google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: பொன்னமராவதி

சனி, 15 மே, 2021

பொன்னமராவதி

நான் படித்துக்கொண்டிருந்தபோது பொன்னமராவதி புதுப்பட்டியில் பேட்டையார் மண்டகப்படி என்று ஒரு திருவிழா விடியவிடிய நடக்கும். பெரிய பெரிய வித்வான்களின் இசைக் கச்சேரி, நாடகம், பாட்டுக்
 கச்சேரி, கரகாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், த.பி. சொக்கலால் ராம் சேட் பீடிக்காரனின் 16 மிமீ திரைப்படம், நிஜாம் லேடி புகையிலைக்காரனின் 16 மிமீ திரைப்படம், தண்ணீர்ப் பந்தல், பானகம், நீர்மோர், பலூன், ஊதல், சவ்வு மிட்டாய், என்று ஒரே கொண்டாட்டம். பொன்னமராவதி பட்ட மரத்தான் திருவிழா, வலையபட்டி மலையாண்டி திருவிழா, கொன்னையூர் முத்துமாரி திருவிழா, குன்னக்குடி வயலின் வலையபட்டி தவில் என்று அமர்க்களப்படும். தினமும் மூன்று ஷோ சினிமா. லீவு நாட்களில் 4 ஷோ. ரெண்டு சினிமாக்கள். 40 பைசாவிலிருந்து ஒன்னேகால் ரூபாய் வரை டிக்கெட். 24 மணி நேரமும் எங்கு சுற்றினாலும் உணவு, டீ, காபி, உண்டு. புதுப்பட்டி டீ கடைகளில் கதவுகள் இல்லை. அரசியல் மேடைகள் மாலையில் முழங்க ஆரம்பித்தால் அதிகாலை 3 மணிவரை நடக்கும். தீப்பொறி ஆறுமுகம், நன்னிலம் நடராஜன், போலீஸ் கண்ணன், சிதம்பரம் வீரக்கனல் ஜெயவேல் என்று பேச்சாளர்கள் சும்மா விளாசித் தள்ளுவார்கள். எம்ஜிஆர் வருகிறார், வந்து கொண்டிருக்கிறார், இதோ வந்துவிட்டார் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். பண்டிகைக் கால இரவுகளில் துணிமணிகளை காண்டா விளக்கு வெளிச்சத்தில் ஏலம் விடுவார்கள். நேபாளத்து ஸ்வெட்டரும், லண்டன் எவர்சில்வரும், மலிவாகக் கிடைக்கும். ரேடியோ மைதானத்தில் பாவைக்கூத்து நடக்கும். சைக்கிள் சந்திரன் ராப்பகலாக தரையில் கால் ஊன்றாமல் சைக்கிள் ஓட்டி சாகசம் செய்வார். மேல்நிலை நீர்த்தேக்க பில்டிங்கில் லைப்ரரி செயல்படும். ஷோ கொட்டகையில் சூதாட்டம் நடக்கும். சின்னமனூர் ஃபேமஸ் சர்க்கஸ் நடக்கும். வெளியூர் வியாபாரிகள் அண்டர்வேர் நிரம்பப் பணத்துடன் செகண்ட் ஷோ படத்தை ராத்திரி பார்த்து விட்டு அதிகாலை பஸ் பிடித்துப் போவார்கள். பொன்னமராவதி to மெட்ராஸ் பஸ் கட்டணம் 20 ரூபாய். இராமாயண மடத்தருகில் உள்ள க்ளப்பில் சீட்டாட்டம் நடக்கும். மணி வண்டியில் பக்கோடா மிக்சர் காராச்சேவு முருக்கு அதிரசம் 10 பைசா. உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணபவனில் ரெங்கையர் போடும் 50 பைசா காபியை காலையில் 5 மணிக்கு பித்தளை வட்டாக்கப்பில் குடித்தால் 8 மணி வரைக்கும் பசிக்காது. பிற பின்பு அன்புடன் ஆறுமுகம் நடராஜன்.

3 கருத்துகள்:

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

ஏன் இப்படி?

இவ்வளவு சிறியதாக இந்தத் தேங்காய் ஏன் இருக்கிறது?