google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: சிற்றூர், பேரூர், பட்டணம்

ஞாயிறு, 16 அக்டோபர், 2022

சிற்றூர், பேரூர், பட்டணம்

சிற்றூர்

சின்னப் பள்ளி ஒன்றுண்டு
பெரிய கோயில் பல உண்டு.
நன்செய் புன்செய் நாற்புறமும்
நடவும் உழவும் இசைபாடும்
தென்னையும் பனையும் பலமரமும்
செடியும் கொடியும் அழகு தரும்
நன்னீர் வாய்க்கால் ஏரிகுளம்
நலம் கொழிப்பது சிற்றூராம்.

மச்சு வீடு ஏழெட்டு
மாடி வீடு நாலைந்து
குச்சு வீட்டு வாயில்கள்
குனிந்து போகப் பலவுண்டு
தச்சுப் பட்டறை ஒன்றுண்டு
தட்டார் பட்டரை ஒன்றுண்டு
அச்சுத் திரட்டும் கருமாரின்
பட்டறை உண்டு சிற்றூரில்.

காக்கா ஒருபுறம் கா கா கா
குருவி ஒருபுறம் கீ கீ கீ
மேய்க்கும் ஆடு மே மே மே
மின்னும் கோழி கோ கோ கோ
பாக்கும் பூனை மீ மீ மீ
பசுங் கன்றும் மா மா மா
ஆக்கும் இந்தக் கச்சேரி
அங்கங் குண்டு சிற்றூரில்.

கம்பும் தினையும் கேழ்வரகும்
கட்டித் தயிரும் சம்பாவும்
கொம்பிற் பழுத்த கொய்யா மா
குலையிற் பழுத்த வாழையுடன்
வெம்பும் யானைத் தலைபோல
வேரிற் பழுத்த நல்லபலா
நம்பிப் பெறலாம் சிற்றூரில்
நாயும் குதிரை போலிருக்கும்.

பேருர்

நிற்க வரும் புகை வண்டி
நிலையம் உள்ள பேரூர்!
விற்கத் தக்க விளைவை எல்லாம்
வெளியில் ஏற்றும் பேரூர்!
கற்கத் தக்க பள்ளிக்கூடம்
கச்சித மாய் நடக்கும்.
உற்றுப் பார்க்கக் கோயில் - மட்டும்
ஊரிற் பாதி இருக்கும்!

பத்துத் தெருக்கள் மிதிவண்டிகள்
பவனி வரும் எங்கும்.
முத்து வெள்ளைச் சுவர்வீட்டின்
முன்னால் பொறியியங்கி!
கத்தும் இரிசு கட்டைவண்டி
கடைச் சரக்கை ஏற்றி
ஒத்து நகரை நோக்கி ஓடும்
உள்ளூ ரைஏ மாற்றி!

(பொறியியங்கி-கார்)

செட்டுத் தனம் இல்லை பல
தேவை யற்ற உடைகள்.
பட்டணம் போகா தவர்கள்
பழங்காலத்து மக்கள்.
கட்டு டம்பு வற்றிப் போகக்
கையில் வெண்சு ருட்டுப்
பெட்டியோடும் உலவ வேண்டும்
இதன் பேர்தான் பேரூர்.

பட்டணம்

பல்கலைக் கழகம்
உயர்நிலைப் பள்ளி
செல்வச் சிறுவர்
செல்லும் பள்ளிகள்
நல்ல நூல்கள்
படிக்கப் படிப்பகம்
எல்லாம் இருக்கும்
அமைதி இராது!

பாட்டை நிறையப்
பலவகை வண்டிகள்
காட்டுக் கூச்சல்
கடமுடா முழக்கம்
கேட்டால் காதே
கெட்டுப் போகும்
ஈட்ட ஆலைகள்
இருபது கூவும்.

தூய ஆடைத்
தோகை மாரும்
ஆய உணர்வின்
ஆடவர் தாமும்
ஓயா துழைக்கும்
பலதுறை மக்களும்
தேய வழிகள்
செல்வார் வருவார்.

வெள்ளி மலையும்
தங்க மலையுமாய்
உள்ள வீடுகள்
வானில் உயரும்
அள்ளும் அழகுடை
அலுவல் நிலையம்
கொள்ளா வணிகம்
கொண்டது பட்டணம்!

நாடக சாலைகள்,
நற்படக் காட்சிகள்
ஆடல் பாடல்
அமையும் அவைகள்
ஈடிலாப் புலவர்
பேச்சுமன் றங்கள்,
காடுகள் சோலைகள்
கவிந்தது பட்டணம்.

- பாவேந்தர் பாரதிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

கள்ளுண்ணாமை

கள்ளுண்ணாமை குறள் 921 இலிருந்து 930 முடிய குறள் 921: உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார் . பொருள்:...