google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: பாவேந்தர் பாரதிதாசன்
பாவேந்தர் பாரதிதாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாவேந்தர் பாரதிதாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

குடும்ப விளக்கு ஐந்தாம் பகுதி

 பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய


"குடும்ப விளக்கு"


 ஐந்தாம் பகுதி

முதியோர் காதல்


அறுசீர் விருத்தம்

மூத்த பிள்ளை முதியவரோடு

வேடப்பன் தம்பி யான
      வெற்றிவேல், மனைவி யோடு
வேடப்பன் வாழ்ந் திருந்த
      வீட்டினில் வாழு கின்றான்,
வேடப்ப னோ,தன் தந்தை
      வீட்டினிற் குடும்பத் தோடு
பீடுற வாழு கின்றான்.
      பெற்றவர் முதுமை பெற்றார்!

முதியோருக்கு மருமகள் தொண்டு

வேடப்பன் மனைவி யான
      நகைமுத்து மிகவும் அன்பாய்
வேடப்பன் தந்தை தாய்க்கு
      வேண்டுவ தறிந்தே அன்னார்
வாடுதல் சிறிதும் இன்றி
      வாய்ப்புறத் தொண்டு செய்வாள்;
ஆடிய பம்ப ரங்கள்
      அல்லவா அம்மூத் தோர்கள்?

தலைக்கடை அறையில் மணவழகர் தங்கம்

தலைக்கடை அறைக்குள் அந்தத்
      தளர்மண வழகர் ஓர்பால்
இலக்கியம் படிப்பார்! இன்பத்
      துணைவியார் கேட்டி ருப்பார்!
உலர்ந்தபூங் கொடிபோல் தங்கத்(து)
      அம்மையார் ஒருபால் குந்திப்
பலஆய்வார்; துணைவர் கேட்பார்;
      துயிலுவார்; பழங்கா லத்தார்.

மணவழகர் உடல்நிலை

மணவழ கர்க்கு முன்போல்
      வன்மையோ தோளில் இல்லை!
துணைவிழி, ஒளியு ம் குன்றக்
      கண்ணாடித் துணையை வேண்டும்;
பணையுடல், சருகு! வாயிற்
      பல்லில்லை! மயிர்வெண் பட்டே!
உணவெலாம்! பாலின் கஞ்சி;
      உலவுதல் சிறிதே ஆகும்.

தங்கத்தம்மையார் உடல்நிலை

நன்னிலாக் கதிர்போல் கூந்தல்
      நரைத்தது. கொண்டை யிட்டு
முன்னிலா முகில்உண் டாற்போல்
      முகத்தொளி குறைய லானார்!
அன்புடல் அறத்தால் தோய்ந்த
      ஆயிரம் பிறைமூ தாட்டி
மன்னுசீர் அன்னாள் மெய்யோ
      வானவில் போற்கூ னிற்றே!

முதியோர் அறைக்கு மக்கள் பேரர் வந்து போவார்கள்

இருபெரு முதியோர் தம்மைத்
      தலைக்கடை அறைசு மந்து
பெரும்பேறு பெற்ற தன்றோ!
      பிள்ளைகள், அவர்ம னைமார்
வருவார்கள்; அறங்கேட் பார்கள்.
      மற்றுள பேர்த்தி பேரர்
வருவார்கள் அளவ ளாவி
      மணியோடு பள்ளி செல்வார்.

இரு முதியோர் நிரம்பிய உள்ளம்

மைந்தர்க்குக் கல்வி சேர்த்தோம்
      மகள்மார்க்கும் அவ்வா றேயாம்
எம்தக்க கடன்மு டித்தோம்
      இனிதாக வாழு கின்றோம்;
முந்துறச் சுற்றத் தார்க்கும்
      செய்வன முழுதும் செய்தோம்;
இந்தநாள் வரைக்கும் வாய்மை
      இம்மியும் மறந்த தில்லை.

நாட்டுக்கு நலம் செய்தோம்

இந்நாட்டின் நலனுக் காக
      நல்லறம் இயற்றி வந்தோம்.
எந்நாளும் பிறர்க்குத் தீமை
      எங்களால் நடந்த தில்லை.
சின்னதோர் நன்று செய்தார்
      திறம்மறந் தறியோம் என்றே
இன்னிசை பாடும் அன்னார்
      இரண்டுள்ளம் இன்பம் கொள்ளும்.

முதியோளே வாழ்கின்றாள் என் நெஞ்சில்

விதைத்திட்டேன் அவளின் நெஞ்சில்
      என்றனை! நேற்றோ? அல்ல;
இதற்குமுன் இளமை என்ப
      தென்றைக்கோ அன்றைக் கேநான்!
கதையாகிக் கனவாய்ப் போகும்
      நிகழ்ந்தவை; எனினும் அந்த
முதியோளே வாழு கின்றாள்
      என்நெஞ்சில் மூன்று போதும்.

இருக்கின்றாள் அது எனக்கின்பம்

புதுமலர் அல்ல; காய்ந்த
      புற்கட்டே அவள்உ டம்பு!
சதிராடும் நடையாள் அல்லள்
      தள்ளாடி விழும் மூதாட்டி!
மதியல்ல முகம்அ வட்கு
      வறள்நிலம்! குழிகள் கண்கள்!
எதுஎனக் கின்பம் நல்கும்?
      "இருக்கின்றாள்" என்ப தொன்றே!

நினைக்கின்றாள் நினைக்கின்றேன் நான்

இனிக்கின்ற தமிழை அன்னாள்
      இசைக்கின்ற ஆற்றல் இல்லை.
தனித்துள்ளேன் ஒருபால்! அன்னாள்
      தனித்துள்ளாள் மறுபு றத்தே!
எனைக்கண்டும், என்னைத் தொட்டும்
      பயில்கிலாள்; எனினும் என்னை
நினைக்கின்றாள், நினைக்கின் றேன்நான்;
      நிலைக்கின்ற தென்பால் இன்பம்!

அன்புள்ளம் காணுகின்றேன்
அகத்தின்பம் காணுகின்றேன்

என்பும்நற் றோலும் வற்ற,
      ஊன்றுகோல் இழுக்கி வீழத்
தன்புது மேனி, காலத்
      தாக்கினால் குலைய லானாள்.
என்முது விழிகா ணற்கும்
      இயலாதே! எனினும் அன்னாள்
அன்புள்ளம் காணு கின்றேன்!
      அகத்தி ன்பம் காணு கின்றேன்!

பேரர் அம்மாயி என்றழைப்பர்
அது கேட்பேன் இன்பம் செய்யும்

செம்மா துளைபி ளந்து
      சிதறிடும் சிரிப்பால் என்னை
அம்மாது களிக்கச் செய்வாள்
      அதுவெலாம் அந்நாள்! இந்நாள்
அம்மணி நகைப்பும் கேளேன்
      ஆயினும் பேரர் ஓர்கால்
"அம்மாயீ" என்பார்! கேட்பேன்
      அமிழ்தினில் விழும்என் நெஞ்சம்!

அன்னை என்றழைப்பர் மக்கள்
இன்புறும் என்றன் நெஞ்சம்


இன்னிழை பூண்டி ருப்பாள்
      அத்தான்என் றழைப்பாள் என்னை
நன்மொழி ஒன்று சொல்வாள்
      நான்இசை யாழே கேட்பேன்!
அன்னவை அந்நாள்! இந்நாள்
      அன்னவள் தன்னை நோக்கி,
'அன்னாய்' என் றழைப்பார் மக்கள்
      அதுகேட்பேன்; இன்பம் கொள்வேன்!

அவள் உள்ள உலகம்
எனக்கு உவப்பூட்டும்


உயிர்ப்பினை நிலைநி றுத்தும்
      நன்மழை; உலக நூலைச்
செயிர்ப்பற நீத்தார்* செய்வார்;
      செவ்வேஅவ் வறநூல் தன்னை
முயற்சியிற் காப்பார் மன்னர்.
      எனக்கென்ன இனி?அம் மூதாட்டி
உயிர்வாழ்வாள் ஆத லற்றான்
      உவப்பூட்டும் எனக்கிவ் வையம்!

(*நீத்தார் - துறந்தார்)

அவர் வாழ்வது
அவள்மேல் வைத்த காதல்


வாழாது வாழ்ந்து மூத்த
      மணவழ குள்ளம் இ·தே!
ஆழாழிப் புனல்அ சைவை,
      ஆர்ப்பினை எண்ணி டாது
வீழுற அதனில் வீழ்த்தும்
      இருப்பாணி போல்அ வள்மேல்
காழுற மனத்தில் வைத்த
      காதலால் வாழு கின்றார்!

என் நெஞ்ச மெத்தையில் துயிலுகின்றான்

காம்பரிந் திட்ட பூவைக்
      கட்டிலில் பரப்பி, மேலே
பாம்புரி போலும் மேன்மைப்
      பட்டுடை விரித்துப் போட்டால்,
தீம்பாலைப் பருகி அன்பன்
      சிறக்கவே துயில்வான் இன்றும்
மேம்பாட்டிற் குறைவோ? நெஞ்ச
      மெத்தையில் துயிலு கின்றான்.

நெஞ்சக் காட்டில் உலவும் மான்

பாங்குற மணியும் பொன்னும்
      பதித்தபாண் டியன்தேர் போல
ஈங்கிந்தத் தாழ்வா ரத்தில்
      எழிலுற உலவா நிற்பான்;
ஏங்குமா றில்லை இன்றும்
      என்னிரு கண்நி கர்த்தோன்
நீங்காமான் போல்என் நெஞ்சக்
      காட்டினில் உலவு கின்றான்.

என் நெஞ்சில் தேன்மழை அவன்

மெய்யுற வாய்சு வைக்க
      விழி,அழ குண்ண, மூக்கு
வெய்யசந் தனத்தோள் மோப்ப,
      விளைதமிழ் காது கேட்க,
ஐயன்பால் புலன்கள் ஐந்தால்
      அமிழ்தள்ள வேண்டும்! இந்நாள்
பெய்கின்றான் என்நெஞ் சத்தில்
      தேன்மழை, பிரித லின்றி!

அவனைச் சுமக்க மனம் ஓயாது

அறம்செய்த கையும் ஓயும்
      மக்களை அன்பால் தூக்கிப்
புறம்போன காலும் ஓயும்!
      செந்தமிழ்ப் புலவர் சொல்லின்
திறம்கேட்ட காதும் ஓயும்!
      செயல்கண்ட கண்ணும் ஓயும்!
மறவனைச் சுமக்கும் என்றன்
      மனமட்டும் ஓய்த லில்லை.

அயலவன் கண்படாமல் காத்து வந்தேன்

வெயில்பட்டால் உருகிப் போகும்
      மெழுகினால் இயன்ற பாவை!
பெயும்மழை பட்ட போதே
      கரையும்கற் கண்டின் பேழை!
புயல்பட்டால் நிலைகொள் ளாத
      பூம்பொழில்! என்ம ணாளன்
அயலவள் கண்பட் டால்சீர்
      அழியும்என் றன்பால் காத்தேன்.

தப்பொன்றும் இன்றி என் தமிழனைக் காத்தேன்

தொப்பென்ற ஓசை கேட்டால்
      துயருறும் என்றும், சாற்றில்
உப்பொன்று குறைந்தால் உண்ணல்
      ஒழியுமே என்றும், ஒன்றை
ஒப்பெனில் ஒப்பா விட்டால்
      உடைபடும் உள்ளம் என்றும்
தப்பொன்றும் இன்றி என்றன்
      தமிழனை அன்பாற் காத்தேன்.

எத்தீமை நேருமோ? என்று நினைப்பாள் மூதாட்டி

தற்காத்துத் தற்கொண் டானைத்
      தான்காத்துத் தகைமை சான்ற
சொற்காத்துச் சோர்வி லாளே
      பெண்என்று வள்ளு வர்தாம்
முற்சொன்ன படியே என்றன்
      முத்தினைக் காத்து வந்தேன்.
எத்தீமை மனக்கு றைச்சல்
      எய்துமோ எனநி னைப்பேன்!

எனக்குக் கொடுப்பதைத் தாத்தாவுக்குக் கொடு

அகவல்

பாட்டியே, சிறுமலைப் பழங்கள் இந்தா
என்று பேரன் ஈய வந்தான்.
தம்பியே உன்றன் தாத்தா வுக்குக்
கொடுபோ! என்று கூறிக்
கொடுக்கப் போவதைக் கூர்ந்துநோக் குவளே!

பொரிமாத் தந்தார் உண்டாள்
நாணிப்போனார் தம்மிடம்

வலக்கால் குத்திட்டும், இடதுகால் மடித்தும்,
உட்கார்ந் திலக்கியம் உற்று நோக்கிடும்
மணவழ கர்தம் மனையாள் நினைவாய்க்
கணுக்கால் கையூன் றியபடி ஊன்றுகோல்
துணையடு தம்,தலை யணைக்கீழ் வைத்த
பொதிந்த பொரிமாப் பொட்டணம் தூக்கி
எழுந்தார். விழிப்புடன் விழுந்து விடாமே
நடந்து,தம் துணைவியை நண்ணினார்.அப்போது
மருமகள் நகைமுத்து வந்து, "மாமா
என்ன வேண்டும்? ஏன் வந்தீர்கள்?
என்னிடம் கூறினால் யான்செய் யேனா?"
என்றாள். பொரிமா இடையில் மறைத்தும்
தன்துணை மேலுள்ள அன்பை மறைத்தும்
ஒன்று மில்லை ஒன்று மில்லை
என்று சொல்லொணாத் துன்பம் எய்தினார்!
மருகி போனாள். கிழவர் துணைவியின்
அருகுபோய்ப் பொரிமா அவளிடம் நீட்டி
உண்ணென்று வேண்டி நின்றார்!
உண்டாள்; நாணிப் பிரிந்தார் உவந்தே!

அவள் தனிச்செல்ல
மணவழகர் பொறார்


தங்கம் கொல்லைக்குத் தனியே செல்வதை
மணவழகு நோக்க மனது பொறாராய்
மருகியை அழைப்பார்; மருகி வந்து,தன்
துணைவிக்குத் துணைசெயக் கண்டால்
தணிவார் தமது தணியா நெஞ்சமே.

அவனுக்குத் தொண்டு செய்தலே அவளுக்கின்பம்

மணவழ கர்தாம் மறுபுறம் நகர்ந்தால்
அணிமையிற் சென்றே அன்பன் படுக்கையைத்
தட்டி, விரிப்பு மாற்றித் தலையணை
உறைமாற் றுவாள் அவள்; மணந்தநாள்
பெறுவதைப் பார்க்கிலும் பெறுவாள் இன்பமே.

முன்னாள் நடந்ததை மூதாட்டி இந்நாள் நகைமுத்திடம் இயம்புவாள்

ஒருநாள் மாலைப் பெருமூ தாட்டி
நடந்த ஒன்றை நகைமுத் தாளிடம்
மிகுமகிழ்ச் சியுடன் விளம்ப லுற்றாள்;
செம்பில் எண்ணெயும் சீயக் காயும்
ஏந்தி மணாளரை எழுந்திரும் என்றேன்.
"உனக்கேன் தொல்லை உன்றன் பணிச்சியை
எண்ணெய் தேய்க்க அனுப்புக" என்றார்.
"நானே அப்பணி நடத்துவேன்" என்றேன்.
"மானே, மெல்லிடை வஞ்சியே, நீபோய்க்
கிளியுடன் பேசியும் ஒளியாழ் மிழற்றியும்
களியுடன் இருப்பாய் கவலைஏன்?" என்றார்.
அறவே மறுத்ததால் அறைக்குச் சென்றேன்.
பின்னர்ஓர் பணிச்சி என்மணா ளர்க்கே
எண்ணெய் இட்டுத் தண்சீ யக்காய்
தேய்த்து வெந்நீர் சாய்த்துத் தலைமுடி
சிக்கறுத் திருந்தாள். திடும்என அங்கே
என்றன் மாமியார், "என்னன்பு மகனே,
ஏதுன் மனைவி இப்ப ணிச்சியை
உனக்கு முழுக்காட்ட ஒப்பிய"தென்றார்.
அதற்கென் மணாளர், "ஆம்அவள் என்னை
எண்ணெய்இட் டுக்கொள எழுந்திரும் என்றாள்.
ஒப்பேன் என்றேன். உடனே உட்சென்று
இப்ப ணிச்சியை அனுப்பினாள்" என்றார்.
அப்படி யாஎன் றன்புறு மாமியார்
இப்புறம் திரும்பி எதிரில் நோக்க,
முக்கா டிட்டே முகம்மறைத் தபடி
சிக்கறுத் திருந்த சிறிய பணிச்சியைத்
"தங்கத் திடத்தில் சந்தனம் கொடுத்தே
இங்கே அனுப்படி" என்றார். பணிச்சி
அகலும் போது முக்கா டகன்றது.
தங்கமே பணிச்சி என்பதை
அங்கென் மாமியார், அன்பர்கண் டனரே!

மணிமொழியாரிடம் மணவழகர்

மனத்தில் மாசு வராமையே அறம்எனும்
வள்ளுவர் வாய்மொழி மறந்தறி யேன்நான்;
அறம்எனல் இல்லறம் துறவறம் ஆக
இருவகை என்பதை ஒருகாலும் ஒப்பேன்;
அறம்எனப் பட்டதே இல்வாழ்க் கைஎன்றார்
வள்ளுவர் ஆதலால்! உள்ளம் கவர்ந்த
ஒருத்தி உளத்தை உரிமையாய்க் கொண்டேன்.
அதுதான் மணமென அறிஞர் கூடிப்
புதுவாழ்வு பெறுகெனப் புகன்றனர் வாழ்த்தே.
இடும்பை தீர்ப்பவள் என்மனை! அவள்என்
குடும்ப விளக்கு! வேறேது கூறுவேன்?
என்பால் அன்பை நிரம்ப ஏற்றவள்
நன்மக்க ளீன்று நலமுறக் காத்தாள்;
நவையறு கல்வியால் நன்மக் கள்தமை
அவையினில் முதன்மை அடையச் செய்தேன்;
அறவழி யாலே நிறைபொருள் ஆக்கினேன்.
நெஞ்சினில் உற்றிடும் நிலைவேறு பாட்டால்
நொடிதொறும் நொடிதொறும் நூறுநூ றாயிரம்
இறப்பும் பிறப்பும் எய்தும் அன்றோ?
எய்தவே இன்பம் ஏகலும் மீளலும்
அடையும் அன்றோ? அவ்வா றின்றி
அலைகடல் சூழ்நில வுலகில் இந்நாள்
நிலைத்த இன்பம் பெற்றதென் நெஞ்சம்!"
எனமண வழகர் இயம்பிய அளவில்,
"இதற்குமுன் நிகழ்ந்த இன்ப நிகழ்ச்சிகள்
உண்டெனில் அவற்றில் ஒன்று கூறுக!"
எனமணி மொழியார் இனிது கேட்டார்.
நன்றென அழகர் நவில லானார்:

இளமையில் நடந்த இன்ப நிகழ்ச்சி

"படித்தும் கேட்டும், பாடியும் ஆடியும்
இருந்த நண்பர் பிரிந்து போகவே,
என்றன் அறையில் யான்தனிந் திருந்தேன்.
நிலாமுகத் தாள்என் நெஞ்சைத் தொட்டாள்.
தனிமையை நெஞ்சு தாங்க வில்லை.
தனித்திருக் கின்றிரோ தக்க நண்பருடன்
இனித்திருக் கின்றிரோ என்றுபார்த் துவர
என்னை அனுப்பினாள் என்றன் தலைவி
என்றாள் தோழி என்னெதிர் வந்து!
போய்ச்சொல் என்றேன், போனாள்; மீண்டும்
வந்து, தலைவனே, வஞ்சி சோறுகறி
ஆக்கு கின்றாள். அடுப்பில் சோறு
கொதிக்கின்ற தெ"ன்று கூறினாள். "இங்கே
குளிர்கின்றதோ" எனக் கூறி அனுப்பினேன்.
"இறக்கும் நேரம்" என்றாள் வந்து!
"வாழும் நேரமோ இங்கு மட்டும்?"
என்றேன். சென்றாள். உடனே என்றன்
இனிய அமிழ்து தனிஎனை அடைந்தாள்.
"அத்தான் பொறுப்பீர் அடுப்பில் வேலை
முடித்தோடி வருவேன்" என்று மொழிந்தாள்.
"தோழிபார்க் கட்டும் சோறாக் கும் பணி"
என்றேன். அதற்கவள், என்முகம் தாங்கி
"தலைவர் விருப்பம் தலைவி அறிவாள்;
பொறுப்பிலாத் தோழி அறிவ துண்டோ?"
என்றாள். "மாமியார் இல்லையா?" என்றேன்.
"அந்தோ அந்தோ?" என்றுதன் அங்கையால்
தன்வாய் மூடித் "தளர்ந்த கிழவியை
அடுப்பில் விட்டுத் தடித்த மருமகள்
கொழுந னோடு கொஞ்சினாள் என்று
வையம் இகழுமே" என்று, வஞ்சி
தொடக்க மருத்துவ மாகமுத் தமொன்று
கொடுத்துக் குடுகுடென்று கடிதே ஓடிச்
சமையல் முடித்துத் தமிழோ
அமிழ்தோ எனச்சோ றிட்டழைத் தாளே!

மணிமொழியார் நிலைத்த இன்பமாவ தெப்படி என்றார்

"உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடிநினைந் தெண்ணுவ" என்று
மூத்தாள் ஔவை மொழிந்த வண்ணம்
என்றும் மக்களின் எண்ணம் பலவாம்;
எண்ணம் தோற்பதும் ஈடே றுவதும்
ஆகும். அதனால், அகத்தின் நிலைமை
நல்லதும் ஆகும்; நலிவதும் ஆகும்.
இவற்றையே நொடிதோறும் ஏற்படு கின்ற
ஆயிரம் ஆயிரம் பிறப்பிறப் பென்றீர்.
இவைகளே நிலையா இன்பதுன் பங்கள்!
"நிலைத்த இன்பம் நேர்ந்த தென்றீரே
வழுத்துவீர் அதை"என மணிமொழி கேட்டார்;
அதுகேட் டழகர் அறிவிக் கின்றார்;
"செம்மலர் பறிக்கச் செல்வதும் இலைநான்!
சேறும் பூசித் திரும்பலும் இல்லை.
பற்றில்லை; தீமை உற்றதும் இல்லை.
தீமையில் லாவிடம் இன்பம் திகழும்,
என்ன என்னிடம் மீதி என்றால்.
ஒன்றே! ஒன்றே! அதன்பெயர் உயிர்ப்பாம்.
அவ்வு யிர்ப்போ அன்பி ருப்பதால்
இருக்கின் றதுவென இயம்புவர் வள்ளுவர்;
'அன்பின் வழிய துயிர்நிலை' அறிக.
என்றன் அன்புக் குரியவர் எவரெனில்
மனைவி, மக்கள், பேரர், உறவினர்.
ஆயினும் மனைவி,என் அன்புக் கருகில்
இருப்பவள், என்மேல் அன்புவைத்(து)
இருப்பவள்" என்றார் மணவ ழகரே

மணவழகர் இரவு நன்றாகத் தூங்கினையோ என்றார்

அறுசீர் விருத்தம்

சேவல்கூ விற்று; வானம்
      சிரித்தது; நூற்றைந் தாண்டு
மேவிய அழகர் கண்கள்
      விரிந்தன! கிழவி யாரின்
தூவிழி மலர்ந்த! ஆங்கே
      துணைவனார் துணையை நண்ணிப்
"பாவையே தூக்கப் பொய்கை
      படிந்தாயோ இரவில்" என்றார்.

அயர்ந்து தூங்கியதாகத் தங்கம் சாற்றினாள்

குடித்தோமே பாலின் கஞ்சி;
      குறட்பாவின் இரண்டு செய்யுள்
படித்தோமே, அவற்றி னுக்கு
      விரிவுரை பலவும் ஆய்ந்து
முடித்தோமே! மொணமொ ணென்று
      மணிப்போறி சரியாய்ப் பத்தும்
குறித்தது துயின்றேன்;இப்போ(து)
      அழைத்தீர்கள் விழித்தேன் என்றாள்.

தம் தூக்க நலம் சொல்வார் தள்ளாத கிழவர்

நிறையாண்டு நூறும் பெற்ற
      நெடுமூத்தாள் இதனைக் கூற
குறைவற்ற மகிழ்ச்சி யாலே
      அழகரும் கூறு கின்றார்:
நிறுத்தினோம் நெடிய பேச்சை
      பொறி,மணி பத்தே என்று
குறித்தது துயின்றேன் சேவல்
      கூவவே எழுந்தேன் என்றார்.

கிழவர் உடனிருப்பதில் கிழவிக்கு நாணம்

புதுக்காலை; குளிர்ந்த காலைப்
      போதிலே உனைநெ ருங்கி
இதுபேசும் பேறு பெற்றேன்
      என்றனன் கிழவோன்! அன்னாள்
எதிர்வந்த அமிழ்தே, அன்பே
      யான்பெற்ற இன்பம் போதும்
அதோ நகைமுத்து வந்தாள்
      நமைக் காண்பாள் அகல்வீர் என்றாள்.

நூற்றைந்து ஆண்டுவரை நீவிர் வாழக் காரணம் என்ன?

எண்சீர் விருத்தம்

மற்றொருநாள் காலையிலே மணிமொழியார் வந்தார்;
      மணவழகர் அன்போடு வரவேற்புச் சொன்னார்.
"இற்றைநாள் நூற்றைந்தா ண்டாயின உமக்கே
      இத்தனைநாள் உயிர்வாழக் காரணந்தான் என்ன?
சற்றதனை உரைத்திடுக!" எனக்கேட்டார் மொழியார்.
      "எந்தைதாய் நல்லொழுக்க முடையவர்கள்; என்னைக்
கற்றவரில் ஒருவன்என ஆக்கிவைத்தார்; நானும்,
      கருத்தினிலும் சேர்த்தறியேன் தீயழுக்கம் கண்டீர்.

நன்மனைவியுடையார் எல்லாம் உடையார்

இவையன்றி நானடைந்த மனைவியோ என்றால்
      எனக்கினியாள்! என்னிரண்டு கண்களே போல்வாள்;
நவையில்லாள்; நான்வாழத் தன்னுயிரும் நல்கும்
      நாட்டத்தாள்; அவளாலே என்வாழ்க்கை காத்தேன்;
அவளாலே நல்லொழுக்கம் தவறாமை காத்தேன்;
      அவளாலே என்குடும்பம் மாசிலதாய்ச் சற்றும்
கவலையிலா தாயிற்று; நன்மனைவி உடையார்!
      கடலுலகப் பெரும் புகழும் வாழ்நாளும் உடையார்!

உலக அமைப்புக்கு இலேசு வழி

இவ்வுலகில் அமைதியினை நிலைநாட்ட வேண்டின்
      இலேசுவழி ஒன்றுண்டு பெண்களைஆ டவர்கள்
எவ்வகையும் தாழ்த்துவதை விட்டொழிக்க வேண்டும்.
      தாய்மையினை இழித்துரைக்கும் நூலும்ஒரு நூலா?
செவ்வையுற மகளிர்க்குக் கல்விநலம் தேடல்
      செயற்பால யாவினுமே முதன்மைஎனக் கொண்டே
அவ்வகையே செயல்வேண்டும்! அறிவுமனை யாளால்
      அமைதியுல குண்டாகும் என்ன இதில் ஐயம்!

மகளிர் ஒழுக்கம் பூண்டால் மருத்துவ நிலையமே வேண்டாம்

மகளிரெல்லாம் கல்வியறி வொழுக்கமுள ராயின்
      மருத்துவமே வேண்டாவாம்; பிணிமூப்பு வாரா.
மகளிரெல்லாம் அரசியலைக் கைப்பற்றி ஆண்டால்
      மாநிலத்தில் போரில்லை; சாக்காடும் இல்லை;
துகளில்லா ஒருசிறிய உலகுண்டு கேட்பீர்
      தொல்லையில்லா அவ்வுலகம் யான்வாழும் இல்லம்.
பகையில்லை. அங்கின்மை இல்லை,பிணி இல்லை
      பழியில்லை, என்துணைவி அரசாண்ட தாலே".

உங்கட்குப்பின் உங்கள் குடும்பம் எப்படி நடக்கும்?

என்றுரைத்தார் மணவழகர்; இதைஎல்லாம் கேட்ட
      எழிலான மணிமொழியார்" உங்கட்குப் பின்னர்
நன்றுகுடித் தனம்நடக்கக் கூடுமோ?" என்றார்
      "நான்நல்லன், என்மனைவி நனிநல்லள்; நாங்கள்
என்றும்மன நலம்உடையோம். ஆதலினால் அன்றோ,
      எம்மக்கள் நல்லவர்கள்; எம்மக்கள் கொண்ட
பொன்னுறவைப் பெற்றோரும் நல்லர்நனி நல்லர்
      பொலியும்இனி யும்குடும்பம்" என்றுரைத்தார் அழகர்.

தள்ளாத கிழப்பருவத்தில் இன்பம் எய்துதல் உண்டு

"கையிலே வலிவில்லை காலில்வலி வில்லை;
      கண்ணில்ஒளி இல்லைநாச் சுவையறிய வில்லை;
மெய்யூறும் இல்லைஒலி காதறிய வில்லை;
      விலாஎலும்பின் மேற்போர்த்த தோலுமில்லை; நீவிர்
செய்வதொரு செயலில்லை; இன்பமுறல் ஏது?
      தெரிவிப்பீர்" என்றுமணி மொழியார்தாம் கேட்கத்
துய்யமுது மணவழகர் உடல்குலுங்கச் சிரித்துச்
      சொல்லலுற்றார், முதியோளும் நகர்ந்துவந்துட் கார்ந்தாள்.

இன்புறும் இரண்டு மனப்பறவைகள்

"வாய்மூக்குக் கண்காது மெய்வாடி னாலும்
      மனைவிக்கும் என்றனுக்கும் மனமுண்டு கண்டீர்
தூய்மையுறும் அவ்விரண்டு மனம்கொள்ளும் இன்பம்
      துடுக்குடைய இளையோரும் படைத்திடுதல் இல்லை.
ஓய்வதில்லை மணிச்சிறகு! விண்ணேறி, நிலாவாம்
      ஒழுகமிழ்து முழுதுண்டு பழகுதமிழ் பாடிச்
சாய்வின்றிச் சறுக்கின்றி ஒன்றையன்று பற்றிச்
      சலிக்காதின் பங்கொள்ளும் இரண்டுமனப் பறவை.

இருமனம் இரு மயில்கள்;
தேன்சிட்டுகள்; கிளிகள்; அமிழ்தின் கூட்டு

"அருவியெலாம் தென்பாங்கு பாடுகின்ற பொதிகை
      அசைதென்றல் குளிர்வீசும் சந்தனச்சோ லைக்குள்
திரிகின்ற சோடிமயில் யாமிரண்டு பேரும்;
      தெவிட்டாது காதல்நுகர் செந்தேன்சிட் டுக்கள்!
பெருந்தென்னங் கீற்றினிலே இருந்தாடும் கிளிகள்!
      பெண்இவளோ ஆண்நானோ எனவேறுவேறாய்ப்
பிரித்துணர மாட்டாது பிசைந்தகூட் டமிழ்து!"
      பேசினார் இவ்வாறு; கூசினள் மூதாட்டி.

அவள் தூங்கவில்லை இரவுமணி பத்தாகியும்

அறுசீர் விருத்தம்

மாநில மக்கள் எல்லாம்
      தூங்கும்நள் ளிரவில், தங்கம்
ஏனின்னும் தூங்க வில்லை?
      இருநுனி தொடவ ளைக்கக்
கூனல்வில் போலே மெய்யும்
      கூனிக்கி டந்த வண்ணம்
ஆனதோ மணிபத் தென்றாள்
      மணிப்பொறி அடிக்கக் கேட்டே.

அவனிடம் நகர்ந்து செல்லுகிறாள்

"அவன்துயின் றானோ?" என்னும்
      ஐயத்தால் தான்தூங் காமல்
கவலைகொள் வாளை எங்கும்
      காண்கிலோம் இவளை அல்லால்!
துவள்கின்ற மெய்யால் தன்கைத்
      துடுப்பினால் தரைது ழாவித்
தவழ்கின்றாள் தன்ம ணாளன்
      படுக்கையைத் தாவித் தாவி.

ஒரு தலையணையில் அருகருகு கிடந்தார்கள்

"வருகின்றா யோடி தங்கம்
      வா"என்றோர் ஒலிகேட் கின்றாள்.
சருகொன்று காற்றால் வந்து
      வீழ்ந்தது போலே தங்கப்
பெரியாளும் பெரியான் அண்டைத்
      தலையணை மீது சாய்ந்தாள்.
அருகரு கிருவர்; மிக்க
      அன்புண்டு; செயலே இல்லை!

இருவர் களிப்பும் இயம்பு மாறில்லை

ஒளிதரும் அறைவி ளக்கும்!
      ஒளிக்கப்பால் இவர்கள் வாழ்வார்!
வெளியினை இருளும் கௌவும்
      இருட்கப்பால் விளங்கு கின்றார்!
எளிதாகத் தென்றல் வீசும்
      என்பயன்? அவர்அங் கில்லை
களித்தன மனம்இ ரண்டும்
      கழறுமா றில்லை அ·தே.

மனவுலகில் இருவர் பேச்சுக்கள்

இருமனம் அறிவு வானில்
      முழங்கின இவ்வா றாக
"பெரியோளே என்நி னைப்பால்
      தூங்காது பிழைசெய் கின்றாய்"
"உரியானே, எனையே எண்ணி
      உறங்காது வருந்து கின்றாய்"
"பெருந்தொல்லை தூக்க மின்மை"
      "நற்றூக்கம் பெரிய இன்பம்!"

என் நினைவைவிட்டுத் தூங்குக

அரைநாளின் தூக்க மேஇவ்
      வாறின்பம் அளிக்கு மானால்
ஒருநாளின் முழுதும் தூங்கல்
      ஒப்பிலா இன்பம் அன்றோ?
"அரிவையே என்றன் நெஞ்சை
      அள்ளாதே தனியே தூங்கே."
"உரியானே என்ம னத்தைப்
      பறிக்காதே உறக்கங் கொள்வாய்"

நெடிய தூக்கம்
நீடிய இன்பம்

தூங்கினார் கனவும் அற்ற
      தூக்கநல் லுலகில்! பின்னர்
ஏங்கினார் விழித்த தாலே!
      இன்பமே விரும்ப லானார்!
தூங்குவோம்! நிலைத்த இன்பம்
      துய்ப்போம்நாம் என்றார்! நன்றே
தூங்குகின் றார்நல் லின்பம்
      தோய்கின்றார் வாழ்கின் றாரால்!

முற்றும்.


குடும்ப விளக்கு நான்காம் பகுதி

 பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய

"குடும்ப விளக்கு"

 நான்காம் பகுதி

மக்கட் பேறு

அறுசீர் விருத்தம்

"நகைமுத்து வேடப் பன்தாம்
      நன்மக்கள் பெற்று வாழ்க!
நிகழுநாள் எல்லாம் இன்பம்
      நிலைபெற! நிறைநாட் செல்வர்
புகழ்மிக்கு வாழ்க வாழ்க!"
எனத் தமிழ்ப் புலவர் வாழ்த்த
நகைமுத்து நல்வே டப்பன்
      மணம்பெற்று வாழ்கின் றார்கள்.

*மிகுசீர்த்தித் தமிழ வேந்தின்
      அரசியல் அலுவற் கெல்லாம்
தகுசீர்த்தித் தலைவ னான
      வள்ளுவன் அருளிச் செய்த
தொகுசீர்த்தி அறநூ லின்கண்
      சொல்லிய தலைவி மற்றும்
தகுசீர்த்தித் தலைவன் போலே
      மணம் பெற்றின்புற் றிருந்தார்!

*"மிகுசீர்த்தி........வள்ளுவன்" என்றது
எதற்கு எனில் வள்ளூவன் என்பது
அந் நாளில் அரசியல் அலுவலகத்தின்
தலைவனுக்குப் பெயர் என்பதைக்
குறிப்பதாகும்.

நாளெலாம் இன்ப நாளே!
      நகைமுத்தைத் தழுவும் வேடன்
தோளெலாம் இன்பத் தோளே:
      துணைவியும் துணைவன் தானும்
கேளெலாம் கிளைஞர் எல்லாம்
      போற்றிட இல்ல றத்தின்
தாளெலாம் தளர்தல் இன்றி
      நடத்துவர் தழையு மாறே!

பெற்றவர் தேடி வைத்த
      பெருஞ்செல்வம் உண்டென் றாலும்,
மற்றும்தான் தேட வேண்டும்
      மாந்தர்சீர் அதுவே அன்றோ?
கற்றவன் வேடப் பன்தான்
      கடல்போலும் பலச ரக்கு
விற்றிடும் கடையும் வைத்தான்
      வாழ்நாளை வீண்நாள் ஆக்கான்!

இனித்திட இனித்தி டத்தான்
      எழில்நகை முத்தி னோடு
தனித்தறம் நடாத்து தற்குத்
      தனியில்லம் கொண்டான்! அன்னோன்
நினைப்பெல்லாம் இருநி னைப்பாம்:
      கடைநினைப் பொன்று; நல்ல
கனிப்பேச்சுக் கிள்ளை வாழும்
      தன்வீட்டின் கருத்தொன் றாகும்.

மூன்றாந்தெ ருவில மைந்த
      பழவீட்டில் அன்பு மிக்க
ஈன்றவர் வாழு கின்றார்.
      இடையிடை அவர்பாற் சென்றே
தேன்தந்த மொழியாள் தானும்
      செம்மலும் வணங்கி மீள்வார்;
ஈன்றவர் தாமும் வந்தே
      இவர்திறம் கண்டு செல்வார்.

நல்லமா வரசும், ஓர்நாள்
      நவில்மலர்க் குழலாள் தானும்
வில்லிய னூரி னின்று
      மெல்லியல் நகைமுத் தைத்தம்
செல்வியை மகளைப் பார்க்கத்
      திடும்என்று வந்து சேர்ந்தார்.
அல்லிப்பூ விழியாள் தங்கம்
      வேடப்பன் அன்னை வந்தாள்.

இங்கிது கேள்விப் பட்டே
      எதிர்வீட்டுப் பொன்னி வந்தாள்.
பொங்கிய மகிழ்ச்சி யாலே
      நகைமுத்தாள் புதிதாய்ச் செய்த
செங்கதிர் கண்டு நாணும்
      தேங்குழல், எதிரில் இட்டே
மங்காத சுவைநீர் காய்ச்ச
      மடைப்பள்ளி நோக்கிச் சென்றாள்.

அனைவரும் அன்பால் உண்டார்.
      மலர்க்குழல், பொன்னி தன்னைத்
தனியாக அழைத்துக் காதில்
      சாற்றினாள் ஏதோ ஒன்றை!
நனைமலர்ப் பொன்னி ஓடி
      நகைமுத்தைக் கலந்தாள்! வந்தாள்!
'கனிதானா? காயா?' என்று
      மலர்க்குழல் அவளைக் கேட்டாள்.

முத்துப்பல் காட்டிப் பொன்னி
      மூவிரல் காட்டி விட்டுப்
புத்தெழில் நகைமுத் தின்பால்
      போய்விட்டாள்; இதனை எண்ணிப்
பொத்தென மகிழ்ச்சி என்னும்
      பொய்கையில் வீழ்ந்தாள் அன்னை;
அத்தூய செய்தி கேட்ட
      தங்கமும் அகம்பூ ரித்தாள்.

மலர்க்குழல் தன்ம ணாளன்
      மாவர சிடத்தில் செய்தி
புலப்பட விரல்மூன் றாலே
      புகன்றனள். அவனும் கேட்டு
மலைபோலும் மகிழ்ச்சி தாங்க
      மாட்டாமல் ஆடல் உற்றான்!
இலாதவர் தமிழ்ச்சீர் பெற்றார்
      எனஇருந் தார்எல் லோரும்.

'நகைமுத்து நலிவு றாமல்
      நன்றுகாத் திடுங்கள்' என்று
மிகத்தாழ்ந்து கேட்டுக் கொண்டாள்
      மலர்க்குழல்! 'மெய்யாய் என்றன்
அகத்தினில் வைத்துக் காப்பேன்
      அஞ்சாதீர்' என்றாள் தங்கம்.
நகைமுத்துச் சுவைநீர் தந்தாள்.
      நன்றெனப் பருகி னார்கள்.

மாலையாய் விட்ட தென்றும்
      மாடுகன் றுகளைப் பார்க்க
வேலைஆள் இல்லை என்றும்
      விளம்பியே வண்டி ஏற
மூலைவா ராமல் மாடு
      முடுகிற்றே! அவர்கள் நெஞ்சோ
மேலோடல் இன்றிப் பெண்ணின்
      வீட்டையே நோக்கிப் பாயும்.

"இன்றைக்கே நம்வீட் டுக்குத்
      திரும்பிட ஏன்நி னைத்தாய்?"
என்றுமா வரசு கேட்டான்;
      "எனக்கான பெண்டிர்க் கெல்லாம்
நன்றான இந்தச் செய்தி
      நவிலத்தான் அத்தான்" என்றாள்.
"என்தோழ ரிடம்சொல் லத்தான்
      யான்வந்தேன்" என்றான் அன்னோன்.

தங்கமோ மகனை விட்டுத்
      தன்வீடு வந்து சேர்ந்தாள்;
அங்குநாற் காலி ஒன்றில்
      அமர்ந்தனள்; உடன்எ ழுந்தாள்
எங்கந்தச் சாவி என்றாள்?
      ஈந்தனர் இருந்த மக்கள்
செங்கையால் திறந்தாள் தோட்டச்
      சிறியதோர் அறையை நாடி.

எழில்மண வழகன் வந்தான்
      தங்கத்தின் எதிரில் நின்றான்.
"விழிபுகா இருட்ட றைக்குள்
      என்னதான் வேலை? இந்தக்
கழிவடைக் குப்பைக் குள்ளே
      கையிட்டுக் கொள்ளு வானேன்?
மொழியாயோ விடை எனக்கு?
      மொய்குழால்" என்று கேட்டான்.

அறையினில் அடுக்கப் பட்ட
      எருமூட்டை அகற்றி, அண்டை
நிறைந்திட்ட விறகைத் தள்ளி
      நெடுங்கோணி மூட்டை தள்ளிக்
குறுகிய இடத்தி னின்று
      குந்தாணி நீக்கி அந்தத்
துறையிலே கண்டாள் பிள்ளைத்
      தொட்டிலை எடுக்க லானாள்.

"நகைமுத்தாள்" என்று கூறி
      நடுமூன்று விரலைக் காட்டித்
"துகள்போகத் துடைக்க வேண்டும்
      தொட்டிலை" என்றாள் தங்கம்.
மகிழ்ந்தனன்! எனினும், 'பிள்ளை
      மருமகள் பெறவோ இன்னும்
தொகைஏழு திங்கள் வேண்டும்
      இதற்குள்ஏன் தொட்டில்?" என்றான்.

"பேரவா வளர்க்கும் என்பார்
      பேதமை! அதுபோல் நீயும்
பேரனைக் காண லான
      பேரவாக் கொண்ட தாலே,
சீருற மூன்று திங்கட்
      கருக்கொண்ட செய்தி கேட்டுக்
காரிருள் தன்னில் இன்றே
      தொட்டிலைக் கண்டெ டுத்தாய்".

எனமண வழகன் சொன்னான்
      ஏந்திழை சிரித்து நாணி
இனிதான தொட்டி லைப்போய்
      ஒருபுறம் எடுத்துச் சார்த்தித்
தனதன்பு மணாள னுக்குச்
      சாப்பாடு போடச் சென்றாள்;
தனிமண வழகன் வந்து
      தாழ்வாரத் தேஅ மர்ந்தான்.

உணவையும் மறந்து விட்டான்;
      தெருப்பக்கத் தறையின் உள்ளே
பணப்பெட்டி தனிலே வெள்ளிப்
      பாலடை தேடு தற்குத்
துணிந்தனன்; அறையில் சென்றான்.
      பெட்டியைத் தூக்கி வந்து
கணகண வெனத்தி றந்தான்.
      கைப்பெட்டி தனைஎ டுத்தான்.

அதனையும் திறந்தான் உள்ளே
      ஐந்தாறு துணி பிரித்து
முதுமையாற் சிதைந்து போன
      மூக்குப்பா லடையைக் கண்டான்.
எதிர்வந்து நின்றாள் தங்கம்.
      "பார்த்தாயா இதனை!" என்றான்.
மதிநிகர் முகத்தாள் "யானும்
      மணாளரும் ஒன்றே" என்றாள்.

நகைமுத்தாள் மூன்று திங்கள்
      கருவுற்ற நல்ல செய்தி
வகைவகை யாகப் பேசி
      மகிழ்ச்சியில் இரவைப் போக்கிப்
பகல்கண்டார். மாம னாரும்
      நகைமுத்தைப் பார்த்து மீண்டார்.
அகல்வாளோ தங்கம்? அங்கே
      நகைமுத்தோ டிருக்க லானாள்.

"சூடேறிற் றாவெந்நீர் தான்?
      விளவிடு சுருக்காய்" என்று
வேடப்பன் சொன்னான், அன்று
      விடிந்ததும் நகைமுத் தின்பால்!
கூடத்தில் இருந்த தங்கம்
      "கூடாது கூடா தப்பா
வாடவே லைவாங் காதே
      வஞ்சிமுன் போலே இல்லை".

எனக்கூறித் தானே சென்று
      வெந்நீரை எடுத்து வந்தாள்;
மனமலர் சிறிது வாட
      விழிமலர் அவன்மேல் ஓட
நனைமலர்க் குழலாள் ஆன
      நகைமுத்தாள் தன்ம ணாளன்
இனிதாகக் குளிப்ப தற்கே
      இயன்றவா றுதவச் சென்றாள்.

"நகைமுத்து முன்போல் இல்லை
      நலியச்செய் யாதே" என்று
புகன்றனர் அன்னை யார். ஏன்
      புகன்றனர்? எனத்த னக்குள்
புகன்றனன். எனினும் தன் கைப்
      புறத்துள்ள நகைமுத் தாளைப்
புகல்என்றும் கேட்டா னில்லை
      பொழுதோடக் கேட்போம் என்றே.

பொழுதோட, இரவு வந்து
      பொலிந்தது மணிவி ளக்கால்!
எழுதோவி யத்தாள் அன்பால்
      எதிர்பார்த்தாள்! கடையைக் கட்டி
முழுதாவ லோடு சாவி
      முடிப்புடன் வேடன் வந்தான்;
தொழுதோடி 'வருக' என்ற
      சொல்லோடு வரவேற் றாள்பெண்.

பிள்ளையின் வரவு கண்டு
      சிலசில பேசித் தங்கம்
உள்ளதன் நகைமுத் தின்பால்
      சொல்லென உரைத்துச் சென்றாள்;
"கிள்ளையே! நகைமுத் தாளே!
      கிட்டவா; என்றன் தாயார்
துள்ளிப்போய் தாமே வெந்நீர்
      தூக்கிவந் தார்கள் அன்றோ?

"நகைமுத்து முன்போல் இல்லை
      நலிவுசெய் யாதே, என்று
புகன்றனர் அன்றோ?" என்றான்
" பொன்னே அ·தென்ன?" என்று
மிக ஆவலோடு கேட்டான்.
      தன்மூன்று விரல்கள் காட்டி
முகநாணிக் கீழ்க்கண் ணாலே
      முன்நின்றான் முகத்தைப் பார்த்தாள்.

'கருவுற்றுத் திங்கள் மூன்று
      கண்டாயா?' எனவே டப்பன்
அருகோடித் தழுவிப் "பெண்ணே
      அறிவிப்பாய்" என்றான்; "ஆம் ஆம்
இருநூறு தடவை கேட்பீர்!"
      எனக்கூறி அடுக்க ளைக்குப்
பரிமாறச் சென்றாள்! காளை
      மகிழ்ச்சியிற் பதைத்தி ருந்தான்.

நான்சிறு பையன் அல்லேன்
      நான்தந்தை! என்ம னைவி
தான்மூன்று திங்க ளாகக்
      கருவுற்றாள்! தாய்மை உற்றாள்!
வான்பெற்ற நிலவைப் போல
      வந்தொரு குழந்தை என்னைத்
தேன்பெற்ற வாயால் அப்பா
      எனத்தாவும் திங்கள் ஏழில்.

பெற்றதாய் மடியின் மீது
      யாழ்கிடப் பதுபோல் பிள்ளை
உற்றிடும்; அம்மா என்னும்;
      அவ்விசை, அமிழ்தின் ஊற்றாம்!
கற்றார்போல் அக்கு ழந்தை
      கண்டுதாய் கைப்பு றத்தில்
நற்றமிழ்ப் பால் குடிக்க
      நகர்த்தும்தன் சிவந்த வாயை.

அணைத்துக்கொண் டிடுவாள் அன்னை
      அமிழ்தச்செம் பினையும், தன்பால்
இணைஇதழ் குவிய உண்ணும்
      இளங்குழந் தையையும் சேர்த்தே
அணிமேலா டையினால் மூடி
      அவள்இடை அசைப்பாள்! அன்பின்
பணிகாண்பேன் வையம் பெற்ற
      பயனைக்கண் ணாரக் காண்பேன்.

எனப்பல வாறு வேடன்
      எண்ணத்தின் கள்அ ருந்தி
மனைநல்லாள் அழைக்கத் தேறி
      உணவுண்ண மகிழ்ந்து சென்றான்;
இனிதான உணவு நாவுக்
      கினிதாகும்; கருக்கொண் டாளின்
புனைமேனி காணு கின்றான்.
      புத்துயிர் காணு கின்றான்.

அகவல்

மகள்கரு வுற்ற மகிழ்ச்சிச் செய்தியை
மாவரசு தானும் மலர்க்குழல் தானும்
வில்லிய னூரில் சொல்லா இடம்எது?
நகைமுத்துக் கருவுற்ற நல்ல செய்தியை
அறிந்தோர் அனைவரும் வந்து வந்து
தத்தம் மகிழ்ச்சியும் வாழ்த்தும் தந்து
சென்றார்; அவர்கள் திண்ணையில் தன்னுடன்
அதையே பேசி அமர்ந்திரா ததுதான்
மாவர சுக்கு வருத்தம் தந்தது!

தெருவிற் செல்லும் மகளிரை அழைத்துக்
"கருவுற் றாள்என் கண்ணிகர் பெண்ணாள்;
காணச் சென்றேன் காலையில்; கண்டே
உடனே திரும்பினேன்; உடல்வலிக் கின்றதே
என்ன செய்யலாம்" என்பாள் மலர்க்குழல்;
வேலைக் காரிகள் வேறெது பேசினும்
பெண்கரு வுற்ற பெருமையே பேசுவாள்.
"இந்த வூட்டில் முந்திமுந் திஒரு
பேரன் பொறக்கப் போறான். ஆமாம்
இஞ்சி மொளைக்கப் போவுது. நல்ல
எலுமிச் சம்பழம் பழுக்க இருக்குது.
நல்ல வூட்டில் எல்லாம் பொறக்கும்
குடுகுடு குடுகுடு குடுகு டுகுடும்"
என்று குடுகுடுப்பைக் காரன் இயம்பினான்!
வழக்கம் போல்அவன் வந்து சொன் னாலும்
மலர்க்குழ லுக்கும் மாவர சுக்கும்
ஏற்பட்ட மகிழ்ச்சி இயம்பவோ முடியும்?
அழுக்குப் பழந்துணி அவன்கேட்டு நின்றான்.
புதுவேட்டி தந்து, 'போய்நா டோறும்
இதுபோல் சொல்லி இதுபோல் கொள்"என்று
மாவரசு சொன்னான்; மலர்க்குழல் சொன்னாள்;
எழில்வே டப்பனை ஈன்றோர் தாமும்
நகைமுத் தாளின் நற்றந்தை தாயாரும்
கருவுற் றாள்மேல் கண்ணும் கருத்துமாய்
நாளினை மகிழ்ச்சியோடு நகர்த்தி வந்தனர்.
பாளைச் சிரிப்பினாள் பசும்பொற் பலாப்பழம்
மடியிற் சுமந்தபடி, "பத்தாம் திங்களின்"
முடிமேல் தன்மலர் அடியை வைத்தாள்.
வில்லிய னூரை விட்டுத் தன்னருஞ்
செல்வி யுடனிருந்து மலர்க்குழல் செய்யும்
உதவி உடலுக்குயிரே போன்றது!
மாவரசு நாடோறும் வந்து வந்து
நாவர சர்களின் நல்ல நூற்களும்
ஓவியத் திரட்டும், உயர்சிற் றுணவும்,
வாங்கித் தந்து, மகள்நிலை கண்டு
போவான், உள்ளத்தைப் புதுவையில் நிறுத்தி;
நீடு மணிப்பொறி ஆடுங் காய்போல்
தங்கம், தன்வீடு தன்மகன் வீடு
நாடுவாள் மீள்வாள் மணிக்குநாற் பதுமுறை.
அயலவர் நாடும் அன்னை நாடும்
இனிப்பில் இருநூறு வகைபடச் செய்த
அமிழ்தின் கட்டிகள், அரும்பொருட் பெட்டிகள்
வாங்கி வந்து மணவழ கன்தான்
"இந்தா குழந்தாய்" என்றுநகை முத்துக்கு
ஈந்து போவான், இன்னமும் வாங்கிட!

கறந்தபால் நிறந்திகழ் கவின்உடை பூண்ட
மருத்து வச்சி நாடொறும் வருவாள்.
நகைமுத் தாளின் உடல்நிலை நாடித்
தகுமுறை கூறித் தாழ்வா ரத்தில்
இருந்தபடி இருப்பது கூடா தென்றும்
உலாவுக என்றும் உரைத்துச் செல்கையில்,
வீட்டின் வெளிப்புறத்து நின்று வேடப்பன்,
"நகைமுத் துடம்பு நன்று தானே?
கருவுயிர்ப் பதில்ஒரு குறை யிராதே?
சொல்லுக அம்மா, சொல்லுக அம்மா!"
என்று கேட்பான்; துன்பமே இராதென
நாலைந் துமுறை நவின்று செல்வாள்.

அயலகத்து மயில்நிகர் அன்புத் தோழிமார்
குயில்மொழி நகைமுத்தைக் கூடி மகிழ்ந்து
கழங்கு, பல்லாங் குழிகள் ஆடியும்
எழும்புகழ்த் திருக்குறள் இன்பம் தோய்ந்தும்
கொல்லை முல்லை மல்லிகை பறித்தும்
பறித்தவை நாரிற் பாங்குறத் தொடுத்தும்
தொடுத்தவை திருத்திய குழலிற் சூடியும்
பாடியும் கதைகள் பகர்ந்தும் நாழிகை
ஓடிடச் செய்வார் ஒவ்வொரு நாளும்;
நன்மகளான நகைமுத் துக்குப்
பிறக்க இருப்பது பெண்ணா ஆணா
என்பதை அறிய எண்ணி மலர்க்குழல்
தன்னெதிர் உற்ற தக்கார் ஒருவர்பால்
என்ன குழந்தை பிறக்கும் என்று
வீட்டு நடையில் மெல்லக் கேட்டாள்;
பெரியவர் "பெண்ணே பிறந்து விட்டால்
எங்கே போடுவீர்?" என்று கேட்டார்.
"மண்ணில் பட்டால் மாசுபடும் என்றுஎன்
கண்ணில் வைத்தே காப்பேன் ஐயா"
என்று மலர்க்குழல் இயம்பி நின்றாள்.
"ஆணே பிறந்தால் அதைஎன் செய்வீர்?"
என்று கேட்டார் இன்சொற் பெரியவர்.
"ஆணையும் அப்படி ஐயா" என்று
மலர்க்குழல் மகிழ்ந்து கூறி நின்றாள்.
"பெண்ணே ஆயினும் ஆணே ஆயினும்
பிறத்தல் உறுதி" என்றார் பெரியவர்.
இதற்குள் உள்ளே இருந்தோர் வந்தே
குறிகேட்ட மலர்க்குழல் கொள்கை மறுத்துச்
சிரித்தனர்! வீட்டினுள் சென்றார்.
வருத்தியது இடுப்புவலி நகைமுத் தையே.

எண்சீர் விருத்தம்

பறந்ததுபார் பொறிவண்டி சிட்டுப் போலப்
      பழக்கமுள மருத்துவச்சி தனைஅ ழைக்க!
உறவின்முறைப் பெண்டிர்பலர் அறைவீட் டுக்குள்
      ஒண்டொடியாள் நகைமுத்தைச் சூழ்ந்தி ருந்தார்;
நிறைந்திருந்தார் ஆடவர்கள் தெருத்திண் ணைமேல்;
      நிலவுபோல் உடைபுனைந்த மருத்து வச்சி
பொறிவண்டி விட்டிறங்கி வீட்டுட் சென்றாள்;
      புதியதோர் அமைதிகுடி கொண்ட தங்கே.

பேச்சற்ற நிலையினிலே உள்ளி ருந்து
      பெண்குழந்தை! பெண்குழந்தை!! என்ப தான
பேச்சொன்று கேட்கின்றார் ஆட வர்கள்;
      பெய்என்ற உலகுக்குப் பெய்த வான்போல்
கீச்சென்று குழந்தையழும் ஒலியும் கேட்டார்;
      கிளிமொழியாள் மலர்க்குழலும் வெளியில் வந்து
"மூச்சோடும் அழகோடும் பெண்கு ழந்தை
      முத்துப்போல் பிறந்ததுதாய் நலமே" என்றாள்.

அச்சமென்னும் பெருங்கடலைத் தாண்டி ஆங்கோர்
      அகமகிழ்ச்சிக் கரைசேர்ந்தார்! கடையி னின்று
மிச்சமுறக் கற்கண்டு கொண்டு வந்தார்;
      வெற்றிலையும் களிப்பாக்கும் சுமந்து வந்தார்;
மெச்சிடுவா ழைப்பழத்தின் குலைகொ ணர்ந்தார்;
      மேன்மேலும் வந்தார்க்கும் வழங்கி னார்கள்;
பச்சிளங் குழந்தைக்கும் தாய்க்கும் வாழ்த்துப்
      பாடினார் மகளிரெல்லாம் தாழ்வா ரத்தில்.

அறுசீர் விருத்தம்

ஈரைந்து திங்க ளாக
      அகட்டினில் இட்டுச் சேர்த்த
சீரேந்து செல்வந் தன்னை
      அண்டையிற் சேர்த்துத் தாய்க்கு
நேரேமெல் லாடை போர்த்து
      நிலாமுகம் வானை, நோக்க
ஓராங்கும் அசையா வண்ணம்
      கிடத்தியே ஒருபாற் சென்றார்.

சென்றஅம் மகளிர் தம்மில்
      தங்கம்போய்த் தன்ம கன்பால்
"உன்மகள் தன்னைக் காண
      வா" என அழைக்க லானாள்;
ஒன்றும்சொல் லாம லேஅவ்
      வேடப்பன் உள்ளே சென்றான்;
தன்துணை கிடக்கை கண்டான்;
      தாய்மையின் சிறப்புக் கண்டான்.

இளகிய பொன்உ ருக்கின்
      சிற்றுடல், இருநீ லக்கண்,
ஒளிபடும் பவழச் செவ்வாய்
      ஒருபிடிக் கரும்பின் கைகால்
அளிதமிழ் உயிர்பெற் றங்கே
      அழகொடும் அசையும் பச்சைக்
கிளியினைக் காணப் பெற்றான்
      கிடைப்பருஞ் செல்வம் பெற்றான்.

"நகைமுத்து நலமா" என்றான்
      "நலம்அத்தான்" என்று சொன்னாள்.
"துகளிலா அன்பே! மிக்க
      துன்பமுற் றாயோ!" என்றான்.
"மிகுதுன்பம் இன்பத் திற்கு
      வேர்" என்றாள். களைப்பில் ஆழ்ந்தாள்.
"தகாதினிப் பேசல், சற்றே
      தனிமைகொள்" என்றான்; சென்றான்.

சிற்சில நாட்கள் செல்ல
      நகைமுத்து நலிவு தீர்ந்தாள்;
வெற்பினில் எயில்சேர்ந் தாற்போல்
      மேனியில் ஒளியும் பெற்றாள்.
கற்பாரின் நிலையே யன்றிக்
      கற்பிப்பார் நிலையும் உற்றாள்!
அற்றைநாள் மகளும் ஆகி
      அன்னையும் ஆனாள் இந்நாள்.

பெயர்சூட்டு விழாந டத்த
      அறிவினிற் பெரியோர் மற்றும்,
அயலவர் உறவி னோர்கள்
      அனைவர்க்கும் அழைப்புத் தந்தார்.
வெயில்முகன் வேடப் பன்தன்
      வீடெலாம் ஆட வர்கள்
கயல்விழி மடவார் கூட்டம்
      கண்கொள்ளாக் காட்சி யேஆம்.

ஓவியப் பாயின் மீதில்
      உட்கார்ந்தோர் மின்இ யக்கத்
தூவிசி றிக்காற் றோடு
      சூழ்பன்னீர் மணமும் பெற்றார்.
மூவேந்தர் காத்த இன்ப
      முத்தமிழ் இசையுங் கேட்டார்.
மேவும்அவ் வவையை நோக்கி
      வேடப்பன் வேண்டு கின்றான்.

"தோழியீர் தோழன் மாரே,
      வணக்கம்!நற் றூய்த மிழ்தான்
வாழிய! அழைப்பை எண்ணி
      வந்தனிர்; உங்கள் அன்பு
வாழிய! இந்த நன்றி
      என்றும்யாம் மறப்போம் அல்லோம்.
ஏழையோம் பெற்ற பெண்ணுக்கு
      இடுபெயர் விழாநன் றாக!

இவ்விழாத் தலைமை தாங்க
      இங்குள்ள அறிவின் மூத்தோர்
செவ்விதின் ஒப்பி எங்கள்
      செல்விக்குப் பெயர் கொடுக்க!
எவ்வெவர் வாழ்த்தும் நல்க!
      இறைஞ்சினோம்" என்ற மர்ந்தான்.
"அவ்வாறே ஆக" என்றே
      நகைமுத்தும் உரைத் தமர்ந்தாள்.

அங்குள்ள அறிவின் மூத்தோர்
      அவையிடைத் தலைமை பெற்றே,
"இங்குநம் நகைமுத் தம்மை
      வேடப்பர் இளம்பெண் ணுக்கே
உங்களின் சார்பில் நான்தான்
      ஒருபெயர் குறிப்பேன்" என்றார்.
"அங்ஙனே ஆக" என்றார்
      அவையிடை இருந்தோர் யாரும்.

அப்போது நகைமுத் தம்மை
      அணிமணி ஆடை பூண்டு
முப்பாங்கு மக்கள் காண
      முத்துத்தேர் வந்த தென்னக்
கைப்புறம் குழந்தை என்னும்
      கவின்தங்கப் படிவம் தாங்கி
ஒப்புறு தோழி மார்கள்
      உடன்வர அவைக்கண் வந்தாள்.

கரும்பட்டு மென்மயிர் போய்க்
      காற்றொடும் ஆடக் கண்டோர்.
விரும்பட்டும் என்று சின்ன
      மின்நெற்றிக் கீழ்இ ரண்டு
சுரும்பிட்ட கருங்கண் காட்டி
      எறும்புகொள் தொடர்ச்சி போலும்
அரும்பிட்ட புருவம் காட்டி
      அழகுகாட் டும்கு ழந்தை!

எள்ளிளஞ் சிறிய பூவை
      எடுத்துவைத் திட்ட மூக்கும்
வள்ளச்செந் தாம ரைப்பூ
      இதழ்கவிந் திருந்த வாய்ப்பின்
அள் இரண் டும்சி வப்பு
      மாதுளை சிதறச் சிந்தும்
ஒள்ளிய மணிச்சி ரிப்பும்
      உவப்பூட்டும் பெண்கு ழந்தை.

அன்னையி னிடத்தி னின்று
      வேடப்பன், அருமைச் செல்வி
தன்னைத்தன் கையால் வாங்கித்
      தமிழ்ப்பெரி யார்பால் தந்தான்.
"என்அன்பே இளம்பி ராட்டி"
      எனவாங்கி அணைத்து, மற்றும்
முன்னுள்ளார் தமக்கும் காட்டி,
      முறைப்பட மொழிய லுற்றார்;

"வானின்று மண்ணில் வந்து
      மக்களைக் காக்கும்; அ·து
தேன்அன்று; கரும்பும் அன்று;
      செந்நெல்லின் சோறும் அன்று;
ஆன்அருள் பாலும் இன்றே;
      அதன்பெயர் அமிழ்தாம்! தொன்மை
ஆனபே ருலகைக் காக்க
      அமிழ்வதால் மழைய· தேயாம்.

தமிழரின் தமிழ்க்கு ழந்தை
      தமிழ்ப்பெயர் பெறுதல் வேண்டும்.
அமையுறும் மழைபோல் நன்மை
      ஆக்கும்இக் குழந்தைக் கிந்நாள்
அமிழ்தென்று பெயர் அமைப்போம்
      அமிழ்தம்மை நாளும் வாழ்க!
தமிழ்வாழ்க! தமிழர் வாழ்க!"
      என்றனர் அறிவில் மூத்தார்.

"அமிழ்தம்மை வாழ்க!" என்றே
      அனைவரும் வாழ்த்தி னார்கள்.
அமிழ்தம்மைப் பெயர்ப்பு னைந்த
      அன்புறு குழந்தை தன்னை
எமதன்பே எனவே டப்பன்
      இருகையால் வாங்கி யேதன்
கமழ்குழல் நகைமுத் தின்பால்
      காட்டினான் கையால் அள்ளி.

அமிழ்தம்மா எனஅ ணைத்தே
      அழகிக்கு முத்தம் தந்தாள்!
தமிழர்க்கு நன்றி கூறி
      வெற்றிலை பாக்குத் தந்து
தமிழ்பாடி இசைந டத்தி
      வேடப்பன் தன்கை கூப்ப
"அமிழ்தம்மை நாளும் வாழ்க",
      எனச்சென்றார் அனைவர் தாமும்.

இருகாலைச் சப்ப ளித்தே
      இடதுகைப் புறத்தில், அன்பு
பெருகிடத் தலையை ஏந்திப்
      பின்உடல் மடியில் தாங்கி
மருவியே தன்பாற் செப்பு
      வாய்சேர்த்து மகள்மு கத்தில்
ஒருமுத்து நகைமுத் தீந்தாள்.
      உடம்பெல்லாம் மகிழ்முத் தானாள்.

அமிழ்துண்ணும் குழந்தை வாயின்
      அழகிதழ் குவிந்தி ருக்கும்
கமழ்செந்தா மரைய ரும்பு
      கதிர்காண அவிழ்மு னைபோல்!
தமிழ்நலம் மனத்தால் உண்பார்
      விழிஒன்றிற் சார்வ தில்லை;
அமிழ்துண்ணும் குழந்தை கண்ணும்
      அயல்நோக்கல் சிறிதும் இல்லை.

உண்பது பிறகா கட்டும்
      உலகைப்பார்க் கின்றேன் என்று
துண்ணென முகம்தி ருப்பித்
      தூயதாய் முகமே காணும்;
கண்மகிழ் திடும்செவ் வாயின்
      கடைமகிழ்ந் திடும்;இவ் வையம்
உண்மையாய்த் தன்தாய் என்றே
      உணர்வதால் உளம்பூ ரிக்கும்.

விரிவாழைப் பூவின் கொப்பூழ்
      வெள்விழி யின்மேல் ஓடும்
கருவண்டு விழியால் சொல்லும்
      கதைஎன்ன என்றாள் அன்னை;
சிரித்தொரு பாட்டுச் சொல்லித்
      திரும்பவும் மார்ப ணைந்து
பொருட்சிறப் பையும்வி ளக்கும்
      பொன்னான கைக்கு ழந்தை.


"மண்ணாண்ட மூவேந் தர்தம்
      மரபினார் என்ம ணாளர்
பெண்ணாளுக் களித்த இன்பப்
      பயனாய்இப் பெருவை யத்தார்
உள்நாண அழகு மிக்க
      ஒருமகள் பெற்றேன்" என்றே,
எண்ணியே அன்னை தன்'பால்'
      உண்பாளின் முகத்தைப் பார்த்தாள்.

மணிவிழி இமையால் மூடி
      உறக்கத்தில் நகைம றைத்துத்
தணிவுறும் தமிழர் யாழ்போல்
      தன்மடி மேல்அ மைந்த
அணியுடல் குழந்தை கண்டாள்
      அன்புடன் இருகை ஏந்திப்
பணியாளர் செய்த தொட்டிற்
      பஞ்சணை வளர்த்த லானாள்.

ப·றொடை வெண்பா

தன்மகளின் பெண்ணைத் தனிப்பெருமைப் பேர்த்திதனை
இன்ப அமிழ்தை இணையற்ற ஓவியத்தைத்
தங்கம் எடுத்துத் தலையுச்சி தான்மோந்து
மங்கா மகிழ்ச்சியினால் மார்போ டணைத்திருந்தாள்!

அங்கந்த வேளையிலே அன்பு மகள்பெற்ற
திங்கட் பிறையைச் செழுமணியைப் பேர்த்திதனைக்
காண மலர்க்குழலும் வந்தாள் கடிதினிலே!
பாட்டிமார் வந்தார் பழம்பாட்டுப் பாடிடுவார்

கேட்டு மகிழலாம் என்று கிளிப்பேச்சுத்
தோழிமார் தாழ்வாரத் தொட்டிலண்டை வந்தமர்ந்தார்.
உள்ளவர்கள் எல்லாரும் தங்கத்தின் கைப்புறத்தில்
உள்ள குழந்தை யுடன்கொஞ்ச முந்துவதைத்

தங்கம் அறிந்தாள் தனதிடத்தில் உள்ள ஒரு
பொங்கும் அமிழ்தைப் பொன்னான தொட்டிலிலே
இட்டாள் நகைமுத்தை இன்னிசையால் தாலாட்ட
விட்டாள் விளைந்த தொருபாட்டு.

தாயின் தாலாட்டு

பொன்னே மணியே புதுமலரே செந்தேனே
மின்னே கருவானில் வெண்ணிலவே கண்ணுறங்கு!

தன்னே ரிலாத தமிழே தமிழ்ப்பாட்டே
அன்னைநான்; உன்விழியில் ஐயம் ததும்புவதேன்?

என்பெற்ற அன்னையார் உன்பாட்டி இன்னவர்கள்
உன்தந்தை அன்னை உயர்பாட்டி இன்னவர்கள்!

என்னருமைத் தோழிமார் உன்தாய்மார் அல்லரோ?
கன்னற் பிழிவே கனிச்சாறே கண்ணுறங்கு!

சின்னமலர்க் காலசையச் செங்கை மலர்அசைய
உன்கண் உரைப்பதென்ன என்கண்ணே கண்ணுறங்கு!

தோழிமார் தாலாட்டு

தொகைமுத்துத் தொங்கலிட்ட தொட்டிலிலே அன்பே
நகைமுத்தின் பெண்ணான நன்முத்தே மானே!

தகையாளர் வையத்தில் தந்த திருவே
தொகைபோட்டு வாங்க ஒண்ணாத் தூய்அமிழ்தே கண்வளராய்!

கன்னங் கரிய களாப்பழத்தின் கண்ணிரண்டும்
சின்னஞ் சிறிய ஒளிநெற்றித் தட்டிலிட்டே

இன்னும் எமக்கே இனிப்பூட்டிக் கொண்டிருந்தால்
பொன்"உறக்க நாடு" புலம்பாதே கண்மணியே!

தங்கத் திருமுகத்தின் தட்டினிலே உன்சிரிப்பைப்
பொங்கவைத்தே எம்உளத்தைப் பொங்கவைத்துக் கொண்டிருந்தால்

திங்கள் முகத்துன் சிரிப்போடு தாம்கொஞ்ச
அங்"குறக்க நாட்டார்" அவாமறுத்த தாகாதோ?

செங்காந்த ளின்அரும்போ சின்னவிரல்? அவ்விரலை
அங்காந்த வாயால் அமிழ்தாக உண்கின்றாய்!

கொங்கை அமிழ்து புளித்ததோ கூறென்றால்
தெங்கின்பா ளைச்சிரிப்புத் தேனை எமக்களித்தாய்!

பஞ்சுமெத்தைப் பட்டு பரந்த ஒரு மேல்விரிப்பில்
மிஞ்சும் மணமலரின் மேனி அசையாமல்

பிஞ்சுமா விண்விழியைப் பெண்ணே இமைக்கதவால்
அஞ்சாது பூட்டி அமைவாகக் கண்ணுறங்காய்!

தங்கத்துப் பாட்டி தாலாட்டு

ஆட்டனத்தி யான அருமை மணாளனையே
ஓட்டப் புனற்கன்னி உள்மறைத்துக் கொண்டுசெல்லப்

போதுவிழி நீர்பாயப் போய்மீட்டுக் கொண்டுவந்த
ஆதிமந்தி கற்புக் கரசியவள் நீதானோ?

செல்வத் தமிழ்வேந்தர் போற்றும் செந்தமிழான
கல்விக் கரசி கலைச்செல்வி ஔவை

இனியும் தமிழ்காத்தே இந்நாட்டைக் காக்க
நினைத்துவந்தாள் என்னிலவள் நீதானோ என்கிளியே?

நாட்டு மறவர்குல நங்கையரைச் செந்தமிழின்
பாட்டாலே அமிழ்தொக்கப் பாடிடுவாள் நற்காக்கைப்

பாடினியார் நச்செள்ளை பார்புகழும் மூதாட்டி
கூடி உருவெடுத்தார் என்றுரைத்தால் நீதானோ?

அண்டும் தமிழ்வறுமை அண்டாது காக்கவந்த
எண்டிசையும் போற்றும் இளவெயினி நீதானோ?

தக்கபுகழ்ச் சோழன் தறுகண்மை பாடியவள்
நக்கண்ணை என்பவளும் நீதானோ நல்லவளே!

கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முற்றோன்றி மூத்த குடியின் திருவிளக்கே!

சற்றேஉன் ஆடல் தமிழ்ப்பாடல் நீநிறுத்திப்
பொற்கொடியே என்னருமைப் பொன்னேநீ கண்ணுறங்காய்!

மலர்குழல் பாட்டி தாலாட்டு

உச்சி விளாம்பழத்தின் உட்சுளையும் கற்கண்டும்
பச்சைஏ லப்பொடியும் பாங்காய்க் கலந்தள்ளி

இச்இச்சென உண்ணும் இன்பந்தான் நீ கொடுக்கும்
பிச்சை முத்துக் கீடாமோ என்னருமைப் பெண்ணரசே!

தஞ்சைத் தமிழன் தரும்ஓ வியம்கண்டேன்
மிஞ்சு பலிவரத்தின் மின்னும்கல் தச்சறிவேன்

அஞ்சுமுறை கண்டாலும் ஆவலறா உன்படிவம்
வஞ்சியே இப்பெரிய வையப் படிவமன்றோ

முகிழாத முன்மணக்கும் முல்லை மணமும்
துகள்தீர்ந்த சந்தனத்துச் சோலை மணமும்

முகநிலவு மேலேநான் உன்உச்சி மோந்தால்
மகிழ மகிழ வருமணத்துக் கீடாமோ?

தமிழர் தனிச்சிறப்பு யாழின் இசையும்
குமிக்கும் ஒருவேய்ங் குழலின் இசையும்

தமிழின் இசையும் சரியாமோ, என்றன்
அமிழ்தே, மலர்வாய்நீ அங்காப்பின் ஓசைக்கே;

இன்பத்து முக்கனியே என்னன்பே கண்ணுறங்கு
தென்பாண் டியர்மரபின் செல்வமே கண்ணுறங்காய்!

பிள்ளையைத் தூக்கும் முறை

அகவல்

நடுப்பகல் உணவுக்கு நல்வே டப்பன்
இல்லில் நுழைந்தான் "என்கண் மணியே
என்றன் அமிழ்தே" என்று கூவியபடி!
மைப்புரு வத்து மங்கை நகைமுத்துக்
கைப்புறத் தில்தன் கட்டழகு சுமந்து
வந்துதாழ் வாரத்தில் மணவாளனிடம்
காட்டி நின்றாள்! கண்டவே டப்பன்
அடங்கொணா மகிழ்ச்சியால் அருமை மகளை
எடுக்க விரைந்தான். "அதுதான் இயலாது!
கொள்அன்று; கொத்த மல்லி அன்று;
பிள்ளை அத்தான்" என்றாள் பெற்றவள்.
"பிள்ளையைத் தூக்கும் பெருந்திறம் தானும்
கொள்ளவே சொல்லிக் கொடு"வெனக் கேட்டான்.
வேடப்ப னுக்கு விளக்குவாள் துணைவி:
"ஆழியில் உருவமான அழகுமட் கலத்தை
இயற்றி யோர்க்கே எடுப்பது முடியும்;
சுட்டமட் கலத்தை எவரும் தூக்கலாம்!
இறுகா அமிழ்தின் இளகல் உடம்பை
உறுத்தாமல் தூக்க ஒருதிறம் வேண்டும்.
இன்னும் சொல்வேன் நன்று கேட்க:
குளநீர்த் தாமரை குழந்தையின் இளந்தலை!
அம்மலர்த் தண்டே அழகிய 'மெல்லுடல்'
தண்டுடல் மலர்த்தலை தாங்குமோ அத்தான்?
தலைஉடல் இரண்டையும் ஒருங்கு தாங்கி
உலைஅமிழ்தை வறியவள் ஒருத்திதூக் கல்போல்
தவறாது தூக்குவது தலையா கியகடன்
தெரிந்ததா அத்தான்" என்றாள் தெரிவை;
"கற்றேன் கணக்கா யரேகற் றபடி
நிற்கும் படியும் நிகழ்த்துக" என்றான்.
தூக்கிக் காட்டினாள் தோகை
தூக்கினான். "சரி" எனச் சொன்னாள் துணைவியே.

தந்தையின் தவறு

அறுசீர் விருத்தம்

வேடப்பன் உணவ ருந்தி
      மகளோடு விளையா டற்குக்
கூடத்தில் வந்து பார்த்தான்
      தூங்கிடும் குழந்தை கண்டான்!
தேடக்கி டைத்தல் இல்லாச்
      செல்வமே என்றெ டுத்தான்
வாடப் புரிந்த தாலே
      மகள்வீறிட் டழுதல் கண்டான்.

நகைமுத்து விரைந்து வந்தாள்
      "குழந்தையின் நலிவு நீங்கத்
தகும்படி தொட்டில் தன்னில்
      தாலாட்டித் தூங்கச் செய்தேன்;
அகத்தினில் அன்பு கொண்டீர்
      ஆயினும் குழந்தை தன்னை
மிகத்துன்பம் அடையச் செய்தீர்;
      விலக்கஇச் செய்கை" என்றாள்.

"குழந்தைதான் தூங்கும் போது
      எழுப்பினால் குற்ற மென்ன?
அழுதிடும் குழந்தைக் கான
      ஆறுதல் தூக்கந் தானோ?
ஒழுங்கோடு குழந்தை ஓம்பல்
      உனக்குத்தான் தெரியும் போலும்!
முழங்காதே பேச்சை வாயை
      மூடென்றான்" வேடப் பன்தான்.

அன்புள்ள துணைவன் ஆங்கே
      இதுசொல்லிக் கடைக்குச் சென்றான்;
துன்புற்றாள் நகைமுத் தாளும்
      துணைவரின் சினமே எண்ணி;
என்பெற்ற குழந்தைக் காகத்
      துணைவரின் வெறுப்பை ஏற்றேன்;
அன்பரைத் திருத்து தற்கும்
      அன்புதான் தூண்டிற் றென்னை.

இப்படி நினைத்தா ளாகி
      இல்லத்துப் பணிமு டித்தும்
கைப்புறக் குழந்தை தன்னைத்
      தோளிலே போட்டுக் காத்தும்
அப்புறம் பகலைத் தள்ளி
      இரவினில் அன்ப னுக்கே
ஒப்புறத் துணைபு ரிந்தும்
      இரவினில் உறங்கச் சென்றாள்.

படுக்கையின் விரிப்பு மாற்றிப்
      பக்கத்தில் குழந்தைக் கான
துடைக்கின்ற துணிகள் தேடித்
      தூயபல் விரிப்பும் தேடி
விடிவி ளக்கும் திருத்தி
      விலாப்புறத் திற்கு ழந்தை
குடித்தபால் எடுத்தல் கண்டு
      குட்டையால் தூய்மை செய்தே;

உடலினை ஒருக்க ணித்தே
      குழந்தையை மார்போ டொட்டித்
தடமலர் வலக்கை தன்னைத்
      தலைக்கணை மீது வைத்தும்
இடதுகை குழந்தை மேலே
      வில்லைப்போல் வளைய இட்டும்
கடுகள வசைதல் இன்றிக்
      கண்வளர் கின்றாள் அன்னை!

தாய்மையின் ஆற்றல்

அன்றுநள் ளிரவில் வேடன்
      விழித்தனன்; அருகில் உள்ள
தன்மனை தன்கு ழந்தை
      நிலைமையை நோக்க லானான்;
"என்மனை ஒருக்க ணித்தே
      இடக்கையைக் குழந்தை மீதில்
சின்னக் கூடார மாக்கிச்
      சேல்விழி துயில்கின் றாளே.

ஒருநூலே புரண்டா ளேனும்,
      தெருவினை ஒக்கச் செய்யும்
உருளையின் கீழ்ம லர்போல்
      ஒழியுமே பெற்ற பிள்ளை!
தெரியவே இல்லை இ·து
      தெரிவைக்கே" எனவே டப்பன்
அருகிலே அமர்ந்தி ருந்தான்
      அகன்றிட மனம்வ ராமல்!

மங்கையை எழுப்பு தற்கு
      வழியன்று கண்ட றிந்தான்:
அங்கவள் களைந்தெ றிந்த
      மலர்கண்ணி யைஅன் னாளின்
திங்களின் முகத்தில் போட்டான்!
      சேயிழை விழித்தா ளில்லை.
இங்கினிக் குழந்தை தன்னை
      எழுப்புவேன் என நினைந்தே;

மலர்கண்ணி தனில்அ விழ்ந்த
      மலரிதழ் ஒன்றைத் தூக்கம்
கலைத்திடக் குழந்தை மீது
      போட்டனன்! தாயின் கைதான்
மலரிதழ் தனைத் துடைத்து
      மற்றும்தன் இடம்போ யிற்றே!
தலைவனோ இதனைக் கண்டான்;
      தாய்மையின் ஆற்றல் கண்டான்.

தலைவிக்கு மதிப்புச் செய்தான்;
      தாய்மைக்கு வணக்கம் செய்தான்.
இலைஎன்பால் குழந்தை காக்கும்
      ஆற்றல்எட் டுணையும் என்றான்;
தலைமட்டும் இரண்டென் றாலும்
      குழந்தையும் தாயும் ஒற்றைக்
குலையேயாம்; உயிரும் ஒன்றே!
      உள்ளத்தின் கூறும் ஒன்றே!

எனக்கென்ன தெரியும் தாய்க்கும்
      இளங்குழந் தைக்கு முள்ள
மனத்திடத் தொடர்பு? மற்றும்
      வாயினாற் பேசார்; தாயும்
தனதரும் குழந்தை தானும்
      கண்ணாலும் மனத்தி னாலும்
தனித்துப்பே சிக்கொள் கின்றார்
      என்றுபோய் தான்து யின்றான்.

ஓராண்டு

வான்பார்த்துக் கிடந்த மேனி
      மண்பார்த்துக் கவிழ்ந்தும், பின்னர்
தேன்பார்த்த மலர்க்கை யூன்றிச்
      செம்மையாய்த் தவழ்ந்தும் நின்றும்
தான்பார்க்க அங்கும் இங்கும்
      தள்ளாடி நடந்தும், கெண்டை
மீன்பார்த்த கண்ணாள் பெண்ணாள்
      ஓராண்டு மேவல் உற்றாள்.

பட்டுப்பா வாடை கட்டிப்
      பச்சைப்பூச் சட்டை இட்டுக்
கட்டிய முல்லைக் கண்ணி
      கரும்பாம்பின் பின்னல் தன்னில்
நெட்டுறச் சூட்டி, நெற்றி
      நேர்உறச் சுட்டி வைத்து,
விட்டனள் அமிழ்தை ஆடத்
      தாழ்வார மீதில் அன்னை!

ஓடி வா

சிந்து கண்ணி

அமிழ்தே அமிழ்தே ஓடிவா-என்
அன்பின் விளைவே ஓடிவா
தமிழின் சுவையே ஓடிவா-என்
தங்கப் பாப்பா ஓடிவா
கமழும் பூவே ஓடிவா-என்
கண்ணின் மணியே ஓடிவா
குமியும் புகழே ஓடிவா-என்
குத்து விளக்கே ஓடிவா

பச்சைக் கிளியே ஓடிவா-என்
பாடும் தும்பி ஓடிவா
அச்சுப் பெண்ணே ஓடிவா-என்
ஆடும் கொடியே ஓடிவா
மெச்சும் குயிலே ஓடிவா-என்
விரியும் சுடரே ஓடிவா
தச்சுத் திறமை ஓடிவா-என்
தங்கப் புதையே ஓடிவா

வள்ளத் தேனே ஓடிவா-என்
வானம் பாடி ஓடிவா
வெள்ளப் பாலே ஓடிவா-என்
வீட்டு விளக்கே ஓடிவா
துள்ளும் கன்றே ஓடிவா-என்
தோகை மயிலே ஓடிவா
அள்ளும் சுளையே ஓடிவா-என்
அன்பின் கனியே ஓடிவா

முத்து நிலாவே ஓடிவா-என்
மும்மைத் தமிழே ஓடிவா
கத்தும் கடலே ஓடிவா-என்
கட்டிக் கரும்பே ஓடிவா
தொத்தும் கிளியே ஓடிவா-என்
தூண்டா விளக்கே ஓடிவா
கொத்துப் பூவே ஓடிவா-என்
குழந்தை அமிழ்தே ஓடிவா

செல்வப் பொருளே ஓடிவா-என்
செந்தா மரையே ஓடிவா
கல்விப் பொருளே ஓடிவா-என்
காவிரி ஆறே ஓடிவா
முல்லைக் கொடியே ஓடிவா-என்
மூசைத் தங்கம் ஓடிவா
அல்லிப் பூவே ஓடிவா-என்
அன்பின் அமிழ்தே ஓடிவா

தென்றற் காற்றே ஓடிவா-என்
செவ்விள நீரே ஓடிவா
குன்றாச் சுவையே ஓடிவா-என்
கொள்ளா அழகே ஓடிவா
ஒன்றா உணர்வே ஓடிவா-என்
ஓவியக் கனவே ஓடிவா
மன்றின் மணியே ஓடிவா-என்
மல்லிகை மலரே ஓடிவா

பாடும் சிட்டே ஓடிவா-என்
பருகும் சாறே ஓடிவா
நாடும் திருவே ஓடிவா-என்
நடைஓ வியமே ஓடிவா
சூடும் தாரே ஓடிவா-என்
சோலை நிழலே ஓடிவா
வாடா மலரே ஓடிவா-என்
வஞ்சிக் கொடியே ஓடிவா

தண்டை குலுங்க ஓடிவா-என்
சங்கத் தமிழே ஓடிவா
கெண்டை விழியே ஓடிவா-என்
கிள்ளை மொழியே ஓடிவா
பெண்டிர்க் கரசி ஓடிவா-என்
பேறே உயிரே ஓடிவா
ஒண்டொடியாளே ஓடிவா-என்
ஓடைப் புனலே ஓடிவா

அறுசீர் விருத்தம்

வேடப்பன் வந்தான் அங்கே
      விளையாடும் குழந்தை கண்டான்;
ஓடச்செய் கின்றாய் காலும்
      ஓயாதோ குழந்தைக் கென்றான்;
கோடைக்குக் குளிரே 'நான் ஓர்
      குதிரை, நீஅரசி' என்றான்;
கூடத்தில் மண்டி போட்டான்
      குழந்தையை முதுகில் கொண்டான்.

அப்பாக் குதிரை

சிந்துக் கண்ணி

அப்பாக் குதிரை ஆட்டக் குதிரை
அஞ்சாக் குதிரை ஏய் ஏய் ஏய்
தப்பாக் குதிரை தாவும் குதிரை
தளராக் குதிரை ஏய் ஏய் ஏய்
சப்பைக் குதிரை இல்லை இல்லை
தமிழக் குதிரை ஏய் ஏய் ஏய்
ஒப்பும் குதிரை ஓயாக் குதிரை
ஒற்றைக் குதிரை ஏய் ஏய் ஏய்!

பேசும் குதிரை பெருத்த குதிரை
பிழையாக் குதிரை ஏய் ஏய் ஏய்
தோசைக் குதிரை சோற்றுக் குதிரை
சோராக் குதிரை ஏய் ஏய் ஏய்
மீசைக் குதிரை வெற்றிக் குதிரை
வேட்டைக் குதிரை ஏய் ஏய் ஏய்
தேசுக் குதிரை தெற்குக் குதிரை
சேரன் குதிரை ஏய் ஏய் ஏய்!

சோறூட்டல்

அகவல்

உருக்கிய நெய்யும் பருப்பும் இட்ட
சோற்றுடன் மிளகுநீர் துளியள வூற்றிச்
சிறிய வள்ளத்தில் சேர்த்தெ டுத்துக்
குழந்தைக்குக் காக்கை காட்டி
விழுங்க வைப்பாள் மென்னகை முத்தே.

சிந்து கண்ணி

காக்கா காக்கா கண்ணாட்டி
கைப்பிள் ளைக்குச் சோறூட்டி
பாக்கியை நீஅள் ளிக்கொண்டே
பறந்து போஎன் கற்கண்டே.
ஆக்கிய சோறென் சிட்டுக்கே
அதுவா வேண்டும் எட்டிப்போ
தூக்கிக் கொண்டா போய்விடுவாய்?
சுருக்காய் வாங்கும் இன்னொருவாய்.

உன்வாய் பெரிய ஒளிவாயாம்
ஒண்டொடி வாய்தான் கிளிவாயாம்
தன்னால்உண்ணும் என்தங்கம்
தண்ணீர் குடிக்க வா அஞ்சும்?
சொன்னால் கேட்கும் என்பட்டும்
சோற்றை உண்ணும் இம் மட்டும்
இன்னும் காக்கா நெருங்கிவா
இதையும் உண்டு பறந்துபோ.

நிலாக் காட்டல்

அறுசீர் விருத்தம்

மேற்றிசை ஒளிவெள் ளத்தில்
      வீழ்ந்தது செங்க திர்போய்த்
தூற்றிய முத்துக் கொல்லை
      முழுநிலாத் தோற்றம் கண்டார்
காற்றிலோர் குளிரும் கண்டார்
      மாடியில், நிலாமுற் றத்தில்
ஏற்றினார் அமிழ்தைப் பெற்றார்
      எழில்நிலாக் காட்டு கின்றார்.

சிந்துக் கண்ணி

நிலா நிலா வாவா-ஒளி
நிறைவி ளக்கே வா வா
உலா வினாய் விண்ணில்-நீ
ஒளிபு ரிந்தாய் கண்ணில்
குலா வலாம் நாட்டில்-இனிக்
கொஞ்ச லாம்என் வீட்டில்
பலா மரம் உண்டு-நற்
பழமெ லாம்கற் கண்டு
நிலா நிலா வாவா-ஒளி
நிறைவி ளக்கே வாவா

அழகெ லாம்எ னக்கே-என்
அன்பெ லாம்உ னக்கே
முழுநி லாஎன் பூவே-உன்
முத்த மொன்று தேவை
பழக லாம்இ றங்கு-நற்
பைந்த மிழுண் டிங்கு
விழியி லேஒ ளிர்ந்தாய்-என்
மெய்யி லேகு ளிர்ந்தாய்
நிலா நிலா வாவா-ஒளி
நிறைவி ளக்கே வாவா

வானம் நீலத் தோப்பு-நீ
மங்கா தமத் தாப்பு
கூனி மீன்கள் மின்னும்-ஒளிக்
குட்டை நீஎன் றெண்ணும்
சீனத் துப்பால் கோப்பை-நீ
சிரிப்பு முகத்தையும் சாய்ப்பை
கானல் வெளியும் குளிரும்-கண்
காண மனமும் ஒளிரும்
நிலா நிலா வாவா-ஒளி
நிறைவி ளக்கே வாவா

விண்ணக் கடலில் தெப்பம்-நீ
விரித்த இலையில் அப்பம்
உண்ணக் குவித்த தளியல்-நீ
உரித்த கிழங்கின் அளியல்
பண்ணும் வெள்ளித் தட்டு-நீ
பச்ச ரிசியின் பிட்டு
வெண்பட் டான குடையே-நீ
விழுங்கி டும்பா லடையே
நிலா நிலா வாவா-ஒளி
நிறைவி ளக்கே வாவா

பேச்சு

அகவல்

மரப்பா வைகள் வைத்துவிளை யாடும்
அமிழ்தொடு நகைமுத் தமர்ந்தி ருந்தாள்;
மாவரசும் வந்தான்; மகள்வர வேற்றாள்
அமிழ்தை நோக்கி"நான் யாரம்மா?" என்றான்.

அமிழ்தம் "ஐயா" என்றாள். அதனால்
குன்றி யதுமுகம் கொதித்தது நெஞ்சம்
மாவர சுக்கு! மகளை நோக்கி
'யான் அயலானா? ஏன்என்னைத் தாத்தா
என்று சொல்ல வில்லை' என்றான்.
அதுகேட்டுத் "தாத்தா" என்றாள் அமிழ்து.
முகமும் மலர்ந்தது! மாவரசுக்(கு)
அகமும் மலர்ந்தது! நகைமுத்தும் அங்ஙனே!

தேவை

அகவல்

காலை உணவுண்டு கடைக்குப் புறப்படும்
வேடன் "என்ன வேண்டும்" என்றான்;
அமிழ்துதன் தேவையை அறிவிக் கின்றாள்;
"கோழி" "நாயிக் குட்டி" "அம்மா"
இதுகேட்டு நகைமுத் தியம்பு கின்றாள்;
"அத்தான் குழந்தை, 'அம்மா' என்றால்
என்போல் இன்னுமோர் அம்மா
அன்று கேட்டது! பொம்மை அம்மாவே."


குறளில் கோயில் இல்லை

அகவல்

நாடி முத்து வேடப் பனிடம்
"இன்றி யமையா ஒன்றுக் காகக்
கடன்பத்து ரூபாய் கொடு"வென்று கேட்டான்;
வேடன் கொடுப்பதாய் விளம்பினான்.அதற்குள்
அமிழ்து, திருக்குறள் ஒன்றை அங்கையில்
தூக்கி வந்து தொப்பென்று போட்டுக்
"கோவிலு காட்டுப்பா" என்று கூறினாள்.
"குறளில் கோயிலே இல்லை யம்மா"
என்றான் வேடன். இதனைக் கேட்ட
நாடி முத்து நவிலு கின்றான்:
"தில்லைக் கோயிலுக்குச் செல்ல எண்ணியே
பத்து ரூபாய் பணம்உன்னைக் கேட்டேன்.
கோயில் இல்லையா குறளில்?
ஆயில்என் பணத்துக் கில்லை அழிவே!"

சேறும் சோறும் தேன்

அகவல்

அறையில் தூங்கி யிருந்த அமிழ்து,
சிறகுவிரித் துதறிச் செங்கா லன்னம்
நடைதொடங் கியதென நடந்து, தாழ்வாரத்(து)
இடையி லிருந்த மைக்கூட்டை எடுத்து
கொல்லையில் முல்லைக் கொடியின் அடியில்
சாய்த்து நீலம் சார்ந்த சேற்றால்
சிற்றில் ஒன்று செய்து முடித்தபின்
தந்தை உண்ணும் தயிரின் சோற்றை
அங்கையால் அள்ளி ஆஆ என்றாள்!
அப்பனும் வாய்திறந் ததைவாங்கி உண்டான்;
தொடர்ந்து நடந்த திந்தத் தொண்டு,
சின்னவள் அன்னை யான திறத்தை
நகைமுத்துக் கண்டு மிகமகிழ்ந் திருந்தாள்.
சேறும் சோறும் தந்தைக்குத் தேனே!
நீலத் தயிரும் நிலாநிறத் தயிரே!
"அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்"எனச் செப்பிய
வள்ளுவர் வாய்ச்சொல் பொய்என
விள்ளுவர் உளரோ விரிநீர் உலகிலே!

அன்பு பெருகுக

அகவல்

அன்னை தங்கம் அமிழ்தொடு பேசித்
தலைக்கடை அறையில் நிலைக்கண் ணாடியின்
முன்னின்று தன்எழில் முகம்பார்த் திருந்தாள்.
தனித்துவே டப்பன் தாழ்வாரத் திருந்தான்.
இனிக்க அமிழ்தும் எதிர்வந்து நின்றாள்!
சுவரி லேதன் உருப்படம் தொங்கியது
கண்ட அமிழ்து கனிவாய் திறந்து
"இதில்நான் சின்னவள். இப்போது பெரியவள்"
என்றாள், "ஆம் ஆம்" என்றான் தந்தை!
"எப்படிப் பெரியவள் ஆனேன்" என்றாள்.
"உருப்படம் எடுக்கையில் ஓராண் டுனக்கே.
இப்போது மூன்றாண் டாயின" என்றான்.
"ஆண்டுகள் எப்படித் தாண்டும்" என்றாள்.
"நேரம் போகப் போக நேரே
ஆண்டும் போகும் அல்லவா" என்றான்.
"நேரம் போவதை நேரில் பார்க்கக்
கூடுமோ" என்று கூறினாள் அமிழ்து;
"பார்இதோ மணிப்பொறி நேரம்ஓ டுவதை
இருமுள் ஓடிக் காட்டும்" என்றான்.
"முள்ஓட வில்லையே" என்று மொழிந்தாள்.
"ஓடுவது தெரியாது ஓடுகின் றதுநாள்,
வளர்வது தெரியாது வளர்கின் றாய்நீ"
என்றுவே டப்பன் இயம்பு கின்றான்.
தங்கமும் தனது தலைமுடி நோக்குவாள்,
"நரைப்பது தெரியாது நரைக்கின் றதுமுடி"
என்று தனக்குள் இயம்புகின்றாள்.
"பழுப்பது தெரியாது பழுக்கின் றதுபழம்"
என்று கொல்லையில் இருந்து நகைமுத்தும்
பத்துத் திங்கள் நிறைந்த பலாப்பழம்*
தாங்கி நடந்து, தன்இடை நோவதாய்
ஏங்கி மாமியிடம் இசைக்க லானாள்.
"பெருகுவது தெரியாது பெருகுகின் றதுஉயிர்"
என்பதும் உண்மை போலும்!
அன்பு பெருகுக வைய அமைதிக்கே!

(*பலாப்பழம் - கருநிறைந்த வயிறு)

நடந்து வந்த கரும்பு

அகவல்

நல்வே டப்பனின் இல்லம் நிறைந்தது.
மாவரசு மலர்க்குழல் வந்திருந் தார்கள்;
மற்றும் இவர்களின் மக்களும் இருந்தனர்.
வேடப் பன்ஓர்பால் வீற்றிருக் கின்றான்.

எழில்நகை முத்தும் ஈன்றதன் நீலப்
பூவிழிச் செவ்விதழ்ப் புதுஇள மைந்தனை
"இளஞ் சேரன்"வாஎன இருகையில் ஏந்தி
ஒருபுறம் மயிலென உலவு கின்றாள்.

புகைப்படம் எடுக்கும் புலவரும் வந்தார்
முற்றத்தில் இருக்கை வரிசையில் முடித்தார்
யாவரும் வரிசையில் இருக்க லுற்றார்!
அமிழ்தம் எங்கே அனைவரும் எழுந்தார்.
அறையெல்லாம் பார்த்தார் அங்கெல்லாம் இல்லை.
கொல்லையில் நிலவுசெய் முல்லைக் கொடியும்
சின்னஞ் சிறிய செங்கதிர் போல
மன்னிய சாமந்தி மலர்ந்த செடியும்
குலுங்கு நீலாம்பரக் குள்ளச் செடியும்,
முத்துச் சிரிப்பு முழுப்பொன் னாடை
கருவிழி இவைபூத்த கட்டிக் கரும்பும்
அங்கே கூடி அழகுசெய் திருப்பதைக்
கண்டனர்; கண்ணே என்றுகை யேந்தினர்;
நீலாம்பரம் அங்ஙனே நின்றி ருந்தது!
முல்லைக் கொடியும் நல்ல சாமந்தியும்
அங்ஙனே நின்றி ருந்தன ஆயினும்,
கைதூக்கி 'அப்பா' என்று கனிதமிழ்க்
கட்டிக் கரும்பு மட்டும் கலகலத்
தண்டை பாடத் தாவி வந்தாள்.
புகைப்படப் புலவர், வகைப்பட எவரையும்
முற்றத்தில் உட்கார வேண்டினார்
உற்று நோக்கினார் உருக்கவர் பெட்டியே!*

(*உருக்கவர் பெட்டி - காமிரா)

புகைப்படம்

அகவல்

நடுநாற் காலியில் நகைமுத்துக் கைப்புறம்
அன்பிளஞ் சேரன் அண்டையில் அமிழ்து
வேடன் முதலியோர் பீடுற அமைந்தார்.
பொருந்திய வண்ணம் புறத்தின் அழகைப்
புகைப்படம் எடுத்தே; அகத்தின்
மகிழ்ச்சியை வான்படம் எடுக்க விட்டே.

திராவிட மக்கள் வாழிய

அகவல்

அமிழ்து சரியாய் ஆறாண் டடைந்தாள்;
தமிழ்தரும் தனித்தமிழ்ப் பள்ளி சென்றே
அதோவரு கின்றாள் அங்கைச் சுவடியோடு;
வேடன் நகைமுத்து வீட்டில் அப்போதில்
இளஞ்சே ரனைநீ யார்என்று கேட்டுப்
பதிலை எதிர்பார்த் திருந்தார். அவனோ
தன்மார்பு காட்டி 'நான் தம்பி' என்றான்.
"தமிழன் என்றுநீ சாற்றடா தம்பி"
என்றே இயம்பி அமிழ்து வந்தாள்.
வாழிய தமிழ மக்கள்!
வாழிய நற்றமிழ் வையகம் இனிதே!



குடும்ப விளக்கு முதற் பகுதி - ஒருநாள் நிகழ்ச்சி

பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய
"குடும்ப விளக்கு"
முதற் பகுதி - ஒருநாள் நிகழ்ச்சி

அகவல்
காலை மலர்ந்தது

இளங்கதிர் கிழக்கில் இன்னும் எழவில்லை,
இரவு போர்த்த இருள் நீங்கவில்லை.
ஆயினும் கேள்வியால் அகலும் மடமைபோல்,
நள்ளிரவு மெதுவாய் நடந்துகொண் டிருந்தது.
தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த
கலப்பென இருள்தன் கட்டுக் குலைந்தது.
புலர்ந்திடப் போகும் பொழுது, கட்டிலில்
மலர்ந்தன அந்த மங்கையின் விழிகள்.

அவள் எழுந்தாள்

தூக்கத் தோடு தூங்கி யிருந்த
ஊக்கமும் சுறுசுறுப் புள்ளமும், மங்கை
எழுந்ததும் எழுந்தன இருகை வீசி;
தெளிவிலாக் கருக்கலில் ஒளிபடும் அவள்விழி
குளத்து நீரில் குதிக்கும் கெண்டைமீன்!

கோலமிட்டாள்

சின்ன மூக்குத் திருகொடு தொங்கும்
பொன்னாற் செய்த பொடிமுத் தைப்போல்
துளிஒளி விளக்கின் தூண்டு கோலைச்
செங்காந் தள்நிகர் மங்கை விரலால்
பெரிது செய்து விரிமலர்க் கையில்
ஏந்தி, அன்னம் வாய்ந்த நடையடு,
முல்லை அரும்பு முத்தாய்ப் பிறக்கும்,
கொல்லை யடைந்து குளிர்புதுப் புனலை
மொண்டாள்; மொண்டு, முகத்தைத் துலக்கி
உண்டநீர் முத்தாய் உதிர்த்துப் பின்னும்
சேந்துநீர் செங்கை ஏந்தித் தெருக்கதவு
சார்ந்ததாழ் திறந்து, தகடுபோற் குறடு
கூட்டி, மெருகு தீட்டிக் கழுவி,
அரிசிமாக் கோலம் அமைத்தனள்; அவளுக்குப்
பரிசில் நீட்டினான் பகலவன் பொன்னொளி!

காலைப் பாட்டு

இல்லத்தினிலே எகினாள்; ஏகி
யாழின் உறையினை எடுத்தாள்; இசையில்
'வாழிய வையம் வாழிய' என்று
பாவலர் தமிழிற் பழச்சுவை சேர்த்தாள்.
தீங்கிலாத் தமிழில் தேனிசைக் கலவைபோய்த்
தூங்கிய பிள்ளைகள், தூங்கிய கணவனின்
காதின் வழியே கருத்தில் கலக்கவே,
மாதின் எதிர்அவர் வந்துட் கார்ந்தனர்.
அமைதி தழுவிய இளம் பகல்,
கமழக் கமழத் தமிழிசை பாடினாள்.

வீட்டு வேலைகள்

பறந்தனள் பச்சைப் பசுங்கிளி; மாடு
கறந்தனள்; வீட்டை நிறம் புரிந்தனள்;
செம்பு தவளை செழும்பொன் ஆக்கினாள்;
பைம்புனல் தேக்கினாள், பற்ற வைத்த
அடுப்பினில் விளைத்த அப் பம் அடுக்கிக்
குடிக்க இனிய கொத்து மல்லிநீர்
இறக்கிப் பாலொடு சர்க்கரை இட்டு
நிறக்க அன்பு நிறையப் பிசைந்த
முத்தான வாயால் முழுநிலா முகத்தாள்
"அத்தான்" என்றனள்; அழகியோன் வந்தான்.

கணவனுக்கு உதவி

வந்த கணவன் மகிழும் வண்ணம்
குளிர்புனல் காட்டிக் குளிக்கச் சொல்லி,
துளிதேன் சூழும் களிவண்டு போல
அன்பனின் அழகிய பொன்னுடல் சூழ்ந்து,
மின்னிடை துவள, முன்னின் றுதவி,
வெள்ளுடை விரித்து மேனி துடைத்தபின்,

குழந்தைகட்குத் தொண்டு

" பிள்ளைகாள்" என்றனள்! கிள்ளைகள் வந்தனர்!
தூய பசும்பொன் துளிகளைப் போன்ற
சீயக் காய்த்தூள் செங்கையால் அள்ளிச்
சிட்டுக் காட்டியும் சிறுகதை சொல்லியும்
தொட்டுத் தேய்த்துத் துளிருடல் நலங்காது
நின்ற திருக்கோலப் பொன்னின் சிலைகட்கு
நன்னீ ராட்டி நலஞ்செய்த பின்னர்
பூவிதழ் மேற்பனி தூவிய துளிபோல்
ஓவியக் குழந்தைகள் உடலில்நீர்த் துளிகளைத்
துடைத்து நெஞ்சில் சுரக்கும் அன்பை
அடங்கா தவளாய் அழகுமுத் தளித்தே,
"பறப்பீர் பச்சைப் புறாக்களே"என, அவர்
அறைக்குள் ஆடைபூண் டம்பலத் தாடினார்.

காலையுணவு

அடுக்களைத் தந்தி அனுப்பினாள் மங்கை;
"வந்தேன் என்று மணாளன் வந்தான்;
"வந்தோம் என்று வந்தனர் பிள்ளைகள்.
பந்தியில் அனைவரும் குந்தினர் வரிசையாய்.
தழைத்த வாழைத் தளிரிலை தன்னில்
பழத்தொடு படைத்த பண்டம் உண்டனர்;
காய்ச்சிய நறுநீர் கனிவாய்ப் பருகினர்.

தய்தான் வாத்திச்சி

நேரம் போவது நினையா திருக்கையில்
பாய்ச்சிய செங்கதிர் பட்டது சுவர்மேல்;
அவள்கண்டு, காலை "ஆறுமணி" என
உரைத்தாள்; கணவன், "இருக்கா" தென்றான்.
உண்டுண் டுண்டென ஒலித்தது சுவரின்
அண்டையில் இருந்த அடுக்கும் மணிப்பொறி.
பாடம் சொல்லப் பாவை தொடங்கினாள்.
அவள் வாத் திச்சி அறைவீடு கழகம்;
தவழ்ந்தது சங்கத் தமிழ்ச்சுவை; அள்ளி
விழுங்கினார் பிள்ளைகள்; "வேளையா யிற்றே!

பள்ளிக்குப் பிள்ளைகள்

எழுங்கள்" என்றனள், எழுந்தனர்; சுவடியை
ஒழுங்குற அடுக்கி, உடை அணிவித்துப்
புன்னை இலைபோல் புதையடிச் செருப்புகள்
சின்னவர் காலிற் செருகிச் சிறுகுடை
கையில் தந்து, கையடு கூட்டித்
தையல், தெருவரை தானும் நடந்து,
பள்ளி நோக்கித் தள்ளாடி நடக்கும்
பிள்ளைகள் பின்னழகு வெள்ளம் பருகிக்
கிளைமா றும்பசுங் கிளிபோல் ஓடி
அளவ ளாவினாள் ஆள னிடத்தில்.

கடைக்குப்போகும் கணவன்

கடைக்குச் செல்லக் கணவன், அழகிய
உடைகள் எடுத்தே உடுக்க லானான்.
"கழுத்துவரை உள்ள கரிய தலைமயிர்
மழுக்குவீர் அத்தான்"என்று மங்கை சொன்னாள்.
நறுநெய் தடவி நன்றாய்ச் சீவி
முறுக்கு மீசையை நிறுத்திச் சராயினை
இட்டிடை இறுக்கி எழிலுறத் தொங்கும்
சட்டை மாட்டத் தன்கையில் எடுத்தான்.
பொத்தலும் கிழிசலும் பூவை கண்டாள்;
தைத்தாள் தையற் சடுகுடு பொறியால்.
ஆண்டநாள் ஆண்டு மாண்ட செந்தமிழ்ப்
பாண்டிய மன்னன் மீண்டது போல,
உடுத்திய உடையும் எடுத்த மார்பும்
படைத்த கணவனைப் பார்த்துக் கிடந்தாள்.

வெற்றிலைச் சுருள்

ஒற்றி வைத்த ஒளிவிழி மீட்டபின்,
வெற்றிலைச் சுருள் பற்றி ஏந்தினாள்;
கணவன் கைம்முன் காட்டி, அவன்மலர்
வாயில் தரத்தன் மனத்தில் நினைத்தாள்.
தூயவன் அப்போது சொன்ன தென்னெனில்,
"சுருளுக்கு விலைஎன்ன? சொல்லுவாய்?" என்ன;
"பொருளுக்குத் தக்கது போதும்" என்றாள்.
"கையிற் கொடுப்பதைக் காட்டிலும் சுருளை
வாயிற் கொடுத்திடு மங்கையே" என்றான்.
சேயிழை அன்பாய்ச் செங்கை நீட்டினாள்.
குடித்தனப் பயனைக் கூட்டி எடுத்து
வடித்த சுவையினை வஞ்சிக் களித்தல்போல்
தளிர்க்கைக்கு முத்தம் தந்து,
குளிர்வாய் வெற்றிலை குழைய ஏகினனே!

அறுசீர் விருத்தம்
அவளின் காதலுள்ளம்

உணவுண்ணச் சென்றாள், அப்பம்
உண்டனள், சீனி யோடு
தணல்நிற மாம் பழத்தில்
தமிழ்நிகர் சுவையைக் கண்டாள்!
மணவாளன் அருமை பற்றி
மனம்ஒரு கேள்வி கேட்க,
'இணையற்ற அவன் அன்புக்கு
நிகராமோ இவைகள்' என்றாள்.

பிள்ளைகள் நினைவு

பள்ளிக்குச் சென்றி ருக்கும்
பசங்களில் சிறிய பையன்
துள்ளிக் குதித்து மான்போல்
தொடர்ந்தோடி வீழ்ந்தானோ, என்(று)
உள்ளத்தில் நினைத்தாள்;ஆனால்
மூத்தவன் உண்டென் றெண்ணித்
தள்ளினாள் அச்சந் தன்னை!
தாழ்வாரம் சென்றாள் நங்கை!

வீட்டு வேலைகள்

ஒட்டடைக் கோலும் கையும்
உள்ளமும் விழியும் சேர்த்தாள்;
கட்டிய சிலந்திக் கூடு,
கரையானின் கோட்டை யெல்லாம்
தட்டியே பெருக்கித் "தூய்மை"
தனியர சாளச் செய்து,
சட்டைகள் தைப்ப தற்குத்
தையலைத் தொட்டாள் தையல்!

தையல் வேலை

ஆடிக்கொண் டிருந்த தையற்
பொறியினை அசைக்கும் ஓர்கை;
ஓடிக்கொண் டிருக்கும் தைத்த
உடையினை வாங்கும் ஓர்கை!
பாடிக்கொண் டேயிருக்கும்
பாவையின் தாம ரைவாய்;
நாடிக்கொண் டேயிருக்கும்
குடித்தன நலத்தை நெஞ்சம்!

மரச்சாமான்கள் பழுது பார்த்தல்

முடிந்தது தையல் வேலை.
முன்உள்ள மரச்சா மான்கள்
ஒடிந்தவை, பழுது பார்த்தாள்;
உளியினால் சீவிப் பூசிப்
படிந்துள்ள அழுக்கு நீக்கிப்
பளபளப் பாக்கி வைத்தாள்.

கொல்லூற்று வேலை

இடிந்துள்ள சுவர் எடுத்தாள்;
சுண்ணாம்பால் போரை பார்த்தாள்.

மாமன் மாமிக்கு வரவேற்பு

நாத்தியார் வீடு சென்ற
நன்மாமன், மாமி வந்தார்.
பார்த்தனள்;உளம் மகிழ்ந்தாள்.
பறந்துபோய்த் தெருவில் நின்று
வாழ்த்திநல் வரவு கூறி
வணக்கத்தைக் கூறி, "என்றன்
நாத்தியார், தங்கள் பேரர்
நலந்தானா மாமி" என்றாள்.

வண்டிவிட் டிறங்கி வந்த
மாமியும், மாமனும், கற்
கண்டொத்த மரும கட்குக்
கனியத்த பதிலுங் கூறிக்
கொண்டுவந் திட்ட பண்டம்
குறையாமல் இறக்கச் சொன்னார்.
வண்டியில் இருந்த வற்றை
இறக்கிடு கின்றாள் மங்கை.

மாமி மாமன் வாங்கி வந்தவை

கொஞ்சநாள் முன்வாங் கிட்ட
கும்ப கோணத்துக் கூசா,
மஞ்சள்,குங் குமம், கண்ணாடி,
மைவைத்த தகரப் பெட்டி,
செஞ்சாந்தின் சீசா,சொம்பு,
வெற்றிலைச் சீவற் பெட்டி,
இஞ்சியின் மூட்டை ஒன்றே,
எலுமிச்சைச் சிறிய கோணி,

புதியஓர் தவலை நாலு,
பொம்மைகள்,இரும்புப் பெட்டி
மிதியடிக் கட்டை,பிள்ளை
விளையாட மரச்சா மான்கள்;
எதற்கும்ஒன் றுக்கி ரண்டாய்
இருக்கட்டும் வீட்டில் என்று
குதிரினில் இருக்கும் நெல்லைக்
குத்திட மரக்குந் தாணி;

தலையணை, மெத்தைக் கட்டு,
சல்லடை, புதுமு றங்கள்,
எலிப்பொறி, தாழம் பாய்கள்;
இப்பக்கம் அகப்ப டாத
இலுப்பெண்ணெய், கொடுவாய்க் கத்தி,
இட்டலித் தட்டு, குண்டான்,
கலப்பட மிலாநல் லெண்ணெய்;
கைத்தடி,செந்தா ழம்பூ;

திருமணம் வந்தால் வேண்டும்
செம்மரத் தினில்முக் காலி;
ஒருகாசுக் கொன்று வீதம்
கிடைத்த பச்சரிசி மாங்காய்;
வரும்மாதம் பொங்கல் மாதம்
ஆதலால் விளக்கு மாறு;
பரிசாய்ச் சம்பந்தி தந்த
பாதாளச் சுரடு, தேங்காய்;

மூலைக்கு வட்டம் போட்டு
முடித்தமே லுறையும், மற்றும்
மேலுக்கோர் சுருக்குப் பையும்
விளங்கிடும் குடை, கறுப்புத்
தோலுக்குள் காயிதத்தில்
தூங்கும்மூக் குக்கண் ணாடி,
சேலொத்த விழியாள் யாவும்
கண்டனள் செப்ப லுற்றாள்:

மருமகள் வினா

"இவையெல்லாம் வண்டிக் குள்ளே
இருந்தன என்றால் அந்த
அவைக்களம் தனிலே நீவிர்
எங்குதான் அமர்ந்திருந்தீர்?
சுவைப்புளி அடைத்து வைத்த
தோண்டியின் உட்பு றத்தில்
கவர்ந்துண்ணும் பூச்சி கட்கும்
கால்வைக்க இடமிராதே?"

மாமி விடை

என்றனள்; மாமி சொல்வாள்:
"இவைகளின் உச்சி மீதில்
குன்றுமேல் குரங்கு போல
என்றனைக் குந்த வைத்தார்!
என்தலை நிமிர, வண்டி
மூடிமேல் பொத்த லிட்டார்;
உன்மாமன் நடந்து வந்தார்.
ஊரெல்லாம் சிரித்த" தென்றாள்!

மாமன் பேச்சு

"ஊரெல்லாம் சிரிக்க வைத்தேன்
என்றாளே உன்றன் மாமி!
யாரெல்லாம் சிரித்து விட்டார்?
எனஉன்றன் மாமியைக் கேள்;
பாரம்மா பழுத்த நல்ல
பச்சைவா ழைப்ப ழங்கள்!
நேரிலே இதனை யும்பார்
பசுமாட்டு நெய்யின் மொந்தை!

வண்டியில் எவ்வி டத்தில்
வைப்பது? மேன்மை யான
பண்டத்தைக் காப்ப தற்குப்
பக்குவம் தெரிந்தி ருந்தால்
முண்டம்இப் படிச் சொல்வாளா?
என்னதான் முழுகிப் போகும்
அண்டையில் நடந்து வந்தால்?"
என்றனன், அருமை மாமன்.

மருமகள் செயல்

மாமனார் கொண்டு வந்த
பொருளெலாம் வரிசை செய்து,
தீமையில் லாத வெந்நீர்
அண்டாவில் தேக்கி வைத்துத்
தூய்மைசேர் உணவு தந்து,
துப்பட்டி விரித்த மெத்தை
ஆம்,அதில் அமரச் சொல்லிக்
கறிவாங்க அவள் நடந்தாள்.

கடையிலே செலவு செய்த
கணக்கினை எழுதி வைத்தாள்;
இடையிலே மாமன் "விக்குள்
எடுத்தது தண்ணீர் கொஞ்சம்
கொடு"எனக் கொடுத்தாள். பின்னர்க்
கூடத்துப் பதுமை ஓடி
அடுக்களை அரங்கில், நெஞ்சம்
அசைந்திட ஆட லானாள்.

என்ன கறி வாங்கலாம்?

கொண்டவர்க் கெது பிடிக்கும்
குழந்தைகள் எதை விரும்பும்
தண்டூன்றி நடக்கும் மாமன்
மாமிக்குத் தக்க தென்ன
உண்பதில் எவரு டம்புக்(கு)
எதுவுத வாதென் றெல்லாம்
கண்டனள், கறிகள் தோறும்
உண்பவர் தம்மைக் கண்டாள்!

பிள்ளைகள் உள்ளம் எப்படி?

பொரியலோ பூனைக் கண்போல்
பொலிந்திடும்; சுவை மணக்கும்!
"அருந்துமா சிறிய பிள்ளை"
எனஎண்ணும் அவளின் நெஞ்சம்;
இருந்தந்தச் சிறிய பிள்ளை
இச்சென்று சப்புக் கொட்டி
அருந்தியே மகிழ்ந்த தைப்போல்
அவள்காதில் ஓசை கேட்கும்!

அத்தானுக்கு எது பிடிக்கும்?

பொருளையும் பெரிதென் றெண்ணாள்,
பூண்வேண்டாள்; தனைம ணந்தோன்
அருளையே உயிரென் றெண்ணும்
அன்பினாள், வறுத்தி றக்கும்
உருளைநற் கிழங்கில் தன்னை
உடையானுக் கிருக்கும் ஆசைத்
திருவுளம் எண்ணி எண்ணிச்
செவ்விள நகைசெய் கின்றாள்.

எதிர்கால நினைவுகள்

இனிவாழும் நாள் நினைத்தாள்
இளையவர் மாமன் மாமி;
நனிஇரங் கிடுதல் வேண்டும்;
நானவர்க் கன்னை போல்வேன்.
எனதத்தான் தனையும் பெற்று
வாழ்ந்தநாள் எண்ணும் போதில்
தனிக்கடன் உடையேன், நானோர்
தவழ்பிள்ளை அவர்கட் கென்றாள்.

கிழங்கினை அளியச் செய்வாள்,
கீரையைக் கடைந்து வைப்பாள்
கொழுங்காய்ப்பச் சடியே வைப்பாள்
கொல்லையின் முருங்கைக் காயை
ஒழுங்காகத் தோலைச் சீவிப்
பல்லில்லார் உதட்டால் மென்று
விழுங்கிடும் வகை முடித்து
வேண்டிய எலாம் முடித்தே.

முதியவருக்குத் துணை

தூங்கிய மாமன் "அம்மா
தூக்கென்னை" என்று சொல்ல,
ஏங்கியே ஓடி மாமன்
இருக்கின்ற நிலைமை கண்டு,
வீங்கிய காலைப் பார்த்தாள்
"எழுந்திட வேண்டாம்!" என்றாள்;
தாங்கியே மருந்து பூசிச்
சரிக்கட்டிப் படுக்க வைத்தாள்.

அவளோர் மருத்துவச்சி

நாடியில் காய்ச்சல் என்றே
நன்மருந் துள்ளுக் கீந்தாள்;
ஓடிநற் பாலை மொண்டு,
மருவுலைக் கஞ்சி ஊற்றி,
வாடிய கிழவர்க் கீந்தாள்;
மாமிக்கோ தலைநோக் காடாம்,
ஓடிடச் செய்தாள் மங்கை
ஒரேபற்றில் நொடிநே ரத்தில்.

அள்ளி அணைத்தாள் பிள்ளைகளை

குழந்தைகள் பள்ளி விட்டு
வந்தார்கள்; குருவிக் கூட்டம்
இழந்தநல் லுரிமை தன்னை
எய்தியே மகிழ்வ தைப்போல்;
வழிந்தோடும் புதுவெள் ளத்தை
வரவேற்கும் உழவரைபோல்,
எழுந்தோடி மக்கள் தம்மை
ஏந்தினாள் இருகை யாலும்!

உடை மாற்றினாள்

பள்ளியில் அறிஞர் சொன்ன
பாடத்தின் வரிசை கேட்டு,
வெள்ளிய உடை கழற்றி,
வேறுடை அணியச் செய்தே,
உள்வீட்டில் பாட்டன் பாட்டி
உள்ளதை உணர்த்தி, அந்தக்
கள்ளினில் பிள்ளை வண்டு
களித்திடும் வண்ணம் செய்தாள்!

தலைவி சொன்ன புதுச்செய்தி

அன்றைக்கு மணம் புரிந்த
அழகியோன் வீடு வந்தான்;
இன்றைக்கு மணம் புரிந்தாள்
எனும்படி நெஞ்சில் அன்பு
குன்றாத விழியால், அன்பன்
குளிர்விழி தன்னைக் கண்டாள்;
"ஒன்றுண்டு சேதி" என்றாள்;
"உரை"என்றான்; "அம்மா அப்பா

வந்தார்"என் றுரைத்தாள், கேட்டு
"வாழிய" என்று வாழ்த்தி,
"நொந்தார்கள்" என்று கேட்டு
நோயுற்ற வகை யறிந்து,
தந்தைதாய் கண்டு "உங்கள்
தள்ளாத பருவந் தன்னில்
நைந்திடும் வண்ணம் நீங்கள்
நடந்திட லாமா? மேலும்,

முதியோர்க்கு

ஒக்கநல் லிளமை கண்டீர்
கல்விநல் லொழுக்கம் கண்டீர்;
மெய்க்காதல் மணமும் பெற்றீர்;
இல்லற வெற்றி பெற்றீர்;
மக்களைப் பெற்றீர்;வைய
வழ்வெலாம் பெற்றீர்; என்னால்
எக்குறை பெற்றீர்? இன்னும்
ஏனிந்தத் தொல்லை ஏற்றீர்?

அதிர்ந்திடும் இளமைப் போதில்
ஆவன அறங்கள் செய்து,
முதிர்ந்திடும் பருவந் தன்னில்
மக்கட்கு முடியைச் சூட்டி,
எதிர்ந்திடும் துன்ப மேதும்
இல்லாமல் மக்கள், பேரர்
வதிந்திடல் கண்டு, நெஞ்சு
மகிழ்வதே வாழ்வின் வீடு!"

அறிவுக்குத் திருவிளக்கு

என்றனன்; தந்தை சொல்வார்:
"என்னரும் மகனே, மெய்தான்
ஒன்றிலும் கவலை கொள்ளேன்
உன்னைநான் பெற்ற தாலே!
அன்றியும் உன்பெண் டாட்டி
அறிவுக்கோர் திரு விளக்காம்,
இன்றுநான் அடைந்த நோய்க்கும்
நன்மருந் திட்டுக் காத்தாள்.

செல்லப்பா உணவு கொள்ளச்
சிறுவர்கள் தமையும் உண்ணச்
சொல்லப்பா!" எனவே, அன்பு
சொரிந்திடச் சொல்லி டுந்தன்
நல்லப்பா மகிழும் வண்ணம்
நல்லதப் பாஎன் றோதி,
மெல்லப்பா வைபு ரிந்த
விருந்தினை அருந்த லுற்றான்.

பிள்ளைக்கு அமுது

குழந்தைகள் உடனி ருந்து
கொஞ்சியே உண்ணு கின்றார்
பழந்தமிழ்ப் பொருளை அள்ளிப்
படித்தவர் விழுங்குதல் போல்!
ஒழுங்குறு கறிகள் தம்மில்
அவரவர் உளம றிந்து
வழங்கினாள் அள்ளி அள்ளி,
வழிந்திடும் அன்புள் ளத்தாள்.

பாடு என்றான்

அனைவரும் உண்டார் அங்கே!
கூடத்தில் அமர்ந்தி ருந்தார்.
சுனைவரும் கெண்டைக் கண்ணாள்
துணைவனை அணுகி, "நீவிர்
எனைவரும் படிஏன் சொல்ல
வில்லை" என்றாள் சிரித்தே!
'தினைவரும் படிஇல் லார்க்கும்
திருநல்கும் தமிழ்பா' டென்றான்.

யாழ் எடுத்தாள்

குளிர்விழி இளநகைப் பூங்
குழலினாள் குந்தினாள்; தன்
தளிருடல் யாழ் உடம்பு
தழுவின; இரு குரல்கள்
ஒளியும் நல்வானும் ஆகி
உலவிடும் இசைத்தேர் ஏறித்
"தெளிதமிழ்" பவனி வந்தாள்
செவிக்கெலாம் காட்சி தந்தாள்.

கவிதை பாய்ச்சினாள்

உள்ளத்தில் கவிதை வைத்தே
      உயிரினால் எழுப்பி னாள்;அவ்
வெள்ளத்தில் சுவையைக் கோத்தாள்;
      வீணையின் அளவிற் சாய்த்தாள்;
தெள்ளத்தெ ளிந்த நீர்போல்,
      செந்தமிழ்ப் பொருள்போல் நெஞ்சப்
பள்ளத்தில் கோடைத் துன்பம்
      பறந்திடப் பாய்ச்சி விட்டாள்.

உயிரெல்லாம் தமிழில் தொக்கின

வீடெல்லாம் இசையே; வீட்டில்
      நெஞ்செலாம் மெருகே; நெஞ்ச
ஏடெலாம் அறிவே; ஏட்டின்
      எழுத்தெலாம் களிப்பே; அந்தக்
காடெலாம் ஆடும் கூத்தே;
      காகங்கள் குருவி எல்லாம்
மாடெல்லாம் இவ்வா றானால்
      மனிதர்க்கா கேட்க வேண்டும்?

கடையை மறந்தீரோ?

இடையினில் தனை மறந்தே
      இருந்ததன் கணவன் தன்னைக்
"கடையினை மறந்து விட்டீர்
      கணக்கர்காத் திருப்பார்" என்று
நடையினில் அன்னம் சொன்னாள்;
      நல்லதோர் நினைவு பெற்ற
உடையவன் "ஆம் ஆம்" என்றான்;
      ஆயினும் "உம் உம்" என்றான்.

மனைவியிடம் பிச்சை கேட்டான்

"கண்ணல்ல; நீதான் சற்றே
      கடைக்குப் போய்க் கணக்கர் தம்மை
உண்பதற் கனுப்பி, உண்டு
      வந்தபின் வா; என் னாசைப்
பெண்ணல்ல" என்று சொல்லிச்
      சோம்பலால் பிச்சை கேட்டான்.
கண்ணல்ல, கருத்தும் போன்றாள்,
      "சரி"என்று கடைக்குச் சென்றாள்.

கடையின் நடைமுறை

மல்லியை அளப்பார்; கொம்பு
      மஞ்சளை நிறுப்பார்; நெய்க்குச்
சொல்லிய விலை குறைக்கச்
      சொல்லுவார்; கொள் சரக்கின்
நல்லியல் தொகை கொடுப்பார்;
      சாதிக்காய் நறுக்கச் சொல்வார்
வெல்லம்என் றொருகு ழந்தை
      விரல்நீட்டும் கடைக்கு வந்தாள்.

அவள் வாணிபத் திறமை

களிப்பாக்குக் கேட்பார்க் கீந்து
      களிப்பாக்கிக் கடனாய்த் தந்த
புளிப்பாக்கி தீர்ந்த பின்பு
      கடனாகப் புதுச்ச ரக்கை
அளிப்பார்க்குப் பணம்அ ளித்தாள்;
      அதன்பின்னர் கணக்கர் எல்லாம்
கிளிப்பேச்சுக் காரி யின்பால்
      உணவுண்ணக் கேட்டுப் போனார்.

இளகிய நெஞ்சத் தாளை
      இளகாத வெல்லம் கேட்பார்;
அளவாக இலாபம் ஏற்றி
      அடக்கத்தை எடுத்து ரைப்பாள்!
மிளகுக்கு விலையும் கூறி
      மேன்மையும் கூறிச் சற்றும்
புளுகாமல் புகன்ற வண்ணம்
      புடைத்துத்தூற் றிக்கொ டுப்பாள்.

கணவனிடம் கணக்கு ஒப்புவித்தாள்

கொண்டவன் வந்தான்; கண்கள்
      குளிர்ந்திடக் கண்டாள்: "அத்தான்
கண்டுள்ள கணக்கின் வண்ணம்
      சரக்குகள் கடன்தந் தார்க்குத்
தண்டலும் கொடுத்தேன்; விற்று
      முதலினைத் தனியே வைத்தேன்;
உண்டங்கு வேலை" என்றே
      உரைத்தனள்; வீடு சென்றாள்.

வீட்டறை மருத்துவமைனை

படுக்கையில் மாம னாரைப்
      பார்த்தனள்; "காலில் இன்னும்
கடுக்கை தீர்ந்திலதோ" என்று
      கனிவோடு கேட்டு டுக்கும்
உடுக்கையும் மாற்று வித்து,
      மட்டான உணவு தந்து
தடுக்கினி லிருந்து தூக்கிச்
      சாய்வு நாற்காலி சேர்த்தாள்.

மற்றும் வீட்டு வேலை

வரிசையாய்க் காய வைத்த
      வடகத்தை, வற்றல் தன்னைப்
பெரிசான சாலில் சேர்த்தாள்;
      பிணைந்துள்ள மாடு கன்றுக்(கு)
உரியநல் தீனி வைத்தாள்;
      உறிவிளக் குகள்து டைத்தாள்;
வரும்மக்கள் எதிர்பார்த் திட்டாள்;
      வந்தனர்; மகிழ்ச்சி பெற்றாள்.

கடற்கரையில்

சிற்றுண வளித்தாள்; பின்பு
      திரைகடற் கரையை நாடிப்
பெற்றதன் மக்கள் சூழப்
      பெருவீதி ஓர மாகப்
பொற்கொடி படர்ந்தாள் தேனைப்
      பொழிந்திடு பூக்க ளோடு!
வற்றாத வெள்ளக் காட்டின்
      மணற்கரை ஓரம் வந்தாள்!

கடற்கரைக் காட்சி

அக்கரை செலும்உள் ளத்தை
      அளாவிடக் கிடந்த வில்லும்,
இக்கரை அலையின் ஆர்ப்பும்,
      இவற்றிடைச் செவ்வா னத்தின்
மிக்கொளி மிதக்கும் மேனி
      விரிபுனற் புரட்சிப் பாட்டும்,
"ஒக்கவே வாழ்க மக்காள்"
      என்பதோர் ஒலியும் கேட்டாள்;

காட்சி இன்பம்

குளிர்புனல் தெளிவி லெல்லாம்
      ஒளிகுதி கொள்ளும்; வெள்ளத்
துளிதொறும் உயிர்து டிக்கும்;
      தொன்மைசேர் கடல், இவ் வைய
வெளியெலாம் அரசு செய்யும்
      விண்ணெலாம் ஒளியைச் செய்யும்!
களியெலாம் காணக் காணக்
      கருத்தெலாம் இன்பம் பொங்கும்!

கடற் காற்று

கடலிடைப் புனலில் ஆடிக்
      குளிரினிற் கனிந்த காற்றை
உடலிடைப் பூசு கின்ற
      ஒலிகடற் கரையின் ஓரம்
அடர்சிற கன்னப் புட்கள்
      அணிபோல அலைந டக்கும்
நடையடு நடந்து வீடு
      நண்ணினாள் மக்க ளோடு.

இரவுக்கு வரவேற்பு

மேற்றிசைக் கதிர்ப்ப ழத்தை
      விருந்துண்டு, நீல ஆடை
மாற்றுடை யாய் உடுத்து
      மரகத அணிகள் பூண்டு,
கோற்கிளை ஒடுங்கும் புட்கள்
      கோட்டிடும் இறகின் சந்தக்
காற்சிலம் பசையக் காதற்
      கரும்பான இரவு தன்னை;

திருவிளக் கேந்தி வந்து
      தெருவினில் வரவேற்கின்றாள்.
உருவிளக் கிடவீட் டுக்குள்
      ஒளிவிளக் கனைத்தும் ஏற்றி
ஒருபெருங் கலயத் துள்ளே
      உயர்நறும் புகை எழுப்பிப்
பெரியோரின் உள்ளம் எங்கும்
      பெருகல்போல் பெருகச் செய்தாள்.

அத்தானை எதிர்பார்க்கின்றாள்

கட்டுக்குள் அடங்கா தாடிக்
      களித்திடும் தனது செல்வச்
சிட்டுக்கள், சுவடிக் குள்ளே
      செந்தமிழ்த் தீனி உண்ண
விட்டுப்பின் அடுக்க ளைக்குள்
      அமுதத்தை விளைவு செய்தாள்;
எட்டுக்கு மணி அடிக்க
      அத்தானை எதிர்பார்க் கின்றாள்

எண்சீர் விருத்தம்
கட்டில் அழகு

சரக்கொன்றை தொங்ககவிட்ட பந்த லின்கீழ்
      தனிச்சிங்கக் கால்நான்கு தாங்கும் கட்டில்
இருக்கின்ற மெத்தைதலை யணைகள் தட்டி
      இருவீதி மணமடிக்கும் சந்த னத்தைக்
கரைக்கின்ற கலையத்துட் கரைத்துத் தென்றல்
      கலக்கின்ற சன்னலினைத் திறந்து, நெஞ்சில்
சுரக்கின்ற அன்பினால், தெருவில் மீண்டும்
      துடிக்கின்றாள் கணவனது வரவு பார்த்தே!

அவன் மலை போன்ற செல்வம்

பறக்கின்ற கருங்குயிலாள் மீண்டும் வீட்டில்
      பழக்குலையைத் தட்டத்தில் அடுக்கிப் பாலைச்
சிறக்கின்ற செம்பினிலே ஊற்றி வைத்துச்
      சிரிக்கின்ற முல்லையினைக் கண்ணி யாக்கி,
நிறக்கின்ற மணிவிளக்கைச் சிறிது செய்து
      நினைக்கின்ற இன்பத்தை நெஞ்ச வீட்டில்
மறைக்கின்ற படிமறைத்து மற்றும் சென்று
      மலைபோன்ற செல்வத்தின் வரவு பார்த்தாள்.

பிள்ளைகட்குப் பரிசு

கால்ஒடிந்து போகுமுன்னே அவனும் வந்தான்;
      கதையன்று கேட்டாயா? எனவுட் கார்ந்தான்.
மேலிருந்து "பிள்ளைவளர்ப் புப்போ ட்டிக்கு
      விடைவந்து சேர்ந்த" தென்றான்; எவ்வா றென்றாள்.
"ஆல்ஒடிந்து வீழ்ந்தாலும் தோள்கள் தாங்கும்
      அப்படி நாம் பிள்ளைகளை வளர்த்த தாலே,
பாலொடுசர்க் கரைகலந்த இனிய சொல்லாய்
      பரிசுநமக் குத்தந்தார் பாராய்!" என்றான்.

பழங்காலக் கிழங்கள்

அறையினிலே படுத்திருந்த பெற்றோர் காதில்
      அதைப் போடத் துவக்கினான். "வளர்ப்புப் போட்டி
அறியோமே எம்நாளில்" என்றார் பெற்றோர்.
      அப்படி என்றாலின்ன தெனவி ளக்கிக்
"குறையின்றி வளர்ப்பவர்கள் பரிசு கொள்ளல்"
      கூறினான். "குழந்தைகளை விசாரித் துத்தான்
அறிந்தாரோ?" எனக் கேட்டார் அக்கா லத்தார்;
      அதன்விரிவும் கூறியபின் மகிழ்வு கொண்டார்.

அடுக்களையிற் பிள்ளைகள்

பரிசுதனைப் பெற்ற பிள்ளை, ஓடி வந்தான்;
      பலருமே சூழ்ந்தார்கள்; குருவிக் கூட்டம்
பெரிசாக, இன்மொழிகள் செவிபி ளக்கப்
      பெருமானும் பெருமாட்டி தானும், அன்பின்
அரசாட்சி செலுத்தியபின், எல்லா ரும்போய்
      அடுக்களையிற் கூடாரம் அடித்து விட்டார்;
ஒருபெரும்போர்க் களம்புகுந்தார், உணவைத் தூக்கி
      'ஓடிப்போ டா' என்றார்; "பசி"ப றந்தான்.

குழந்தைகள் தூங்கியபின்

அவன்பாடிக் கொண்டிருந்தான் அறைவீட் டுக்குள்
      அருமையுள்ள மாமனார் மாமி யார்க்கும்,
உவந்தருள உணவிட்டுக் கடன் முடித்தாள்;
      உட்பக்கத் தறைநோக்கி அவரும் போனார்;
குவிந்திருக்கும் சுவையுணவு தானும் உண்டாள்;
      கொக்கரிக்கும் நெஞ்சுக்குத் துணிவு கூறி,
அவிழ்ந்துவரும் நிலாஒளியால் இதழ்கள் மூடும்
      அல்லிப்பூ விழிகள்குழந் தைகள் மூட.

கதவைத் தாழிட்டாள்

கண்டுபடுக் கைதிருத்தி உடைதிருத்திக்
      காற்றில்லாப் போதினிலே விசிறி வீசி,
வண்டுவிழி திறக்குமொரு குழந்தை, "தண்ணீர்
      வை" என்னும்; ஒன்றுதலை தூக்கிப் பார்க்கும்;
பண்டிதர்கள் பழங்கதையின் ஓட்டைக் கெல்லாம்
      பணிக்கையிடல் போல்அனைத்தும் தணிக்கை செய்தே
ஒண்பசு,நற் கன்றுக்கு வைக்கோல் ஈந்தே
      உட்கதவு, வெளிக்கதவின் தாழ்அ டைத்தாள்.

கட்டிலண்டை மங்கை

தொண்டையினில் ஒன்றுமே அடைக்க வில்லை;
      துணைவனவன் சிறுகனைப்புக் கனைக்க லுற்றான்;
அண்டையிலே மங்கைபோய் "அத்தான்" என்றாள்.
      அத்தானா தூங்கிடுவான்? "உட்கார்" என்றான்.
திண்தோளில் சந்தனத்தைப் பூசு கின்றாள்;
      சேயிழைக்கு முல்லைமலர் சூட்டு கின்றான்.
கண்டான்!கண் டாள்! உவப்பின் நடுவிலே,"ஓர்
      கசப்பான சேதியுண்டு கேட்பீர்" என்றாள்!

பொதுத்தொண்டு செய்தோமா?

"மிதிபாகற் காய்கசக்கும்; எனினும் அந்த
      மேற்கசப்பின் உள்ளேயும் சுவைஇ ருக்கும்;
அதுபோலத் தானேடி! அதனாலென்ன?
      அறிவிப்பாய் இளமானே" என்றான் அன்பன்;
அதிகாலை தொடங்கிநாம் இரவு மட்டும்
      அடுக்கடுக்காய் நமதுநலம் சேர்ப்ப தல்லால்,
இதுவரைக்கும் பொதுநலத்துக் கென்ன செய்தோம்?
      என்பதைநாம் நினைத்துப்பார்ப் பதுவு மில்லை.

வீட்டுத் தொண்டா பொதுத் தொண்டு?

"இன்றைக்குக் கறிஎன்ன? செலவு யாது?
      ஏகாலி வந்தானா? வேலைக் காரி
சென்றாளா? கொழுக்கட்டை செய்ய லாமா?
      செந்தாழை வாங்குவமா? கடைச் சரக்கை
ஒன்றுக்கு மூன்றாக விற்ப தெந்நாள்?
      உன்மீதில் எனக்காசை பொய்யா? மாடு
குன்றுநிகர் குடம் நிறையக் கறப்ப துண்டா?
      கொடுக்கலென்ன? வாங்கலென்ன? இவைதாம் கண்டோம்.

தன்னலத்தால் என்ன நடக்கும்

"தமிழரென்று சொல்லிக்கொள் கின்றோம் நாமும்;
      தமிழ்நாட்டின் முன்னேற்றம் விரும்பு கின்றோம்;
எமதென்று சொல்கின்றோம் நாடோ றுந்தான்;
      எப்போது தமிழினுக்குக் கையா லான
நமதுழைப்பை ஒருகாசைச் செலவு செய்தோம்?
      நாமிதனை என்றேனும் வாழ்நாள் தன்னில்,
அமைவாகக் குந்திநினைத் தோமா? இல்லை;
      அனைவருமிவ் வாறிருந்தால் எது நடக்கும்?"

பெரும்படியான தொண்டு செய்துள்ளோம்

கரும்படியின் சாறுநிகர் மொழியாள் இந்தக்
      கனிந்தமொழி சொன்னவுடன் அவன்உ ரைப்பான்;
"வரும்படிவீ தப்படிநான் தரும்ப டிக்கு
      வாக்களித்த படிகணக்கர் திங்கள் தோறும்
கரம்படி வீதித்தமிழர் கழகத் தார்கள்
      கடைப்படியை மிதித்தவுடன் எண்ணி வைப்பார்
பெரும்படியாய்ச் செய்ததுண்டு; படிக்க ணக்கைப்
      பேசிவிட்டாய் கண்டபடி" என்று சொல்ல.

தமிழ் படிக்க வேண்டும் எல்லோரும்

"அப்படியா! அறியாத படியால் சொன்னேன்;
      அந்தமிழர் படிப்படியாய் முன்னேற் றத்தை
எப்படியா யினும்பெற்று விட்டால் மக்கள்
      இப்படியே கீழ்ப்படியில் இரார்க ளன்றோ?
மெய்ப்படிநம் அறிஞரின் சொற்படிந டந்தால்,
      மேற்படியார் செப்படி வித்தை பறக்கும்.
முற்படில் ஆகாததுண்டா? எப்ப டிக்கும்
      முதற்படியாய்த் தமிழ்படிக்க வேண்டும்" என்றாள்.

தமிழ்நாடு தலைதூக்க உயிரையும் தருவேன்

"இழந்தபழம் புகழ்மீள வேண்டும் நாட்டில்,
      எல்லோரும் தமிழர்களாய் வாழ வேண்டும்.
வழிந்தொழுகும் சுவைத்தமிழே பெருக வேண்டும்.
      மாற்றலர்கள் ஏமாற்றம் தொலைய வேண்டும்.
விழுந்ததமிழ் நாடுதலை தூக்க என்றன்
      உயிர்தனையே வேண்டிடினும் தருவேன்" என்றான்.
"பழம்இடுவேன் சர்க்கரைப்பால் வார்ப்பேன் உங்கள்
      பண்பாடும் வாய்திறப்பீர் அத்தான்" என்றாள்.

அன்றன்று புதுமை

"அன்றிலடி நாமிருவர் பழமும் பாலும்
      ஆருக்கு வேண்டுமடி! என்றன் ஆசைக்
குன்றத்திற் படர்ந்தமலர்க் கொடியே, மண்ணில்
      குவிந்திருக்கும் சுவையுள்ள பொருள்கள் எல்லாம்
ஒன்றொன்றும் மறுநாளே பழமை கொள்ளும்;
      ஒன்றொன்றும் சிலநாளில் தெவிட்டிப் போகும்;
அன்றன்று புதுமையடி, தெவிட்ட லுண்டோ?
      ஆருயிரே நீகொடுக்கும் இன்பம்" என்றான்.

இரவுக்கு வழியனுப்பு விழா

நள்ளிரவின் அமைதியிலே மணிவி ளக்கும்
      நடுங்காமல் சன்னலுக்குள் புகுந் தென்றல்
மெல்லஉடல் குளிரும்வகை வீசா நிற்கும்;
      வீணையில்லை காதினிலே இனிமை சேர்க்கும்;
சொல்லரிதாய். இனிதினிதாய் நாழி கைபோம்;
      சுடர்விழிகள் ஈரிரண்டு, நான்கு பூக்கள்,
புல்லிதழிற் போய்ஒடுங்கும்; தமைம றந்து
      பூரிப்பார் நலம்பாடி இரவு செல்லும்.



சிவபெருமான் எமனை உதைத்தார்

  திருக்கடையூரில் சிவபெருமான் மார்க்கண்டேயனைக் காக்க எமனை உதைத்த வீரட்ட நிகழ்வு  மிருகண்டு முனிவருக்கும் அவரது மனைவி மருத்துவதிக்கும் பல கால...