google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: மே 2021

சனி, 29 மே, 2021

புதுப்பட்டி சேங்கை

பாசி படிந்து பச்சை நிறமாய்க் காணப்படும் குளம் சேங்கை எனப்படும். 

பொன்னமராவதி புதுப்பட்டியிலும் ஒரு சேங்கை உண்டு. சதுர வடிவில் இருக்கும் இது பலர் குளிக்கப் பயன்படுகிறது. ஒரு காலத்தில் இது வட்டமாக இருந்த குடிநீர் ஊருணி ஆகும். காலப்போக்கில் குளிப்பதற்கு என்று ஆகி விட்டது.

புதுப்பட்டி சபாபதி நாட்டுக்கோட்டைச் செட்டியாரால் தர்மகார்யமாய் வெட்டப்பட்டது. மூக்கன் செட்டியாரின் மகன் பழநியப்பச் செட்டியாரின் பெயர் கொண்டதே பழநியப்பா பார்க். சங்கும் உண்டு.

நீ ர் மேலாண்மைக்கு எடுத்துக்காட்டு. மழை காலத்தில் வடக்கே புதுவளவில் இருந்து வரும் உபரி நீர் ஒரு சிறிய நீர்த்தேக்கத்தில் நிரம்பி பின் சேங்கையை நிரப்பும். நீர் விழும் தூம்பு இரண்டு உண்டு. சேங்கை நிரம்பினால் தெற்கே ஒரு குழாயின் வாயிலாக ஆறுகால் மண்டபத்தின் அருகே கடத்தப்பட்டு வடிகால் பாதையில் சேர்ந்து பின்பு அமரகண்டானை அடையும்.

 ஊருணியில் இரண்டு மட்டங்களில் ஆளோடி உண்டு. நடுவில் பெரும் பள்ளம் உண்டு. சுற்றிலும் கம்பித் தடுப்பு உண்டு. குளிப்பவர்கள் வசதிக்கு என்று அருகில் உள்ள கடைகளில் ஐந்து பைசாவுக்கும் பத்துப் பைசாவுக்கும் லூஸில் எண்ணெய், சிகைக்காய் பவுடர், டாடா ஹேர் ஆயில், சோப்பு, நீலச் சோப்பு, விற்பார்கள். சிறுவர்கள் ஆட்டம் போட்டுக் குளிப்பார்கள். நீரில் டைவ் அடிப்பார்கள். வலை போட்டும், தூண்டில் இட்டும் மீன் பிடிப்பார்கள். தண்ணீர் உப்புத்தன்மையற்றது. ஆகவே கட்டடம் கட்ட தள்ளுவண்டியில் எடுத்துச் செல்வார்கள். பிடாரி கோயில் திருவிழாவில் சாமி குளத்தில் இறங்கிக் குளிக்கும்.

குளத்தின் தெற்கேயுள்ள ஆறுகால் மண்டபத்தின் தென்புறத்தில் உள்ள தார்ச் சாலையின் தென்புறத்தில் ஆண்களுக்கான இலவச சிறுநீர்க் கழிப்பிடமும், குளத்தின் வடக்கே பாறையின் அருகில் தண்ணீர் வசதியுடன் பெண்களுக்கான இலவசக் கழிப்பறையும் இருந்தன. இப்போது இல்லை.

அக்காலத்தில் குழாயில் காவிரித் தண்ணீர் வரத்து இல்லை. மே
லும் தண்ணீர்ப் பஞ்சம் நிலவியது. குடிநீருக்காக வையாபுரி, செம்பொட்டல், ஈஸ்வரமூர்த்தி, வேகுப்பட்டி, மணப்பட்டி, அம்மன் சேங்கை, பூலாங்குறிச்சி என்று அலைவோம். அலைய முடியாதவர்களுக்கு காண்டாக்காரர் குடத்துக்கு 10 காசு என்று விற்பார். 

ஊருணியாய் இருந்த புதுப்பட்டி சேங்கை மாசுபட்டு குளம் ஆனதைப் போல பல குடிநீர் ஊருணிகளும் கெட்டுவிட்டன.

காட்டில் பல விலங்குகள் இருந்தாலும் காடு கெடுவதில்லை. நாட்டில் மனிதர்களின் முறையற்ற சமூகப் பழக்கங்களால் சூழல் கெடுகிறது.

பிற பின்பு. 
வணக்கம். 
அன்புடன் 
ஆறுமுகம் நடராஜன்

பிடாரி அம்மன் துணை

வியாழன், 27 மே, 2021

முருகன் மெடிக்கல்ஸ் தர்மலிங்கம்

ஆஸ்பத்திரிக்கோ அல்லது மருந்துக்கடைக்கோ போகும்போது அப்போதெல்லாம் சீசாவையும் கொண்டுபோக வேண்டும். மிக்ஸர் மருந்து தருவார்கள். APC, கோடோ பைரின் போன்ற மாத்திரைகளும், பென்சிலின் ஊசியும் பிரபலம். டாக்டர் எழுத்து புரியாது. எப்படிப்பட்ட பிரிஸ்கிரிப்ஷனையும் இன்டர்ப்ரிட் பண்ணும் திறமை  பொன்னமராவதி புதுப்பட்டி மேலரதவீதியில் இருந்த புகழ்பெற்ற முருகன் மெடிக்கல்ஸ் தர்மலிங்கம் அவர்களுக்கு உண்டு. அவர் தான் D. பாலசுப்ரமணியன், D. விவேகானந்தன் இவர்களின் அப்பா. சுறுசுறுப்புக்கு தேனீக்களுக்கு அடுத்தபடியாக இவரைச் சொல்லலாம். கடையில் நடந்துகொண்டே இருப்பார். ஓவர் த கௌண்டர் மருந்து கொடுத்து செலவு வைக்க விடாமல் குணப்படுத்தி விடுவார்.

ஒருமுறை ஓர் உழவனின் நோய்வாய்ப்பட்ட மாட்டுக்கு ஊசி போட மாட்டாஸ்பத்திரி டாக்டரிடம் டிஸ்டில்டு வாட்டர் இல்லை. அவர் ஆக்வா (Aqua) என்று எழுதிக் கொடுத்து வாங்கிவரச் சொன்னார். அந்தக் காலத்தில் எல்லோருக்கும் இது புரியாது. எந்த மருந்துக்கடைக்குப் போனாலும் இல்லை என்றார்கள். சில கடைக்காரர்கள் புதுக்கோட்டையில் அல்லது திருச்சியில் கிடைக்கலாம் என்றார்கள். எழுத்து புரியவில்லை என்றார்கள். முருகன் மெடிக்கல்ஸில்  தர்மலிங்கம் அவர்கள் கடைக்குள்ளேயே வழக்கம் போல உலாத்திக் கொண்டு இருந்தார்கள். டாக்டர் சீட்டு காண்பிக்கப்பட்டது. மின்னல் வேகத்தில் டிஸ்டில்டு வாட்டரை எடுத்துக் கொடுத்துவிட்டு ஐந்து பைசா கொடுங்கள் என்றார். மாட்டுக்காரருக்குச் சந்தேகம் அப்பிக் கொண்டது. வெறும் 5 பைசாவா! திருச்சிக்குப் போக வேண்டும் என்றார்களே! அவர் தயங்கினார். இவர் தைரியம் சொன்னார். அதுவே சரியான டிஸ்பென்சரியில் கொடுக்கப்பட்ட ஊசிக்கான நீர் ஆகும்.

ஒப்பற்ற மருந்துக்கடைக்காரர். இப்போது நம்மிடையே இல்லை.

பிற பின்பு. 
அன்புடன்,
ஆறுமுகம் நடராஜன்

செவ்வாய், 25 மே, 2021

மூக்குப் பொடி

இப்போதெல்லாம் மூக்குப் பொடி போடுபவர்கள் குறைந்து விட்டனர். கெடுதல் குறைந்தது நன்று. சிலர் மூக்குப் பொடி போடும் அழகே தனி. பேரறிஞர் அண்ணா மேடையில் பேசும்போது பொடி போடுவார். ஆனால் யாரும் பார்க்க முடியாது. எப்போது எடுத்தார் எப்போது போட்டார் என்று கண்டுபிடிக்கவே முடியாது. பொன்னமராவதி புதுப்பட்டியில் பலர் மூக்குப் பொடி போடுவதைப் பார்த்திருக்கிறேன். V.V.H.S. அனந்தநாராயணன் ஆசிரியர் பொடி போட்ட கையோடு அறைவார். அறை வாங்கிய மாணவனின் கண்கள் தீயைப் போலக் காந்தும். மாணவிகளை அடிக்க மாட்டார்; திட்டுவார். என் அப்பா டின்ஸ்மித் மு. நடராஜன் ஆச்சாரி பொடியை இரு விரல்களில் பதவிசாக எடுத்து சர்ர்ர்ர்... என்று உறிஞ்சினால் 50 மீட்டருக்குக்  கேட்கும். அந்த இடமே பொடி மணக்கும். சுத்தம் கேட்டு அரு.ச.முரு.சேது செட்டியார் மண்ணெண்ணெய்க் கடை மூக்கையாத் தேவர் வந்துவிடுவார். அவரும் பொடியை ஒரு இழு இழுப்பார். சத்தம் வராது. சுப்பாடு, ராமாடு, ரவியாடு, கோபு இவர்களின் அப்பா கூரைப் பள்ளிக்கூடத்து மூக்குறிஞ்சி வாத்தியார். அவர் ஓசிப் பொடி போடுவார். யாரும் பொடி இல்லை என்றால் தன்னிடம் உள்ள ரிசர்வ் ஸ்டாக் பொடியைத் தந்து உதவுவார். T.A.S. பட்டணம் பொடி அசையும் பொம்மை அருமையாய் இருக்கும். N.V.S. பொடியும் ஒன்று. இப்போது D.S. என்றும், சித்தன் என்றும் பல பொடிகள் வந்தாலும் பொடி போடுபவர்கள் குறைவு. என் தகப்பனாருக்கு 93 வயசு. இன்னும் பொடி தான் அவருக்கு உசிரு.

பிற பின்பு. வணக்கம். 
அன்புடன்,
ஆறுமுகம் நடராஜன்.

புதன், 19 மே, 2021

காளமேகப் புலவரின் பாடல்

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைகா கா!

அதாவது

காக்கைக்கு ஆகா கூகை கூகைக்கு ஆகா காக்கை
கோக்கு கூ காக்கைக்கு கொக்கு ஒக்க - கைக்கைக்கு
காக்கைக்கு கைக்கு ஐக்கு ஆகா !

சொல்லாட்சி : 
காக்கை -- காகம் , காத்தல்
கூகை -- ஆந்தை
கோ -- அரசன்
கூ -- உலகம்
ஒக்க - போல
கைக்கைக்கு -- பகை எதிர்த்து

விளக்கம்

காக்கைக்கு இரவில் பார்வை கிடையாது அப்போது ஆந்தையுடன் சண்டையிட்டால் காக்கை தோற்கும்.  ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது எனவே அது பகலில் காக்கையிடம் தோற்கும்.  அதைப் போல நாட்டைக் காக்கும் அரசன் , கொக்கு தன் இரைக்காக ஒற்றைக்காலில் நெடுநேரம் காத்திருப்பதைப் போல, தான் வலிமை மிக்கவனாய் இருப்பினும் தனக்குத் தகுந்த நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டும். இல்லையெனில் பகையை எதிர்த்து நாட்டைக் காத்தல் என்பது திறமைமிக்க மன்னனின் கைக்கு எட்டாமல் போய்விடும்.

சனி, 15 மே, 2021

பள்ளிக்கூடம்

புதுப்பட்டி நகரமடத்தில் முதலில் மூன்றாம் வகுப்பு வரை கூரைப் பள்ளிக்கூடம். பின்பு நகரமடம் ஐந்தாம் வகுப்பு முடிய. நல்ல மார்க் வாங்கியவர்களுக்கு ஜவுளிக்கடை தே. சுப்பையா செட்டியாரிடம் இருந்து பரிசு கிடைக்கும். நானும் மூன்று முறை வாங்கியிருக்கிறேன். ஆறாம் வகுப்புக்கு V.V.H.S. இப்போது V.V.H.S.S. ஒன்பதாம் வகுப்பு வரை கேம்லின், நட்ராஜ் போன்றவற்றின் பென்சில் எராசர் பரிசு கிடைத்தது. பின்னர் எப்போதும் ஆறாம் ரேங்க் தான். சைஃபர் ஸ்கூலில் இருந்து வந்தவர்கள் முதல் ஐந்து ரேங்க்ஸ். V.V.H.S. ரொம்ப கண்டிப்பு. அடிப்பார்கள். ஒரு வகுப்பில் மூன்று ஆண்டுகளாய் ஃபெயிலாய்க் கிடந்த மாணவனும் உண்டு. இங்கிலீஷில் ஃபெயில் ஒரு முறை. கணக்கில் ஃபெயில்  ஒரு முறை. என்று பதினோராம் வகுப்பாகிய S.S.L.C. ஐத் தாண்டுவதற்கு பலர் சிரமப்பட்டனர். நல்லப்ப ரெட்டியார் ஓங்கித் தலையில் குட்டுவார். 1/4 மார்க், 1/2 மார்க் என்று போடுவார். உத்திர மரியான் கன்னத்தில் அறைவார். ஜெயபால் சார் P.E.T. யின் அடி, இடியைப் போல இறங்கும். பிரின்சிபல் இராதாகிருஷ்ணன் அடித்தால் பேய் அறைவது போல இருக்கும். பிரம்பால் விளாசினால் அவர் எம்.ஜி.ஆர். அடி வாங்குபவர் நம்பியார். பிற பின்பு. அன்புடன் ஆறுமுகம் நடராஜன்.

ஞாபகம்

நான் எலிமென்ட்டரி ஸ்கூலில் படிக்கும்போது ஒரு இட்லி ஒரு அணா. சர்க்கரை காஃபி 8 பைசா. சீனி காஃபி 10 பைசா. ஹைஸ்கூலில் படிக்கும்போது தெரு விளக்கு வெளிச்சம் படிக்க உதவிற்று. காலை 5 மணிக்கே உடுப்பி ஹோட்டலில் அனந்தநாராயணன் வாத்தியார் முந்திரி மினுமினுக்கும் வெண் பொங்கலைச் சுடச்சுடச் சாப்பிடுவார். கறுப்பாய் இருக்கும் கிருஷ்ணய்யர் பாட்டுப் பாடிக்கொண்டே சப்ளை செய்வார். பார்சல் பெருமாள் வாழை இலையைக் கிழித்து பார்சல் போடும் ஸ்டைல் ஒரு தனியழகு. 30 பைசாவுக்கு பார்சல் பொங்கல் வாங்கினால் மதியம் சாப்பாட்டுக்குப் போதும். அரைச் சாப்பாடு 60 பைசா. முழுச் சாப்பாடு ஒரு ரூபாய். V.V. ஹைஸ்கூலில் வாலிபால் விளையாடிவிட்டு இருட்டும் நேரத்தில் மெய்யப்பா டாக்கீஸ் குண்டுப் பிள்ளை ஹோட்டலில் களைப்பு நீங்க 10 பைசா ஆட்டுக்கால் சூப் சாப்பிட்டால் அடாடா என்ன மணம் என்ன ருசி என்ன சத்து. அதைக் குடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும்போது நம்மிடம் நிறைந்திருந்தது திமிர், தைரியம், தன்னம்பிக்கை, உற்சாகம்.

பொன்னமராவதி

நான் படித்துக்கொண்டிருந்தபோது பொன்னமராவதி புதுப்பட்டியில் பேட்டையார் மண்டகப்படி என்று ஒரு திருவிழா விடியவிடிய நடக்கும். பெரிய பெரிய வித்வான்களின் இசைக் கச்சேரி, நாடகம், பாட்டுக்
 கச்சேரி, கரகாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், த.பி. சொக்கலால் ராம் சேட் பீடிக்காரனின் 16 மிமீ திரைப்படம், நிஜாம் லேடி புகையிலைக்காரனின் 16 மிமீ திரைப்படம், தண்ணீர்ப் பந்தல், பானகம், நீர்மோர், பலூன், ஊதல், சவ்வு மிட்டாய், என்று ஒரே கொண்டாட்டம். பொன்னமராவதி பட்ட மரத்தான் திருவிழா, வலையபட்டி மலையாண்டி திருவிழா, கொன்னையூர் முத்துமாரி திருவிழா, குன்னக்குடி வயலின் வலையபட்டி தவில் என்று அமர்க்களப்படும். தினமும் மூன்று ஷோ சினிமா. லீவு நாட்களில் 4 ஷோ. ரெண்டு சினிமாக்கள். 40 பைசாவிலிருந்து ஒன்னேகால் ரூபாய் வரை டிக்கெட். 24 மணி நேரமும் எங்கு சுற்றினாலும் உணவு, டீ, காபி, உண்டு. புதுப்பட்டி டீ கடைகளில் கதவுகள் இல்லை. அரசியல் மேடைகள் மாலையில் முழங்க ஆரம்பித்தால் அதிகாலை 3 மணிவரை நடக்கும். தீப்பொறி ஆறுமுகம், நன்னிலம் நடராஜன், போலீஸ் கண்ணன், சிதம்பரம் வீரக்கனல் ஜெயவேல் என்று பேச்சாளர்கள் சும்மா விளாசித் தள்ளுவார்கள். எம்ஜிஆர் வருகிறார், வந்து கொண்டிருக்கிறார், இதோ வந்துவிட்டார் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். பண்டிகைக் கால இரவுகளில் துணிமணிகளை காண்டா விளக்கு வெளிச்சத்தில் ஏலம் விடுவார்கள். நேபாளத்து ஸ்வெட்டரும், லண்டன் எவர்சில்வரும், மலிவாகக் கிடைக்கும். ரேடியோ மைதானத்தில் பாவைக்கூத்து நடக்கும். சைக்கிள் சந்திரன் ராப்பகலாக தரையில் கால் ஊன்றாமல் சைக்கிள் ஓட்டி சாகசம் செய்வார். மேல்நிலை நீர்த்தேக்க பில்டிங்கில் லைப்ரரி செயல்படும். ஷோ கொட்டகையில் சூதாட்டம் நடக்கும். சின்னமனூர் ஃபேமஸ் சர்க்கஸ் நடக்கும். வெளியூர் வியாபாரிகள் அண்டர்வேர் நிரம்பப் பணத்துடன் செகண்ட் ஷோ படத்தை ராத்திரி பார்த்து விட்டு அதிகாலை பஸ் பிடித்துப் போவார்கள். பொன்னமராவதி to மெட்ராஸ் பஸ் கட்டணம் 20 ரூபாய். இராமாயண மடத்தருகில் உள்ள க்ளப்பில் சீட்டாட்டம் நடக்கும். மணி வண்டியில் பக்கோடா மிக்சர் காராச்சேவு முருக்கு அதிரசம் 10 பைசா. உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணபவனில் ரெங்கையர் போடும் 50 பைசா காபியை காலையில் 5 மணிக்கு பித்தளை வட்டாக்கப்பில் குடித்தால் 8 மணி வரைக்கும் பசிக்காது. பிற பின்பு அன்புடன் ஆறுமுகம் நடராஜன்.

கள்ளுண்ணாமை

கள்ளுண்ணாமை குறள் 921 இலிருந்து 930 முடிய குறள் 921: உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார் . பொருள்:...