google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: பிப்ரவரி 2022

திங்கள், 28 பிப்ரவரி, 2022

TNPSC குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வு

தேர்வுக்கான தேதி, பாடத்திட்டம், கட் -ஆஃப், தேர்வர்களுக்கான முக்கிய தகவல்கள்:

தமிழக அரசுத்துறைகளில் நான்காம் நிலை பதவிகளை நிரப்ப TNPSC ஆல் நடத்தப்படும் தேர்வே குரூப் 4 தேர்வு ஆகும். 

இதில் விஏஓ பதவிகளுக்கான தேர்வும் பொதுவாக சேர்த்து நடத்தப்படலாம்.

தமிழக அரசு வேலை பெற எளிமை யான வழி இத்தேர்வை எழுதுவதாகும்.
 
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே இத்தேர்வை எழுதலாம். ஒரு எழுத்துத் தேர்வு மட்டுமே. அது கொள்குறி வகை மட்டுமே. விரிவான எழுத்துத் தேர்வு இல்லை.

TNPSC குரூப் 4 தேர்வு, ஏழு விதமான பதவிகளுக்கானது. அவையாவன:

இளநிலை உதவியாளர் (Junior Assistant)
தட்டச்சர் (Typist)
சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist)
கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer)
வரித் தண்டலர் (Bill Collector)
நில அளவர் (Field Surveyor)
வரைவாளர் (Draftsman)

கல்வித் தகுதி:

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், வரித்தண்டலர் ஆகிய பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டும் போதுமானது.

தட்டச்சர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (மற்றும்/அல்லது) முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சுருக்கெழுத்தர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து இரண்டு தேர்விலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (மற்றும்/அல்லது) முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் தேர்ச்சி பெற்றவர்கள் அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். ஆகவே அவர்களுக்கு வாய்ப்பு மிகுதியாக உள்ளது.

வயதுத் தகுதி:

இத்தேர்விற்க்கான வயது தகுதி கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்கு, பொதுபிரிவினருக்கு 21 முதல் 30 வரை. பிற வகுப்பினர்களுக்கு 40 வயது வரை சலுகை உண்டு.

அதுவே இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பிற பணிகளுக்கு, பொதுபிரிவினருக்கு 18 வயது முதல் 30 வரை. பிற வகுப்பினர்களுக்கு 35 வயது வரை சலுகை உண்டு.

மேலும் அனைத்து பதவிகளுக்கும் மேல்நிலை வகுப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. அதாவது பத்தாம் வகுப்பிற்கு மேல் படித்தவர்களுக்கு வயது வரம்பு இல்லை.

தேர்வு முறை:

மொத்தம் 200 வினாக்கள். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள்.
மொத்தம் 300 மதிப்பெண்கள்.

மொழிப்பாடம் மற்றும் பொது அறிவு என வினாத்தாளில் இரண்டு பகுதிகள் உண்டு.

வினாக்கள் கொள்குறி வகையில் மட்டுமே (Objective Type) இருக்கும்.

பாடத்திட்டம்:

மொழிப்பாடப்பிரிவில் இதுவரை, தமிழ் அல்லது ஆங்கில மொழிப் பாடங்களில் 100 வினாக்கள் இடம்பெறும். தேர்வர்கள் ஏதேனும் ஒரு மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று இருந்தது.
தற்போது, தமிழ் பாடத் தாளில் குறைந்தது 45 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே, பிற தாள்களை மதிப்பீடு செய்யும் வகையில் மாற்றம் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. ஆகவே பாடத்திட்டம் மாறலாம்.

அடுத்ததாக, 100 வினாக்கள் பொது அறிவு பகுதியிலிருந்து கேட்கப்படும். அவற்றில் 75- பொது அறிவு வினாக்களும் , 25- திறனறி தேர்வு (Aptitude Test) வினாக்களும் இருக்கும். பொது அறிவுப் பகுதியில் அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், வரலாறு, இந்திய அரசியல், பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், திறனறி வினாக்கள் போன்ற பகுதிகளிலிருந்து வினாக்கள் அமையும்.

எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர். பின்னர் கலந்தாய்வு மூலம் பணியிடங்கள் வழங்கப்படும்.

குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் TNPSC ஆல் வெளியிடப்படுவதாகும்.  பெரும்பாலும் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி பாடநூல்களில் இருந்தே வினாக்கள் அமையும். 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடங்களில் இருந்தும் சில  நேரங்களில் கேள்விகள் கேட்கப்படலாம்.  ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான தமிழ், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை நன்றாகப் படித்தால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். 

TNPSC யின் பாடத்திட்டத்தைப் பார்த்து, தேவையானவற்றை மட்டும் படித்தால் போதும்.

ஆறு மாதம் அல்லது ஒரு ஆண்டுக்கான நடப்பு நிகழ்வுகளை படித்து வைத்துக் கொள்வது நல்லது.

முந்நூறு மதிப்பெண்களில் தொண்ணூறு எடுத்தால் பாஸ். ஆனால் இது போதாது.

கட் -ஆஃப் (Cut off):

பொதுவாக போட்டி மிகுதி.  காலிப் பணி இடங்களை விட தேர்வு எழுதுவோர் மிகுதி. ஆகவே நிறைய மதிப்பெண்களைப் பெறவேண்டும். அதற்காகவே  கட் ஆஃப் மதிப்பெண்    வரையறுக்கப்படும்.

கட்-ஆஃப் மதிப்பெண் இன மற்றும் பிரிவு வாரியாக வேறுபடும்.

வென்று வேலையில் அமர வாழ்த்துகள்.

அன்புடன்
பொன்னமராவதி புதுப்பட்டி ஆறுமுகம் நடராஜன்
மதுரையில் இருந்து.


வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

திருக்குறள் வலியறிதல்

அதிகாரம் 48
வலியறிதல் - Judging strength

பத்துக் குறள்கள், அறிஞர்களின் விளக்கங்கள், ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு கவியோகி சுத்தானந்த பாரதியார்

குறள் 471:
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.

கலைஞர் உரை:
செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈ.டுபட வேண்டும்.

மு.வ உரை:
செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
செய்வதற்கு எண்ணும் செயலின் வலிமை, செய்ய முயலும் தன் வலிமை, அதை எதிர்க்கும் எதிரியின் வலிமை, இருவர்க்கும் துணை வருவார் வலிமை என்னும் இவற்றை எல்லாம் நன்கு எண்ணிச் செயலைச் செய்க.

குறள் 472:
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.

கலைஞர் உரை:
ஒரு செயலில் ஈ.டுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லை.

மு.வ உரை:
தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:
தம்மால் செய்யமுடியும் செயலையும் அதைச் செய்வதற்கு ஏற்ற ஆற்றலையும் அறிந்து அதையே மனத்துள் சிந்தித்துச் செயலாற்றுவார்க்கு, முடியாதது ஒன்றும் இல்லை.

குறள் 473:
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.

கலைஞர் உரை:
தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு.

மு.வ உரை:
தன்னுடைய வலிமை இவ்வளவு என அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்.

சாலமன் பாப்பையா உரை:
தம் ஆற்றலை அறியாமல், ஒரு வேகத்தில் செயலைச் செய்யத் தொடங்கித் தொடரமுடியாமல் இடையே விட்டுக் கெட்டவர் பலர்.

குறள் 474:
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.

கலைஞர் உரை:
மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்.

மு.வ உரை:
மற்றவர்களோடு ஒத்து நடக்காமல், தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.

சாலமன் பாப்பையா உரை:
பிறருடன் மனங்கலந்து பழகாமல், தன் சொந்த பலத்தையும் அறியாமல் தன்னைப் பெரிதாக எண்ணியவன் விரைவில் அழிவான்.

குறள் 475:
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

கலைஞர் உரை:
மயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முறிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும்.

மு.வ உரை:
மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.

சாலமன் பாப்பையா உரை:
மயில்தோகைதானே என்று அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துபோகும்.

குறள் 476:
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.

கலைஞர் உரை:
தன்னைப்பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு, எல்லை மீறிப் போகிற ஒருவர், நுனிக் கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ அந்தக் கதிக்கு ஆளாவார்.

மு.வ உரை:
ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலே ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒரு மரக்கிளையின் நுனியில் ஏறிவிட்டவர், அந்த அளவையும் கடந்து மேலும் ஏற முயன்றால், அம் முயற்சியே அவர் உயிருக்கு முடிவாகிவிடும்.

குறள் 477:
ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.

கலைஞர் உரை:
வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகும்.

மு.வ உரை:
தக்க வழியில் பிறர்க்கு கொடுக்கும் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து விடும்.

சாலமன் பாப்பையா உரை:
எதைப் பிறர்க்குக் கொடுத்தாலும் தம் பொருளாதார நிலையை அறிந்து கொடுக்கவும்; அப்படிக் கொடுப்பதே பொருளைக் காத்துக் கொண்டு, கொடுக்கும் முறையான வழியாகும்.

குறள் 478:
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.

கலைஞர் உரை:
எல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை.

மு.வ உரை:
பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு)
விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை.

சாலமன் பாப்பையா உரை:
வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை.

குறள் 479:
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.

கலைஞர் உரை:
இருப்பது, இயற்றக்கூடியது, இனியும் ஈட்டக்கூடியது ஆகியவற்றின் அளவு அறிந்து செயல் திட்டங்களை வகுத்துக் கொள்ளாவிட்டால், வலிமையோ அல்லது வளமோ இருப்பதுபோல் தோன்றினாலும்கூட இல்லாமல் மறைந்து போய்விடும்.

மு.வ உரை:
பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டு விடும்.

சாலமன் பாப்பையா உரை:
தன் சொத்தின் மதிப்பை அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனின் வாழ்க்கை, இருப்பது போல் காட்சி தந்து இல்லாமல் அழிந்துவிடும்.

குறள் 480:
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.

கலைஞர் உரை:
தன்னிடமுள்ள பொருளின் அளவை ஆராய்ந்து பார்க்காமல் அளவின்றிக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் அவனது வளம் விரைவில் கெடும்.

மு.வ உரை:
தனக்கு பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும்.

சாலமன் பாப்பையா உரை:
பொருளாதார நிலையை எண்ணாது பிறர்க்குச் செய்யும் உபகாரத்தால் ஒருவனது செல்வத்தின் அளவு, விரைவில் கெடும்.


ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு கவியோகி சுத்தானந்த பாரதியார்

அதிகாரம் 48
வலியறிதல் - Judging strength

1. வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.
Judge act and might and foeman's strength
The allies' strength and go at length.        471

2. ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.
Nothing hampers the firm who know
What they can and how to go.        472

3. உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.
Many know not their meagre might
Their pride breaks up in boastful fight.        473

4. அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.
Who adapts not, outsteps measure
And brags himself-his fall is sure.        474

5. பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.
Even the gentle peacock's plume
Cart's axle breaks by gross volume.        475

6. நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி யாகி விடும்.
Beyond the branches' tip who skips
Ends the life as his body rips.        476

7. ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி.
Know the limit; grant with measure
This way give and guard your treasure.        477

8. ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை.
The outflow must not be excess
No matter how small income is.        478

9. அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.
Who does not know to live in bounds
His life seems rich but thins and ends.        479

10. உளவரை தூக்காத ஒப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும்.
Wealth amassed quickly vanishes
Sans level if one lavishes.        480

வியாழன், 24 பிப்ரவரி, 2022

கவரிமா வேறு கவரிமான் வேறு

குறள் 969:

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்

[பொருட்பால், குடியியல், மானம்]

மயிர்: முடி
நீப்பின்: நீங்கினால்
வாழா: உயிர் வாழாத
கவரிமா: கவரிமா எனும் ஒரு வகை விலங்கு
அன்னார்: அனையர், ஒத்தவர்
உயிர்நீப்பர்: உயிரை விட்டுவிடுவர்
மானம்: அவமானம்
வரின்: வரும் போது

மு. வரதராசன் உரை : 

தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.

சாலமன் பாப்பையா உரை: 

மயிர்எலாம் இழந்துவிட்டால் உயிர் வாழ முடியாத கவரிமான் (சாமரம்) போன்றவர் தம் குடும்பப் பெருமை எல்லாம் அழிய நேர்ந்தால் உயிர் வாழமாட்டார்.

கலைஞர் உரை : 

உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான் என்பார்கள் அதுபோல் மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள் உயிரையே விட்டு விடுவார்கள்.

பரிமேலழகர் உரை

மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் - தன் மயிர்த்திரளின் ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழாத கவரிமாவை ஒப்பார்; மானம் வரின் உயிர் நீப்பர் - உயிர் நீக்கத்தான் மானம் எய்தும் எல்லை வரின், அதனைத் தாங்காது இறப்பர்.(இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. உயிரும் மானமும் உடன் நில்லாமைக்கண் பின்னும் போவதாய உயிரை நீத்து, எஞ்ஞான்றும் நிற்பதாய மானத்தை எய்துவர் என்பதாம். உவமை அவர்க்கு அஃது இயல்பு என்பது விளக்கி நின்றது.)

புலியூர் கேசிகன் உரை:

தன் ஒரு மயிர் நீங்கினாலும் உயிர் வாழாத கவரிமானைப் போன்றவர்கள், மானம் இழந்து உயிரைக் காக்கும் நிலைமை வந்தால், அப்போதே உயிரை விட்டுவிடுவார்கள்.

குறிப்பு:

கவரிமா என்றால் யாக் (Yak) எனப்படும் ஒரு வகை சடை எருமை அல்லது சடை எருது என்றும், நீண்ட மயிர்க்கற்றைகளைக் கொண்ட ஒரு வகை மாட்டினம் என்றும் அனுமானிக்கப்படுகிறது. இவ்வகையான விலங்குகள் இமயமலையில் வாழ்கின்றன. கவரி என்றால் சடை போன்ற முடி என்றும், மா என்றால் விலங்கு என்றும் பொருள் கொள்ளலாம். 

ஆகவே இக் குறளுக்கு,

"இமயமலையிலும் அதைச் சார்ந்த பகுதிகளிலும் வாழும் கவரி மா ஆனது, தன் அடர்ந்த ரோமத்தை இழந்துவிட்டால், குளிர் தாங்காமல் இறந்துவிடும். அதைப் போல, அப்படிப்பட்ட கவரிமாவைப் போன்றோர், மானமிழந்தால் உயிர் துறப்பர்."

என்று பொருள் கொள்ளலாம் என்றே நினைக்கின்றேன். 

இங்கே மயிர் என்பது ஒற்றை முடி என்று நாம் கருதக்கூடாது என்பது நான் புரிந்துகொண்டதாகும்.

குளிர்ப் பகுதிகளில் வாழும் விலங்குகளுக்கு குளிரிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ள உரோமம் என்னும் முடி (மயிர்) இன்றியமையாததாகும். அதைப் போல உயர்ந்தோர்களுக்கு மானம் இன்றியமையாததாகும். மானமிழந்தால் உயிரிழப்பர்.

கோவலனைக் கொன்று அறம் தவறியதால் பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர்நீத்தான்.

திருவள்ளுவர் வாழ்ந்த காலத்துக்கு முன்பிருந்தே தென்னாட்டுக்கும் வடநாட்டுக்கும் இடையே பயணமும் வணிகமும் உள்ளன. புனித யாத்திரையும் தொடர்கிறது. இமயமலைக் கவரிமா (யாக்) என்னும் விலங்கின் சடையிலிருந்து பல நிறங்களில் சாமரம் என்னும் விசிறியைச் செய்து  மன்னர்களுக்கு வீசியதால் (எடு: வெண்சாமரம்) அச்செயலுக்கு கவரி வீசுதல் என்று பெயர் வந்திருக்கக்கூடும்.

கவரி என்னும் முடியே, கவுரி முடி சவரிமுடி, சவுரி முடி என்று திரிந்திருக்கலாம்.

புறநானூற்று பாடல் எண் 132 ஐ இப்போது பார்ப்போம்.

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண். 
துறை: இயன் மொழி

முன்உள்ளு வோனைப் பின்உள்ளி னேனே!
ஆழ்கஎன் உள்ளம்; போழ்க என் நாவே!
பாழ்ஊர்க் கிணற்றின் தூர்கஎன் செவியே!
நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி

குவளைப் பைஞ்சுனை பருகி அயல
தகரத் தண்ணிழல் பிணையொடு வதியும்
வடதிசை அதுவே வான்தோய் இமயம்
தென்திசை ஆஅய்குடி இன்றாயின்
பிறழ்வது மன்னோஇம் மலர்தலை உலகே

பொருளுரை:

ஆய் அண்டிரனை முன்னமேயே நினைக்காமல் காலந்தாழ்த்திப் பின்னர் நினைத்தேனே! 
என் உள்ளம் வருத்தத்தில் மூழ்கட்டும்; என் நாக்கு அழியட்டும்; 

பாழ் அடைந்த ஊரில் உள்ள கிணறுபோல் என் செவிகள் அடைபட்டுப் போகட்டும். 
நாரத்தம் பழங்களையும் மணமுடைய புல்லையும் தின்ற கவரிமா, 
குவளை மலர்களுடன் கூடிய பசுமையான நீர்நிலையில் உள்ள நீரைக் குடித்துவிட்டு 
அதனை அடுத்துள்ள தகர மரத்தின் குளிர்ந்த நிழலில் தன் பெண்ணினத் துணையோடு 
தங்கியிருக்கும் வானளாவிய இமயம் வடதிசையில் உள்ளது. 

தென் திசையில் ஆயின் குடி இல்லை எனின் இப்பரந்த உலகம் தலைகீழாக மாறிவிடும்.

கவரிமா, இமய மலையில் வாழும் விலங்கு என்பதை இப்பாடலின் வாயிலாக அறியலாம்.

இனி ஆங்கில மொழி பெயர்ப்பைப் பார்ப்போம்.

Couplet :

Like the wild ox that, of its tuft bereft, will pine away,Are those who, of their honour shorn, will quit the light of day.

Translation :

Honour lost, the noble expire Like a yak that loses its hair.

Explanation :

Those who give up (their) life when (their) honour is at stake are like the yark which kills itself at the loss of (even one of) its hairs.

இதில் even one of என்று அடைப்புக் குறிக்குள் சேர்த்திருப்பதை ஏற்க மனம் மறுக்கிறது. ஏனெனில் ஒரே ஒரு முடியை இழந்தாலே உயிரை விடும் விலங்கு உலகத்தில் உள்ளதா என்று தெரியவில்லை. மயிர்க்கற்றைக்கும் மயிர் என்றே பொருள். 

எ.டு: முடி திருத்தகம், முடி எடுத்தல், தலைமுடி, முடிக் காணிக்கை...

ஏதேனும் நோய்வாய்ப்பட்டால் விலங்குகள் தம் மயிரை இழக்க நேரிடலாம்.

Wild Yak Domestic Yak வேறுபாடு : 

The wild yak (Bos mutus) is a large, wild cattle native to the Himalayas. It is the ancestor of the domestic yak (Bos grunniens).

ஆக்ஸ்ஃபோர்டு அகராதியின்படி  (Oxford dictionary):
YAK is a large domesticated wild ox with shaggy hair, humped shoulders , and large horns , used in Tibet as a pack animal and for its milk, meat, and hide.

திபெத் போன்ற இமயமலைப் பகுதியில் வெண்மை நிற மயிரடர்ந்த யாக் என்னும் விலங்கும் உண்டு.

முடிவுரை :
கவரிமா என்று திருவள்ளுவர் சுட்டியிருப்பது யாக் என்னும் விலங்காக இருக்கக்கூடும்.

பிற பின்பு
அன்புடன்
ஆறுமுகம் நடராஜன்
பொன்னமராவதி புதுப்பட்டி
இப்போது மதுரையில் இருந்து.


புதன், 23 பிப்ரவரி, 2022

மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள்

மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் என்றால் என்ன?

மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் ஆகியன அந்தந்த நாளுக்குரிய நட்சத்திரத்தின் அடிப்படையிலானவை.

மேல்நோக்கு நாள்: 
உத்திரம், உத்திராடம், ரோகிணி, பூசம், திருவாதிரை, அவிட்டம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் மேல்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களைக் கொண்ட நாட்களே மேல்நோக்கு நாட்கள் ஆகும். 

இந்த நாட்களில் மேல்நோக்கிச் செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது. 
எடு: கட்டடம் எழுப்புவது, மரம் நடுவது, தரைக்கு மேல் விளைந்து பயன்தரும் தாவரங்களின் விதைகளை விதைப்பது.

கீழ்நோக்கு நாள்: 
கிருத்திகை, பரணி, பூரம் ஆயில்யம், விசாகம், மகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் கீழ்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே கீழ்நோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது. 

இந்த நாட்களில் கீழ்நோக்கிச் செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது.
எடு: கிணறு தோண்டுவது, போர்வெல் போடுவது, சுரங்கம் தோண்டுவது, மண்ணுக்கு அடியில் விளையும் கிழங்குகளைத் தரும் பயிர்களைப் பயிரிடுவது.

சமநோக்கு நாள்: 
அஸ்தம், அஸ்வினி, அனுஷம், மிரு கசீரிஷம், சுவாதி, புனர்பூசம், சித்திரை, கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் சமநோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே சமநோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

இந்த நாட்களில் ஓரளவிற்கு சமமாக செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது. 

எடு: சாலை அமைப்பது, சமமான சாலையில் ஓட்டக்கூடிய வாகனங்களை வாங்குவது, கட்டடத் தளம் அமைப்பது, வயல்களை உழுவது.

மேற்கண்ட நாட்களில் அவற்றுக்குரிய வேலைகளைச் செய்யத் தொடங்கினால் வெற்றியடையலாம் என்பது நம்பிக்கை.

செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

தயிர்வடை

வீட்டிலேயே செய்யலாம் சுவைமிகு தயிர்வடை

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு: 1 கப் / 200 g
எண்ணெய்: தேவையான அளவு

தயிர்: 1 லிட்டர்

சமையல் எண்ணெய்:2  தேக்கரண்டி
கடுகு: ½  தேக்கரண்டி
சீரகம்: ½  தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு: ½  தேக்கரண்டி
கடலைப்பருப்பு:1 தேக்கரண்டி
கருவேப்பிலை: சிறிதளவு
காய்ந்த மிளகாய்:1
இஞ்சி: 1  துண்டு
பச்சை மிளகாய்:2
உப்பு: தேவையான அளவு

செய்முறை:

உளுத்தம் பருப்பை நன்றாக கழுவி 2 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
பின்னர் கிரைண்டர் அல்லது மிக்சியில் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, நடுவில் விரலால் துளையிட்டு சூடான எண்ணெயில் போட்டுப் பொன்னிறமானதும் எண்ணெயை வடித்து விட்டு எடுக்கவும்.

இதே போல எல்லா மாவிலும் வடை செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். 

ஒரு பவுலில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும் அதனுடன் 1/2 தேக்கரண்டி உப்பு மற்றும் 3 தேக்கரண்டி தயிர் சேர்த்துக்  கலக்கவும்.
பொரித்து வைத்துள்ள வடைகளை போட்டு 10 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
ஒரு லிட்டர் தயிரை கட்டிகளில்லாமல் அடித்துக் கொள்ளவும்.
ஒரு பானில் 2 தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்து சூடானதும் 1/2 தேக்கரண்டி கடுகு, 1/2 தேக்கரண்டி சீரகம், 1/2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு,  1 தேக்கரண்டி கடலைப்பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
அதனுடன் சிறிதளவு கருவேப்பிலை, 1 காய்ந்த மிளகாய், 1 துண்டு இஞ்சி மற்றும் 2 பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
இவற்றை ஓரளவு வதக்கிய பின்னர் தயாராக வைத்துள்ள தயிரில் சேர்த்துக் கொள்ளவும்.
அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.
பின்னர் ஊற வைத்துள்ள வடைகளை ஒவ்வொன்றாக ஒரு ட்ரேயில் அடுக்கி கொள்ளவும்.
அதன்மீது தாளித்து வைத்துள்ள தயிர் கலவையை ஊற்றவும்.
நன்றாக கலந்த பின்னர் 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.

சுவையான தயிர் வடை தயார்.

பரிமாறவும்.

குறிப்பு:

தயிர் வடைக்கு  மொறுமொறுப்பாகப் பொரிக்க வேண்டாம்.  ஓரளவு பொன்னிறமானால் போதும். மிகவும் புளித்த அல்லது புளிப்பில்லாத தயிர் பயன்படுத்த வேண்டாம்.
வடை செய்தபின்னர் தயிரும் உப்பும் கலந்த தண்ணீரில் 10 நிமிடங்களுக்கு ஊற வைத்து பின்னர் தயிரில் போடவும். பிழியக்கூடாது. 


செட்டிநாட்டு கல்யாணச் சாப்பாடு

செட்டிநாட்டு கல்யாணச் சாப்பாட்டில் ஸ்பெஷலாக இடம்பெறுவனவற்றுள் சில:

வெள்ளைப் பணியாரம், கந்தரப்பம், ஆப்பம், பால் பணியாரம், மசாலைச் சீயம், இனிப்புச் சீயம், கவுனி அரிசி, பாதாம் அல்வா, தம்புருட் அல்வா, ஃப்ரூட் புட்டிங், வறுத்த முந்திரி, முந்திரி பக்கோடா, வெங்காயக் கோஸ், அவியல், சாம்பார், டாங்கர் சட்னி, மண்டி, தென்னம்பாளைப் பொடிமாஸ், இளநீர், ரோஜாப்பூ ரசம், சுண்டைக்காய், பேபிகார்ன், காலிஃப்ளவர் சூப், கருவேப்பிலை சாதம், கொத்துமல்லி சாதம், புலவு, காளான் மசாலா, இங்கிலீஷ் காய்கறி பிரட்டல், துவட்டல், கூட்டு, பாலாடைக்கட்டி குருமா, கொத்துப் புரோட்டா, மசாலா நூடுல்ஸ், தக்காளிக்குழம்பு, காய்கறிக் குழம்பு, கருவாட்டுக் குழம்பு, மிளகுக் குழம்பு, கத்திரிக்காய் கெட்டிக் குழம்பு, மாம்பழ சாம்பார், குறுவை அரிசிப் பாயாசம், பாதம் கீர், பழப்பாயாசம், அக்கார அடிசல்.

கள்ளுண்ணாமை

கள்ளுண்ணாமை குறள் 921 இலிருந்து 930 முடிய குறள் 921: உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார் . பொருள்:...