google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: கெட்டி மேளம் கொட்டும் நேரம் எப்போது?

வியாழன், 28 மார்ச், 2019

கெட்டி மேளம் கொட்டும் நேரம் எப்போது?


திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிகவும் இன்றியமையாதது. ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்களின் பிறப்பின் பயன், பிரதான நோக்கமே திருமண பந்தத்தின் மூலமான வம்ச விருத்தியில்தான் இருக்கிறது. இதில் இருப்பவன், இல்லாதவன், பணம் படைத்தவன், வசதி மிக்கவன், அரசன், ஆண்டி என்கிற பாகுபாடு கிடையாது. இத்தகைய திருமண யோகம், பாக்கியம் சிலருக்கு சரியான வயதில் தானாக அமைந்து விடுகிறது. சிலருக்கு சிறிது முயற்சிகள் மூலம் திருமண பந்தம் ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு மிகத் தீவிர அதீத முயற்சிகளின் பேரில் கூடி வருகிறது. பலருக்கு பல நூற்றுக்கணக்கான ஜாதகங்களைப் பார்த்து, பிரம்மப் பிரயத்தனம் செய்து அதன்பிறகு கல்யாண பாக்கியம் கிடைக்கிறது. இன்றும் சிலர் திருமண பிராப்தம் இல்லாததால் இல்லற வாழ்க்கை கிடைக்காமல் பிரம்மச்சாரிகளாகவும், முதிர் கன்னிகளாகவும் வாழ்க்கை நடத்துகிறார்கள்.

ஏறாத மலை இல்லை, இறங்காத குளம் இல்லை, சுத்தாத கோயில் இல்லை. எல்லா பூஜைகள், விரதங்கள், வழிபாடுகள், பரிகாரங்கள் என எல்லாம் செய்து முடித்தாகி விட்டது. ஒன்றுக்கு பலமுறை குரு பார்வை, குருபலன் வந்து போய்விட்டது. ஜாதகம், கைரேகை, எண்கணிதம், நாடி ஜோதிடம், குறி ஜோதிடம், கிளி ஜோதிடம் வரை எல்லாம் பார்த்தாகி விட்டது. ஆனால், இன்னமும் திருமண பாக்கியம் கூடிவரவில்லையே என எண்ணிலடங்கா பெற்றோர்கள் ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்கள். இந்த நிலைக்கு என்ன காரணம்? ஏன் பலருக்கு திருமண பிராப்தம் சுலபத்தில் அமைவதில்லை என்பதை ஆராயும்போது அவரவர் கர்மவினை என்பது மிகவும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இந்த பிறப்பின் ரகசியம் நம் ஜாதகக் கட்டங்களில் உள்ள கிரக அமைப்புக்களில் மறைந்து கிடக்கிறது.

அமைப்பு, அம்சம், கொடுப்பினை, பாக்கியம், பிராரப்தம் போன்ற சொற்களை நம் மூதாதையர்கள் அடிக்கடி பயன்படுத்துவார்கள். எல்லா நிகழ்ச்சிகளுக்கும் காரண காரியங்கள் உண்டு. நிகழ்வுகள் யாவும் நிச்சயிக்கப்பட்டவை. அதற்கேற்ப கிரகங்கள் அந்தந்த தசா காலங்களில் அதற்குரிய பலாபலன்களை தருகின்றன. காலம் ஓர் அருமருந்து, காலம் கிரகங்களின் வசம் என்றால் அது மிகையாகாது. ஜாதகம் என்பது நாம் பிறக்கும் போது அந்த நேரத்தில் நவகிரகங்கள் எந்தெந்த ராசிக்கட்டத்தில், என்ன பலம், அம்சத்துடன் இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்வதற்கான கணித முறையாகும். இதன் அடிப்படையில் ஜாதகரின் பிறப்பின் தன்மையையும், யோக, அவயோகங்களையும் நாம் தெரிந்துகொள்ள முடியும். அந்த யோகங்களும், அவயோகங்களும், எந்த அளவு இருக்கும் என்பது சூட்சுமமான விஷயமாகும். அதைத்தான் நாம் அம்சம், பிராரப்தம் என்று சொல்கிறோம்.

ஒருவர் வீடு, நிலம், பிளாட் வாங்குவாரா என்றால் அவரின் ஜாதக அமைப்பு, நேரம், காலம், தசாபுக்தி போன்றவற்றை கணக்கிட்டு நல்ல யோகத்தில் இருந்தால் வீடு வாங்குவார் என்று ஜோதிடர் சொல்வார். அவர் ஒரு வீடு வாங்குவாரா அல்லது 23 வீடுகள் வாங்குவாரா என்பதை உறுதிபடச் சொல்ல முடியாது. ஒருவர் அளப்பரிய நிலத்துக்கு சொந்தக்காரராக இருப்பார். தோட்டம், காப்பி, தேயிலை எஸ்டேட், தோப்புக்கள் என நிலச்சுவான்தாரராக இருப்பார். இப்படி இந்த மண், மனை, வீடு என எல்லா பாக்கியங்களும் அவரவர் பூர்வ கர்ம பிராரப்தப்படி கிடைக்கிறது. இதைத்தான் நாம் வாங்கி வந்த வரம் என்கிறோம். பிராரப்தம் இருந்தால் உனக்கு கிடைக்கும் நடக்கும். இது நம் முன்னோர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் வாக்கு. இந்த விஷயத்தை நம்முடைய தர்ம சாஸ்திரமும் எடுத்துரைக்கிறது. பிராரப்தத்தைப் பற்றி பகவான் ரமணர், காஞ்சி மகா சுவாமிகள் போன்றோர் பல்வேறு சமயங்களில் விளக்கமாக கோடிட்டு காட்டியுள்ளார்கள். ஒருசமயம் பல பக்தர்கள் பகவான் ரமணர் முன்பு அமர்ந்திருந்தார்கள். அப்போது ஒருவருக்கு விக்கல் எடுத்தது. உடனே பகவான் அவருக்கு தண்ணீர் தருமாறு சொன்னார். அதையடுத்து பக்கத்து அறையில் இருந்து ஒருவர் அவருக்கு அருந்த நீர் கொண்டு வந்து கொடுத்தார்.

தண்ணீரை வாங்கி அருந்திய அந்த அன்பர் பகவானைப் பார்த்து, பகவானே தற்போது தான் பிராரப்தத்தைப் பற்றி விளக்கமாகச் சொல்லிக் கொண்டிருந்தீர்கள். இப்போது எனக்கு தண்ணீர் கிடைத்ததும் என் பிராரப்தமோ என்று கேட்டார்.  அதற்கு பகவான் ரமணர் சிறிதும் தாமதிக்காமல் எல்லாமே உன் பிராரப்தப்படிதான் நடக்கின்றன என்று அருளினார். காஞ்சி மகா சுவாமிகளிடம் ஒரு பக்தர், பெரியவா நான் கோயில் கட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்தார். அதற்கு மகா சுவாமிகள் உனக்குப் பிராரப்தம் இருந்தால் செய்வாய் என்று சொன்னார். அதன்படி பிற்காலத்தில் அந்த பக்தருக்கு மிகப்பழைய புராதானமான கோயிலை புதுப்பித்து திருப்பணி செய்யும் பாக்கியம் அமைந்தது. அந்தளவிற்கு பிராரப்தம் என்பது இறைவனின் அருட்கொடையாகும். நடக்காதது என்ன முயற்சிக்கினும் நடக்காது, நடப்பது என் தடை செய்யினும் நில்லாது என்பது பகவான் ரமணரின் உபதேச அருள்வாக்காகும்.

திருமணம் நடைபெறும் காலம்

பரிகாரங்கள், விரதங்கள், நேர்த்திக் கடன்கள், பிரார்த்தனைகள் எல்லாம் எந்தக் காலத்திலும் வீண் போகாது. கடவுளுக்காக செலவழிக்கப்படும் பணமும், நேரமும் நிச்சயம் உரிய காலத்தில் பலன் தரும். ஒரு சிலருக்கு உடனே பலன் கிடைக்கிறது. மற்றவர்களுக்கு சிறிது தாமதமாகிறது. இதற்குக் காரணம் அவரவர் ஜாதகக் கட்டத்தில் கிரக அம்சங்கள், சேர்க்கைகள், தசாபுக்திகளாகும். திருமணத்தைப் பொறுத்தவரை அஸ்திவாரம் களத்திர ஸ்தானம் எனப்படும் ஏழாம் இடமும், அதன் அதிபதியுமாகும். அதற்கடுத்து தனம், வாக்கு, குடும்பம் எனப்படும் ஏழாம் இடமும், இரண்டாம் அதிபதியுமாகும். மேலும், பெண்கள் ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானம் எனும் எட்டாம் இடம், மாங்கல்ய ஸ்தானமாக வருகிறது. ஆக மொத்தத்தில் 2, 7, 8 ஆகிய வீடுகள், ஸ்தானாதிபதிகள் ஒருவரின் திருமண வாழ்க்கைக்கு காரணமாக இருக்கின்றது.

ஏழாம் அதிபதி தசையில், லக்னாதிபதி, இரண்டாம் அதிபதி, ஐந்தாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி ஆகியோர் புக்திகளில் திருமண பாக்கியம் கூடிவரும். இரண்டாம் அதிபதி தசையில், லக்னாதிபதி, ஐந்தாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி புக்திகளில் சுபயோகம் உண்டு. ஐந்தாம் அதிபதி தசையில் 2, 4, 5, 7, 9 ஆகிய ஸ்தானங்களின் அதிபதிகளின் புக்திகளில் கல்யாணம் கூடிவரும். ஒன்பதாம் அதிபதி தசையில், லக்னாதிபதி  2, 4, 5, 7ம் அதிபதிகளின் புக்திகளில் சுபபாக்கியம் உண்டு. ராகு, கேது தசை, புக்திகளில் திருமணம் கூடி வராது என்று பொதுவாக சொல்வார்கள். ஆனால் அது தவறான கருத்தாகும். திருமண யோகம் மங்களகரமாக நடக்கும். ராகு, கேது தசா புக்திகளில் 1, 2, 5, 7, 9 ஆகிய கிரகங்களின் தசா புக்திகளில் திருமண பாக்கியம் கிடைக்கும். சந்திரனுக்கு கேந்திரத்திலும், குரு, சுக்கிரன் பார்வை பெற்று இருந்தாலும் கல்யாணம் கூடிவரும்.

கோச்சார கிரக அமைப்பு

கோள் சாரம், கோச்சாரம் என்றால் தற்காலம் ஏற்படும் கிரக மாற்றங்களை குறிப்பதாகும். அதாவது சனிப் பெயர்ச்சி, குரு, ராகுகேது பெயர்ச்சி போன்றவையாகும். இந்த கோச்சார அமைப்பை பார்ப்பது ஜோதிட சாஸ்திரத்தின் ஓர் அங்கமாகும். பலருக்கு பலன் சரியாக இருக்கும். ஒரு சிலருக்கு சரியாக அமையாது. கோச்சார அமைப்பில் குருபலன் இருக்கிறதா என்று எல்லோரும் கேட்பார்கள். அந்தளவிற்கு குருபலன் மிகவும் பிரசித்தமானது. இந்த குரு மாறுவதால் எல்லா மாற்றங்களும் நிகழுவதில்லை. ஜாதக அமைப்பின்படி தசா புக்தி யோகமே நமக்கு சுபயோகத்தை அமைத்து தருகின்றது. ஆகையால் குருபலன் இல்லையே என்ற கவலை வேண்டாம். குரு ஜென்மத்தில் இருந்தாலும் எட்டாம் இடத்தில் இருந்தாலும் குரு பார்வை சுபமாக இருப்பதால் அனுகூலம் உண்டு.
சனியின் கோச்சார அமைப்பிலும் திருமண யோகம் கூடிவரும். பொதுவாக 3, 6, 11ல் சனி சஞ்சரிக்கும் காலங்களில் சுப பலன்களைத் தருவார். குடும்பத்தில் தாய், தந்தைக்கு 7லு சனி நடக்கும்போது விரயச் செலவாக சுபச் செலவுகளை ஏற்படுத்துவார். திருமண வயதில் உள்ளவர்களுக்கு 2, 4 ஆம் வீட்டில் வரும்போது இடமாற்றம் என்ற அமைப்பில் திருமணம் கூடிவரும். ஜாதகக் கட்ட அமைப்பு, யோகம், தோஷம், தற்கால கோச்சார நிலை என்று இருந்தாலும் தசா காலங்கள் என்னும் நேரம், காலம், பிராப்தம் சேரும்போது எல்லாம் சுபமாக கூடிவரும். கெட்டி மேளம் கொட்டும்.

_ இன்டர்நெட்டில் இருந்து...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

கள்ளுண்ணாமை

கள்ளுண்ணாமை குறள் 921 இலிருந்து 930 முடிய குறள் 921: உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார் . பொருள்:...