ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
குறள் விளக்கம்:
ஊக்கம் உடையவன் ஒருவன் பகைவர் மேல் போருக்குச் செல்லாமல் ஒடுங்கியிருப்பது, போரிடும் ஆட்டுக்கடா பகையைத் தாக்குவதற்குப் பின் வாங்கும் தன்மையது (௪௱௮௰௬)
_புலியூர்க் கேசிகன்
ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல் போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்க்காகப் பின்னே கால் வாங்குதலைப் போன்றது. (௪௱௮௰௬)
—மு. வரதராசன்
ஏற்ற காலம் பார்த்து ஆற்றல் மிக்கவன் காத்திருப்பது சண்டையிடும் ஆட்டுக்கடா, தன் பகைமீது பாய்வதற்காகப் பின்வாங்குவது போன்றதாகும். (௪௱௮௰௬)
—சாலமன் பாப்பையா
கொடுமைகளைக் கண்டும்கூட உறுதி படைத்தவர்கள் அமைதியாக இருப்பது அச்சத்தினால் அல்ல; அது ஆட்டுக்கடா ஒன்று தனது பகையைத் தாக்குவதற்குத் தன் கால்களைப் பின்னுக்கு வாங்குவதைப் போன்றதாகும் (௪௱௮௰௬)
—மு. கருணாநிதி
பரிமேலழகர் உரை
ஊக்கம் உடையான் ஒடுக்கம் - வலிமிகுதி உடைய அரசன் பகை மேற்செல்லாது காலம் பார்த்திருக்கின்ற இருப்பு, பொரு தகர் தாக்கற்குப் பேரும் தகைத்து - பொருகின்ற தகர் தன் பகைகெடப் பாய்தற்பொருட்டுப் பின்னே கால் வாங்கும் தன்மைத்து.
(உவமைக்கண் 'தாக்கற்கு' என்றதனால். பொருளினும் வென்றி எய்தற்பொருட்டு என்பது கொள்க. இதனான் அவ்விருப்பின் சிறப்புக் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
மன மிகுதி யுடையவன் காலவரவு பார்த்து ஒடுங்குதல், போரைக் கருதின தகர் வலிபெறத் தாக்குதற் பொருட்டுப் பெயர்ந்தாற் போலும். இது காலம் வருமளவுங் குறைத்தால் வலி மிகுமென்றது.
சாமி சிதம்பரனார்: வலிமையுள்ளவன் அடங்கி யிருப்பது, எதிர்த்துப் பாய்வதற்காக, ஆட்டுக்கடா பின்வாங்குவது போன்றதாகும்.
நாமக்கல் கவிஞர்:
ஊக்கமுடையவன் (காலம் கருதி கலங்காது) அடங்கியிருப்பது, சண்டையிடுகிற ஆட்டுக்கடா எதிரியைத் தாக்க பின்புறமாக நகருவதை ஒத்தது.
பரிதியார்: விசாரமுள்ளவன் காலம் பார்த்து ஒடுங்கி இருப்பான்; எப்படியென்றால், கிடாயானது பின்வாங்குவது போல என்றவாறு.
காலிங்கர்: ஒரு கருமம் செய்ய நெஞ்சின்கண் மேற்கோள் உடையவனாகிய வேந்தனானவன், மற்று அதற்கு அடுத்தப் பருவம் வந்து எய்தும் துணையும் மற்று அதன் கண் முயலாது ஒடுங்கி இருக்கின்ற ஒடுக்கமானது எத்தன்மைத்தோ எனின், மேற்கொண்டு நிற்கின்ற பொருகிடாய் பொட்டெனத் தலையொடு தலை முட்டுதல் பொருட்டுச் சிறிது நீங்கிச் செவ்வி பார்த்து நிற்கும் தகைமைத்து என்றவாறு.
வ.உ. சிதம்பரம் பிள்ளை : (வினை செய்தலின் கண்) ஊக்கம் உடையவன் ஒடுங்கி இருத்தல், பொருகின்ற செம்மறிக் கடா (தனது பகைக் கடாவைத்) தாக்குவதற்குப் பின் செல்லும் தன்மைத்து.
தேவநேயப் பாவாணர்: வலி மிகுந்த அரசன் ஊக்கமுள்ளவனாயினும், பகை மேற்செல்லாது, காலம் பார்த்து ஒடுங்கி இருக்கின்ற இருப்பு, சண்டையிடும் செம்மறிக் கடா தன் பகையை வலிமையாய்த் தாக்குவதற்குப் பின்வாங்கும் தன்மையது.
Rev. G.U. Pope: The Men of mighty power their hidden energies repress, As fighting ram recoils to rush on foe with heavier stress.
Vanmeeganathan: The restraint of a man of great might is like a fighting ram stepping back in order to charge its opponent.
Kaviyogi Shuddhanandha Bharathi : By self-restraint stalwarts keep fit, Like rams retreating but to Butt.
V.V.S. Iyer: The ram Steppeth back before it delivereth the stunning blow: even such is the inaction of the man of energy.