google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: அக்டோபர் 2022

வியாழன், 20 அக்டோபர், 2022

மனிதனுக்குக் கிட்டிய ஆயுள்


கடவுளிடம் மனிதன் வேண்டிய ஆயுள்

எல்லா உயிரினங்களுக்கும் வாழ்நாளை எவ்வளவு காலம் வைக்கலாம், என்று சிந்தித்தார் கடவுள். எல்லாவற்றிற்கும் சமமாக முப்பது ஆண்டுகள் உயிர்வாழ அருளலாம் என்று நினைத்தார்.
ஆகவே எல்லா உயிரினங்களை
யும் அழைத்தார். அவை அவரிடம் வந்தன. அவற்றைப் பார்த்து உங்கள் ஒவ்வொருவருக்கும் முறையே முப்பது ஆண்டு ஆயுள் தருகிறேன். இந்த வாழ்நாள் போதும் என்பவர்கள் இங்கிருந்து சென்று விடலாம். குறை உடையவர்கள் இங்கேயே இருங்கள். தீர விசாரித்து அவர்கள் குறையைத் தீர்த்து வைக்கிறேன், என்றார்.

கழுதை, குரங்கு, நாய், மனிதன் ஆகிய நால்வர் மட்டுமே அங்கே தயங்கியபடி இருந்தனர். மற்றவை அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றுவிட்டன.

முதலாவதாக நின்றிருந்த கழுதையை அழைத்தார் கடவுள். உன் குறை என்ன? என்று கேட்டார்.

கடவுளே! என் நிலையைப் பாருங்கள். நான் நாள்தோறும் ஏராளமான சுமைகளைச் சுமந்து துன்பப் படுகிறேன். ஓய்வோ தூக்கமோ எனக்குக் கிடைப்பது இல்லை. எப்பொழுதும் பசியால் துன்பப் படுகிறேன். முதுகில் சுமையுடன் வரும் நான், தெருவோரம் முளைத்து உள்ள புற்களில் வாயை வைத்து விடுவேன். என்னை அடித்துத் துன்புறுத்துவார் என் முதலாளி. மகிழ்ச்சி இல்லை. என் வாழ்க்கையே நரகம். இந்தக் கொடுமைகளை எல்லாம் என்னால் எப்படி முப்பது ஆண்டுகள் தாங்கிக் கொள்ள முடியும்? என் மீது கருணை கொண்டு என் ஆயுளைக் குறைத்து விடுங்கள், என்று கெஞ்சியது.

சரி! பன்னிரண்டு ஆண்டுகள் குறைத்து விடுகிறேன். இனி உன் வாழ்நாள் பதினெட்டு ஆண்டுகள் தான், என்றார் கடவுள்.

இதைக் கேட்ட கழுதை மகிழ்ச்சியுடன் அங்கிருந்து புறப்பட்டது.

அடுத்ததாக இருந்த நாயை அழைத்தார் கடவுள் உன் குறை என்ன? என்று கேட்டார்.

கடவுளே நான் வலிமையுடன் நன்றாக மோப்பம் பிடிக்கும் திறமையுடனும் இருக்க வேண்டும். என் காதுகள் துல்லியமான சிறு ஓசையைக் கூடக் கேட்க வேண்டும். அப்பொழுதுதான் எனக்கு மதிப்பு. நான் முதுமையடைந்து தளர்ந்து விட்டால் எல்லோருமே என்னை வெறுக்கின்றனர். எனக்கு உணவும் கிடைப்பதில்லை, என்றது நாய்.

உனக்கு நான் தந்திருக்கும் வாழ்நாள் மிக அதிகம் என்று கருதுகிறாய். குறைத்து விடுகிறேன். இனி உன் வாழ்நாள் பன்னிரெண்டு ஆண்டுகள் தான், என்றார் கடவுள்.

மகிழ்ச்சி அடைந்த நாயும் கடவுளை வணங்கிவிட்டுப் புறப்பட்டது.

குரங்கு கடவுளின் முன் குதித்து வந்து நின்றது. உனக்கு என்ன குறை? என்று கேட்டார், கடவுள்.

பல்லைக் காட்டிய குரங்கு, கடவுளே! முப்பது ஆண்டுகள் என்பது நீண்ட காலம் ஆயிற்றே. அவ்வளவு காலமாகவா நாங்கள் கொடுமையை அனுபவிக்க வேண்டும்? உணவுக்காக நாங்கள் மனிதர்களிடம் பல்லைக் காட்டுகிறோம். நாட்டியம் ஆடுகிறோம். என்னென்னவோ செய்கிறோம். இருந்தாலும் எங்களுக்குக் கிடைப்பவை அழுகிப் போன பழங்கள்தான். முதுமை அடைந்து விட்டால் எங்களால் கிளைக்குக் கிளை தாவ முடியாது. அப்பொழுது எங்கள் நிலை மிகப் பரிதாபமாக ஆகி விடும். எங்களால் எந்தச் செயலும் செய்ய முடியாது. ஆகவே எங்கள் ஆயுளைக் குறையுங்கள், என்று வேண்டியது.

இனி உங்களுக்குப் பத்து ஆண்டுகள் தான் வாழ்நாள், என்றார் கடவுள்.

குரங்கும் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து புறப்பட்டது. கடைசியாக இருந்த மனிதனை அழைத்தார் கடவுள்.
உன் குறை என்ன? உனக்கு எவ்வளவு ஆயுளைக் குறைக்க வேண்டும்? என்று கேட்டார்.

கடவுளே! முப்பது ஆண்டுகள் என்பது எங்களுக்கு மிகக் குறைந்த ஆயுள் ஆகும். அப்பொழுது தான் நாங்கள் ஏதேனும் ஒரு கலையை முழுமையாகக் கற்றிருப்போம். நாங்கள் குடியிருப்பதற்காக ஒரு வீட்டைக் கட்டி முடித்திருப்போம். எல்லாக் கடமைகளையும் முடித்துவிட்டு மகிழ்ச்சியாக நாங்கள் இருக்கத் தொடங்கும் காலம் அது.
நாங்கள் இதுவரை உழைத்த உழைப்பிற்குப் பயன் நுகரும் பருவம் அது. இந்தச் சூழலில் எங்கள் உயிரைப் பறிப்பது கொடுமை ஆகும். முப்பது ஆண்டு வாழ்நாள் என்பது எங்களுக்குப் போதவே போதாது. எங்களுக்கு அதிக ஆயுள் வேண்டும், என்று வேண்டினான் அவன்.

இங்கு வந்த நீ குறையுடன் சொல்லக் கூடாது. கழுதையிடம் பெற்ற பன்னிரெண்டு ஆண்டுகள், நாயிடம் பெற்ற பதினெட்டு ஆண்டுகள், குரங்களிடம் பெற்ற இருபது ஆண்டுகள் இங்கே உள்ளன. அந்த ஐம்பது ஆண்டுகளையும் நீ கூடுதலாகப் பெற்றுக் கொள்ளலாம். இனி உன் வாழ்நாள் எண்பது ஆண்டுகள். உனக்கு மகிழ்ச்சிதானே, என்று கேட்டார் கடவுள்.

மகிழ்ச்சிதான் என்ற அவன் கடவுளை வணங்கி விட்டுப் புறப்பட்டான். எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்தார் கடவுள். கூடுதல் ஆயுள் கேட்டுப் பெற்ற மனிதனின் நிலைக்காக அவர் வருத்தப்பட்டார்.

கடவுளிடம் வரம் பெற்ற நாளிலிருந்து மனிதன் எண்பது ஆண்டுகள் வாழத் தொடங்கினான். முதல் முப்பது ஆண்டுகளை அவன் மகிழ்ச்சியாகக் கழித்தான். இந்த காலத்தில் தான் அவன் அறிவுள்ளவனாக, வீரனாக, பயனுள்ளவனாக வாழ்ந்தான். ஏனென்றால் கடவுள் அவனுக்கே கொடுத்த ஆயுள் இது. அடுத்த பன்னிரெண்டு ஆண்டுகள் கழுதையின் ஆயுள். அதனால் அவன் இந்தக் காலத்தில் கழுதையைப் போலப் பிறர் சுமைகளைத் தூக்கினான். சூழ்நிலையால் அடிபட்டுப் பசியாலும் பட்டினியாலும் வாடினான். நாற்பத்து இரண்டிலிருந்து அறுபது வரை நாயின் ஆயுள் அவனுடையது. இந்தக் காலத்தில் அவன், தான் சேர்த்த பொருள்களைக் காவல் காக்கும் நாய் போல வாழ்ந்தான். பிறர் அதைக் கைப்பற்ற வந்தால் குரைத்து வாழ்க்கை நடத்தினான். அறுபதிலிருந்து அவன் வாழ்க்கை குரங்கு வாழ்க்கைதான். தன் பேரக் குழந்தைகளிடம் குரங்கைப் போலப் பல்லைக் காட்ட வேண்டியதாயிற்று. கிளைக்குக் கிளை தாவும் குரங்கு போல அவன் மகன் வீடு, மகள் வீடு என்று மாறி மாறிச் செல்ல வேண்டியதாயிற்று. அவனும் பல்லெல்லாம் விழுந்து கன்னம் ஒட்டிக் குரங்கைப் போலக் காட்சி அளித்துப் பிறகு இறந்தான்.



தட்டானுக்கு சட்டை போட்டால்

“தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்.”

விளக்கம்:
தானம் கேட்கும் வறியவர்களுக்குத் தட்டாமல் தானம் வழங்குபவர் தட்டான். தட்டானுக்குச் சட்டை போடுவது என்றால் தானம் கொடுக்க
நினைப்பவரின் எண்ணத்தைத் தடுப்பது. மஹாபலிச் சக்கரவர்த்தி நூறாம் அசுவமேத யாகம் செய்யும்போது பெருமாள் குள்ள உருவத்தில் வாமன அவதாரத்தில் வந்து அவரிடம் மூன்றடி மண் வேண்டும் என்று தானம் கேட்கிறார். தானம் கேட்பவர் திருமால் என்பதையும் அதில் ஏதோ சூழ்ச்சி இருக்கும் என்பதையும் சுக்ராச்சாரியார் உணர்ந்து, தாரை வார்ப்பதைத் தடுக்க வண்டாக மாறி கமண்டலத்தின் மூக்கில் நுழைந்து அடைத்துக்கொள்கிறார். அப்பொழுது குட்டைப் பையன் ஆன வாமனன் கட்டையான ஒரு குச்சியை எடுத்து அடைப்பைக் குத்திச் சரி செய்கிறார். ஆகவே சுக்ராச்சாரியாரின் ஒரு கண் குத்தப்படுகிறது.

இதுவே “தட்டானுக்குச் சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்." என்பதாகும்.

ஞாயிறு, 16 அக்டோபர், 2022

சிற்றூர், பேரூர், பட்டணம்

சிற்றூர்

சின்னப் பள்ளி ஒன்றுண்டு
பெரிய கோயில் பல உண்டு.
நன்செய் புன்செய் நாற்புறமும்
நடவும் உழவும் இசைபாடும்
தென்னையும் பனையும் பலமரமும்
செடியும் கொடியும் அழகு தரும்
நன்னீர் வாய்க்கால் ஏரிகுளம்
நலம் கொழிப்பது சிற்றூராம்.

மச்சு வீடு ஏழெட்டு
மாடி வீடு நாலைந்து
குச்சு வீட்டு வாயில்கள்
குனிந்து போகப் பலவுண்டு
தச்சுப் பட்டறை ஒன்றுண்டு
தட்டார் பட்டரை ஒன்றுண்டு
அச்சுத் திரட்டும் கருமாரின்
பட்டறை உண்டு சிற்றூரில்.

காக்கா ஒருபுறம் கா கா கா
குருவி ஒருபுறம் கீ கீ கீ
மேய்க்கும் ஆடு மே மே மே
மின்னும் கோழி கோ கோ கோ
பாக்கும் பூனை மீ மீ மீ
பசுங் கன்றும் மா மா மா
ஆக்கும் இந்தக் கச்சேரி
அங்கங் குண்டு சிற்றூரில்.

கம்பும் தினையும் கேழ்வரகும்
கட்டித் தயிரும் சம்பாவும்
கொம்பிற் பழுத்த கொய்யா மா
குலையிற் பழுத்த வாழையுடன்
வெம்பும் யானைத் தலைபோல
வேரிற் பழுத்த நல்லபலா
நம்பிப் பெறலாம் சிற்றூரில்
நாயும் குதிரை போலிருக்கும்.

பேருர்

நிற்க வரும் புகை வண்டி
நிலையம் உள்ள பேரூர்!
விற்கத் தக்க விளைவை எல்லாம்
வெளியில் ஏற்றும் பேரூர்!
கற்கத் தக்க பள்ளிக்கூடம்
கச்சித மாய் நடக்கும்.
உற்றுப் பார்க்கக் கோயில் - மட்டும்
ஊரிற் பாதி இருக்கும்!

பத்துத் தெருக்கள் மிதிவண்டிகள்
பவனி வரும் எங்கும்.
முத்து வெள்ளைச் சுவர்வீட்டின்
முன்னால் பொறியியங்கி!
கத்தும் இரிசு கட்டைவண்டி
கடைச் சரக்கை ஏற்றி
ஒத்து நகரை நோக்கி ஓடும்
உள்ளூ ரைஏ மாற்றி!

(பொறியியங்கி-கார்)

செட்டுத் தனம் இல்லை பல
தேவை யற்ற உடைகள்.
பட்டணம் போகா தவர்கள்
பழங்காலத்து மக்கள்.
கட்டு டம்பு வற்றிப் போகக்
கையில் வெண்சு ருட்டுப்
பெட்டியோடும் உலவ வேண்டும்
இதன் பேர்தான் பேரூர்.

பட்டணம்

பல்கலைக் கழகம்
உயர்நிலைப் பள்ளி
செல்வச் சிறுவர்
செல்லும் பள்ளிகள்
நல்ல நூல்கள்
படிக்கப் படிப்பகம்
எல்லாம் இருக்கும்
அமைதி இராது!

பாட்டை நிறையப்
பலவகை வண்டிகள்
காட்டுக் கூச்சல்
கடமுடா முழக்கம்
கேட்டால் காதே
கெட்டுப் போகும்
ஈட்ட ஆலைகள்
இருபது கூவும்.

தூய ஆடைத்
தோகை மாரும்
ஆய உணர்வின்
ஆடவர் தாமும்
ஓயா துழைக்கும்
பலதுறை மக்களும்
தேய வழிகள்
செல்வார் வருவார்.

வெள்ளி மலையும்
தங்க மலையுமாய்
உள்ள வீடுகள்
வானில் உயரும்
அள்ளும் அழகுடை
அலுவல் நிலையம்
கொள்ளா வணிகம்
கொண்டது பட்டணம்!

நாடக சாலைகள்,
நற்படக் காட்சிகள்
ஆடல் பாடல்
அமையும் அவைகள்
ஈடிலாப் புலவர்
பேச்சுமன் றங்கள்,
காடுகள் சோலைகள்
கவிந்தது பட்டணம்.

- பாவேந்தர் பாரதிதாசன்

சனி, 15 அக்டோபர், 2022

வாக்கின் பயன்

வாக்கின் பயன் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

எத்தனையோ விதமான ஜீவராசிகள் இருந்தாலும் மனிதனுக்கு மட்டுமே பரமேசுவரன் பேசும் சக்தியைத் தந்திருக்கிறார். உலகத்தில் அநேக பாஷைகள் இருக்கின்றன. பேச்சிலிருந்து எழுத்துப் பிறந்து, உலகம் முழுவதும் பல லிபிகளும் இருக்கின்றன. வாக்கை மூலதனமாக வைத்தே எங்கு பார்த்தாலும் பள்ளிக்கூடம், காலேஜ், லைப்ரரி, பத்திரிகைகள் எல்லாம் பரவியிருக்கின்றன.

மிருகங்களின் உலகில் காலேஜ் இல்லை, லைப்ரரி இல்லை, பிரிண்டிங் பிரஸ் இல்லை. அவற்றுக்கு வாக்குக் கிடையாது. ஆனால் இவையெல்லாம் இல்லாததால் அவை மனிதனைவிட கஷ்ட நிலையில் இருக்கின்றனவா? அப்படித் தோன்றவில்லை. நமக்கு இருக்குமளவுக்கு அவற்றுக்கு வியாதி இல்லை; அவை சொத்துக்களைச் சேர்த்துக்கொண்டு தவிக்கிறதில்லை; நேற்று என்ன செய்தோம்; நாளைக்கு என்ன செய்வோம் என்ற விசாரம் அவற்றுக்கு இல்லை. அதற்கும் எப்படியோ ஆகாரம் கிடைக்கிறது. ஏதோ விதத்தில் வாழ்ந்து பிழைத்துப் போகிறது. ஒன்றையொன்று அடித்துச் சாப்பிட்டாலும் எல்லா விலங்கு இனங்களும் விருத்தியாகிக்கொண்டே தானிருக்கின்றன.

மனிதப் பிரபஞ்சத்துக்கே வந்தாலும்கூட காலேஜும் லைப்ரரியும், பிரிண்டிங் பிரஸும் இல்லாத ஆதிவாசிகளைப் பார்த்தால் அவர்கள் நம்மைவிட நிம்மதியாகவும் நல்லவர்களாகவும் இருப்பதாகவே தெரிகிறது. ஆப்பிரிக்கக் காடுகளிலும், அமெரிக்காவில் செவ்விந்தியக் காடுகளிலும் காலேஜும், லைப்ரரியும் இல்லாதது போலவே கோர்ட்டுகளையும் காணோம். அதாவது எழுத்தறிவற்ற காட்டுக்குடிகள், நாகரிகமடைந்த நம் போல் இவ்வளவு குற்றம் செய்வதில்லை. நாகரிகமும், அதிக புத்தியும் படைத்த நாம் செய்யத் தகாத செயல்களில் — அகாரியங்களில் — நூதன கற்பனையுடன் விருத்தியடைந்து கொண்டே வருகிறோம். படிப்பு எத்தனைக்கெத்தனை அதிகமோ அத்தனைக்கத்தனை பாபமும் அதிகமாகயிருக்கிறது. நாகரிகத்தால் எத்தனைக்கெத்தனை செல்வத்தைப் பெருக்கிக் கொண்டோமோ, அத்தனைக்கத்தனை அநவரதமும் அதிருப்திப்படும் மனோபாவமும் பெருகியிருக்கிறது. எத்தனை வந்தும் போதவில்லை. தேவை அதிகமாகவே இருக்கிறது. வாக்கும் எழுத்தும் எல்லாவித அகாரியங்களையும் பரப்புவதிலேயே தடபுடலாகப் பிரயோஜனமாகி வருகின்றன. படிப்பு முறை, பத்திரிகைகள், புஸ்தகங்கள் எல்லாம் மனிதனுக்கு நிம்மதியும், நிறைவும் தருவதற்குப் பதில் அவனை அதிருப்தியிலும் அகாரியத்திலும் கொண்டு விடுவதாகவே உள்ளன. மனிதனுக்கு மட்டும் ‘ஸ்பெஷ’லாக ஸ்வாமி தந்திருக்கும் வாக்குச் சக்தி அநுக்கிரகமா, சாபமா என்றே புரியவில்லை.

இதை யோசித்துப் பார்க்கும்போது ஏன் வாயில்லாத மிருக ஜன்மா தாழ்வானது, மனித ஜன்மா உயர்வானது என்று சொல்லி வந்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஒரு மிருகம் பிறந்ததிலிருந்து இறக்கிற வரையில் உள்ளுணர்ச்சி (INSTINCT) மீதே நடப்பதால் அதற்குப் புத்தி பூர்வமாகச் செய்கிற பாபம் எதுவும் இல்லை. மனிதன்தான் அவனை ஓயாமல் கணக்கெழுத வைக்கிறான். எவ்வளவுக்கெவ்வளவு படிப்பும் நாகரிகமும் அதிகமோ அவ்வளவுக்கவ்வளவு வஞ்சனை, மோசம், பொய் வேஷம் எல்லாவற்றிலும் நிபுணர்களாகி, சித்ரகுப்தனுக்கு நிறைய வேலை வைக்கிறோம்.

‘நர ஜன்மம் துர்லபம்; அதுவே உயர்ந்தது’ என்பது ஏன் என்று யோசித்தேன். யோசனை செய்ததில் மிருக ஜன்மத்தில் உள்ள பெரிய ஒரு குறை தெரிய வந்தது. மிருகங்களுக்குப் பாபம் இல்லாவிட்டாலும் பயம் இருக்கிறது. எப்போது யார் தன்னைக் கொல்வார்களோ என்ற பிராண பயம் கொடிய மிருகத்துக்கும்கூட நிறைய உண்டு. மனிதனுக்கும் பலவிதமான பயங்கள் உண்டு. ஆனால் பயமில்லாமல் செய்து கொள்ள மனிதனுக்கு மட்டுமே வழி இருக்கிறது. மிருகத்துக்கு இந்த வழி இல்லை. பயம் இல்லாமல் செய்து கொள்வது எப்படி? பிறவி இல்லாமல் செய்து கொண்டால் தான் பயம் இல்லாமல் இருக்கலாம். ‘எல்லாம் நாம்தான்’ என்கிற ஞானம் வந்துவிட்டால் எதனிடமும் பயம் இராது. அந்த ஞானத்துக்குப் பின் சரீரம் விழுந்தால் இன்னொரு சரீரம் எடுக்க மாட்டோம். இந்த ஞானத்தை, அபய நிலையை, ஜன்ம நிவிருத்தியை அடையவே மகான்கள் வாக்கைப் பயன்படுத்தினார்கள். வேத, வேதாந்த, இதிஹாஸ, புராண, தர்ம சாஸ்திரங்கள் எல்லாம் வாக்கு இருப்பதால்தானே உண்டாயின!

பாஷை, லிபி, புத்தி இவற்றுக்கு இப்பேர்ப்பட்ட உயர்ந்த பிரயோஜனம் இருப்பதைப் புரிந்துகொண்டபின் ஆறுதலாக இருந்தது.

பகவான் தந்திருக்கும் புத்தியால், வாக்கால், பிறருக்கோ தனக்கோ கெடுதல் உண்டாகாமல் எவ்வளவோ நல்லது செய்யலாம். பாபமும், துக்கமும், பயமும் நீங்க வாக்கைப் பயன்படுத்தலாம். நாம் அப்படியே செய்ய வேண்டும்.

இதற்கெல்லாம் அடிப்படை பக்தி வாக்கு தெய்வ சம்பந்தமாகப் பயனாக வேண்டும். இதனால்தான் அக்ஷராப்யாச காலத்தில், ஆரம்பிக்கும்போதே ‘நமோ நாராயணாய’ என்று விரலைப் பிடித்து எழுத வைக்கிறார்கள். பகவான், தான் கொடுத்திருக்கும் வாக்கை இவன் எப்படிப் பிரயோஜனம் செய்கிறான் என்று பார்த்துக்கொண்டே இருக்கிறான். லோக க்ஷேமத்துக்கும் ஆத்ம க்ஷேமத்துக்கும் அதைப் பயன் செய்யாவிட்டால், அடுத்த ஜன்மாவில் வாக்கைப் பிடுங்கிக் கொண்டுவிடுவார். அதாவது மிருகமாகப் படைப்பார்.
நன்றி https://www.kamakoti.org


வெள்ளி, 14 அக்டோபர், 2022

சிறுகக் கட்டிப் பெருக வாழ்

எளிய வாழ்வு : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

‘வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது’ என்ற வார்த்தை இப்போது ரொம்பவும் அடிபடுகிறது. சர்க்கார் திட்டங்கள் இதற்குத்தான் என்கிறார்கள். எல்லோருக்கும் வயிறு நிரம்பச் சாப்பாடு, மானத்தையும், குளிர் வெயிலையும் காப்பாற்றப் போதுமான வஸ்திரம், வசிப்பதற்கு ஒரு சின்ன ஜாகை இருக்க வேண்டியதுதான். இதற்கே சர்க்கார் திட்டம் போட வேண்டும். இதற்கு அதிகமாகப் பொருளைத் தேடிப் போவதால் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடாது. உண்மையில் ‘வாழ்க்கைத் தரம்’ என்பது வெளி வஸ்துக்களின் பெருக்கத்தில் இல்லை. தரமான வாழ்க்கை மனநிறைவோடு இருப்பதுதான். தேவைகளை அதிகமாக்கிக்கொண்டு அவற்றுக்காக ஆலாப் பறப்பதால் நிறைவு ஒருவருக்கும் கிடைக்காது. இதைப் பிரத்யக்ஷத்தில் பார்க்கிறோம். நாம் மேலைநாட்டுக் காரர்கள் மாதிரி, போக போக்கியங்களுக்குப் பறக்கிறோம். போகத்தின் உச்சிக்குப்போன மேல் நாட்டுக்காரர்களோ அதில் நிறைவே இல்லை என்பதால் நம்முடைய யோகத்துக்கு, வேதாந்தத்துக்கு, பக்திக்குக் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள். இதைப் பார்த்துக்கூட நாம் புத்தி பெறவில்லை என்றால், அதுதான் துரதிருஷ்டம்.
‘ஒருத்தன் பீரோ நிறைய துணி வைத்திருந்தாலோ, கண்ட வேளையில் ஹோட்டலுக்குப் போய் கண்டதைத் தின்பதாலோ, வீட்டை ஏர்-கண்டிஷன் செய்து கொண்டு விட்டதாலோ அவனுடைய வாழ்க்கை தரமாகி விடாது. மனம் நிறைந்திருந்தால் அதுவே வாழ்க்கைத் தர உயர்வாகும்! மன நிறைவு வெளி வஸ்துக்களால் ஒருநாளும் கிடைக்காது. வெளி வஸ்துக்களைச் சேர்க்க சேர்க்க மேலும் மேலும் சௌகரியத்துக்கு ஆசைப்பட்டுக் கொண்டு புதுப்புது வஸ்துக்களைக் கண்டுபிடித்து வாங்கிக் கொண்டேதான் இருப்போம். நாம் இப்படி இருப்பதைப் பார்த்து வசதியில்லாதவர்களுக்கும் இதே ஆசை வெறியை உண்டாக்கி விடுகிறோம். இதனால் போட்டி, சண்டை எல்லாம் உண்டாகின்றன. வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாக ஏக முஸ்தீபுடன் இறங்கிய பின்தான் சகலருக்கும் எப்போது பார்த்தாலும், எதையாவது வாங்கிக்கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது. நமக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று சதா அரிப்பு இருக்கிற வரையில் நாம் தரித்திரர்கள்தான். இப்போது கோடீசுவரனிலிருந்து எல்லோருக்கும் இந்தக் குறை இருப்பதால் எல்லோருமே தரித்திரர்களாகத்தான் ஆகியிருக்கிறோம். பணம் இல்லாவிட்டால்தான் தரித்திரம் என்பதில்லை. பணம் அதிகமாகிவிட்டதாலேயே, எல்லோரும் தரித்திரர்களாகியிருக்கிறோம்.

இந்த போக்கிய வஸ்துக்கள் அதிகமாக ஆக, ஆத்மிக நாட்டம், நல்ல சித்தம் எல்லாமே போய் விடுகின்றன. மேல்நாட்டில் எத்தனை சஞ்சலம், விபசாரம், கொலை, கொள்ளை என்று பார்க்கிறோம்! அதெல்லாம் இங்கேயும் வருவதற்குப் பூர்ண கும்பம் கொடுக்கிறோம். வேண்டாத வஸ்துக்களை அவசியத் தேவை என்று நினைத்துக் கொண்டு அவற்றுக்காக ஆத்மாபிவிருத்தியை அலட்சியம் செய்துவிட்டு, பணவேட்டையிலேயே இறங்கியிருப்பதுதான் நவீன வாழ்க்கை முறை. போதுமென்ற மனசோடு நிம்மதியாக வாழ்ந்த காலம் போய்விட்டது.

இப்போது யாருக்குமே நிறைவு இல்லை; பழைய நிம்மதி இல்லை. சமூக வாழ்விலும் பரஸ்பர சௌஜன்யம் போய், போட்டியும், பொறாமையும் வலுத்து விட்டன. ஒருத்தன் ஆடம்பரமாக இருந்தால் மற்றவர்களுக்கும் அதில் ஆசை ஏற்படத்தானே செய்யும்? எல்லோருக்கும் எல்லா ஆசையும் நிறைவேறுவது எங்கேனும் சாத்தியமா? ஏமாற்றம் உண்டாகிறது; ஆசாபங்கத்தில் துவேஷம் பிறக்கிறது.

எனவே, வசதி உள்ளவர்கள் எளிய வாழ்க்கை நடத்துவது அவர்களுக்கும் நல்லது; மற்ற ஜனசமூகத்துக்கும் நல்லது. பழைய காலத்தில் இப்படித்தான் இருந்தது. வேத சாஸ்திரத்தை ரக்ஷித்தவர்களுக்கு எத்தனை ராஜமானியம் வேண்டுமானாலும் தருவதற்கு ராஜாக்கள் சித்தமாயிருந்தார்கள். ஆனாலும், அவர்கள் பொருளில் ஆசை வைக்கவே கூடாது என்று சாஸ்திரம் விதித்தது. இதை இன்றைக்கும் சில வார்த்தைகளிலிருந்தே ஊகிக்கலாம். ‘வெண்கலப் பானை‘ ‘வைர ஓலை‘ போன்ற வார்த்தைகளைக் கேட்கிறீர்கள். பானை, மண்ணால் செய்தது. முற்காலத்தில் வசதி உள்ளவர்களும் பானைதான் வைத்து சமைத்தார்கள். அப்புறம் வெண்கலப் பாத்திரம் வந்தது. அதுவே வெண்கலப் பானை ஆகிவிட்டது. ‘ஓலை‘ என்பது காதிலே வெறும் பனை ஓலையைச் சுருட்டிப் போட்டுக் கொள்வதைக் குறிக்கும். அம்பிகைக்கூட பனை ஓலைத்தோடுதான் போட்டிருந்தாள். (தாலீ தலா பத்த தாடங்க) என்று ‘சியாமளா தண்டகம்’ சொல்கிறது. பிறகு வைரத்தில் தோடு செய்தார்கள். இருந்தாலும் ‘வைர ஓலை’ என்று பழைய பெயரும் ஒட்டிக் கொண்டது. அந்தக் காலத்தில் வசதியுள்ளவர்கள் எட்டு அடுக்கு வீடு கட்டிக் கொண்டதில்லை. எல்லோருடைய வீடும் ஏறக்குறைய ஒரே மாதிரித்தான் இருக்கும். நம்முடைய சிற்பம் முதலிய சாஸ்திரங்களின் பெருமை தெரிவதற்காக ராஜாக்கள், மந்திரிகள், பெரிய மாளிகை கட்டிக் கொண்டிருந்தார்கள். வைசியர்களும் பெரிய வீடுகள் வைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், பொது ஜனங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்த பிராம்மணர்கள் சிறுகக் கட்டிப் பெருக வாழ்ந்தவர்கள்தான். எல்லா விஷயத்திலும் அவர்கள் எளிமையாக இருக்க வேண்டும் என்பதுதான் சாஸ்திர விதி. அரண்மனைக்கும் மேலாகக் கோயில்தான் ஊருக்கே பெரிய வீடு; கோயில் ஸ்வாமிக்குத்தான் ரொம்பவும் உயர்ந்த நகை நட்டு, ஆபரணம் எல்லாம். உத்ஸவம்தான் ஊருக்கெல்லாம் கல்யாணம் மாதிரி. தனிமனிதர்களின் டின்னர், டீ பார்ட்டி, ஆடம்பரம் எதுவும் அப்போது கிடையாது. வசதியுடையவர்கள் எளிமையாக வாழ்ந்த வரையில் மற்றவர்களுக்கும் இவர்களிடம் துவேஷமில்லை. பிற்பாடு வேதரக்ஷணத்தையும், கிராமத்தையும் விட்டு அவர்கள் பட்டணத்துக்கு வந்து பண வேட்டையில் விழுந்ததும்தான் சமூகத்தின் சௌஜன்யமே சீர்குலைந்து விட்டது. பழைய எளிய வாழ்க்கை முறைக்குத் திரும்ப எல்லோரும் பிரயாசைப்பட வேண்டும்.

காந்தி இருந்த வரைக்கும், ‘எளிய வாழ்க்கை, எளிய வாழ்க்கை’ (Simple living) என்ற பேச்சாவது இருந்தது. இப்போது அந்த அபிப்பிராயமே போய்விட்டது. மறுபடி அந்த முறைக்கு மக்களைக் கொஞ்சத்தில் கொஞ்சமாவது திருப்ப வேண்டும். நிறைவு மனசில்தான் இருக்கிறது என்று உணர்ந்து, அவரவரும் கடமையைச் செய்து கொண்டு எளிமையாக இருக்க வேண்டும். அவரவரும் இப்படித் தேவைகளைக் குறைத்துக் கொண்டு மனசினால் நிறைந்து சுபிட்சமாக இருக்க சந்திர மௌளீசுவரர் அநுக்கிரகம் செய்வாராக!

நன்றி https://www.kamakoti.org



வெள்ளைக்காரன் ஹிந்து என்று பெயர் வைத்திருக்காவிட்டால்

மூலமாகிய வேதம் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

நம்முடைய மதம் என்பது சைவம், வைஷ்ணவம் என்று இரண்டு பெரிய பிரிவுகளாக இருக்கின்றது. ‘இதை ‘இரண்டு மதம் என்று சொல்வதா, ஒரே மதந்தான் என்று சொல்வதா?’ என்று சந்தேகம் வரும்.
கிறிஸ்துவ மதத்திலும் காத்லிக், ப்ராடெஸ்டன்ட் என்று இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. இருந்தாலும், ஒரே மதம் என்று சொல்கிறார்கள். காரணம் என்ன? இரண்டு பேரும் பொதுவாகப் பூஜை செய்ய ஒரே கர்த்தரின் பெயரைச் சொல்லி வணங்குகிறார்கள். புத்த மதத்தில் ஹீனயானம், மஹாயானம் என்று இரண்டு மதமாகச் சொல்வதில்லை! காரணம் அவர்கள் இரண்டு பேருக்கும் புத்தரே தலைவர்.

இப்படி, சைவர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் ஒரே ஸ்வாமி இருக்கிறாரா? இல்லை. இப்போது சாதாரண வைஷ்ணவர்கள் எப்படி இருந்தாலும் அவர்களுக்கு ஆசாரிய புருஷர்களாக இருப்பவர்கள் சிவன் கோயில் பக்கமே வரமாட்டார்கள். விஷ்ணுதான் அவர்களுக்கு ஸ்வாமி, அவர்களுக்கு சிவன் ஸ்வாமியே அல்ல. விஷ்ணுவினுடைய பக்தர்களுக்கு, சிவனும் ஒரு பக்தன்தான் என்பது அபிப்பிராயம். சைவர்களிலும் தீவிரவாதிகள், ‘விஷ்ணு ஸ்வாமியே அல்ல; சிவன்தான் ஸ்வாமி; விஷ்ணு அவருக்குப் பக்தன்’ என்று சொல்கிறார்கள். இவர்கள் இரண்டு பேரையும் எப்படி ஒரு மதம் என்று சொல்வது?

‘அது போகட்டும்; இவர்கள் இரண்டு பேரையும் ஒரு மதம் என்று சொல்ல இரண்டு பேருக்கும் பொதுவாக ஏதாவது ஒரு மதப் புஸ்தகமாவது இருக்கிறதா?’ என்று பார்க்கலாம். கிறிஸ்துவம் இஸ்லாம் முதலியவற்றில் பல பிரிவுகள் இருந்தாலும், எல்லாருக்கும் பொதுவாக பைபிளும் குர் ஆனும் இருப்பதுபோல், சைவ வைஷ்ணவருக்குப் பொதுவான பிரமாண கிரந்தம் இருக்கிறதா என்று பார்க்கலாம். சைவர்கள் தேவாரம் முதலிய திருமுறைகளைத் தங்கள் மத நூல்களாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். வைஷ்ணவர்களோ நாலாயிர திவ்வியப் பிரந்தம் தமது ஆதார நூல் என்கிறார்கள். புஸ்தகங்களும் வேறாகப் போய்விட்டன. ஸ்வாமியும் வேறாகப் போய்விட்டார். அப்படி இருக்க இரண்டு பேரையும் ஒரே மதம் என்று எப்படிச் சொல்லுவது?

நமக்குள் சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று வேறாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும் வெள்ளைக்காரன் நமக்கு ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது. அவன் மட்டும் ‘ஹிந்து’ என்று பெயர் வைத்திருக்காவிட்டால், ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைஷ்ணவர், சாக்தர், முருக பக்தர், பிள்ளையார் உபாசகர், ஐயப்பன் பக்தர், எல்லையம்மனைக் கும்பிடுகிறவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம். இப்போது ‘ஹிந்து சமூகம்’ என்று பொதுப் பெயரில் சொல்லப்படும் சமுதாயத்தை இப்படி ஏழெட்டாகத் தனித்தனி மதம் என்று பிரித்துவிட்டால், அதற்கப்புறம் ஒவ்வொர் ஊரிலும் முஸ்லீம், கிறிஸ்துவர்கள் போன்ற மதஸ்தர்கள்தான் அதிகத் தொகை இருப்பார்கள். அதாவது, இப்போது தேசத்தின் இரண்டு பக்கங்களில் மட்டும் பாகிஸ்தான் முளைத்திருப்பதுபோல் இல்லாமல், நம் தேசம் முழுவதுமே பாக்கிஸ்தானாகியிருக்கும். எத்தனையோ கிருத்திருமங்கள் செய்து பாக்கிஸ்தானைப் பிரித்த அதே வெள்ளைக்காரன்தான், எத்தனையோ யுக்திகள் செய்து நம்மை ஆரியர்-திராவிடர் என்றெல்லாம் பேதப்படுத்திய அதே வெள்ளைக்காரன் தன்னையும் அறியாமல் நமக்கு ‘ஹிந்து’ என்று பொதுப் பெயரைத் தந்து, இன்று இந்தியா தேசம் என்று ஒன்று இருக்கும் படியான மகா பெரிய நன்மையைச் செய்திருக்கிறான்!

அப்படியானால், நமக்கு ஒரு மதமா, இரண்டு மதமா? வைஷ்ணவர்களுக்கு ஸ்வாமி வேறே, புஸ்தகம் வேறே, சைவர்களுக்கு ஸ்வாமி வேறே, புஸ்தகம் வேறே என்று சொன்னாலும் உண்மை அப்படி அன்று. இப்போது இருக்கிறவர்களுடைய மனோபாவத்தைக் கவனித்தால் அது வேறு மதம், இது வேறு மதம் என்று சொல்லக்கூடிய ஹேது வளர்ந்திருக்கிறதே தவிர, அவர்களுடைய முதல் நூல்களைப் பார்த்தோமானால் உண்மை தெரியவரும். சைவத் திருமுறைகள், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் என்கிற இரண்டையும் பாடினவர்கள் தங்களது நூலே “முதல் நூல்” என்று சொல்லவே இல்லை; நினைக்கவே இல்லை. அவர்கள் தங்களை மதஸ்தாபகர்களாகவும் நினைத்துக் கொண்டதே இல்லை. அவர்கள் காலத்துக்கு முந்தியே ஒரு மதம் இருந்திருக்கிறது. ஆழ்வார்கள் பாடுவதற்கு முந்தி வைஷ்ணவம் இருந்திருக்கிறது. நாயன்மார்களுக்கு முந்தியும் சைவம் இருந்திருக்கிறது. இவற்றுக்கு முதல்நூல் எது என்று பார்த்தால் மறைகள்தாம்: அதாவது வேதங்களே. சைவர்கள் ஈசுவரனையே,

‘வேதமோ டாறங்க மாயி னானை’

‘வேதநாதன், வேத கீதன், ஆரணன்காண்’

என அநேக இடத்தில் சொல்கிறார்கள். வைஷ்ணவ நூல்களிலும் இப்படித்தான், ‘வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்’ என்று சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் சொல்லியிருப்பதை நாம் சரியாகக் கவனித்தால், இவ்விருவர்களுக்கும் மூலப் புஸ்தகம் ஒன்றே என்பது தெளிவாகும். இப்போது சைவர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் முக்கியமாக இருக்கிற தேவாரமும், பிரபந்தமும் ஒரே பொது மூலமான வேதத்தை ஆதாரமாகக் கொண்டு உண்டானவையே. தேவாரத்தையும் பிரபந்தத்தையும் பாடிய மகான்கள் எங்கு பார்த்தாலும் வேதத்தின் பெருமையையே பேசுகிறார்கள். எந்த க்ஷேத்திரத்தை வர்ணித்தாலும் ‘அங்கே வேத ஒலி மிகுந்திருந்தது; ஹோமப் புகை மிகுந்திருந்தது; வேதம், அதன் அங்கங்கள் எல்லாம் தழைத்திருந்தன’ என்று பரவசமாகச் சொல்கிறார்கள். ஸ்வாமியைப் பற்றிச் சொல்கிற அளவுக்கு வேதத்தைப் பற்றியும் சொல்கிறார்கள்.

வேதம் ஒரே தத்துவத்தைப் பல மூர்த்திகளாக்கித் தந்திருக்கிறது. வேதம் என்ற நதியில் இந்த ஒவ்வொரு மூர்த்தி வழிபாடும் ஒரு துறை மாதிரி, ‘வேத நெறி தழைத்தோங்க, மிகு சைவத்துறை விளங்க’, என்று இதையே சேக்கிழார் சுவாமிகள் சொல்கிறார்.

இப்படியே சாக்தம், காணபதம் (பிள்ளையார் உபாஸனை), கௌமாரம் (முருகன் வழிபாடு), ஸௌரம் (சூரியனையே பரமாத்மாவாக உபாஸிப்பது) முதலான எதை எடுத்துக் கொண்டாலும் அதன் ஆதார நூல்களில், இந்த வழிபாட்டுக்கு ஆதாரம் வேதத்திலேயே இருக்கிறது; ‘எங்கள் ஸ்வாமி வேதத்திலேயே ஸ்தோத்திரம் பண்ணப்பட்டவர்’ என்றே சொல்லியிருக்கும்.

ஆக ‘ஹிந்து’ மதம் என்ற பெயருக்குள் உள்ள அத்தனை பிரிவுக்கும் ஆதாரமான நூல் ஒன்றே என்றாகிவிட்டது.

அந்த ஆதாரமான வேதத்தில், சைவ-வைஷ்ணவ-ஸ்மார்த்த சம்பிரதாய ஆசாரியர்கள் எல்லோரும் தசோபநிஷத்துக்கள் என்கிற பத்து உபநிஷதங்களுக்குப் பாஷ்யம் செய்திருக்கிறார்கள். இந்த உபநிஷதங்களுள் பிரம்மம் ஒன்றே ஸ்வாமி என்றுதான் சொல்லியிருக்கிறது. அதற்கே ஓரிடத்தில், கடோபநிஷத்தில் விஷ்ணு என்றும், இன்னோரிடத்தில் மாண்டூக்ய உபநிஷத்தில் சிவம் என்றும் பெயர் சொல்லியிருக்கிறது. வேத சம்ஹிதைகளில் வருகிற மித்ரன், வருணன், அக்னி, இந்திரன் முதலான அத்தனை தெய்வங்களும்கூட இந்த சத்தியத்தின் பல பேர்கள்தான் என்றும் அதே வேதத்தில் சொல்லியிருக்கிறது. (ஏகம் ஸத் விப்ரா: பஹுதா வதந்தி)

ஆனபடியால், நம் மதத்தின் அத்தனை பிரிவுகளுக்கும் பொதுப் புஸ்தகம், பொது ஸ்வாமி இரண்டும் இருப்பதாக ஆகிவிட்டது. பொதுப் புஸ்தகம் வேதம், பொது ஸ்வாமி பிரம்மம். எனவே, சந்தேகமில்லாமல் நாம் எல்லாரும் ஒரே மதந்தான் என்று தீர்மானமாகச் சொல்லிக்கொள்ளலாம்.

அந்தப் பொது ஸ்வாமியையும் நமக்குக் காட்டிக் கொடுத்திருப்பது பொதுப் புஸ்தகமான வேதம்தான். ஸ்வாமியைக் காட்டிக் கொடுத்திருப்பதோடு, ஆசாமிகளான நாம் எப்படி வாழ்க்கை நடத்தி முடிவில் அந்த ஸ்வாமியாகவே ஆகவேண்டும் என்பதற்கும் நமக்கு வழிகாட்டிப் பரமோபகாரம் செய்வது இந்த வேதம்தான். இகம், பரம் இரண்டுக்கும் அதுதான் நமக்குக் கதி; அதுதான் இத்தனை சம்பிரதாயங்களுக்கும், சித்தாந்தங்களுக்கும் மூலம், வேர். நம்முடைய மதப்பிரிவுகள் எல்லாம் வேதத்திலிருந்தே வந்தவை. வேர் ஒன்று; கிளைகள் பல.

ஆராய்ந்து பார்த்தால், ஹிந்து மதப் பிரிவுகளுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள எல்லா மதங்களுக்குமே மூலம் வேதம்தான் என்று தெரியும். அந்த மூலத்தை மங்காமல் ரக்ஷிக்க வேண்டும் என்பதே நம்முடைய தலையாய கடமை.

நன்றி https://www.kamakoti.org




கள்ளுண்ணாமை

கள்ளுண்ணாமை குறள் 921 இலிருந்து 930 முடிய குறள் 921: உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார் . பொருள்:...