நந்தனார் (1933):
புகழ்பெற்ற "நந்தனார் சரிதம்" இதுவரை தமிழ் சினிமாவில் மூன்றுமுறை தயாரித்து வெள்ளித்திரையில் நிழலாடி இருக்கிறது. தமிழ் சினிமா பேசஆரம்பித்த (1931) இரண்டு வருடங்கள் கடந்த பிறகு 1933-இல் முதல் நந்தனார் வெளிவந்தது. கல்கத்தாவை சேர்ந்த "நியூ தியேட்டர்" நிறுவனம் முதல் நந்தனாரை தயாரித்து வழங்கியது. படமும் கல்கத்தாவிலேயே படமாக்கப் பட்டது. அப்பொழுதெல்லாம் பல தமிழ் படங்கள் பம்பாய், கல்கத்தா, புனே போன்ற இடங்களில் தயாரிக்கப்பட்டன. நடிக நடிகையர் ரயிலில் சென்று அங்கேயே பல நாட்கள் தங்கி நடிப்பதுண்டு. ஒரு படம் முழுவதும் முடிந்தபிறகே அடுத்த படத்திற்கு கால்ஷீட் கொடுத்த காலங்கள் அவை. தமிழின் முதல் வெற்றிப்படமான 1933-இல் வெளிவந்த "வள்ளிதிருமணம்" திரைப்படத்தை இயக்கிய "பி.வி. ராவ்" அதே 1933-ம் வருடத்தில் இந்த நந்தனார் படத்தையும் இயக்கினார்.
புகழ் பெற்ற நாடக நடிகரான "சுப்பையா பாகவதர்" நந்தனாராக இந்தப்படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானார். இவர் சம்பூர் வடகரை என்ற ஊரில் பிறந்தவர். இதே படத்தில்தான் நடிகை "அங்கமுத்து" அறிமுகமானார். அங்கமுத்து நாகப்பட்டினத்தில் பிறந்தவர். "பி.எஸ். ரத்னாபாய், பி.எஸ். சரஸ்வதிபாய் சகோதரிகள்" நடத்தி வந்த நாடகக் கம்பெனியில் நடிகையாக நடித்துவந்த இவர் நந்தனார் படத்தில் முதன்முறையாக திரையில் தோன்றினார். தொடர்ந்து 1934-ல் ரத்னாபாய், சரஸ்வதிபாய் சகோதரிகள் தயாரித்து நடித்த வெற்றிப்படமான பாமாவிஜயத்திலும் தோன்றினார். அந்நாட்களில் பாடலின் தெளிவு கருதி இசைத்தட்டிற்காக தனியாக ஒலிப்பதிவு செய்து பாடல்கள் இசைத்தட்டாக வெளியிடப்படும். படத்தில் நேரடியாக பாடிய பாடலை தாள சங்கதி குறையாமல் நடிகநடிகையர் மீண்டும் ஓலிப்பதிவு கூடத்தில் பாடுவார்கள். இந்தப்பாடலும் அந்த முறைப்படி இசைத்தட்டாக வெளிவந்ததே. இதோ அந்த அபூர்வமான பாடல்: "தில்லை அம்பல தலம் ஒன்று" நந்தனார் (1933) பாடியவர் : எஸ்.வி. சுப்பையா பாகவதர் எஸ்.வி. சுப்பையா பாகவதர் 1930-40 களில் நாடக மேடையிலும் கிராமபோன் இசைத்தட்டுகளிலும் மிகப்பிரபலமாய் விளங்கிய பெயர். நல்ல குரல்வளம் இருந்தால் மட்டுமே சினிமாவில் நுழையமுடியும் என்று இருந்த அன்றைய காலத்தில் சினிமா வாய்ப்புகளைப்பெற பலர் இவரின் பாடல்களையே பாடிக்காட்டினார்கள். (பின்னாட்களில் நடிகர்திலகத்தின் வசனங்களை பேசி பலர் வாய்ப்புத்தேடியதுபோல்). மூன்றே மூன்று படங்களில் மட்டுமே எஸ் வி சுப்பையா பாகவதர் நடித்துள்ளார். 'நந்தனார் (1933), சுபத்ராஹரன் (1935), கம்பர் (அல்லது) கல்வியின் வெற்றி (1938)'. ஆனால் கிராமபோன் தட்டுகளில் ஒலித்த அவரின் தனிப்பாடல்களைக் கேட்டு மெய்சிலிர்க்க ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தையே இவர் கொண்டிருந்தார். இவர் நடிப்பில் பிரபலமான "சுபத்ராஹரன்" நாடகம் அதேபெயரில் திரைப்படமானபோது நாடகத்தில் ஏற்றிருந்த அதே அர்ஜுனன் வேடமேற்று திரையிலும் நடித்தார். நாடகத்தில் திரை விலகி இவர்பாடும் அறிமுகப்பாடலான "ஜெய ஜெய கோகுல பாலா" பாடல் மிகப்பிரபலம்... அதனால் திரைப்படத்திலும் அந்தப்பாடலைப்பாடிக்கொண்டெ முதல் காட்சியில் தோன்றினார். 1938-இல் வெளிவந்த கம்பர் (அல்லது) கல்வியின் வெற்றி படத்தில் கம்பராக நடித்து பலபாடல்களைப் பாடியுள்ளார். " வாணி வரம் அருள் கல்யாணி", "ஞான சந்திர பிரபை", "தாய்வள நாடே இனிதாய் விடை தருவாய் " போன்ற பாடல்கள் பிரபலம் அடைந்தன. பாடல்கள் அனைத்தையும் டி கே சுந்தர வாத்தியார் எழுதினார். பின்னாட்களில் மிகச்சிறந்த குணசித்திர நடிகராய் விளங்கிய நடிகர் எஸ் வி சுப்பையா அல்ல இவர் . "சங்கீத வித்வத்சிகாமணி" என அழைக்கப்பட்ட "சாம்பூர் வடகரை சுப்பையா பாகவதர்" எனும் எஸ் வி சுப்பையா பாகவதர் இவர். இவரின் வாழ்க்கை பற்றி எந்தத் தகவலும் தெரியவில்லை. காலவெள்ளத்தில் அழிந்து போகாமல் இப்பொழுதும் கிடைக்கும் சில இசைத்தட்டுப் பாடல்கள் மட்டுமே இவர் பெயரை நினைவூட்டிக்கொண்டிருக்கின்றன.
From: https://www.youtube.com/watch?v=ds9sD8YJESY
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.