google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: பழமொழி நானூறு பாடல் எண் 361

சனி, 9 அக்டோபர், 2021

பழமொழி நானூறு பாடல் எண் 361

 அறிந்து செய்யும் அறியாமைச் செயல்

''முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்

தொல்லை அளித்தாரைக் கேட்டறிந்தும்; - சொல்லின்

நெறிமடற் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப!

'அறிமடமும் சான்றோர்க்(கு) அணி'.''

_முன்றுறை அரையனார்

செறிந்த மடல்களையுடைய, அழகிய தாழை மரங்கள் பொருந்தியிருக்கும் கடற்கரைக்கு உரிய தலைவனே! முல்லைக் கொடிக்குத் தேரினையும் மயிலுக்குப் போர்வையினையும் முன் காலத்திலே கொடுத்தவர்களைக் கேள்வி வாயிலாக நாமும் அறிந்துள்ளோம். ஆகவே, சொல்லப் போவோமானால், சான்றோர்களுக்கு, அவர்கள் அறிந்தே செய்யும் அறியாமைச் செயல்களுங்கூடச் சிறப்பையே தருவதாயிருக்கும் என்று அறிவாயாக.

'பாரியும் பேகனும், முல்லைக்குத் தேரும், மயிலுக்குப் போர்வையும் அளித்தனர்' என்று புலவர்கள் போற்றுவர். அவை கொடுத்தற்கு உரியன அன்றென அறிந்தும் அறியாதார் போல அவர்கள் கொடுத்தலால் அவர்கள் சிறப்படைந்தனர். சான்றோர் பெருமை இதனால் கூறப்பட்டது. 'அறிமடமும் சான்றோர்க்கு அணி' என்பது பழமொழி. அறிந்தே செய்யும் மடமைச் செயலும் சான்றோர்க்குச் சிறப்பே தருவதும் சொல்லப் பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012 உடன்பிறப்பே, பேரவையில்  நியாயமான  பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூ...