google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: ஒளவையார் பாட அறுந்து விழுந்த பொன்முடிச்சுகள் 3

புதன், 25 ஜனவரி, 2023

ஒளவையார் பாட அறுந்து விழுந்த பொன்முடிச்சுகள் 3

 அவ்வையாரின் ஒவ்வொரு பாடலுக்கும் ஆயிரம் பொன் கொண்ட ஒரு முடிச்சு அற்று விழுந்தது. இதோ மூன்றாம் பாடல்:

கைக்கூலி வாங்குபவன்!

கைக்கூலிக்கு லஞ்சம்' என்ற சொல் இன்று வழக்கி லிருக்கிறது. இந்நாளில் இந்தக் கைக்கூலி வாங்கும் வழக்கம் எங்கும் வேரூன்றிக் கிளைத்து வளர்ந்து காடாகப் படர்ந்திருக்கிறது.

கைக்கூலி வாங்குவது தவறு; அது பழியையும் பாவத்தையும் கொண்டு வருவது' என்ற நினைப்பே இல்லாமற் போய்விட்டது. இதனை, இந்தக் காலத்தின் கோலம் என்றுதான் சொல்ல வேண்டும்.

'கைக்கூலி பெறுபவன் மிகச் சீக்கிரமே பணக்காரனாகி விடுகிறான். வாழ்க்கையின் பல வசதிகளையும் விரைவிலேயே அவன் தேடிக்கொள்ளுகிறான். அவனது ஆடம்பர வாழ்வு, முதலில் கைக்கூலியை வெறுத்த பலரையும் அதை நோக்கிச் செல்லுமாறு விரட்டுகிறது. இப்படிச் சிலர் சமாதானம் கூறுகிறார்கள். சட்டம் தடை செய்திருக்கிறது; ஆனால், அது செயற்படுவதில்லை. தெரிந்தும் தெரியாமலும் அது வாளா இருந்து விடுகிறது' என்பவர் சிலர். நமக்காக ஒன்றைச் செய்பவனுக்கு நாமும் ஏதாவது தருவதுதானே நியாயம் என்பவர்களும் உள்ளனர்.

அந்த நாளில் 'கைக்கூலி வாங்கியவன் பிள்ளையற்றுப் போவான்' என்று மக்கள் நம்பினார்கள். தன் குடிவழி தொடர்பற்றுப் போவதை யார்தான் வரவேற்பார்கள்? இந்த அச்சமே பலரையும் கைக்கூலி வாங்கவிடாமல் தடுத்திருக்கிறது. இந்த உண்மையை உரைக்கிறார் ஒளவையார்.

"ஒரு வழக்கின் உண்மை ஒன்றாக இருக்கிறது. பொதுவாள் ரான ஊரவர்களும் அந்த உண்மைக்கு ஆதரவாகத் துணை நிற்கின்றனர். எனினும், அதனை ஒதுக்கி விடுகிறான் ஒரு நீதியாளன். எதிர்வழக்காளியின் பொய் வாதத்தைச் சார்ந்து அவன் பக்கமாக நின்று நீதி பேசுகிறான். இப்படிப் பேசிக் கைக்கூலி வாங்கி அவன் அதனைக் கொண்டு உவக்கின்றான். அவன் குடும்பம் பரம்பரைத் தொடர்பற்றுப் போவது உறுதி. அஃது உறுதியானால் நீயும் அறுவாயாக."

இந்தக் கருத்துப்பட ஒளவையார் பாடியதும், மூன்றாவது பொற்கிழியும் அறுந்து வீழ்ந்தது. அந்தப் பாடல் இது.


உள்ள வழக்கிருக்க ஊரார் பொதுவிருக்கத்

தள்ளி வழக்கதனைத் தான் பேசி - யெள்ளளவும்

கைக்கூலி தான்வாங்கும் காலறுவான் தன்கிளையும்

எச்சமிறும் என்றால் இறு.


" உண்மையான வழக்கானது ஒரு புறம் இருக்கவும், ஊராரின் அவை அதற்கு ஆதரவாக இருக்கவும், அவ்வழக் கினைத் தள்ளிவிடும் முறையிலே தான் எடுத்துச் சொல்லி, கொஞ்சமேனும் கைக்கூலியினைத் தான் வாங்குகின்ற பிள்ளை யற்றுப் போவானின் சுற்றமும், வமிசமற்றுப் போவது உண்மையானால், நீயும் அற்று வீழ்வாயாக" என்பது பொருள். கைக் கூலியோடு பொய்சாட்சி சொல்வதையும் இச்செய்யுள் பழிக்கின்றது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012 உடன்பிறப்பே, பேரவையில்  நியாயமான  பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூ...