வேதத்தின் உருவம் தான் கருடன். அழகிய சிறகுகளைக் கொண்ட கருடன், சர்ப்பங்களை உணவாகக் கொள்பவர். இந்தக் கரோனாவையும் உணவாகக் கொண்டு நம்மை இந்த கடும் ஆபத்தில் இருந்து காக்க அவரை வழிபடுவோம்.
கருட தரிசனம் செய்வது பெருமாளே நேரில் வந்து நமக்கு வெற்றி வாழ்த்து சொல்வதற்கு சமம் ஆகும். கார்க்கோடகன் பெயரைச் சொன்னால் ஏழரைச்சனியினால் ஏற்படும் கஷ்டம் விலகும் என்கிறது நளசரித்திரம். அந்தக் கார்க்கோடகனை ஹாரமாக அணிந்திருப்பவர் கருடன். நவ நாகங்களில் ஆதிசேஷனை இடது கால் நகத்திலும், குளிகனை கழுத்தின் பின்புறத்திலும், வாசுகியை பூணூலாகவும், தட்சகனை இடுப்பிலும், பதுமம் மற்றும் மகாபதுமம் எனும் நாகர்களை இரண்டு காதணிகளாகவும், சங்கசூடனை தலைமுடியிலும் அணிந்திருப்பார் கருடன். ராம ராவண யுத்தத்தில் பெருமாளையும், இளைய பெருமாளையும் நாகபாசத்தில் இருந்து விடுவித்தவர் இவர் தான். பாற்கடலைக் கடையும்போது திருமாலின் கட்டளைப்படி மந்திர மலையைத் தன் முதுகில் சுமந்து வந்து பாற்கடலில் வைத்தவரும் கருடன் தான். கருடனே பெருமாளுக்கு ஆசனம், கருடனே பெருமாளுக்கு வாகனம், அதுவும் தவிர அவரே தான் பெருமாளுக்கு வெற்றிக் கொடியும் ஆவார். கோவில் நுழைவாயிலுக்குள் சென்றவுடன் த்வஜஸ்தம்பம் உள்ளதே அது தான் கருடக் கொடி.
ஒவ்வொரு பெருமாள் கோவிலிலும் பெருமாள் சன்னதிக்கு நேர் எதிராக கருட பகவானுக்கும் சன்னதி இருக்கும். பொதுவாகவே எந்த கோவிலுக்கு சென்றாலும் முதலில் விநாயகப் பெருமானை தான் தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம். இதேபோல் பெருமாள் கோவில்களுக்கு நாம் செல்லும் போது, முதலில் கருடாழ்வாரை தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஒரு சாஸ்திரம் உண்டு. அவர் ஸ்ரீவிஷ்ணுவின் பிரிக்க முடியாத சக்தி என்பதால் அவரையும் ஸ்ரீவிஷ்ணுவாகவே கொள்ள வேண்டும். பெருமாள் கோவில்களில் கருடனிடம் அனுமதி பெற்ற பின்பே பெருமாளை தரிசிக்க வேண்டும். அதே போல முதலில் கொடிமரத்தின் முன்னே நமஸ்கரித்து விட்டு தான் கோவிலுக்குள் நுழைய வேண்டும். தன்னை வழிபடும் பக்தர்களின் குறைகளை கருடன், தன்னுடைய எஜமானரான மகாவிஷ்ணுவிடம் கொண்டு செல்வார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
அவர் நித்திய சூரி அதாவது வைகுண்டத்தில் பெருமாளுக்கு எப்பவும் சேவை செய்து கொண்டிருக்கும் பேறு பெற்றவர். ‘இவனது வலிமை கண்டு திருமால் கேட்டுக்கொள்ள, வாகனமும் கொடியும் ஆனவன்’ என்று அபிதான சிந்தாமணி கருடனைப் பற்றிச் சொல்கிறது. வாகனத்தின் மீது ஏறி அமர்கின்ற போது அதன் மீது திருமாலின் திருவடி படுகின்ற தன்மையால் திருவடி என்னும் சிறப்புப் பெயர் விளங்குகிறது. அருணகிரி நாதர்
தாவடி, ஓட்டும் மயிலிலும், தேவர் தலையிலும், என்
பாஅடி ஏட்டிலும் பட்டது அன்றோ! படி மாவலி பால்,
மூவடி கேட்டு, அன்று மூது, அண்ட கூட முகடு முட்ட,
சேவடி நீட்டும் பெருமான் மருகன்! தன் சிற்றடியே!
தாவடி ஓட்டும் மயிலிலும் என்று முருகன் திருவடி பட்ட இடங்களில் முதன்மை இடமாக வாகனத்தைக் குறிப்பிடுகிறார். எனவே, வாகனமாக இருக்கும் தன்மையால் கருடன் பெரிய திருவடியாகிறார். பறவைகளில் நான் கருடனாக உள்ளேன் என்று கருடனைப்பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது பகவத் கீதையில் கூறியுள்ளார்.
இவர் ஆவணி மாதம் வளர்பிறைப் பஞ்சமி திதியும் சுவாதி நட்சத்திரமும் கூடிய அன்று அவதரித்தார். அந்த நாளே கருட பஞ்சமி என்று கொண்டாடப் படுகிறது. சோதிட சாஸ்திரம் சுவாதி நட்சத்திரத்தைப் பற்றி மிக உயர்வாகக் குறிப்பிடுகிறது. பகவான் ஸ்ரீ நரசிம்மரும் ,பெரியாழ்வாரும் அவதரித்தது சுவாதி நட்சத்திரத்தன்று தான். தட்சணின் மகளான வினதா என்பவருக்கும், கஸ்யப முனிவருக்கும் பிறந்தவரே கருடன். அதனாலேயே அவருக்கு விநதேயன் என்ற பெயரும் உண்டு. கருட் என்றால் சிறகு எனப்பொருள். இதிலிருந்து கருடன் என்ற பதம் வந்துள்ளது. ஒரு முறை கருடன் மரத்தில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டு தவத்தில் இருந்த வாலகில்ய முனிவர்களை காப்பாற்றியதால், எதையும் எளிதில் சுமப்பவன் என்ற பொருளில் கருடன் எனப் பெயர் சூட்டினர். ஸ்ரீ கருடபகவானுக்கு இரண்டு மனைவியர் அவர்கள் ருத்ரா மற்றும் சுகீர்த்தி. கருடன் பிறந்தபோது, அவரது தாய் வினதை அடிமை வாழ்வில் இருந்தார். சொந்த சகோதரியான கத்ரு தான், அவரை அடிமையாக வைத்திருந்தாள். இந்திரனிடம் உள்ள அமிர்தத்தை கொண்டு வந்தால், வினதையை விடுவிப்பதாக கூறினாள் கத்ரு. எனவே தேவலோகம் சென்று, இந்திரனுடன் போரிட்டு அமிர்தத்தைக் கொண்டு வந்தார் கருடன். இதையடுத்து வினதை விடுவிக்கப்பட்டார். வினதை விடுதலையானதும், கத்ருவிடம் இருந்த அமிர்தத்தை எடுத்துச் சென்று மீண்டும் தேவலோகத்திலேயே ஒப்படைத்துவிட்டார் கருடன். தன் கையில் அமிர்த கலசம் கிடைத்தும் சுய நலத்திற்காக பயன்படுத்தாமல், தன் தாயை மட்டும் விடுவித்து மீண்டும் தேவர்களிடம் ஒப்படைத்தவர் கருடன்.
கருடன் கருடாழ்வார் என்றும் அழைக்கப்படுகிறார். கிருத யுகத்தில் அஹோபிலத்தை கொடுங்கோலனாக ஆண்டு கொண்டிருந்த ஹிரண்யகசிபுவை வதம் செய்து தன் பக்தனான பிரகலாதனைக் காப்பாற்ற பெருமாள் எடுத்த அவதாரம் நரசிம்ம அவதாரமாகும். இந்த நிகழ்வுகள் அஹோபிலத்தில் தான் நிகழ்ந்தன. பிரஹலாதனைக் காக்க பெருமாள் நரசிம்ம மூர்த்தியாக ஹிரண்யனின் அரண்மணை தூணில் அவதாரம் செய்ததால் அவர் கருடன் மேல் எழுந்தருளி வராமல், கருடனை விடுத்து தனியாக வரவேண்டியதாயிற்று. இதுபற்றி அறிந்த கருடன் மிகவும் துயருற்று பெருமாளிடம் நரசிம்ம அவதார காட்சியை தனக்கும் காட்டி அருள வேண்டினார். பெருமாள் கருடனை அஹோபிலம் சென்று தவமியற்றும் படி கூறி தான் அங்கேயே நரசிம்ம அவதார காட்சி தருவதாகவும் உறுதியளித்தார். அவ்வாறே பல இன்னல்களுக்கிடையே கருடன் தவமியற்றினார். கருடனுக்கு உறுதியளித்த படி பெருமாள் மலைக்குகையில் உக்ர நரசிம்மராய் காட்சியளித்தார். மாறாத பக்தி கொண்டு பெருமாள் சேவையே பெரிது என்று அவரிடம் பூரண சரணாகதி அடைந்ததால் கருடன், கருடாழ்வார் என்று போற்றி அழைக்கப்படுகின்றார். ஸ்ரீகருட பகவானை உபாசனை செய்வதே அவர் சுட்டிக்காட்டும் ஸ்ரீமந் நாராயணனின் திருவடிகளைப்ம் பற்றிக் கொள்வதற்காகத்தான்.
கஜேந்திர மோக்ஷம் வைபவத்தில் கருடாழ்வார் பங்கு உலகறிந்ததே! கருடாழ்வார் வாகனத்தில் விரைந்து வந்து தனது விஷ்ணு சக்கரத்தை ஏவி முதலையின் கழுத்தை துண்டாடி முதலில் ஹு ஹுவை முதலை ரூபத்தில் இருந்த கந்தரவனை சுவர்க்கம் கொண்டு சென்றார். சாப விமோசனம் பெற்ற கஜேந்திர மன்னன் மோக்ஷம் அடைந்தான். பெருமாள் தன் கருட வாகனத்தில் விரைந்து வந்த வேகம் சொல்லில் விவரிக்க முடியாது. அதனால் தான் ஸ்ரீரங்கராஜ ஸ்தவத்தில் பராசரபட்டர் இப்படிப் பாடுகிறார்.
'ஹே ரங்கநாதா! நீ அந்த யானையை ரக்ஷித்ததற்காக உன்னை, நமஸ்கரிக்கவில்லை. இந்த அஞ்சலி எதற்கு என்றால் நீ ஓடிவந்த வேகத்துக்காக! கருடனை வணங்கினால் பகவானை வணங்கிய பலன் கிடைக்கும். கருடனின் அழகிய இறக்கைகளே யக்ஞங்கள் என்றூம், மந்திரங்களில் சிறந்த காயத்திரியே கருடனின் கண்கள் என்றும், தோத்திர மந்திரங்கள் அவனுடைய சிரசு என்றும், சாம வேதம் அவனுடைய உடல் என்றும் சாமவேதம் குறிப்பிடுகிறது.
கருட உபாசனை பற்றியும் அவரது பிரபாவம் பற்றியும் மிகச் சிலரே அறிவர். கருட உபாசனை அஷ்டமா சித்துக்களைத் தரவல்லது என்பது உண்மை.
கருட காயத்ரி மந்திரம்:
‘ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸூவர்ண பட்சாய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்’
இதன் பொருள்: பரம புருஷனை அறிந்து கொள்வோம். சொர்ணத்தைப் போல் ஒளிவீசும் அவன் மீது தியானம் செய்வோம். கருட பகவானான அவர் நம்மை காத்து அருள் செய்வார். இந்த காயத்ரி மந்திரத்தை சொல்லி கருடனை வழிபடுபவர்களுக்கு விஷ ஜந்துகளால் ஆபத்து நேராது. தத்துவ அறிவு உண்டாகும். கருடனைத் துதித்தால் நாராயணனின் அருளும் கிடைக்கும். பகை விலகும். ஆபத்து அகலும். நல்ல காரியங்கள் நடந்தேறும். கருடனை வழிபடும் போது கருட காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரித்து வழிபட்டால், நினைத்த காரியங்கள் எளிதாக நிறைவேறும் என்று கூறப்படுகிறது. கருட மந்திரங்கள் பல உள்ளன. அதில் மிக எளியதும் மிக வலிமையானதும் காருடப் பிரம்ம வித்யா என்றழைக்கப்படும் கருட பஞ்சாக்ஷரி மந்திரம் தான்.
கருட பஞ்சாக்ஷரி மந்திரம் :-
ஓம் க்ஷிப ஸ்வாஹா
ஒரு வளர்பிறைப் பஞ்சமி அன்று ஜபத்தை தொடங்கி 90 நாட்களில் அல்லது 90 நாட்களுக்குள் லக்ஷம் உரு ஜெபித்தால் மந்திரம் சித்தியாகும். பின்னர் விஷம் தீண்டியவர்களுக்கு நீரில் 108 உரு மந்திரம் ஜெபித்து அருந்தச் செய்தாலும், பிரம்பு அல்லது கத்தி கொண்டு மந்திரித்தாலும் விஷம் நீங்கும். கிரஹண காலத்தில் நீரில் நின்று ஜெபிக்க நிறைவான சித்தி கிடைக்கும். இதை செய்ய முடிந்தவர்கள் செய்து நம் மக்களிடையே பரவி வரும் கரோனாவை தடுக்கவும் உலக நன்மைக்காகவும் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
இவருக்குரிய இன்னொரு ஸ்லோகம்:
அம்ருத கலச ஹஸ்தம் காந்தி ஸம்பூர்ணதேஹம்
ஸகல விபுதவந்த்யம் வேத சாஸ்த்ரைரசிந்த்யம்
விவித ஸுலப பக்ஷை: தூய மானாண்ட கோநம்
ஸகல விஷவிநாஸனம் சிந்தயேத் பக்ஷிராஜம்.
க்ஷிப ஓம் ஸ்வாஹா:
பொருள்:
அமிர்த கலசத்தை தன் கையில் ஏந்தியவரே, அனைத்து தேவ, தேவியர்களால் வணங்கப்படுபவரே, இவரின் பெருமையை யாராலும் விவரிக்க முடியாதவராக விளங்குபவர். பட்சிராஜனான கருட பகவானை நான் சிந்தையில் நிறுத்தி ஆராதிக்கிறேன்.
இவரின் இறக்கை காற்று அண்டங்களை எல்லாம் நடுநடுங்கச் செய்யும். இவரை வணங்கினால் பாம்பு விஷம் நீங்கும். சகல விஷத்தால் ஏற்பட்ட வியாதிகளும் நீங்கும். பாம்பு கடித்து விஷம் தலைக்கேறினால் முகம் நிறம் மாறிவிடும் காப்பாற்றுவது கடினம்,விரைவில் மரணம் ஏற்படும். அப்படி விஷத்தால் கடுமையாகப் பாதிப்பு அடைந்தவர்களைக் கூட கருட மந்திரப் பிரயோகத்தினால் விஷம் நீக்கி இயல்பு நிலை பெறச்செய்துள்ளனர்.
அடிக்கடி பாம்பு,தேள் மற்றும் இதர விஷ ஜந்துக்களால் தொல்லை ஏற்பட்டால் அதற்கு சித்தர்கள் முறைப்படி மந்திரிக்க உடனே விஷம் இறங்கும். மேலும் விஷ நிவாரண கருடரக்ஷை கட்டிக்கொள்ள விஷ ஜந்துக்கள் தீண்டாது. இந்த கருட துதியை நோயுற்றவர்கள் அல்லது அவர்களது சார்பாக யாரேனும் ஒருவர் 1008 முறை விபூதியில் ஜபம் செய்து கருட தரிசனம் செய்தால், விஷத்தால் ஏற்பட்ட பாதிப்பும், நோய்கள் விலகும் என்பது பலரின் அனுபவத்தில் கண்ட உண்மை. நோய் வாய்பட்டவர் மட்டுமில்லாமல் மற்றவர்களும் இந்த ஸ்லோகத்தை தியானித்து வந்தால் மரண பயம் நீங்கி, நோய் நீங்கி நன்மை கிடைக்கும்.
இவரை வழிபட்டால் நாக தோஷம் (சர்ப்ப தோஷம்) விலகும். ஜன்ம ஜாதகத்தில் ராகு,கேது என்ற சர்ப்ப கிரகங்களின் அமைப்பு கெடுபலங்களைச் செய்யும் அமைப்பு உள்ளவர்கள் ஸ்ரீ கருட பகவானை வழிபட்டு வரக் கெடுபலன்கள் குறையும். கால சர்ப்ப தோஷ ( இதனால் பலருக்குகத் திருமணம் விரைவில் கூடி வராமல் இருக்கும்) பாதிப்புகள் குறைய ஸ்ரீ கருட உபாசனை செய்து வரலாம். ஸ்ரீ கருட பகவானுக்கு சிவந்த பட்டு வேஷ்டி சார்த்தி மல்லி, மரிக்கொழுந்து, சண்பக மலர்களால் அர்ச்சிக்க வரங்களை மகிழ்ந்து அருள்வார். பயந்த சுபாவம் கொண்டவர்கள் கருடனை வழிபட்டு வர மனோதிடம் உண்டாகும். ஜாதகத்தில் புத்திர தோஷம், ருணம், ரோகம், சத்ரு பீடை, பில்லி, சூனியம் போன்றவற்றை நீக்கி சகல சௌபாக்கியங்களும் தரக்கூடியவர் கருடாழ்வார்.
கருடனை உபாசித்து வைணவ சமய ஆச்சார்யரான சுவாமி தேசிகன் கருடனால் ஹயக்ரீவர் மந்திரம் உபதேசிக்கப் பெற்று சிறந்த ஆச்சாரியராக விளங்கினார். இவர் கருடன் மீது கருடதண்டகம், கருட பஞ்சாசத் என்ற சுலோகங்களை இயற்றியுள்ளார். இவை மிகவும் சக்தி வாய்ந்தவை. ஒரு குருவின் மூலமாக கற்றுக் கொண்டு பாராயணம் செய்து நாம் பயன் அடையலாம். ஸ்ரீ மணவாள மாமுனிகள் வேங்கடவனைத் தரிசிப்பதற்கு முன்பாக முதலில் ராமானுஜரை சேவித்து பிறகு கருட பகவானை வணங்கி விட்டு, பின்னர் ஏழுமலையானை தரிசிப்பது வழக்கம் என்று அவர் புராணம் கூறுகிறது.
கேரளாவில் கருடபகவானை மட்டுமே உபாசனா தெய்வமாக வழிபடுபவர்கள் பலர். ஆனால் சுத்த சாத்வீகம் அவசியம். அசைவ உணவு உண்பவர்களுக்கு இவரது மந்திரம் சித்திக்காது. எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். அதர்வண வேதத்தில் முப்பத்திரண்டு வித்தைகளில் கருடனுக்கு முதல் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. துறவிகளின் முக்கிய தேவதை கருடனே. கேரள மன்னரான சுவாதி திருநாள் இசை வித்தகராக மட்டுமின்றி பல கலைகளிலும் வல்லவராக இருந்ததற்குக் கருடோபாசனையே காரணம்.
கருடனது பீசாட்சாரம் கம். சக்தி பீஜம் டம். கருடனுடைய பெயரிலேயே இரண்டும் இருக்கிறது. பெருமாள் சோதனை செய்து வரம் தருவார். கருடனோடு சேர்த்துத், திருமாலை பிரார்த்தித்தால் உடனே அமோகமான பலன்கள் கிடைக்கும் என்கிறது பரிவதிலீசனைப் பதிகம். கருட புராணம் என்னும் நூலில் மனிதர்கள் செய்யும் பாவத்திற்கு அவர்கள் இறந்த பின்
அனுபவிக்கும் கஷ்டங்களை பற்றி விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மகாவிஷ்ணு, மனிதனின் பிறப்பு, இறப்பு, சொர்க்கம், நரகம் போன்றவை பற்றி கருடனிடம் கூறிய விவரங்களே கருட புராணம் என்று அழைக்கப்படுகிறது. கருட புராணத்தை அமாவாசை, பவுர்ணமி, மாதப் பிறப்பு, கிரகணம், சிராத்தம் போன்ற முக்கிய தினங்களில் படிப்பது
காரியத் தடைகளை அகற்றி ஜெயம் அளிக்கும்
கருடனுக்கு 8 விதமான திருஷ்டிகள் (பார்வை) உண்டு.
கருட த்ருஷ்டிகளும் அவற்றின் விதமும்:-
1.விசாலா -புன்னகை பூத்த பார்வை
2.கல்யாணி - மான் போன்ற பார்வை
3.தாரா - குருக்குப்பார்வை
4.மதுரா - அருளும் பிரேமையும் வழங்கும் பார்வை
5.போகவதி -தூக்ககலக்கமான பார்வை
6.அவந்தீ - பக்க வாட்டுப் பார்வை
7.விஜயா - கணவன் மனைவியிடையே நேசத்தைப் பூக்கச் செய்யும் பார்வை
8.அயோத்யா - வெற்றியைத் தரும் பார்வை
முற்காலத்தில் சன்யாசிகள், சாதுக்கள் கிடைத்ததை உண்டு எங்காவது தங்கி தேசம் முழுவதும் சஞ்சாரம் செய்வார்கள். அவர்கள் தங்கள் கையில் ஒரு பிரம்பு அல்லது கம்பு வைத்திருப்பார்கள். கருட மந்திரத்தை லட்சம் உருவேற்றி அதன் சக்தியை அந்த கம்பில் இறக்கி வைத்திருப்பார்கள். இரவில் உறங்கும் தாங்கள் படுக்கும் இடத்தில் அந்த கம்பினால் கருட மந்திரம் ஜெபித்தபடி ஒரு வட்டம் போட்டு அதனுள் உறங்கி விடுவார்கள். அந்த வட்டத்திற்குள் எந்த விஷ ஜந்துக்களும் தீய சக்திகளும் வராது. யாரையேனும் விஷ ஜந்துக்கள் தீண்டினாலும் அந்த கம்பு கொண்டு மந்திரித்து விஷத்தை நீங்கச் செய்வார்கள்.
தோல் வியாதி கொடிய கர்ம வினையினால் வருவதே என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. சில சித்தர் நூல்கள் தோல் வியாதி உள்ளவர்களுக்கு மருத்துவம் செய்தால் அந்த கர்மா நம்மைப் பாதிக்கும் என்று சொல்கின்றன. தோல் வியாதி உள்ளவர்கள் குளிக்கும் போது கிழக்கு நோக்கி நின்று கொண்டு கருட மந்திரத்தை 108 ஜெபித்து அதன் சக்தி நீரில் இறங்கட்டும் என சங்கல்பம் செய்து குளித்து வர தோல் வியாதிகள் நீங்கும்.
கருடனுக்கு கருத்மான், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பக்ஷிராஜன், தார்ச்டயன், மோதகாமோதர்,மல்லீபுஷ்யபிரியர், மங்களாலயர், சோமகாரீ, பெரிய திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜயகருடன், புள்ளரசு, கலுழன், சுவணன்கிரி என்றும் ஓடும்புள் கொற்றப்புள் என்றும் பெயர்கள் உண்டு. வைணவ ஆழ்வார்கள் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் 36 இடங்களில் கருடனை போற்றிப் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள். கருடனுடைய மகிமையை ஏகாதசி, திருவோணம் போன்ற புண்ணிய தினங்களில் படிப்பவர்களும், கேட்பவர்களும் கடும் நோய்களில் இருந்து விடுதலை பெறுவர்.
வீட்டை விட்டு வெளியே வரும்போது கருடன் வானில் தென்பட்டால் நல்ல சகுனம் என்று கருதுவது வழக்கத்தில் இருக்கிறது. ஆயிரம் ஆயிரம் சுப சகுணங்கள் கிட்டினாலும் ஒரு கருட தரிசனத்திற்கு ஈடாகாது! கருடப் பறவை மங்களம் நிறைந்ததாகக் கருதப் படுகிறது. கோவில் கும்பாபிஷேக நேரத்தில் வானத்தில் கருடன் வட்டமிட்டால் நாடு சுபிட்சம் பெறும் என்பது ஐதீகம். கோயிலில் கும்பாபிஷேகம், யாகம், சிறப்பு வழிபாடுகள் நடக்கும்போது, கோயிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவதை இன்றும் காணலாம். கருடாழ்வாரை வானத்தில் பார்த்தால் 'கிருஷ்ணா' 'கிருஷ்ணா' என்று சொல்லி வணங்குவது வழக்கம். (சிறுவர்களாக இருந்தபோது அப்படி வானத்தில் பார்த்தால் 'கருடா, கருடா பூ போடு' என்று சொல்லியிருக்கிறீர்களா? அது நம் நகத்தில் வெண்மையாக போடும் என்பது நம் குழந்தைத் தனமான ஆர் எண்ணம் :)) சபரிமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் மகரஜோதி தரிசனத்துக்காக கேரளா மாநிலம் பந்தளம் எனும் ஊரில் உள்ள அரண்மனையிலிருந்து திருவாபரணப் பெட்டிகள் ஊர்வலமாக சபரிமலைக்கு எடுத்து வரும்போது கூடவே கருடன் பறவை நேர் மேலே வட்டமிட்டபடி தொடர்ந்து வருவதை இன்றும் காணலாம். வேதங்கள் எங்கெல்லாம் ஒலிக்கப் படுகிறதோ, அங்கெல்லாம் நிச்சயம் இவரின் தரிசனம் கிடைக்கும்.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் ரங்க மன்னர் ஆண்டாளுடனும் கருடனுடனும் ஒரே ஆசனத்தில் காட்சி தருவது வேறு எந்த தலத்திலும் இல்லாத சிறப்பு. இப்படி இங்கு கருடனுக்கு தனிமரியாதை கொடுப்பதன் காரணம் கருடன் பெரியாழ்வாராக அவதரித்ததால் மாமனார் ஸ்தானம் ஆகிறது. கருடனால் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட வைரமுடி என்கிற அணிகலன் தற்பொழுது கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்கோட்டை என்னும் திருநாராயணபுரத்து பெருமாளுக்கு சூட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி இன்றும் ஒவ்வொரு பங்குனி ஏகாதசியில் வைரமுடி சேவை என்று திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. கருட பகவான் வைகுண்டத்திலிருந்து திருப்பதிக்கு சுவாமி புஷ்கரணி என்ற குளத்தை கொண்டு வந்ததாகவும் புராணம் கூறுகிறது. தாயை விடுவிக்க அமிர்தக் குடத்தை எடுத்துவர தேவலோகம் சென்ற கருடன், அங்குள்ள தர்பைப் புல்லையும் பூலோகத்திற்குக் கொண்டு வந்தார். அமிர்தத்துடன் தர்ப்பையையும் கொண்டு வந்ததால் அதனை அமிர்தவீர்யம் என்ற பெயரில் அழைக்கின்றனர். ஒரு காலத்தில் சுவேதத் தீவில் இருந்த பாற்கடலின் பால் கட்டிகளை தன்னுடைய சிறகு முழுவதும் அப்பிக்கொண்டு வந்து எங்கும் உதறினார் கருட பகவான். அவற்றையே ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருமண் என்று அணிந்து கொள்கின்றனர்.
நம்பாடுவான் என்ற ஹரிஜன வைணவ பக்தனுக்காக கருடாழ்வாரும், கொடி மரமும் சற்று விலகி உள்ள தலம் திருக்குறுங்கடி. ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ கருடபகவான் நின்ற திருக்கோலத்தில் நாமக்கல் ஆஞ்சநேயரைப்போல மிகப் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறார். பாண்டி நாட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருத்தங்கல்லில் (திருத்தண்கால்) கோவிலில் கருடாழ்வார் சர்ப்பத்துடனும்,அம்ருத கலசத்துடனும் காட்சியளிக்கிறார்.
கும்பகோணம் அடுத்த நாச்சியார் கோயிலில் ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இத்தலத்தில் எழுந்தருளும் ஸ்ரீ வஞ்சுளவல்லி தாயார் சமேத நறையூர் நம்பியான ஸ்ரீனிவாச பெருமாளையும், கஷ்டங்கள் தீர்க்கும், கவலைகள் தீர்க்கும் கல் கருட பகவானையும் சரணடைவோர்களுக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கை. இவர் தான் பெருமாளுக்கும் தாயாருக்கும் இங்கு திருமணம் நடத்தி வைத்தார். இத்தலத்தில் கல் கருடன் சாளக்கிராம சிலை வடிவில் பெருமானின் மூலஸ்தானத்துக்குக் கீழ் உள்ள மகா மண்டபத்தில் தெற்கு நோக்கி அமர்ந்துள்ளார். உற்சவ காலங்களில் கல் கருடன் வாகன மண்டபத்திற்கு வரும் போது கருடனைச் சுமப்பவர் நால்வர் மட்டுமே. வெளியில் வந்தவுடன் எடை கூடி 16 பேர் தூக்குவார்களாம். சிறிது தொலைவு சென்ற பிறகு 32 பேர் கருடனை சுமப்பார்களாம். கோயில் வாயிலை அடைந்ததும் 64 பேர் சுமப்பார்களாம். பெருமானைத் தாங்கி வரும் கல் கருடனுக்கு வியர்த்துக் கொட்ட, வஸ்திரங்கள் அனைத்தும் வியர்வையால் நனைத்து விடும். கருட சேவை முடிந்து கல் கருடன் தனது சன்னதிக்கு வரும் போது படிப்படியாக கருடனின் எடை குறைந்து விடும். இந்த கல் கருடனுக்கு 7 அல்லது 11 வியாழக்கிழமைகள் 3 நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட கடுமையான சர்ப்ப தோசங்கள் நிவர்த்தியாகும். கனவுகளில் சர்ப்பங்கள் வருவது நிற்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.