google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil

வெள்ளி, 17 அக்டோபர், 2025

இந்தி ஆதிக்க எதிர்ப்பு ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு

 அறிஞர் அண்ணா 1963, மே மாதத்தில் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஆற்றிய உரை

சி.என்.அண்ணாதுரை: மேன்மை பொருந்திய அவைத் தலைவர் அவர்களே…உள்துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி அளித்த தெளிவான விளக்கத்தைக் கேட்டபோது, கம்பி மீது நடக்கும் ஜால வித்தையில் அவர் தேர்ந்தவர் என்பது புரிந்தது. இப்போதைய சூழ்நிலையில் எடுக்கக்கூடிய எளிதான நடவடிக்கை என்பதைப் போல இதைத் தாக்கல்செய்ய முயன்றிருக்கிறார்; இயன்றவரையில் இதைத் தீங்கற்றதுபோலக் காட்டவும் முயன்றிருக்கிறார். அவையிலும் வெளியிலும் அவர் அளித்த விளக்கங்களுக்குப் பிறகு எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை; இந்த அவையில் கட்சிகளுக்குள்ள வலு தெரிந்தும் இந்த மசோதாவை எதிர்க்கிறேன். அரசியல் கூட்டல் – கழித்தல்களுக்கும் அப்பால் அரசியல் தார்மிகம், ஜனநாயகத்தையொட்டிய தாராள சிந்தனாவாதம் ஆகியவற்றுக்கும் இந்த அவை முக்கியத்துவம் தரும் என்று நம்புகிறேன்.

ஜனநாயகத்துக்கான உண்மையான விளக்கம் என்ன?

ஜனநாயகம் என்பது, பெரும்பான்மை எண்ணிக்கை அடிப்படையிலான ஆட்சி மட்டும் அல்ல; சிறுபான்மை மக்களின் உரிமைகள், உணர்ச்சிகள் ஆகியவையும் புனிதம் என்று கருதி, அவற்றைக் காப்பதற்குப் பெயர்தான் ஜனநாயகம். இந்த அவையில் கிட்டத்தட்ட நான் மட்டும்தான் அல்லது நண்பர் பேராசிரியர் ரத்தினசாமியையும் என்னுடன் சேர்த்துக்கொள்ளலாம்; வேறு யாருடைய உதவியையும் இங்கே நான் எதிர்பார்க்க முடியாது. எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் நாங்களே ஒருவரையொருவர் தாக்கிக்கொள்வதாக உள்துறை அமைச்சர் சுட்டிக்காட்டினார். எல்லோருமே என்னைத் தாக்கும்போது அது பிரச்சினையாகத்தான் இருக்கிறது; இருந்தாலும் நான் என்ன சொல்ல விரும்புகிறேனோ அதைச் சொல்லாமல் விடுவது என்னுடைய கடமையிலிருந்து தவறிய செயலாகிவிடும். எனவே, இப்போதைய மசோதா முழுக்க முழுக்க அதிருப்தியையே தருகிறது என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தி ஆட்சி மொழியாவதை எதிர்த்து உணர்ச்சிபூர்வமாகத் தெரிவிக்கப்படும் எதிர்ப்பை இந்த மசோதா கணக்கிலேயே எடுத்துக்கொள்ளவில்லை; இந்த எதிர்ப்பு இந்தியாவின் ஏதோ ஒரு சிறு பகுதியிலிருந்து வரவில்லை, தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலிருந்தும் வருகிறது. என்னுடைய நண்பர் புபேஷ் குப்தா (கம்யூனிஸ்ட்) இன்றைக்கென்று பார்த்து ஆங்கிலத்தை விரட்டியடித்தே தீர வேண்டுமென்று முடிவுசெய்துவிட்டார், எனவே ஆங்கிலத்துக்கு எதிராகக் கடுமையாக ஆங்கிலத்திலேயே பேசிவிட்டார். ஷேக்ஸ்பியரின் நாடகப் பாத்திரங்களான ரோமியோ, ஜூலியட்டைக்கூட அவர் விட்டுவைக்கவில்லை.

தமிழ் என்றவுடனேயே எனக்குப் பெருமிதம் தோன்றுகிறது, அப்படியொரு எண்ணம் ஆங்கிலம் தொடர்பாக எனக்கு வருவதில்லை. என்னுடைய மாநிலத்தில் தமிழ்தான் ஆட்சி மொழி. நான் இங்கேதான் ஆங்கிலத்தில் உரையாற்றுகிறேன்; என்னுடைய மாநிலத்தில் தமிழில்தான் பேசுகிறேன் என்பதை குப்தாவின் நண்பர் அவருக்குச் சொல்லியிருக்க வேண்டும். தமிழ்நாட்டை காங்கிரஸ் ஆண்டாலும், அங்கே ஆட்சி மொழி தமிழ்தான், பள்ளிக்கூடங்களில் உயர் வகுப்புகளில்கூட பயிற்று மொழியும் தமிழ்தான். தாய்மொழிதான் ஆட்சி மொழியாகவும் பயிற்சி மொழியாகவும் இருக்க வேண்டும் என்று எங்கள் மாநில அரசு மீது நான் செல்வாக்கை செலுத்துவதைப் போல, மேற்கு வங்க அரசு மீதும் புபேஷ் குப்தா செல்வாக்கு செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

புபேஷ் குப்தா: மன்னிக்கவும், என்னால் அதைச் செய்ய முடியாது.

சி.என்.அண்ணாதுரை: அவரால் செல்வாக்கு செலுத்த முடியாது என்பதற்காக அனுதாபப்படுகிறேன்; நான் ஆங்கிலத்துக்காக மன்றாடுகிறேன், ஆங்கிலத்திலேயே பேசுகிறேன் – ஆங்கிலத்தால் மிகவும் கவரப்பட்டு அல்ல; என்னுடைய தாய்மொழியைவிட ஆங்கிலத்துக்கு உயர்ந்ததொரு இடத்தைக் கொடுத்துவிட வேண்டும் என்பதற்காக அப்படிப் பேசவில்லை. இந்திய மாநிலங்களுக்கிடையே உரையாடலுக்கும் தகவல் பரிமாற்றுத்துக்கும் ஆங்கிலம் எளிதான மொழியாக இருக்கிறது என்பதற்காக. நன்மைகளையும் தீமைகளையும் சரிசமமாகப் பகிர்ந்துகொடுக்க ஆங்கிலம் நமக்கு நல்ல ஊடகமான மொழி. இந்தியா ஒற்றை நாடு அல்ல; ஒரே மொழி பேச!

இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவாக ஒரு மொழி வேண்டும் என்று பலரும் பல விதங்களில் வாதாடினர்; அது ஏற்கப்பட்டால் இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் ஒன்றைத்தான் பொதுமொழியாக ஏற்க வேண்டும். அதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்தியா ‘ஒற்றை நாடு’ என்றால், இந்த வாதம் ஏற்கத்தக்கதே. ஆனால், இந்தியா ‘கூட்டாட்சி நாடு’. இந்தியச் சமூகம் பன்மைத்தன்மை கொண்டது. எனவே ஒரேயொரு மொழியைப் பொதுமொழியாக வைத்துக்கொள்வது ஏனைய மொழி பேசுவோருக்கெல்லாம் அநீதியைச் செய்வதாகிவிடும். அது மட்டுமல்ல; சமூகத்தின் பெரும் பகுதி மக்களால் அம்மொழியைப் படிக்க முடியாமல் குறைகள் ஏற்படும்.

இந்தியா ஒரே நாடு அல்ல; இந்தியா பல்வேறு இனக் குழுக்களையும், மொழிக் குடும்பங்களையும் கொண்ட நாடு. இதனாலேயே இந்தியாவை ‘துணைக் கண்டம்’ என்று அழைக்கிறார்கள். எனவேதான், ஆட்சி மொழியாக ஒரே மொழியை நம்மால் ஏற்க முடியவில்லை.

இதை நான் சொல்வதற்காக காங்கிரஸ் நண்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும் – தேசிய கீதங்களாக இரு பாடல்களை நம் நாடு ஏற்றுக்கொண்டிருக்கிறது, ‘ஜன கண மன’ என்ற தேசிய கீதமும், ‘வந்தே மாதரம்’ என்ற தேசத் தாய் வாழ்த்துப் பாடலும் ஏற்கப்பட்டுள்ளன, இந்த இரண்டுமே இந்தியில் எழுதப்பட்டவை அல்ல; என்னுடைய நண்பர் புபேஷ் குப்தாவைப் போல அவையும் வங்காளத்திலிருந்து வந்தவை.

இந்தி மொழி மிகவும் முன்னேறிவிட்டது என்று உள்துறை அமைச்சர் எவ்வளவுதான் பேசினாலும் இந்தியின் நிலை இதுதான்; ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய பழமையுள்ள மொழி என்னுடையதாக இருக்கும்போது – அதைப் பொதுமொழியாக என்னால் ஏற்கச் செய்ய முடியாத நிலையில் – “நன்றாக முன்னேறிவிட்டது; இந்தியைப் பொது மொழியாக வைத்துக்கொள்வோம்” என்று உள்துறை அமைச்சர் பேசுவதால் எனக்கு ஏற்படும் இழப்புளை ஈடுசெய்வது எப்படி?

இந்தியாவின் மொழிகளில் – வழக்கொழிந்துவிட்ட சம்ஸ்கிருதம் நீங்கலாக - தமிழுக்குத்தான் ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய இலக்கிய மரபு இருக்கிறது. தமிழில் இயற்றப்பட்ட ‘தொல்காப்பியம்’ என்கிற இலக்கணத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை வெளியிட குடியரசுத் தலைவர் எங்களுடைய மாநிலத்துக்குச் செல்கிறார். ‘தொல்காப்பியம்’ என்பது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் இயற்றப்பட்ட இலக்கண நூல். அத்தகைய பாரம்பரியம் எங்களுக்கு இருக்கிறது. ஆங்கில எடுபிடிகளைப் போலப் பேசுகிறோம் என்று நண்பர் புபேஷ் குப்தா நினைக்க வேண்டாம். இந்தி தேசிய மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் வேண்டும் என்று வாதிட்ட புபேஷ் குப்தா இன்னமும் இந்தி படிக்கவோ, பேசவோ முயற்சிகளே எடுக்கவில்லை.

புபேஷ் குப்தா: எனக்கு அதற்கு நேரம் இல்லை.

சி.என்.அண்ணாதுரை: ஆனால், அவருக்கு ‘தாஸ்காபிடல்’ (மூலதனம்) படிக்க நேரமிருக்கிறது. ரஷ்ய கம்யூனிஸத்துக்கும் சீன கம்யூனிஸத்துக்கும் உள்ள வேறுபாடுகளைப் படிக்க நேரம் கிடைக்கிறது. இந்தியைத் தவிர எல்லாவற்றையும் படிக்க அவருக்கு நேரம் இருக்கிறது, இருந்தாலும் இந்திக்கு ஆதரவாக இங்கே பேசுகிறார்; “சி. ராஜகோபாலாச்சாரியார் எங்கோ, எதையோ பேசியிருக்கிறார்” என்று இடித்துக்காட்ட முடிகிறது. குப்தா கூறியதைப் போல, ராஜாஜி பேசிவிடவில்லை. அந்தக் கூட்டத்தில் அவர் பேசியபோது பக்கத்திலேயே அமர்ந்திருந்தேன். “இந்தி தொடர்பாக எனக்கும் என்னுடைய நீண்ட நாள் நண்பர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன; மொழி (இந்தித் திணிப்பு) தொடர்பாக இப்போது என் பக்கத்தில் அமர்ந்திருக்கும் திமுகவுக்கும் எங்களுக்கும் இடையில் கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது; இதிலிருந்து நீங்கள் புரிந்துகொள்ளலாம் மொழி நம்மை பிரிக்கிறது, மொழி நம்மை இணைக்கிறது; ஆங்கிலம் இணைக்கிறது, இந்தி பிரிக்கிறது” என்று அவர் குறிப்பிட்டார்.

ஆகவே, ராஜாஜியோ அவரைப் போன்றவர்களோ, ஆங்கிலம் ஆட்சி மொழியாக நீடிக்கட்டும் என்று கூறும்போது அந்த மொழியின் செல்வாக்குக்கு அடிமையாகி அல்ல, தங்களுடைய தாய்மொழியைவிட அது உயர்வானது என்பதால் அல்ல என்று புரிந்துகொள்ள வேண்டும்.

சட்டம் சாமானியர்களுக்கும் புரியும்படி இருக்க வேண்டும்!

ஆங்கிலத்தில் உள்ள ‘மே’ (இருக்கலாம்), ‘ஷெல்’ (இருக்க வேண்டும்) என்ற இரு வார்த்தைகளும் இரு வேறு விளக்கங்களுக்கு வழிகோலுபவை என்று உள்துறை அமைச்சர் பேசுகையில் சுட்டிக்காட்டினார். நான் வழக்கறிஞர் அல்ல – சட்டத்தைக் கரைத்துக் குடித்தவனும் அல்ல என்று அடக்கமாகக் கூறிவிட்டு, ‘மே’ என்ற சொல் இரண்டு வித விளக்கங்களுக்கு வழிசெய்யும் ஆபத்தானது என்று தெரிவித்தார்.

ஒரு மசோதாவோ, நிறைவேற்றப்பட்ட சட்டமோ, அதை யார் அமலாக்குகிறார்கள் – எப்படி அமலாக்கப்படுகிறது என்பதைப் பொருத்துத்தான் வலுவாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். இந்த மசோதாவிலேயே மிகவும் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியது இந்தப் பகுதிதான்.

எந்த ஒரு சட்டமும் எளிதாக விளங்கிக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். உள்துறை அமைச்சர் போன்ற படித்தவர்கள் மட்டுமல்லாது, அவரைச் சந்திக்க அன்றாடம் வரும் சாமானியர்களும் புரிந்துகொள்வதாக இருக்க வேண்டும். இந்த மசோதா அமல்படுத்தப்பட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று உள்துறை அமைச்சர் உறுதியளித்திருந்தால் எனக்கு அவர் மீது முழு நம்பிக்கை ஏற்பட்டிருக்கும்; இனிவரும் காலங்களுக்கும் லால்பகதூர் சாஸ்திரி உள்துறை அமைச்சராகவே நீடிப்பாரா? அவர் இந்தியாவின் குடியரசுத் தலைவராக வர வேண்டியவர் அல்லவா? நான் அமைச்சராகத் தொடர்வேன், நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்வது சரியல்ல; எந்தச் சட்டமும் எதிர்கால அரசுகளின் மனவோட்டத்துக்கு ஏற்ப அமல்படுத்தப்படும் என்ற ஊசலாட்டத்துக்கே இடம் தரக் கூடாது.

அமைச்சர் பேசும்போது இன்னொரு ஆபத்தும் இருப்பது தெரிந்தது. இந்தச் சட்டம் தொடர்பாக வழக்குகள் வந்தால் தீர்ப்பதற்கு நீதிமன்றங்கள் இருக்கின்றன என்றும் அவர் கூறினார். ஒவ்வொரு சட்டமும் அமல்படுத்தப்படும்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும்; வழக்கறிஞர்கள் வாதிடுவார்கள்; நீதிபதிகள் அந்த வாதங்களைக் கேட்டு தீர்ப்பளிப்பார்கள் என்றால், நாம் சட்டங்களின் அமலுக்கு வழக்கறிஞர்களையும் நீதிபதிகளையும்தான் நம்பியிருக்க வேண்டுமா? வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் வரும் என்பது நமக்குத் தெரியும்; முக்கியமான பிரச்சினையில் இப்படியா முழுமையற்ற சட்டத்தை இயற்றுவது? ‘மே’ என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்று தெரிந்துகொள்ள நீதிமன்றங்களுக்கு அலையும் விதத்திலா சட்டத்தைத் தயாரிப்பது? ‘மே’ என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘ஷெல்’ என்ற வார்த்தையைப் போட்டால் நிறைய பிரச்சினைகள் வரும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பிரச்சினைகள் வரத்தான் செய்யும். அனைவரும் ஏற்கும் வகையிலும், பிரச்சினைகள் வராத வகையிலும் சட்டத்தைத் தயாரிக்கத்தான் சட்ட அமைச்சகம் இருக்கிறது. அரசமைப்புச் சட்டம் அளிக்கும் அடிப்படை உரிமைகளைக்கூட கட்டுப்படுத்தும் சட்டங்களை வாரந்தோறும் இயற்றும் சட்ட அமைச்சகத்துக்கு, புதிதாகச் சிந்திக்க முடியாத கற்பனை வறட்சியோ, முழுமையான மசோதாவைத் தயாரிக்க முடியாத திறமைக் குறைவோ இருக்கும் என்று நான் நினைக்கவில்லை! இந்த மசோதாவை வாசித்ததிலிருந்தும், உள்துறை  அமைச்சர் அளித்த விளக்கங்களிலிருந்தும் இது முழுமையற்ற மசோதா என்றே நான் கருதுகிறேன்.  

சிவில் சர்வீஸ் தீர்வுகளில் நாளை இந்திக்காரர்களே கோலோச்சுவர்!

இந்த மசோதாவில் இன்னொரு புதுமை என்னவென்றால், உள்துறை அமைச்சர் அதைக் கொண்டுவந்த விதம்; “இந்தி பிரச்சார சபை பட்டமளிப்பு விழாவுக்காக மதறாஸ் சென்றிருந்தேன்; அங்கே ஆங்கிலத்தில்தான் உரையாற்ற வேண்டியிருக்குமோ என்று யோசித்துக்கொண்டிருந்தேன்; அவர்களோ, இந்தியிலேயே பேசுங்கள்” என்றனர் என்று உள்துறை அமைச்சர் பேசினார். இந்தி பிரச்சார சபை பட்டமளிப்பு நிகழ்ச்சியில் இந்தியில் பேசுவதில் ஏதாவது ஆச்சரியம் இருக்கிறதா? இது யாருக்குப் பெருமை சேர்க்கும் தகவல்?

உண்மையிலேயே ஆச்சரியம் எதுவென்றால், தான் பேசும் இந்தி - பிரச்சார சபை மாணவர்களுக்குப் புரியுமா என்று அவருக்கே சந்தேகம் ஏற்பட்டிருப்பதுதான்; அதனால்தான் அவர்களைப் பார்த்து எந்த மொழியில் பேசட்டும் என்று கேட்டிருக்கிறார். இந்த சமாச்சாரங்களை இளைஞர்களிடம் விட்டுவிடுங்கள்; தெளிவான, தர்க்கரீதியிலான, பொறுப்பான வாதங்களை உங்களுடைய மசோதாவுக்கு ஆதரவாக முன்வையுங்கள்.

இந்த மசோதா தொடர்பாக மூன்று அல்லது நான்கு பெரும் பிரிவுகளில் பேச விழைகிறேன். அரசமைப்புச் சட்டத்தை வகுத்த அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையில் மொழி தொடர்பாக நடந்த வாத-பிரதிவாதங்கள், கடந்த 15 ஆண்டுகளில் நமக்கு ஏற்பட்டிருக்கும் அனுபவங்கள், பிரதமர் அளித்த வாக்குறுதி, பிரதமர் அளித்த வாக்குறுதிக்கு ஏற்ப இந்த மசோதா இருக்கிறதா என்று பேச விழைகிறேன்.

முதலாவதாக, அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையில் நடந்த விவாதங்களை எடுத்துக்கொள்வோம். “இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆங்கிலம் எப்போதும் இருக்க முடியாது, இந்திய மொழியான இந்திதான் இருக்க முடியும்” என்று நண்பர் புபேஷ் குப்தா பேசினார். ஆங்கிலேயர்களின் அடிவருடிகள், விசுவாசிகள்… (குறுக்கீடு)

புபேஷ் குப்தா: நான் சதவீத கணக்கே கொடுத்திருந்தேன்.

சி.என்.அண்ணாதுரை: நீங்கள் பேசியதை மறுபடியும் வாசித்துப்பாருங்கள். யார் இந்தியை எதிர்க்கிறார்கள், யார் ஆங்கிலத்துக்காக வாதிடுகிறார்கள் என்று. அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையில் ஒரிஸ்ஸாவைச் சேர்ந்த பி.தாஸ் என்ன பேசினார் என்று கூறுகிறேன். அவர் இந்தியை ஆட்சி மொழியாக ஏற்றுக்கொண்டவர். ஏற்றுக்கொண்ட பிறகு அவர் கூறினார், “இதை ஆட்சி மொழியாக ஏற்றுக்கொண்டுவிட்டதால் எங்களுக்கு அச்சமோ, ஐயமோ, எச்சரிக்கை உணர்வோ இல்லையென்று அர்த்தமில்லை; நாங்கள் இன்றைக்குக் கொண்டிருக்கும் அச்சமும் ஐயமும் சில ஆண்டுகளுக்கு முன்னால் ஆங்கிலேயர் நம்மை ஆண்டபோதும் இருந்தன. சிவில் சர்வீஸ் தேர்வுகள் லண்டனில் நடந்ததால் அந்த சேவையில் ஆங்கிலேயர்கள் அதிகம் தேர்ச்சி பெற்று அதிகாரிகளானார்கள். இப்போது சிவில் சர்வீஸ் தேர்வுகள் டெல்லியில் நடக்கப்போகின்றன. இந்தி பேசும் மாநில மக்கள்தான் அதிகம் தேர்ச்சியடையப்போகின்றனர்” என்று தீர்க்கதரிசனத்துடன் அன்றே பேசியிருக்கிறார் தாஸ்.

உடனடியாக என்று நான் கூறவில்லை - இன்னும் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தி பேசும் உத்தர பிரதேசம் மத்திய மாகாணம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களே இந்திய ஆட்சிப் பணியிலும் குடிமைப் பணியிலும் கோலோச்சுவர். டாக்டர் சுப்பராயன்கூட ஆங்கிலமே நீடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்; ஆங்கிலம் இல்லாவிட்டால் இந்தியை ரோமன் வரி வடிவத்தில் படிக்க (தேவநாகரி மூலம் அல்ல) அனுமதிக்க வேண்டும் என்றும் கோரினார்.

அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கோர எங்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு!

அரசமைப்புச் சட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மொழி பற்றிய துணைப் பிரிவு, ‘ஒரு சமரசம்’ என்றே கொள்ளப்பட வேண்டும். எல்லா சமரச ஏற்பாடுகளிலும் அதை மறு மதிப்பீடு செய்யவும் அதன் மீது மறு சிந்தனை செலுத்துமாறு கோரவும் எங்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன. “இந்தியைப் பொருத்தவரை 1965-ல் அதுதான் ஆட்சி மொழியாக வரப்போகிறது, அதில் எந்த சந்தேகமும் இல்லை, அது ஏற்கெனவே முடிவான ஒன்று, அதைப் பற்றி யாரும் கேள்விகேட்கக்கூட முடியாது” என்றார் நண்பர். அல்ல, நீங்கள் பேசியது சரியல்ல; நம்முடைய அரசமைப்புச் சட்டம் நெகிழ்வுத்தன்மை கொண்டது. நம்முடைய அரசமைப்புச் சட்டம் ஜனநாயகத்தன்மை கொண்டது. அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துமாறு கோர எங்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன.

அரசமைப்புச் சட்டத்தை 16-வது முறையாகத் திருத்திக்கொண்டிருக்கிறோம்; ஆட்சி மொழி எது என்ற பிரச்சினையை மறு மதிப்பீடு செய்யுங்கள் என்று கோருகிறேன். கசப்புணர்வு மேலும் பரவாமல் தடுக்க, செயற்கையாக இரு வேறு முகாம்கள் உருவாகாமல் தடுக்க, மொழிப் பிரச்சினையை மறு ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும், அதுவரை இப்போதைய நிலைமையே தொடர அனுமதிக்க வேண்டும் என்று இந்த அவை மூலம் அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். அது செய்யப்பட்டால் நான் இந்த அரசின் உள்நோக்கம் குறித்து அச்சமில்லாமல், திருப்தி அடைவேன்.

கட்சிக் கூட்டங்களில் உள்துறை அமைச்சருக்கு காங்கிரஸ்காரர்களே மாற்று யோசனைகளைக் கூறவில்லையா? இந்த மசோதா மீது எல்லா காங்கிரஸ் உறுப்பினர்களும் திருப்தியாக இருக்கிறார்களா? உள்துறை அமைச்சரும் பிரதமரும் கெஞ்சி, கேட்டுக்கொள்ளும் நிலைமை வரவில்லையா?  இப்படிக் கூறும்போது நான் எந்த ரகசியத்தையாவது கசியவிடுகிறேனா? அவை எல்லாம் செய்தித்தாள்களில் வரவில்லையா? தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவால் திருப்தி அடைந்திருக்கிறார்களா? ‘ஷெல்’ என்ற வார்த்தைக்காக அவர்கள் போராடவில்லையா? மறுபரிசீலனைக் குழு தொடர்பான உள்பிரிவை ரத்துசெய்ய வேண்டும் என்று அவர்கள் போராடவில்லையா? அவர்களிடம் என்ன கூறப்பட்டது? 

உள்துறை அமைச்சருடன் எனக்குத் தனிப்பட்ட தொடர்பு ஏதும் கிடையாது. தொலைவிலிருந்து பார்க்கும்போதே ஈர்க்கிறார். அவருடைய கட்சிக்காரர்களுக்கு அவர் இன்னமும் கவர்ச்சிகரமான தலைவராக இருக்கிறார். எனவே அவர்களுடைய சந்தேகங்களைப் போக்கும் வழி அவருக்கு இருக்கிறது. ஆனால், பிரச்சினை சந்தேகங்கள் பற்றியதல்ல; இந்த மசோதாவின் உள்நோக்கம் குறித்துத்தான் மக்களுக்கு சந்தேகம். 42% மக்கள் (இந்தி பேசுகிறார்கள்) என்று வாதிடக்கூடும்… (நேரமாகிவிட்டது என்று மணி அடிக்கப்படுகிறது)

எம்.பி. லால்: அவர் பேச மேலும் நேரம் தரப்பட வேண்டும்.

என்.எம். அன்வர்: அவருக்கு இன்னும் சிறிது நேரம் தாருங்கள்

(ஒரே சமயத்தில் பல உறுப்பினர்கள்): ஆம், அவர் பேச மேலும் நேரம் ஒதுக்குங்கள்.

சி.என்.அண்ணாதுரை: இந்திய மக்களில் 42% பேர் பேசும் மொழியாக இந்தி இருப்பதால், அதற்கு ஆட்சிமொழி அந்தஸ்து தரப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. இந்த 42% பேரும் நாடு முழுவதும் பரந்து விரிந்து வாழ்ந்தால் இந்த வாதத்துக்கு தர்க்க நியாயம் இருக்கும். அது நியாயமாகவும் ஏற்கப்படும். 42% பேரும் அடுத்தடுத்த நிலப்பகுதியில் மிகவும் நெருக்கமாக வாழ்கின்றனர்.  இதை நீங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டால் அடுத்தடுத்துள்ள நிலப்பரப்பைச் சேர்ந்தவர்களுக்கு நிரந்தரமான, வற்றாத ஒரு சாதகத்தை ஏற்படுத்துகிறீர்கள்; அதன் மூலம் நாட்டின் பிற பகுதி மக்களுக்கு பாதகத்தை ஏற்படுத்துகிறீர்கள். அதனால்தான் இந்த 42% வாதத்தை ஏற்க முடியாது என்கிறேன்.

ஒரு பிராந்தியத்தின் மொழி இந்தி!

நாடு முழுக்க வாழும் 20% மக்களால் இந்திதான் பேசப்படுகிறது என்றால்கூட, கன்னியாகுமரியிலிருந்து இமயமலை வரையில் இந்திதான் பேசப்படுகிறது, ஆட்சி மொழியாக இருக்கட்டும் என்று கூறலாம். அந்த வாதத்தையும் ஆதரிக்க முடியாவிட்டாலும், புரிந்துகொள்ள முடியும். உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பிஹார் மாநிலங்களில் வசிக்கும் மக்கள் பேசும் மொழிதான் தேசிய மொழி என்பதை எப்படி ஏற்க முடியும்? டி.டி. கிருஷ்ணமாசாரி ஒரு முறை பேசினார், இந்தியா –அதாவது பாரத் – அதாவது உ.பி.…

சந்தேஷ் குமார் பாசு: அப்படிப் பேசியவர் சியாமா பிரசாத் முகர்ஜி.

சி.என்.அண்ணாதுரை: முகர்ஜி பேசியதை டி.டி. கிருஷ்ணமாசாரி மீண்டும் குறிப்பிட்டார், எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. இந்தக் கருத்து முதலில் வங்காளத்திலிருந்துதான் வந்தது; எல்லாப் 'புரட்சிகர கருத்து'களும் வங்காளத்திலிருந்துதான் முதலில் வருகின்றன. எனவே அடுத்தடுத்துள்ள ஒரே நிலப்பரப்பில் பேசப்படும் மொழி நாட்டின் மக்கள்தொகையில் 42% என்பதால் அதையே ஏற்க வேண்டும் என்று கூறுவதைத் தார்மிகப் பெரும்பான்மையாகக் கருத முடியாது. எனவே ஆட்சி மொழியாவதற்கு இந்திக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறுகிறேன்.

மொழிவாரி மாநிலங்கள் ஏற்பட்டுவிட்டதால் நாம் முழு ஒற்றுமையுடன் வாழ்கிறோம் என்று உள்துறை அமைச்சர் கூறினார். நாம் நமது மாநில மொழிகளை வளர்த்துக்கொண்டிருக்கிறோம்.  அவற்றை பிராந்திய மொழிகள் என்றுகூட நாம் கூறுவதில்லை, தேசிய மொழிகள் என்றே கூறுகிறோம். என் மாநிலத்தில் தமிழ்தான் தேசிய மொழி, அதுதான் ஆட்சி மொழியும். ஒவ்வொரு தேசிய அல்லது மாநில மொழியும் தத்தமது வழியில் வளர்ச்சி அடைந்துவருகின்றன. இந்த அவையில் உள்ள எல்லா உறுப்பினர்களும் என்னுடைய மாநிலத்துக்கு வந்து, இப்போதைய அரசியல் சூழலைப் பார்த்துவிட்டு, உங்களுடைய தேசிய மொழி முயற்சி சரிப்பட்டு வருமா என்று ஆராயக் கோருகிறேன்.

மொழிவாரி மாநிலங்கள் தங்களுடைய மொழிகளை வளப்படுத்துகின்றன. ஆந்திரத்தில் தெலுங்கு; கேரளத்தில் மலையாளம்; தமிழ்நாட்டில் தமிழ்; உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பிஹார், ராஜஸ்தானில் இந்தி என அவரவர் மொழிகளை அவரவர் தேசிய மொழியாக வளர்க்கின்றனர், அதற்கான உரிமை அவர்களுக்கு இருக்கிறது.

இருமொழி மாநிலமான பஞ்சாபில் பஞ்சாபி, இந்தி இரண்டும் பேசப்படுகிறது. இந்தியை ஆட்சி மொழியாக்கப் பெரிதும் பாடுபட வேண்டியிருந்தது என்று அவைத் தலைவர் கூறியதாக செய்தித்தாள்களில் வாசித்தேன். எனவே இந்தி பேசும் மாநிலங்களுக்கு என்னுடைய வேண்டுகோள் எல்லாம், உங்களுடைய மொழியை வளப்படுத்துங்கள், மாநில ஆட்சி மொழியாக்குங்கள், நீங்கள் விரும்பினால் அனைவரும் ஏற்கும் மொழியாக்குங்கள் என்பதுதான்.

சந்தோஷ்குமார் பாசு: இந்தியா முழுவதற்கும் ஒரு பொது மொழி வேண்டும் என்ற பிரச்சினைக்கு நீங்கள் கூறும் தீர்வு என்ன?

சி.என்.அண்ணாதுரை: என்னுடைய தீர்வு எதிர்மறையானது, நேர்மறையானது அல்ல. நான் கூற விரும்புவது இதைத்தான். இப்போதுள்ள நிலையே நீடிக்க அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துங்கள். இதற்கான தீர்வை நாம் காண வேண்டிய அவசியம் இல்லை.

இந்தியாவை ஆளும் கடைசி ஆட்சியாளர்கள் நாமல்ல. நாம் மிகவும் குழம்பியிருக்கிறோம். நம்மிடைய அரசியல் மாச்சரியங்கள் அதிகமாக இருக்கின்றன. எதிர்காலத்தில் பொருத்தமான தீர்வு ஏற்படும். அந்த வழியை நாம் அடைக்க வேண்டாம்.  இப்போதுள்ள நிலையையே பராமரிக்க அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வோம். இதை என்னுடைய தீர்வு என்று கூற மாட்டேன். இது என்னுடைய வேண்டுகோள், கோரிக்கை, இந்தத் தீர்வில்தான் தென்னிந்தியாவின் முழு அரசியல் எதிர்காலமும் – குறிப்பாக தமிழ்நாட்டின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது.

பி.கே.பி. சின்ஹா (பிஹார்): ஏன் இதை உலக நீதிமன்றத்தின் (தி ஹேக்) கவனத்துக்குக் கொண்டுசெல்லக் கூடாது?

சி.என்.அண்ணாதுரை: நான் இப்போது உள்துறை அமைச்சரை எதிர்கொண்டிருக்கிறேன், ஒரு காந்தியர் என்ற வகையில், நான் எதை தீமை என்றும் அநியாயம் என்றும் கருதுகிறேனோ அதற்கு எதிராகப் போராட எனக்கு அவர் உரிமை தர வேண்டும். இதன் விளைவு எதுவாக இருந்தாலும் சந்திக்கத் தயார், தமிழ்நாட்டில் நான் தனியாள் இல்லை. எனவே என்னுடைய வேண்டுகோள் எல்லாம், மிகவும் பெருமை வாய்ந்த மொழிக்குச் சொந்தக்காரர்களான மாநில மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள், இந்தியை ஆட்சிமொழியாகத் திணிப்பதால் அரசியல் மனமாச்சரியங்கள்தான் எஞ்சும் என்பது. “ஆங்கிலம் அன்னிய நாட்டு மொழியாயிற்றே!” என்று வாதிக்கப்பட்டது.

அமெரிக்காவையும் அயர்லாந்தையும் பாருங்கள்!

நான் ஒரு உதாரணம் கூற விரும்புகிறேன், இது என்னுடைய நண்பர் புபேஷ் குப்தாவுக்கு எரிச்சல் ஊட்டலாம். அமெரிக்கா என்ற நாடு உருவானபோது அங்கே குடியேறியவர்களில் வெறும் 20% பேர் மட்டுமே பிரிட்டிஷ் தீவுகளிலிருந்து சென்றவர்கள். 80%க்கும் மேற்பட்டவர்கள் ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளிலிருந்து சென்றவர்கள். இருந்தும் ஆங்கிலத்தையே ஆட்சி மொழியாகத் தேர்ந்தெடுத்தது அமெரிக்கா. ‘ஓ… அப்படியா, இது ஆங்கிலேயே-அமெரிக்க சதி-எங்களுக்கு நன்றாகத் தெரியும்’ என்று மனதில் நினைத்தபடி என் நண்பர் புபேஷ் குப்தா புன்னகைக்கிறார். இருந்தாலும் அமெரிக்கர்கள் எங்களைப் போலவே சுயமரியாதை உள்ளவர்கள் என்று கூறுவேன். ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக ஏற்றால் ஏராளமானோரின் உணர்வுகளை வெளிப்படுத்த முடியும் என்று கருதினர்.

இன்னொரு தகுந்த உதாரணத்தையும் என்னால் கூற முடியும். அயர்லாந்து இங்கிலாந்துக்கு எதிராகத் தீவிரமாகப் போர் புரிந்துகொண்டிருந்தது - காங்கிரஸ் பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடிய அளவுக்கு இல்லையென்றாலும்! அப்போது அயர்லாந்து புரட்சிக்காரத் தலைவர் டி வலேரா கூறினார். “உங்களுக்கு அயர்லாந்து வேண்டுமா, கேலிக் மொழி வேண்டுமா என்று எங்களிடம் கேட்டால், அயர்லாந்து கோரிக்கையை விட்டுக்கொடுத்துவிட்டு கேலிக் மொழியைக் கேட்டுப் பெறுவேன்” என்று.

அயர்லாந்து சுதந்திர நாடானவுடன் அயர்லாந்து நாடாளுமன்றம் கேலிக் மொழியை ஆட்சி மொழியாக அறிவித்தது, அதே கையோடு ஆங்கிலமும் துணை ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது. பிரிட்டிஷ்காரர்கள் மீது நமக்கு பகைமையோ, விரோதமோ இல்லை. நாம் வேறு நாடுகளின் குழுவில் இருக்க வேண்டும் என்று புபேஷ் குப்தா விரும்பினாலும் நாம் காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினராக இருக்கிறோம். அதிருஷ்டமோ, துரதிருஷ்டமோ நாம் காமன்வெல்த் நாடுகளில் ஒன்றாக இருக்கிறோம். காமன்வெல்த்தில் நீடிக்க முடியும், எல்லா தொழில்நுட்பங்களையும் பெற முடியும்.

ஆங்கிலம் என்ற சாளரத்தின் வழியாக உலகைப் பார்க்க முடியும். ஆனாலும், ஆங்கிலம் அன்னிய மொழி என்பீர்கள். பிரிட்டிஷ்காரர்கள் இங்கேயே இருந்து, ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினால் அதை நாம் அவமரியாதையாகக் கருதலாம்; அதை நாம் எதிர்த்தே ஆக வேண்டும். பிரிட்டிஷ்காரர்கள் ஆங்கிலத்தைத் திணிப்பது என்றே கேள்விக்கே இடமில்லை. நாம் பேசும் ஆங்கிலம் தரமாக இல்லை என்பதற்காகவே ஆங்கிலம் இங்கிருந்து வெளியேற வேண்டும் என்றே பிரிட்டிஷார் விரும்புவார்கள் என்று புபேஷ் குப்தாகூட குறிப்பிட்டார். எனவே வெளியிலிருந்து அன்னிய சக்திகள் அன்னிய மொழியைத் திணித்துவிட்டதாக இதைக் கருதக் கூடாது.

நம்முடைய தேவைக்காக, நம்முடைய பயன்பாட்டுக்காக, உகந்த வகையில் இருப்பதால், சூழ்நிலைகள் காரணமாக ஆங்கிலத்தை ஆட்சி மொழியாகத் தொடர வேண்டிய நிலையில் இருக்கிறோம். இந்த மொழி உத்தர பிரதேசத்துக்கு மத்திய பிரதேசத்துக்கு பிஹாருக்கு ராஜஸ்தானுக்கு தமிழ்நாட்டுக்கு ஆந்திரத்துக்கு அன்னிய மொழியாகும். இதனால் ஏற்படப்போகும் நன்மையும் தீமையும் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானது.

மொழித் தூய்மை எனும் அபாயம் காத்திருக்கிறது!

ஒருவேளை இந்தி ஆட்சி மொழியாகிறது என்று வைத்துக்கொள்வோம்; இந்தியை மேலும் எளிமைப்படுத்த வேண்டும் என்று பிரதமர் கூறிவருகிறார். ஒரு மொழி தேசிய மொழியானால், அதை மேலும் மேலும் தூய்மைப்படுத்துவதும் அதை மேலும் எளிமைப்படுத்துவதும்தான் நடைபெறும். தமிழ் மொழியைக் கையாளும் அனுபவத்திலிருந்து இதைக் கூறுகிறேன். ஒரு மொழியை தேசிய மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் அறிவித்துவிட்டால் அதை உங்களால் எளிமைப்படுத்தவே முடியாது. எங்களுடைய மாநிலத்துக்கு வந்தால் புபேஷ் குப்தா காணலாம், ‘பழைய’ தமிழ் வார்த்தைகளுக்குப் பதிலாக ‘புதிய’ வார்த்தைகளை நிறையப் பயன்படுத்தி வருகிறோம்; இவையெல்லாம் ‘பழைய அகராதிகளிலிருந்து புதிதாக’ எடுக்கப்பட்டவை! சம்ஸ்கிருதத்தோடு தமிழ் கலந்திருந்தது. இப்போது சம்ஸ்கிருதம் நீக்கப்பட்டு தமிழ் தூய்மையாக்கப்பட்டுள்ளது. இந்தி பேசும் மாநிலங்களிலும் இதுதான் நடக்கும். அப்படி நடக்கும்போது ‘எளிமையான இந்தி படியுங்கள்’ என்று எம் இனத்தவரைக் கேட்பது அவர்களுக்குப் பெரிய பின்னடைவாகிவிடும் அல்லவா?

இந்தி பேசும் மாநிலங்களில் – இந்தி பேசும் மக்களுக்கு அதுவே தாய்மொழியாக இருக்கும்; அதுவே அரசு மொழியாகவும் இருக்கும்; அதுவே பயிற்று மொழியாகவும் இருக்கும்; அதிவே மத்திய அரசின் மொழியாகவும் இருக்கும்! இந்தி பேசும் மக்களுக்குத்தான் எத்தனை சலுகைகள், வாய்ப்புகள், உரிமைகள். இந்தி பேசாத எம் போன்ற மக்களுக்கு எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்துகிறீர்கள்? 

இந்தி எங்களுக்குத் தாய்மொழி அல்ல. எனவே நாங்கள் இந்தி கற்றுக்கொண்டாலும் நண்பர் சத்யநாராயணாவைப் போலத்தான் பேச முடியும்.  நீங்கள் வட இந்தியாவில் வினோதங்களை ஏற்படுத்தப் பார்க்கிறீர்கள். எவ்வளவுதான் திறமையாகப் படித்தாலும் சரளமாகப் பேசினாலும் நமக்குத் தாய்மொழியாக இல்லாத ஒன்று அனுகூலங்களைத் தராது; அதனால்தான் சொல்கிறோம் இந்த மொழி மசோதாவுக்குப் பின்னால் அரசியல் இருக்கிறது என்று.

இதை நீங்கள் உணராமல் இருக்கலாம். தங்களுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்று அமைச்சர் தனது உரையின் இறுதிப் பகுதியில் கூறினார். அவரைப் போன்ற கனவான்கள் இதைக் கையாளும்போது அப்படி ஏதும் இருக்க முடியாது. உங்களுக்கு நோக்கம் இருக்கிறதோ, இல்லையோ இறுதியில் விளைவு அப்படிப்பட்டதாகத்தான் இருக்கும்.

எந்த விளைவுகளுக்கும் நாங்கள் அஞ்சப்போவதில்லை!

இந்தியை ஆட்சி மொழியாகத் திணிப்பது இந்தி பேசும் மாநிலங்களுக்கு திட்டவட்டமான, நிரந்தரமான சாதகமாக அமையும். இதைத்தான் ஒரிசாவைச் சேர்ந்த பி.தாஸ், டாக்டர் சுப்பராயன் போன்றோர் இந்திய அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையிலேயே கூறினர். ராஜ்யசபையிலும்கூட சில ஆண்டுகளுக்கு முன்னால் இது தொடர்பான கேள்வி விவாதிக்கப்பட்டபோது என்னுடைய நண்பர் அவினாசிலிங்கம் செட்டியார் தனது எச்சரிக்கைக் குரலை உயர்த்தினார்.

எனவே, இந்த எதிர்ப்பு திமுகவால் மட்டுமே எழுப்பப்பட்டது என்று எண்ணாதீர்கள். இந்தப் பிரச்சினையில் திமுக சிறிய பங்கை மட்டுமே வகிக்கிறது. இந்த மசோதாவின் எதிர்காலம் பொருத்துதான் திமுக சிறிய இடத்தைப் பிடிக்கிறதா, பெரிய இடத்தைப் பிடிக்கப்போகிறதா என்பது முடிவாகும். இந்தி ஆட்சிமொழியாக திணிக்கப்பட்டால் திமுக தனது இடைவிடாத போராட்டத்தைத் தொடரும்; விளைவுகள் எப்படிப்பட்டவையாக இருந்தாலும் கவலைப்படாது.

அன்றொரு நாள், “நெருக்கடிநிலை நிலவும்போது நான் விரும்பும் எந்த நடவடிக்கையையும் எடுக்க நாடாளுமன்றம் எனக்கு அதிகாரத்தைத் தருகிறது” என்று அன்றொரு நாள் உள்துறை அமைச்சர் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் சொன்னதன் பொருளை உணர்ந்திருக்கிறேன், இந்தித் திணிப்பு முயற்சி உண்மையிலேயே நடக்குமானால் என்னுடைய மனசாட்சி சும்மா இருக்காது; தென்னிந்தியா முழுவதும் திரண்டு எழும். தென்னிந்தியா என்று சொல்லும்போது, ஆந்திரர்கள், மலையாளிகள் மற்றும் பிற பகுதியினர் என்ன கூறுவார்கள் என்று எனக்குத் தெரியும்; “இல்லையில்லை, நாங்கள் உங்களுடன் இல்லை” என்றுதான் கூறுவார்கள். ஆனால், இந்தித் திணிப்பின் ஆபத்தை உணர்ந்தவர்கள், அதன் விளைவைச் சிந்திக்க முடிந்தவர்கள் அனைவரும் என்னோடு இருக்கின்றனர்.

ஓர் உறுப்பினர்: மெட்றாஸ் நகரச் சிறுபான்மையின மக்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர்.

சி.என்.அண்ணாதுரை: (ஒட்டுமொத்த இந்தியாவுடன் ஒப்பிடுகையில்) நான் சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்தவன் என்பதால் இறைஞ்சுகிறேன். நானே பெரும்பான்மைச் சமூகத்தவனாக இருந்திருந்தால் என்னுடைய வாதம் ஏற்கப்பட்டிருக்கும். நான் குற்றஞ்சாட்டவில்லை. காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைத் தொகுதிகளில் வெற்றி பெற்றதால் ஆட்சி நடத்தவில்லை, சிறுபான்மைச் சமூக மக்களின் ஆதரவு கிடைத்திருப்பதால் அதிகாரம் அதனிடம் இருக்கிறது என்று நீங்கள் கூறிக்கொள்வதால் இதைத் தெரிவிக்கிறேன்.

கே.பி. சின்ஹா: மிகப் பெரிய வாக்குத் திரள்கள்.

சி.என்.அண்ணாதுரை: கடந்த மக்களவைப் பொதுத் தேர்தலில் மொத்தமாக 45% வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சி 72% தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. எதிர்க்கட்சிக் குழுக்களோ 55% வாக்குகளைப் பெற்றும் 28% இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.

(குறுக்கீடுகள்)

சி.என்.அண்ணாதுரை: இந்த உண்மைகளையெல்லாம் வெளியிடுமாறு என்னைச் சீண்டாதீர்கள். எனவே இங்கே பெரும்பான்மை – சிறுபான்மை என்ற வாதங்கள் பொருந்தாது. நீதி எது, சுதந்திரம் எது என்றுதான் பார்க்க வேண்டும். ஆலோசனை, கருத்தொற்றுமை ஆகியவற்றுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும். அன்பும் சுமுகத் தன்மையும் வேண்டுமா அல்லது பகையும் பூசலும் வேண்டுமா என்று தீர்மானிக்க வேண்டும்.

இந்தப் பிரச்சினையை அப்படித்தான் அணுக வேண்டுமே தவிர எங்களுக்குப் பெரும்பான்மை வலு இருக்கிறது என்று எண்ணிக்கை அடிப்படையில் தீர்மானிக்கக் கூடாது. மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தாலும் இதைத் திரும்பப் பெறுமாறு உள்துறை அமைச்சரை வேண்டிக்கொள்கிறேன். பிரதமர் அளித்துள்ள உறுதிமொழியைக் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள். அவரிடம் கடைசியாக நான் வலியுறுத்த விரும்புவது இதைத்தான்.

இவ்வளவுதானா உங்கள் அரசியல் மதியுகம்?

பிரதமரின் உறுதிமொழிதான் என்ன? பிரதமர் உறுதிமொழி அளித்தார் என்று சொல்வதற்கு முன்னால் அந்த உறுதிமொழிக்கான மூலம் எது என்று பார்க்குமாறு உள்துறை அமைச்சரைக் கேட்டுக்கொள்ள ஆசைப்படுகிறேன். ஏன் அப்படியொரு உறுதிமொழி தரப்பட்டது, எப்போது தரப்பட்டது, எப்படி தரப்பட்டது, யாருக்குத் தரப்பட்டது என்று ஆராயுங்கள்.

ஒரு நாட்டின் பிரதமர் யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் உறுதிமொழிகளை அளித்துக் கொண்டே இருக்க மாட்டார். அன்றைக்கு அப்படியொரு உறுதிமொழியைத் தர வேண்டிய அளவுக்கு அரசியல் சூழ்நிலை நிலவியது. நாட்டு மக்களின் கொதிப்படைந்த உள்ளங்களைக் குளிர்விக்க வேண்டிய கடமை பிரதமருக்கு ஏற்பட்டது. அப்போதுதான் மொழிவாரிச் சிறுபான்மை மாநிலங்களின் ஐயங்களைப் போக்கும் வகையில் ஆட்சி மொழி தொடர்பாகப் பிரதமர் அந்த உறுதிமொழிகளை அளித்தார். ‘இணை ஆட்சி மொழி’ என்ற வார்த்தையை ஏன் நாம் பயன்படுத்தக் கூடாது? 

சிலர் கேட்கக்கூடும், ஏன் உங்களுக்கு இப்போதைய தலைப்பில் திருப்தி இல்லையா என்று? இது ஆட்சி மொழிதான்; இந்தத் தலைப்பு எனக்குத் திருப்தியைத் தந்தால் நண்பர் வாஜ்பாய்க்கு அதில் திருப்தி இருக்காது, ஏனென்றால் ‘ஆட்சி மொழி’ என்று அல்ல - ‘ஆட்சி மொழிகள்’ என்று பன்மையில் இருக்கிறதே என்று நினைப்பார். வாஜ்பாய்க்கு நான் எதிரானவன் அல்ல. அவருடைய வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன என்று எனக்குப் புரியும். அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருப்பவர்களுக்கு எதிர்த்தரப்பார் என்ன சொல்கிறார்கள், நினைக்கிறார்கள் என்று புரிந்துவிடும். இப்படியும் இல்லாமல் – அப்படியும் இல்லாமல் கலவையாக இருப்பவைதான் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.

என் நண்பர் வாஜ்பாய் இந்தி மொழியில்தான் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டார். அவருடைய துணிச்சலைப் பாராட்டுகிறேன். என்னுடைய மாநிலத்திலும் ஏராளமான (மொழிப்பற்று மிக்க) வாஜ்பாய்கள் உருவாக வேண்டும் என்று விரும்புகிறேன். வாஜ்பாய்க்கு முழு வாய்ப்பு கிடைத்தால் இந்தியை இந்தியாவின் ஆட்சி மொழியாக மட்டுமல்ல – உலக ஆட்சி மொழியாகக்கூட மாற்றிவிடுவார்! அவருடைய மொழி ஆர்வத்துக்காகவே அவரை எனக்கு மிகவும் பிடிக்கிறது. ஆனால் காங்கிரஸ் அரசோ இப்படிச் செய்திருக்கிறது, ஒரு பக்கம் இந்தி பேசும் மக்களை ஊக்குவித்துக்கொண்டே இருக்கிறார்கள், இன்னொரு பக்கம் எங்களிடம் இந்தி திணிப்பு இருக்காது என்று உறுதிமொழியை வழங்கிக்கொண்டே இருக்கிறார்கள்.

இந்தியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு நேரும்போதெல்லாம், ‘அச்சம் வேண்டாம்; 1965 பிறக்கட்டும், இந்தி ஆட்சி மொழியாகிவிடும்’ என்று கூறுகின்றனர். வாஜ்பாய்க்குத் திருப்தியே இல்லை. அதனால்தான் இந்த மசோதா அவருக்கு அதிருப்தியைத் தந்திருக்கிறது. ஆங்கிலத்துக்கு மேலும் பத்தாண்டுகள் ஆயுள் நீட்டிப்பு கிடைத்திருக்கிறது. அதனால்தான் அவர் ‘எங்கே என் இந்தி?’ என்று கேட்கிறார்.

ஆட்சி மொழி தொடர்பாக நீங்கள் எங்களுக்கும் நிறைய வாக்குறுதி தந்திருக்கிறீர்கள். ஆங்கிலம் இணை ஆட்சி மொழியாக காலவரம்பின்றித் தொடரும் என்று கூறினீர்கள். ‘காலவரம்பின்றி’ என்ற வார்த்தைக்கு பண்டிதர் ஜவாஹர்லால் நேரு இப்படியொரு விளக்கத்தையும் அளித்தார்: “நீங்கள் விரும்பும்வரை, இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை, ஆட்சி மொழி தொடர்பான இறுதி முடிவு எடுக்கும் உரிமையை இந்தி பேசும் மக்களுக்கு அல்ல, இந்தி பேசாத மக்களிடம் விட்டுவிடுகிறேன்’ என்று கூறியிருந்தார்.

வாஜ்பாய் சிறந்த நண்பர்; எங்களுக்குள் பகையை மூட்டாதீர்கள்!

இந்தித் திணிப்பு இருக்காது என்று எங்களிடம் கூறிவிட்டு, இந்தி வேண்டும் என்று கோரும் வாஜ்பாயைப் போன்றவர்களைக் கோரிக்கைகளை வலியுறுத்த ஊக்குவிப்பதன் மூலம் எனக்கும் வாஜ்பாய்க்கும் இடையில் பகையை மூட்ட முற்படுகிறீர்கள். உத்தர பிரதேசத்தில் இந்தியை வளர்க்க வாஜ்பாய்க்கு ஊக்குவிப்பு தந்து, எனக்கும் வாஜ்பாய்க்கும் இடையில் ஆங்கிலம் தொடர்புமொழியாகத் தொடர நீங்கள் அனுமதிக்கும்பட்சத்தில் வாஜ்பாயைவிடச் சிறந்த நண்பரை நான் பெற முடியாது. இந்த மசோதா மூலம் நீங்கள் அரசியல் மாச்சரியங்களை வளர்க்கிறீர்கள். பிரதமர் அளித்த வாக்குறுதி இந்த மசோதாவில் இடம் பெறவேயில்லை. இந்த மசோதாவின் ஒவ்வொரு ஷரத்தாக மக்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆங்கிலம் தொடரும் என்று பிரதமர் சொன்னார்; ஆங்கிலம் தொடர்கிறது, எப்படி?  இந்தியுடன் சேர்ந்த இணை ஆட்சிமொழியாக அல்ல, மத்திய அரசு தீர்மானிக்கும் சில செயல்களுக்கு மட்டும் ஆங்கிலம் இணை ஆட்சிமொழியாக இருக்கும். பிரதமர் அளித்த வாக்குறுதியோ இந்தியுடன் ஆங்கிலமும் இணை ஆட்சிமொழியாக எல்லா நிலையிலும் தொடரும் என்பதுதான்; பிரதமரின் வாக்குறுதி முழுதாக நிறைவேற்றப்பட வேண்டுமென்றால் இப்போதைய மசோதா கைவிடப்பட வேண்டும்; நீங்கள் அஞ்சா நெஞ்சர்கள், வேட்டியை வரிந்து கட்டுங்கள், இந்த மசோதாவைக் கைவிடுவதால் எழும் எதிர்ப்பைத் துணிந்து எதிர்த்து நில்லுங்கள். ஆட்சி மொழியாக ஆங்கிலமே தொடரும் என்ற இப்போதைய நிலைமை நீடிக்க அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துங்கள். அன்னிய மொழி என்பதால் இதைக் கைவிட வேண்டும் என்று நினைக்காதீர்கள். எந்த நாட்டிடமிருந்தும் அறிவியல், தொழில்நுட்ப உதவிகளைக் கேட்டுப்பெறும் காலம் இது; ஆங்கில மக்கள் நமக்குக் கொடுத்தத் தொழில்நுட்ப உதவியாகவே இம்மொழியைக் கருதுவோம்.

இந்தியாவின் ஆட்சி மொழி அல்லது பொது மொழிப் பிரச்சினைக்கான தீர்வை எதிர்காலம் காணட்டும். பதற்றம், கோபம் ஏதும் இல்லாத நிலையில் எதிர்காலத்து இந்தியர்கள் இதற்கொரு தீர்வு காணட்டும். எனவே இந்த மசோதாவைக் கைவிடுமாறு உள்துறை அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன். இந்த மசோதா மீதான விவாதம் தொடங்கியதிலிருந்து தென்னிந்தியாவின் அமைதியான சூழலில் பாதிப்பு ஏற்பட்டுவருகிறது.

தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளிலும் எல்லா ஊர்களிலும் மக்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து ஆட்சி மொழி தொடர்பாக சூடாக விவாதித்து வருகின்றனர். சாதாரணமாக விவாதிக்கவில்லை, அரசியல் சார்புடனும் மாச்சரியங்களுடனும் ஆக்ரோஷமாக விவாதிக்கின்றனர். நாம் விரட்டியடிக்கப்பட வேண்டிய எதிரி (சீன எல்லையில்) அங்கே இருப்பதாக உள்துறை அமைச்சர் கூறிவிட்டு, நமக்குள்ளேயே மோதல்களை ஏற்படுத்துவதற்கு இதுதான் உற்ற நேரமா? அரசியல் சுமூக நிலையையும் அரசியல் சூழலையும் சேதப்படுத்த இதுதான் சரியான நேரமா? மிகச் சிறந்த ராஜதந்திரி என்ற வகையில் இந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்தி இம்மசோதாவைக் கைவிட வேண்டும், அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தி, இந்தி பேசாத மக்கள் முடிவெடுக்கும்வரையில் ஆங்கிலமே ஆட்சி மொழியாக நீடிக்கும் வகையில் அரசியல் சட்டத்துக்குத் திருத்தம் கொண்டுவர வேண்டும்.

இப்படிச் சொல்வதற்காக நான் நகைப்புக்கிடமானவனாகிவிட மாட்டேன், மத்திய திட்டக் குழு உறுப்பினரான ஸ்ரீமன் நாராயண், இந்தி பேசாத மக்கள்தான் (ஆட்சி மொழி தொடர்பாக) முடிவெடுக்க வேண்டும் என்று கடந்த வாரம்தான் கூறியிருக்கிறார். உள்துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி கலந்துகொண்ட கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மிஸ்ரா என்ற பெயருள்ள தலைவர் பேசியிருக்கிறார், “ஆட்சி மொழி தொடர்பாக இந்தி பேசாத மக்களிடம் கையெழுத்திடாத வெற்றுக்காசோலையை (முடிவெடுக்கும் வாய்ப்பை) கொடுத்துவிட வேண்டும், அதில் அவர்கள் பெயரையும், தேதியையும் எழுதிக்கொள்ளட்டும்” என்று. இதுதான் அரசியல் பெருந்தன்மை, அரசியல் மதிநுட்பம்.

உங்களிடம் எதிர்பார்க்கப்பட்ட மதிநுட்பமும், ராஜதந்திரத் தன்மையும் இந்த மசோதாவால் தகர்க்கப்பட்டுவிட்டது; கடந்த ஓராண்டாக ஏற்படுத்தப்பட்டிருந்த ஒற்றுமையைக் குலைத்து அமைதியான அரசியல் சூழலில் பிளவை ஏற்படுத்துகிறீர்கள். எனவே ஒற்றைக் குரலாக – புபேஷ் குப்தா கூறியபடி இரைச்சலான குரலாக இருந்தாலும் – எனது கோரிக்கையை உள்துறை அமைச்சரிடம் வைக்கிறேன்; திமுகவின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி என்ற வகையிலும் இந்தி பேசாத தென் மாநிலங்களின் அதிகாரப்பூர்வமற்ற தூதுவன் என்ற வகையிலும், இந்தியின் தீமையையும் விளைவுகளையும் புரிந்துகொண்டவர்களின் சார்பிலும் கேட்கிறேன், இந்த மசோதாவை வலியுறுத்தாதீர்கள். மொழி விவகாரத்தில் மறு ஆய்வு செய்யுங்கள். மறு ஆய்வு முடிவு வரும்வரையில் ஆங்கிலமே ஆட்சி மொழியாக நீடிக்க அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தி இப்போதைய நிலையைப் பராமரியுங்கள்.



நுணலுந்தன் வாயால் கெடும்

பொல்லாத சொல்லி மறைந்தொழுகும் பேதைதன்
சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும் - நல்லாய்!
மணலுள் முழுகி மறைந்து கிடக்கும்
நுணலுந்தன் வாயால் கெடும்.

                                                  --பழமொழி நானூறு பாடல் - 184


நல்லவளே! மணலினுள்ளே முழுகி மறைந்து கிடக்கின்ற தவளையும், தன் குரலைக் காட்டிக் கத்திக் கொண்டிருக்கிற தன்னுடைய வாயின் செயலாலேயே அழிவு எய்தும். அதுபோலவே பிறரைப் பற்றிய பொல்லாங்கான பேச்சுக்களைப் பேசிவிட்டு மறைந்து திரியும் பேதையும், தன்னுடைய சொல்லினாலேயே தன்னைத் துயரத்தினுள் அகப்படச் செய்து கொள்வான். 

"நுணலுந்தன் வாயால் கெடும்" என்பது பழமொழி.



ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே - பட்டினத்தார்

 பட்டினத்தார் பாடிய "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்ற வரிகள், அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தன. இதன் பின்னணியை மேலும் விரிவாகக் காண்போம்.

பட்டினத்தாரின் வாழ்க்கை

பட்டினத்தார், காவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்த பெரும் செல்வந்தர். இவருக்கு திருவெண்காடர் என்ற பெயரும் உண்டு. அவரது குடும்பம் கப்பல் வணிகத்தில் கொடிகட்டிப் பறந்தது. அவர் பொருள் தேடுவதிலேயே தன் வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்தார். அவருக்குத் திருமணமாகி, நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு மகன் பிறந்தார். அவனுக்கு மருதவாணர் என்று பெயரிட்டார். இந்த மகன், சிவபெருமானின் அருளால் பிறந்தவர் என்று கூறப்படுகிறது.

துறவறத்திற்கான அழைப்பு

ஒருமுறை, மருதவாணர் வெளியூர் செல்லும் முன்பு, தனது தந்தையான பட்டினத்தாரிடம் ஒரு சிறிய பெட்டியைக் கொடுத்து, "நான் வரும் வரை இதைப் பாதுகாத்து வையுங்கள்" என்று கூறிச் சென்றார். பல நாட்கள் கடந்தும் மகன் திரும்பவில்லை. ஆவலுடன் பட்டினத்தார் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தார்.

அந்தப் பெட்டிக்குள், ஒரு உடைந்த காது கொண்ட ஊசியும், ஒரு ஓலையும் இருந்தன. அந்த ஓலையில் "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்று எழுதப்பட்டிருந்தது.

இந்த வரிகளைக் கண்டதும் பட்டினத்தார் திகைத்து நின்றார். தன் வாழ்நாள் முழுவதும் சேர்த்த செல்வமோ, சொத்தோ, புகழோ, ஏன் ஒரு உடைந்த ஊசிகூட இறக்கும்போது தன்னுடன் வராது என்பதை அந்த ஒற்றை வரியின் மூலம் உணர்ந்தார்.

ஞானோதயம் மற்றும் துறவறம்

இந்த நிகழ்வு பட்டினத்தாரின் மனதில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அவர் சேகரித்து வைத்திருந்த அனைத்து செல்வங்களும் நிலையற்றவை என்பதை உணர்ந்து, அவற்றின் மீது இருந்த பற்றை முழுமையாக நீக்கினார்.

  • தான் அணிந்திருந்த ஆடைகளை எல்லாம் களைந்து, ஒரு கோவணத்துடன் வீதிக்கு வந்தார்.

  • தன்னுடைய செல்வங்களை எல்லாம் ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்கினார்.

  • "ஐயமிட்டு உண்" என்ற கொள்கையின்படி, பிச்சை எடுத்து உண்ணும் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு, அவர் பட்டினத்தார் என்ற பெயரால் அறியப்பட்டார். அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் வாழ்வின் நிலையாமையை, பற்றின்மையின் அவசியத்தை, இறைவனின் பெருமையை எடுத்துரைப்பவையாக அமைந்தன. அவரது பாடல்கள் இன்றும் பல ஆன்மீக அன்பர்களுக்கு வழிகாட்டியாக உள்ளன. "காதற்ற ஊசியும் வாராது" என்ற வரி, பற்றற்ற வாழ்வின் தத்துவத்தை எளிமையாகவும், ஆழமாகவும் உணர்த்தும் ஒரு பொன்மொழியாகத் திகழ்கிறது.

பாடல்:

காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே, 

வேற்றுமை ஒன்றும் இல்லை மெய்ம்மையே, 

சேற்றினைக் குழம்பு இட்டுச் சென்றோமே, 

ஏற்றினைப் பலவும் எண்ணி ஈசனைத் துதிப்போம்.

விளக்கம்:

  • காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே: இறந்த பிறகு, ஒரு காது உடைந்த ஊசிகூட உன்னுடன் வராது. நீ சேர்த்துவைத்த செல்வம், புகழ் என எதுவுமே உன்னுடன் வராது.

  • வேற்றுமை ஒன்றும் இல்லை மெய்ம்மையே: இந்த உலகில் உள்ள உயிர்களுக்கிடையே எந்த வேற்றுமையும் இல்லை. அனைவரும் இறப்பு என்னும் உண்மையை நோக்கித்தான் பயணிக்கிறார்கள்.

  • சேற்றினைக் குழம்பு இட்டுச் சென்றோமே: நாம் இந்த உலகத்தில் சேற்றில் (ஆசைகள், பற்றுக்கள்) சிக்கி, அதையே உண்மையான வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

  • ஏற்றினைப் பலவும் எண்ணி ஈசனைத் துதிப்போம்: நாம் இந்த உலகத்தில் பல ஏற்றத் தாழ்வுகளையும், இன்னல்களையும் அனுபவித்தாலும், கடைசியில் ஈசனை (இறைவனை) மட்டுமே துதிக்க வேண்டும். அவர்தான் நம்மை இந்த வாழ்க்கைச் சுழலில் இருந்து விடுவிப்பார்.

இந்தப் பாடல், பட்டினத்தாரின் துறவற வாழ்வின் தொடக்கத்திற்கு ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது. இது மனித வாழ்க்கையின் நிலையாமையையும், இறைவன் ஒருவனையே பற்றிக்கொள்வதன் அவசியத்தையும் உணர்த்துகிறது.


செவ்வாய், 9 செப்டம்பர், 2025

இடப்பேச்சுக்களும் கொச்சை மொழிகளும் - டாக்டர். மு. வரதராசனார்

 தஞ்சாவூரிலிருந்து சென்னைக்குப் புதியவராக வந்தார் ஒருவர். ஒரு கடைக்கு போனார். ஒரு பொருளைக் காட்டி, “இது என்ன விலை அய்யா?” என்றார். கடைக்காரனுக்குக் கோபம் வந்தது. “என்ன அப்பா, பெரிய சீமான் என்று நினைத்துக்கொண்டு பேசுகிறாயோ?” என்றான். தஞ்சாவூராக்கு ஒன்றுமே விளங்கவில்லை. பேசாமல் நின்றார். அவருக்கும் கோபம் வந்தது. சிறிது அமைதிக்குப் பிறகு கடைக்காரன் அவரைப் பார்த்து, “மனிதனுக்கு மனிதன் சமமாக எண்ணிப் பேசு அப்பா. அய்யா கிய்யா என்று இப்படிப் பேசுகிறாயே?” என்றான். பக்கத்திலிருந்த ஒருவர் அப்போது குறுக்கே வந்து தஞ்சாவூர்க்காரரைப் பார்த்து, “நீங்கள் வெளியூர்க்காரர்போல் தெரிகிறது. இங்கே அய்யா என்று கூப்பிட்டால் கோபம் வரும். அப்படிப் பேசாதீர்கள்” என்றார். உடனே தஞ்சாவூர்க்காரர் இவரைப் பார்த்து, “கடைக்காரர்மட்டும் என்னை அப்பா கிப்பா என்று ஒருவகையாகப் பேசுகிறாரே அதுமட்டும் தகுமா?” என்றார். அப்போதுதான் ஒருவர்கொருவர் கொண்ட கோபத்தின் காரனம் விளங்கியாது.


தஞ்சாவூர் தமிழ்நாட்டில் உள்ள நகரம். சென்னை தமிழ்நாட்டின் தலைநகரம்.அப்படி இருந்தும், 'அய்யா' என்றால் சென்னைத் தமிழர்க்குக் கோபம் வருகிறது. 'அப்பா' என்றால் தஞ்சாவூர்த் தமிழர்க்குக் கோபம் வருகிறது. இருவரும் பேசுவது ஒரே மொழியாக இருந்தபோதிலும், இப்படி இடத்துக்கு இடம் பேச்சில் வேறுபாடு இருப்பதைக் காணலாம்.

திருநெல்வேலியில்,"ஒரு குவளையில் குடிக்கத் தண்ணீர் கொண்டுவா" என்பார்கள்;"வாளியால் தண்ணீர் கொண்டுவா'"என்பார்கள். வட ஆர்க்காடு, தென் ஆர்க்காடு,செஙகல்பட்டு ஆகிய ஜில்லாக்களில் வாழும் தமிழர்களுக்குக் 'குவளை' என்றாலும் தெரியாது; 'வாளி' என்றாலும் தெரியாது. 'டம்ளர்', 'பக்கெட்' என்று ஆங்கிலச்சொற்களைச் சொன்னால்தான் தெரியும். தமிழ் நாட்டின் தெற்குப் பகுதியில் குடிநீர்க்குப் பயன்படும் நீர் நிலையை 'ஊருணி' என்று சொல்வார்கள், வயல்களில் பயிருக்குப் பயன்படுமாறு நீர் தருவதைக் குளம் என்று சொல்வார்கள். மற்றப் பகுதிகளில் குடிதண்ணீர் தருவதைக் குளம் என்றும், பயிருக்குப் பயன்படுவதை ஏரி என்றும் சொல்வார்கள். இப்படி இடத்துக்கு இடம் சில சில சொற்கள் வேறு வேறு பொருளில் பேசப்படுவதைக காணலாம். நூற்றுக்கு 90,95 சொற்கள் எல்லா இடங்களுக்கும் பொதுவாக ஒத்திருக்கும். ஆனால், நூற்றுக்கு 10 அல்லது 5 சொற்கள் வெவ்வேறாக இருக்கும். இப்படி வெவ்வேறாக உள்ள சொற்களை என்ன என்று சொல்வது? அவைகளையே இடப்பேச்சுக்கள்(dialects) என்று சொல்வார்கள்.

ஒரு மலைக்கு இந்தப் பக்கம் ஓர் ஊரும் அந்தப் பக்கம் ஓர் ஊரும் இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். இரண்டு ஊரிலும் உள்ளவர்கள் ஒரே மொழி பேசுகின்றவர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். நாளடைவில் இவர்களுடைய பேச்சில் ஒற்றுமை இருந்த போதிலும் சில வேறுபாடுகள் அமைந்து விடும். இதற்குக் காரணம் அந்த ஊர்களுக்கு இடையில் மலை நின்று போக்குவரவுக்குத் தடையாய்ப்பிரித்த பிரிவே ஆகும். ஆறு முதலியவைகளாலும் இப்படிப் பிரிவு ஏற்பட்டு, இடப்பேச்சு வேறு வேறாக அமைவது உண்டு. ஒரு ஜில்லாவுக்கும் மற்றொரு ஜில்லாவுக்கும் உள்ள பேச்சிலும் இப்படியே இடம் காரணமாக வேறுபாடு ஏற்படும்.

மலையாள மொழி ஒரு காலத்தில் தமிழாகவே இருந்ததுதான். ஆனால், மேற்குத் தொடர்ச்சிமலை பிரித்தபடியாலும், அரசாங்கம் வேறாக இருந்ததாலும், அந்த நாட்டு மக்கள் பேசும் பேச்சு மெல்ல மெல்ல மாறிவிட்டது. நூற்றுக்கு ஐந்து பங்காக இருந்த வேறுபாடு நூற்றுக்கு ஐம்பதாக ஆகிவிட்டது. அதனால் அங்கே தமிழ் மறைந்து வேறு தனிமொழியாக ஏற்பட்டுவிட்டது. இடப் பேச்சாக உள்ள ஒரு மொழியின் பிரிவு, நாளைடைவில் இப்படி வேறொரு மொழியாகவே மாறுவது உண்டு. தெலுங்கும் கன்னடமும் ஒரு காலத்தில் இப்படி இடப்பேச்சுக்களாக இருந்து மாறி ஏற்பட்டவைதான். நாம் இப்போது தமிழ்நாட்டில் பேசும் பேச்சும் ஒருவகையாக இல்லை. ஆனால், புத்தகங்கள், பத்திரிகைகள், வானொலி முதலிய காரணங்களால், எல்லாப் பகுதிகளுக்கும் பொதுவான தமிழ் ஒன்று இருந்துவருகிறது. அதனால் தமிழர் ஒர் இனமாய்ப் பழகமுடிகிறது.

இவ்வாறு, இடப்பேச்சு ஏற்படுவதற்கு இடம் காரணமாக இருப்பது தவிர, வேறு சில காரணங்களும் உண்டு. வியாபாரிகள் பேசுகின்ற பேச்சில் சில தனிப்பண்புகள் உண்டு. வழக்கறிஞர்கள் சட்டத்தில் பழகிப் பேசும் பேச்சில் சில வேறுபாடுகள் உண்டு. சமயத்துறையிலும் இப்படிப்பட்ட இடப்பேச்சுக்களைக் காணலாம். சைவர், வைணவர், கிறிஸ்தவர், முகமதியர் எல்லோரும் தமிழரே ஆனபோதிலும், இவர்களின் சமயத்துறையில் வெவ்வேறு சொற்கள் பேசப்படுகின்றன. பதி, பசு என்றால் சைவர்களுக்குப் பொருள் வேறு. அமுது, திருவடி என்பவற்றை வைணவர்கள் குறிப்பிட்ட பொருளீல் வழங்குகிறார்கள். இவைகளும் இடப் பேச்சுக்களே. அரசியல் வைத்தியம் முதலிய மற்றத்துறையிலும் இடப்பேச்சுக்களைக் காணலாம். உதாரணம் பாருங்கள்: பொதுவான தமிழில் 'வரவு' என்றால் வருதல் என்று பொருள். 'செலவு' என்றால் செல்லுதல் என்று பொருள். ஆனால் வியாபாரிகள் பேச்சில் 'வரவு', 'செலவு' என்றால் வந்த பணம், செலவான பணம் என்று பொருள். உங்களுக்கு நன்றாகத் தெரிந்த வேறு உதாரணங்கள் கேளுங்கள்: பொதுவான தமிழில் 'பெயர்' என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியும். ஆனால், இலக்கணத்தில் 'பெயர்' என்றால், நால்வகைச் சொல்லில் ஒருவகை என்று அறிவீர்கள். 'வினை' என்றால், பொதுவான தமிழில், தொழில்,செயல், வேலை என்று பொருள்படும். ஆனால் சமயத்துறையில் 'வினை' என்றால், ஊழ்வினை என்று பொருளாகிறது. இலக்கணத்தில் 'வினை' என்றால், ஒரு வகைச்சொல்லைக் குறிக்கிறது. இப்படியே ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு துறையிலும், சில சொற்கள் வெவ்வேறாகப் பொருள் உணர்த்தக் காண்கிறோம். இவைகளே இடப்பேச்சுக்கள்.

இலங்கையில் உள்ள தமிழர்கள் பேசுவதும் தமிழே. ஆனால் இடப்பேச்சாக அவர்களின் தமிழிலும் சில வேறுபாடுகள் உண்டு. ஓய்வாக என்று நாம் சொல்வதை அவர்கள் 'ஆறுதலாக' என்பார்கள். ஆறுதலாக என்றால் நமக்குப் பொருள் வேறு. 'நாங்கள்' என்பது தன்மைப் பன்மையான சொல். அதில் எதிரில் உள்ளவர்களைச் சேர்த்துப் பேசும் கருத்து இல்லை. 'நாம்' என்பது அப்படி அல்லாமல், எதிரில் உள்ளவர்களையும் சேர்த்துப் பேசும் கருத்து உடையது. ஆனால் இலங்கைத் தமிழில், 'நாங்கள்' என்பதே வழங்குகிறது. அதற்கு நாம் என்பதே பொருளாக உள்ளது.

இடப்பேச்சுக்களில், சொற்கள் வேறுபொருள் உணர்த்துவது மட்டும் அன்று. வேறு வேறு வகையாகவே ஒலிக்கப்படுவதும் உண்டு. 'வாழைப்பழம்' என்பதைச் சில இடங்களில் 'வாயப்பழம்' என்று ஒலிக்கிறார்கள். வேறு சில இடங்களில் 'வாளப்பளம்' என்கிறார்கள். இப்படி ஒலி வேறுபடுவதும் இடப் பேச்சாகவே கொள்ள வேண்டும். நிரம்ப நல்லவர் என்பதைச் சில இடங்களில் 'ரொம்ப நல்லவர்' என்பார்கள். சில இடங்களில் 'ரம்ப நல்லவர்' என்பார்கள்.

தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர் பேசும் சொற்கள் ஒருவகையாக ஒலிக்கப்படும். சாதியை ஒட்டித் தொழில் அமையும் இடங்களில், ஒவ்வொரு சாதியும் வெவ்வேறு வகையாக ஒலிப்பது உண்டு. 'இருக்குது' என்று சிலர் பேசுவார்கள். 'இருக்கு' என்று சிலர் சொல்வார்கள். 'கீது' என்று சிலர் ஒலிப்பார்கள். இவைகளும் இடப்பேச்சுக்களில் சேர்க்கப்பட வேண்டியவைகளே. இவைகளில் எவ்வளவோ தவறுகள் உண்டு. ஒவ்வொரு வகையார் ஒவ்வொரு வகையான தவறு செய்வார்கள்.

புத்தகங்களில் உள்ளபடி சொற்களை ஒலிக்காமல், வெவ்வேறு வகையாகக் குறைத்தும் மாற்றியும் ஒலித்தால் அவைகள் கொச்சை ஒலிகள் என்று கூறப்படும். 'ஏன் அடா', 'மூன்று' முதலியவைகளை 'ஏண்டா', 'மூணு' என்றெல்லாம் ஒலிப்பது கொச்சையே ஆகும். 'வந்தது', 'போனது', இழுத்துக்கொண்டு' முதலான சொற்களை 'வந்துச்சி', 'போச்சி', 'இசுத்துக்கினு' என்று கொச்சையாக ஒலிப்பார்கள். இந்தக் கொச்சை ஒலிகளில் சில படிப்படியாகச் செல்வாக்குப் பெற்று நல்ல மொழியாக மாறிவிடுவதும் உண்டு.பாய்கிறது என்பதைப் பாயுது என்றும், பிறக்கிறது என்பதைப் பிறக்குது என்றும் பாரதியார் பாட்டில் கேட்கிறோம் அல்லவா? இவைகளை இலக்கணத்தில் மரூஉ என்று குறிப்பிடுவார்கள். ஆனால் நாகரிகம் குறைந்த தாழ்வான மக்கள் பேசும் பேச்சின் ஒலிகள் இவ்வாறு மரூஉ என்று கொள்ளப்படுவதில்லை. உயர்ந்தவர்கள் - பெரும்பான்மையோர் - கொச்சையாக ஒலிக்கும் ஒலிகளே நாளடைவில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

இந்தக் கொச்சைத் தன்மை சொற்களின் ஒலியில் ஏற்படாமல், சொற்களின் பொருளில் ஏற்பட்டால், அவைகள் கொச்சைமொழிகள் (slang) எனப்படும். "பணம் இருந்தால் நடக்கும்" என்று ஒருவன் சொல்ல விரும்புகிறான். ஆனால் அப்படிச்சொல்வதில் புதுமை இல்லை, சுவை இல்லை; ஆகையால் கேட்போரின் கருத்தைக் கவர்வதற்காக அவன் என்ன சொல்கிறான் தெரியுமா? எல்லோரும் நெடுங்காலமாகச் சொல்லி வந்த 'பணம்' என்னும் சொல்லைச் சொல்வதில்லை. அந்தச் சொல்லால் பயன் குறைவு என்று உணர்ந்து, அதற்குப் பதில் 'வெள்ளையப்பன்' என்கிறான். "வெள்ளையப்பன் இருந்தால் நடக்கும்" என்று அவன் மாற்றிச் சொல்லும்போது கவர்ச்சியாக இருக்கிறது. "அடி கொடுப்பேன்", "உதை கொடுப்பேன்" என்று சொல்லாமல், "பூசை கொடுப்பேன்" என்று சொல்லும்போது புதுமையின் கவர்ச்சி இருக்கிறது. வியாபாரத்தில் நஷ்டமாகிவிட்டது என்னும்போது, "மொட்டையாய் விட்டது" என்று சொல்வதும் அப்படியே. பரீட்சையில் தவறிவிட்டான் என்று சொல்லாமல் "பரீட்சையில் கோட் அடித்தான்", "பல்டி போட்டான்" என்று சொல்வதும் அப்படியே. உணவு விடுதியை ஓட்டல் என்று சொல்லாமல் "மாமியார் வீடு" என்று கூறுவதும் அந்த வகையே ஆகும்.

ஆனால், இப்போது சொன்ன இந்தப் புதுச்சொற்களைப் பாருங்கள். இவைகளை இடப்பேச்சுக்கள் என்று சொல்ல முடியாது. இடப் பேச்சாக இருந்தால், ஒரு ஜில்லாவில், அல்லது ஓர் ஊரில், அல்லது ஒரு துறையில், அல்லது ஒரு கூட்டத்தாரிடத்தில் வழங்க வேண்டும். ஆனால் 'வெள்ளையப்பன்', 'பூசை', 'மொட்டை', 'மாமியார் வீடு' முதலானவை ஒரு குறிப்பிட்ட இடத்தில் அல்லது துறையில் பேசப்படுகின்றவை அல்ல. பழக்கப்பட்டுப்போன பழஞ் சொற்களுக்குப் புதிய உயிர், புதிய கவர்ச்சி தரவேண்டும் என்று நினைக்கிறவர்கள் எல்லாரும் இந்தச் சொற்களைப் பேசுகிறார்கள். ஆகையால் இவைகள் இடப்பேச்சில் அடங்காமல், கொச்சைமொழிகள் என்று குறிக்கப்படும். இடப்பேச்சுக்களைப் பேசுகின்றவர்கள், வேறு பாடுகளை அறியாமலே பேசுகின்றார்கள். அவர்களை அறியாமலே ஊருக்கு ஊர், துறைக்குத் துறை, கூட்டத்துக் கூட்டம் சொற்கள் மாறியிருக்கின்றன. ஆனால், மேலே குறிக்கப்பட்ட கொச்சைமொழிகள் அப்படிப்பட்டவை அல்ல. பேசுவோர் தாங்களாகவே புதுமையாகப் படைத்துப் பேசுகின்ற சொற்களாகும். இடப்பேச்சுக்கள், இயல்பாக மக்களிடையே ஏற்படுகின்றவை. கொச்சைமொழிகள், மக்கள் வேண்டும் என்றே கவர்ச்சிக்காக ஏற்படுத்துகின்றவை. ஆகையால் அவைகள் வேறு, இவைகள் வேறு.

கொச்சைமொழிகளை முதலில் பேசுகின்றவர்கள் யார்? ஒரு கூட்டத்தார் அல்லது ஓர் இடத்தார் அல்ல. கவர்ச்சியிலும் புதுமையிலும் ஈடுபட்டவர்கள் யாரோ, அவர்களே இப்படிக் கொச்சை மொழிகளைப் பேசத்தொடங்குகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் இளைஞர்களே. வாழ்க்கையில் விளையாட்டு உணர்ச்சி உடைய இளைஞர்களே இப்படிப் புதிய கவர்ச்சியான சொற்களைப் படைத்துப் பேசுகின்றார்கள். இவற்றைப் படைப்பதில் ஒருவகை இன்பம் இருக்கின்றது. கேட்பதில் ஒரு வகையான ஊக்கம் இருக்கின்றது. அதனால் இந்தச்சொற்கள் வேகமாக மக்களிடையே பரவுகின்றன. சில சொற்கள் மிகவும் இழிவான, மட்டமான போக்கில் அமைந்துவிடும். அப்படி அமையாமல் காத்துக்கொண்டால், இவற்றை யாரும் வெறுக்க மாட்டார்கள்.

ஆனால் ஒன்று, இடப்பேச்சுக்கு நீண்ட வாழ்வு உண்டு. கொச்சைமொழிகள் நெடுங்காலம் வாழ்வதில்லை.காரணம் தெரியுமா? இன்று, கவர்ச்சியான புதுமை வேண்டும் என்று "அவனுக்குப் பூசை விழுந்தது" என்கிறார்கள். இதையே பலமுறை பல ஆண்டுகள் சொல்லிப் பழகிவிட்டால் கவர்ச்சியும் புதுமையும் இல்லாமற் போகின்றன. பழக்கம் எதையும் எப்படிப்பட்டதையும் பழையதாக்கிவிடும் அல்லவா? நேற்றுப் புதிதாக இருந்த சொல், இன்று பழைய சொல் ஆகிவிட்டால், நாளைக்கு வேறொரு புதுச்சொல் வேண்டியதாக ஏற்படுகிறது. இந்த நிலையில், அந்தப் பழைய சொல் மறந்து கைவிடப்படுகிறது. அதனால்தான், கொச்சைமொழிகள் நீண்ட காலம் வாழமுடியாமல் அவ்வப்போது மறைந்து போகின்றன.


சொல்லின் இலக்கணம் - டாக்டர். மு. வரதராசனார்

 மண்வெட்டியில் மண்ணை வெட்டுவது இரும்புத் தகடுதான். அதில் உள்ள மரப்பிடி மண்ணை வெட்டவில்லை.ஆனால், மரப்பிடி இல்லாமல் மண்ணை வெட்ட முடியுமா? முடியாது. ஆகவே, மண்வெட்டியில் இரும்புத்தகடும் வேண்டும், மரப்பிடியும் வேண்டும். பயன் இல்லாதது என்று அந்த மரப் பிடியை விடக்கூடாது. சொற்களிலும் அதேபோல் பொருள் உள்ள சொற்களும் உண்டு; பொருள் இல்லாத சொற்களும் உண்டு. பொருள் இல்லாத சொற்கள் என்று சிலவற்றை நீக்கிவிட்டால் நன்றாகப் பேசவும் முடியாது; எழுதவும் முடியாது. மொழி பயன் இல்லாமல் போகும். உதாரணம் பாருங்கள்; 'அண்ணன் தம்பியைக் கண்டான்' என்பது ஒரு வாக்கியம். அந்த வாக்கியத்தில் மூன்று சொற்கள் உள்ளன.அண்ணன், தம்பி, கண்டான் என்பவை அந்த மூன்று சொற்கள். அந்த மூன்று சொற்களுக்கும் பொருள் உண்டு. ஆனால், 'தம்பியை' என்பதில் உள்ள 'ஐ' என்பது என்ன? அதற்குப் பொருள் உண்டா? 'ஐ' என்றால் யானையா, பூனையா? பெயரா? வினையா? ஒன்றும் சொல்ல முடியாது. அப்படியானால் பயன் இல்லாதது என்று அதை விட்டுவிடலாமா? அதுவும் முடியாது, விட்டுவிட்டால்,'அண்ணன் தம்பி கண்டான்' என்று சொல்லவேண்டும். அப்படிச் சொல்லும்போது,யார் யாரைக் கண்டார் என்பது தெரியவில்லை. பேசியும் பயன் இல்லாமல் போகிறது: எழுதியும் பயன் இல்லாமல் போகிறது. ஆகவே, இன்னது என்று தெரியாத அந்த 'ஐ' கட்டாயம் வேண்டியதாக இருக்கிறது. இதுவும் ஒரு சொல்தான். இதுபோன்ற எத்தனையோ சொற்கள் மொழிக்குப் பயன்படுகின்றன. இவற்றை எல்லாம் இடைச்சொல் என்று சொல்வார்கள். இவற்றைக் கற்றுக்கொடுக்கும் பாடம் இலக்கணம் என்று சொல்லப்படும்.


ஆனால், இலக்கணம் என்ற பெயரைக் கேட்டால், உங்களில் பலர் பயப்படுகிறீர்கள். இலக்கணத்தைப் பற்றிக் கேட்டாலும் பயப்பட வேண்டியதில்லை; கண்டாலும் பயப்படவேண்டியதில்லை. அது நம்மை ஒன்றும் செய்யாது. முன்னோர்கள் இப்படிப் பேசினார்கள், இப்படி எழுதினார்கள் என்று நமக்குத் தெரிவிப்பது இலக்கணம். ஆகவே, அதைத் தெரிந்துகொண்டால் நல்லதுதானே? வீட்டின் எதிரில் பெண் ஒருத்தி கோலம் போடுகிறாள். அவள் தன் கையில் இருக்கும் மாவை அவசரக் கோலமாக அள்ளித் தெளிக்கவில்லை. முன்னமே எண்ணிக்கொண்டு, திட்டமிட்டு, அங்கங்கே புள்ளிகளை வைத்து, பிறகு வளைவுவளைவாகக் கோடுகளை இழுக்கிறாள். அதன் பிறகு பார்த்தால், கோலம் அழகாகத் தெரிகிறது. முன்னமே திட்டம் இட்டுப் பழகாவிட்டால், அவளால் என்ன செய்ய முடியும்? கொண்டுவந்த மாவைக் கண்டபடி கொட்டிவிட்டுப் போகவேண்டியதுதான், கோலம் போடுவதற்கு எப்படித் திட்டம் பயன்படுகிறதோ, அதேபோல் சொற்களைப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் இலக்கணம் பயன்படுகிறது. ஆனால், இலக்கணம் வேண்டுமே என்று கவலைப் பட்டுக்கொண்டிருக்க வேண்டியதில்லை. மற்றவர்களைப்போல் பேசியும் எழுதியும் பழகிவிட்டால் இலக்கணம் தானே வந்துவிடும். கோலம் போடுகிற பெண் எப்படிப் போடுவது என்று கவலையோடு நிற்பதில்லை. மற்றவர்கள் போடுவதைப் பார்க்கிறாள்.அவர்களைப் போல் தானும் போடுகிறாள். முதலில் கொஞ்சம் தடுமாறுகிறாள். பிறகு, பழகப் பழகத் திறமை பெற்று விடுகிறாள். அதன்பிறகு, அவள் அறியாமலே அவளுடைய கை மாவை எடுத்து அழகான கோலங்களைப் போட்டுவிடுகிறது. அதுபோலவே, நீங்களும் நன்றாகப் பேசவும் எழுதவும் பழகிவிட்டால் உங்களை அறியாமலே இலக்கணத்தில் வல்லவர்கள் ஆகிவிடுவீர்கள்.

இன்னொன்று சொல்கிறேன். படித்தவர்களுக்குத்தான் இலக்கணம் தெரியும் என்று நீங்க்ள் எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். அது தவறு. படிக்காத மக்களூம் பேசுகிறார்கள் அல்லவா? ஆகவே, அவர்களுக்கும் இலக்கணம் தெரியும். "அண்ணனும் தம்பியும் வந்தான்" என்று படிக்காதவர்கள் யாராவது பேசுகிறார்களா? "அண்ணனும் தம்பியும் வந்தார்கள்" என்றுதான் அவர்களூம் பேசுகிறார்கள். "நாளைக்கு வந்தேன்","நேற்று வருவேன்" என்று படிக்காதவர்களிடம் சொல்லிப் பாருங்கள். அவர்கள் சிரிப்பார்கள். "மரம் விழுந்தான்", அவர்கள் வந்தது என்று சொல்லிப் பாருங்கள். "உங்களுக்குத் தமிழே தெரியவில்லை" என்று சொல்லிவிடுவார்கள். திணை, பால், எண், இடம் முதலான இலக்கணங்கள் உங்களுக்கு மட்டும் தெரியும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். அவர்களுக்கும் தெரியும். அதனால்தான் நீங்கள் பிழையாகப் பேசினால் அவர்கள் சிரிக்கிறார்கள்.

உண்மையைச் சொல்லப்போனால், இலக்கணத்தில் சில பகுதிகள், படித்தவர்களைவிடப் படிக்காதவர்களுக்கு நன்றாகத் தெரியும். இலக்கணம் அறிந்தவர்கள் சைக்கில் விடுகின்றவர்களைப் போன்றவர்கள் சைக்கில் செய்கின்றவர்களைவிடச் சைக்கில் விடுகின்றவர்களுக்கு அதனுடைய அருமை பெருமைகள் நன்றாகத் தெரியும். உதாரணம் சொல்லட்டுமா? படித்தவர்களில் சில பேர் எழுதும்போது, "அப்போது ஒருவள் வந்தாள்" என்று எழுதுகிறார்கள். 'ஒருவள்' என்னும் சொல், தமிழில் இல்லாத சொல்; தவறான சொல். நாட்டுப்புறத்து மக்கள் யாரும் 'ஒருவள்' என்று பேசவே மாட்டார்கள். இது படித்தவர்கள் சிலர் செய்யும் தவறு. உதாரணம் இன்னொன்று பாருங்கள், படிக்காதவர்கள் பேசும் போது,'முயற்சி செய்கிறான்' என்றுதான் பேசுகிறார்கள். படித்தவர்கள் சிலர் பேசும்போதும் எழுதும்போதும் 'முயற்சிக்கிறான்' என்று குறிப்பிடுகிறார்கள். அதுவும் தமிழுக்கு ஒத்துவராத பிழையான சொல்தான். இப்படி எத்தனையோ உதாரணம் சொல்லலாம்.

"படிக்காதவர்களுக்கும் இலக்கணம் தெரிகிறதே, அது எப்படி?" என்று நீங்கள் கேட்கலாம். பலரும் பேசிப் பேசி, இந்தச் சொல்லை இன்ன இடத்தில் இப்படித்தான் வழங்கவேண்டும் என்று ஓர் அமைப்பு ஏற்பட்டு விடுகின்றது. அந்தச் சொற்களைப் பேசக் கற்றுக்கொள்ளும்போதே, அவற்றின் அமைப்பும் மனத்தில் பதிந்துவிடுகின்றது. அந்த அமைப்புத்தான் இயற்கையான இலக்கணம். 'அவர்கள்' என்னும் சொல் பலரைக் குறிக்கின்றது. அதோடு வினைச்சொல்லைச் சேர்க்கும்போது, பலரை உணர்த்தும் வினைச்சொல்லையே சேர்க்கிறார்கள். அதனால்தான் 'அவர்கள் வந்தது' என்று சொல்லாமல்,'அவர்கள் வந்தார்கள்' என்று சொல்கிறார்கள்.

இவற்றை எல்லாம் தெளிவுபடுத்துவதற்குத்தான் இலக்கணம் எழுதியிருக்கிறார்கள். திணை, பால், எண், இடம், வேற்றுமை, காலம், முற்று, எச்சம், எழுவாய், பயனிலை முதலான பெயர்களைவைத்துச் சொற்களின் இலக்கணத்தை ஆராய்கின்றார்கள். எழுவாயின் திணைபால், பயனிலையின் திணை பாலோடு ஒத்திருக்கவேண்டும் என்றும், இன்ன வேற்றுமை உருபு இப்படி முடியவேண்டும் என்றும், எச்சம் இவ்வாறு முற்றோடும் பெயரோடும் முடியவேண்டும் என்றும் பலவாறு விரிவாக எழுதியிருக்கிறார்கள். இவற்றை எல்லாம் கற்றுக்கொண்டால் நல்லதுதான். சைக்கில் ந்ன்றாக ஓட்டக் கற்றுக் கொண்டவன், சைக்கில் எப்படிச் செய்கிறார்கள் என்றும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறான் அல்லவா? அதுபோல், நீங்கள் பேசியும் எழுதியும் பழகிய தமிழ்ச்சொறகள் என்ன இலக்கணத்தோடு அமைந்திருக்கின்றன என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுங்கள். ஒவ்வொரு மொழிக்கும் இலக்கணம் ஒவ்வொரு வகையாக இருக்கும்.மொழிகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது எவ்வளவோ வேடிக்கையான உண்மைகள் எல்லாம் தோனறும்.

அவைகள் இருக்கட்டும். குழந்தைகள் பேசுகிற பேச்சையும் நாம் பேசுகிற பேச்சையும் ஒப்பிட்டுப்பாருஙகள். நாம் 'எனக்கு' என்று சொல்கிறோம். குழந்தை 'நானுக்கு' என்று சொலகிறது. நாம் 'உனக்கு' என்று சொல்வதை குழந்தை 'நீக்கு' என்று சொல்கிறது. அதே குழந்தை வளர்ந்த பிறகு, நானுக்கு நீக்கு முதலான சொற்கள் தவறானவை என்று தெரிந்து கொள்கிறது. மற்றவர்கள் 'எனக்கு, உனக்கு' என்று பேசுவதைக் கவனிக்கிறது. தன்னைத்தானே திருத்திக்கொள்கிறது.பிறகு, நம்மைப் போலவே 'எனக்கு, உனக்கு' என்று தவறு இல்லாமல் பேசுகிறது.அந்தத் தவறு எப்படித் திருந்தியது? இலக்கணம் படித்து அதனால் திருந்த வில்லை. மற்றவர்கள் பேசுவதைக் கேட்டு அவர்களைப் போல் பேசி மதிப்புப் பெற வேண்டும் என்ற ஆசையால் திருந்தியது. சின்ன குழந்தை தலைமயிரைச் சரியாக வாரிக்கொள்வ தில்லை. முகத்தையும் நன்றாகக் கழுவிக்கொள்வ தில்லை. ஆனால் வளர்ந்த பிறகு, மற்றவர்கள் ஒழுங்காக அழகுபடுத்திக்கொள்வதைப் பார்த்துத் தானும் தலைமயிரை வாரிக்கொள்கிறது; முகத்தையும் அழகு படுத்திக் கொள்கிறது. மற்றவர்களைப் போல் ஒழுங்காக, மதிப்போடு வாழவேண்டும் என்ற பழகிய தமிழ்ச் சொற்கள் என்ன இலக்கணத்தோடு அமைந்திருக்கின்றன என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுங்கள். ஒவ்வொரு மொழிக்கும் இலக்கணம் ஒவ்வொருவகையாக இருக்கும். மொழிகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது எவ்வளவோ வேடிக்கையான உண்மைகள் எல்லாம் தோன்றும்.

அவைகள் இருக்கட்டும். குழந்தைகள் பேசுகிற பேச்சையும் நாம் பேசுகிற பேச்சையும் ஒப்பிட்டுப் பாருங்கள். நாம்'எனக்கு' என்று சொல்கிறோம். குழந்தை' நானுக்கு' என்று சொல்கிறது. நாம் 'உனக்கு' என்று சொல்வதைக் குழந்தை'நீக்கு' என்று சொல்கிறது. அதே குழந்தை வளர்ந்த பிறகு, 'நானுக்கு' 'நீக்கு' முதலான சொற்கள் தவறானவை என்று தெரிந்துகொள்கிறது. மற்றவர்கள் 'எனக்கு, உனக்கு' என்று பேசுவதைக் கவனிக்கிறது. தன்னைத் தானே திருத்திக்கொள்கிறது. பிறகு, நம்மைப் போலவே 'எனக்கு, உனக்கு' என்று தவறு இல்லாமல் பேசுகிறது. அந்தத் தவறு எப்படித் திருந்தியது? இலக்கணம் படித்து அதனால் திருந்தவில்லை. மற்றவர்கள் பேசுவதைக் கேட்டு அவர்களைப் போல் பேசி மதிப்புப் பெறவேண்டும் என்ற ஆசையால் திருந்தியது. சின்ன குழந்தை தலை மயிரைச் சரியாக வாரிக்கொள்வ தில்லை. முகத்தையும் நன்றாகக் கழுவிக்கொள்வ தில்லை. ஆனால், வளர்ந்த பிறகு, மற்றவர்கள் ஒழுங்காக அழகுபடுத்திக்கொள்வதைப் பார்த்துத் தானும் தலைமயிரை வாரிக்கொள்கிறது; முகத்தையும் அழகு படுத்திக்கொள்கிறது. மற்றவர்களைப் போல் ஒழுங்காக, மதிப்போடு வாழ வேண்டும் என்ற ஆசைதான் அதற்குக் காரணம். சொற்களைப் பேசும்போதும், இந்த ஆசைதான் திருத்தமாகப் பேசச் செய்கிறது. அதனால்தான் சொற்களின் இலக்கணம் மக்களுக்கு இயல்பாகத் தெரிந்ததாகி விடுகிறது.

சொற்களின் இலக்கணத்தைப் பொறுத்த வரையில், இன்னொன்று கவனிக்கவேண்டும். குழந்தைகளின் பேச்சில் தவறு உண்டு என்றும்,வளர்ந்த மக்களின் பேச்சில் தவறு இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. அவர்-அவர்க்கு,இவர்-இவர்க்கு, தாய்-தாய்க்கு என்பவை போல, நீ-நீக்கு, நான்- நானுக்கு என்று சொல்லவேண்டும். அதுதான் பொருத்தம். குழந்தை ஒன்று பேசும்போது பிழை கண்டு பிடிக்கிறோம். உனக்கு,எனக்கு என்று சொல்லித் திருத்துகிறோம். உண்மையாகப் பார்த்தால், உனக்கு,எனக்கு என்ற சொற்கள் தவறாக மாறிவிட்ட சொற்கள் என்பதை உணரலாம். ஆஙகில நாட்டிலும் 'கோ' (go), பய்(buy) முதலான சொற்களின் இறந்த காலமாக வெண்ட் (went), பாட்(bought) என்று சொல்லாமல் கோய்ட்(goed), பய்ட்(buyed) என்று ஆங்கிலேயக் குழந்தைகள் பேசுகின்றனவாம். வளர்ந்த மக்கள் பேசும் வெண்ட்,பாட் என்னும் சொற்கள் ஒழுங்கு இல்லாமல் தோன்றியபோதிலும், அவை களையே குழந்தைகளும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. 'வல்லான் வகுத்ததே வாய்க்கால்.' செல்வாக்கு உள்ளவர்கள் பேசும் சொறகளே சொற்கள். கஜக்கோல்,படி முதலியவை போலச் சொற்களின் இலக்கணத்தை அளந்து தரக்கூடிய பொதுவான கருவி ஒன்று இல்லை. இங்கே, பெரும்பாலோர் இட்டதே சட்டம்.அதைத்தான் ‘மரபு' என்று சொல்கிறார்கள். இது இலக்கணத்தில் ஒரு முக்கியமான பகுதி. நாய்க்கன்று, பசுக்குட்டி என்று சொல்லாமல் நாய்க்குட்டி, பசுங்கன்று என்று சொல்லியாகவேண்டும்.

இப்படிச் சொற்களின் இலக்கணத்தில் எவ்வளவோ கற்றுக்கொள்ள வேண்டியவை உள்ளன. ஆனால் நீங்கள் அஞ்சவேண்டியதில்லை. கற்றவர்கள் பேசுவதைப் பார்த்துப் பேசுங்கள்; கற்றவர்கள் எழுதுவதைப் பார்த்து எழுதுங்கள். உங்களை அறியாமலே இலக்கணம் உங்கள் மனத்தில் பதிந்துவிடும்.




சிவபெருமான் எமனை உதைத்தார்

  திருக்கடையூரில் சிவபெருமான் மார்க்கண்டேயனைக் காக்க எமனை உதைத்த வீரட்ட நிகழ்வு  மிருகண்டு முனிவருக்கும் அவரது மனைவி மருத்துவதிக்கும் பல கால...