நடராஜரின்
அருளைப் பெற நடராஜர் பத்து
பாடல்
நடராஜ பத்து: திருவாசகத்திற்கு இணையாக தில்லை நடராஜரின் மீது பாடப்பட்ட நடராஜ பத்து ஆகும்.. சுமார் முந்நூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த சிறுமணவூர் முனுசாமி என்பவர் எழுதிய நடராஜ பத்து சைவ அன்பர்களிடம் மிக பிரபலமாகத் திகழ்கின்றது. மிக எளிதாக விளங்கக் கூடிய வார்த்தைகள், செறிவு நிறைந்த கருத்துக்கள், அழகிய சந்தங்கள் என்பதாக அமைந்த விருத்தங்கள் வகையைச் சேர்ந்தது நடராஜ பத்து பாடல்கள் ஆகும். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் "ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே" என்று முடியும் வரிகள் நெஞ்சத்தைக் கொள்ளை கொள்வதாக அமையக்கூடியது. ஒவ்வொரு பாடலையும் மனமொன்றிப் படித்தால் அதன் பொருள் எளிதில் விளங்கும். இதனை பாராயணம் செய்பவர்களுக்கு மிக நிச்சயம் ஸ்ரீ நடராஜரின் அருள் உண்டு.
Written by the great Sri. Chirumanavoor Muniaswamy Mudaliar over 300years ago, the Natarajar Patthu is an appeal to Lord Shiva in his dancer form - Lord Nataraja residing in Chidambaram. It is a great poem bringing glory to the mystic dancer, praising his very essence and his powerful dance, for there is none to excel him when it comes to the art of dancing. Listen to this special collection of songs singing the glory of Lord Natarajar and get his blessings.
Singer: Rahul
Music: K.V. Balakrishnan
From: https://www.youtube.com/watch?v=gdvDhymXTkQ&ab_channel=EmusicAbirami
நடராஜப் பத்து
மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ
மறைநான்கின் அடிமுடியும் நீ
மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ
மண்டலமிரண்டேழு நீ
பெண்ணும் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீ
பிறவும் நீ யொருவ நீயே
பேதாதிபேதம் நீ பாதாதி கேசம் நீ
பெற்றதாய் தந்தை நீயே
பொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ ஒளியும் நீ
போதிக்க வந்த குரு நீ
புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ
யிந்த புவனங்கள் பெற்றவனும் நீ
எண்ணரிய ஜீவகோடிகளை ஈன்ற அப்பனே
என் குறைகள் யார்க்குரைப்பேன்?
ஈசனே சிவகாமி நேசனே!
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே !
மானாட மழுவாட மதியாட புனலாட
மங்கை சிவகாமி யாட
மாலாட நூலாட மறையாட திறையாட
மறைதந்த பிரமனாட
கோனாட வானிலகு கூட்டமெல்லாமாட
குஞ்சர முகத்தனாட
குண்டல மிரண்டாட தண்டை புலி யுடையாட
குழந்தை முருகேசனாட
ஞானசம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனி
அட்ட பாலகருமாட
நரை தும்பை அருகாட நந்தி வாகனமாட
நாட்டியப் பெண்களாட
வினையோட உனைப்பாட எனைநாடி இதுவேளை
விரைந்தோடி ஆடி வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!
கடலென்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு
கனவென்ற வாழ்வை நம்பி
காற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே
கட்டுண்டு நித்த நித்தம்
உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி
ஓயாமலிரவு பகலும்
உண்டுண்டுறங்குவதைக் கண்டதே யல்லாது
ஒருபயனுமடைந்திலேனை
தடமென்ற மிடிகரையில் பந்தபாசங்களெனும்
தாவரம் பின்னலிட்டு
தாயென்று சேயென்று நீயென்று நானென்று
தமியேனை இவ்வண்ணமாய்
இடையென்று கடைநின்று ஏனென்று கேளாது
இருப்பதுனக்கழகாகுமா?
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!
வம்புசூனியமல்ல வைப்பல்ல மாரணம்
தம்பனம் வசியமல்ல
பாதாள வஞ்சனம் பரகாயப் பிரவேசம்
அதுவல்ல ஜாலமல்ல
அம்பு குண்டுகள் விலக மொழியு
மந்திரமல்லஆகாய குளிகையல்ல
அன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல
அரிய மோகனமுமல்ல
கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரம்மரிஷி
கொங்கணர் புலிப்பாணியும்
கோரக்கர் வள்ளுவர் போகமுனி இவரெலாம்
கூறிடும் வயித்தியமல்ல
என்மனம் உன்னடிவிட்டு விலகாது
நிலைநிற்கவே உளது கூறி வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற
தில்லைவாழ் நடராஜனே!
நொந்துவந்தே னென்று ஆயிரம் சொல்லியும்
நின்செவியில் மந்தமுண்டோ!
நுட்பநெறியறியாத பிள்ளையைப் பெற்றபின்
நோக்காத தந்தையுண்டோ!
சந்ததமும் தஞ்சமென்றடியைப் பிடித்தபின்
தளராத நெஞ்சமுண்டோ!
தந்திமுகன் அறுமுகன் இருபிள்ளையில்லையோ
தந்தை நீ மலடுதானோ!
விந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதே
வினையொன்றும் அறிகிலேனே
வேதமும் சாஸ்த்ரமும் உன்னையே புகழுதே
வேடிக்கை இதுவல்லவோ
இந்தவுலகு ஈரேழும் ஏனளித்தாய் சொல்லு
இனியுன்னை விடுவதில்லை
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!
வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும்
வாஞ்சையில்லாத போதிலும்
வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும்
வஞ்சமே செய்த போதிலும்
மொழி எதுகை மோனையும் இல்லாமல் பாடினும்
மூர்க்கனே முகடாகினும்
மோசமே செய்யினும் தேசமே தவறினும்
முழு காமியே ஆயினும்
பழி எனக்கல்லவே தாய்தந்தைக்கல்லவோ
பார்ப்பவர்கள் சொல்லார்களோ
பாரறிய மனைவிக்குப் பாதியுடல் ஈந்த நீ
பாலகனைக் காக்கொணாதோ
எழில் பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ
என் குறைகள் தீர்த்தல் பெரிதோ
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!
அன்னைதந்தையர் என்னை ஈன்றதற்கழுவனோ
அறிவிலாததற்கழுவனோ
அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ
ஆசை மூன்றுக்கழுவனோ
முற்பிறப்பென்ன வினை செய்தேன் என்றழுவனோ
என் மூட அறிவுக்கழுவனோ
முன்னில் என் வினைவந்து மூளும் என்றழுவனோ
முத்தி வருமென்று உணர்வனோ
தன்னைநொந்தழுவனோ உன்னை நொந்தழுவனோ
தவமென்ன என்றழுவனோ
தையலார்க்கழுவனோ மெய்வளர்க்க அழுவனோ
தரித்திர தசைக்கழுவனோ
இன்னமென்னப் பிறவிவருமோ வென்றழுவனோ
எல்லாமுரைக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!
காயாமுன் மரமீது பூ பிஞ்சறுத்தனோ
கன்னியர்கள் பழிகொண்டனோ
கடனென்று பொருள்பறித்தே வயிறெரித்தனோ
கிளைவழியில் முள்ளிட்டனோ
தாயாருடன் பிறவிக்கென்னவினை செய்தனோ
தந்தபொருளிலை யென்றனோ
தானென்று கெர்வித்து கொலைகளவு செய்தனோ
தவசிகளை ஏசினேனோ
வாயாரப் பொய்சொல்லி வீண்பொருள் பறித்தனோ
வாணரைப் பழித்திட்டனோ
வடவுபோலே பிறரைச் சேர்க்கா தடித்தனோ
வந்தபின் என் செய்தனோ
ஈயாத லோபி என்றே பெயரெடுத்தனோ
எல்லாமும் பொறுத்தருளுவாய்
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!
தாயாரிருந்தென்ன தந்தையுமிருந்தென்ன
தன்பிறவியுறவு கோடி
தனமலை குவித்தென்ன கனபெயரெடுத்தென்ன
தாரணியையாண்டுமென்ன
சேயர்கள் இருந்தென்ன குருவாய் இருந்தென்ன
சீடர்கள் இருந்துமென்ன
சித்துபல கற்றென்ன நித்தமும் விரதங்கள்
செய்தென்ன நதிகளெல்லாம்
ஓயாது மூழ்கினும் என்ன பயன் எமனோலை
ஒன்றைக் கண்டு தடுக்க உதவுமோ!
இதுவெல்லாம் சந்தை உறவென்று தான்
உந்தனிருபாதம் பிடித்தேன்
யார்மீது உன்மனமிருந்தாலுமுன் கடைக்
கண்பார்வையது போதுமே
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!
இன்னமும் சொல்லவோ உன்மனம் கல்லோ
இரும்போ பெரும்பாறையோ
இருசெவியும் மந்தமோ கேளாது அந்தமோ
இது உனக்கழகு தானோ
என் அன்னை மோகமோ இதுஎன்ன கோபமோ
இதுவே உன்செய்கை தானோ
இருபிள்ளைதாபமோ யார்மீது கோபமோ
ஆனாலும் நான் விடுவனோ
உன்னை விட்டெங்கெங்கு சென்றாலும் விழலாவனோ
உனையடுத்துங் கெடுவனோ
ஓஹோ இது உன்குற்றம் என்குற்றம்
ஒன்றுமில்லை உற்றுப்பார் பெற்ற ஐயா
என் குற்றமாயினும் உன் குற்றமாயினும்
இனியருள் அளிக்க நினைவாய்
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!
சனிராகு கேதுபுதன் சுக்கிரன் செவ்வாய் குரு
சந்திரன் சூரியன் இவரை
சற்றெனக் குள்ளாக்கி ராசி பன்னிரண்டையும்
சமமாய் நிறுத்தி யுடனே
பனியொத்த நட்சத் திரங்களிரு பத்தேழும்
பக்குவப் படுத்திப் பின்னால்
பகர்கின்ற கரணங்கள் பதினொன்றையும் வெட்டிப்
பலரையும் அதட்டி
என்முன் கனிபோலவே பேசி கெடுநினைவு நினைக்கின்ற
கசடர்களையும் கசக்கி
கர்த்தனின் தொண்டராம் தொண்டர்க்குத் தொண்டரின்
தொண்டர்கள் தொழும்ப னாக்கி
சிறுமணவை முனுசாமி பாடியவை இசைக்கும்
எமை அருள்வது இனி யுன்கடன் காண்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராஜனே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.