மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார் வேண்டாப் பொருளும் அது. | 901 |
மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர், சிறந்த பயனை அடையமாட்டார், கடமையைச் செய்தலை விரும்புகின்றவர் வேண்டாத பொருளும் அதுவே.
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் நாணாக நாணுத் தரும். | 902 |
கடமையை விரும்பாமல் மனைவியின் பெண்மையை விரும்புகின்றவனுடைய ஆக்கம், பெரியதொரு நாணத்தக்க செயலாக நாணத்தைக் கொடுக்கும்.
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் நல்லாருள் நாணுத் தரும். | 903 |
மனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை ஒருவனுக்கு எப்போதும் நல்லவரிடையே இருக்கும் போது நாணத்தைத் தரும்.
மனையாளை அஞ்சும் மறுமையி லாளன் வினையாண்மை வீறெய்தல் இன்று. | 904 |
மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்ல செயல். | 905 |
மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.
இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள் அமையார்தோள் அஞ்சு பவர். | 906 |
மனைவியின் தோளுக்கு அஞ்சி வாழ்கின்றவர் தேவரைப் போல் இவ்வுலகில் சிறப்பான நிலையில் வாழ்ந்த போதிலும் பெருமை இல்லாதவரே ஆவர்.
பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப் பெண்ணே பெருமை உடைத்து. | 907 |
மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தை தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது.
நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள் பெட்டாங்கு ஒழுகு பவர். | 908 |
மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தமது நண்பர்க்கு உற்ற குறையையும் செய்து முடிக்க மாட்டார், அறத்தையும் செய்ய மாட்டார்.
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும் பெண்ஏவல் செய்வார்கண் இல். | 909 |
அறச் செயலும் அதற்குக் காரணமாக அமைந்த பொருள் முயற்சியும், மற்ற கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை.
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்(கு) எஞ்ஞான்றும் பெண்சேர்ந்தாம் பேதைமை இல். | 910 |
நன்றாக எண்ணுதல், பொருந்திய நெஞ்சத்தோடு தக்க நிலையும் உடையார்க்கு எக்காலத்திலும் மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.