குமாரபுரம் ஸ்டேஷன்
– கு.அழகிரிசாமி
குமாரபுரம் என்பது ஒரு காட்டு ஸ்டேஷன். அரை மைல் சுற்றளவுக்கு எந்த ஊரும் கிடையாது. ஆனாலும், ஸ்டேஷன் என்று கட்டிவிட்டால் பெயர் வைக்காமல் முடியுமா? இடுகுறிப் பெயரையாவது வைத்துவிடத்தானே வேண்டும்? அந்தக் கணக்கில்தான் குமாரபுரம் என்ற பெயரை வைத்திருக்கிறார்களே ஒழிய, மற்றபடி கிழக்கே ஒரு மைலுக்கு அப்பால் உள்ள குமாரபுரம் என்ற கிராமம் முக்கால் நூற்றாண்டாக ஸ்டேஷனைப் பகிஷ்காரம் செய்துகொண்டுதானிருக்கிறது. தாது வருஷப் பஞ்சத்தின்போது ஜனங்களுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கத்துடன் திருச்சியிலிருந்து திருநெல்வேலி வரையிலும் ரயில் பாதை போடப்பட்டதாகச் சொல்லுவார்கள். அந்தப் பாதையில் கோவில்பட்டிக்குத் தெற்கே ஏழாவது மைலில் இருக்கிறது இந்த ஸ்டேஷன். சுற்றுக் கிராமவாசிகள் வாழ்நாளில் ஒரு முறையோ, இரு முறையோதான் கோவில், குளம் என்று யாத்திரை கிளம்புவார்கள். பத்து மைல் தூரத்தில் ஒரு மாரியம்மன் கோவில் இருக்கும். அதற்குப் போய்ப் பொங்கலிட்டுவிட்டு வருவது வழக்கம். இந்த க்ஷேத்திராடனத்துக்கு ரயிலும் வேண்டாம்; மோட்டாரும் வேண்டாம்.
பெரும்பாலான சமயங்களில் அவர்கள் போகவேண்டிய ஊர் ஸ்டேஷனை விடவும் அருகில் இருக்கும். நேரே ஊருக்கு நடந்து போகாமல் ஸ்டேஷனுக்கு வந்து யாரும் ரயில் ஏறுவார்களா? இந்த ஸ்டேஷனின் வரலாற்றில் முதன்முதலாக வந்து இறங்கிய முக்கியஸ்தர் சுப்பராம ஐயர் என்றுதான் சொல்ல வேண்டும். கோவில்பட்டியிலிருந்து அவர் மூன்றுநாட்களுக்கு முன் வந்திருந்தார். புதிதாகமாற்றுதலாகி வந்திருக்கும் ஸ்டேஷன்மாஸ்டருக்கு அவர் பால்ய நண்பர். சிறிது காலம்வரை பள்ளித்தோழர். சற்று எட்டியஉறவும்கூட. ஸ்டேஷன் மாஸ்டர் தன் நண்பருக்குஇந்தக் காட்டு ஸ்டேஷனில் வரவேற்பு அளித்து விருந்துபசாரம் செய்ய இப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அவருடைய பிள்ளைக்கு ஆறாம் ஆண்டு நிறைவுவந்தது. அதை ஒரு சாக்காக வைத்து நண்பரை அழைத்தார். சுப்பராம ஐயரும் அமைதியான சூழ்நிலையில் நண்பரோடு நிம்மதியாகப் பொழுது போக்கலாம் என்று வந்து சேர்ந்தார். ஆண்டு நிறைவு வைபவத்துக்கு வந்த ஒரே விருந்தினர் சுப்பராம ஐயர்தான். பால்ய நண்பர்கள் இருவரும் தத்தம் வாழ்க்கை வரலாறுகளையும், ஊர்விட்டு ஊர் மாற்றுதலாகிப்போன கதைகளையும், குடும்பச் செய்திகளையும் பற்றி விஸ்தாரமாக இரவெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள். கோவில்பட்டியில் வசதிகள் எப்படி என்று ஸ்டேஷன் மாஸ்டர் கேட்டார். குமாரபுரம் ஸ்டேஷனில் எப்படி நாட்களைத் தள்ள முடிகிறது என்று சுப்பராம ஐயர் கேட்டார்…
ஒரு நாள் கழித்து மறுநாள் ஸ்டேஷன் மாஸ்டர் அடிக்கொரு தடவை தம் வேலையைக் கவனிப்பதற்காக அவரிடம் விடைபெற்றுப் போய்க் கொண்டிருந்தார். முற்பகலில் ஸ்டேஷன் மாஸ்டர் இல்லாத சமயங்களில், அவருடைய பையனோடு உட்கார்ந்து தமாஷாகப் பேசிக் கொண்டிருந்தார் சுப்பராம ஐயர். பையன்களோடு விளையாடுவதோ பையன்களின் கூட்டுறவால் குதூகலம் அடைவதோ அவருக்கு வழக்கமில்லை. அவருடைய தொழில்தான் அதற்குக் காரணமோ என்னவோ! இருந்தாலும் பேச்சுத்துணைக்கு அங்கே அந்தச் சிறுவன்தானே இருக்கிறான்? அவனோடு ஒரு தினுசாக மத்தியானம்வரை பொழுதைக் கழித்தார். சாப்பாட்டுக்குப் பிறகு இரண்டு மணி நேரம் படுத்துத் தூங்கினார். மூன்று மூன்றரைக்கெல்லாம் எழுந்து, தாம் கையோடு கொண்டுவந்திருந்த ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஸ்டேஷனுக்கு வந்துவிட்டார். பிளாட்பாரத்தில் ஐந்தாறு வேப்ப மரங்கள் இருந்தன. கோடைக்காலமானதால் நன்றாகப் பூத்துத் தரையில் படிக்கணக்கில் பூக்களை உதிர்த்திருந்தன. அடர்த்தியாகத் தளிர்த்திருந்த அந்த மரங்களிலிருந்து குளிர்ந்த காற்று சிறிது மலர் மணத்தோடு ஸ்டேஷனை நோக்கி வீசிக் கொண்டிருந்தது. அதனால் ஸ்டேஷன் கட்டடத்தில் காற்றுவரும் பக்கத்தில் ஒரு பெஞ்சில் உட்கார்ந்துகொண்டு புத்தகத்தை விரித்துப் படிக்க ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் தெற்கேயிருந்து வந்து ஒரு எக்ஸ்பிரஸ் வண்டி வழக்கம்போல் அந்த ஸ்டேஷனில் நிற்காமல் போய்விட்டது.
இனி மாலை ஆறு மணிக்குமேல்தான் அங்கே வண்டிகள் வரும். ஆகவே ஸ்டேஷன் மாஸ்டர் நண்பரின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். புத்தகத்தை மூடிக் கீழே வைத்த சுப்பராம ஐயர், ‘இந்த ஸ்டேஷனுக்குப் பிரயாணிகளும் வருவதுண்டல்லவா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார். “வராமல் என்ன? நேற்றுக்கூட ஒரு பிரயாணி வந்து இறங்கினாரே?” என்றார் ஸ்டேஷன் மாஸ்டர். சுப்பராம ஐயர் உரக்கச் சிரித்தார். நேற்று வந்து இறங்கிய பிரயாணி அவரேதான். “இப்படி இன்னும் பத்து ஸ்டேஷன்கள் இருந்தால் போதும், இரயில்வே பட்ஜெட்டில் வருஷம் தவறினாலும் துண்டு விழுவது தவறாது” என்று அவரோகணச் சிரிப்போடு சொல்லிப் பேச்சையும் சிரிப்பையும் ஏககாலத்தில் நிறுத்தினார் சுப்பராம ஐயர். “அப்படியும் சொல்லிவிடுவதற்கில்லை. நாளை திங்கட்கிழமை. கோவில்பட்டியில்சந்தை. பத்து டிக்கெட்டுகளுக்காவது ஆள் வந்து சேரும்.” “அப்படியானால் நாளை ஸ்டேஷனுக்கு இரண்டு ரூபாய் வரும்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்!” இருவரும் சிரித்தார்கள். அப்போது போர்ட்டர் கருப்பையா வந்து ஒரு மூலையில் நின்று, இவர்கள் பேசுவதை ரஸித்துக் கேட்டுக் கொண்டிருந்தான். “எதற்காகத்தான் இந்த ஸ்டேஷனைக் கட்டிப் போட்டானோ? இது இல்லையென்று எவன் அழுதான்?” “இந்த ஸ்டேஷன் சுற்றுக் கிராமவாசிகளுக்கு வேறொரு வகையில் மிகவும்பிரயோஜனப்பட்டு வருகிறது. இப்படியும் ஸ்டேஷனால் ஒரு நன்மை இருக்கமுடியும் என்பதை இங்கு மாற்றுதலாகி வந்த பிறகுதான் பார்த்தேன்.
”சுப்பராம ஐயர் ஒன்றும் சொல்லாமல் கேட்டுக்கொண்டிருந்தார். ஸ்டேஷன்மாஸ்டர் தொடர்ந்து சொன்னார். “இது கோடை காலமாக இருப்பதனால்தான் சுற்றிலும் உள்ள இந்தப் புன்செய் நிலங்கள் இப்படிப் பயிர் பச்சையில்லாமல் வறண்டு கிடக்கின்றன. மற்ற சமயங்களில் இப்படி இராது. நவதானியங்களும் விளையும் செழுமையான பூமிதான். நிலத்தில் வேலை செய்பவர்கள் குடிதண்ணீர் பிடிப்பதற்கு மண் கலயங்களோடு இங்கே வருவார்கள். இருபது கலயம் தண்ணீராவது தினமும் தேவைப்படும். அந்த வகையில் இந்த ஸ்டேஷன் பிரயோஜனப்பட்டு வருகிறது.”“அப்படியானால் தண்ணீர்ப் பந்தல் கட்ட வேண்டிய இடத்தில் ஸ்டேஷனைக் கட்டியிருக்கிறான் என்று சொல்லுங்கள்!”ஸ்டேஷன் மாஸ்டர் இப்போது தமாஷை நிறுத்தி விட்டு மனப்பூர்வமாகவே பேச ஆரம்பித்தார்.“இப்படித்தான் ஒன்று இருக்க வேண்டிய இடத்தில் மற்றொன்றைக் கொண்டுபோய்க் கட்டுகிறான் மனிதன். ஒரு காரியத்துக்கென்று உண்டாக்கப்பட்டது, மற்றொரு காரியத்துக்குப் பிரயோஜனப்படுகிறது. நியாயமாகச் செய்த செலவு தண்டச்செலவாக மாறிக்கொண்டு வருகிறது. உலகமே அப்படி இருக்கும்போது இந்தக் குமாரபுரம் ஸ்டேஷனை மட்டும் பழித்துப் பேசுவானேன்? ”சுப்பராம ஐயர் பரிகாசமாகச் சிரித்துக்கொண்டு, ‘உலகத்தையே உங்கள் ஸ்டேஷன் ஜன்னல் வழியாகப் பார்க்கிறீர்கள்! ஆறு மாதங்களுக்குள் இந்தக் கல்கட்டடத்தின்மேல் உங்களுக்கு இவ்வளவு பாசம் ஏற்பட்டுவிட்டது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது’ என்றார். ஸ்டேஷன் மாஸ்டர் சற்று ஆவேசமாகவே பேச ஆரம்பித்தார்: “கோவில்பட்டியில் பள்ளிக்கூடம் கட்டியிருக்கிறானே, எதற்காகக் கட்டியிருக்கிறான்? சொல்லுங்கள். பார்ப்போம்!” “எதற்காகப் பள்ளிக்கூடம் கட்டுவான்? நூறு குழந்தைகள் படிப்பதற்காகத்தான் கட்டுவான்!” “சரி, ஒப்புக்கொள்ளுகிறேன்! நூறு குழந்தைகளும் எதற்காகப் படிக்கிறார்கள்?” என்று கேட்டார் ஸ்டேஷன்மாஸ்டர்.
“இப்படியெல்லாம் கேள்வி போடுகிறீர்கள்?” “காரியமாகத்தான் உங்களைக் கேட்கிறேன். பதில் சொல்லுங்கள்.” “….” “பிள்ளைகள் அறிவு வளர்ச்சிக்காகப் படிக்கிறார்கள் என்றுதானே சொல்கிறீர்கள்?” “நீங்கள் வேறு என்ன காரணத்தைச் சொல்லப் போகிறீர்கள்?” “எந்தப் பைத்தியக்காரனும் அறிவு வளர்ச்சிக்காகப் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில்லை. நீங்களும் நானும் அறிவு வளர்ச்சிக்காகவா படித்தோம்? படிக்காதவனுக்கும் உத்தியோகம் உண்டு என்று சட்டம் செய்யட்டும், எவனாவது மழைக்குக்கூடப் பள்ளிக்கூடத்தில் வந்து ஒதுங்குகிறானா என்று பார்க்கிறேன்” என்று சவால் விட்டார் ஸ்டேஷன் மாஸ்டர். சுப்பராம ஐயர் சிரிக்கும்போது போர்ட்டரும் சேர்ந்து சிரித்தான். அவனை வைத்துக்கொண்டு தமாஷ் பேச்சுப் பேசுவது மரியாதை இல்லை என்று நினைத்தோ என்னவோ, சுப்பராம ஐயர் மேற்கொண்டு எதுவும் பேசாமல் புத்தகத்தைக் கையில் எடுத்துக்கொண்டார். “என்ன, பேசாமல் இருக்கிறீர்கள்?” என்று கிண்டினார் ஸ்டேஷன் மாஸ்டர். “உங்களிடத்தில் பேசி ஜெயிக்கவா? குமாரபுரம் ஸ்டேஷன் சந்திர சூரியர்கள் உள்ளவரை நிலைத்திருக்கட்டும், எனக்கு ஒரு நஷ்டமும் இல்லை” என்று சொல்லிவிட்டு ஐயர், ஏதோ ஒரு பக்கத்தைத் தேடியவராய்ப் புத்தகத்தைப் புரட்டினார். ஸ்டேஷன் மாஸ்டர் போர்ட்டரை அழைத்து, “வீட்டுக்குப் போய்க் காபி போடச்சொல், கருப்பையா” என்று சொல்லி அனுப்பினார்.
“நாமும் போகலாமே” என்றார் ஐயர். சிறிது நேரத்தில், இருவரும் எழுந்து ஸ்டேஷனை அடுத்திருந்த வீட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். மூன்றாம் நாள் காலையில் எட்டு மணிக்கெல்லாம் வடக்கே போகும் பாஸஞ்சர் வண்டி ஒன்று இருந்தது. அன்று திங்கட்கிழமை. கோவில்பட்டிச் சந்தைக்குச் செல்லும் பிரயாணிகள் நாலைந்து பேர் ஏழு மணிக்கு முன்னதாகவே சாக்குப் பைகள் சகிதம் ஸ்டேஷனுக்கு வந்து உட்கார்ந்து வெற்றிலை, பாக்குப் போட்டவண்ணம் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். ஏழேகால் மணிக்கெல்லாம், சுப்பராம ஐயரும் பலகாரம் சாப்பிட்டு வந்து பிளாட்பாரத்தில் உள்ள வேப்பமரங்களில் கீழே கிடக்கும் ஒரு பெஞ்சியில் உட்கார்ந்து முந்தியநாள் கையில் வைத்துக்கொண்டிருந்த புத்தகத்தை எடுத்து, விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தார். ஆனால் நாட்டுப்புறப் பிரயாணிகளின் சுபாவமான உரத்த சம்பாஷணைகளால் அவரால் நிம்மதியாகப் படிக்க முடியவில்லை. சுகந்தமான வேப்பங்காற்றும் அவருடைய கவனத்தை திருப்பிக் கொண்டிருந்தது. “இந்தப் பாலைவனத்திலும் இப்பேர்பட்ட ஒரு நறுமணம்! இந்த மாதிரியான ஓர் இளங்காற்று! பார்த்தால் ஒரே கருப்பு மண்ணாக இருக்கிறது. இங்கே இப்படிச் சில மரங்கள்முளைத்து, இப்படி ஒரு திவ்யமான வாசனையைக் காற்றில் கலந்துகொண்டிருக்கிறது. இந்த வாசனை கூட இந்த மண்ணில்தான் உற்பத்தியாகியிருக்கிறது. ”அவர் கண்கள் தூரத்தில் தெரியும் கிராமங்களை ஏறிட்டு நோக்கின.“
இந்த ஊர்களில் வசிக்கும் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் இந்த மண்ணை நம்பித்தான் வாழ்கிறார்கள். இந்தக் கரிசல் மண்ணிலிருந்து மணமும் கிடைக்கிறது; உயிரும் கிடைக்கிறது. ”அவருடைய சிந்தனைகளெல்லாம், அவர் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் வசனங்களைப்போல் சுவை பெற்றிருந்தன. தொடர்ந்து படிப்பது போலவே எதிர்பாராத சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தன. அப்போது மேற்கே சுமார் அரைமைல் தூரத்தில் நாலைந்து பேர் அவசரம் அவசரமாக ஸ்டேஷனை நோக்கி ஓட்டமும் நடையுமாக வந்துகொண்டிருப்பது தெரிந்தது. ‘வண்டிக்கு நேரம் இருக்கிறது. இப்படி வேர்க்க விறுவிறுக்க ஓடிவருவானேன்?’ என்று ஐயர் நினைத்தார். அதைவிட அப்பாவித்தனமாக இருந்தது, சிலர் ஒருமணி நேரத்துக்கு முன்னதாகவே வந்து ஸ்டேஷனில் காத்துக்கொண்டிருந்தது. “சூதுவாதில்லாத ஜனங்கள்” என்று ஒருமுறை அவர் தமக்குத் தாமே சொல்லிக்கொண்டார். வேப்பங்காற்று இருக்க இருக்கச் சுகம் ஏற்றிக்கொண்டிருந்தது. இந்தக் காற்றுக்காகவே அங்கே கோடைகாலத்தைக் கழித்துவிடலாம் போல் அவருக்குத் தோன்றியது. இந்த அடிப்படையில், சுற்றிலும் உள்ள மண்ணிலும், புல்லிலும், புல் நடுவே பூத்துக் குலுங்கும் காட்டு மலர்களிலும், சாம்பல் நிறக் கற்றாழைகளிலும் அவருக்கு ஒரு அன்பும் அனுதாபமும் பிறந்தன. சிறிது நேரத்தில் ரயில் ஏறிவிடப் போகிறோம் என்ற நினைப்பில் அந்த அன்பும், அனுதாபமும் சற்று அழுத்தம் பெறவும் செய்தன.
மனிதர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்கள்! மனிதர்களாகவும் வாழ்கிறார்கள்!’இரண்டு மூன்று பேர் பிளாட்பாரத்துக்கு வந்து, கைகாட்டி மரத்தை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, அங்கேயே ஒரு பக்கத்தில் ஒதுங்கி நின்றார்கள். எப்போதோ மாடு வாங்கிய செய்தியை ஓர் ஆசாமி கதையாகச் சொல்ல, மற்றவர்கள் கவனமாக “உம்” போட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சுப்பராம ஐயர் அவர்கள் பேச்சை உற்றுக்கேட்டார். அந்தப் பேச்சில் உண்மை மட்டுமல்ல, அர்த்தமும் சுவாரஸ்யமுமே இருப்பது போல் அவருக்குத் தோன்றியது. அவர்களை அழைத்து வைத்துக் கொண்டு அவர்களுடைய வாழ்க்கை வரலாறுகளையெல்லாம் ஆதியோடு அந்தமாகக் கேட்டுத் தெரிந்துகொள்ளக்கூடஅவர் ஆசைப்பட்டார்! அரை மைல் தூரத்தில் வெள்ளை வேஷ்டிகளாகக் காட்சியளித்துக் கொண்டு ஓடிவந்தவர்கள், நான்கு சிறுவர்களும் ஒரு பெரியவருமாக இனம் காட்டிக்கொண்டு ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தார்கள். வந்ததும் வராததுமாக, “டிக்கெட் குடுத்தாச்சா?” என்று கேட்டார் ஓடி வந்த பெரியவர். பேசிக்கொண்டு நின்றவர்களில் ஒருவர், “இல்லை, இல்லை” என்றார். எல்லோரும் ஒரு மூச்சு விட்டுக்கொண்டார்கள். அந்த நான்கு சிறுவர்களின் கண்களும் ஏககாலத்தில் வேப்பமரத்தடியில் பெஞ்சியில் உட்கார்ந்துகொண்டிருந்த சுப்பராம ஐயரைத்தான் பார்த்தன. பார்த்த மாத்திரத்தில் மிகுந்த மரியாதை கொடுத்து, மூச்சு விடுவதைக்கூடக் கொஞ்சம் மட்டுப்படுத்தினார்கள். இப்படிப்பட்ட ஒருவரை அவர்கள் வருஷத்தில் ஒரு தடவை காண்பதே அபூர்வம். அவர்களுடைய பள்ளிக்கூடத்துக்கு எப்போதாவது வரும், பெரிய இன்ஸ்பெக்டரைப் போல் காலில் பூட்ஸ் போட்டுக்கொண்டு குளோஸ் கோட்டும் ஜரிகை அங்கவஸ்திரமுமாகக் காட்சி அளித்தார் ஐயர்.
தலையில் விழுந்திருந்த வழுக்கையும் அவருடைய கௌரவத்தை உயர்த்திக் காட்டியது. இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டு நின்ற சிறுவர்களை ஐயரும் பார்த்துக்கொண்டார். நான்கு சிறுவர்களும் ஏறக்குறைய ஒரே பிராயமுடையவர்களாக இருந்தார்கள். பன்னிரண்டிலிருந்து பதினைந்து வயது வரையிலும் மதிக்கலாம். ஒவ்வொருவனுடைய கையிலும் இரண்டொரு புத்தகங்களும், சில வெள்ளைக் காகிதங்களும் இருந்தன. சட்டைப்பைகளில் சீவித் தயாராக வைத்திருந்த பென்ஸில்கள், பள்ளி மாணவர்கள் என்பதைச் சொல்லாமலே தெரிவித்தன. சிறுவர்களோ, ஐயரோ பரஸ்பரம் பார்த்துக்கொண்டிருந்தாலும் பேசுவதற்கு முயற்சி செய்யவில்லை. இந்தச் சமயத்தில் கை இறக்கப்பட்டது. ஸ்டேஷன் மாஸ்டரும் ஐயரிடம் டிக்கெட்டோடு வந்தார். “இந்த இடம் உங்களுக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது போலிருக்கிறதே; இங்கேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்!” “நல்ல காற்று!” என்றார் ஐயர். டிக்கெட்டையும் வாங்கிக் கொண்டார். “அப்படியானால் அடுத்த லீவுக்கு வந்துவிடுங்கள். இந்த மாதிரி மூன்று நாட்களில் புறப்பட்டுவிடாமல் சேர்ந்தார்போல், ஒரு பத்து நாட்களாவது இருந்துவிட்டுப் போகலாம்…” “அப்படியே செய்யலாம்! பத்து நாட்கள்தானே? ராமன் பதினாலு வருஷம் வனவாசம் செய்திருக்கிறபோது நாம் பத்து நாட்கள் இங்கே இருக்க முடியாமலா போய்விடப் போகிறது?” “அந்த வனவாசத்தில்தான், ராமன் தன் உயிர்த்துணைவர்களையெல்லாம் சம்பாதித்துக் கொண்டான். அவனை ராமனாக்கியதே அந்த வனவாசம்தான்” என்று சொன்னார் ஸ்டேஷன் மாஸ்டர். “பள்ளிக்கூடத்தைவிட்ட பிறகு புராணங்களையெல்லாம் நன்றாக ஆராய்ச்சி செய்திருக்கிறீர்கள் போலிருக்கிறது!” என்று சுப்பராமையர் தமாஷாகச் சொன்னார். ஆனாலும் நண்பரின் வார்த்தைகளில் ஏதோ ஒரு சுகமும் உண்மையும் இருப்பதுபோலவே அவருக்குத் தோன்றியது.
மேற்கொண்டு சாவகாசமாகப் பேசச் சந்தர்ப்பம் இல்லை. வண்டி வரும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்ததால், காரியார்த்தமாக ஸ்டேஷனுக்குள் போய்விட்டார் ஸ்டேஷன் மாஸ்டர். சிறுவர்களை நிறுத்திவிட்டுப் பெரியவர் போய் டிக்கெட் வாங்கிக்கொண்டு வந்தார். எல்லாப் பிரயாணிகளுமே டிக்கெட்டோடு பிளாட்பாரத்துக்கு வந்து தயாராக நின்றார்கள். உரிய காலத்தில் வண்டியும் வந்துவிட்டது. ஐயர் ஏறிய பெட்டியிலேயே கிராமத்துப் பெரியவரும், அவரோடு வந்த சிறுவர்களும் ஒருவருக்குப் பின் ஒருவராக ஏறினார்கள். வண்டியில் நிறையக் காலியிடம் இருந்தது. ஒரு ஜன்னலோரத்தில் போய் உட்கார்ந்தார் ஐயர். அவருக்கு எதிர்வரிசைப் பெஞ்சியில் நிறைய இடம் இருந்தபடியால் சிறுவர்கள் அங்கேயே உட்கார்ந்துவிட்டார்கள். பெரியவர் ஐயருக்கு வலது கைப்பக்கத்தில் வந்து அமர்ந்தார். பெரியவருக்கு வலதுபுறத்தில் பூதாகாரமான ஆகிருதி படைத்த ஒருவர் ஏராளமான சாமான்களோடு உட்கார்ந்திருந்தார். அவருக்கு எதிரே ஜன்னலை ஒட்டி, அவருடைய கனத்தில் முக்கால்வாசியாவது இருக்கும், ஒரு அம்மாள் இருந்தாள். அம்மாளின் பக்கத்திலும் என்னென்னவோ மூட்டை முடிச்சுக்கள், பண்டபாத்திரங்கள்…குமாரபுரம் ஸ்டேஷனைவிட்டு வண்டி நகர்ந்துவிட்டது. பையன்கள் இரண்டு பக்கத்து ஜன்னல்கள் வழியாகவும், மரம் மட்டைகள் எதிர்த் திசையில் ஓடத் தொடங்கியதை ரஸித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முகத்தில் தோன்றிய ஆச்சரியத்தையும், அங்கே தாண்டவமாடிய ஆனந்தத்தையும் பார்த்த சுப்பராம ஐயருக்கு, அந்தப் பையன்கள் வாழ்க்கையிலேயே அன்றுதான் முதல்முதலாக ரயில் பிரயாணம் செய்கிறார்களோ என்று நினைக்கத் தோன்றியது. அவர்களோடு ஏதாவது பேசவேண்டுமென்று ஆசை; அப்படியெல்லாம் அவரைப் போன்றவர்களால் சுலபமாகப் பேசிவிட முடிகிறதா? அவருக்கு அது கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது.
சில நிமிஷங்கள் கழிந்தபின், பையன்களைப் பார்த்து முதலில் பேச ஆரம்பித்தவர், மேற்குப்புற ஜன்னல் பக்கம் இருந்த பூதாகாரமான மனிதர்தான். எடுத்த எடுப்பிலேயே சௌஜன்யமாகப் பேச ஆரம்பித்தார். “ஏண்டா, எங்கே பிரயாணம்?” என்று கேட்டார். அவருடைய குரல் அவருடைய உருவத்தைவிடக் கனமாக இருந்தது. பையன்களுக்கு அதற்குப் பதில் சொல்லவே தோன்றவில்லை. அவர்கள் சார்பில் பெரியவர்தான் பேசினார்: “கோவில்பட்டிக்குப் பெரிய பள்ளிக்கூடத்திலே சேரப்போறாக. ”பையன்கள் அவரை மேலும் கீழும் பார்த்தார்கள். அவருடைய வைரக் கடுக்கன், வைர மோதிரம், தங்கப்பொத்தான்கள், உள்ளங்கை அகலக் கைக்கடிகாரம் இத்தனையும் மாறிமாறி அவர்களுடைய கவனத்தைக் கவர்ந்து கொண்டிருந்தன. “எந்தக் கிளாஸில் சேரப் போறாங்க?” “நம்ம ஊரிலே ஆறு பாஸ் பண்ணியிருக்கிறாக. அங்கே ஏழிலே கொண்டுபோய்ச் சேர்க்கணும்.” “எந்த ஊர்ப் பையன்கள்?” “இடைசெவல் கிராமம்.” “இடைசெவலா? அங்கே ஏழாம் வகுப்பு இல்லையோ?” “இல்லை; ‘சர்க்கார் சாங்ஸ்’னுக்கு எழுதிப் போட்டிருக்காக.” “பாஸ் பண்ணினதுக்குச் சர்டிபிகேட் இருக்கா?” “இருக்கு,”“இருந்தாலும் பரீக்ஷை வெச்சுத்தான் சேர்ப்பாங்க,” “அதுக்காகத்தான் பெரிய வாத்தியாரு ஒரு மாசமா வீட்டிலே வச்சிப் பாடம் சொல்லிக் குடுத்தாரு” என்றார் பெரியவர்.பூதாகாரமான ஆசாமி ஒரு பையனைப் பார்த்து, “டேய், நான் மூணு கேள்வி கேட்க்கிறேன். நீ பதில் சொல்லிட்டா உன்னை ஏழிலே எடுத்துக்குவான்’ என்றார், உடனடியாக, ‘வாட்டீஸ் யுவர் நேம்?” என்று கேட்டார். “மை நேம் இஸ் ஸ்ரீநிவாசன்” என்றான் ஒரு பையன்.
“வாட்டீஸ் யுவர் பாதர் நேம்?” இது அவருடைய அடுத்த கேள்வி. “மை பாதர் நேம் இஸ் ராமசாமி நாயுடு.” “வாட் கிளாஸ் யூ பாஸ்?” என்று அவர் மூன்றாவது கேள்வியைக் கேட்டார். அவர் தப்பும் தவறுமாக ஆங்கிலம் பேசுவதைப் பார்த்துச் சுப்பராமையர் வாய்க்குள்ளேயே சிரித்தார். “ஸிக்ஸ்த் கிளாஸ்” என்று அடக்கமாகப் பதில் சொன்னான் ஸ்ரீநிவாசன். “போதும்டா! கெட்டிக்காரப் பையனா இருக்கே. இப்படித்தான் ‘டக் டக்’னு பதில் சொல்லணும். நிச்சயம் நீ ஏழாம் வகுப்புத்தான். ”பையனுக்கு ஒரே சந்தோஷம்.பெரியவர், அந்த ஆசாமியைப் பார்த்து, “மத்தப் பையன்களையும் ஏதாவது கேளுங்க” என்று கேட்டுக் கொண்டார். “நம்ம இங்கிலீஷ் அவ்வளவுதான்! அதுக்குமேலே எங்க வாத்தியார் கத்துக்குடுக்கல்லே!” என்று சொல்லிவிட்டுத் தொப்பை வயிறு குலுங்கக் ‘கடகட’ வென்று சிரித்தார். எதிரே உட்கார்ந்திருந்த அவருடைய மனைவியும் சுப்பராமையரும் இலேசாகச் சிரித்தார்கள். “நமக்கு எந்த ஊரோ?” என்று அவரை விசாரித்தார் கிராமத்துப் பெரியவர். “திருநெல்வேலி ஜங்ஷனிலே பங்கஜ விலாஸ் காபி கிளப் இருக்கில்லே, அது நம்ப கடைதான். பார்த்திருப்பேளே?” “திருநெல்வேலிக்குச் சின்னப் பிள்ளையிலே ஒரு தரம் வந்தது தான்…” “அது நம்ப கடைதான். இந்தப் பையன்களைப்போல் ஆயிரம் பையன்கள் நம்ப கடையிலே சாப்பிட்டுக்கொண்டு படிச்சிருக்கான்கள். ஜங்ஷனிலே நம்ப கடையை விட்டுக் காலேஜ் பையன்கள் வேறே எங்கேயும் போக மாட்டான்கள். இருபத்தஞ்சு வருஷமாய் பார்த்துண்டு வர்ரேன்.” “நல்ல கடையை விட்டு யார்தான் போவாக!” அவர் பையன்களைப் பார்த்துத் திரும்பி, “டேய் நீங்களும் காலேஜுக்கு வரப்போ நம்ம கடைக்குத்தாண்டா சாப்பாட்டுக்கு வரணும்….” என்றார்.
பையன்களுக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. ஒரு நகரவாசி தங்களிடம் இவ்வளவு அன்பாகப் பேசுவது அவர்களுக்கு ராஜோபசாரமாக இருந்தது. “நமக்குப் பிள்ளைகள் எத்தனையோ?” என்று நாட்டுப்புறப் பாங்கில்விசாரித்தார் பெரியவர். “நம்ம கடையிலே சாப்பிட்டவன்களும், சாப்பிடப்போறவன்களும் நம்ம பிள்ளைகள்தான்” என்றார் அவர்.பெரியவருக்கு அது விளங்கவில்லை. இதை ஹோட்டல்காரர் கவனித்துக்கொண்டார். இருந்தாலும் அவருடைய திகைப்பைப் போக்க முயற்சிசெய்யாமல், “சொந்தப் பிள்ளைகளுக்குப் பணம் வாங்கிண்டா சாப்பாடு போடுவான்னு நீங்க நினைக்கலாம். என்ன செய்யறது! ஹோட்டல்காரன் தர்மம் பண்ணமுடியாது. ஆனால், என்னாலே முடிஞ்ச தர்மத்தைப் பண்ணாமல் இல்லை. எத்தனையோ பேருக்கு ஸ்கூல் பீஸ் கட்டப் பணம் கொடுத்திருக்கிறேன். அதிலே திருப்பி வாங்கினதும் உண்டு; வாங்காததும் உண்டு” என்று திருப்தியோடு சொன்னார். அடுத்த நிமிஷம் மனைவியைப் பார்த்துப் பலகாரங்களை எடுத்து வைக்கச் சொன்னார் அவர் சாப்பிடுவதற்குத்தான். “ரொம்பத் தூரப் பிரயாணமோ?” என்று கிராமத்துப் பெரியவர் கேட்டார். “மதுரை வரைக்கும் போகிறோம். ஒரு கல்யாணம், ”திரும்பவும் அந்தப் பெரியவர், “நமக்கு எத்தனை குழந்தைகளோ?” என்று அதே கேள்வியைக் கேட்டார்.
“நான்தான் சொன்னேன், எல்லாக் குழந்தைகளும் நம்ம குழந்தைகள்தான்னு. பெத்தால்தான் குழந்தையா? இந்த நாலு பையன்களும் என் குழந்தைகள்தான். என்ன சொல்றீங்க?” பெரியவருக்கு ஒருவாறு புரிந்துவிட்டது. அதைக் காட்டிக் கொள்ளும் முறையில், “குழந்தைகள் இல்லை போலிருக்கு! அதுக்கென்ன, ஐயா சொன்னாப்லே உலகத்திலே உள்ள குழந்தைகளெல்லாம் நம்ம குழந்தைகள்தான். இப்போ பாருங்க, இதிலே ஒருத்தன்தான் என் பேரன். மத்த மூணு பேரும் கூடப் படிக்கிற பையன்கள்தான். எல்லாரையும் சொந்தப் பிள்ளைகள் மாதிரி நான்தான் கோவில்பட்டிக்குக் கூட்டிக்கிட்டுப் போகிறேன். அந்தக் கடைசிப் பையன் குடும்பம் கொஞ்சம் ஏழைக்குடும்பம். எப்படிப் படிக்கவைக்கிறதுன்னு அவனோட அப்பன் கொஞ்சம் யோசனை பண்ணினான். பையன்களோட பையனாகப் படிக்கட்டும், இப்போ ஆகிற செலவை நான் தர்றேன், பின்னாலே பார்த்துக்கிடலாம்னு நான்தான் தைரியம் சொல்லிக் கூட்டியாரேன். அவனுக்குப் படிப்பிலே அக்கறை. மேலே படிக்கப் போகணும்னு மூனு நாளாச் சாப்பிடாம அழுதிருக்கான்…” என்று கூறிக்கொண்டே போனார். ஹோட்டல் முதலாளியின் மனைவி பலகாரப் பாத்திரத்தைத் திறந்தாள். அதனுள் இருந்த பக்ஷணங்கள் ஒரு கல்யாணத்துக்கே போதும்போல் இருந்தன. இவர் சொல்லாமலே அந்த அம்மாள் ஒரு பெரிய இலையை ஐந்தாறு துண்டுகளாகக் கிழித்துப் பையன்களுக்கும், பெரியவருக்கும் சேர்த்து என்னென்னவோ பலகாரங்கள் எடுத்து வைத்துக்கொடுத்தாள். பையன்கள் வாங்கிக்கொள்ளத் தயங்கினார்கள்.
“டேய்! வயத்துக்கு வஞ்சகம் பண்ணாதீங்கடா. வாங்கிச் சாப்பிடுங்க” என்றார் ஹோட்டல் முதலாளி. “உம், வாங்கிக்கோங்க” என்று பெரியவரும் சொன்னார். பையன்கள் கை நீட்டி அவற்றை வாங்கிக்கொண்டார்கள். ஹோட்டல்காரர் மற்றொரு இலையைச் சுப்பராமையர் பக்கம் நீட்டினார். அவர் நாசூக்காக, “இப்போதான் காபி சாப்பிட்டேன். வேண்டாம், நீங்க சாப்பிடுங்கோ” என்று சொல்லிவிட்டுக் கோட்டுப் பையிலிருந்து புத்தகத்தை வெளியே எடுத்தார். ஹோட்டல் முதலாளி விடவில்லை. கட்டாயப்படுத்தி ஒரு டம்ளர் காபியைக் குடிக்க வைத்துவிட்டார். எல்லோரும் பலகாரம் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, வண்டி நாலாட்டின் புத்தூர் ஸ்டேஷனில் வந்து நின்று, அதையும் விட்டு புறப்பட்டுவிட்டது. சுப்பராமையர் புத்தகத்தை விரித்துப் படித்துக் கொண்டிருந்தார். பையன்களும் எழுந்து போய்க் கையைக் கழுவிவிட்டு வந்து உட்கார்ந்தார்கள். சுப்பராமையரின் கையிலிருந்த புத்தகத்தின் பெயரை எழுத்துக் கூட்டி, “அன்னா கரோனினா, லியோ டோல்ஸ்டோய்” என்று மெல்லிய குரலில் வாசித்தான் ஒரு பையன். அது ஐயர் காதில் விழுந்தது. “டோல்ஸ்டோய்! அதுவும் சரிதான்! சொல்லிக் கொடுக்காத வரையில் யாருக்கும் டோல்ஸ்டோய் தானே ஒழிய டால்ஸ்டாய் எப்படி ஆகமுடியும்” என்று நினைத்துக் கொண்டார். சிறிது நேரத்தில் சிறுவர்கள் தங்கள் கையிலிருந்த காகிதங்களை விரித்துப்படிக்கத் தொடங்கினார்கள். “என்னடா அது?” என்று கேட்டார் ஹோட்டல்காரர்.
“எங்கள் ஹெட்மாஸ்டர் எழுதிப்போட்டது?” “என்ன எழுதிப் போட்டிருக்கிறார்?” ஒரு பையன் சொன்னான்: “பசுவைப்பற்றி இங்கிலீஷில் ஒரு வியாசம். ‘நரியும் திராக்ஷையும்’ கதை. ‘ஓநாயும் ஆட்டுக்குட்டிகளும்’ கதை. நண்பனுக்கு ஒரு கடிதம்.” “எல்லாம் இங்கிலீஷில்தான். பெரிய வாத்தியார் ரொம்பப் படிச்சவரு. நல்ல மனுஷன். பெத்த தகப்பன் மாதிரி இவுகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்து எழுதிப் போட்டிருக்காரு” என்றார் பெரியவர். “நன்னாப் படிங்கடா. இப்படித்தான் ஏதாவது எழுதச் சொல்லிப் பரீட்சை வைப்பாங்க” என்றார் ஹோட்டல்காரர். புத்தகத்தைப் படிப்பதுபோல் பாவனை செய்து கொண்டு, பேச்சுக்களைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் சுப்பராமையர். ஹோட்டல்காரர் காபியைச் சாப்பிட்டுவிட்டு, “பையன்கள் நன்னாப் படிக்கக்கூடிய பையன்கள்னு தோணுது” என்று பெரியவரிடம் சொன்னார். “பட்டிக்காட்டுப் புள்ளைகளானாலும் படிப்பு நல்ல படிப்புத்தான். வாத்தியாரு அப்படி. அந்த மாதிரி ஒரு தகப்பன்கூடப் புள்ளைக மேலே பிரியமா இருக்கமாட்டான்னு சொல்றேன்!” என்றார் பெரியவர். “அது சரிதான். வாத்தியாரும் ஒரு தகப்பன்தானே?” என்றார் ஹோட்டல்காரர். இதைக் கேட்டதும் சுப்பராமையரின் உடம்பு சிலிர்த்தது. பெரியவர், “அதில் சந்தேகம் வேறேயா? இந்தப் பையன்கள் படிப்பிலே மட்டுமில்லே, வேலையிலும் சூட்டிகைதான்” என்றார். “வேலையா?” “ஆமாம்; வேலை செய்யாம எப்படி? பள்ளிக்கூடம் போக முன்னாலே, மாட்டைப் பத்திக்கிட்டுப்போய் மேய்ப்பாக. பருத்திக்கொட்டை ஆட்டுவாக. இப்படி வீட்டு வேலைகளைச் செஞ்சிட்டுத்தான் பள்ளிக்கூடம் போறது…” “பேஷ்! அப்படித்தான் இருக்கணும்.
பொழைக்கிறவனுக்கு அதுதான் லட்சணம்! அழுக்குப் படாத படிப்பு படிப்பிலே சேத்தியா? அவனாலே ஊருக்குப் பிரயோசனம் உண்டோ? அவனுக்குத்தான் என்ன பிரயோசனமாயிருக்கு? என்னை எடுத்துக்கோங்க… நான் இரண்டாம் கிளாஸுக்கு மேலே படிச்சதில்லே. பி.ஏ., எம்.ஏ., படிச்சிருந்தா உத்தியோகம் பார்த்திருப்பேன். பார்த்திருந்தா, இத்தனை வருஷமாப் பள்ளிப் பிள்ளைகளுக்குப் பண்ணி வந்த உபகாரத்தைப் பண்ணியிருக்க முடியுமா? நாலு பேருக்கு உபகாரமா இருந்தாத்தான் படிப்பிலே சேர்த்தி. ஊர்க்காரனை மெரட்டுற படிப்பு வேண்டவே வேண்டாம். நான் சொல்றது எப்படி?”“அதிலே சந்தேகம் வேறயா?” என்றார் பெரியவர். இப்படியே பேசிக்கொண்டிருந்தார்கள். வண்டி கோவில்பட்டிக்கு வந்துவிட்டது. வாசிப்பதுபோல், விரித்து வைத்துக்கொண்டிருந்த புத்தகத்தை மூடிப் பழையபடியும் கோட்டுப்பைக்குள் வைத்தார் சுப்பராமையர். எல்லோரும் இறங்குவதற்கு ஆயத்தமானார்கள். “தைரியமாய்ப் பரீக்ஷை எழுதுங்கடா! நான் வயசானவன். ஆசீர்வாதம் பண்ணறேன்; எல்லோரும் பாஸ், போய்ட்டு வாருங்க. திருநெல்வேலியிலே படிக்க வரப்போ! பங்கஜ விலாஸை மறந்துட வேண்டாம். தெரிஞ்சதா?” என்று சொல்லி வழியனுப்பினார் ஹோட்டல் முதலாளி. வண்டியை விட்டு சுப்பராமையரும், அந்தப் பையன்களும், பெரியவரும் இறங்கினார்கள். போகும்போது ஐயர், ஹோட்டல் முதலாளியைப் பார்த்துப் புன்னகைத் ததும்பும் முகத்தோடு வணங்கி விடைபெற்றுக்கொண்டார். அவரைப் பின் தொடர்ந்து நடந்தார்கள் பையன்கள். முன்னே நடக்க ஒருவிதத் தயக்கம். அவ்வளவு தூரத்துக்கு அவரிடம் மரியாதை பிறந்துவிட்டது.
ஸ்டேஷனை விட்டு வெளியே வந்ததும், குதிரை வண்டியை எதிர்பார்த்துக்கொண்டு நின்றார் சுப்பராமையர். கோவில்பட்டி ஸ்டேஷனில் போர்ட்டர் வேலை செய்யும் ஒருவன், அன்று தனக்கு இரவு வேலையானதால், வெளியே ஓரிடத்தில் நின்று கொண்டிருந்தான். பெரியவரையும், சிறுவர்களையும் பார்த்து, “வாங்க வாங்க” என்று சொல்லிக்கொண்டே வந்தான். அவர்கள் வந்த காரியத்தையும் விசாரித்துத் தெரிந்து கொண்டான். அவனும் இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவன்தான் என்பதைப் பேச்சிலிருந்து சுப்பராமையர் ஊகித்துவிட்டார். பையன்களையும், பெரியவரையும், தன் வீட்டுக்கு அந்தப் போர்ட்டர் பலகாரம் சாப்பிட அழைத்ததோடு, அன்றிரவு தங்கிவிட்டு மறுநாள் ஊருக்குப் போகலாம் என்று சொன்னான். சுப்பராமையருக்குக் குதிரை வண்டி கிடைத்துவிட்டது. அதில் ஏறிக்கொண்டு, வண்டி மூலை திரும்பும் வரையில் சிறுவர்களையே பார்த்துக்கொண்டு சென்றார். குமாரபுரம் ஸ்டேஷன், ஸ்டேஷன் மாஸ்டரின் தர்க்கங்கள், வேப்பம்பூ மணத்தோடு வீசிய காற்று, கரிசல் மண் மணமும் உயிரும் கொடுப்பது, ஹோட்டல்காரரின் தர்மகுணம், படிப்புக்கு அவரும் ஸ்டேஷன் மாஸ்டரும் கொடுத்த விளக்கம், கிராமத் தலைமையாசிரியர் தந்தையைப் போல் சிறுவர்களை நடத்தியது, டால்ஸ்டாயை ‘டோல்ஸ்டோய்’ என்று வாசித்த ‘அறிவு’, ஏழைப் போர்ட்டரின் விருந்துபசார அழைப்பு இப்படி, எல்லாமே அவருக்கு ஞாபகத்துக்கு வந்து கொண்டிருந்தன. இருபது நிமிஷ ரயில் பிரயாணத்தில், இருபது வருஷங்கள் படித்தாலும் தெரிந்துகொள்ள முடியாத எத்தனையோ அரிய விஷயங்களைத் தெரிந்து கொண்டது போன்ற ஆனந்தப் பரவசம்…
கிராமத்து ஹெட்மாஸ்டரையும், ஹோட்டல் முதலாளியையும் போர்ட்டரையும்விடப் பெரிய வாத்தியார்கள் இந்த உலகில் இருக்க முடியுமா என்றுகூட அவருக்கு ஒரு நிமிஷம் தோன்றியது. அவர்களிடம் படிக்காத படிப்பையா இந்தச் சிறுவர்கள் இனிமேல் படிக்கப் போகிறார்கள் என்று தமக்குள் சொல்லிக்கொண்டார். “குமாரபுரம் ஸ்டேஷனுக்குப் பிரயாணிகள் வராததைவிடப் பெரிய கேலிக்கூத்து, மேல்படிப்புக்காக இவர்கள் இந்தப் பள்ளிக்கூடத்துக்கு வருவது! அந்த ஸ்டேஷனுக்காவது தண்ணீர் பந்தல் என்ற மதிப்பு உண்டு ஆனால்…”சுப்பராமையர் குதிரை வண்டியில் வீடுபோய்ச் சேர்ந்தார். பெரியவரையும், பையன்களையும் அந்தப் போர்ட்டர் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். ஊரிலேயே காலை ஆகாரம் பண்ணிக்கொண்டு வந்தவர்களானதால் அங்கே அவர்கள் ஒன்றும் சாப்பிடவில்லை. போர்ட்டருடைய கட்டாயத்துக்காகக் காபியை மட்டும் வாங்கிக் குடித்தார்கள்; மத்தியானம் சாப்பிட வருவதற்கும் சம்மதித்தார்கள். அப்புறம் எல்லோருமாக போர்ட்டர் உட்பட பள்ளிக்கூடத்துக்குப் போனார்கள். பள்ளிக்கூட வராண்டாவில் மற்றவர்களை நிறுத்திவிட்டுப் போர்ட்டர் மட்டும் நேரே தலைமையாசிரியரின் அறையை விசாரித்துத் தெரிந்துக்கொண்டு அங்கே போனான். இடைசெவல் கிராமத்திலிருந்து ஆறாவது வகுப்புத் தேறிய நான்கு பையன்கள் ஏழாம் வகுப்பில் சேர வந்திருக்கும் செய்தியை அவரிடம் தெரிவித்தான். அவர் உடனே ஓர் ஆசிரியரை வரவழைத்து, அவரிடம் இரண்டு மூன்று கேள்வித் தாள்களை எடுத்துக் கொடுத்து, அந்தக் கிராமத்துப் பையன்கள் ஏழாம் வகுப்புக்குத்தகுதி உடையவர்கள்தானா என்பதைச் சோதித்துப் பார்க்கும்படிச் சொல்லி அனுப்பினார். ஓர் அறையில் நான்கு சிறுவர்களும் தனித்தனியே உட்கார வைக்கப்பட்டார்கள்.
கேள்வித்தாளில் உள்ள கேள்விகளை எழுதிக்கொள்ளும்படிச் சொல்லி உதவி ஆசிரியர் வாசித்தார். எல்லாம் ஆங்கிலக் கேள்விகள். பையன்கள் எழுதிக்கொண்டார்கள். ஒரு மணி நேரத்துக்குள் பதில்களை எழுதிவிட வேண்டுமென்றும் சொன்னார் ஆசிரியர். பையன்களும் எழுதத் தொடங்கினார்கள். போர்ட்டரும் பெரியவரும் பள்ளியைவிட்டு வெளியே வந்து, ஒரு புளியமரத்து நிழலில் உட்கார்ந்து ஊர்ச் சமாச்சாரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்பத்தரை மணிக்கெல்லாம் ஆங்கிலப் பரிக்ஷை முடிந்தது. அப்புறம் கணக்கு, தமிழ், பொது அறிவு ஆகியவை சம்பந்தப்பட்ட பரீக்ஷைகள். எல்லாமே பன்னிரண்டு மணிக்குள் முடிந்துவிட்டன. பள்ளிக்கூடம் விட்டு எல்லாப் பையன்களும் மத்தியானச் சாப்பாட்டுக்காக வீடுகளுக்குப் போனார்கள். அவர்களை நான்கு சிறுவர்களும் மிரள மிரள விழித்துக்கொண்டு பார்த்தார்கள். உதவி ஆசிரியர் அவர்களை அந்த அறையிலேயே உட்கார வைத்துக்கொண்டு விடைத் தாள்களை வேகமாகத் திருத்தி மார்க் போட்டார். பிறகு எழுந்து தலைமை ஆசிரியரின் அறைக்குப் போனார். அப்போது பெரியவரும் போர்ட்டரும் அங்கே வந்து சேர்ந்தார்கள். “பரீக்ஷை நல்லா எழுதியிருக்கீங்களா?” என்று கேட்டான் போர்ட்டர். “கணக்குத்தான் கஷ்டமாக இருந்தது.”
“இங்கிலீஷ்?” “ரொம்ப லேசு.” “ஊரிலே ஹெட்மாஸ்டர் எழுதிப்போட்ட கேள்விகள்தான். ஒரு நொடியில் பதில் எழுதிவிட்டேன்” என்றான் ஒருவன். மற்றவர்களும் அப்படியே சொன்னார்கள். “இங்கிலீஷ் நல்லா எழுதினால் பாஸ்தான்” என்று போர்ட்டர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே பெரியவர், “ஊர் வாத்தியார் வாத்தியார்தான்! எப்பேர்ப்பட்ட மனுசன்! இங்கே என்ன கேப்பாங்கன்னு அங்கேயே தெரிஞ்சி சொல்லிக் கொடுத்திருக்கிறாரே, அதில்லே மூளை!” என்று இடைசெவல் கிராமத்துத் தலைமை ஆசிரியரை வானளாவப் புகழத் தொடங்கினார். “கெட்டிக்கார வாத்தியார் போலிருக்கு!” “கெட்டிக்காரருன்னா, அப்படி இப்படியா! அதுக்கு ஏத்தாப்பலே கொணமும் அமைஞ்சுதே தம்பி, அதைச்சொல்லு. இப்படி ஒரு வாத்தியார் நம்ம ஊருக்கு வந்ததே இல்லை. பிள்ளைகள்கிட்டே பெத்த தகப்பன்கூட அவ்வளவு பிரியமா இருக்கமாட்டான்னா, அப்புறம் பார்த்துக்கோயேன்” என்றார் பெரியவர் பூரிப்புடன். எல்லோரும் வெற்றியை எதிர்நோக்கிக்கொண்டு கோலாகலமாகப் பேசிக்கொண்டிந்தார்கள். சிறிது நேரத்துக்குள்ளேயே, பரீக்ஷை வைத்த உதவி ஆசிரியர் வந்து, சிறுவர்களையும், பெரியவரையும் போர்ட்டரையும் தலைமை ஆசிரியரிடம் அழைத்துக் கொண்டு போனார். அப்போதுதான் அவர்களுடைய மனம் கோலாகலத்தை இழந்து, ‘திக்திக்’ என்று அடித்துக்கொள்ளத் தொடங்கியது. “இப்படி வாருங்கள்” என்று அவர்களை ஓர் அறைக்குள் அழைத்துச் சென்றார் உதவி ஆசிரியர்.
எல்லோரும் உள்ளே போனார்கள். தலைமை ஆசிரியரைப் பார்த்ததும், போர்ட்டர் கும்பிட்டான். பெரியவருக்கோ கும்பிடப் போன கைகள் குவியாமல் நடுங்கின. பையன்கள் எதுவுமே செய்யாமல், அப்படியே நின்றுவிட்டார்கள். ஆச்சரியத்தினால் அவர்களுடைய கண்கள் அகல விரிந்துவிட்டன. மூடியிருந்த வாய்கள் தாமாகத் திறந்துகொண்டன. ஒவ்வொரு கையிலும் விரல்களை விரல்கள் பிசைந்துகொண்டிருந்தன. குமாரபுரம் ஸ்டேஷனிலிருந்து டால்ஸ்டாய் புத்தகமும் கையுமாக அவர்களோடு பிரயாணம் செய்த அதே பிரமுகர்தான் இங்கே தலைமை ஆசிரியராக உட்கார்ந்து கொண்டிருந்தார்! இதைப் பையன்கள் எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்? “வாருங்கோ” என்று சிரித்துக்கொண்டே அவர் வரவேற்றார். “பெரிய வாத்தியாரைக் கும்பிடுங்க” என்று போர்ட்டர் சொன்ன பிறகுதான், பையன்களும் பெரியவரும் வணக்கம் செய்தார்கள். “கேள்விகளெல்லாம் கஷ்டமாக இருந்ததா?” என்று கேட்டுவிட்டு மறுமுறையும் சிரித்தார் சுப்பராமையர். அந்தச் சிரிப்பில் இருந்த அழகும், கவர்ச்சியும், அன்புப் பெருக்கும் ஒரு பையனுடைய கண்களில் கண்ணீரையே வரவழைத்துவிட்டன. அவருடைய கேள்விக்குப் பதில் சொல்லாமல் எல்லோரும் வாயடைத்துப் போய்த் திகைத்து நின்றார்கள். அடுத்தாற்போல், “உங்கள் பெயர்களைச் சொல்லுங்கள்” என்றார். “நாராயணசாமி, ‘ஸ்ரீனிவாசன்’, ‘சுப்பையா’, ‘திருப்பதி” “எல்லோரும் பாஸ்!” என்றார் சுப்பராமையர்.
பையன்கள் நால்வருக்கும் ஆனந்தக் கண்ணீர் பொங்கிவிட்டது. “எல்லோரும் ஏழாம் வகுப்பில் சேர்ந்துகொள்ளுங்கள். நன்றாகப் படியுங்கள். ஒவ்வொரு பரீக்ஷையிலும் நல்ல மார்க் வாங்கவேண்டும்” என்று கூறிவிட்டு, “உங்கள் ஊர் வாத்தியார் மட்டுமல்ல இந்த ஊர் வாத்தியாருமே தகப்பனாரைப் போன்றவர்தான். பெரியவரே! நான் சொல்லுவது சரிதானே?” என்று சிரிப்பும் பரவசமுமாகக் கேட்டார் தலைமை ஆசிரியர். “அதிலே சந்தேகம் வேறயா?” என்று கிராமியப் பாணியில் சத்தம் போட்டுச் சொல்லிவிட்டு ஒரு முறை கும்பிட்டார் பெரியவர். சுப்பராமையர் மூன்றாவது தடவையும் அழகாகச் சிரித்தார். “போய் வாருங்கள்” என்று விடை அளித்து அவர்களை அனுப்பியபின், குமாரபுரம் ஸ்டேஷன்தான் அவர் மனக்கண்ணில் காட்சியளித்தது. வாய்க்குள்ளேயே, ‘அது பெரிய பள்ளிக்கூடம்!’ என்று ஒரு முறை சொல்லிக்கொண்டார் சுப்பராமையர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.