google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: கொடியது, இனியது, பெரியது, அரியது

புதன், 26 ஜனவரி, 2022

கொடியது, இனியது, பெரியது, அரியது

முருகன் கொடியது, இனியது, பெரியது, அரியது எவை என்று ஒளவையாரிடம் கேட்டான். அதற்கு ஒளவையார் விடையாக நெடிய வெவ்வேலோய், தனிநெடு வேலோய், எரிதவழ் வேலோய், வரி வடிவேலோய் என்று தொடங்கும் நான்கு பாடல்களைப் பாடினார்.

முருகனே வேலை ஏந்தியுள்ள வேலவன் ஆவான். 

கொடியது

கொடியது கேட்கின் நெடியவெவ் வேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது;
அதனினும் கொடிது இளமையில் வறுமை;
அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்;
அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்;
அதனினும் கொடிது இன்புற
அவர்கையில் உண்பதுதானே.

இந்த உலகில் மிகவும் கொடுமையானது வறுமைதான். அந்த வறுமையும் இளமைப் பருவத்தில் வந்தால் மிக மிகக் கொடுமையானது. அத்தகைய வறுமையை விடக் கொடுமையானது தீராத கொடிய நோய் ஆகும். தீராத கொடிய நோயைவிடக் கொடுமையானது அன்பே இல்லாத பெண்ணுடன் வாழ்வது. அதைவிடக் கொடுமையானது அந்தப் பெண்ணிடம் உணவைப் பெற்று உண்பது ஆகும்.

இனியது

இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
இனிது இனிது ஏகாந்தம் இனிது;
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்;
அதனினும் இனிது அறிவினர்ச் சேருதல்;
அதனினும் இனிது அறிவுள்ளாரைக்
கனவினும் நனவினும் காண்பது தானே!

இந்த உலகில் மிகவும் இனிமையானது தனிமையில் இருப்பதுதான். அதைவிட இனிமையானது இறைவனை வணங்குவது. இறைவனை வணங்குவதை விட அறிவு உடையவர்களைச் சேர்ந்து வாழ்வது இனிமையானது. அதைவிட இனிமையானது கனவிலும் நனவிலும் அறிவு உடையவர்களைப் பார்த்துக் கொண்டு இருப்பது ஆகும்.

பெரியது

பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்!
பெரிது பெரிது புவனம் பெரிது;
புவனமோ நான்முகன் படைப்பு;
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்;
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்;
அலைகடல், குறுமுனி அங்கையில் அடக்கம்;
குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன்;
கலசமோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்;
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்;
உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்;
இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்;
தொண்டர் தம்பெருமை சொல்லவும் பெரிதே!

உலகில் மிகப்பெரியது இந்த உலகம்தான்.  இந்த உலகமோ நான்முகனால் படைக்கப்பட்டது. எனவே நான்முகன்தான் பெரியவன். நான்முகனோ திருமாலின் கொப்பூழில் (தொப்புள்) தோன்றியவன். திருமாலோ அலைகடலில் தூங்குகிறவன். திருமாலைத் தாங்கும் கடல்தான் பெரியது என்றால், அந்தக் கடலும் அகத்தியனின் உள்ளங்கையில் அடங்கியது. அந்த அகத்தியரும் கலயம் எனப்படும் சிறு மண்குடத்தில் அடங்கி இருந்தவர். அந்தக் கலயமோ இந்தப் பூமியில் உள்ள மண்ணால் செய்யப்பட்டது. பூமிதான் பெரியது என்றால், இந்தப் பூமியை ஆதிசேடன் என்னும் பாம்பு தனது ஒரு தலையில் தாங்கியிருக்கிறது. அந்தப் பாம்பை, சிவபெருமானின் மனைவியாகிய உமா என்னும் உமையவள், தனது விரலில் மோதிரமாக அணிந்துள்ளாள். அந்த உமையவளோ சிவனது உடலின் ஒரு பாதியில் ஒடுங்கியிருக்கிறாள். அந்தச் சிவனோ அடியவர்களின் உள்ளத்தில் ஒடுங்கியிருக்கிறான். எனவே அடியவர்களின் பெருமைதான் உலகில் பெரியது.

அரியது

அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிது அரிது மானிடர் ஆதல் அரிது;
மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது.
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது;
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வராயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே.

உலகில் மிகவும் அரியது மானிடராகப் பிறப்பது தான். மானிடராகப் பிறந்தாலும் கூன், குருடு, செவிடு முதலிய குறைகள் இல்லாமல் பிறத்தல் அரியது. இந்தக் குறைகள் நீங்கிப் பிறந்தாலும் அறிவும் கல்வியும் விரும்பிக் கற்றவனாக ஆதல் அரியது. அறிவும் கல்வியும் பெற்றாலும் பிறருக்குக் கொடுக்கும் ஈகையும் நோன்பும் உடையவராய் இருத்தல் அரியது. ஈகையும் நோன்பும் உடையவராக வாழ்கின்றவர்களுக்கு வான்உலகப் பெருவாழ்வு கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

ஏன் இப்படி?

இவ்வளவு சிறியதாக இந்தத் தேங்காய் ஏன் இருக்கிறது?