எனக்கு விபரம் தெரிந்ததில் இருந்து இன்று வரை ரேஷன் கடை அரிசியின் தரம் உயர்ந்துள்ளது என்பது உண்மை. நான் சிறுவனாக இருந்த போது ரேஷன் கடை அரிசி நாறும். முகத்தைச் சுளிக்க வைக்கும். கற்கள் நிறைந்திருக்கும். தூசி மிகுந்திருக்கும். புடைக்க வேண்டும். அரிக்க வேண்டும். பலமுறை கழுவ வேண்டும்.
ஆனால் ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளாக ஓரளவு நல்ல அரிசி கிடைக்கிறது என்று சொல்லப்படுகிறது. புடைக்கத் தேவையில்லை. கற்கள் இல்லவே இல்லை. கலப்படம் இல்லை. பாராட்டுகள். தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு நன்றி.
இருப்பினும் இம்ப்ரூவ்மெண்ட் என்பதைச் செய்துகொண்டே இருக்கலாம்.
எனக்கு விபரம் தெரிந்த அந்தக் காலத்தில் இருந்து இப்போது வரை ரேஷன் அரிசிப் பதுக்கலும் கடத்தலும் நடக்கின்றன என்று செய்திகள் எடுத்துக்காட்டுகின்றன.
அரிசிக் கடத்தல் மட்டுமே முன்னிலைப்படுத்தப் படுகின்றது. யாருக்கும் தெரியாத வகையில் மற்ற பொருட்களும் களவாடப்பட்டுக்கொண்டிருக்கலாம்.
இதில் இருந்து என்ன தெரிகிறது?
சட்டம் வேறு; நடைமுறை வேறு. சட்டம் கடுமையாக இல்லை. காப்பானை விட, கள்ளன் வலிமையானவன். அரசாங்கத்தின் வலிமை குறைவு. சில பல அரசு ஊழியர்கள் கயவர்கள். கடத்துபவர்கள் அரசைவிடத் திறமையானவர்கள். நெளிவு சுழிவு அறிந்தவர்கள். அப்படிப்பட்ட திறமை, காக்கும் அரசுக்கு இல்லை.
தமிழ்நாட்டு ரேஷன் அரிசி ஓரளவு நன்றாய் இருப்பது நமக்குத் தெரியவில்லை; ஆனால் கடத்துபவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.
இந்நிலையை மாற்றத்தக்க நடவடிக்கையை உரியவர்கள் எடுத்தால் தமிழ்நாட்டு முன்னேற்றத்தின் தடைகள் குறையும்.
பிற பின்பு
அன்புடன்
ஆறுமுகம் நடராஜன்
மதுரையில் இருந்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.