அண்மையில் ஃபேஸ்புக்கிலும் வாட்ஸ்ஆப்பிலும் நான் கண்ட புதுக் கிளப்பல்:
திருமண அழைப்பிதழில் உள்ள சுவாரசியமான விஷயம் என்ன?
நாம அடிக்கடி பார்க்கிற திருமண அழைப்பிதழிலேயே பெரிய தகவல் உள்ளது.
மணமகன் / மணமகள் பெயருக்கு முன் திருவளர் செல்வன் / திருவளர் செல்வி என இருந்தால் அந்த திருமணம் அக்குடும்பத்தின் மூத்த மகன் / மகளின் திருமணம்.
திருநிறைசெல்வன் / திருநிறை செல்வி என இருந்தால் அந்த திருமணம் அக்குடும்பத்தின் இளைய மகன் / மகளின் திருமணம்.
திருவளர்செல்வன் / செல்வி எனக் குறிப்பிடும்போது நடக்கவுள்ள திருமணம் எங்களது இல்லத்தின் மூத்த மகன் / மகளின் திருமணம்.
எங்களுக்கு இளைய மகன் / மகள் உள்ளதால் எங்கள் இளைய மகனுக்கு திருமண வயது நிரம்பும் போது உங்கள் வீட்டுக்கு பெண் / பையனுக்கு திருமண வயது நிரம்பியிருந்தால் மாப்பிள்ளை / பெண் கேட்டு எதிர்காலத்தில் நாங்கள் வரலாம் என்பதை சூசகமாக குறிப்பது.
இதே திருநிறைசெல்வன் / திருநிறைசெல்வி என்று குறிப்பிட்டிருந்தால் எங்கள் வீட்டில் திருமணங்கள் நிறைவுற்றன. இதுவே எங்கள் வீட்டின் இறுதித் திருமணம். இனி எங்கள் வீட்டில் திருமண நிகழ்வுகள் இல்லை என்று உணர்த்துவது.
இவ்வாறு தவறான விளக்கம் கொடுக்காதீர்கள். தமிழைக் கெடுக்காதீர்கள்.
திருவளர்செல்வன், திருநிறைசெல்வன், திருவளர்செல்வி, திருநிறைசெல்வி ஆகிய இந்நான்கும் வினைத்தொகை. செல்வம், அழகு முதலியன வளர்ந்த, வளர்கின்ற, வளரும், நிறைந்த, நிறைகின்ற, நிறையும் என்று முக்காலங்களையும் குறிக்கும். வினைத்தொகை என்பதால் வலிமிகா இடம். ஒற்று வராது. ஆகவே திருவளர்ச்செல்வன், திருநிறைச்செல்வன், திருவளர்ச்செல்வி, திருநிறைச்செல்வி என்று சொல்லக்கூடாது.
இந்த இடத்தில் திரு என்பது திருமணம் என்ற பொருளில் வரவில்லை. செல்வம், அழகு, பொலிவு, நல்வினை, பாக்கியம் என்றே பொருள்படும். அது மட்டும் அல்ல. திரு என்பதற்கு மாங்கல்யம் என்றும் ஒரு பொருள் உண்டு. திருப்பூட்டுதல் என்றால் தாலிகட்டுதல் ஆகும்.
திரு என்பதற்கு இலக்குமி (லட்சுமி/லக்ஷ்மி) என்றும், கடவுள் தொடர்புடைய என்றும் பொருள். (எ.டு) திருமாங்கல்யம், திருவீதி உலா, திருவிளையாடல், திருப்பதி, திருமலை.
தமிழ்நாடு அரசு மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தமிழ் விலையில்லாப் பாடநூல் அறுபத்து ஆறாம் பக்கத்தில் கீழ்க்கண்டவாறு உள்ளது.
பிற பின்பு, வணக்கம்.
அன்புடன்
ஆறுமுகம் நடராஜன்
பொன்னமராவதி புதுப்பட்டி,
தற்போது மதுரையில் இருந்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.