google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: ஜனவரி 2023

புதன், 25 ஜனவரி, 2023

பொற்றாலி யோடெவையும் போம்

எவையும் போம்!

                                                                                                           -ஒளவையார்

சின்னஞ்சிறு மகவாக உலகிலே பிறக்கின்றோம். தாயின் அன்பிலும் அரவணைப்பிலும் வளர்ந்து பெரியவர்களும் ஆகின்றோம். அந்தத் தாயின் அன்பு அளவிடற்கும் அரியது. தன் குழந்தையைப் பேணி வளர்ப்பதில் அவளுடைய கருத்து முழுவதும் சென்றிருக்கும்.

உணவு உடலுக்கு ஆக்கந்தருவது, அறுசுவையோடும் கூடிய உணவில், எது உடலுக்கு நலந்தரும் என்றறிந்து கொள்வது நல்லுடலுடன் வாழ்வதற்கு உதவும். தாயோடு இந்த உணவும், இதனால் பெறுகின்ற பயனும் இல்லாமற் போய்விடும்.

உடலை வளர்க்கும் தாயன்பு என்றால், உள்ளத்தை வளர்க்கும் கருவியான கல்வி நலத்தைத் தருவது தந்தையின் செயலாக இருக்கிறது. தந்தையின் பராமரிப்பு இல்லாமற் போனால் ; கல்வி பெறும் வாய்ப்பும் அறவே போய்விடும்.

'செல்வம்' என்று போற்றத்தக்கது மக்கட்பேறு ஒன்றுதான். பிற செல்வங்கள் நிலையாமை உடையன. மக்கட்பேறோ தொடர்ந்து நிலைபெற்று நிலையான சிறப்பைத் தருவது. அதனை இழந்தால், செல்வ நலனை இழந்ததாகவே கருதுதல் வேண்டும்.

'சமூகம்' உற்றார் உறவினருடன் கூடிக் கலந்து வாழ்வது. கூடிக்கலந்த வாழ்வு இல்லையானால், வாழ்வில் சுவை என்பதும் இல்லாமல் போகும். இதனால் மாயமான வாழ்வு நலனும் உற்றாரை இழந்தபோது ஒழிந்து போய்விடும்.

உற்றவிடத்து உறுதுணையாக உதவுவது 'தோள்வலி' எனப்படும். உடன்பிறந்த சகோதரர் இருக்கும் வரைதான் ஒருவனுக்கு தோள்வலி உளதாயிருக்கும். சகோதரர் இல்லாது போனால், தோள்வலியும் இல்லாமற் போகும்.

ஒருவனுடைய வாழ்வின் பிரியாத் துணையாக, இல்லத்து அரசியாக, இன்பத்து நாயகியாக விளங்குபவள் அவனுடைய மனைவியாகும். அவள் அப்படி இல்லையானால், எத்தகைய இன்ப நலனும் அவன் வாழ்விலே இல்லாது போய்விடும். இந்த உண்மைகளை எல்லாம் கூறுகிற செய்யுள் இதுவாகும்.


தாயொடு அறுசுவைபோம் தந்தையொடு கல்விபோம்

சேயோடு தான் பெற்ற செல்வம்போம் - மாயவாழ்வு

உற்றா ருடன்போம் உடன்பிறப்பால் தோள்வலிபோம்

பொற்றாலி யோடெவையும் போம்.


"அறுசுவையோடு உண்கின்ற இன்பம், பெற்ற தாயின் மறைவோடு போய்விடும். தந்தையின் பிரிவோடு கல்வி கற்பதற் கான வசதிகள் இல்லாது போய்விடும். பெற்ற குழந்தையின் மறைவோடு, ஒருவன் பெற்ற செல்வம் என்பதும் இல்லாதே போய்விடும். மாயமான வாழ்வு நலம் என்பதெல்லாம் உறவினரைப் பிரிந்ததும் போய்விடும். உடன் பிறந்தவர் இல்லாதபோது பக்கத்துணையான வலிமை போய்விடும். பொற்றாலி அணிந்த மனையாளின் மறைவோடு எல்லா நலனுமே ஒருவனுக்கு இல்லாமற் போய்விடும்" என்பது பொருள்.

'பொற்றாலியோடு எவையும் போம்' என்றதனால், தாலி போவதோடு எல்லாமே இல்லாமற் போய்விடும் எனப் பெண்ணைக் குறித்துச் சொல்லியதாகவும் இதனைக் கொள்ளலாம்.


ஒளவையார் பாட அறுந்து விழுந்த பொன்முடிச்சுகள் 5

அவ்வையாரின் ஒவ்வொரு பாடலுக்கும் ஆயிரம் பொன் கொண்ட ஒரு முடிச்சு அற்று விழுந்தது. இதோ ஐந்தாம் பாடல்:

மன்று உழுது உண்பான்!

உழுது பயிரிட்டு, அதனால் வரும் விளைவினைக் கொண்டு உயிர் வாழ்வது சிறந்தது. ஆனால், இது மிகவும் உழைப்புச் செலுத்த வேண்டிய ஒரு தொழில் ஆகும். அதனால் உழைக்கச் சோம்பிய சிலர், இதனை மேற்கொள்ளாமல் போகின்றதும் உண்டு. அவர்கள் உழுது பயிரிட்டு அதனால் வருவதை உண்பதற்கு மாறாக, ஊர் மன்றங்களில் சோம்பிக் கிடந்து வீண்பொழுது போக்கி வருவார்கள். நாளடைவில், அவர்களுடைய சோம்பல் அவர்களுடைய வாழ்க்கையைக் குலைத்துவிடும். ஆகவே, பசியின் கொடுமை தலைவிரித்து ஆடத்தொடங்கும். கண்ணீரும் அழுகையும் கால்கொள்ளும்.

உழைப்பதற்குச் சோம்பிய குடும்பத் தலைவன் ஒருவனுடைய செயலால், அக் குடும்பத்தவர் அனைவருமே துயருக்கு உட்பட்டு நலிவர். அவர்கள் அழிவதும் நேரலாம். அவன் குடும்ப வாழ்வு பயனற்றுப் போகும். அது தொடர்ந்து நிலைபெறுதலும் இல்லையாகும்.

இந்த உண்மையைக் கூறிப் பாட்டொன்றைப் பாடினார் ஒளவையார். ஐந்தாவது முடிச்சும் அப்போது அற்று விழுந்தது. புலவர் அவை பெரிதும் ஆரவாரித்தது. தமிழின் ஆற்றலை உணர்ந்தனர் அனைவரும். ஒளவையாரையும் அவர்கள் மனம் விரும்பிப் போற்றினார்கள். அந்த இறுதிப் பாடல் இது.

இதனால், உழுதுண்டு வாழும் உழைப்பின் சிறப்பு கூறப்பெற்றது. உழைக்கச் சோம்பி நேரத்தைப் பாழடிப்பவன், தன் குடும்பத்துடன் முற்றிலும் அழிந்து கெடுவான் என்பதும் உரைக்கப் பெற்றது.

பாண்டியனின் மகிழ்விற்கு ஓர் எல்லையில்லை. ஔவையாரை அகமலர்ந்து உபசரித்து இன்புற்றான் அவன்.


சென்றுழு துன்பதற்குச் செய்வ தரிதென்று

மன்றுழு துண்பான் மனைவாழ்க்கை - முன்றிலில்

துச்சில் இருந்து துடைத்தெழுகண் ணீராலேழ்

எச்சம் இறுமேல் இறு.


"வயலுக்குச் சென்று உழுது விளைவித்து உண்பதனைச் செய்வதற்கு அரிதானதென்று மயங்கி, மன்றிலே சோம்பிக் கிடந்து உண்டு வாழ்பவனின் வாழ்க்கை கெடும். அவன் மனைவி, வீட்டு முற்றத்தின் குடிலிலே இருந்து அழுகின்ற கண்ணீரைத் துடைக்கத் துடைக்க அது பெருகிக்கொண்டே இருக்கும். அவள் அழுகிற கண்ணீரால் அக் குடும்பம் தொடர்பற்று அழியுமேல், நீயும் அறுந்து வீழ்வாயாக" என்பது பொருள்.


ஒளவையார் பாட அறுந்து விழுந்த பொன்முடிச்சுகள் 4

அவ்வையாரின் ஒவ்வொரு பாடலுக்கும் ஆயிரம் பொன் கொண்ட ஒரு முடிச்சு அற்று விழுந்தது. இதோ நான்காம் பாடல்:

அழிவழக்குச் செய்தவன்!

ஒரு வழக்கு ஏற்படுகிறது. எவன் பக்கம் நியாயம் இருக் கிறதோ அவன் சமூகத்தில் மிகச் சாதாரணமானவன். ஆனால், அவனுக்கு எதிர்வழக்கு தொடர்ந்திருப்பவனோ பெரிதும் வலியவன்.

இந்தச் சமயத்தில், நியாயம் தீர்ப்பவன் முறையாக நடந்து கொள்ள முடியாமல் பல சூழ்நிலைகள் ஏற்பட்டு விடலாம். வலியவன் தன் பக்கமாக நியாயத்தை திருப்பிக் கொள்ள இடையறாது முயலுவதும் இயல்பு. அவனுடைய வலிமைக்கு ஆட்பட்டு, நியாயம் கோணாமல், முறையாகவே நீதி வழங்குவதுதான் அறமாகும்.

ஆனால், முறைமை' என்று ஒன்று ஏற்பட்டால், அதிலிருந்து தவறுவது என்பதும் சிலரின் இயல்பாகி விடுகிறது. வலியோனின் பக்கமே அவர்கள் சார்ந்து நிற்கின்றனர். வலியிழந்தோன் தம்மை எதுவும் செய்ய இயலாது என்ற நிலைமையும் வலியவனின் பகைமையால் விளையும் இடையூறுகளைக் கருதி எழுகின்ற அச்சமும், அவர்களை நீதியற்றவர்களாக்கி விடுகின்றன.

அழுது அழுது கண்ணீர் பெருக்குகின்றான் வலியற்றவன். அவன் சுற்றமும் அவனுடைய கண்ணீர்ப் பெருக்கில் கலந்து கொள்ளுகின்றது. அவர்கள் அழுது வடித்த கண்ணீர் வீண் போகாது. அது நீதி பிழைத்தவனின் குடியையே வேரறுத்துவிடும்.

நீதி பிழைப்பவர்க்கு எச்சரிக்கையாக இந்த அறநெறியை அன்று கூறினார் ஒளவையார். 'உண்மையானால் கிழியே நீயும் அற்று வீழ்க' என்றார். அதனை உண்மை என்று உறுதியுரைப்பது போல நான்காவது முடிச்சும் அற்று வீழ்ந்தது. அந்தப் பாடல் இது:


வழக்குடையான் நிற்ப வலியானைக் கூடி

வழக்கை யழிவழக்குச் செய்தோன் - வழக்கிழந்தோன்

சுற்றமும் தானும் தொடர்ந்தழுத கண்ணீரால்

எச்சமிறும் என்றால் இறு.


"வழக்கிலே உண்மை உடையவன் இருக்கவும், வல்வழக்கு ஆடுபவனோடு கூடிக்கொண்டு, அந்த வழக்கினைத் தோல்வி அடையுமாறு செய்தான் ஒருவன். வழக்கினை இழைத்தவனும், அவன் சுற்றமும் இடைவிடாது வடித்த கண்ணீரால் அப்படி அழிவழக்குச் செய்தவன் சந்ததியற்றுப்போவது உண்மை என்றால், நீயும் அற்று வீழ்வாயாக" என்பது இதன் பொருள்.


ஒளவையார் பாட அறுந்து விழுந்த பொன்முடிச்சுகள் 3

 அவ்வையாரின் ஒவ்வொரு பாடலுக்கும் ஆயிரம் பொன் கொண்ட ஒரு முடிச்சு அற்று விழுந்தது. இதோ மூன்றாம் பாடல்:

கைக்கூலி வாங்குபவன்!

கைக்கூலிக்கு லஞ்சம்' என்ற சொல் இன்று வழக்கி லிருக்கிறது. இந்நாளில் இந்தக் கைக்கூலி வாங்கும் வழக்கம் எங்கும் வேரூன்றிக் கிளைத்து வளர்ந்து காடாகப் படர்ந்திருக்கிறது.

கைக்கூலி வாங்குவது தவறு; அது பழியையும் பாவத்தையும் கொண்டு வருவது' என்ற நினைப்பே இல்லாமற் போய்விட்டது. இதனை, இந்தக் காலத்தின் கோலம் என்றுதான் சொல்ல வேண்டும்.

'கைக்கூலி பெறுபவன் மிகச் சீக்கிரமே பணக்காரனாகி விடுகிறான். வாழ்க்கையின் பல வசதிகளையும் விரைவிலேயே அவன் தேடிக்கொள்ளுகிறான். அவனது ஆடம்பர வாழ்வு, முதலில் கைக்கூலியை வெறுத்த பலரையும் அதை நோக்கிச் செல்லுமாறு விரட்டுகிறது. இப்படிச் சிலர் சமாதானம் கூறுகிறார்கள். சட்டம் தடை செய்திருக்கிறது; ஆனால், அது செயற்படுவதில்லை. தெரிந்தும் தெரியாமலும் அது வாளா இருந்து விடுகிறது' என்பவர் சிலர். நமக்காக ஒன்றைச் செய்பவனுக்கு நாமும் ஏதாவது தருவதுதானே நியாயம் என்பவர்களும் உள்ளனர்.

அந்த நாளில் 'கைக்கூலி வாங்கியவன் பிள்ளையற்றுப் போவான்' என்று மக்கள் நம்பினார்கள். தன் குடிவழி தொடர்பற்றுப் போவதை யார்தான் வரவேற்பார்கள்? இந்த அச்சமே பலரையும் கைக்கூலி வாங்கவிடாமல் தடுத்திருக்கிறது. இந்த உண்மையை உரைக்கிறார் ஒளவையார்.

"ஒரு வழக்கின் உண்மை ஒன்றாக இருக்கிறது. பொதுவாள் ரான ஊரவர்களும் அந்த உண்மைக்கு ஆதரவாகத் துணை நிற்கின்றனர். எனினும், அதனை ஒதுக்கி விடுகிறான் ஒரு நீதியாளன். எதிர்வழக்காளியின் பொய் வாதத்தைச் சார்ந்து அவன் பக்கமாக நின்று நீதி பேசுகிறான். இப்படிப் பேசிக் கைக்கூலி வாங்கி அவன் அதனைக் கொண்டு உவக்கின்றான். அவன் குடும்பம் பரம்பரைத் தொடர்பற்றுப் போவது உறுதி. அஃது உறுதியானால் நீயும் அறுவாயாக."

இந்தக் கருத்துப்பட ஒளவையார் பாடியதும், மூன்றாவது பொற்கிழியும் அறுந்து வீழ்ந்தது. அந்தப் பாடல் இது.


உள்ள வழக்கிருக்க ஊரார் பொதுவிருக்கத்

தள்ளி வழக்கதனைத் தான் பேசி - யெள்ளளவும்

கைக்கூலி தான்வாங்கும் காலறுவான் தன்கிளையும்

எச்சமிறும் என்றால் இறு.


" உண்மையான வழக்கானது ஒரு புறம் இருக்கவும், ஊராரின் அவை அதற்கு ஆதரவாக இருக்கவும், அவ்வழக் கினைத் தள்ளிவிடும் முறையிலே தான் எடுத்துச் சொல்லி, கொஞ்சமேனும் கைக்கூலியினைத் தான் வாங்குகின்ற பிள்ளை யற்றுப் போவானின் சுற்றமும், வமிசமற்றுப் போவது உண்மையானால், நீயும் அற்று வீழ்வாயாக" என்பது பொருள். கைக் கூலியோடு பொய்சாட்சி சொல்வதையும் இச்செய்யுள் பழிக்கின்றது.



ஒளவையார் பாட அறுந்து விழுந்த பொன்முடிச்சுகள் 2

 அவ்வையாரின் ஒவ்வொரு பாடலுக்கும் ஆயிரம் பொன் கொண்ட ஒரு முடிச்சு அற்று விழுந்தது. இதோ இரண்டாம் பாடல்:

எச்சம் அறும் குடி!

அடுத்த பொற்கிழியின் முன் வந்து நின்றார் ஒளவையார். ஈயாதான் குடியானது வாரிசு அற்றுப் போகும் என்று பாடினார். அந்தச் செய்யுள் இது.

"வளமான ஒருவன், வாடியவன் தன்னை எதுவும் கேளா திருந்தபோதும், தானே வலியச் சென்று அவனுக்கு மனமுவந்து உதவுகின்றான். இது தாளாண்மை ஆகும்.

அவன் சென்று கேட்கும் போது மட்டும் ஒருவன் வழங்குகின்றான் என்றால், அது வள்ளன்மை' எனப்படும்.

பலநாட் பின் தொடர்ந்து சென்று சென்று கேட்டுவர, இறுதியில் அவனுக்கு உதவுகின்றான் என்றால், அது அவனுடைய நடைக்கு கிடைத்த நடைகூலி' என்றுதான் சொல்லப்படும்.

மற்றொருவன், இரக்கமற்ற செல்வன், பலகாற் சென்று இரந்தும், தருபவன் போலக் காட்டிக் காட்டிப் பொய்த்தான். அவனது செயல் பழிச்செயல் ' ஆகும். அஃது அவனை மட்டும் வாட்டுவதுடன் நின்றுவிடாது; அவன் குடியே தொடர்பு அற்றுப்போகும். இது நடப்பது இவ்வுலகில் உண்மையானால், அற்று வீழ்க" என்று பாடினார் ஒளவையார்.


தண்டாமல் ஈவது தாளாண்மை - தண்டி

அடுத்தக்கால் ஈவது வண்மை - அடுத்தடுத்துப்

பின் சென்றால் ஈவது காற்கூலி - பின்சென்றும்

பொய்த்தான் இவனென்று போமேல், அவன்குடி

எச்சம் இறுமேல் இறு.


"கேளாத போது ஒருவனுக்குத் தாமே வலிய வழங்குவது சிறந்த கொடையாகும். கேட்டு அடைந்தபோது ஒன்றைக் கொடுப்பது வள்ளன்மையாகும். மீண்டும் மீண்டும் தொடர்ந்து போய்க் கேட்பின் தருவது கால்நடைக்குத் தருகின்ற கூலியாகும் ! 'அப்படிப் பின்னாகச் சென்றனிடத்தும் கொடாது ஏமாற்றினான் இவன்' என்று ஒருவன் போய்விட்டால், அப்படிப் பட்டவனின் குடி சந்ததி அற்றுப்போகும் என்பது உண்மை யானால், நீயும் அறுந்து வீழ்வாயாக" என்பது இதன் பொருள்.

உடனே இரண்டாவது முடிச்சும் அறுந்து வீழ்ந்தது. அந்த அவையும் மகிழ்வுடன் ஆரவாரித்தது.


ஒளவையார் பாட அறுந்து விழுந்த பொன்முடிச்சுகள் 1

 அவ்வையாரின் ஒவ்வொரு பாடலுக்கும் ஆயிரம் பொன் கொண்ட ஒரு முடிச்சு அற்று விழுந்தது. இதோ முதல் பாடல்:

கோடிக்கு ஒருவன்!

தென்னாடுடையோனாகிய பாண்டியன் தமிழார்வம் மிக்கவன். தமிழ்ப்புலமை உடையவரைத் தாங்கிக் காத்துத் தமிழ்ச்சங்கம் நிறுவித் தமிழாய்ந்து சிறந்தவன் அவன்.

ஒரு சமயம், அவனுடைய அவைக்கண் புலவர்கள் என்று கூறிப் பலர் வந்து நிறைந்தனர். அவர்களுட் சிலர் உண்மையாகவே கற்றறிந்த சான்றோர் என்பதனை அவனும் அறிவான். எனினும் தமிழ்ச் செய்யுள் யாத்தல், கொற்றன் ஒருவன் செங்கற்களை அடுக்கிச் சுவர் எழுப்புவது போன்ற செயல் அன்று; அது தெய்விக சக்தியுடன் உள்ளத்தில் தோய்ந்து உயிரிற் கலந்து வெளிவருவது; இந்த உண்மை மெய்ப்பிக்கப்படல் வேண்டும் என நினைத்தான் அவன். அதனால், ஒரு போட்டியினையும் ஏற்படுத்தினான்.

தன் கோயிற்கூடத்து ஒரு புறமாக ஐந்து பொன் முடிப்புக் களைக் கட்டி வைத்தான். அவற்றுள் ஒவ்வொன்றிலும் ஆயிரம் பொன் இருந்தன. அவற்றை அற்று விழுமாறு பாடுதல் வேண்டும். அப்படிப் பாடுகிறவர்கள், அந்த முடிச்சுகளைத் தாமே எடுத்துக் கொள்ளலாம்' என்று எங்கும் பறையொலிக்கச் செய்தான். புலவர்கள் ஆர்வத்தோடு சென்றனர். பாடிப்பாடி ஓய்ந்தனர். ஆனால் பொன் முடிச்சுகள் ஏதும் அற்று விழவேயில்லை.

மதுரைக்குச் சென்ற ஒளவையார் அதனைக் கண்டார். அது அற்று விழாதிருப்பது தமிழ் பாடும் தம் போன்றோர்க்குப் பழியாகும் என நினைத்தார். பொன்னின் அதிதேவதையான திருமகளைத் தியானித்தவாறு ஒரு செய்யுளைப் பாடலானார்.


ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்தொன் றாம்புலவர்

வார்த்தை பதினா யிரத்தொருவர் - பூத்த மலர்த்

தண்டா மரைத்திருவே தாதாகோ டிக்கொருவர்

உண்டாயின் உண்டென் றறு.


"குளிர்ச்சியான இதழ் விரிந்து மலர்ந்த செந்தாமரை மலரிடத்தே வீற்றிருக்கும் திருமகளே ! நூற்றுக்கு ஒருவர்தாம் தக்க அவையில் இருக்கத்தக்கவர். ஆயிரத்தில் ஒருவர்தாம் புலமையாளராக இருப்பார்கள். அவருள் பேச்சுத்திறனும் உடையவர் பதினாயிரத்துக்கு ஒருவராகவே விளங்குவர். கொடை வள்ளலாகத் திகழ்பவரோ கோடிக்கு ஒருவரைத்தான் காணலாம். இஃது உண்மையாயின், உண்மையென்று காட்டுவதுபோல் நீயும் அற்று வீழ்வாயாக" என்பது பொருள். இதனைப் பாடியதும் ஒரு முடிப்பு அறுத்து வீழ்ந்தது. அவையும் அரசனும் வியந்து மகிழ்ந்தனர்.


வியாழன், 12 ஜனவரி, 2023

முகநூலில் கண்ட மூடநம்பிக்கை

வக்கிரகம் வசியம் செய்வது எப்படி?

மனிதனுக்கு ஒரு கிரகத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறதேன்றால்

ஒன்று அந்த கிரக கதிர்வீச்சீன் சமாளிக்கும் தன்மைக்கொண்ட மருத்துவ பயனுள்ள பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்

அது மேல் பூச்சு மற்றும் உள் மருந்தாகவும் இருக்கலாம்.

சில மேல் பூச்சு மருந்து பொருட்களை கீழே கூறுகின்றேன்

1. சூரியன் - கச கசாவை பொடி செய்து நீரில் கலந்தும் அல்லது, குங்குமப்பூ அல்லது ஏதேனும் சிகப்பு மலர்கள் நீரில் போட்டு குளித்து வரலாம்.

சிறிதளவு போதும்.

இவற்றை போட்டு நான்கைந்து குவளைகள் நீரில் குளித்து விட்டு, பின்பு வழக்கம் போல் குளித்து வரலாம்.

2. சந்திரன் - தயிரை முதலில் உடல் முழுதும் தேய்து விட்டு சிறிது ஊறி பின்பு குளிக்கவும்.

3. செவ்வாய் - வில்வ கொட்டை பொடியை சிறிதளவு நீரில் சேர்த்து குளித்து வரலாம்.

செவ்வாய் தோஷத்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திப்பவர்கள்,  மற்றும் திருமண தடை போன்றவற்றிற்கு இது சிறந்த பரிகாரம்.

4. புதன் - மஞ்சள்கடுகுடன் சிறிது தேன் கலந்து, கங்கை நீர் அல்லது கடல் நீர் சிறிது சேர்க்கப்பட்ட நீரில் குளித்து வரலாம்.

5. வியாழன் - கருப்பு ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரலாம்.

6. சுக்கிரன் - பச்சை ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரலாம்.

7. சனி - கருப்பு எள் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரலாம்.

8. ராகு - மகிஷாக்ஷி (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்  சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரலாம்.

9. கேது - அருகம்புல் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரலாம்,

தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால்

கிரகங்களின் தாக்குதல்களில் இருந்து 100%

தப்பித்துக்கொள்ள முடியும்.

இந்த முறைகளை பின்பற்ற தவறினால்

அந்தந்த கிரக வசிய மூலிகைகளை

காப்பு கட்டி

மூலிகைக்கு பலி கொடுத்து வேர் எடுத்து நமக்கு உண்டான கிரக தோஷங்களை நிவர்த்தி செய்துக்கொள்ள முடியும்

இது பழங்காலத்து முறை

மலையை சுற்றுவதை விட்டு தலையை சுற்றும்

ஒரு சிறந்த சித்தர்கள் கூறிய முறை

அசைவ பலி கொடுக்க முடியாத நிலையில் உள்ளவர்கள்

சைவ பலி கொடுத்து மூலிகை எடுத்துக்கொள்லாம்.

1. சூரியன்.

ஒரு ஞாயிற்றுக் கிழமை செம் முருங்கைக்கு காப்பு கட்டி சபநிவர்த்தி செய்து வேர் எடுத்து

ஒன்பது நாள் சூரியனுக்கான காயத்ரி மந்திரம் சொல்லி பூஜை செய்து 10வது நாள் தாயத்தில் போட்டு அணிந்துக்கொண்டால்

சூரியன் நமக்கு வசியம் ஆகும்

அதாவது சூரியனிலிருந்து வரும் அதிர்வலைகள் சோதிட ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தாது.

2. சந்திரன்.

திங்கள் கிழமை செம்முருங்கைக்கு பொங்கல் படைத்து சந்திரனுக்கு உண்டான

காயத்திரி மந்திரம் செபித்து வேர் எடுத்து தாயத்தில் போட்டு அணிந்துக்கொண்டால் சந்திரன் வசியம்.

3. செவ்வாய்.

செவ்வாய்க் கிழமை சிவனார் வேம்பு எனும் செடிக்கு காப்பு கட்டி சாப நிவர்த்தி செய்து செவ்வாய்க்கான மந்திரம் சொல்லி வேர் எடுத்து அணிந்துக்கொண்டால் செவ்வாய் வசியம்

செவ்வாய் தோஷமும் தீரும்.

4. புதன்.

புதன் கிழமை இருவேலி செடிக்கு காப்பு கட்டி வேர் எடுத்து தாயத்தில் போட்டு அணிந்துகொள்ள

புதன் வசியம்.

5. வியாழன்.

வியாழக்கிழமை செங்கழுநீர் செடிக்கு காப்பு கட்டி பலிக்கொடுத்து மறு வியாழன் அன்று வேர் எடுத்து அணிந்துகொண்டால் குரு எனும் வியாழன் வசியம்.

6. வெள்ளி.

வெள்ளிக்கிழமை கருவூமத்தன் செடிக்கு பொங்கல் மற்றும் பலி கொடுத்து மறு வெள்ளிக்கு வேர் எடுத்து அணிந்துகொண்டால்

வெள்ளி எனும் சுக்கிரன் வசியம்.

7. சனி.

சனிக்கிழமை செவ்வகத்திக்கு காப்பு கட்டி பொங்கல் மற்றும் பலி கொடுத்து மறு சனிக்கு வேர் எடுத்து அணிந்துகொள்ள சனி வசியம், சனி தோஷம் நிவர்த்தியாகும்

8. ராகு.

மாதத்தில் வரும் அமாவாசை அன்று எட்டி செடிக்கு பொங்கல் படைத்து

9வது நாள் எடுத்து அணிந்துகொள்ள ராகு வசியம்,

ராகு தோஷம் நிவர்த்தியாகும்.

9. கேது.

சூரிய கிரகணத்தில் வேம்பு செடிக்கு காப்பு கட்டி அந்தி சந்தி பூஜை செய்து

முன்பு சொன்னதைப் போல 9வது நாள் வேர் பிடுங்கி அணிந்துக்கொள்ள

கேதுவும் வசியமாவார்.

குறிப்பாக எல்லா கிரகத்துக்கும் காயத்திரி மந்திரம் உண்டு அதை அந்தந்த கிரகத்துக்கான மூலிகை எடுக்கும் போது கட்டாயம் 1008உரு ஏற்ற வேண்டும்.

அதேபோல் எல்லா மூலிகைக்கும் காப்பு கட்டி சாப நிவர்த்தி செய்வது மிகவும் அவசியம்.

(பலி என்பது கோழி - அல்லது எலுமிச்சை)

மேல் சொன்னதைப் போல் தவறாமல் செய்தால் 100% கிரகங்கள் நமக்கு

வசியமாகி அதற்கான பொல்லாத நேரத்திலும் நமக்கு நன்மையை மட்டுமே செய்யும் என்பது சித்தர்கள் கூறிவிட்டு சென்ற ரகசியம்.




வியாழன், 5 ஜனவரி, 2023

363 பேர் உயிர்த்தியாகம்

If a tree is saved even at the cost of one’s head, it’s worth it.

                                                                              - Amrita Devi

 மரங்களை வெட்டாமல் தடுக்க தன் உயிரைக் கொடுத்ததோடு, மற்றவர்கள் உயிர்தியாகம் செய்து மரங்களை பாதுகாக்க முன்னோடியாக இருந்தவர்தான் அம்ரிதா தேவி (Amrita Devi) ஆவார்.

இவரை மரங்களின் தாய் என்று அழைக்கின்றனர். உலகிலேயே மரங்களை பாதுகாக்க 363 பேர் உயிர்த்தியாகம் செய்த சம்பவம் 1730ஆம் ஆண்டில் இந்தியாவில் தான் நடந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள கெஜார்லி கிராமப்பகுதியைச் சேர்ந்த பிஷ்னய் பழங்குடி கிராமவாசிகள்தான் மரங்களைப் பாதுகாக்க தங்கள் சிரித்த முகத்துடன் உயிர்களைத் தியாகம் செய்தனர். இதற்கெல்லாம் முன்னோடியாக இருந்தவர் அம்ரிதா தேவி ஆவார். அம்ரிதா தேவி கெஜார்லி என்ற கிராமத்தில் பிறந்தார். அவருக்கு திருமணம் ஆகி மூன்று பெண் குழந்தைகளும் இருந்தனர். இப்பகுதியில் வன்னி மரம் (கெஜாரி / Prosopis Cineraria) எனப்படும் மர வகைகள் இயற்கையாகவே அதிகம் வளர்ந்திருந்தன. அதனால் இக்கிராமத்திற்கு கெஜார்லி என்று பெயர். இவர்கள் மரங்களை மிகவும் நேசித்தனர். விறகிற்காக கீழே காய்ந்து விழும் குச்சிகளை மட்டுமே பயன்படுத்தினர்.  

ஜோத்பூர் மகாராஜா அபய் சிங் புதிய அரண்மனை கட்டிடம் கட்ட மரங்களை வெட்டி வர உத்திரவிட்டிருந்தார். வன்னி (கெஜாரி) மரங்களை வெட்ட வந்ததை அறிந்த அம்ரிதா தேவியும், அவளது மூன்று மகள்களும் மரக்கூட்டத்திற்கு ஓடினர். மரங்களை காப்பாற்றியே தீரவேண்டும் என அம்ரிதா தேவி முடிவு செய்தார். மரங்களை காப்பாற்றியே தீரவேண்டும் என அம்ரிதா தேவி முடிவு செய்தார். மரங்களை வெட்டாமல் தடுக்க மரத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டார். இந்த மரத்தை வெட்டுவதற்குப் பதிலாக என்னை வெட்டிக் கொள்ளுங்கள் என்றார். மரத்தை பாதுகாக்க ஒவ்வொருவரும் மரத்தைக் கட்டிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்றார். கூலியாட்கள் அம்ரிதா தேவியின் தலையை வெட்டினார். அதைப் பார்த்துக்கொண்டிருந்த மகள்கள் மூன்று பேரும் மரத்தைக் கட்டிப்பிடித்தனர். அவர்கள் தலையும் வெட்டப்பட்டது. இச்செய்தி காட்டுத்தீபோல் கிராமங்களுக்குப் பரவியது. முதியவர்கள், இளைஞர்கள், பெண்கள், திருமணமானவர்கள், குழந்தைகள், ஏழை, பணக்காரர் என்கிற பாகுபாடின்றி மரத்தைப் பாதுகாக்க மரத்தைக் கட்டிப்பிடித்து 363 பிஷ்னய் மக்கள் உயிர்த்தியாகம் செய்தனர். இதனை அறிந்த அரசர் தனது தவறை உணர்ந்தார். மரங்கள் வெட்டுவது, வேட்டையாடுவது தடை விதித்து சட்டம் இயற்றினார். இப்படுகொலை நடந்த தினத்தை ஒவ்வொரு ஆண்டும் இப்பகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.



கள்ளுண்ணாமை

கள்ளுண்ணாமை குறள் 921 இலிருந்து 930 முடிய குறள் 921: உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார் . பொருள்:...