google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: என் உள்ளம்!

சனி, 14 மார்ச், 2026

என் உள்ளம்!

 

    11. என் உள்ளம்!

    பலா மரம் மீண்டும் பழையபடியே வளர்ந்து பசுமையாக நின்றது. குறவன் அவர் காலடிகளில் வீழ்ந்தான். 'தன்னைக் காப்பாற்ற வந்த தெய்வம்' என்று அடிப்பட்டவள் போற்றினாள். சூது செய்தவள் அஞ்சிச் சரணடைந்தாள். தன் பிழைக்கு வருந்தி மன்னிக்குமாறு மன்றாடினாள். ஒளவையார் மிகவும் உருகிப் போனார். ஒன்றுபட்டு வாழும்படியாகக் கூறி அவர்களை வாழ்த்தினார்.

    குறவனும் அவன் மனைவியரும் ஒளவையாரைப் போற்றி விருந்தளித்து, தன் இனத்தோடும் ஒருங்கு கூடி விழாக் கொண்டாடினார்கள். ஒளவையாரும் அந்தக் கள்ளங்கபடமற்ற மக்களின் தூய்மையான அன்பிலே திளைத்து உவந்தார்.

    அவர்களிடம் விடைபெற்று, மீண்டும் சோழனிடம் செல்ல ஒளவையார் விரும்பியபோது, குறவர் குடியினர் வருத்தமுற்றனர். பிரியா விடைதந்து பணிந்து நின்றனர். குறச் சிறுவர்கள் தம் காணிக்கையாக ஒரு படி தினையரிசியை அவருக்கு வழங்கினார்கள்.

    அந்த அன்பின் சின்னத்தைத் தம் மடியிற் கொண்டவராகச் சோழனிடம் வந்து கொண்டிருந்தார் ஔவையார்.

    சோழன் ஒளவையார்பால் தோன்றிய பெருமிதத்தைக் கண்டு வியந்தான். அவர் மடியின் கனம் அவன் கண்ணிலும் பட்டது.

    "அம்மையே! எங்கிருந்து வருகிறீர்கள்? மடியின் கனம் மிகுதியாயுள்ளதே? அது என்னவோ?" சோழன் ஆர்வத்துடன் கேட்டான்.

    ஒளவையார் சிரித்தார். " அது அன்பின் பெருஞ்செல்வம்!" என்றார்.

    "சோழனே! காட்டிலே குறவர் வீட்டிலே வெட்டுப்பட்டுப் போன ஒரு பலா மரத்தினைச் சுற்றி ஒரு பெரிய பூசல் நிகழ்ந்து கொண்டிருந்தது. பூசலைப் போக்கக் கருதி அந்த வெட்டுண்ட மரம் பண்டு போல் தளிர்த்து நிற்குமாறு பாடினேன்."

    சோழன் வியப்புடன், "அது மீளத் தழைத்ததோ?" என்றான்.

    "இறையருள் ! அது மீளப் பழையபடியே பொலிவுடன் நின்றது. குறவர்கள் மகிழ்ந்து என்னை உபசரித்தனர். அப்போது அங்குள்ள சிறுவர்கள் உவந்து வழங்கியதுதான் இந்த ஒரு படி தினையரிசி."

    "ஒரு படி தினையரிசியா? செயற்கரிய செயலைச் செய்த தங்கட்குப் பரிசு அதுதானா?" சோழன் கேட்டான்.

    "தருபவர்களின் அன்பினைத்தான் நான் மதிப்பேன். தருகின்ற பொருளினைப் பெரிதாகக் கொள்வதில்லை. உப்புக்கும் ஒரு கவிதை பாடுவேன். புளிக்கு ஒரு கவிதை பாடவும் என் உள்ளம் இசையும். அதுதான் என் உள்ளத்தின் தன்மை" என்றனர் ஒளவையார்.

    சோழன், அவரது உள்ளத்தின் தெளிவாகிய அந்த மெய்யுரையைக் கேட்டதும், மெய்மறந்தவனாக வியந்து நின்று விட்டான். ஒளவையார் ஏழை மக்களிடம் கொண்டுள்ள அன்பு அவருடைய பாடலிலேயும் எதிரொலித்தது.

    அவருடைய உள்ளச் செவ்வியைச் சோழனும் அறிந்து, மனங் கலந்து போற்றினான். ஒளவையாரின் புகழ் அவன் மூலம் பலருக்கும் பரவிற்று.

      கூழைப் பலாத்தழைக்கப் பாடக் குறச்சிறார்
      மூழக் குழக்குத் தினைதந்தார் - சோழாகேள்
      உப்புக்கும் பாடிப் புளிக்கும் ஒரு கவிதை
      ஒப்பிக்கும் என்றன் உளம்.

    "சோழ ராசனே! கேட்பாயாக; வெட்டுப்பட்டுப்போன பலா மரத்தைத் தழைக்கும்படிப் பாடினேன். குறச்சிறுவர்கள் ஒரு படி தினையைத் தந்தனர். அதுதான் இது. என் உள்ளம் உப்புக்கும் பாடும்; புளிக்கும் ஒரு கவிதை சொல்லும், அந்தத் தன்மையுடையது" என்பது பாட்டின் பொருள்.

    கூழைப்பலா என்பது பலா வகையுள் ஒன்று அல்லது மிக உயரமாக வளராத பலா மரம் என்பதும் ஆம். தாம் வைத்த பலா காய்த்துப் பலன் தரும் போது தமக்கும் பிள்ளை பிறக்கும் என்பது குறவர் நம்பிக்கை.

    -    புலியூர்க் கேசிகனின் ஒளவையார் தனிப்பாடல்களில் இருந்து.

    Gemini Generated Image


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

கேரளாவில் ஓர் அதிரடிச் சமையல்!

விஷ்ணு ( மலையாளி நண்பர்) : " ரவி , சமையல் வேலையை ஆரம்பிக்கலாம் . ஆனா அதுக்கு முன்னாடி தாகமா இருக்கு , கொஞ்சம் ' வெள்ளம் ...