google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: குறள் 1309

திங்கள், 3 ஜனவரி, 2022

குறள் 1309

நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.

[காமத்துப்பால், கற்பியல், புலவி]

கலைஞர் உரை:
நிழலுக்கு அருகில் உள்ள நீர்தான் குளிர்ந்து இனிமையாக இருக்கும்; அதுபோல அன்புள்ளவர்களிடம் கொள்ளும் ஊடல்தான் இன்பமானதாக இருக்கும்.

மு.வரதராசனார் உரை:
நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது.

சாலமன் பாப்பையா உரை:
நீரும்கூட வெயிலுக்குக் கீழ் இராமல் நிழலுக்குக் கீழ் இருப்பது இனிமை; ஊடலும் அன்புள்ளவரிடம் மட்டுமே இனிமை ஆனது.

புலியூர்க் கேசிகன் உரை: நிழலிடத்தே உள்ளதானால் இனியதாகும்; அதுபோன்றே, ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தே நிகழுமானால், இனிமையைத் தருவதாகும்.

ஞா.தேவநேயப் பாவாணர் உரை:
நீரும் நிழலதே இனிது - உயிர்வாழ்க்கைக் கின்றியமையாத நீரும் நிழலடியுள்ளதே குளிர்ந்து இன்பந்தரும்; வெயிலிற் காய்ந்தது இன்பந்தராது; புலவியும் வீழுநர் கண்ணே இனிது - அதுபோலக் கலவியின்பத்தை மிகுக்கும் புலவியும் அன்புடையாரிடத்தே இன்பத்திற் கேதுவாகும்; அன்பிலாரிடத்தோ துன்பத்திற்கே யேதுவாகும். இது வெப்பநாடாதலின் முது வேனிற்கால நண்பகற் காட்டு வழிப்போக்கன் நீர் வேட்கை, நிலைமை நோக்கி 'நிழலதே இனிது ' என்றான். தழைத்தடர்ந்த தண்கா நிழலில் தங்கிய நீர் பனிநீர் போற் குளிர்ச்சிமிக்குத் தாகமுங் களைப்புந் தணித்தலின் இனிதாயிற்று, "காவோ டறக்குளத் தொட்டானும்" (திரிகடுகம் 70) என்றதை இத்தொடர்பில் நோக்குக. 'வீழுநர்' காதலரின் ஆற்றாமைக்கு நோதலும் கலவியின்கண் வேட்கையுமுடையவர். இவளுக்கு அவ்விரண்டுமின்மையின் இப்புலவி இன்னாதாயிற்று என்பதாம். ஏகாரம் ஈரிடத்தும் பிரிநிலை. இவற்றுள் முன்னது பிரித்துக் கூட்டப்பட்டது.

பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) நீரும் நிழலதே இனிது - உயிர்க்கு இன்றியமையாத நீரும் நிழலின் கண்ணதே இனிதாவது, ஏனை வெயிலின் கண்ணது ஆகாது; புலவியும் வீழுநர்கண்ணே இனிது - அது போலக் கலவிக்கு இன்றியமையாத புலவியும் அன்புடையார்கண்ணே இனிதாவது, ஏனை அன்பிலார்கண் ஆகாது. (நிழற்கண் இருந்த நீர் குளிர்ச்சிமிக்குத் தாகம் தணித்தலின், இனிதாயிற்று. வீழுநர் - ஆற்றாமைக்கு நோதலும் கூடுதற்கண் வேட்கையும் உடையராவார். 'இவள் நம்மாட்டு அவ்விரண்டும் இன்மையின் இப்புலவி தானும் இன்னாதாகா நின்றது', என்பதாம்.).

மணக்குடவர் உரை:
ஊடல் செய்யின் இன்பம் உண்டாயினும், அதன் கண்ணும் ஒரு துன்பம் உண்டு: புணருங்கால் அது நீட்டிக்குங்கொல்லோ? நீட்டியாதோ? என்று ஐயுறுதலால். இது தலைமகள் ஆற்றாமை வாயிலாகப் புலக்கத் தலைமகன் அது கண்டு சொல்லியது.

Tamil Transliteration:
Neerum Nizhaladhu Inidhe Pulaviyum
Veezhunar Kanne Inidhu.

Couplet :
Water is pleasant in the cooling shade;So coolness for a time with those we love.

Translation :
Water delights in a shady grove And sulking in souls of psychic love.

Explanation :
Like water in the shade, dislike is delicious only in those who love.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

கள்ளுண்ணாமை

கள்ளுண்ணாமை குறள் 921 இலிருந்து 930 முடிய குறள் 921: உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார் . பொருள்:...