google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: அறிஞர் அண்ணாவின் பொங்கல் வாழ்த்து

புதன், 23 டிசம்பர், 2020

அறிஞர் அண்ணாவின் பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து (திராவிட நாடு - 1963) 



பொலிவு
பொங்கிடும்

பொங்கற் புதுநாளில்

மகிழ்வு பொங்கிடும். நின்

மனையுளார் அனைவர்க்கும்,

என்வாழ்த்து தனை அதற்குத்

தேனாக்கிக் கலப்பதற்கு

வழங்கி மகிழ்கின்றேன்.

வாழியநீ என்றென்றும்,

வாழ்வும் வளமும் மங்காத

தமிழ் என்பார்!

தமிழ்வாழ நாம் வாழ்வோம்.

அறிவாய் நன்றாய்!

நாம்வாழ் வில்பெறும் இன்பம்

கரும்பாகிடல் வேண்டும்

நாட்டி னோர்க்கு.

'தை' அதனில் காணும் செல்வம்

தமக்கென்றே கொண்டனரோ

உழவர், மேலோர்!!

தாரணிக்கு நாம்அளிக்கச்

செல்வம் காண்போம்.

நல்லறம் இஃதெனக் கண்ட 'நம்பி'

நான் வாழ்த்துகின்றேன், உன்

வெற்றிக்காக

                  அண்ணன்,

                     அண்ணாதுரை

பொங்கல் வாழ்த்து (திராவிடன் - 1963) 

வாழ்த்துகின்றேன்! வாழ்த்துகின்றேன்!

எத்துணை ஏழ்மை, ஏக்கம், துக்கம்

ஈங்கிவை தாக்கிடினும்,

ஏற்புடைத் திருநாள் என்றுநாம் கொண்ட

பொங்கற் புதுநாள் அன்று மட்டும்

புதுப்புன லாடி புத்தாடை அணிந்து,

பூரிப் புடனே விழா நடத் திடுவோம்

என்னையோ வெனில்,

உழைப்பின் உயர்வைப் போற்றிடும் பண்பு

உலகெலாம் பரவிடல் வேண்டு மென்றே

விழைவு மிகக் கொண்டோம் அதனால்!

காய்கதிர்ச் செல்வனைப் போற்றினர், ஏனாம்?

உயிர்கட்கு ஊட்டம் அளிப்பவ னதனால்.

உழவர்கள் உயர்வினைப் போற்றிடல் எதனால்?

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் அதனால்!

ஆவினம் போற்றினோம். அஃது எதனால்?

பரிந்து தீஞ்சுவைப் பால் அளிப் பதனால்!

எனவே இவ்விழா,

நன்றி கூறிடும் நல்விழா வாகும்.

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை

செய்நன்றி கொன்ற மகற்கு"

என்றுநம் வள்ளுவர் எடுதது உரைத்திட்டார்.

குறள் நெறி குவலயம் பரவிடல் வேண்டும்!

குறள்வழி நடந்துநாம் காட்டிடல் வேண்டும்!

குறள்நமை இருட்குகை காடுபோ என்று

கூறிட வில்லை! மாண்பு பெறுதற்குக்

"கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக!"

என்று கூறிடுது கான்!

காடும் - கழனியும் ஏரும் - எருதும்

காட்டிடும் பாடம் படிப்போம்.

களை முளைத் திட்டால் எடுத்திடும்

உழவு முறையின் கருத்தும் உணர்வோம்

உணர்ந்து,

நல்லன கொண்டு அல்லன தள்ளி,

நமதுயர் நாடு நானிலம் மெச்சிடும்

நன்னிலை காணநாளும் உழைத்திடு வோமே!

உழைப்பால் ஏற்படும் களைப்புப்போக

விழாவும் ஓர்வழி, ஆமாம்!

விழா தரும் மகிழ்ச்சியும், மிகுதியும் பெற்றிடல்

உழைப்பின் உயர்வு பெறத்தான்!

"நேற்று நேர்த்திமிகு ஒளி அளித்தேன் நானே!

இன்றுஓய்வு கொள்ளப் போகிறேன்" என்று

கூறிடுவ தில்லை உதயசூரியன் தானும்!

நாமும் அதுபோல,

உழைத்தபடி இருந்திடுபோம் உலகு உய்ந்திடவே!

சிறந்த செயல் இது போன்று

செய்து வரும்செம் மல்களை

வாழ்த்துகின்றேன்; வாழ்த்துகின்றேன்

உள்ள நிறை வோடு

                   அண்ணன்,

                     அண்ணாதுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

கள்ளுண்ணாமை

கள்ளுண்ணாமை குறள் 921 இலிருந்து 930 முடிய குறள் 921: உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார் . பொருள்:...