google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: குடும்ப விளக்கு ஐந்தாம் பகுதி

வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

குடும்ப விளக்கு ஐந்தாம் பகுதி

 பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய


"குடும்ப விளக்கு"


 ஐந்தாம் பகுதி

முதியோர் காதல்


அறுசீர் விருத்தம்

மூத்த பிள்ளை முதியவரோடு

வேடப்பன் தம்பி யான
      வெற்றிவேல், மனைவி யோடு
வேடப்பன் வாழ்ந் திருந்த
      வீட்டினில் வாழு கின்றான்,
வேடப்ப னோ,தன் தந்தை
      வீட்டினிற் குடும்பத் தோடு
பீடுற வாழு கின்றான்.
      பெற்றவர் முதுமை பெற்றார்!

முதியோருக்கு மருமகள் தொண்டு

வேடப்பன் மனைவி யான
      நகைமுத்து மிகவும் அன்பாய்
வேடப்பன் தந்தை தாய்க்கு
      வேண்டுவ தறிந்தே அன்னார்
வாடுதல் சிறிதும் இன்றி
      வாய்ப்புறத் தொண்டு செய்வாள்;
ஆடிய பம்ப ரங்கள்
      அல்லவா அம்மூத் தோர்கள்?

தலைக்கடை அறையில் மணவழகர் தங்கம்

தலைக்கடை அறைக்குள் அந்தத்
      தளர்மண வழகர் ஓர்பால்
இலக்கியம் படிப்பார்! இன்பத்
      துணைவியார் கேட்டி ருப்பார்!
உலர்ந்தபூங் கொடிபோல் தங்கத்(து)
      அம்மையார் ஒருபால் குந்திப்
பலஆய்வார்; துணைவர் கேட்பார்;
      துயிலுவார்; பழங்கா லத்தார்.

மணவழகர் உடல்நிலை

மணவழ கர்க்கு முன்போல்
      வன்மையோ தோளில் இல்லை!
துணைவிழி, ஒளியு ம் குன்றக்
      கண்ணாடித் துணையை வேண்டும்;
பணையுடல், சருகு! வாயிற்
      பல்லில்லை! மயிர்வெண் பட்டே!
உணவெலாம்! பாலின் கஞ்சி;
      உலவுதல் சிறிதே ஆகும்.

தங்கத்தம்மையார் உடல்நிலை

நன்னிலாக் கதிர்போல் கூந்தல்
      நரைத்தது. கொண்டை யிட்டு
முன்னிலா முகில்உண் டாற்போல்
      முகத்தொளி குறைய லானார்!
அன்புடல் அறத்தால் தோய்ந்த
      ஆயிரம் பிறைமூ தாட்டி
மன்னுசீர் அன்னாள் மெய்யோ
      வானவில் போற்கூ னிற்றே!

முதியோர் அறைக்கு மக்கள் பேரர் வந்து போவார்கள்

இருபெரு முதியோர் தம்மைத்
      தலைக்கடை அறைசு மந்து
பெரும்பேறு பெற்ற தன்றோ!
      பிள்ளைகள், அவர்ம னைமார்
வருவார்கள்; அறங்கேட் பார்கள்.
      மற்றுள பேர்த்தி பேரர்
வருவார்கள் அளவ ளாவி
      மணியோடு பள்ளி செல்வார்.

இரு முதியோர் நிரம்பிய உள்ளம்

மைந்தர்க்குக் கல்வி சேர்த்தோம்
      மகள்மார்க்கும் அவ்வா றேயாம்
எம்தக்க கடன்மு டித்தோம்
      இனிதாக வாழு கின்றோம்;
முந்துறச் சுற்றத் தார்க்கும்
      செய்வன முழுதும் செய்தோம்;
இந்தநாள் வரைக்கும் வாய்மை
      இம்மியும் மறந்த தில்லை.

நாட்டுக்கு நலம் செய்தோம்

இந்நாட்டின் நலனுக் காக
      நல்லறம் இயற்றி வந்தோம்.
எந்நாளும் பிறர்க்குத் தீமை
      எங்களால் நடந்த தில்லை.
சின்னதோர் நன்று செய்தார்
      திறம்மறந் தறியோம் என்றே
இன்னிசை பாடும் அன்னார்
      இரண்டுள்ளம் இன்பம் கொள்ளும்.

முதியோளே வாழ்கின்றாள் என் நெஞ்சில்

விதைத்திட்டேன் அவளின் நெஞ்சில்
      என்றனை! நேற்றோ? அல்ல;
இதற்குமுன் இளமை என்ப
      தென்றைக்கோ அன்றைக் கேநான்!
கதையாகிக் கனவாய்ப் போகும்
      நிகழ்ந்தவை; எனினும் அந்த
முதியோளே வாழு கின்றாள்
      என்நெஞ்சில் மூன்று போதும்.

இருக்கின்றாள் அது எனக்கின்பம்

புதுமலர் அல்ல; காய்ந்த
      புற்கட்டே அவள்உ டம்பு!
சதிராடும் நடையாள் அல்லள்
      தள்ளாடி விழும் மூதாட்டி!
மதியல்ல முகம்அ வட்கு
      வறள்நிலம்! குழிகள் கண்கள்!
எதுஎனக் கின்பம் நல்கும்?
      "இருக்கின்றாள்" என்ப தொன்றே!

நினைக்கின்றாள் நினைக்கின்றேன் நான்

இனிக்கின்ற தமிழை அன்னாள்
      இசைக்கின்ற ஆற்றல் இல்லை.
தனித்துள்ளேன் ஒருபால்! அன்னாள்
      தனித்துள்ளாள் மறுபு றத்தே!
எனைக்கண்டும், என்னைத் தொட்டும்
      பயில்கிலாள்; எனினும் என்னை
நினைக்கின்றாள், நினைக்கின் றேன்நான்;
      நிலைக்கின்ற தென்பால் இன்பம்!

அன்புள்ளம் காணுகின்றேன்
அகத்தின்பம் காணுகின்றேன்

என்பும்நற் றோலும் வற்ற,
      ஊன்றுகோல் இழுக்கி வீழத்
தன்புது மேனி, காலத்
      தாக்கினால் குலைய லானாள்.
என்முது விழிகா ணற்கும்
      இயலாதே! எனினும் அன்னாள்
அன்புள்ளம் காணு கின்றேன்!
      அகத்தி ன்பம் காணு கின்றேன்!

பேரர் அம்மாயி என்றழைப்பர்
அது கேட்பேன் இன்பம் செய்யும்

செம்மா துளைபி ளந்து
      சிதறிடும் சிரிப்பால் என்னை
அம்மாது களிக்கச் செய்வாள்
      அதுவெலாம் அந்நாள்! இந்நாள்
அம்மணி நகைப்பும் கேளேன்
      ஆயினும் பேரர் ஓர்கால்
"அம்மாயீ" என்பார்! கேட்பேன்
      அமிழ்தினில் விழும்என் நெஞ்சம்!

அன்னை என்றழைப்பர் மக்கள்
இன்புறும் என்றன் நெஞ்சம்


இன்னிழை பூண்டி ருப்பாள்
      அத்தான்என் றழைப்பாள் என்னை
நன்மொழி ஒன்று சொல்வாள்
      நான்இசை யாழே கேட்பேன்!
அன்னவை அந்நாள்! இந்நாள்
      அன்னவள் தன்னை நோக்கி,
'அன்னாய்' என் றழைப்பார் மக்கள்
      அதுகேட்பேன்; இன்பம் கொள்வேன்!

அவள் உள்ள உலகம்
எனக்கு உவப்பூட்டும்


உயிர்ப்பினை நிலைநி றுத்தும்
      நன்மழை; உலக நூலைச்
செயிர்ப்பற நீத்தார்* செய்வார்;
      செவ்வேஅவ் வறநூல் தன்னை
முயற்சியிற் காப்பார் மன்னர்.
      எனக்கென்ன இனி?அம் மூதாட்டி
உயிர்வாழ்வாள் ஆத லற்றான்
      உவப்பூட்டும் எனக்கிவ் வையம்!

(*நீத்தார் - துறந்தார்)

அவர் வாழ்வது
அவள்மேல் வைத்த காதல்


வாழாது வாழ்ந்து மூத்த
      மணவழ குள்ளம் இ·தே!
ஆழாழிப் புனல்அ சைவை,
      ஆர்ப்பினை எண்ணி டாது
வீழுற அதனில் வீழ்த்தும்
      இருப்பாணி போல்அ வள்மேல்
காழுற மனத்தில் வைத்த
      காதலால் வாழு கின்றார்!

என் நெஞ்ச மெத்தையில் துயிலுகின்றான்

காம்பரிந் திட்ட பூவைக்
      கட்டிலில் பரப்பி, மேலே
பாம்புரி போலும் மேன்மைப்
      பட்டுடை விரித்துப் போட்டால்,
தீம்பாலைப் பருகி அன்பன்
      சிறக்கவே துயில்வான் இன்றும்
மேம்பாட்டிற் குறைவோ? நெஞ்ச
      மெத்தையில் துயிலு கின்றான்.

நெஞ்சக் காட்டில் உலவும் மான்

பாங்குற மணியும் பொன்னும்
      பதித்தபாண் டியன்தேர் போல
ஈங்கிந்தத் தாழ்வா ரத்தில்
      எழிலுற உலவா நிற்பான்;
ஏங்குமா றில்லை இன்றும்
      என்னிரு கண்நி கர்த்தோன்
நீங்காமான் போல்என் நெஞ்சக்
      காட்டினில் உலவு கின்றான்.

என் நெஞ்சில் தேன்மழை அவன்

மெய்யுற வாய்சு வைக்க
      விழி,அழ குண்ண, மூக்கு
வெய்யசந் தனத்தோள் மோப்ப,
      விளைதமிழ் காது கேட்க,
ஐயன்பால் புலன்கள் ஐந்தால்
      அமிழ்தள்ள வேண்டும்! இந்நாள்
பெய்கின்றான் என்நெஞ் சத்தில்
      தேன்மழை, பிரித லின்றி!

அவனைச் சுமக்க மனம் ஓயாது

அறம்செய்த கையும் ஓயும்
      மக்களை அன்பால் தூக்கிப்
புறம்போன காலும் ஓயும்!
      செந்தமிழ்ப் புலவர் சொல்லின்
திறம்கேட்ட காதும் ஓயும்!
      செயல்கண்ட கண்ணும் ஓயும்!
மறவனைச் சுமக்கும் என்றன்
      மனமட்டும் ஓய்த லில்லை.

அயலவன் கண்படாமல் காத்து வந்தேன்

வெயில்பட்டால் உருகிப் போகும்
      மெழுகினால் இயன்ற பாவை!
பெயும்மழை பட்ட போதே
      கரையும்கற் கண்டின் பேழை!
புயல்பட்டால் நிலைகொள் ளாத
      பூம்பொழில்! என்ம ணாளன்
அயலவள் கண்பட் டால்சீர்
      அழியும்என் றன்பால் காத்தேன்.

தப்பொன்றும் இன்றி என் தமிழனைக் காத்தேன்

தொப்பென்ற ஓசை கேட்டால்
      துயருறும் என்றும், சாற்றில்
உப்பொன்று குறைந்தால் உண்ணல்
      ஒழியுமே என்றும், ஒன்றை
ஒப்பெனில் ஒப்பா விட்டால்
      உடைபடும் உள்ளம் என்றும்
தப்பொன்றும் இன்றி என்றன்
      தமிழனை அன்பாற் காத்தேன்.

எத்தீமை நேருமோ? என்று நினைப்பாள் மூதாட்டி

தற்காத்துத் தற்கொண் டானைத்
      தான்காத்துத் தகைமை சான்ற
சொற்காத்துச் சோர்வி லாளே
      பெண்என்று வள்ளு வர்தாம்
முற்சொன்ன படியே என்றன்
      முத்தினைக் காத்து வந்தேன்.
எத்தீமை மனக்கு றைச்சல்
      எய்துமோ எனநி னைப்பேன்!

எனக்குக் கொடுப்பதைத் தாத்தாவுக்குக் கொடு

அகவல்

பாட்டியே, சிறுமலைப் பழங்கள் இந்தா
என்று பேரன் ஈய வந்தான்.
தம்பியே உன்றன் தாத்தா வுக்குக்
கொடுபோ! என்று கூறிக்
கொடுக்கப் போவதைக் கூர்ந்துநோக் குவளே!

பொரிமாத் தந்தார் உண்டாள்
நாணிப்போனார் தம்மிடம்

வலக்கால் குத்திட்டும், இடதுகால் மடித்தும்,
உட்கார்ந் திலக்கியம் உற்று நோக்கிடும்
மணவழ கர்தம் மனையாள் நினைவாய்க்
கணுக்கால் கையூன் றியபடி ஊன்றுகோல்
துணையடு தம்,தலை யணைக்கீழ் வைத்த
பொதிந்த பொரிமாப் பொட்டணம் தூக்கி
எழுந்தார். விழிப்புடன் விழுந்து விடாமே
நடந்து,தம் துணைவியை நண்ணினார்.அப்போது
மருமகள் நகைமுத்து வந்து, "மாமா
என்ன வேண்டும்? ஏன் வந்தீர்கள்?
என்னிடம் கூறினால் யான்செய் யேனா?"
என்றாள். பொரிமா இடையில் மறைத்தும்
தன்துணை மேலுள்ள அன்பை மறைத்தும்
ஒன்று மில்லை ஒன்று மில்லை
என்று சொல்லொணாத் துன்பம் எய்தினார்!
மருகி போனாள். கிழவர் துணைவியின்
அருகுபோய்ப் பொரிமா அவளிடம் நீட்டி
உண்ணென்று வேண்டி நின்றார்!
உண்டாள்; நாணிப் பிரிந்தார் உவந்தே!

அவள் தனிச்செல்ல
மணவழகர் பொறார்


தங்கம் கொல்லைக்குத் தனியே செல்வதை
மணவழகு நோக்க மனது பொறாராய்
மருகியை அழைப்பார்; மருகி வந்து,தன்
துணைவிக்குத் துணைசெயக் கண்டால்
தணிவார் தமது தணியா நெஞ்சமே.

அவனுக்குத் தொண்டு செய்தலே அவளுக்கின்பம்

மணவழ கர்தாம் மறுபுறம் நகர்ந்தால்
அணிமையிற் சென்றே அன்பன் படுக்கையைத்
தட்டி, விரிப்பு மாற்றித் தலையணை
உறைமாற் றுவாள் அவள்; மணந்தநாள்
பெறுவதைப் பார்க்கிலும் பெறுவாள் இன்பமே.

முன்னாள் நடந்ததை மூதாட்டி இந்நாள் நகைமுத்திடம் இயம்புவாள்

ஒருநாள் மாலைப் பெருமூ தாட்டி
நடந்த ஒன்றை நகைமுத் தாளிடம்
மிகுமகிழ்ச் சியுடன் விளம்ப லுற்றாள்;
செம்பில் எண்ணெயும் சீயக் காயும்
ஏந்தி மணாளரை எழுந்திரும் என்றேன்.
"உனக்கேன் தொல்லை உன்றன் பணிச்சியை
எண்ணெய் தேய்க்க அனுப்புக" என்றார்.
"நானே அப்பணி நடத்துவேன்" என்றேன்.
"மானே, மெல்லிடை வஞ்சியே, நீபோய்க்
கிளியுடன் பேசியும் ஒளியாழ் மிழற்றியும்
களியுடன் இருப்பாய் கவலைஏன்?" என்றார்.
அறவே மறுத்ததால் அறைக்குச் சென்றேன்.
பின்னர்ஓர் பணிச்சி என்மணா ளர்க்கே
எண்ணெய் இட்டுத் தண்சீ யக்காய்
தேய்த்து வெந்நீர் சாய்த்துத் தலைமுடி
சிக்கறுத் திருந்தாள். திடும்என அங்கே
என்றன் மாமியார், "என்னன்பு மகனே,
ஏதுன் மனைவி இப்ப ணிச்சியை
உனக்கு முழுக்காட்ட ஒப்பிய"தென்றார்.
அதற்கென் மணாளர், "ஆம்அவள் என்னை
எண்ணெய்இட் டுக்கொள எழுந்திரும் என்றாள்.
ஒப்பேன் என்றேன். உடனே உட்சென்று
இப்ப ணிச்சியை அனுப்பினாள்" என்றார்.
அப்படி யாஎன் றன்புறு மாமியார்
இப்புறம் திரும்பி எதிரில் நோக்க,
முக்கா டிட்டே முகம்மறைத் தபடி
சிக்கறுத் திருந்த சிறிய பணிச்சியைத்
"தங்கத் திடத்தில் சந்தனம் கொடுத்தே
இங்கே அனுப்படி" என்றார். பணிச்சி
அகலும் போது முக்கா டகன்றது.
தங்கமே பணிச்சி என்பதை
அங்கென் மாமியார், அன்பர்கண் டனரே!

மணிமொழியாரிடம் மணவழகர்

மனத்தில் மாசு வராமையே அறம்எனும்
வள்ளுவர் வாய்மொழி மறந்தறி யேன்நான்;
அறம்எனல் இல்லறம் துறவறம் ஆக
இருவகை என்பதை ஒருகாலும் ஒப்பேன்;
அறம்எனப் பட்டதே இல்வாழ்க் கைஎன்றார்
வள்ளுவர் ஆதலால்! உள்ளம் கவர்ந்த
ஒருத்தி உளத்தை உரிமையாய்க் கொண்டேன்.
அதுதான் மணமென அறிஞர் கூடிப்
புதுவாழ்வு பெறுகெனப் புகன்றனர் வாழ்த்தே.
இடும்பை தீர்ப்பவள் என்மனை! அவள்என்
குடும்ப விளக்கு! வேறேது கூறுவேன்?
என்பால் அன்பை நிரம்ப ஏற்றவள்
நன்மக்க ளீன்று நலமுறக் காத்தாள்;
நவையறு கல்வியால் நன்மக் கள்தமை
அவையினில் முதன்மை அடையச் செய்தேன்;
அறவழி யாலே நிறைபொருள் ஆக்கினேன்.
நெஞ்சினில் உற்றிடும் நிலைவேறு பாட்டால்
நொடிதொறும் நொடிதொறும் நூறுநூ றாயிரம்
இறப்பும் பிறப்பும் எய்தும் அன்றோ?
எய்தவே இன்பம் ஏகலும் மீளலும்
அடையும் அன்றோ? அவ்வா றின்றி
அலைகடல் சூழ்நில வுலகில் இந்நாள்
நிலைத்த இன்பம் பெற்றதென் நெஞ்சம்!"
எனமண வழகர் இயம்பிய அளவில்,
"இதற்குமுன் நிகழ்ந்த இன்ப நிகழ்ச்சிகள்
உண்டெனில் அவற்றில் ஒன்று கூறுக!"
எனமணி மொழியார் இனிது கேட்டார்.
நன்றென அழகர் நவில லானார்:

இளமையில் நடந்த இன்ப நிகழ்ச்சி

"படித்தும் கேட்டும், பாடியும் ஆடியும்
இருந்த நண்பர் பிரிந்து போகவே,
என்றன் அறையில் யான்தனிந் திருந்தேன்.
நிலாமுகத் தாள்என் நெஞ்சைத் தொட்டாள்.
தனிமையை நெஞ்சு தாங்க வில்லை.
தனித்திருக் கின்றிரோ தக்க நண்பருடன்
இனித்திருக் கின்றிரோ என்றுபார்த் துவர
என்னை அனுப்பினாள் என்றன் தலைவி
என்றாள் தோழி என்னெதிர் வந்து!
போய்ச்சொல் என்றேன், போனாள்; மீண்டும்
வந்து, தலைவனே, வஞ்சி சோறுகறி
ஆக்கு கின்றாள். அடுப்பில் சோறு
கொதிக்கின்ற தெ"ன்று கூறினாள். "இங்கே
குளிர்கின்றதோ" எனக் கூறி அனுப்பினேன்.
"இறக்கும் நேரம்" என்றாள் வந்து!
"வாழும் நேரமோ இங்கு மட்டும்?"
என்றேன். சென்றாள். உடனே என்றன்
இனிய அமிழ்து தனிஎனை அடைந்தாள்.
"அத்தான் பொறுப்பீர் அடுப்பில் வேலை
முடித்தோடி வருவேன்" என்று மொழிந்தாள்.
"தோழிபார்க் கட்டும் சோறாக் கும் பணி"
என்றேன். அதற்கவள், என்முகம் தாங்கி
"தலைவர் விருப்பம் தலைவி அறிவாள்;
பொறுப்பிலாத் தோழி அறிவ துண்டோ?"
என்றாள். "மாமியார் இல்லையா?" என்றேன்.
"அந்தோ அந்தோ?" என்றுதன் அங்கையால்
தன்வாய் மூடித் "தளர்ந்த கிழவியை
அடுப்பில் விட்டுத் தடித்த மருமகள்
கொழுந னோடு கொஞ்சினாள் என்று
வையம் இகழுமே" என்று, வஞ்சி
தொடக்க மருத்துவ மாகமுத் தமொன்று
கொடுத்துக் குடுகுடென்று கடிதே ஓடிச்
சமையல் முடித்துத் தமிழோ
அமிழ்தோ எனச்சோ றிட்டழைத் தாளே!

மணிமொழியார் நிலைத்த இன்பமாவ தெப்படி என்றார்

"உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடிநினைந் தெண்ணுவ" என்று
மூத்தாள் ஔவை மொழிந்த வண்ணம்
என்றும் மக்களின் எண்ணம் பலவாம்;
எண்ணம் தோற்பதும் ஈடே றுவதும்
ஆகும். அதனால், அகத்தின் நிலைமை
நல்லதும் ஆகும்; நலிவதும் ஆகும்.
இவற்றையே நொடிதோறும் ஏற்படு கின்ற
ஆயிரம் ஆயிரம் பிறப்பிறப் பென்றீர்.
இவைகளே நிலையா இன்பதுன் பங்கள்!
"நிலைத்த இன்பம் நேர்ந்த தென்றீரே
வழுத்துவீர் அதை"என மணிமொழி கேட்டார்;
அதுகேட் டழகர் அறிவிக் கின்றார்;
"செம்மலர் பறிக்கச் செல்வதும் இலைநான்!
சேறும் பூசித் திரும்பலும் இல்லை.
பற்றில்லை; தீமை உற்றதும் இல்லை.
தீமையில் லாவிடம் இன்பம் திகழும்,
என்ன என்னிடம் மீதி என்றால்.
ஒன்றே! ஒன்றே! அதன்பெயர் உயிர்ப்பாம்.
அவ்வு யிர்ப்போ அன்பி ருப்பதால்
இருக்கின் றதுவென இயம்புவர் வள்ளுவர்;
'அன்பின் வழிய துயிர்நிலை' அறிக.
என்றன் அன்புக் குரியவர் எவரெனில்
மனைவி, மக்கள், பேரர், உறவினர்.
ஆயினும் மனைவி,என் அன்புக் கருகில்
இருப்பவள், என்மேல் அன்புவைத்(து)
இருப்பவள்" என்றார் மணவ ழகரே

மணவழகர் இரவு நன்றாகத் தூங்கினையோ என்றார்

அறுசீர் விருத்தம்

சேவல்கூ விற்று; வானம்
      சிரித்தது; நூற்றைந் தாண்டு
மேவிய அழகர் கண்கள்
      விரிந்தன! கிழவி யாரின்
தூவிழி மலர்ந்த! ஆங்கே
      துணைவனார் துணையை நண்ணிப்
"பாவையே தூக்கப் பொய்கை
      படிந்தாயோ இரவில்" என்றார்.

அயர்ந்து தூங்கியதாகத் தங்கம் சாற்றினாள்

குடித்தோமே பாலின் கஞ்சி;
      குறட்பாவின் இரண்டு செய்யுள்
படித்தோமே, அவற்றி னுக்கு
      விரிவுரை பலவும் ஆய்ந்து
முடித்தோமே! மொணமொ ணென்று
      மணிப்போறி சரியாய்ப் பத்தும்
குறித்தது துயின்றேன்;இப்போ(து)
      அழைத்தீர்கள் விழித்தேன் என்றாள்.

தம் தூக்க நலம் சொல்வார் தள்ளாத கிழவர்

நிறையாண்டு நூறும் பெற்ற
      நெடுமூத்தாள் இதனைக் கூற
குறைவற்ற மகிழ்ச்சி யாலே
      அழகரும் கூறு கின்றார்:
நிறுத்தினோம் நெடிய பேச்சை
      பொறி,மணி பத்தே என்று
குறித்தது துயின்றேன் சேவல்
      கூவவே எழுந்தேன் என்றார்.

கிழவர் உடனிருப்பதில் கிழவிக்கு நாணம்

புதுக்காலை; குளிர்ந்த காலைப்
      போதிலே உனைநெ ருங்கி
இதுபேசும் பேறு பெற்றேன்
      என்றனன் கிழவோன்! அன்னாள்
எதிர்வந்த அமிழ்தே, அன்பே
      யான்பெற்ற இன்பம் போதும்
அதோ நகைமுத்து வந்தாள்
      நமைக் காண்பாள் அகல்வீர் என்றாள்.

நூற்றைந்து ஆண்டுவரை நீவிர் வாழக் காரணம் என்ன?

எண்சீர் விருத்தம்

மற்றொருநாள் காலையிலே மணிமொழியார் வந்தார்;
      மணவழகர் அன்போடு வரவேற்புச் சொன்னார்.
"இற்றைநாள் நூற்றைந்தா ண்டாயின உமக்கே
      இத்தனைநாள் உயிர்வாழக் காரணந்தான் என்ன?
சற்றதனை உரைத்திடுக!" எனக்கேட்டார் மொழியார்.
      "எந்தைதாய் நல்லொழுக்க முடையவர்கள்; என்னைக்
கற்றவரில் ஒருவன்என ஆக்கிவைத்தார்; நானும்,
      கருத்தினிலும் சேர்த்தறியேன் தீயழுக்கம் கண்டீர்.

நன்மனைவியுடையார் எல்லாம் உடையார்

இவையன்றி நானடைந்த மனைவியோ என்றால்
      எனக்கினியாள்! என்னிரண்டு கண்களே போல்வாள்;
நவையில்லாள்; நான்வாழத் தன்னுயிரும் நல்கும்
      நாட்டத்தாள்; அவளாலே என்வாழ்க்கை காத்தேன்;
அவளாலே நல்லொழுக்கம் தவறாமை காத்தேன்;
      அவளாலே என்குடும்பம் மாசிலதாய்ச் சற்றும்
கவலையிலா தாயிற்று; நன்மனைவி உடையார்!
      கடலுலகப் பெரும் புகழும் வாழ்நாளும் உடையார்!

உலக அமைப்புக்கு இலேசு வழி

இவ்வுலகில் அமைதியினை நிலைநாட்ட வேண்டின்
      இலேசுவழி ஒன்றுண்டு பெண்களைஆ டவர்கள்
எவ்வகையும் தாழ்த்துவதை விட்டொழிக்க வேண்டும்.
      தாய்மையினை இழித்துரைக்கும் நூலும்ஒரு நூலா?
செவ்வையுற மகளிர்க்குக் கல்விநலம் தேடல்
      செயற்பால யாவினுமே முதன்மைஎனக் கொண்டே
அவ்வகையே செயல்வேண்டும்! அறிவுமனை யாளால்
      அமைதியுல குண்டாகும் என்ன இதில் ஐயம்!

மகளிர் ஒழுக்கம் பூண்டால் மருத்துவ நிலையமே வேண்டாம்

மகளிரெல்லாம் கல்வியறி வொழுக்கமுள ராயின்
      மருத்துவமே வேண்டாவாம்; பிணிமூப்பு வாரா.
மகளிரெல்லாம் அரசியலைக் கைப்பற்றி ஆண்டால்
      மாநிலத்தில் போரில்லை; சாக்காடும் இல்லை;
துகளில்லா ஒருசிறிய உலகுண்டு கேட்பீர்
      தொல்லையில்லா அவ்வுலகம் யான்வாழும் இல்லம்.
பகையில்லை. அங்கின்மை இல்லை,பிணி இல்லை
      பழியில்லை, என்துணைவி அரசாண்ட தாலே".

உங்கட்குப்பின் உங்கள் குடும்பம் எப்படி நடக்கும்?

என்றுரைத்தார் மணவழகர்; இதைஎல்லாம் கேட்ட
      எழிலான மணிமொழியார்" உங்கட்குப் பின்னர்
நன்றுகுடித் தனம்நடக்கக் கூடுமோ?" என்றார்
      "நான்நல்லன், என்மனைவி நனிநல்லள்; நாங்கள்
என்றும்மன நலம்உடையோம். ஆதலினால் அன்றோ,
      எம்மக்கள் நல்லவர்கள்; எம்மக்கள் கொண்ட
பொன்னுறவைப் பெற்றோரும் நல்லர்நனி நல்லர்
      பொலியும்இனி யும்குடும்பம்" என்றுரைத்தார் அழகர்.

தள்ளாத கிழப்பருவத்தில் இன்பம் எய்துதல் உண்டு

"கையிலே வலிவில்லை காலில்வலி வில்லை;
      கண்ணில்ஒளி இல்லைநாச் சுவையறிய வில்லை;
மெய்யூறும் இல்லைஒலி காதறிய வில்லை;
      விலாஎலும்பின் மேற்போர்த்த தோலுமில்லை; நீவிர்
செய்வதொரு செயலில்லை; இன்பமுறல் ஏது?
      தெரிவிப்பீர்" என்றுமணி மொழியார்தாம் கேட்கத்
துய்யமுது மணவழகர் உடல்குலுங்கச் சிரித்துச்
      சொல்லலுற்றார், முதியோளும் நகர்ந்துவந்துட் கார்ந்தாள்.

இன்புறும் இரண்டு மனப்பறவைகள்

"வாய்மூக்குக் கண்காது மெய்வாடி னாலும்
      மனைவிக்கும் என்றனுக்கும் மனமுண்டு கண்டீர்
தூய்மையுறும் அவ்விரண்டு மனம்கொள்ளும் இன்பம்
      துடுக்குடைய இளையோரும் படைத்திடுதல் இல்லை.
ஓய்வதில்லை மணிச்சிறகு! விண்ணேறி, நிலாவாம்
      ஒழுகமிழ்து முழுதுண்டு பழகுதமிழ் பாடிச்
சாய்வின்றிச் சறுக்கின்றி ஒன்றையன்று பற்றிச்
      சலிக்காதின் பங்கொள்ளும் இரண்டுமனப் பறவை.

இருமனம் இரு மயில்கள்;
தேன்சிட்டுகள்; கிளிகள்; அமிழ்தின் கூட்டு

"அருவியெலாம் தென்பாங்கு பாடுகின்ற பொதிகை
      அசைதென்றல் குளிர்வீசும் சந்தனச்சோ லைக்குள்
திரிகின்ற சோடிமயில் யாமிரண்டு பேரும்;
      தெவிட்டாது காதல்நுகர் செந்தேன்சிட் டுக்கள்!
பெருந்தென்னங் கீற்றினிலே இருந்தாடும் கிளிகள்!
      பெண்இவளோ ஆண்நானோ எனவேறுவேறாய்ப்
பிரித்துணர மாட்டாது பிசைந்தகூட் டமிழ்து!"
      பேசினார் இவ்வாறு; கூசினள் மூதாட்டி.

அவள் தூங்கவில்லை இரவுமணி பத்தாகியும்

அறுசீர் விருத்தம்

மாநில மக்கள் எல்லாம்
      தூங்கும்நள் ளிரவில், தங்கம்
ஏனின்னும் தூங்க வில்லை?
      இருநுனி தொடவ ளைக்கக்
கூனல்வில் போலே மெய்யும்
      கூனிக்கி டந்த வண்ணம்
ஆனதோ மணிபத் தென்றாள்
      மணிப்பொறி அடிக்கக் கேட்டே.

அவனிடம் நகர்ந்து செல்லுகிறாள்

"அவன்துயின் றானோ?" என்னும்
      ஐயத்தால் தான்தூங் காமல்
கவலைகொள் வாளை எங்கும்
      காண்கிலோம் இவளை அல்லால்!
துவள்கின்ற மெய்யால் தன்கைத்
      துடுப்பினால் தரைது ழாவித்
தவழ்கின்றாள் தன்ம ணாளன்
      படுக்கையைத் தாவித் தாவி.

ஒரு தலையணையில் அருகருகு கிடந்தார்கள்

"வருகின்றா யோடி தங்கம்
      வா"என்றோர் ஒலிகேட் கின்றாள்.
சருகொன்று காற்றால் வந்து
      வீழ்ந்தது போலே தங்கப்
பெரியாளும் பெரியான் அண்டைத்
      தலையணை மீது சாய்ந்தாள்.
அருகரு கிருவர்; மிக்க
      அன்புண்டு; செயலே இல்லை!

இருவர் களிப்பும் இயம்பு மாறில்லை

ஒளிதரும் அறைவி ளக்கும்!
      ஒளிக்கப்பால் இவர்கள் வாழ்வார்!
வெளியினை இருளும் கௌவும்
      இருட்கப்பால் விளங்கு கின்றார்!
எளிதாகத் தென்றல் வீசும்
      என்பயன்? அவர்அங் கில்லை
களித்தன மனம்இ ரண்டும்
      கழறுமா றில்லை அ·தே.

மனவுலகில் இருவர் பேச்சுக்கள்

இருமனம் அறிவு வானில்
      முழங்கின இவ்வா றாக
"பெரியோளே என்நி னைப்பால்
      தூங்காது பிழைசெய் கின்றாய்"
"உரியானே, எனையே எண்ணி
      உறங்காது வருந்து கின்றாய்"
"பெருந்தொல்லை தூக்க மின்மை"
      "நற்றூக்கம் பெரிய இன்பம்!"

என் நினைவைவிட்டுத் தூங்குக

அரைநாளின் தூக்க மேஇவ்
      வாறின்பம் அளிக்கு மானால்
ஒருநாளின் முழுதும் தூங்கல்
      ஒப்பிலா இன்பம் அன்றோ?
"அரிவையே என்றன் நெஞ்சை
      அள்ளாதே தனியே தூங்கே."
"உரியானே என்ம னத்தைப்
      பறிக்காதே உறக்கங் கொள்வாய்"

நெடிய தூக்கம்
நீடிய இன்பம்

தூங்கினார் கனவும் அற்ற
      தூக்கநல் லுலகில்! பின்னர்
ஏங்கினார் விழித்த தாலே!
      இன்பமே விரும்ப லானார்!
தூங்குவோம்! நிலைத்த இன்பம்
      துய்ப்போம்நாம் என்றார்! நன்றே
தூங்குகின் றார்நல் லின்பம்
      தோய்கின்றார் வாழ்கின் றாரால்!

முற்றும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

கள்ளுண்ணாமை

கள்ளுண்ணாமை குறள் 921 இலிருந்து 930 முடிய குறள் 921: உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார் . பொருள்:...