google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil

செவ்வாய், 9 செப்டம்பர், 2025

சொல்லின் இசை - டாக்டர். மு. வரதராசனார்

 முதன்முதலில் மனிதர்கள் பேசினார்களா, பாடினார்களா? முதன்முதலில் பேசினார்கள் என்றுதான் நீங்கள் சொல்வீர்கள். அதன் பிறகு பாடக்கற்றுக்கொண்டார்கள் என்றும் சொல்வீர்கள். ஆனால் உண்மை அது அல்ல. நீங்கள் பேசக் கற்றுக்கொண்டு நெடுங்காலம் ஆனபிறகுதான் பாடக்கற்றுக்கொள்கிறீர்கள். அதனால் பழங்காலத்து மனிதர்களும் அப்படியே முதலில் பேசவும் பிறகு பாடவும் கற்றுக்கொண் டிருப்பார்கள் என்று எண்ணுகிறீர்கள். அது அவ்வளவு பொருத்தம் அல்ல. பாடுவது என்றால், இராகமும் தாளமும் அமைத்து, இசை இலக்கணப்படி பாடுவது மட்டும்் அல்ல. மனம் போனபடி ஒலியை நீட்டி, ஆனால் இனிமையாக, உருக்கமாகப் பாடினால் போதும். அதுவும் பாட்டுத்தானே? நாட்டுப்புறங்களில் காட்டிலும் மேட்டிலும் ஓடி உழைக்கும் சிறு பிள்ளைகள் மனம் போனபடி நீட்டி நீட்டிப் பாடுகிறார்கள். அவற்றை எல்லாம் பாட்டு அல்ல என்று சொல்லிவிட முடியுமா? இசை இலக்கணம் தெரியாத காரணத்தால், பாட்டும் தெரியாது என்று சொல்லிவிட முடியாது. குயிலுக்கு இசை இலக்கணம் தெரியாது. ஆனால் அதன் ஒலியைப் பாட்டு என்றுதானே சொல்கிறார்கள்.


இந்தக் கருத்தோடு பார்த்தால், உங்களுக்கும் இயற்கையாகப் பாட்டுத் தெரியும் என்றுதான் சொல்லவேண்டும். நீங்கள் திருத்தமாகப் பேசியதற்கு முன்னமே பாடியிருக்கிறீர்கள். நீங்கள் மூன்று நான்கு வயதுக் குழந்தையாய் இருந்தபோது, உங்கள் அம்மாவிடம்போய், ஏதாவது வேண்டும் என்று கேட்டீர்கள். அப்போது "அம்மா, கொடு" என்று புத்தகத்தில் படிப்பதுபோல் கேட்கவில்லை. கைகால் ஆட்டிக்கொண்டும், கொஞ்சி அழுதுகொண்டும், சொற்களை நீட்டி நீட்டி, 'அம்மா அஅ, கொடூ உஉ' என்று கேட்டீர்கள். அவை எல்லாம் பாட்டுத்தான். இப்போது அந்தப் பாட்டை எல்லாம் மறந்துவிட்டீர்கள். பேசுவதிலே அக்கரையாக ஈடுபட்டிருக்கிறீர்கள். அதனால் பாட்டை மறந்துவிட்டீர்கள். மிகப் பழங்காலத்து மக்களும் அப்படித்தான். அவர்களும் சொற்களை நீட்டி நீட்டிப் பாட்டுப்போல் ஒலித்துக் கொண்டிருந்தார்கள். நாகரிகம் வளர்ந்தபிறகு, அந்த வழக்கத்தை விட்டுவிட்டு, ஒலிகளை அளவோடு நிறுத்திப் பேசத் தொடங்கினார்கள்.

ஆனாலும் இசையை அடியோடு துறந்துவிட மனிதனால் முடியவில்லை. காரணம் என்ன? மனிதனுடைய செவி ஒழுங்கான நயமான ஒலியைக் கேட்க விரும்புகிறது. அதற்குக் காரணம் மனிதனுடைய உடம்பே. உடம்பில் இரத்த ஓட்டம், நுரையீரலின் வேலை, இதயத்தின் தொழில் முதலிய எல்லாம் ஒருவகை ஒழுங்குமுறையோடு நடைபெறுகின்றன. அதனால் செவி நரம்புகளும் ஒழுங்கான ஒலியைக் கேட்கவே விரும்புகின்றன. ஆகையால், இசையில் பயிற்சி இல்லாதவர்களும் ஒழுங்கான ஒலிகளால் அமைந்த சொற்களைக் கேட்க விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட சொற்களையே பேசவும் விரும்புகிறார்கள்.

உதாரணம் பாருங்கள். நாம் பல வாக்கியங்களைப் பழமொழிகள் என்று சொல்கிறோம். 'காற்றுள்ள போதே தூற்றிக்கொள்','கிட்டாதாயின் வெட்டென மற', 'யானைக்கு ஒரு காலம், பூனைக்கு ஒருகாலம்', 'யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே' முதலான பழமொழிகளை எண்ணிப் பாருங்கள். என்னென்னவோ கற்றுக்கொண்டு மறந்துவிடுகிறோம். ஆனால் மறக்க வேண்டும் ந்ன்று நாமாகப் பாடுபட்டாலும் இந்தப் பழமொழிகளை மறக்க முடியவில்லை. காரணம் தெரியுமா? இந்தச் சொற்களில் உள்ள இசைதான் காரணம். ஒருவகை ஒலி நயமாக ஒழுங்காகத் திரும்பி வருகின்றது. இந்தப் பழமொழிகளை நீங்களே சொல்லிப் பாருங்கள். ஒழுங்கான ஒலிமுறை அமைந்திருக்கிறது அல்லவா? இதைத்தான் சொற்களின் இசை என்று சொல்லவேண்டும். இந்தச் சொற்களின் இசைதான் இவற்றை மறக்காமல் இருக்கச் செய்கிறது. உலகத்தில் உள்ள எல்லா மொழிகளிலும் பல சொற்கள் இப்படி இசையோடு அமைந்திருக்கின்றன. தமிழ்ச் சொற்களிலும் இப்படிப் பல உண்டு.

இப்படிப்பட்ட சொற்களில் வேண்டும் என்றே இசையை யாரும் அமைக்கவில்லை. பேசும் மக்களின் செவியும் வாயும் தம்மை அறியாமல் இப்படிச் சொற்களில் இசையை அமைத்துவிடுகின்றன. உதாரணமாகப் பாருங்கள்:'அல்ல' என்பது ஒரு சொல். 'இல்லை'என்பது மற்றொரு சொல். இலக்கணப்படி பார்த்தால், 'இல்லை' என்னும் சொல் 'இல்ல' என்றுதான் இருக்கவேண்டும். ஆனால் 'இல்லை' என்று மாறி அமைந்திருக்கிறது. "அல்ல" என்னும் சொல் 'அல்லை' என்று மாறவில்லை.காரணம் என்ன? 'அல்ல' என்னும் சொல்லில் முன்னும் பின்னும் 'அ'-ஒலி இருக்கிறது. அதனால் ஒலி ஒத்துப் போகிறது. 'இல்ல' என்று சொன்னால், சொல் முதலில் 'இ'-யும் முடிவில் 'அ'-வும் இருப்பதால் ஒத்துப் போவதில்லை. அதனால், கடைசியில் உள்ள 'அ', 'ஐ'யாக மாறிவிட்டது. 'இ'-யும் 'ஐ'-யும் ஒத்துப்போகும் ஒலிகள். அதனால், 'இல்ல'என்று சொல்வதைவிட,'இல்லை' என்று சொல்வது இனிமையாயிருக்கிறது. இதுபோலவே எத்தனையோ சொற்கள் இனிய ஒலி வேண்டும் என்று மாறி அமைந்திருக்கின்றன.

'அது' என்பது பெயர்ச்சொல். 'கு' என்பது, உருபு. 'அது+கு' = 'அதுக்கு' என்று ஆகவேண்டும். ஆனால், இடையிலே ஓர் ஒலியைச் சேர்த்து 'அதற்கு' என்று சொல்லுகிறோம். நாம்+கு=நாம்கு என்று சொல்லாமல்,நம்கு என்றும் சொல்லாமல், நமக்கு என்று சொல்கிறோம். அப்படியே, யான்கு, நீகு என்று ஒலிக்காமல், எனக்கு, உனக்கு என்று ஒலிக்கிறோம். மரம்+ஐ=மரமை, குளம்+கு=குளக்கு என்று யாரும் ஒலிப்பதில்லை. மரத்தை, குளத்திற்கு என்று இடையிலே ஒலிகள் சேர்த்து வழங்குகிறார்கள் இனிய ஒலியாக ஒலிக்க வேண்டும் என்பதை முக்கிய நோக்கமாகக்கொண்டு இவ்வாறு சொற்களில் சில ஒலிகள் சேர்க்கப்படுகின்றன. இவைகளைச் சாரியைகள் என்று இலக்கணம் கற்றவர்கள் சொல்வார்கள். சொற்களில் இசை பொருந்த வேண்டும் என்று முன்னோர்கள் செய்த முயற்சியை இவற்றில் பாருங்கள்.

இப்படிப்பட்ட முயற்சி தமிழ்மொழியில் மட்டும் அல்ல, ஏறக்குறைய எல்லா மொழிகளிலுமே உண்டு. தெலுங்கு மொழியில் சொற்கள் எல்லாம் இனிமையான இசையை உடையவை என்று அவர்கள் சொல்கிறார்கள். அதனால்தான் அந்த மொழி தேன்போன்றமொழி, தேனுகு, தெனுகு, தெலுங்கு என்று பெயர் பெற்றதாகவும் சொல்கிறார்கள். தமிழர்களாகிய நாமும் நம் தாய்மொழியைப் பற்றி இப்படித்தான் சொல்கிறோம். தமிழ் என்றாலே இனிமை என்று பொருள் கூறுகிறோம். ஏறக்குறைய எல்லா மொழியாரும் இப்படியே தம்தம் மொழியைப் பாராட்டிக்கொள்கிறார்கள்.

நாட்டுக்கு நாடு இசை வேறு வேறாக இருக்கிறது. இசைக் கருவிகளும் வேறு வேறாக உள்ளன. எவ்வளவு வேற்றுமை இருந்தபோதிலும் எல்லாம் இசைதான். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையில் ஒழுங்கான ஒலி அமைந்திருக்கிறது. தமிழர்களுக்கு விருப்பமானது புல்லாங்குழல் இசை. மேற்கு நாட்டார்க்கு விருப்பமானது பியானோ இசை. மேற்கு நாட்டார்க்கு விருப்பமானது பியானோ இசை. பியானோ இல்லையே என்று தமிழர்கள் வருந்தவேண்டிய தில்லை. குழல் இல்லையே என்று மேற்கு நாட்டார்கள் வருந்த வேண்டியதும் இல்லை. அதுபோலவே, ஒவ்வொரு மொழிக்கும் தனிச்சிறப்பாக ஒவ்வொருவகை இனிமை அமைந்திருக்கிறது. தமிழ்ச் சொற்களிலும் அப்படிப்பட்ட தனி இனிமை இருக்கிறது.

ஆங்கிலேயர்கள் 'ஓட்' என்று சொல்கிறார்கள். தமிழர்கள் அதை 'ஓட்டு' என்றுதான் சொல்கிறார்கள். தமிழில் பல சொற்கள் இப்படி 'உ' என்று முடிகின்றன. ஆங்கிலச்சொற்கள் அப்படி முடிவதில்லை. ஆங்கிலத்தில் உள்ள எண்ணுப் பெயர்களைச் சொல்லிப் பாருங்கள். ஒன் (one), போர் (four), பைவ் (five), சிக்ஸ் (six), செவன் (seven), எய்ட் (eight), நைன் (nine), டென் (ten) என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். இவை மெய்யெழுத்தில் முடிகின்றன. தமிழில் உள்ள எண்ணுப் பெயர்களைப் பாருங்கள். எல்லாம் 'உ' என்று முடிகின்றன. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து - இவற்றில் இசை அமைப்பதற்காகவே இந்த 'உ' ஒலி பயன்படுகிறது. தெலுங்கிலே இந்த ஒலி இன்னும் மிகுதியாகப் பயன்படுகிறது. கன்னு, மேமு, வாரு, வீரு, வாருலு, நேனு, மீரு, ஒகரு, இத்தரு முதலாக ஏறக்குறைய எல்லாச் சொற்களிலும் 'உ' ஒலி சேர்த்து நயமாக ஒலிக்கிறார்கள்.

இதுபோல் எத்தனையோ வழிகளில் சொற்கள் இனிய ஒலி பெற்று வழங்குகின்றன. 'வருபார்கள்' 'உண்வார்கள்' என்று நாம் சொல்கிறோமா? இல்லை. 'வருவார்கள், உண்பார்கள்' என்று சொல்கிறோம். சில இடங்களில் 'ப' ஒலி சேர்க்காமல், 'வ' சேர்க்கிறோம்; வருவார், செய்வார், போவார் என்பவைபோல. வேறு இடங்களில் 'வ' ஒலி சேர்க்காமல், 'ப' ஒலி சேர்க்கிறோம்; உண்பார், தின்பார், இருப்பார், உடுப்பார் என்பவைபோல. செல் - சென்றார்கள், நில் - நின்றார்கள் என்று சொல்கிறோம். ஆனால் வில் - வின்றார்கள் என்று சொல்வதில்லை. விற்றார்கள் என்று சொல்கிறோம். போடு - போட்டார்கள் என்று சொல்கிறோம்; ஆனால் ஓடு - ஓட்டார்கள் என்று சொல்வதில்லை; ஓடினார்கள் என்று சொல்கிறோம். செய் - செய்தார்கள் என்று சொல்கிறோம். ஆனால், உண் - உண்தார்கள், தின் - திந்தார்கள் என்று சொல்வதில்லை; உண்டார்கள், தின்றார்கள் என்று சொல்கிறோம். இப்படி ஆயிரக்கணக்கான சொற்களை எடுத்து எண்ணிப் பார்த்தால், இனிய ஒலி வேண்டும் என்ற காரணத்தால் சொற்கள் வெவ்வேறு வகையாய் அமைந்திருக்கின்றன என்பது தெரியும்.

இதுவரையில், பேச்சு வழக்கில் உள்ள சொற்களைப் பார்த்தோம். இசையோடு அமைந்த பாட்டுக்களைப் பார்ப்போமானால், சொற்களில் உள்ள இசை நயம் மிகமிகத் தெளிவாக விளங்கும். "செந்தமிழ் நாடென்ற போதினிலே - இன்பத் - தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள் - தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு - சக்தி பிறக்குது மூச்சினிலே": போதினிலே - காதினிலே ; பேச்சினிலே - மூச்சினிலே: இந்தச் சொற்களில் உள்ள இசையைக் கேளுங்கள."கற்க கசடறக் கற்பவை கற்றபின், நிற்க அதற்குத் தக": இந்தக் குறளின் சொற்களில் உள்ள இசையையும் கவனியுங்கள். வந்த ஒலியே திரும்பத் திரும்ப வந்து ஒழுங்காக அமையும்போது தானாகவே இசை பிறக்கிறது. இப்படிப்பட்ட இசை நம்மை அறியாமலே நாம் பேசும் சொற்களில் அமைந்திருக்கிறது. இதைத்தான் சொல்லின் இசை என்று சொல்கிறோம்.




சொல்லின் வழக்கு - டாக்டர். மு. வரதராசனார்

 ஒரு பையனுக்குக் கருப்பையா என்று பெயர் வைக்கிறார்கள். அவனை எல்லோரும் 'கருப்பையா, கருப்பையா' என்றே அழைக்கிறார்கள். அவன் உண்மையாகவே கருப்பாக இருக்கிறான். அதனால்தான் அவனுடைய பெற்றோர்கள் அவனுடைய கருப்பு நிறம் பற்றிய அந்தப் பெயர் வைத்தார்கள். ஆனால் அவனைக் கருப்பையா என்று அழைக்கிறவர்கள் அந்த நிறத்தை அடிக்கடி நினைக்கிறார்களா? இல்லை, காரனத்தை நினைக்காமலே மற்றவர்கள் கருப்பையா என்று அழைக்கிறார்கள். ஓர் ஊமைப் பையனை நாவுக்கரசு என்று குறிப்பிடுகிறார்கள். பேச நாக்கு இல்லாதவனை நாவுக்கரசு என்று சொல்லுகின்றோமே என்று யாரும் கவலைப்படுவதில்லை. கோபாலன், முருகையன், முனிசாமி என்னும் பெயர்களைப் போல இந்தப் பெயர்களும் ஒரு வகை அடையாளமாகவே வழங்குகின்ரன. துணி வெளுப்பவர், ஒவ்வொருவருடைய துணிக்கும் ஒவ்வொருவகைக் குறி போடுகிறார். இன்னார் துணிக்கு இன்னகுறி என்று அடையாளமாக ஏற்படுகிறதே தவிர வேறு ஒன்றும் இல்லை. அது போல் தான் சொற்களும் முதலில் காரணத்தோடு ஏற்பட்டிருந்தாலும், இல்லாவிட்டாலும், நாளடைவில் அடையாளங்களாக வழங்குகின்றன.


நாய் என்றால் ஒருவகை விலங்கு என்றும், பன்றி என்றால் மற்றொருவகை விலங்கு என்றும் தெரிந்து கொள்கிறோம். ஆனால், அந்தப் பெயர்கள் காரணத்தோடு ஏற்பட்டவை என்பதை நினைப்பதில்லை. நாய் என்றால் நாக்கும் நினைவு வருவதில்லை. பன்றி என்றால் பல்லும் நினைவு வருவதில்லை. பேசுவதை விட்டுவிட்டு, ஆராய்ச்சி செய்யும்போதுதான் நாயின் நாக்கையும், பன்றியின் பல்லையும் நினைக்கிறோம். நாவை நீட்டித் தொங்கவிடுவதால் நா - நாய் என்றும், கோரைப்பல் இருப்பதனால் பல்-தி-பன்றி என்றும், பெயர் ஏற்பட்டதை அறிகிறோம். இவ்வாறு, சொல் எப்படிப் பிறந்திருந்தாலும், பேச்சில் வழங்கும்போது அடையாளமாகவே பயன்படுகிறது. நன்றாக ஆராய்ந்து பார்த்தால், சொல் பிறந்த காரணத்தை மறந்துவிட்டதே நல்லது என்று தெரிகிறது. அப்படி மறக்காமல் இருந்திருந்தால் சொற்களை வேகமாகப் பேசுவதற்கு முடியாமல் போகும். 'நாய் பன்றியைக் கடித்தது' என்ற வாக்கியத்தைச் சொல்லும்போது வேகமாகச் சொல்கிறோம். நா-ய் : நாய், பல்-தி : பன்றி என்ற ஆராய்ச்சியில் இருந்தால் இவ்வளவு வேகமாகப் பேசவும் முடியாது; பொருள் தெரிந்துகொள்ளவும் முடியாது. ஆகவே, சொற்களின் பிறப்புக் காரணத்தை மறந்து அடையாளங்களாக அவற்றை வழங்குவதால்தான் நன்றாகப் பேச முடிகிறது,

உதாரணமாகப் பாருங்கள் : பென்சிலை எடுத்துப பேனாக் கத்தியால் தீட்டி வெள்ளைக் காகிதத்தில் எழுதுகிறோம். கருவிகள் உடனே பயன்படுகின்றன. எழுத்து வேலையும் உடனே முடிகிறது. பென்சில் செய்த தொழிற்சாலை, பேனாக்கத்தி செய்த தொழிற்சாலை, காகிதம் செய்த தொழிற்சாலை இவை எல்லாம் நினைவுக்கு வந்தால், பென்சிலை எடுத்துப் பார்ப்பதில் நேரம் செலவாகும். பேனாக் கத்தி எடுத்துத் தீட்டுவதற்குமுன் நேரம் செலவாகும். காகிதத்தை எடுத்து, அது செய்யப்பட்ட முறையை எண்ணுவதிலும் நேரம் செலவாகும். கடைசியில் எழுத்து வேலை நினைத்தபடி முடியாது. தொழிற்சாலைகளை மறந்துவிட வேண்டும். செய்யப்பட்ட முறைகளையும் மறந்துவிட வேண்டும். பென்சில், பேனாக்கத்தி, காகிதம் இவைகள் நம் வேலைக்குப் பயன்படும் கருவிகள் என்ற எண்ணம் மட்டும் இருந்தால் போதும். அப்போதுதான் நாம் எண்ணியபடி வேலை செய்து முடிக்க முடியும்.

சொற்களை வழங்கும் முறையும் இப்படித்தான். அவைகள் எப்படிப் பிறந்தன என்பதை மறந்துவிட வேண்டும். என்ன பொருள் உணர்த்துகின்றன என்பதை மட்டும் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் சொற்களைத் தெளிவாகவும் வேகமாகவும் பேச்சில் வழங்க முடியும்.

இன்னொன்று பாருங்கள்: பல் இருப்பதனால் பன்றி என்று பெயர் இருப்பதை அறிந்தோம். இதெபோல் பல்லின் காரணமாகப்பெயர் பெற்ற மற்றோர் உயிரும் உண்டு. அதுதான் பல்லி. பன்றி, பல்லி ஆகிய இரண்டு சொற்கள் பிறப்பதற்கும் பல்லே காரணமாக இருக்கிறது. ஆகவே, அந்தக் காரணம் நினைவில் இருந்தால், பேசும்போது என்ன ஆகும் தெரியுமா? இரண்டுக்கும் வேறுபாடு தெரியாமல் பன்றியைப் பல்லி என்று தவறிச் சொல்லி விடுவோம். பல்லியைப் பன்றி என்றும் தவறாகச் சொல்லிவிடுவோம். கடைசியில் நன்றாகப் பேசத் தெரியாதவர்கள் ஆகிவிடுவோம். ஆகவே, தெளிவாகவும், வேகமாகவும் சொற்கள் வழங்கவேண்டுமானால், அவைகள் அடையாளங்களாகவே பயன் படவேண்டும்.

அடையாளங்களாக வழங்கும்போதும், இன்னொன்று கவனிக்க வேண்டும் நேற்று ஒரு பொருளுக்கு அடையாளமாக இருந்த ஒரு சொல், இன்று கொஞ்சம் மாறி, வேறு பொருளுக்கு அடையாளமாக வழங்கலாம். நேற்று மணியின் துணிக்கு அடையாளமாக இருந்த குறி, இன்று கண்ணனுடைய துணிக்கு குறியாக மாறலாம் அல்லவா? சொற்களும் காலப்போக்கில் இப்படிப் பொருள்மாறுவது உண்டு. மரத்தால் செய்த ஓர் அளவு கருவிக்கு பழங்காலத்தில் ‘மரக்கால்' என்று பெயர். இப்போது, இரும்புத் தகட்டால் செய்த கருவிக்கு அந்தப் பெயரைச் சொல்கிறோம். இரும்பால் செய்த இந்தக் காலத்துக் கருவியைச் சொல்லும் போது பழங்காலத்து மரக்காலை நினைப்பதால் பயன் இல்லை. மரக்கால் என்பதில் உள்ள மரம் என்ற கருத்தையே மறந்துவிட வேண்டும்.

பழங்காலத்தில் எள்ளிலிருந்து எடுக்கப்பட்ட நெய்க்கு 'எண்ணெய்' என்று பெயர். இப்போது எண்ணெய் என்பது பொதுவான ஒரு பெயராக வழங்குகிறது. கடைக்கு போய் ‘எண்ணெய் வேண்டும்' என்று கேட்டால், கடைக்காரனுக்கு ‘எள்ளின் நெய்' என்ற பொருள் தெரியாது. ”என்ன எண்ணெய் வேண்டும்? விள்க்கெண்ணெய்யா, கடலை எண்ணெய்யா, நல்லெண்ணெய்யா” என்று திருப்பிக்கேட்பான். பழங்காலத்தைப் போல் கடலை நெய் வேண்டும், எள்ளின் நெய் வேண்டும் என்று சொன்னாலும் அவனுக்கு விளங்காது. பசுவின் நெய்தான் என்று சொல்லிவிடுவான். ஒரு காலத்தில் தைலப் பொருள்கள் எல்லாவற்றிற்கும் பொதுவாக இருந்த நெய் என்ற சொல், இப்பொழுது பசுவின்நெய் அல்லது எருமைநெய்க்கு மட்டும் வழங்குகிறது. ஆகவே, பேசுகின்றவர்களும் எழுதுகின்றவர்களும் பழைய பொருளை மறந்துவிட்டு, இன்றைய வழக்கைமட்டும் கவனித்துப் பேசவேண்டும்; எழுத வேண்டும்.

இப்படியே பல சொற்கள் பொருள் மாறி வழங்குவது உண்டு. கோயில் என்ற சொல் பழங்காலத்தில் அரசனுடைய அரண்மனையை உணர்த்தியது. இப்போது கடவுளை வழிபடும் இடத்தை மட்டும் குறிக்கிறது. ஒரு காலத்தில் கோயிலுக்கு 'நகர்' என்ற பெயர் இருந்தது. இப்போது 'நகர்' என்றால் சென்னை போன்ற பெரிய நகரங்களையே குறிக்கும். பழங்காலத்தில் மரம் என்ற சொல், தேக்கு, பலா, மா முதலிய உள்ளே வைரமுடைய மரங்களை மட்டும் குறித்து வந்தது. தென்னைமரம், பனைமரம், முதலியவற்றிற்கு உள்ளே வைரம் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். அதனால் அந்தக் காலத்தில் தென்னை மரம், பனைமரம் என்று சொன்னால் எல்லோரும் சிரிப்பார்கள். அவற்றை மரம் என்று சொல்லுவதே பிழையாக இருந்தது. அவைகளை எல்லாம் நம் முன்னோர்கள் புல் என்று சொல்லி வந்தார்கள். தென்னையையும், பனையையும் பார்த்துப் 'புல்' என்று சொன்னால் இந்தக் காலத்தில் எல்லோரும் சிரிப்பார்கள். உயரமாக வளராமல், தரையோடு உள்ள சிலவற்றை மட்டும்தான் இப்போது புல் என்று சொல்கின்றோம். ஒரு காலத்தில் இருந்த சொல்வழக்கு மற்றொரு காலத்தில் இல்லாமல் போவதை இவைகள் தெரிவிக்கின்றன.

பேசுகின்ற மக்கள் எப்படி மதிக்கின்றார்களோ, அப்படித்தான் சொல்லும் வழங்குகிறது. மக்கள் எதை மதிக்கவில்லையோ, அது வழக்கில் இல்லாமல் போகிறது. ஒன்று பாருங்கள். 'ஆண் யானை', 'பெண் யானை' என்று சொல்கிறோம். ஆனால் ஆண்மாடு பெண் மாடு என்று சொல்வதில்லை. பசு, எருது, மாடு என்று சொல்வதுதான் வழக்கமாக இருக்கிறது. 'பெண் மாடு', 'ஆண் மாடு' என்று சொன்னால் ஊர் சிரிக்கும். ஆனால் பெண் கோழி, ஆண் கோழி என்று கூசாமல் சொல்கின்றோம். திருவள்ளுவர், ஔவையார் இவர்கள் வாழ்ந்த காலத்தில் பெண்கோழி, ஆண்கோழி என்று சொல்லமாட்டார்கள். பேடை, சேவல் என்றுதான் சொல்வார்கள். கிராமங்களில் சிலர் இன்னும் இப்படித்தான் சொல்கிறார்கள். யானை முதலிய மிருகங்களிலும் இப்படித்தான் பெண்ணுக்கும் ஆணுக்கும் வெவ்வேறு பெயர்கள் வழங்கியிருந்தன. மிகப் பழங்காலத்தில் பெண்யானையைப் 'பிடி' என்று சொன்னார்கள். ஆண்யானையைக் 'களிறு' என்று சொன்னார்கள். பெண்யானை, ஆண்யானை என்று சொல்வதே பிழையாக இருந்த காலம் அது. இதுபோல் எத்தனையோ சொற்களுக்கு வழக்கு மாறிவிட்டது.

காலப்போக்கில் வளரும் நாகரிகமும் சொல்லின் வழக்கை மாற்றிவருகிறது. சில சொற்களை உள்ளபடி வெளிப்படையாகப் பேசினால் நாகரிகம் குறைவாகத் தெரிகிறது. அதற்காக அந்தச் சொற்களை மறைத்துவிட்டு, நாகரிகமான வேறு சொற்களைச் சொல்வது உண்டு. 'கால் கழுவி வந்தான்', 'ஒன்றுக்கு இருந்தான்', 'சாணம் போட்டது' முதலிய வாக்கியங்களில் இதைக் காணலாம்.

செத்துப்போன ஒருவரைப் பற்றி, அவர் இறந்துவிட்டார் என்று சொல்லாமல் 'காலமானார்' என்று மாற்றிச் சொல்கிறோம். திருவடிநிழல் அடைந்தார், வைகுண்டம் சேர்ந்தார், பரமபதம் அடைந்தார்,சிவலோகம் சேர்ந்தார் என்று சொல்கிறோம். செத்துப் போனார் என்று சொன்னால் சொல்பவர்களுகும் நன்றாக இல்லை: கேட்பவர்களுக்கும் நன்றாக இல்லை. அதனால், அதை மாற்றிக்கொஞ்சம் மங்கலமாகச் சொல்லுகிறோஓம்.

சொல் வழங்குவதில் மொழிக்கு மொழி வேறுபாடு இருக்கிறது. ஆங்கிலத்தில் 'அங்கிள்' என்ற ஒரு சொல் இருக்கிறது. அது, தாயோடு பிறந்த அம்மானையும் உணர்த்துகிறது: தகப்பனோடு பிறந்த சிற்றப்பன், பெரியப்பனையும் உணர்த்துகிறது. தமிழில் அதுபோல் ஒரு சொல் இல்லை. அதற்குத் தேவையும் ஏற்படவில்லை. ஆங்கிலத்தில் 'பிரதர்' (சகோதரர்) என்ற சொல்லை மிகுதியாக வழங்குகிறார்கள். மூத்த சகோதரன் 'எல்டர் பிரதர்', இளைய சகோதரன் 'யங்கர் பிரதர்' என்ற சொற்களை அவர்கள் அவ்வளவாகப் பயன்படுத்துவதில்லை. தமிழில் அப்படி இல்லை. அவர்களுக்கு நேர்மாறாகத் தமிழர்களாகிய நாம் பேசுகிறோம். உடன்பிறந்தான் என்ற சொல்லை வழங்காமல் அண்ணன், தம்பி என்ற சொற்களையே அடிக்கடி வழங்குகிறோம்.

இவ்வாறு சொற்கள் வழங்குவதில் எவ்வளவோ மாறுதல்களும் புதுமைகளும் உள்ளன. இவற்றை எல்லாம் ஆராய்ந்து பார்க்கும்போது, நம்மை அறியாமலே ஒருவகையான சொல்நாகரிகம் வளர்ந்துவருவதை உணர்கிறோம். சொற்களின் உலகத்தில் ஒருகாலத்தில் நாகரிகமாய் இருந்தது இப்போது நாகரிகம் இல்லாமல் போகின்றது. ஒரு காலத்தில் செல்லாக் காசாக இருந்தது, இப்போது மதிப்பையும் பெற்றுவிடுகிறது. ஒரு மொழியாருக்குப் பழக்கத்தில் உள்ள ஒன்று, மற்றொரு மொழியாருக்குப் புதுமையாக இருக்கிறது. எழுதுகின்றவர்களும் பேசுகின்றவர்களும் பெரும்பாலும் இவற்றையெல்லாம் எண்ணிப் பார்ப்பதேயில்லை. பயிரிடும் குடியானவன் தாவரநூல் படிப்பதும் இல்லை; அந்தப் போக்கில் ஆராய்ச்சி செய்வதும் இல்லை. ஆனால், மரம் செடி கொடிகளை எப்படி வளர்க்கவேண்டும், எப்படிப் பயிரிடவேண்டும் என்பவற்றை மட்டும் தெரிந்துகொண்டிருக்கிறான். அது போதும். அது போலவே சொல் வழக்கில், மேலே கண்ட புதுமைகளையும் மாறுதல்களையும் ஆராயாமல் இருக்கலாம். ஆனால் நம்மைச் சுற்றி வாழும் மக்கள் எந்தெந்தச் சொற்களை எந்தெந்தப் பொருளில் எவ்வெவ்வாறு வழங்குகின்றார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு, அவர்களைப் பின்பற்றிப் பேசினால் அதுவே போதும். ஆனாலும் குடியானவன் தாவரநூல் கற்றுக்கொண்டால் விளக்கமும் சிறப்பும் ஏற்படுவதுபோல், சொல்வழக்கு இப்படிப்பட்டது என்று ஆராய்ந்து தெரிந்து கொண்டால், மேலும் விளக்கமாகும்; தெளிவும் ஏற்படும்.



சொல்லின் பிறப்பு - டாக்டர். மு. வரதராசனார்

 நாகரிகம் இல்லாத மிகப் பழங் காலத்தில் மனிதர்கள் வீடு கட்டத் தெரியாமல் குகைகளில் வாழ்ந்தார்களாம். அந்தப் பழஙகாலத்தைக் கற்காலம் என்று சொல்லுகிறோம். அந்தக் காலத்தில் மனிதர்கள் கையில் என்னென்ன கருவிகள் இருந்தன தெரியுமா? துப்பாக்கி, பீரங்கி, அணுக்குண்டு இவைகள் அப்போது இல்லை. வாள், வேல்,வில் முதலான கருவிகளும் இல்லை. அந்தக் காலத்தில் இருந்த கருவிகள் எல்லாம் கல்லால் செய்யப்பட்டவைகளே. கல்லால் செய்த அந்தக்கருவிகளும் மழ மழ என்று செய்யப்படவில்லை; கரடு முரடாக இருந்தன. அந்தக் காலத்து மனிதர்கள், வழியில் கிடைத்த கல்லை எடுத்து, இப்படியும் அப்படியும் உடைத்துத்தீட்டி ஒரு வகையாகத் தங்கள் தொழிலுக்குப் பயன் படுத்திக்கொண்டார்கள். கல்லால் செய்த அப்படிப்பட்ட கருவிகளை வைத்துக்கொண்டே அவர்கள் மிருகங்களைக் குத்திக் கொன்றார்கள்; அவைகளை அறுத்துத் தின்றார்கள். கல்லால் செய்த அந்தக்காலத்துக் கத்தியை ஒரு புறம் நினைவில் வைத்துக்கொண்டு, மற்றொரு புறம் நாம் இப்போது கையாளுகின்ற பளபளப்பான இரும்புக்கத்தியை எண்ணிப்பாருங்கள். அதற்கும் இதற்கும் எவ்வளவு வேறுபாடு? கற்காலத்துக் கருவிகள் படிப்படியாக மாறி, வளர்ந்து முன்னேறி இந்தக் காலத்துக் கருவிகள் ஏற்பட்டுள்ளன.

சொற்களின் கதையும் இதுதான்.நாகரிகம் இல்லாத காலத்து மக்கள் பேசிவந்த சொற்கள் திருத்தம் இல்லாமல், வடிவம் அமையாமல், இயற்கை ஒலிகளாக இருந்தன. ஆனால் இப்போது நாம் பேசும் சொற்கள் திருத்தமானவை,வடிவம் அமைந்தவை, நாகரிக வளர்ச்சியால் ஏற்பட்டவை. உதாரணமாக- மண், மரம் என்று சொல்கிறோம். இவைகள் எவ்வளவு சுருக்கமாக, திருத்தமாக இருக்கின்றன பாருங்கள். நாம் இப்போது சட்டைப்பையில் வைத்துக்கொள்ளும் சிறு சிறு பேனாக்கத்திகளைப் போல் இவைகள். ஆனால் மிகப்பழங்காலத்தில் இதே சொற்கள் வெவ்வேறு வடிவமாக இருந்தன. கற்காலத்துக் கத்திகளைப்போல் கரடுமுரடாக, நல்ல வடிவம் அமையாமல் இருந்தன.

இதிலிருந்து நாம் என்ன அறிகிறோம்? சொற்கள் முதல்முதலில் தோன்றிய காலத்தில் திருத்தமான அமைப்புப் பெறாமலிருந்து, காலப்போக்கில் நாகரிகம் வளர வளர மாறி நன்றாக அமைந்துள்ளன. ஆங்கிலத்தில் 'had' என்று மூன்று எழுத்தில் ஒரு சொல் இருக்கிறது. அதே சொல் சில நூற்றாண்டுகளுக்குமுன் பதினோரெழுத்துகளைக் கொண்டதாக இருந்ததாம். 'Habededeima' என்று அந்தச் சொல்லுக்கு வடிவம் இருந்ததாம். தமிழிலும் அப்படித்தான் பழங்காலச் சொற்கள் வெவ்வேறு வகையாய் இருந்திருக்க வேண்டும்.

அந்தக் காலத்தில் சொற்களை எப்படி ஏற்படுத்தினார்கள்? தங்கள் காதால் கேட்ட ஒலியையே திருப்பிச் சொன்னார்கள்; திருப்பிச் சொன்ன ஒலியே சொல் ஆயிற்று. மரத்தில் கருநிறமான பறவை ஒன்று 'கா கா' என்று கத்தியது. அதைப் பற்றிச் சொல்லும்போது, பழங்கால மனிதன் தானும் 'கா கா' என்று கத்தினான். நாளடைவில் காக்கா என்ற ஒலியே அந்தப் பறவைக்குப் பெயராயிற்று. இது பழங் காலத்தில் சொல் பிறந்த வரலாறு. ஆனால் இந்தக் காலத்திலும் குழந்தையினிடம் இப்படி ஒலியால் பெயர் வைக்கும் வழக்கம் இருக்கிறது. தெருவிலே நாய் குலைக்கிறது. குழந்தை பார்க்கிறான். உள்ளே ஓடிப்போய், அம்மாவிடம் 'ளொள்,ளொள்' என்று சொல்கிறான். அது அவன் பேசுகின்ற மொழி. அவனுடைய மொழியில் 'ளொள்,ளொள்' என்றால் நாய் என்று பொருள். இவ்வளவு ஏன்? இப்படி ஒலியைக் கேட்டுப் பெயர் வைக்கும் பழக்கம் வளர்ந்த பெரியவர்களிடமும் இருக்கிறது. 'கிலு கிலு' என்று ஒலியுண்டாக்கும் விளையாட்டுப் பொருளுக்குக் 'கிலுகிலுப்பை' என்றே பெயர் வைக்கிறார்கள். 'கிண் கிண்' என்று ஒலி செய்யும் கால் அணிக்குக் 'கிண்கிணி' என்றே சொல்லுகிறார்கள். ஒரு நாட்டில் உணவு என்பதைத் 'தின் தின்" என்றே பெயர் சொல்கிறார்கள். சில உணவுப் பொருள்களைத் தின்னும்போது 'தின் தின்' என்ற ஒலி கேட்பதால் பொதுவாக உணவுக்கே 'தின்தின் என்று பெயர் வைத்துவிட்டார்கள். அந்த நாட்டில் மட்டுமல்ல, நம் நாட்டிலும் அப்படிப் பெயர் அமைந்திருக்கும் போல் தோன்றுகிறது. நாமும் தின் என்றும் தீனி என்றும் சொல்கிறோம் அல்லவா?

காக்கை, கிலுகிலுப்பை, கிண்கிணி, தீனி இவற்றிற்கெல்லாம் இப்போது காரணம் தெரிகிறது. வேறு பல சொற்கள் பொருள் தெரியாதபடி அவ்வளவு மாறிவிட்டிருக்கின்றன. இப்போது குயில் என்று சொல்லுகிறோம். குயில் கூவும் ஒலிக்கும், குயில் என்ற பெயருக்கும் இப்போது பொருத்தம் தெரியவில்லை. ஆனால் யார் கண்டார்கள்? 'கூஊஇல்' என்பது போன்ற அதன் ஒலியே நாளடைவில் குயில் என்று சுருக்கமாகத் திருந்திய வடிவு பெற்றிருக்கலாம். இப்படிப் பல சொற்களுக்கு இன்று காரணம் தெரியாவிட்டாலும் அவைகளின் பிறப்பு இது போல்தான் இருந்திருக்க வேண்டும்.

அடுத்தபடியாக, வெறுப்பு, மகிழ்ச்சி, அச்சம் முதலான உணர்ச்சிகளால் சிலவகை ஒலிகளை மனிதன் உண்டாக்குகிறான். வெறுப்பு அடைந்தபோது 'சே' என்கிறான். மகிழ்ச்சியாக உள்ளபோது 'ஓ ஓ', 'ஆ ஆ' என்கிறான். பயப்படும்போது 'ஆ', 'ஊ', 'ஐயோ' என்கிறான். இப்படி உணர்ச்சியால் பிறக்கும் பல ஒலிகள் ஒவ்வொரு மொழியிலும் உள்ளன. இந்த ஒலிகள் மாறாமலும் சொற்களாக உள்ளன; மாறியும் சொற்களாக வாழ்கின்றன.

மூன்றாவது வகையாகப் பல சொற்கள் உள்ளன. அந்தச் சொற்கள் எப்படிப் பிறந்தன என்று தெளிவாக அறிய முடியவில்லை. மணிக்கு ஓசை இயற்கையாக அமைவதுபோல் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு சொல் இயற்கையாகத் தோன்றியது என்று சிலர் கூறுவார்கள். அது பொருத்தமான காரணம் அல்ல. முதல்முதலில் கண்ட அடையாளம் பலரிடமும் பரவிவிடுவதுபோல், முதல்முதிலி ஏற்பட்ட ஒலி, அடையாளமாகப் பலரிடமும் பரவி, அப்படியே சொற்களாகிவிட்டன. குழந்தை வாயை மூடியிருந்து, திறந்து அழுகிறது. மூடிய வாய் திறந்து அழும்போது 'மா' என்ற ஒலி உண்டாகிறது. அந்த ஒலியே தாய்க்கு அடையாளமாகி 'அம்மா' என்ற சொல் ஏற்பட்டது. அடுத்தபடியாக, அதே முயற்சியில் காற்றை மூக்கின் வழியாக விடாமல், முழுதும் வாயின் வழியாகவே விட்டால், 'பா' என்ற ஒலி பிறக்கிறது. அதுவே 'அப்பா' என்ற சொல்லாகிவிட்டது. இப்படியே வெவ்வேறு காரணம் பற்றி வெவ்வேறு சொற்கள் பிறந்துவிட்டன. காரணங்கள் பல இன்று தெரியாமல் போய்விட்டன. ஆனால், இந்த வகையான சொற்கள் பிறந்த கதை மட்டும் இதுதான்.

கற்காலத்துக் கருவிகள் அவ்வளவு திருத்தமாக, கைக்கு அடக்கமாக அமையவில்லை என்று பார்த்தோம் அல்லவா? பழங்காலத்துச் சொற்களும் சுருக்கம் இல்லாமல், திருத்தம் இல்லாமல் நீண்ட பெரிய சொற்களாக இருந்திருக்கும். அடிக்கடி கையாண்ட கருவி கை பட்டுப் பட்டுத் தேய்ந்து தேய்ந்து அழகாக விளங்குவதுபோல், பழங்காலத்து நீண்ட பெரிய சொற்கள் பேச்சில் பழகிப் பழகிச் சுருங்கி அமைந்துவிட்டன. உதாரணமாகப் பாருங்கள். நான், நீ, நாம், நீர், யார், ஏன் முதலான சொற்கள் நம் பேச்சில் அடிக்கடி வருகின்றன அல்லவா? அடிக்கடி வருவதால்தான் இவைகள் சிறுசிறு சொற்களாக, ஓர் அசைச் சொற்களாக இருக்கின்றன. கரடி, கத்தரி, பருத்தி, அகழி முதலிய சொற்கள் அடிக்கடி பேச்சில் வழங்குவதில்லை. அதனால்தான் அவைகள் சுருக்கமாகவும் அமையவில்லை.

இப்படிப் பல சொற்கள் ஏற்பட்டுவிட்ட பிறகு, வேண்டியபோதெல்லாம் அவைகளிலிருந்து புதிய சொற்கள் உண்டாக்கிக்கொள்ள முடிந்தது. முதலில் சில கருவிகளைக் கண்டுபிடித்த பிறகு, அவைகளைக் கொண்டு வேறு வேறு கருவிகளைச் செய்து கொள்ளலாம் அல்லவா? அதுபோல், முன்னமே பழகியுள்ள சொற்களை மாற்றியும் சேர்த்தும் புதிய சொற்களை ஏற்படுத்திக்கொள்வது எளிமையாகும். விழு என்ற சொல் பழகிவிட்டபிறகு விழுதல், வீழ்ச்சி, விழுது, வீழ்து முதலான சொற்களை ஏற்படுத்திக்கொண்டார்கள். நட என்ற சொல்லிலிருந்து நடத்தல், நடப்பது, நடை, நடக்கை, நடத்தை, நடத்து, நடத்தல், நடப்பு முதலான சொற்கள் அமைந்ததும் இதுபோல்தான். ஆகவே, முதலில் நூறு சொற்களுக்குக் குறைவாக இருந்த நிலை மாறி மாறி, ஆயிரக்கணக்கான சொற்கள் ஏற்பட்டுவிட்டன. ஒரே சொல் சிறிது மாறி அமைந்து வேறு பொருள் உணர்த்தும் முறை இது. இரண்டு சிறு சொல் ஒன்றாகச் சேர்ந்து, புதிய பொருள் உணர்த்துவதும் உண்டு. மரம் வேறு. கால் வேறு. இரண்டும் சேர்ந்து 'மரக்கால்' என்றால் அது வேறு. புகை வேறு. இலை வேறு. இரண்டும் சேர்ந்து 'புகையிலை' என்றால் தனியான ஒரு பொருளை உணர்த்துகிறது. மரக்கால், புகையிலை போல எத்தனையோ சொற்கள் பிறந்து வழங்குகின்றன.

மரக்கால் புகையிலை முதலிய சொற்கள் இப்போது இரண்டு சிறு சொற்கள் சேர்ந்து அமைந்தவை என்பது தெரியுமாறு இருக்கின்றன. இவைகள் எல்லாம் பிற்காலத்தில் தோன்றிய சொற்கள். அப்படியே எழுதி வைத்துவிட்டார்கள். அதனால் சொல்லின் உருவம் சிதையாமல் வழங்குகின்றன. ஆனால் பழங்காலத்தில் வழங்கிய எத்தனையோ சொற்கள் உருவம்சிதைந்து மாறிவிட்டன. அணில், கனல், வாழை, தென்னை முதலிய சொற்கள் பல அப்படிச் சிதைந்து அமைந்த சொற்களே.

இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்தால், மனிதன் பேசத்தொடங்கிய காலத்தில் சொற்கள் பல இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம். இன்ரு, சென்னை நகரத்தில் உள்ள மாடமாளிகைகளையும், கட்டிட நெருக்கத்தையும் பார்த்துவிட்டு, மனிதன் முதன்முதலில் பிறந்தபோதே பல கட்டிடங்களோடு பிறந்தான் என்று சொல்ல முடியுமா? அதுபோல் மனிதன் பேசத் தொடங்கிய காலத்தில் சொற்கள் இயற்கையாக அமைந்திருந்தன என்றும் சொல்ல முடியாது. ஆனால் மனிதன் வாழத் தொடங்கிய பழங்காலத்தில், இயற்கையாக இருந்த மலைக்குகைகளைப் பயன்படுத்திக்கொண்டான் அல்லவா? அதுபோல் மனிதன் முதல்முதலில் பேசத் தொடங்கிய காலத்தில், அவனுக்கு இயற்கையாக் இருந்த குரலில் ஒலியைப் பயன்படுத்திக்கொண்டான். குடிசை போடக் கற்றுக்கொண்டு, பிறகு மண்சுவர் வைக்கக் கற்று, அதன்பிறகு ஓடு வேயக் கற்றுக்கொண்டு, அதன்பிறகு மச்சுவீடு கட்டவும், மாளிகை கட்டவும் கற்றுக்கொண்டான் அல்லவா? இவ்வாறு கற்று வளர்வதற்குப் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் ஆகவில்லையா? அதுபோலத்தான், இயற்கையான ஒலியைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்ட மனிதன், எத்தனையோ படிகளைக் கடந்து வளர்ந்து வளர்ந்து, இன்று உள்ள இலக்கியம் வளர்ந்த மொழியைப் பேசக் கற்றுக்கொள்வதற்கு எவ்வளவோ காலம் பிடித்திருக்கும். இவ்வாறு எத்தனையோ தலைமுறைகளாகச் சொற்கள் ஏற்பட்டு ஏற்பட்டு, மேன்மேலும் பெருகிக்கொண்டே வருகின்றன. இன்றும் புதிய சொற்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

இதை ஒட்டி இன்னொன்றும் சொல்ல வேண்டும். இந்தக் காலத்துக் கட்டிடத்தைப் பார்த்தால், இது தூண் என்றும், இது கழி என்றும், இது சுவர் என்றும், இது சன்னல் என்றும்,இது கதவு என்றும், இது படி என்றும் பிரித்தறிய முடியும். ஆனால், மிகப் பழங்கால வீடாகிய குகையைப் பார்த்தால், இந்தப் பாகுபாடு ஒன்றும் சொல்லமுடியாது. அதற்கு அடுத்த நாகரிகப் படியில் உள்ள எளிய குடிசையைப் பார்த்தாலும் இத்தனைப் பாகுபாடுகள் சொல்ல முடியாது. அதையும் பல வகையாய்ப் பிரித்தறிய முடியாது அல்லவா? இந்த உண்மையையே சொற்களின் வரலாற்றிலும் காணலாம். இன்று, பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல் என்று சொற்களைப் பிரிக்கிறோம். அவைகளையும் வெவ்வேறு வகையாய்ப் பாகுபடுத்துகிறோம். மிகப் பழங்காலத்தில் இப்படிப்பட்ட பாகுபாடு இருக்கவில்லை. மலைக்குகை, பிரிவுகள் இல்லாத வீடாக இருந்த நிலை போலவே, பழங்காலத்து இயற்கையான குரல்ஒலிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வாக்கியமாக இருந்தன. அந்த வாக்கியமே பெயர், அதுவே வினை என்று சொல்லக்கூடியவாறு இருந்தன. அதனால்தான் காய்முதலான சொற்கள் இப்போது இரண்டிற்கும் பொதுவாக உள்ளன. காய்கள் என்னும்போது பெயராகவும், காய்க்கும் என்னும்போது வினையாகவும் வழஙகுகின்றது. மலர்,அடி, பிடி,எண் முதலான பல சொற்கள் அப்படிப்பட்டவை. ஒருகாலத்தில் இவை ஒவ்வொன்றும் ஒரு வாக்கியமாக இருந்த காரணத்தாலதான் இவைகள் பொருளின் பெயராகவும் வழங்குகின்றன; தொழிலையும் உணர்த்துகின்றன. குகையில் சுவருக்கும் கூரைக்கும் வேறுபாடு தெரிகிறதா? இல்லை. அதுபோல்தான் இநதச் சொற்கள் வாக்கியமாக இருந்த பழஙகாலத்திலும், எந்தப்பாகுபாடும் வேறுபாடும் இல்லாத நிலைமை இருந்தது.



சனி, 17 மே, 2025

சேரன் செங்குட்டுவனின் வீரம்

சேரன் செங்குட்டுவனின் வீரத்தை கண்ணகிக்குச் சிலைஎடுத்ததிலிருந்து அறியலாம். 

தமிழ்ப் புலவர் சாத்தனார் மூலம் கண்ணகியின் கதையைக் கேட்டறிந்த சேரன் செங்குட்டுவன், கண்ணகிக்குச் சிலை எடுத்துக் கோயில் அமைக்க எண்ணினான். அதற்காகப் பொதிய மலையில் கல்லெடுத்துக் காவிரி ஆற்றில் நீர்ப்படுத்துவது தனது வீரத்துக்குச் சான்றாகாது என்று எண்ணிய அவன், ஒரு சமயம் தமிழ் மன்னர்களை எள்ளி நகையாடிய வடநாட்டு வேந்தரான கனக விசயரை வென்று, இமயமலையில் கல்லெடுத்து, அவர்கள் தலையிலேயே கற்களைச் சுமப்பித்து கங்கை ஆற்றில் நீர்ப்படுத்திச் சேர நாட்டுக்குக் கொண்டுவந்து சிலை எடுக்க முடிவு செய்தான்.

இதன்படி, வட நாட்டுக்குப் படை நடத்திச் சென்று, எண்ணியபடியே கனக விசயர் தலையில் கல் சுமப்பித்துக் கண்ணகிக்குச் சிலை எடுத்தான். 


சனி, 22 ஜூன், 2024

கள்ளுண்ணாமை

கள்ளுண்ணாமை குறள் 921 இலிருந்து 930 முடிய

குறள் 921:

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்

கட்காதல் கொண்டொழுகு வார்.

பொருள்:

மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல; மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்.

குறள் 922:

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்

எண்ணப் படவேண்டா தார்.

பொருள்:

மது அருந்தக் கூடாது; சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம்.

குறள் 923:

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்

சான்றோர் முகத்துக் களி.

பொருள்:

கள்ளருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.

குறள் 924:

நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்

பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.

பொருள்:

மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்கு ஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும்.

குறள் 925:

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து

மெய்யறி யாமை கொளல்.

பொருள்:

ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப், போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத மூடத்தனமாகும்.

குறள் 926:

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

பொருள்:

மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம்.

குறள் 927:

உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்

கள்ளொற்றிக் கண்சாய் பவர்.

பொருள்:

மறைந்திருந்து மதுவருந்தினாலும் மறைக்க முடியாமல் அவர்களது கண்கள் சுழன்று மயங்குவதைக் கண்டு ஊரார் எள்ளி நகையாடத்தான் செய்வார்கள்.

குறள் 928:

களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து

ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.

பொருள்:

மது அருந்துவதே இல்லை என்று ஒருவன் பொய் சொல்ல முடியாது; காரணம், அவன் மது மயக்கத்தில் இருக்கும் போது அந்த உண்மையைச் சொல்லி விடுவான்.

குறள் 929:

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்

குளித்தானைத் தீத்துரீஇ அற்று.

பொருள்:

குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான்.

குறள் 930:

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்

உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.

பொருள்:

ஒரு குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்த பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப் பார்க்க மாட்டானா?

ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012

உடன்பிறப்பே,

பேரவையில்  நியாயமான  பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூறுகளையும், ஆதார மற்ற குற்றச்சாட்டுகளையும் சொல்லும்போது உரிய பதில் அளிப்பதற்கும் பேரவைத் தலைவரோ, ஆளுங்கட்சியோ வாய்ப்பு அளிக்காத நிலையில், ஏற்கனவே திட்ட மிட்டபடி, அ.தி.மு.க.வின் தோழமைக் கட்சியைச் சேர்ந்த ஒருவரைப் பேசுமாறு  பேரவைத் தலைவரே 19-4-2012 அன்று அழைக்கிறார்.   உடனே அவர் எழுந்து,  அரசைப் புகழோ புகழ் என்று  புகழ்ந்து பேச, அதைத் தொடர்ந்து   முதலமைச்சர் ஜெயலலிதா  எழுந்து,  ஒரு நீண்ட அறிக்கையினைப் படித்ததோடு, அதனைச் செய்தியாளர் களுக்கும் அளித்துள்ளார்கள்.   அந்த நீண்ட அறிக்கை முழுவதும்  தைத் திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு நான் அடுக்கடுக்கான  ஆதாரங்களோடு  எழுதிய தற்கும், ஜெயலலிதா தெரி வித்த பதில்கள் எல்லாம் எவ்வளவு தவறானவை என்பதை நிரூபித்து எழுதியதற்கும் விளக்கம் என்ற பெயரால் எழுதிப் படித்த “சமாளிப்புகள்” தானே தவிர அடிப்படையில்  அவற்றில்  எதுவும் உண்மை இல்லை.

அரசு விழாவில் ஜெயலலிதா பேசும்போது,  தமிழ் மொழியை உலகம் முழுவதும்  பரப்பு வதற்காக அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இரண்டு உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி னோம் என்று சொன்னதால்,  தி.மு. கழக ஆட்சிக் காலத்திலும் இரண்டு உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தினோமே,  அதுமட்டும்  தமிழ் மொழியை உலகம் முழுவதும் பரப்புவதற் காக அல்லவா? என்று கேட்டிருந்தேன். அதற்கு நேரடியாகப் பதில் சொல்லத் தெரியாத ஜெயலலிதா,  கோவையில் நடைபெற்ற மாநாடு கருணாநிதியின் சுய விளம்பரத்திற்காக நடத்தப்பட்ட “தன்னல தம்பட்ட மாநாடு” என்றும்  பேரவையிலே  கூறியிருக்கிறார்.

பொதுவாக பேரவையில் 110வது விதியின் கீழ் அறிக்கை படிக்கும்போதும், யாரோ ஒரு உறுப்பினர் ஒரு ஐயத்தை எழுப்பி அதற்குப் பதில் அளிக்கின்ற போதும் குற்றச்சாட்டுகள் இருக்கக் கூடாது என்பது மரபு. மரபுக்கும், அ.தி.மு.க. அரசுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறீர்களா? அவர்களுக்கு மரபாவது, மண்ணாங்கட்டியாவது? இருந்தாலும் முதல் அமைச்சர், பேரவையிலேயே படித்திருக்கிறாரே;  நான் விளக்கம் தராமல் இருக்கலாமா?    அம்மையார் ஜெயலலிதா நடத்திய தஞ்சை உலகத் தமிழ் மாநாட்டிலே பாடிய வாழ்த்துப் பாடலிலேயே  ஜெயலலிதா பெயரை  பல இடங்களிலே பாராட்டிக் குறிப்பிட்டே பாடப் பட்டது.   ஆனால் கழக அரசு நடத்திய கோவை மாநாட்டில்  தமிழ்த்தாய் வாழ்த்துப் பா என்னால் எழுதப்பட்டதே தவிர, அந்தப் பாடலில் என்னைப் பற்றிய பாராட்டு எதுவுமே கிடையாது.  தஞ்சையில் அம்மையார் ஜெயலலிதா நடத்திய மாநாட்டிற்காக வருகை தந்த  இலங்கைத் தமிழ் அறிஞர் கா. சிவத்தம்பி உட்பட பலர் மாநாட்டில் கலந்துகொள்ள  அனுமதிக்கப்படவே இல்லை.   இன்னும் சொல்லப்போனால் வெளிநாட்டுத் தமிழறிஞர்கள் எல்லாம்  விரட்டப்பட்டார்கள் என்று ஏடுகளிலேயே அப்போது செய்தி வந்தது.    ஆனால் கோவையில் கழக அரசு நடத்திய மாநாட்டிற்கு  ஜார்ஜ் ஹார்ட்,  அஸ்கோ பர்போலா,  வாசெக்,  கா. சிவத்தம்பி, உல்ரிக் நிக்லாத்,  கிரிகோரி ஜேம்ஸ், அலெக்சாண்டர் துதியான்கி,  ஆண்ட்ரீஸ் கத்தோலியஸ்,  சீன நாட்டைச் சேர்ந்த கலையரசி,  தாமஸ் லேஇல்லை.   இன்னும் சொல்லப்போனால் வெளிநாட்டுத் தமிழறிஞர்கள் எல்லாம்  விரட்டப்பட்டார்கள் என்று ஏடுகளிலேயே அப்போது செய்தி வந்தது.    ஆனால் கோவையில் கழக அரசு நடத்திய மாநாட்டிற்கு  ஜார்ஜ் ஹார்ட்,  அஸ்கோ பர்போலா,  வாசெக்,  கா. சிவத்தம்பி, உல்ரிக் நிக்லாத்,  கிரிகோரி ஜேம்ஸ், அலெக்சாண்டர் துதியான்கி,  ஆண்ட்ரீஸ் கத்தோலி யஸ்,  சீன நாட்டைச் சேர்ந்த கலையரசி,  தாமஸ் லேமன் ஆகிய வெளி நாட்டு அறிஞர்கள் எல்லாம்  வருகை தந்து பாராட்டினார்கள். முன்வரிசையிலே அமர்ந்திருந்தார் கள்.  ஆனால் ஜெயலலிதா, முன் வரிசையிலே என் குடும்பத்தினரும்,  தி.மு.க.வைச் சேர்ந்த “தலை சிறந்த தமிழறிஞர்களும்” அமர்ந்திருந்ததாக கிண்டல் செய்துள்ளார்.   என்னுடைய குடும்பத்தினர் முன் வரிசையிலே அமர்வதே பழித்துப் பேசப்படக்கூடிய பாவகரமான ஒன்றா? தி.மு.க.வில்  தமிழறிஞர்களே கிடையாதா?  அ.தி.மு.க.விலே தான் தலை சிறந்த தமிழறிஞர்கள் எல்லாம் இருக்கிறார் களா?   என்னுடைய குடும்பத்தினர் முன் வரிசை யிலே அமரலாமா என்று கேட்கின்ற ஜெயலலிதா  சட்டப்பேரவையிலே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு தன் உடன்பிறவாச் சகோதரியை அழைத்து வந்து மரபுக்கு மாறாக  துணை சபாநாயகர் அமர வேண்டிய இடத்திலே உட்கார வைத்தாரே,  அது எந்த வகை யிலே சரியானது? ஜெயலலிதாவே  பேரவைத் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டாரே;  அது எவ்வகை மரபு என்பதை ஜெயலலிதாதான் விளக்க வேண்டும்.

சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பேசிய ஜெயலலிதா பௌர் ணமி எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ,  அந்த நட்சத்திரத்தின் பெயர்தான் மாதத்தின் பெயராக அமைந்துள்ளது என்று கூறியதையொட்டி,  சித்திரை, கார்த்திகை மாதங்களைத் தவிர  மற்ற மாதங்கள் எல்லாம்  நட்சத்திரங்களின் பெயர்களில் இல்லையே  என்று நான் கேட்டிருந்தேன். அதற்கு பேரவையில் பதிலளித்த முதலமைச்சர் ஜெயலலிதா, அந்தப் பெயர்கள் எல்லாம் திரிந்து மாதங்களாகி விட்டன என்று வழக்கம்போல சமாளிக்கப் பார்த்திருக்கிறார். உதாரணமாக  விசாகம் என்பது வைகாசியாகவும்  -  அனுஷம் என்பது  ஆனியாகவும்  - பூராடம் என்பது ஆடியாகவும்  -  திருவோணம்  என்பது ஆவணியாகவும்  -   மிருகசீர்ஷம் என்பது  மார்கழியாகவும் -  பூசம் என்பது  தையாகவும் - மகம் என்பது  மாசி மாதமாகவும் - உத்திரம் என்பது பங்குனியாகவும் வார்த்தைகள் திரிந்து விட்டதாகச் சொல்லி யிருக்கிறார்.

தமிழறிஞர்கள்  இந்த மேதா விலாச விளக்கத்தை  ஏற்க  முடிந்தால் சரி!   சென்னப்பட்டி னம் சென்னை என்று மருவியதைப் போலத்தான் இந்தச் சொற்கள் எல்லாம் மாறிவிட்டன என்கிறார்.  நன்றாகவே  காதில் பூ சுற்ற முயன்றிருக்கிறார்! நான் மேலும் கேட்கிறேன்;  நட்சத்திரங்களின் பெயர்கள் எல்லாம்  திரிந்துதான் மாதங்களின் பெயர்களாக உள்ளன என்று கூறும் ஜெயலலிதா அவர்களே,  இந்தப் பெயர்கள் எல்லாம் திரிந்தன என்றால்,  நட்சத்திரங்களின் பெயர்களை மட்டும் ஏன் பழைய பெயரிலேயே உச்சரிக்கிறார்கள்?   நட்சத்திரங்களின் பெயர்களும் அல்லவா திரிந்து வழங்கப்பட்டிருக்க வேண்டும்?

தொல்காப்பியர் “திங்கள் முன்வரின் இக்கே சாரியை”  -  இகர ஈற்று மாதப் பெயர்கள்  (ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி, மாசி, பங்குனி) -  “இக்கு” சாரியை பெறும் என்றும்  “திங்களும்  நாளும்  முந்து கிளந்தன்ன”  ஐகார ஈற்று மாதப் பெயர்கள் (சித்திரை, கார்த்திகை, தை) முன் சொன்னவாறு  இக்கு சாரியை பெறும் என்றும் கூறியுள்ளாரே, அப்படியென் றால்  இந்தப் பெயர்கள் எல்லாம் தொல்காப்பியர் காலத்திலேயே திரிந்து விட்டன என்று ஜெயலலிதா சொல்கிறாரா?

அதுபோலவே சங்க இலக்கியங்களில் எல்லாம் மாதப் பெயர்கள் இடம் பெற்றுள்ளனவே, அப்படியென்றால்  சங்க இலக்கியங்களுக்கு முன்பாகவே ஜெயலலிதா சொல்வதைப்போல நட்சத்திரங்களின் பெயர்கள் எல்லாம் இத்தகைய மாதப் பெயர்களாக திரிந்து விட்டனவா?

ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டு மலரிலே  சிறுவை நச்சினார்க்கினியன் எழுதிய  ஒரு கட்டுரையை அம்மையார் ஜெயலலிதா  மேற்கோள் காட்டிப் பேசியிருந்த  காரணத்தால்,  அதே கட்டுரையின்  முதல் பகுதியில்,  அதே சிறுவை நச்சினார்க்கினியன்  தை மாதம்  பற்றி  எழுதியதை அப்படியே வரி பிறழாமல்  குறிப்பாக   “நாம் தைத் திங்களையே ஆண்டின்  முதல் திங்களாய்க் கணக்கெடுத்துச் செயற்படுத்து வோம்”  என்று அவர் எழுதியிருக்கிறார் என்று நான் பதிலாகத் தந்திருந்தேன்.  தற்போது அம்மையார் முன் பக்கத்தில் சிறுவை நச்சினார்க்கினியன்    என்று தெரிவித்துள்ள கருத்தைப் பற்றி தான் எதுவும் சொல்லவில்லை என்று அப்படியே புறமுதுகிட்டுள்ளார்.   நச்சினார்க்கினியன் பற்றி நூற்றாண்டு விழா மண்டபத்திலே முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டாரா இல்லையா? அதே நச்சினார்க் கினியன்  தைத் திங்களையே ஆண்டின் முதல் திங்களாகச் செயல்படுத்தலாம் என்று சொல்லியிருக்கிறாரா இல்லையா?  அதைத் தான்  தி.மு. கழக அரசு,  தமிழறிஞர்கள்  சொன்னதையெல்லாம் ஒப்புக்கொண்டு சட்டத்தைக் கொண்டு வருகிறோம் என்று கூறியதே தவிர தானாக இட்டுக்கட்டி எதையும் செய்துவிடவில்லை.

“வாழ்வியற் களஞ்சியம்”  என்ற  நூலில் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்றுதான் குறிப் பிடப்பட்டிருக்கிறதே தவிர, “தை பிறந்தால் புத்தாண்டு பிறக்கும்” என்று குறிப்பிடப்பட வில்லை என்று சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா!   என்ன செய்வது?   ஜெயலலிதா போன்றவர்கள் எல்லாம் முதலமைச்சராக வருவார்கள், அவர்களுக்கு இப்படியெல்லாம் சந்தேகம் வரும் என்பது அந்த நூலாசிரியருக்குத் தெரியவில்லை போலும்!   ஆனால் நான் இந்தப் பதிலை எழுதும்போது  கொட்டை எழுத்துக்களில், தமிழ் ஆண்டின் தொடக்கமே  தை  முதல்  நாள் என்றும்,  அதுவே விழாவாகச் சிறப்பித்துச் செய்யப்படு கின்றது என்றும் அந்த நூலிலே உள்ளது என்பதை எழுதிக் காட்டியிருக்கிறேன்.     இந்தப் பொருள் புரியாமல்  தை பிறந்தால் வழி பிறக்கும் என்றுதான் அதிலே உள்ளது என்று ஜெயலலிதா பேரவையில் உண்மைக்குப் புறம்பாகச் சொல்லியிருக்கிறார்.

அடுத்து  ஜெயலலிதா “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி” என்ற நூலினை  மேற் கோள் காட்டி,  அந்த நூலில்  தமிழாண்டின்  தொடக்க மாதம் தை என்று குறிப்பிட்டிருப்ப தாகக் கூறியிருக்கிறார்  திரு. கருணாநிதி,  அந்த நூலில்  113வது பக்கத்தில்  “இச்செய்தி  தமிழ் ஆண்டு எனும் நூலிலிருந்து தொகுக்கப்பட்டது” என்றிருப்பதை தனக்கு வசதியாக  திரு. கருணாநிதி மறைத்துவிட்டார்” என்று  பேரவையிலே  படித்துக் காட்டியிருக்கிறார்.    தமிழக அரசினால் -  தமிழக அரசின் செலவில் - முதலமைச்சர் ஜெயலலிதாவின் அணிந் துரையுடன் வெளியிடப்பட்ட  “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி” யிலேயே  தை என்பதற்குப் பொருளாக “தமிழாண்டின் தொடக்க மாதம்,  திருவள்ளுவராண்டின் தொடக்க மாதம்”  என்றெல்லாம் இருப்பதை நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.   அந்தச் செய்தி  தமிழ் ஆண்டு எனும் நூலிலிருந்து தொகுக்கப்பட்டது என்பதை நான் மறைத்துவிட்டேன் என்கிறார் ஜெயலலிதா.   சொற்பிறப்பியல் பேரகர முதலியில்  பொரு வெளியிடப்பட்ட  “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி” யிலேயே  தை என்பதற்குப் பொருளாக “தமிழாண்டின் தொடக்க மாதம்,  திருவள்ளுவ ராண்டின் தொடக்க மாதம்”  என்றெல்லாம் இருப்பதை நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.   அந்தச் செய்தி  தமிழ் ஆண்டு எனும் நூலிலிருந்து தொகுக்கப்பட்டது என்பதை நான் மறைத்துவிட்டேன் என்கிறார் ஜெயலலிதா.   சொற்பிறப்பியல் பேரகர முதலியில்  பொருள் கூறும்போது,  அதை எந்தப் புத்தகத்திலிருந்து  எடுத்தாண்டு இருக்கிறோம் என்பதை விளக்கியிருக்கிறார்கள். அதிலே என்ன தவறு? இன்னும் சொல்லப்போனால்,  அம்மையார்  அரை வாக்கியத்தைத்தான் எழுதியுள்ளார்.  முழு வாக்கியத்தையும் நான் கூறுகிறேன்.  அதாவது  “திருக்குறள் மணி புலவர் இறைக்குருவனார் இயற்றிய திருவள்ளுவர் ஆண்டு அல்லது  தமிழ் ஆண்டு எனும் நூலிலிருந்து இச்செய்தி தொகுக்கப் பட்டது”  என்று உள்ளது. ஆக  நான் கூறியதற்கு மற்றும் ஓர் ஆதாரமாக புலவர் இறைக் குருவனார் அவர்களும் தை மாதம்  தமிழாண்டின் தொடக்க மாதம் என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பதைத்தானே  அம்மையார் ஜெயலலிதா ஒப்புக் கொண்டிருக்கிறார்.   இறைக்குருவனார் போன்ற புலவர் பெருமக்கள் எல்லாம் தெரிவித்த யோசனையை ஏற்றுத்தான் இந்தச் சட்டத்தை நான் பிறப்பித்தேன் என்பது உறுதியாகிறதா; அல்லவா? இறைக்குருவனார் கருத்தை யேற்றுத்தானே அந்த நூலில் அந்தப் பொருளை இடம் பெறச் செய்திருக்கிறார்கள்.   அந்த நூலை முழுவதும் படித்து விட்டுத்தானே  முதலமைச்சர்  ஜெயலலிதா அம்மையார் அந்நூலுக்கு  அணிந்துரை கொடுத்தார்?  இப்போது அவரே அந்தக் கருத்தை மாற்றிக் கொள்ளலாமா?  தமிழ்நாட்டில் இருக்கின்ற  தமிழ் அறிஞர்களே, புலவர்களே,  சான்றோர்களே  அம்மையார் வைத்த வாதம் சரியா? நான் தருகின்ற விளக்கம் சரியா? என்பதை  சமன்  செய்து சீர்தூக்கும் கோல் போல் இருந்து நீங்களே  பதில்   கூறுங்கள்.

அடுத்து  முதலமைச்சர் ஜெயலலிதா மிகத் தெளிவாக ஒரு ஐயத்தைக் கேட்டிருக்கிறார்.   1963ஆம் ஆண்டு  நான் சட்டப்பேரவையில் உரையாற்றியதைக் குறிப்பிட்டு, அப்போதே திருவள்ளுவர் தை மாதத்தில்தான் பிறந்தார் என்று கூறி ஏன் விடுமுறை நாளாக அந்த நாளை அறிவிக்குமாறு கேட்கவில்லை என்று கேட்டுள்ளார்.   தமிழறிஞர்களும், புலவர்களும்  என்னிடம் 1963ஆம் ஆண்டுக்கு முன்பே இந்தக் கோரிக்கையைச் சொல்லியிருப்பார்களானால் நான் அப்போதே அதைக் கூறியிருக்க முடியும்.   அவர்களிடம் இதைக் கேட்டால், 1969ஆம் ஆண்டுக்குப் பிறகு அண்ணா மறைந்து நீ முதலமைச்சராக ஆவாய் என்று எங்களுக்கு எப்படித் தெரியும் என்பார்கள்? இந்தக் கேள்விக்குத்தான் நான் மயிலை கூட்டத்திலேயே தெளிவாக; “சூரியன் கிழக்கே உதிக்கிறது, மேற்கே மறைகிறது என்று முன்பு சொன்னார்கள்.  பிறகுதான் விஞ்ஞானிகள் அது தவறான கூற்று,  சூரியன் ஒரே இடத்தில் தான் இருக்கிறது;  பூமிதான் தன்னைத் தானே சுற்றிக்  கொண்டு, சூரியனையும் சுற்றுகிறது என்று கூறியபிறகு அதை ஏற்றுக் கொண்டோம். அதைப்போலவே  பூமி தட்டையாக உள்ளது என்று சொல்லப்பட்டது.  பிறகு விஞ்ஞானிகள் கண்டு பிடித்துச் சொன்ன பிறகு, பூமி உருண்டை என்பதை ஏற்றுக் கொண்டோம். ஏன் இதை முன்பே சொல்ல வில்லை என்றா கேட்க முடியும்?”  என்று குறிப்பிட்டேன்.

அதுமாத்திரமல்ல; இதிலே எந்த ஆண்டு முடிவெடுக்கப்பட்டது என்பது பிரச்சினையல்ல.    “தினமணி” நாளிதழில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்த திரு. சாமி தியாகராசன் எனக்குக் கூட கடிதம் ஒன்றை, 1921ஆம் ஆண்டில் மறைமலை அடிகள் தலைமையில் பச்சையப்பன் கல்லூரியில் பேசி முடிவெடுத்தார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லையே என்று எழுதியிருந்தார்.   எப்போது முடிவெடுத்தார்கள் என்பதைவிட என்ன முடிவெடுத்தார்கள் என்பதுதான் முக்கியம்.    முடிவெடுத்தவர்கள் யார் என்பதுதான் முக்கியம். அந்த அடிப்படையில்தான் கழக ஆட்சியில் முடிவெடுக் கப்பட்டது.  இதிலே உள்ள முக்கிய குறையே;  தமிழர்களுக்கு என்று முறையான வரலாறு இல்லை என்பதுதான்.  இந்தக் குறை என்னால் மாத்திரமல்ல; நம்முடைய தமிழறிஞர்கள் பலராலும், வரலாற்றுப் பேராசிரியர்களாலும்  உணரப்பட்டது.

பொறியாளர் வே. வரதராசன் அவர்கள் எழுதிய “தமிழர் நாகரீகம்” என்ற நூலில் “1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் தலைமையில் தமிழ் அறிஞர்களும், சான்றோர் களும், புலவர்களும் ஒன்று கூடி ஆராய்ந்து திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவதென முடிவெடுத்தனர்.  திருவள்ளு வர் காலம் கி.மு. 31  என்றும் அதையே திருவள்ளுவர் ஆண்டு தொடக்கம், தைத் திங்கள் முதல் நாள் (பொங்கல் திருநாளில்) எனவும் முடிவெடுத்தனர்” என்றுள்ளது.

1937ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் - தந்தை பெரியார், உமாமகேசு வரனார், பேராசிரியர் கா. சுப்பிரமணியன், தெ.பொ. மீனாட்சிசுந்தரனார்,  தமிழ்த்  தென்றல் திரு.வி.க., மறைமலை அடிகளார், பி.டி. ராஜன்,  ஆற்காடு ராமசாமி முதலியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை அழகிரி போன்றோர் கலந்து கொண்ட அவையில்  - தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம்  என்று நாவலர் சோமசுந்தர பாரதியார் தனது தலைமையுரையில் வலியுறுத்தியிருக்கிறார்.

9-5-1971இல் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் தலைமையில் திருச்சியில் நடைபெற்ற  தமிழகப் புலவர் குழுவின் முப்பதாம் கூட்டத்தில் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா என முடிவு செய்யப்பட்டது.

மேலும் கடந்த இரண்டு நாட்களாக நமது “விடுதலை” நாளிதழில் அமெரிக்காவில் நாசா விண் மையத்தில் பணியாற்றும் பிரபல விஞ்ஞானி முனைவர் நா. கணேசன் அவர்கள் எழுதிய நீண்ட கட்டுரையில்  இந்தப் பொருள் பற்றி விரிவான விளக்கங்களையும், எந்தெந்தப் புலவர்கள், தமிழறிஞர்கள் கடந்த காலத்தில்  தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று தெரிவித்தார்கள் என்றும் எழுதப்பட்டுள்ளது. இந்தப் புலவர் பெருமக்கள் எல்லாம் தெரிவித்த யோசனைகளின் அடிப்படையிலே தான் -  எந்த ஆண்டு அந்த யோசனை தெரிவிக்கப்பட்டது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்ற உண்மை அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதால்  2008இல் நான் இவற்றையெல்லாம் அறிந்து ஆய்ந்த பிறகு முடிவெடுத்து  அறிவித்தேன் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.   

ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா பேரவையில் விடுத்துள்ள அறிக்கையில்  நான் முறையாக எதையும் ஆய்வு செய்யாமல், தன்னிச்சையாக, தான்தோன்றித்தனமாக சட்டத்தை இயற்றினேன் என்று கூறியிருக் கிறார்.   தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு  என்பதை தற்போது சித்திரைத் திங்கள் என்று அம்மையார் மாற்றியிருப்பது தான் எதையும் ஆய்வு செய்யாமல் காழ்ப்புணர்வோடு செய்யப்பட்ட செயல். அவர்தான் தன்னிச்சையாக, தான்தோன்றித் தனமாக தமிழினத்தைத் திசை திருப்பும் வகையில் நடந்து கொண்டுள்ளார் என்பதைத்  தமிழக வரலாறு ஒருநாள்  நிச்சயமாக மெய்ப்பிக்கும்!  தமிழர்களின் சரியான அடையாளத்தை அழித்திட முற்படுவது அக்கிரமம்! அதற்குப் பொய்யான நியாயம் கற்பித்திட முயலுவதும்  புல்லர்கள் சிலர் புயம் தட்டிப் புறப்படுவதும் அராஜகம் என்பதை உண்மைத் தமிழர் விரைவில் உணர்ந்தே தீர்வர்!


அன்புள்ள,

    மு.க.







நன்றி: https://nganesan.blogspot.com/2012/06/tamil-new-year-debate-murasoli.html?m=1 

சிவபெருமான் எமனை உதைத்தார்

  திருக்கடையூரில் சிவபெருமான் மார்க்கண்டேயனைக் காக்க எமனை உதைத்த வீரட்ட நிகழ்வு  மிருகண்டு முனிவருக்கும் அவரது மனைவி மருத்துவதிக்கும் பல கால...