google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: வாரணம் ஆயிரம்

திங்கள், 10 செப்டம்பர், 2018

வாரணம் ஆயிரம்



நாலாயிர திவ்ய பிரபந்தம்

ஆண்டாள்

நாச்சியார் திருமொழி

திருமணக் கனவை உரைத்தல்

(பாடல்களும் விளக்கங்களும்) 

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்     1

நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாளை கமுகு பரிசுடைப் பந்தல் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்     2

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்
வந்திருந்து என்னை மகட்பேசி மந்திரித்து
மந்திரக்கோடி உடுத்தி மணமாலை 
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.     3

நாற்றிசைத் தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெடுத்தேத்தி
பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்றன்னை
காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.     4

கதிரொளி தீபம் கலசமுடனேந்தி
சதிரிள மங்கையர் தாம் வந்தெதிர் கொள்ள
மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு, எங்கும்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்.     5

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக் 
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்     6

வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்துக்
காய்சின மாகளிறன்னான் என் கைப்பற்றித்
தீவலம் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான்.     7

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மையுடையவன் நாராயணன் நம்பி
செம்மையுடைய திருக்கையால் தாள் பற்றி
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான்.     8

வரிசிலை வாள்முகத்து என்னைமார் தாம் வந்திட்டு
எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என் கைவைத்து
பொரிமுகம் தட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.     9

குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலம்செய்து மணநீர்
அங்கவனோடும் உடன் சென்று அங்கானைமேல்
மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.     10

--------

ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க்கோன் கோதை சொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயும் நன்மக்களைப் பெற்று மகிழ்வரே.     

கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் (கோதையின் கதை)

அன்புத் தோழி. நீ சொன்னது போல் நேற்று மாலை நாம் கூடல் இழைத்துப் பார்த்தோம். கோவிந்தன் வரும் நாள் கூடி வரும் என்று நாம் இழைத்தக் கூடல்கள் எல்லாம் சொல்லின. நேற்று இரவு அந்த கோவிந்தனே வந்தானடி. கனவில் வந்து என்னைக் கைப்பிடித்தான்.

1. ஆயிரம் யானைகள் சூழ்ந்து வர என் தலைவன் நாராயணன் வருகின்றான் என்ற செய்தியைக் கேட்டதும், அவனை எதிர்கொண்டழைக்க ஊரார் எல்லாம் பொன்னால் செய்து புனித நீர் நிறைத்த குடங்களை எல்லாத் திசைகளிலும் வைத்து வீதி வாசல் எங்கும் தோரணம் நாட்டினார்கள். அதனை என் கனவில் நான் கண்டேனடி தோழீ.


2. நாளை திருமண நாள் என்று குறித்து, பாளையும் கமுகும் நிறைந்திருக்கும் பந்தல் கீழ், சிங்கத்தைப் போன்ற மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் காளை புகுந்து வரக் கனாக் கண்டேன் தோழீ நான்.


3. தேவர்களின் தலைவன் இந்திரனை முன்னிட்டு எல்லாத் தேவர்களும் வந்திருந்து என்னை மணப்பெண்ணாய் பேசி மந்திரங்கள் சொல்லி எனக்கு புதிய உடைகளை அணியக் கொடுத்து, நான் அவற்றை அணிந்து வந்த பின் அந்தரியாகிய பார்வதி தேவி எனக்கு மணமாலை சூட்டிவிடக் கனாக் கண்டேன் தோழீ நான்.


4. எல்லாத் திசைகளிலிருந்தும் தீர்த்தம் கொண்டு வந்து பார்ப்பனர்களில் சிறந்தவர்கள் பல பேர் அதனை எடுத்து மந்திரங்களால் புகழ்ந்து, தாமரை மலர் மாலையை அணிந்திருக்கும் புனிதனுக்கும் எனக்கும் கையில் காப்புக் கயிறு கட்டக் கனாக் கண்டேன் தோழி நான்.


5. ஆடல் பாடல்களில் சிறந்த மங்கையர் கதிரவனைப் போல் ஒளிவீசும் தீபங்களையும் கலசங்களையும் ஏந்தி எதிர்கொண்டு அழைக்க வடமதுரையில் வாழ்பவர்களின் மன்னன் மணப்பந்தலின் நிலைப் படியினைத் தொட்டு எங்கும் மங்கல வாத்தியங்கள் அதிர உள்ளே புகுந்துவரக் கனாக் கண்டேன் தோழி நான்.

6. மத்தளம் கொட்ட வரிகளுடன் கூடிய சங்குகள் முழங்க முத்து மாலைகளால் அலங்கரிக்கப் பட்ட பந்தலின் கீழ் என் தலைவன் அழகன் மதுசூதனன் வந்து என்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்.


7. நல்ல சொற்களையே பேசுபவர்கள் மேன்மையான மறைச் சொற்களைச் சொல்லி பச்சை இலைகளுடன் கூடிய நாணலைக் கதிரவன் முன் வைத்த பின், எரியும் நெருப்பைப் போல் கோப குணம் கொண்ட யானையைப் போன்றவன் என் கையைப் பற்றி தீயை வலம் செய்யக் கனாக் கண்டேன் தோழி நான்.


8. இந்தப் பிறவிக்கும் இனி வரும் ஏழேழ் பிறவிக்கும் நமக்குக் கதியானவன், நம்மைத் தன் செல்வமாக உடையவன், நாராயணனாகிய நம் தலைவன், தன் செம்மையுடையத் திருக்கையால் என் கால்களைப் பற்றி அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழி நான்.


9. வில்லை கையில் ஏந்தியிருக்கும் ஒளிமிகுந்த முகம் கொண்ட என் உடன்பிறந்தோர் வந்து தீயினை வளர்த்து என்னை அதன் முன்னே நிறுத்தி சிங்கமுகம் கொண்ட (நரசிம்மன்) அச்சுதன் கைமேல் என் கை வைத்து பொரியை அந்த தீயினில் இடக் கனாக் கண்டேன் தோழி நான்.


10. குங்குமம் அப்பிக் குளிர்ந்த சந்தனக்குழம்பை உடலெங்கும் பூசி எங்கள் இருவரையும் நீராட்டிய பின், அங்கு அவனோடு யானை மேல் ஏறி மங்கல வீதி வலம் செய்யக் கனாக் கண்டேன் தோழி நான்.

-------

ஆயனாரை அடைவதாகத் தான் கண்ட கனாவினை வேயர் புகழும் வில்லிபுத்தூர்க் கோன் பட்டர்பிரான் கோதை சொல்லும் இந்தத் தூய தமிழ் மாலை பத்துப் பாடல்களும் வல்லவர் பெறற்கரிய நல்ல பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்திருப்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

கள்ளுண்ணாமை

கள்ளுண்ணாமை குறள் 921 இலிருந்து 930 முடிய குறள் 921: உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார் . பொருள்:...