அவ்வையாரின் ஒவ்வொரு பாடலுக்கும் ஆயிரம் பொன் கொண்ட ஒரு முடிச்சு அற்று விழுந்தது. இதோ இரண்டாம் பாடல்:
எச்சம் அறும் குடி!
அடுத்த பொற்கிழியின் முன் வந்து நின்றார் ஒளவையார். ஈயாதான் குடியானது வாரிசு அற்றுப் போகும் என்று பாடினார். அந்தச் செய்யுள் இது.
"வளமான ஒருவன், வாடியவன் தன்னை எதுவும் கேளா திருந்தபோதும், தானே வலியச் சென்று அவனுக்கு மனமுவந்து உதவுகின்றான். இது தாளாண்மை ஆகும்.
அவன் சென்று கேட்கும் போது மட்டும் ஒருவன் வழங்குகின்றான் என்றால், அது வள்ளன்மை' எனப்படும்.
பலநாட் பின் தொடர்ந்து சென்று சென்று கேட்டுவர, இறுதியில் அவனுக்கு உதவுகின்றான் என்றால், அது அவனுடைய நடைக்கு கிடைத்த நடைகூலி' என்றுதான் சொல்லப்படும்.
மற்றொருவன், இரக்கமற்ற செல்வன், பலகாற் சென்று இரந்தும், தருபவன் போலக் காட்டிக் காட்டிப் பொய்த்தான். அவனது செயல் பழிச்செயல் ' ஆகும். அஃது அவனை மட்டும் வாட்டுவதுடன் நின்றுவிடாது; அவன் குடியே தொடர்பு அற்றுப்போகும். இது நடப்பது இவ்வுலகில் உண்மையானால், அற்று வீழ்க" என்று பாடினார் ஒளவையார்.
தண்டாமல் ஈவது தாளாண்மை - தண்டி
அடுத்தக்கால் ஈவது வண்மை - அடுத்தடுத்துப்
பின் சென்றால் ஈவது காற்கூலி - பின்சென்றும்
பொய்த்தான் இவனென்று போமேல், அவன்குடி
எச்சம் இறுமேல் இறு.
"கேளாத போது ஒருவனுக்குத் தாமே வலிய வழங்குவது சிறந்த கொடையாகும். கேட்டு அடைந்தபோது ஒன்றைக் கொடுப்பது வள்ளன்மையாகும். மீண்டும் மீண்டும் தொடர்ந்து போய்க் கேட்பின் தருவது கால்நடைக்குத் தருகின்ற கூலியாகும் ! 'அப்படிப் பின்னாகச் சென்றனிடத்தும் கொடாது ஏமாற்றினான் இவன்' என்று ஒருவன் போய்விட்டால், அப்படிப் பட்டவனின் குடி சந்ததி அற்றுப்போகும் என்பது உண்மை யானால், நீயும் அறுந்து வீழ்வாயாக" என்பது இதன் பொருள்.
உடனே இரண்டாவது முடிச்சும் அறுந்து வீழ்ந்தது. அந்த அவையும் மகிழ்வுடன் ஆரவாரித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.