை ஒரு கண்ணை விழித்துப் பார்ப்பதுபோல்அடையா வாயில் அவன் அருங்கடை குறுகி – அடைக்கப்படாத வாசலையுடைய அவனது அரிய காவலுடைய தலைவாயிலை நெருங்கி
சான்றோர் புகழ்தல்
செய்ந்நன்றி அறிதலும்சிற்றினம் இன்மையும்,
இன்முகம் உடைமையும்இனியன் ஆதலும்,
செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த, (207-209)
பொருளுரை:  பிறர் தனக்குச் செய்த நன்மையை மறக்காமல் அவர்க்கு நன்மை செய்தல்அறிவும் ஒழுக்கமும் இல்லாதவர்களின் கூட்டம் தனக்கு இல்லாமையும்இனிய முகத்தை உடையவனும் ஆன நல்லியக்கோடனை அவனுடன் இருக்கும் விளங்குகின்ற சிறப்பையுடைய பலவற்றையும் அறிந்த சான்றோர் புகழ,
பதவுரை:  செய்ந்நன்றி அறிதல் – பிறர் தனக்குச் செய்த நன்மையை மறக்காமல் அவர்க்கு நன்மை செய்தல்சிற்றினம் இன்மையும் – அறிவும் ஒழுக்கமும் இல்லாதவர்களின் கூட்டம் தனக்கு இல்லாமையும்இன்முகம் இனியன் ஆதலும் – இனிய முகத்தை உடையவனும்செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த – அவனுடன் இருக்கும் விளங்குகின்ற சிறப்பையுடைய பலவற்றையும் அறிந்த சான்றோர் அவனைப் புகழ
மறவர் போற்றல்
அஞ்சினர்க்கு அளித்தலும்வெஞ்சினம் இன்மையும்,   210
ஆண் அணி புகுதலும்அழிபடை தாங்கலும்,
வாள் மீக் கூற்றத்து வயவர் ஏத்த (210-212)
பொருளுரை:  தன்னுடைய வலிமையைக் கண்டு அஞ்சி வீழ்ந்த பகைவர்க்கு அருள் செய்தலும்கொடிய சினம் இன்மையும்மறவர்கள் இருக்கும் அணியைத் துணிவுடன் சென்று அழிக்கும் ஆற்றலும்தோற்ற படையைப் பொறுத்தலும்அவனுடைய வாள் வலிமையால் மேலாகிய மறவர் புகழ,
பதவுரை:  அஞ்சினர்க்கு அளித்தல் – தன்னுடைய வலிமையைக் கண்டு அஞ்சி வீழ்ந்த பகைவர்க்கு அருள்தல்வெஞ்சினம் இன்மையும் – கொடிய சினம் இன்மையும்ஆண் அணி புகுதல்  – மறவர்கள் இருக்கும் அணியைத் துணிவுடன் சென்று அழிக்கும் ஆற்றலும்அழி படை தாங்கலும் – தோற்ற படையைப் பொறுத்தலும்,  வாள் மீக் கூற்றத்து வயவர் ஏத்த – வாள் வலிமையால் மேலாகிய சொல்லையுடைய மறவர் புகழ,
மகளிர் வாழ்த்தல்
கருதியது முடித்தலும்காமுறப்படுதலும்,
ஒருவழிப் படாமையும்ஓடியது உணர்தலும்,
அரி ஏர் உண்கண் அரிவையர் ஏத்த (213-215)
பொருளுரை:  தான் கருதிய புணர்ச்சியை முடிக்கும் தன்மைபெண்கள் தன்னை மிகவும் விரும்புதலும்தான் அவர்கள் வசம் ஆகாமையும்அவர்கள் வருந்தியதை உணர்ந்து அவர்களைப் பாதுகாத்தலும் உடையவன் ஆதலால்செவ்வரியுடைய அழகிய மையிட்ட கண்களையுடைய மகளிர் அவனைப் புகழ,
குறிப்பு:  கருதியது முடித்தலும் (213) – நச்சினார்க்கினியர் உரை – தன் நெஞ்சு கருதிய புணர்ச்சியைக் குறைகிடவாமல் முடிக்க வல்ல தன்மையையும்பொ. வே. சோமசுந்தரனார் உரை – தன்பால் ஊடக கொண்ட மகளிரின் ஊடலை எளிதே தீர்த்து அவரைத் தான் எண்ணியாங்கு எண்ணியபொழுது புணர்ந்து மகிழும் தன்மையையும்.
பதவுரை:  கருதியது முடித்தல் – தான் கருதிய புணர்ச்சியை முடிக்கும் தன்மைகாமுறப்படுதலும் – பெண்கள் தன்னை மிகவும் விரும்புதலும்ஒருவழிப் படாமை – அவர்கள் வசம் ஆகாமைஓடியது உணர்தல் – அவர்கள் வருந்தியதை உணர்ந்து அவர்களைப் பாதுகாத்தல்அரி ஏர் உண்கண் அரிவையர் ஏத்த – செவ்வரியுடைய அழகிய மையிட்ட கண்களையுடைய மகளிர் புகழ
பரிசிலர் ஏத்தல்
அறிவு மடம் படுதலும்அறிவு நன்கு உடைமையும்,
வரிசை அறிதலும்வரையாது கொடுத்தலும்,
பரிசில் வாழ்க்கைப் பரிசிலர் ஏத்த (216-218)
பொருளுரை:  தான் கூறுவதை அறியாத அறியாமை உடையவர்களிடம் அறியாமையுடையவன் போல் தோன்றுதல்தன்னை ஒத்த அறிவுடையோரிடம் அறிவைக் காட்டுதல்பரிசிலரின் தகுதியை அறிந்து ஏற்றவாறு கொடுத்தல்எல்லையில்லாமல்  கொடுத்தல் ஆகியவற்றால்பிறரிடத்தில் பொருளைப் பெற்று வாழும் பரிசிலர் அவனைப் புகழ,
பதவுரை:  அறிவு மடம் படுதலும் – தான் கூறுவதை அறியாத அறியாமை உடையவர்களிடம் அறியாமையுடையவன் போல் தோன்றுதலும்அறிவு நன்கு உடைமையும் – தன்னை ஒத்த அறிவுடையோரிடம் அறிவைக் காட்டுதலும்வரிசை அறிதலும் – பரிசிலரின் தகுதியை அறிந்து கொடுத்தலும்வரையாது கொடுத்தலும் – எல்லையில்லாமல் கொடுத்தலும்பரிசில் வாழ்க்கைப் பரிசிலர் ஏத்த – பிறரிடத்தில் பொருளைப் பெற்று வாழும் பரிசிலர் புகழ,

நல்லியக்கோடன் அவையில் வீற்றிருக்கும் காட்சி
பன் மீன் நடுவண் பால்மதி போல
இன்நகை ஆயமொடு இருந்தோற் குறுகி [219-220]
பொருளுரை:  பல விண்மீன்களுக்கு நடுவில் உள்ள பால் போன்ற ஒளியையுடைய வெண்ணிலவைப் போல,  இயல் இசை நாடகம் ஆகியவற்றாலும் இனிய மொழியாலும் இனிமையாக இருக்கும் சுற்றத்தாருடன் இருப்பவனை அணுகி,
குறிப்பு:  இன்நகை ஆயமொடு இருந்தோற் குறுகி (220) –  நச்சினார்க்கினியர் உரை –  இயல் இசை நாடகத்தாலும் இனிய மொழிகளாலும் இனிய மகிழ்ச்சியைச் செய்யும் திரளோடே இருந்தவனையணுகி,
பதவுரை:  பல் மீன் நடுவண் பால் மதி போல – பல விண்மீன்களுக்கு நடுவில் உள்ள பால் போன்ற ஒளியையுடைய வெண்ணிலவைப் போலஇன் நகை ஆயமொடு இருந்தோற் குறுகி – இயல் இசை நாடகம் ஆகியவற்றாலும் இனிய மொழியாலும் இனிமையாக இருக்கும் சுற்றத்தாருடன் இருப்பவனை அணுகி

நல்லியக்கோடன் முன்னிலையில் யாழ் வாசிக்கும் முறைமை
பைங்கண் ஊகம் பாம்பு பிடித்தன்ன,
அம் கோடு செறிந்த அவிழ்ந்து வீங்கு திவவின்,
மணி நிரைத்தன்ன வனப்பின் வாய் அமைத்து,
வயிறு சேர்பு ஒழுகிய வகை அமை அகளத்து,
கானக் குமிழின் கனி நிறம் கடுப்ப,  225
புகழ் வினைப் பொலிந்த பச்சையொடுதேம் பெய்து,
அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்கு புரி நரம்பின்,
பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்விக்
கூடு கொள் இன் இயம் குரல் குரல் ஆக,
நூல் நெறி மரபின்பண்ணி ஆனாது [221-230]
பொருளுரை:  பச்சைக் கண்களையுடைய குரங்குபாம்பின் தலையைப் பிடித்தபொழுது அப்பாம்பு குரங்கின் கையை இறுக்கியும் நெகிழ்த்தும் பிடிக்கும்.  அதுபோல் யாழின் அழகிய தண்டில் அமைக்கப்பட்ட வார்க்கட்டு நெகிழ வேண்டியபொழுது நெகிழ்ந்து இறுக வேண்டியபொழுது இறுகியும் இருந்தது.  இரண்டு விளிம்பும் சேர்த்து இணைத்த இடத்தில் உள்ள ஆணிகள் மணியை அடுக்கி வைத்தாற்போல் அழகாக இருந்தது. வயிறு சேர்ந்த ஒழுங்கான தொழில் வகை அமைந்த பத்தரினையும் (உடல் பகுதியையும்)காட்டில் உள்ள குமிழ மரத்தின் கனி நிறத்தை ஒத்த தோல் போர்வையுடனும்தேனைப் பெய்து அமிழ்தத்தைத் தன்னிடத்தில் பொதிந்து துளிக்கும் நரம்பினையும் கொண்டது அந்த யாழ்.  பாடும் துறைகள் யாவும் பாடுதற்கு அமைந்த பயன் விளங்குகின்ற கூடுதல் இசையைக் கொண்டது அந்த இனிய யாழ்.  இசை நூல்கள் கூறுவதைப்  போல் செம்மையாக ஆக்கி அவனைக் குறையாது நீவிர் பாடுவீராக.
பதவுரை:  பைங்கண் ஊகம் பாம்பு பிடித்தன்ன – பச்சைக் கண்களையுடைய குரங்கு பாம்பின் தலையைப் பிடித்தபொழுது அப்பாம்பு குரங்கின் கையை இறுக்கியும் நெகிழ்த்தும் பிடிக்கும்அம் கோடு செறிந்த அவிழ்ந்து வீங்கு திவவின் – அழகிய தண்டினையுடைய நெருங்கச் சுற்றின நெகிழ வேண்டியபொழுது நெகிழ்ந்து இறுக வேண்டியபொழுது இறுகியும்மணி நிரைத்தன்னவனப்பின் வாய் அமைத்து – இரண்டு விளிம்பும் சேர்த்து இணைத்த இடத்தில் உள்ள ஆணிகள் மணியை நிரைத்து வைத்தாற்போல் அழகாகப் பொருந்தச் செய்துவயிறு சேர்பு ஒழுகிய வகை அமை அகளத்து – வயிறு சேர்ந்த ஒழுங்கான தொழில் வகை அமைந்த பத்தரினையும் (யாழின் உடல் பகுதியையும்)கானக்குமிழின் கனி நிறம் கடுப்ப புகழ் வினைப் பொலிந்த பச்சையொடு – காட்டில் உள்ள குமிழ மரத்தின் கனி நிறத்தை ஒத்த தோல் போர்வையுடன்தேம் பெய்து அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்குபுரி நரம்பின் – தேனைப் பெய்து அமிழ்தத்தைத் தன்னிடத்தில் பொதிந்து துளிக்கும் நரம்பினையுடையபாடு துறை முற்றிய – பாடும் துறைகள் முடியப் பாடுதற்குபயன் தெரி கேள்விக் கூடு கொள் இன் இயம் – பயன் விளங்குகின்ற இசையைக் கூடுதல் கொண்ட இனிய யாழைகுரல் குரல் ஆக நூல் நெறி மரபின் பண்ணி – இசை நூல்கள் கூறுவதைப் போல் செம்மையாக ஆக்கிஆனாது – விடாது

மன்னனைப் புகழ்ந்து பாடும் தன்மை
முதுவோர்க்கு முகிழ்த்த கையினை எனவும்,
இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும்,
ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும்,
தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும்,
நீ சில மொழியா அளவை………… (231-235)
பொருளுரை:  பெரியவர்களுக்குக் குவித்த கையுடையன் நீ என்றும்மறவர்களுக்கு மலர்ந்த மார்பையுடையவன் நீ என்றும்உழவர்களுக்கு நிழல் தருகின்ற செங்கோலை உடையவன் நீ என்றும்தேரினை உடைய அரசர்களுக்கு வெம்மையான வேலை உடையவன் நீ என்றும்அவனைப் புகழ்ந்து நீ சில சொற்களைக் கூறுவதற்கு முன்னர்,
பதவுரை:  முதுவோர்க்கு முகிழ்த்த கையினை எனவும் –  பெரியவர்களுக்கு குவித்த கையுடையன் நீ என்றும்,  இளையோர்க்கு மலர்ந்த மார்பு – மறவர்களுக்கு மலர்ந்த மார்பையுடையவன் என்றும்மகளிர்க்கு மலர்ந்த மார்பையுடையவன்ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும் – உழவர்களுக்கு நிழல் தருகின்ற செங்கோலை உடையவன் என்றும்தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும் – தேரினை உடைய அரசர்களுக்கு வெம்மையான வேலை உடையவன் என்றும்நீ சில மொழியா அளவை – நீ சில புகழ்ச்சியான சொற்களைக் கூறுவதற்கு முன்னர்,

மன்னன் இரவலரை உபசரிக்கும் பாங்கு
………………மாசில்
காம்பு சொலித்தன்ன அறுவை உடீஇ,
பாம்பு வெகுண்டன்ன தேறல் நல்கி,
கா எரியூட்டிய கவர் கணைத் தூணிப்
பூ விரி கச்சைப் புகழோன் தன் முன்
பனி வரை மார்பன் பயந்த நுண் பொருள்   240
பனுவலின்வழாஅப் பல் வேறு அடிசில் (235-241)
குறிப்பு:  பாம்பு வெகுண்டன்ன தேறல் நல்கி (236) –  நச்சினார்க்கினியர் உரை – பாம்பேறி மயக்கினாற்போல மயக்கின கட் தெளிவைத் தந்துபொ. வே. சோமசுந்தரனார் உரை – பாம்பினது நஞ்சேறி மயக்கினாற்போன்று மயக்கும் கள்ளினது தெளிவைப் பருகும்படி தந்துச. வே. சுப்பிரமணியன் – பாம்பு சினந்து எழுந்தது போன்று எழுச்சியைத் தரும் கள் தெளிவைத் தருவான்.
பொருளுரை:  மாசு இல்லாத மூங்கிலின் தோலை உரித்தாற்போன்ற ஆடையை உடுக்கச் செய்துபாம்பு சினந்து எழுந்தது போன்ற எழுச்சியைத் தரும் கள்ளைக் கொடுத்துநெருப்புக் கடவுள் வேண்டியதால் காண்டவம் என்ற காட்டினை எரித்த அம்பையுடைய அம்புறாத்தூணியையும் பூக்கள் வரைந்த கச்சையை அணிந்த அருச்சுனனின் அண்ணனாகியபனியுடைய இமயத்தைப் போன்ற மார்பையுடைய வீமசேனன்எழுதிய நுண்மையான சமையல் குறிப்புகளுடைய நூலினின்றும் வழுவாதுபல்வேறு உணவு வகைகளை,
பதவுரை:  மாசு இல் காம்பு சொலித்தன்ன அறுவை உடீஇ – மாசு இல்லாத மூங்கிலின் தோலை உரித்தாற்போன்ற ஆடையை உடுக்கச் செய்துபாம்பு வெகுண்டன்ன தேறல் நல்கி –  பாம்பு சினந்து எழுந்தது போன்ற எழுச்சியைத் தரும் கள்ளைக் கொடுத்துகா எரியூட்டிய கணைத் தூணி – நெருப்புக் கடவுள் வேண்டியதால் காண்டவம் என்ற காட்டினை எரித்த அம்பையுடைய அம்புறாத்தூணிபூவிரி கச்சைப் புகழோன் தன்முன் – பூக்கள் வரைந்த கச்சையை அணிந்த அருச்சுனனின் அண்ணன்பனி வரை மார்பன் – பனியுடைய இமயத்தைப் போன்ற மார்பையுடைய வீமசேனன்பயந்த – கொடுத்தநுண் பொருள் பனுவலின் வழாஅ – நுண்மையான சமையல் மரபுடைய நூலினின்றும் வழுவாதுபல்வேறு அடிசில் – பல்வேறு உணவு வகைகளை
வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த
இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து,
விளங்கு பொற்கலத்தில் விரும்புவன பேணி
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி (242-245)
பொருளுரை:  ஒளியுடைய நீலவானத்தில் கோள்மீன் சூழ்ந்த இளங்கதிர்களையுடைய கதிரவனை இகழும் தோற்றமுடைய விளங்கும் பொற்கலங்களில்நீ விரும்பி உண்ணுபவற்றைத் தானும் விரும்பி மனதில் கொண்டுநும் மீது மிகுகின்ற விருப்பத்தால் தானே நின்று நும்மை உண்ணச் செய்து,
பதவுரை:  வாள் நிற விசும்பு கோள்மீன் சூழ்ந்த – ஒளியுடைய நீலவானத்தில் கோள்மீன் சூழ்ந்தஇளங்கதிர் ஞாயிறு – இளங்கதிர்களையுடைய கதிரவன்எள்ளும் தோற்றத்து  – இகழும் தோற்றமுடையவிளங்கு பொற்கலத்தில் – விளங்கும் பொற்கலங்களில்விரும்புவன பேணி – நீ விரும்பி உண்ணுபவற்றைத் தானும் விரும்பி மனதில் கொண்டுஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி – நும் மீது மிகுகின்ற விருப்பத்தால் தானே நின்று நும்மை உண்ணச் செய்து

நல்லியக்கோடன் அளிக்கும் பரிசுப் பொருட்கள்
திறல் சால் வென்றியொடுதெவ்வுப் புலம் அகற்றி,
விறல் வேல் மன்னர் மன் எயில் முருக்கி,
நயவர் பாணர் புன்கண் தீர்த்த பின்,
வயவர் தந்த வான் கேழ் நிதியமொடு (246-249)
பொருளுரை:  வலிமையுடைய வெற்றியுடன்பகைவரை அவர்களுடைய நிலத்திலிருந்து அகற்றிவெற்றியை உடைய மன்னர்களின் அரண்களை அழித்துஅங்குக் கிடைத்த பொருளால் தன்னிடம் விரும்பி வருபவர்களுக்கும் பாணர்களுக்கும் உதவிஅவர்களுடைய துன்பத்தைத் தீர்த்த பின்னர்தன்னுடைய படை மறவர்கள் கொண்டுவந்து தந்த பொருட்களுடன்,
பதவுரை:  திறல் சால் வென்றியோடு – வலிமையுடைய வெற்றியுடன்தெவ்வுப் புலம் அகற்றி – பகைவரை அவர்களுடைய நிலத்திலிருந்து அகற்றிவிறல் வேல் மன்னர் மன் எயில் முருக்கி – வெற்றியை உடைய மன்னர்களின் அரண்களை அழித்துநயவர் பாணர் – தன்னிடம் விரும்பி வருபவர்களுக்கும் பாணர்களுக்கும்புன்கண் தீர்த்த பின் – துன்பத்தைத் தீர்த்த பின்னர்வயவர் தந்த வான் கேழ் நிதியமொடு – தன்னுடைய படை மறவர்கள் கொண்டுவந்து தந்த பொருட்களுடன்
பருவ வானத்துப் பால் கதிர் பரப்பி   250
உருவ வான் மதி ஊர் கொண்டாங்கு,
கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டு
ஆரம் சூழ்ந்த அயில்வாய் நேமியொடு,
சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடுஞ்சினைத்
ததர் பிணி அவிழ்ந்த தோற்றம் போல,   255
உள் அரக்கு எறிந்த உருக்குறு போர்வை,
கருந்தொழில் வினைஞர் கைவினை முற்றி,
ஊர்ந்து பெயர் பெற்ற எழி நடைப் பாகரொடு (250-258)
பொருளுரை:  தேர் ஒன்றையும் கொடுப்பான்.  கூதிர்கால வானில் பால்போலும் ஒளியைப் பரப்பி ஊர்ந்துச் செல்லும் வடிவான திங்களைப் போல் தோன்றும்கூரிய உளியினால் ஆழ்ந்து செதுக்கின வலிமையான நடுப்பகுதியில் இருந்து (குடத்தில் இருந்து) பிரிந்த ஆர்களை சூழ்ந்த இரும்பு விளிம்பை உடைய  உருளைகளுடன் (சக்கரங்களுடன்)சிந்துகின்ற அரும்பினுடைய முருக்க மரத்தின் உயர்ந்து ஓங்கி வளர்ந்த கிளைகளில் உள்ள சிவப்பு நிற பூங்கொத்துக்கள் முறுக்கு நெகிழ்ந்த தோற்றம் போலஉள்ளே உருக்கப்பட்ட செவ்வரக்கு வைத்து செய்த மேல் பலகையினையும் உடைய (கூரையினையும் உடைய)வலிய தொழிலைப் புரியும் தச்சரின் கைத்தொழில் முற்றுப் பெற்ற பின்னர் ஓட்டம் உண்டு என்ற நல்ல பெயர்பெற்ற அழகிய நடையுடைய அத்தேருடன்,
குறிப்பு:  பாகரொடு (258) நச்சினார்க்கினியர் உரை – பாகருடைய தேரைப் பாகரென்றார் ஆகுபெயரால்.
பதவுரை:  பருவ வானத்துப் பால் கதிர் உருவ வான் மதி ஊர் கொண்டாங்கு  – கூதிர்கால வானில் பால்போலும் ஒளியைப் பரப்பி வடிவான திங்கள் ஊர்ந்து கொண்டாற்போல் தோன்றும்கூர் உளி பொருத வடு ஆழ் – கூரிய உளியினால் ஆழ்ந்து செதுக்கினநோன் குறட்டு – வலிமையான சக்கரத்தின் குடத்தில்வலிமையான சக்கரத்தின் நடுப்பகுதியில்ஆரம் – சக்கரத்தின் குடத்தையும் விளிம்பையும் இணைக்கும் மரக்கட்டைகள்சூழ்ந்த – சூழ்ந்தஅயில்வாய் – சக்கரத்தைச் சுற்றியுள்ள இரும்பு விளிம்புநேமியொடு – உருளையுடன்சக்கரத்துடன்சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடுஞ்சினை  ததர் பிணி அவிழ்ந்த தோற்றம் போல – சிந்துகின்ற அரும்பினுடைய முருக்க மரத்தின் உயர்ந்து ஓங்கி வளர்ந்த கிளைகளில் உள்ள பூங்கொத்துக்கள் முறுக்கு நெகிழ்ந்த தோற்றம் போலஉள் அரக்கு எறிந்த உருக்கு உறு போர்வை – உள்ளே உருக்கப்பட்ட  செவ்வரக்கு வைத்து செய்த மேல் பலகையினையும்கருந்தொழில் வினைஞர் கைவினை முற்றி – வலிய தொழிலைப் புரியும் தச்சரின் கைத்தொழில் முற்றுப் பெற்ற பின்னர்ஊர்ந்து பெயர் பெற்று எழில் நடைப் பாகரொடு –  ஓட்டம் உண்டு என்று என்று பெயர்பெற்ற அழகிய நடையுடைய தேருடன் (பாகர் – தேர்ஆகு பெயர்)
மா செலவு ஒழிக்கும் மதனுடை நோன் தாள்
வாள் முகப் பாண்டில் வலவனொடு தரீஇ   260
அன்றே விடுக்குமவன் பரிசில் (259-261)
பொருளுரை:  குதிரையின் ஓட்டத்தைப் பின் நிறுத்தும் வலிமையுடைய கால்களையும் ஒளியுடைய முகத்தையுடைய எருதையும்அதனைச் செலுத்தும் பாகனுடன் தருவான்.  அன்றே உங்களுக்கு அவன் பரிசிலைத் தருவான்.
பதவுரை:  மா செலவு ஒழிக்கும் நோன் தாள் வாள் முகப் பாண்டில் வலவனொடு தரீஇ – குதிரையின் ஓட்டத்தைப் பின் நிறுத்தும் வலிமையுடைய கால்களையும் ஒளியுடைய முகத்தையுடைய எருதையும் அதனைச் செலுத்தும் பாகனுடன் தருவான்அன்றே விடுக்கும் அவன் பரிசில் – அன்றே பரிசிலைத் தருவான் அவன்

நல்லியக்கோடனின் புகழும் மாட்சியும்
………………………………………………….மென் தோள்
துகில் அணி அல்குல் துளங்கு இயல் மகளிர்,
அகில் உண விரித்த அம் மென் கூந்தலின்
மணி மயில் கலாபம் மஞ்சு இடைப் பரப்பி,
துணி மழை தவழும் துயல் கழை நெடுங்கோட்டு, 265
எறிந்து உரும் இறந்து ஏற்று அருஞ் சென்னிக்
குறிஞ்சிக் கோமான்கொய் தளிர்க் கண்ணி
செல் இசை நிலைஇய பண்பின்
நல்லியக்கோடனை நயந்தனிர் செலினே. (261-269)
பொருளுரை:  மென்மையான தோள்ஆடை அணிந்த இடைதளர்ந்த தன்மையையுடைய மகளிர் அகில் புகையை ஊட்டுவதற்கு விரித்த அழகும் மென்மையுமுடைய கூந்தல் போன்றநீலமணியின் நிறத்தையுடைய மயிலின் தோகையை மஞ்சின் இடையே விரித்துதெளிந்த முகில் தவழும் அசையும் மூங்கிலையுடைய நெடிய உச்சியில் இடி இடித்துப் பிறர் ஏறுவதற்கு அரிதாக உள்ள மலைகள் மிக்க நாட்டிற்குத் தலைவன்கொய்யப்பட்ட தளிரினால் தொடுத்த மாலை அணிந்த பிறர்பால் நில்லாது செல்லும் இயல்புடைய புகழ் தன்னிடத்தில் நிலைத்து நிற்பதற்குரிய பண்பையுடைய நல்லியக்கோடனிடம் நீவிர் விரும்பிச் சென்றால்.
பதவுரை:  மென் தோள் – மென்மையான தோள்துகில் அணி அல்குல் – ஆடை அணிந்த அல்குல்துளங்கு இயல் மகளிர் – தளர்ந்த தன்மையையுடைய மகளிர்அகில் உண விரித்த அம் மென் கூந்தலின் – அகில் புகையை ஊட்டுவதற்கு விரித்த அழகும் மென்மையுமுடைய கூந்தல் போல்மணி மயில் கலாபம் மஞ்சு  இடைப்பரப்பி – நீலமணியைப் போன்ற மயிலின் தோகையை மஞ்சின் இடையே விரித்துதுணி மழை தவழும் – தெளிந்த முகில் தவழும்துயல் கழை நெடுங்கோட்டு – அசையும் மூங்கிலையுடைய நெடிய மலையுச்சியில்எறிந்து உரும் இறந்த ஏற்று – இடி இடித்துச் சென்று பிறர் ஏறுவதற்கு அரிதாக உள்ளஅருஞ் சென்னிக் குறிஞ்சிக் கோமான் – மலையுச்சியையுடைய மலையின் தலைவன்கொய் தளிர்க் கண்ணி கொய்யப்பட்ட தளிர் மாலை,  செல் இசை நிலைஇய பண்பின் நல்லியக்கோடனை நயந்தனிர் செலினே – பிறர்பால் நில்லாது செல்லும் புகழ் தன்னிடத்தில் நிலைத்து நிற்பதற்குரிய பண்பையுடைய நல்லியக்கோடனிடம் நீவிர் விரும்பிச் சென்றால்.

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012 உடன்பிறப்பே, பேரவையில்  நியாயமான  பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூ...