google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: குன்றக்குடி முருகன் கோயில்

திங்கள், 23 மே, 2022

குன்றக்குடி முருகன் கோயில்

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி எனும் ஊரில், குன்றின் உச்சியில் சண்முகநாதர், வள்ளிதெய்வானையுடன், ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார்.

மதுரையிலிருந்து காரைக்குடி செல்லும் வழியில், திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் வழியாக, எண்பது கிலோ மீட்டர்  தொலைவில் இந்த முருகன் கோயில் உள்ளது.

பிள்ளையார்பட்டியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்குடியில் இருந்து பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. பிள்ளையார்பட்டி கோயில் திருப்பத்தூரில் இருந்து பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

குன்றக்குடி முருகன் ஆலயத்தில் காவடி வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். மயில் உருவம் கொண்ட மலை மீது இந்த மூலவரான சண்முகநாதர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். முருகப்பெருமானின் சாபத்தால் மயிலே, மலையாகிப்போனதாகவும், அந்த மலைமீதுதான் முருகப்பெருமான் வீற்றிருப்பதாகவும் தலபுராணம் கூறுகிறது.

ஒரு முறை அசுரர்கள், தேவர்களை அழிக்கும் நோக்கில் செயல்பட்டனர். அப்போது முருகப்பெருமானின் மயிலிடம் அசுரர்கள், ‘நான்முகனின் வாகனமான அன்னமும், திருமாலின் வாகனமான கருடனும் நாங்கள்தான் மயிலை விட சக்தி படைத்தவர்கள், வேகமாக பறக்கக் கூடியவர்கள் என்று கூறுகின்றனஎன்று பொய் கூறினர். இதைக் கேட்டு கண் மூடித்தனமாக கோபம் கொண்ட மயில், பிரம்மாண்ட உருவம் எடுத்து, கருடனையும், அன்னத்தையும் விழுங்கிவிட்டது.

இதுபற்றி பிரம்மனும், திருமாலும், முருகப்பெருமானிடம் சென்று முறையிட்டனர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற முருகப்பெருமான், மயிலிடம் இருந்து அன்னத்தையும், கருடனையும் மீட்டுக் கொடுத்தார். மேலும் தவறான வார்த்தைகளைக் கேட்டு, கண்மூடித்தனமாக நடந்துகொண்ட மயிலை, மலையாக மாறிப்போகும்படி சாபமிட்டார். மயிலும் தன் தவறை உணர்ந்து அரச வனத்துக்கு (குன்றக்குடி) வந்து மலையாகிப்போனது. மலையாக இருந்தபடியே முருகப்பெருமானை நோக்கி தவம் இருந்தது. தவத்தில் மகிழ்ந்த முருகப்பெருமான், மயிலுக்கு சாபவிமோசனம் அளித்தார். பின்னர் மயில் உருவத்தில் இருந்த அந்த மலை மீதே எழுந்தருளி அருள்புரிந்தார்.

இங்கு முருகப்பெருமான், சண்முகநாதர் என்ற திருநாமத்துடன், ஆறுமுகங்களோடும், பன்னிரு கரங்களோடும் எழுந்தருளியுள்ளார். செட்டி முருகன், மயூரகிரிநாதர், மயில் கலைக்கந்தன், குன்றை முருகன், குன்றையூருடையான், தேனாறுடையான் என்பது இத்தல முருகனின் வேறு பெயர்களாகும்

இத்தலம் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற ஸ்தலம். அருட்திரு பாம்பன் குமரகுருதாச சுவாமிகளும் முருகனைப்பற்றிப் பாடியுள்ளார்.

இங்கு நாரதர், கண்ணபிரான், சூரியன், விஸ்வாமித்திரர், வசிஷ்டர், கருடன், மன்மதன் மற்றும் இந்திரனும் தேவராதியருடன் செட்டிமுருகனை வழிபட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

பங்குனி உத்திரத்திலும், தைப்பூசத்திலும் பக்தர்கள் சேவடி தேய காவடியும், பால் போல் பெருகிவாழ பாற்குடமும் எடுத்து தேனாற்றுடையானை வணங்குகின்றனர்.

மேலும், சித்திரையில் பால் பெருக்குவிழா, வைகாசி விசாகம், ஆனி மகாபிஷேகம், ஆடியில் திருப்படி பூஜை, ஆவணி மூலப்பிட்டுத் திருவிழா, புரட்டாசி மாதம் அம்பு போடும் திருவிழா, ஐப்பசியில் சூரனை வேலால் சம்கரிக்கும் கந்தர் சஷ்டி விழாவும் மிக மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.

இங்கு சண்முகநாதரும், அவர்தம் துணைவியரும் தனித்தனி மயில் வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பது ஆணும், பெண்ணும் சரிசமம் என்பதை உணர்த்துகின்றது.

தோல் வியாதிகள் நீங்க, சரவணப் பொய்கை தீர்த்தத்தில் நீராடி, இடும்பன் சன்னதியில் உப்பும், மிளகும் போட்டு வணங்குகின்றனர்.

நல்ல மகசூல் பெற்ற விவசாயிகள் தானியங்களை காணிக்கையாகச் செலுத்துகின்றனர். மேலும் நெல் மணிகளையும், அரிசியையும் மலைப்படிகளில் தூவி வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.

உயிர்காக்க விரும்பி ஈடாக, ஆடு, மாடு, கோழி முதலிய கால்நடைகளை மயூரகிரிநாதனுக்கு நேர்த்திக் கடனாகச் செலுத்துகின்றனர்.

அன்னதானம் செய்து ஏழைகளின் அரும்பசி ஆற்றுகின்றனர்.

ஜாதகம் சாதகமாய் இல்லாக் குழந்தைகளை, சண்முகநாதனுக்கு தத்துக் கொடுத்துவிட்டு, அக்குழந்தைகளை அவர்கள் திருமணத்திற்குச் சிலநாட்கள் முன்பு, அவனிடமிருந்து  தத்தெடுத்து பெற்றுக் கொண்டு குழந்தைகளின் தலை எழுத்தையே மாற்றும் விந்தை இக்கோவிலின் தனிச்சிறப்பு

அருணகிரிநாதர், திருப்புகழில் பல இடங்களில் குன்றைநகர் வேலனைகுருநாதாஎன்று வர்ணிப்பதின் மூலம் சண்முகநாதர் உலக மாந்தர்க்கு ஞானத்தை வழங்கும் குருவாக இங்கு எழுந்தருளியுள்ளார் என்பது கருத்து.

அதேபோல, குன்றக்குடிப் பதிகமும் முருகனை குருநாதனாக வர்ணிக்கிறது. இப்பதிகத்தைப் படித்தால் மனிதர்க்கு இவ்வுலகில் தேவையான செல்வம், புகழ், வெற்றி ஆகியன தங்குதடையின்றிக் கிடைக்கும். முக்கியமாக, குழந்தை வரம் வேண்டும் தம்பதியர் மனமுருகிப் பாடினால் நல்ல அழகான, ஞானத்தோடு கூடிய பிள்ளைகள் பிறக்கும் என்பது திண்ணம்.

இந்த ஆலயம் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.


ஆறிரு தடந்தோள் வாழ்க; அறுமுகம் வாழ்க;

வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க; குக்குடம் வாழ்க;

செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க; யானைதன் அணங்கு வாழ்க;

மாறிலா வள்ளி வாழ்க; வாழ்க சீர் அடியாரெல்லாம்!

                                   __கந்தபுராணம்

பொருள்:

பன்னிரு தோள்கள் வாழ்க; ஆறுமுகம் வாழ்க; மலைபிளந்த வேல் வாழ்க; சேவல் வாழ்க; மயில் வாழ்க; தெய்வயானை தேவியார் வாழ்க; வள்ளியம்மை வாழ்க; நல்லடியார் அனைவரும் வாழ்க!

 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

 பிற பின்பு, வணக்கம்.

அன்புடன்

ஆறுமுகம் நடராஜன்

பொன்னமராவதி புதுப்பட்டி, தற்போது மதுரையில் இருந்து.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

கள்ளுண்ணாமை

கள்ளுண்ணாமை குறள் 921 இலிருந்து 930 முடிய குறள் 921: உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார் . பொருள்:...