google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: கவரிமா வேறு கவரிமான் வேறு

வியாழன், 24 பிப்ரவரி, 2022

கவரிமா வேறு கவரிமான் வேறு

குறள் 969:

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்

[பொருட்பால், குடியியல், மானம்]

மயிர்: முடி
நீப்பின்: நீங்கினால்
வாழா: உயிர் வாழாத
கவரிமா: கவரிமா எனும் ஒரு வகை விலங்கு
அன்னார்: அனையர், ஒத்தவர்
உயிர்நீப்பர்: உயிரை விட்டுவிடுவர்
மானம்: அவமானம்
வரின்: வரும் போது

மு. வரதராசன் உரை : 

தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.

சாலமன் பாப்பையா உரை: 

மயிர்எலாம் இழந்துவிட்டால் உயிர் வாழ முடியாத கவரிமான் (சாமரம்) போன்றவர் தம் குடும்பப் பெருமை எல்லாம் அழிய நேர்ந்தால் உயிர் வாழமாட்டார்.

கலைஞர் உரை : 

உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான் என்பார்கள் அதுபோல் மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள் உயிரையே விட்டு விடுவார்கள்.

பரிமேலழகர் உரை

மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் - தன் மயிர்த்திரளின் ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழாத கவரிமாவை ஒப்பார்; மானம் வரின் உயிர் நீப்பர் - உயிர் நீக்கத்தான் மானம் எய்தும் எல்லை வரின், அதனைத் தாங்காது இறப்பர்.(இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. உயிரும் மானமும் உடன் நில்லாமைக்கண் பின்னும் போவதாய உயிரை நீத்து, எஞ்ஞான்றும் நிற்பதாய மானத்தை எய்துவர் என்பதாம். உவமை அவர்க்கு அஃது இயல்பு என்பது விளக்கி நின்றது.)

புலியூர் கேசிகன் உரை:

தன் ஒரு மயிர் நீங்கினாலும் உயிர் வாழாத கவரிமானைப் போன்றவர்கள், மானம் இழந்து உயிரைக் காக்கும் நிலைமை வந்தால், அப்போதே உயிரை விட்டுவிடுவார்கள்.

குறிப்பு:

கவரிமா என்றால் யாக் (Yak) எனப்படும் ஒரு வகை சடை எருமை அல்லது சடை எருது என்றும், நீண்ட மயிர்க்கற்றைகளைக் கொண்ட ஒரு வகை மாட்டினம் என்றும் அனுமானிக்கப்படுகிறது. இவ்வகையான விலங்குகள் இமயமலையில் வாழ்கின்றன. கவரி என்றால் சடை போன்ற முடி என்றும், மா என்றால் விலங்கு என்றும் பொருள் கொள்ளலாம். 

ஆகவே இக் குறளுக்கு,

"இமயமலையிலும் அதைச் சார்ந்த பகுதிகளிலும் வாழும் கவரி மா ஆனது, தன் அடர்ந்த ரோமத்தை இழந்துவிட்டால், குளிர் தாங்காமல் இறந்துவிடும். அதைப் போல, அப்படிப்பட்ட கவரிமாவைப் போன்றோர், மானமிழந்தால் உயிர் துறப்பர்."

என்று பொருள் கொள்ளலாம் என்றே நினைக்கின்றேன். 

இங்கே மயிர் என்பது ஒற்றை முடி என்று நாம் கருதக்கூடாது என்பது நான் புரிந்துகொண்டதாகும்.

குளிர்ப் பகுதிகளில் வாழும் விலங்குகளுக்கு குளிரிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ள உரோமம் என்னும் முடி (மயிர்) இன்றியமையாததாகும். அதைப் போல உயர்ந்தோர்களுக்கு மானம் இன்றியமையாததாகும். மானமிழந்தால் உயிரிழப்பர்.

கோவலனைக் கொன்று அறம் தவறியதால் பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர்நீத்தான்.

திருவள்ளுவர் வாழ்ந்த காலத்துக்கு முன்பிருந்தே தென்னாட்டுக்கும் வடநாட்டுக்கும் இடையே பயணமும் வணிகமும் உள்ளன. புனித யாத்திரையும் தொடர்கிறது. இமயமலைக் கவரிமா (யாக்) என்னும் விலங்கின் சடையிலிருந்து பல நிறங்களில் சாமரம் என்னும் விசிறியைச் செய்து  மன்னர்களுக்கு வீசியதால் (எடு: வெண்சாமரம்) அச்செயலுக்கு கவரி வீசுதல் என்று பெயர் வந்திருக்கக்கூடும்.

கவரி என்னும் முடியே, கவுரி முடி சவரிமுடி, சவுரி முடி என்று திரிந்திருக்கலாம்.

புறநானூற்று பாடல் எண் 132 ஐ இப்போது பார்ப்போம்.

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண். 
துறை: இயன் மொழி

முன்உள்ளு வோனைப் பின்உள்ளி னேனே!
ஆழ்கஎன் உள்ளம்; போழ்க என் நாவே!
பாழ்ஊர்க் கிணற்றின் தூர்கஎன் செவியே!
நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி

குவளைப் பைஞ்சுனை பருகி அயல
தகரத் தண்ணிழல் பிணையொடு வதியும்
வடதிசை அதுவே வான்தோய் இமயம்
தென்திசை ஆஅய்குடி இன்றாயின்
பிறழ்வது மன்னோஇம் மலர்தலை உலகே

பொருளுரை:

ஆய் அண்டிரனை முன்னமேயே நினைக்காமல் காலந்தாழ்த்திப் பின்னர் நினைத்தேனே! 
என் உள்ளம் வருத்தத்தில் மூழ்கட்டும்; என் நாக்கு அழியட்டும்; 

பாழ் அடைந்த ஊரில் உள்ள கிணறுபோல் என் செவிகள் அடைபட்டுப் போகட்டும். 
நாரத்தம் பழங்களையும் மணமுடைய புல்லையும் தின்ற கவரிமா, 
குவளை மலர்களுடன் கூடிய பசுமையான நீர்நிலையில் உள்ள நீரைக் குடித்துவிட்டு 
அதனை அடுத்துள்ள தகர மரத்தின் குளிர்ந்த நிழலில் தன் பெண்ணினத் துணையோடு 
தங்கியிருக்கும் வானளாவிய இமயம் வடதிசையில் உள்ளது. 

தென் திசையில் ஆயின் குடி இல்லை எனின் இப்பரந்த உலகம் தலைகீழாக மாறிவிடும்.

கவரிமா, இமய மலையில் வாழும் விலங்கு என்பதை இப்பாடலின் வாயிலாக அறியலாம்.

இனி ஆங்கில மொழி பெயர்ப்பைப் பார்ப்போம்.

Couplet :

Like the wild ox that, of its tuft bereft, will pine away,Are those who, of their honour shorn, will quit the light of day.

Translation :

Honour lost, the noble expire Like a yak that loses its hair.

Explanation :

Those who give up (their) life when (their) honour is at stake are like the yark which kills itself at the loss of (even one of) its hairs.

இதில் even one of என்று அடைப்புக் குறிக்குள் சேர்த்திருப்பதை ஏற்க மனம் மறுக்கிறது. ஏனெனில் ஒரே ஒரு முடியை இழந்தாலே உயிரை விடும் விலங்கு உலகத்தில் உள்ளதா என்று தெரியவில்லை. மயிர்க்கற்றைக்கும் மயிர் என்றே பொருள். 

எ.டு: முடி திருத்தகம், முடி எடுத்தல், தலைமுடி, முடிக் காணிக்கை...

ஏதேனும் நோய்வாய்ப்பட்டால் விலங்குகள் தம் மயிரை இழக்க நேரிடலாம்.

Wild Yak Domestic Yak வேறுபாடு : 

The wild yak (Bos mutus) is a large, wild cattle native to the Himalayas. It is the ancestor of the domestic yak (Bos grunniens).

ஆக்ஸ்ஃபோர்டு அகராதியின்படி  (Oxford dictionary):
YAK is a large domesticated wild ox with shaggy hair, humped shoulders , and large horns , used in Tibet as a pack animal and for its milk, meat, and hide.

திபெத் போன்ற இமயமலைப் பகுதியில் வெண்மை நிற மயிரடர்ந்த யாக் என்னும் விலங்கும் உண்டு.

முடிவுரை :
கவரிமா என்று திருவள்ளுவர் சுட்டியிருப்பது யாக் என்னும் விலங்காக இருக்கக்கூடும்.

பிற பின்பு
அன்புடன்
ஆறுமுகம் நடராஜன்
பொன்னமராவதி புதுப்பட்டி
இப்போது மதுரையில் இருந்து.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012 உடன்பிறப்பே, பேரவையில்  நியாயமான  பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூ...