வெயிலோடு போய்…
கதையாசிரியர்: ச.தமிழ்ச்செல்வன்
மாரியம்மாளின் ஆத்தாளுக்கு முதலில் திகைப்பாயிருந்தது. இந்த வேகாத வெயில்ல இந்தக் கழுத ஏன் இப்படி தவிச்சுப் போயி ஓடியாந்திருக்கு என்று புரியவில்லை.
“ஓம் மாப்பிள்ளை வல்லியாடி” என்று கேட்டதுக்கு ‘பொறு பொறு’ங்கிற மாதிரி கையைக் காமிச்சிட்டு விறுவிறுன்னு உள்ள போயி ரெண்டு செம்பு தண்ணியை கடக்குக் கடக்குன்னு குடிச்சிட்டு ‘ஸ்… ஆத்தாடி’ன்னு உட்கார்ந்தாள்.
“ஓம் மாப்பள்ளை வல்லியாடி?’’
“அவரு… ராத்திரி பொங்க வைக்கிற நேரத்துக்கு வருவாராம். இந்நியேரமே வந்தா அவுக யேவாரம் கெட்டுப் போயிருமாம்.’’
“சரி… அப்பன்னா நீ சித்த வெயில் தாழக் கிளம்பி வாறது… தீயாப் பொசுக்குற இந்த வெயில்ல ஓடியாராட்டா என்ன…”
“ஆமா. அது சரி… பொங்கலுக்கு மச்சான் அவுக வந்திருக்காகளாமில்ல…”
ஆத்தாளுக்கு இப்ப விளங்கியது.
அவளுடைய மச்சான் – ஆத்தாளின் ஒரே தம்பியின் மகன் தங்கராசு இன்னிக்கி நடக்கிற காளியம்மங்கோயில் பொங்கலுக்காக டவுனிலிருந்து வந்திருக்கான். அது தெரிஞ்சுதான் கழுத இப்படி ஓடியாந்திருக்கு.
“மதியம் கஞ்சி குடிச்சிட்டு கிளம்பினியாட்டி” என்று கேட்டதுக்கு கழுத ‘இல்லை’ யென்கவும் ஆத்தா கஞ்சி ஊத்தி முன்னால் வைத்து குடிக்கச் சொன்னாள்.
உடம்பெல்லாம் காய்ஞ்சு போயி காதுல கழுத்தில ஒண்ணுமேயில்லாம கருத்துப் போன அவளைப் பார்க்கப் பார்க்க ஆத்தாளுக்குக் கண்ணீர்தான் மாலை மாலையாக வந்தது. தங்கராசு மச்சானுக்குத்தான் மாரியம்மா என்று சின்னப் பிள்ளையிலேயே எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். கள்ளன் – போலீஸ் விளையாட்டிலிருந்து காட்டிலே கள்ளிப்பழம் பிடுங்கப் போகிற வரைக்கும் ரெண்டு பேரும் எந்நேரமும் ஒண்ணாவேதான் அலைவார்கள். கடைசிக்கி இப்படி ஆகிப்போச்சே என்று ஆத்தாளுக்கு ரொம்ப வருத்தம். எப்படியெல்லாமோ மகளை வச்சிப் பாக்கணுமின்னு ஆசைப்பட்டிருந்தாள்.
பேச்சை மாற்றுவதற்காக ‘‘அண்ணன் எங்கத்தா” என்று கேட்டாள். ‘‘நீங்க ரெண்டு பேரும் வருவீக, அரிசிச் சோறு காச்சணும்னிட்டு அரிசி பருப்பு வாங்கியாறம்னு டவுனுக்கு போனான்.’’ கஞ்சியைக் குடித்துவிட்டு சீனியம்மாளைப் பார்க்க விரைந்தாள் மாரி. சீனியம்மள்தான் மச்சான் வந்திருக்கிற சேதியை டவுணுக்கு தீப்பெட்டி ஒட்டப் போன பிள்ளைகள் மூலம் மாரியம்மாளுக்குச் சொல்லிவிட்டது. சேதி கேள்விப்பட்டதிலிருந்தே அவள் ஒரு நிலையில் இல்லை. உடனே ஊருக்குப் போகணுமென்று ஒத்தக்காலில் நின்றாள். ஆனால், அவள் புருஷன் உடனே அனுப்பி விடவில்லை. நாளைக் கழிச்சுப் பொங்கலுக்கு இன்னைக்கே என்ன ஊரு என்று சொல்லிவிட்டான். அவ அடிக்கடி ஊருக்கு ஊருக்குன்னு கிளம்பறது அவனுக்கு வள்ளுசாப் பிடிக்கவில்லை. அவ ஊரு இந்தா மூணு மைலுக்குள்ளே இருக்குங்கிறதுக்காக ஒன்ரவாட்டம் ஊருக்குப் போனா எப்படி? அவ போறதப் பத்திகூட ஒண்ணுமில்ல. போற வட்டமெல்லாம் கடையிலேருந்து பருப்பு, வெல்லம் அது இதுன்னு தூக்கிட்டு வேற போயிர்றா. இந்தச் சின்ன ஊர்லே யேவாரம் ஓடுறதே பெரிய பாடா இருக்கு. இப்ப கோயில் கொடைக்குப் போணுமின்னு நிக்கா என்று வயிறு எரிந்தான். ஆனாலும், ஒரேடியாக அவளிடம் முகத்தை முறிச்சுப் பேச அவனுக்கு முடியாது. அப்பிடி இப்பிடியென்று ரெண்டு புலப்பம் புலம்பி அனுப்பி வைப்பான்.
இதைப் பத்தியெல்லாம் மாரிக்கு கவலை கிடையாது. அவளுக்கு நினைத்தால் ஊருக்குப் போயிறணும். அதுவும் மச்சான் அவுக வந்திருக்கும்போது எப்பிடி இங்க நிற்க முடியும்?
அவ பிறந்து வளர்ந்ததே தங்கராசுக்காத்தான் என்கிற மாதிரி யல்லவா வளர்ந்தாள். அவள் நாலாப்புப் படிக்கிறபோது தங்கராசின் அப்பாவுக்கு புதுக்கோட்டைக்கு மாற்றலாகி குடும்பத்தோடு கிளம்பியபோது அவள் போட்ட கூப்பாட்டை இன்னைக்கும் கூட கிழவிகள் சொல்லிச் சிரிப்பார்கள். நானும் கூட வருவேன் என்று தெருவில் புரண்டு கையைக் காலை உதறி ஒரே கூப்பாடு. அதைச் சொல்லிச் சொல்லி பொம்பிள்ளைகள் அவளிடம், ‘‘என்னட்டி ஒம் புருசங்காரன் என்னைக்கு வாரானாம்” என்று கேலி பேசுவார்கள். ஆனால், அவள் அதையெல்லாம் கேலியாக நினைக்கவில்லை. நிசத்துக்குத்தான் கேட்கிறார்கள் என்று நம்புவாள். ஊர்ப் பிள்ளைகளெல்லாம் கம்மாய் தண்ணியில் குதியாளம் போடும்போது இவள் மட்டும் கம்மாய் பக்கமே போக மாட்டாள். சும்மாத் தண்ணியிலே குதிச்சா சொறிபிடித்து மேலெல்லாம் வங்கு வத்தும். டவுன்ல படிக்கிற மச்சானுக்குப் பிடிக்காது. அதேபோல கஞ்சியக் குடிச்சி வகுறு வச்சிப்போயி மச்சான் ‘ஒன்னைக் கட்ட மாட்டேன்’னு சொல்லிட்டா என்னாகுறது? சும்மா மச்சான் மச்சான் என்று சொல்லிக்கொண்டிருந்தவள் பெரிய மனுஷியானதும் மச்சானைப் பத்தி நினைக்கவே வெட்கமும் கூச்சமுமாயிருந்தது. கொஞ்ச நாளைக்கி. வெறும் மச்சானைப் பத்தின நினைப்போடு அப்புறம் கனாக்களும் வந்து மனசைப் படபடக்க வைத்தன. டவுனுக்கு தீப்பெட்டி ஒட்டப் போகையிலும் வரையிலும், ஓட்டும்போதும் மச்சானின் நினைப்பு இருந்துகொண்டே இருக்கும்.
பஞ்சத்திலே பேதி வந்து அவ அய்யா மட்டும் சாகாம இருந்திருந்தா மச்சானுக்குப் பொருத்தமா அவளும் படிச்சிருப்பா. அது ஒரு குறை மட்டும் அவ மனசிலே இருந்து கொண்டிருந்தது. அதுவும் போயிருச்சு மச்சான் ஒரு தடவை அவுக தங்கச்சி கோமதி கலியாணத்துக்கு பத்திரிகை வைக்க வந்தபோது. எந்த வித்தியாசமும் பாராம ஆத்தாளோடவும் அண்ணனோடவும் ரொம்பப் பிரியமா பேசிக்கிட்டிருந்த மச்சானை கதவு இடுக்கு வழியாப் பாத்துப் பாத்து பூரிச்சுப் போனா மாரியம்மா.
மச்சானைப் பத்தின ஒவ்வொரு சேதியையும் சேர்த்துச் சேர்த்து மனசுக்குள்ளே பூட்டி வச்சிக்கிட்டா. வருஷம் ஓடினாலும் பஞ்சம் வந்தாலும் அய்யா செத்துப் போயி வயித்துப் பாட்டுக்கே கஷ்டம் வந்தாலும் அவனைப் பத்தின நினைப்பு மட்டும் மாறவே இல்லை. அதனாலேதான் தங்கராசு அவளுக்கில்லை என்று ஆன பிறகும்கூட அவளால் அண்ணனையும் ஆத்தாளையும் போலத் துப்புரவாக வெறுத்துவிட முடியவில்லை.
அவளுக்கு நல்லா ஞாபகம் இருக்கு, மாமனும் அத்தையும் வந்தது. தங்கராசு மச்சான் கலியாணத்துக்கு பரிசம் போடத்தான் மாமனும் அத்தையும் வருவாகன்னு இருந்தபோது, வேற இடத்திலே பொண்ணையும் பாத்து பத்திரிகையும் வச்சிட்டு சும்மாவும் போகாம மாமா அண்ணங்கிட்டே, ‘‘கலியாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னக்கூட்டியே வந்திரணும்பா. கோமதி கலியாணத்தை முடிச்சு வச்ச மாதிரி வேலைகளையும் பொறுப்பா இருந்து நீதான் பாத்துக் கணுமப்பா” என்று வேறு சொல்லிவிட்டுப் போனார். அவுக அங்கிட்டுப் போகவும் ஆத்தாளிடம் வந்து அண்ணன் ‘தங்கு தங்’கென்று குதித்தான். ‘‘என்னய என்ன சுத்தக் கேணப்பயனு நெனச்சுட்டாகளா” என்று. ‘கோமதி கலியா ணத்துக்கு எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு அண்ணன் செய்தான்னு சொன்னா அது நாளக்கி நம்ம தங்கச்சி வந்து வாழப் போற வீடு, நாம வந்து ஒத்தாசை செய்யாட்டா யாரு செய்வா என்று நினைத்து செய்தது. ஆனா, இப்படி நகைநட்டுக்கு ஆசைப்பட்டு மாமா அந்நியத்தில போவாகன்னு யாரு கண்டது. என்ன மாமானும் மச்சானும்.’ என்று வெறுத்துவிட்டது அவனுக்கு.ஆனால், அண்ணன் ஏறிக்கொண்டு பேசியபோது ஆத்தா பதிலுக்கு கூப்பாடுதான் போட்டாள்.
“என்னடா குதிக்கே? படிச்சு உத்தியோகம் பாக்குற மாப் பிள்ளை தீப்பெட்டியாபீசுக்கு போயிட்டு வந்து வீச்ச மெடுத்துப் போயிக் கெடக்கிற கழுதயக் கட்டுவான்னு நீ நெனச்சுக்கிட்டா அவுக என்னடா செய்வாக” என்று ஆத்திரமாகப் பேசினாள். அப்படி அப்போதைக்குப் பேசினாலும் அன்னைக்கு ராத்திரி செத்துபோன அய்யாவிடம் முறையீடு செய்து சத்தம் போட்டு ஒப்பாரி வைத்தாள். ‘‘ஏ… என் ராசாவே… என்ன ஆண்டாரே! இப்பிடி விட்டுப் போனீரே… மணவடையிலே வந்து முறைமாப்பிள்ளை நானிருக்க எவன் இவ கழுத்தில தாலி கட்டுவான்னு சொல்லி என்னச் சிறையெடுத்து வந்தீரே… இப்பிடி நிர்க்கதியா நிக்க விடவா சிறையெடுத்தீர் ஐயாவே… தம்பீ தம்பீன்னு பேகொண்டு போயி அலைஞ்சேனே… அவனைத் தூக்கி வளத்தேனே… என் ராசாவே… எனக்குப் பூமியிலே ஆருமில்லாமப் போயிட்டாகளே…”
பக்கத்துப் பொம்பிளைகளெல்லாம் வைதார்கள், ‘‘என்ன இவளும் பொம்பளதான… அப்பயும் இப்படியா ஒப்பாரி வச்சு அழுவாக” என்று.
பிறகு அண்ணன் வந்து, ‘‘இப்பம் நீ சும்மாருக்கியா என்ன வேணுங்கு” என்று அரட்டவும்தான் ஒப்பாரியை நிப்பாட்டினாள்.
மறுநாள் அண்ணன், ‘‘தங்கராசு கலியாணத்துக்கு ஒருத்தரும் போகப்புடாது”ன்னு சொன்னபோது மறுபேச்சுப் பேசாமல் ஆத்தாளும் சரியென்று சொல்லிவிட்டாள்.
‘அவனுக்கும் நமக்கும் இனிமே என்ன இருக்கு’ என்று சொல்லிவிட்டாள்.
ஆனால், மாரியம்மா அப்படியெல்லாம் ஆகவிடவில்லை. பலவாறு அண்ணனிடமும் ஆத்தாளிடமும் சொல்லிப் பார்த்தாள். ஒன்றும் மசியாமல் போக, கடைசியில்…
‘நீங்க யாரும் மச்சான் கலியாணத்துக்குப் போகலைன்னா நான் நாண்டுக்கிட்டுச் செத்துருவேன்’ என்று ஒரு போடு போட்டதும் சரியென்று அண்ணன் மட்டும் கலியாணத்துக்குப் போய்வந்தான். எம்புட்டோ கேட்டுப்பாத்தும் கலியாணச் சேதி எதையும் அவன் மாரியம்மாளுக்கோ ஆத்தாளுக்கோ சொல்லவில்லை.
‘எல்லாம் முடிஞ்சது’ என்பதோடு நிறுத்திக்கொண்டான்.
தன் பிரியமான மச்சானின் கல்யாணம் எப்பிடியெல்லாம் நடந்திருக்கும் என்று மாரியம்மாள் தினமும் பலவாறாக தீப்பெட்டி ஒட்டியபடிக்கே நினைத்து நினைத்துப் பார்ப்பாள்.
‘எங்கிட்டு இருந்தாலும் நல்லாருக்கட்டும்’ என்று கண் நிறைய, மனசு துடிக்க வேண்டிக்கொள்வாள்.
தங்கராசு கலியாணத்துக்குப் போய்விட்டு வந்த அண்ணன் சும்மா இருக்கவில்லை. அலைஞ்சு பெறக்கி இவளுக்கு மாவில்பட்டியிலேயே அய்யா வழியில் சொந்தமான பையனை மாப்பிளை பார்த்துவிட்டான். சின்ன வயசிலே நாகலாபுரத்து நாடார் ஒருத்தர் கடையில் சம்பளத்துக்கு இருக்க மெட்ராசுக்குப் போய் வந்த பையன். மாரியம் மாளோட நாலு பவுன் நகையை வித்து மாவில்பட்டியிலேயே ஒரு கடையையும் வைத்துக் கொடுத்துவிட்டான்.
இத்தனைக்குப் பிறகும், கோவில் கொடைக்கு மச்சான் வந்திருக்காகன்னு தெரிஞ்சதும் உடனே பாக்கணுமின்னு ஓடியாந்துட்டா. அவுக எப்படி இருக்காக? அந்த அக்கா எப்படி இருக்காக? மச்சானும் அந்த அக்காளும் நல்லா பிரியமா இருக்காகளான்னு பாக்கணும் அவளுக்கு.
ஆனா, வந்த உடனேயே மச்சானையும் அந்த அக்கா ளையும் பார்க்கக் கிளம்பிவிடவில்லை. மத்தியான நேரம், சாப்புட்டு சித்த கண்ணசந்திருப்பாக என்று இருந்துவிட்டு சாயந்தி ரமாகப் போனாள்.
கட்டிலில் படுத்தவாக்கில் பாட்டையாவுடன் பேசிக் கொண்டிருந்தான் மச்சான்.
“குடும்புடுறேன் மச்சான்”
என்று மனசு படபடக்கச் சொல்லிவிட்டு உள்ளே போனாள். தங்கராசின் அப்பத்தாளும் அந்த அக்காளும் அடுப்படியில் வேலையாக இருந்தார்கள். பொன்னாத்தா இவளைப் பிரியத்துடன் வரவேற்றாள். அந்த அக்கா ரொம்ப லட்சணமாக இருந்தார்கள். நகைநட்டு ரொம்ப போட்ருப் பாகன்னு பாத்தா அப்படி ஒண்ணும் காணம். கழட்டி வச்சிருப்பாக என்று நினைத்துக்கொண்டாள். ரொம்ப பிரியம் நிறைந்த பார்வையுடன் அந்த அக்காளுடன் வாஞ்சையோடு பேசினாள் மாரியம்மா.
‘பேசிக்கிட்டிருங்க, இந்தா வாரே’ன்னு பொன்னாத்தா கடைக்கு ஏதோ வாங்கப் போகவும் மாரியம்மா அந்த அக்காளிடம் இன்னும் நெருங்கி கிட்ட உட்கார்ந்து கொண்டு கைகளைப் பாசத்துடன் பற்றிக் கொண்டாள். ரகசியமான, அதே சமயம் ரொம்பப் பிரியம் பொங்கிய குரலில், ‘‘யக்கா… மாசமாயிருக்கிகளா” என்று ஆர்வத்துடன் கேட்டாள்.
பட்டென்று அந்த அக்கா ஒரு நெடிப்புடன்,
“ஆம, அது ஒண்ணுக்குத்தான் கேடு இப்பம்”
என்று சொல்லிவிட்டாள். மாரியம்மாளுக்குத் தாங்க முடிய வில்லை. அதைச் சொல்லும்போது லேசான சிரிப்புடன்தான் அந்த அக்கா சொன்னாலும் அந்த வார்த்தைகளில் ஏறியிருந்த வெறுப்பும் சூடும் அவளால் தாங்க முடியாததாக, இதுநாள் வரையிலும் அவள் கண்டிராததாக இருந்தது. ஒரு ஏனத்தைக் கழுவுகிற சாக்கில் வீட்டின் பின்புறம் போய் உடைந்து வருகிற மனசை அடக்கிக் கொண்டாள். உள்ளே மச்சான் அவுக பேச்சுக்குரல் கேட்டது.
“மாரியம்மா போயிட்டாளா” என்று உள்ளே வந்த மச்சான் அந்த அக்காளிடம்” ‘‘காப்பி குடிச்சிட்டியா ஜானு” என்று பிரியமாகக் கேட்டதும் படக்குனு அந்த அக்கா,
“ஆஹாகாகா… ரொம்பவும் அக்கறைப்பட்டுக் குப்புற விழுந்துறாதிக…” என்று சொல்லிவிட்டது.
ரொம்ப மெதுவான தொண்டையிலே பேசினாலும் அந்தக் குரல் இறுகிப்போய் வெறுப்பில் வெந்து கொதிக்கிறதாய் இருந்தது.
வெளியே நின்றிருந்த மாரியம்மாளுக்கு தலையை வலிக்கிற மாதிரியும் காய்ச்சல் வர்ற மாதிரியும் படபடன்னு வந்து. கழுவின ஏனத்தை அப்படியே வைத்துவிட்டு பின்புறமாகவே விறுவிறுவென்று வீட்டுக்கு வந்து படுத்துக்கொண்டாள்.
ஆத்தாளும் அண்ணனும் கேட்டதுக்கு ‘மண்டையடிக்கி’ என்று சொல்லிவிட்டாள்.
சிறு வயசில் கள்ளிப்பழம் பிடுங்கப் போய் நேரங்கழித்து வரும்போது வழியில் தேடி வந்த மாமாவிடம் மாட்டிக் கொண்டு முழித்த தங்கராசின் பாவமான முகம் நினைப்பில் வந்து உறுத்தியது. தண்ணியைத் தண்ணியைக் குடித்தும் அடங்காமல் நெஞ்சு எரிகிற மாதிரியிருந்தது. அந்த அக்காளின் வீட்டில் நகைநட்டு குறையாகப் போட்டதுக்காக தங்கராசின் அம்மா ரொம்ப கொடுமைப்படுத்துகிறாளாம் என்று சீனியம்மா சொன்னதும், அந்த அக்காள் கொடும் வெறுப்பாகப் பேசினதும் நினைப்பில் வந்து இம்சைப் படுத்தியது.
எல்லாத்துக்கும் மேலே அந்த வார்த்தைகளது வெறுப்பின் ஆழம், தாங்க முடியாத வேதனையைத் தந்தது. ராத்திரி ஊரோடு கோயில் வாசலில் பொங்கல் வைக்கப் போயிருந்தபோது இவ மட்டும் படுத்தே கிடந்தாள். ஒவ்வொன்றாக சிறுவயதில் அவனோடு பழகினது… அய்யாவைப் பத்தி… ஆத்தாளைப் பத்தி… அண்ணனைப் பத்தி… எல்லோரும் படுகிற பாட்டைப் பத்தி… அந்த அக்காளைப் பத்தி நினைக்கக்கூட பெருந்துன்பமாயிருந்தது. குமுறிக்கொண்டு வந்தது மனசு.
ராத்திரி நேரங்கழித்து அவ புருஷன் வந்தான். ரெண்டு நாளாய் நல்ல யேவாரம் என்றும் தேங்காய் மட்டுமே முப்பத்திரெண்டு காய் வித்திருக்கு என்றும் பொரிகடலைதான் கடைசியில் கேட்டவுகளுக்கு இல்லையென்று சொல்ல வேண்டியதாப் போச்சு என்றும் உற்சாகமாக ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தான். திடீரென்று இவள் ஏதுமே பேசாமல் ஊமையாக இருப்பதைக் கண்டு எரிச்சலடைந்து, ‘‘ஏ நாயி, நாம் பாட்டுக்கு கத்திக்கிட்டிருக்கேன். நீ என்ன கல்லுக்கணக்கா இருக்கே”
என்று முடியைப் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கினான்.
உடனே அணை உடைத்துக் கொண்டதுபோல ஏங்கி அழ ஆரம்பித்தாள். அவன் பதறிப்போய் தெரியாமல் தலையைப் பிடித்துவிட்டேன் என்று சொல்லி, தப்புத்தான் தப்புத்தான் என்று திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்தான். அவள் அழுகை நிற்கவில்லை. மேலும் மேலும் ஏக்கமும் பெருமூச்சம் வெடிப்பும் நடுக்கமுமாய் அழுகை பெருகிக் கொண்டு வந்தது.
ஏதோ தான் பேசிவிட்டதற்காகத்தான் அவள் இப்படி அழுகிறாள் என்று நினைத்துக்கொண்டு ரொம்ப நேரத்துக்கு அவளை வீணே தேற்றிக் கொண்டிருந்தான் அவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.