google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: சிறுபாணாற்றுப்படை

வியாழன், 30 ஆகஸ்ட், 2018

சிறுபாணாற்றுப்படை


தமிழ் உரை சிறுபாணாற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை
எளிய உரை வைதேகி

பாடியவர் – இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்
பாடப்பட்டவன் – ஓய்மான் நாட்டு நல்லியக்கோடன்
திணை – பாடாண் 
துறை – ஆற்றுப்படை
பாவகை – ஆசிரியப்பா
மொத்த அடிகள் – 269

நிலமகளின் தோற்றம்
மணி மலைப் பணைத்தோள் மாநில மடந்தை
அணி முலைத் துயல்வரூஉம் ஆரம் போல,
செல்புனல் உழந்த சேய்வரல் கான்யாற்று. (1–3)
பொருளுரை:  மூங்கிலாகிய தோள்களையுடைய பெரிய நிலமகளின் நீலமணிகளையுடைய மலையாகிய மார்பில், அசையும் முத்து மாலையைப் போல அசைந்து, மலையை வருத்தி ஓடுகின்றது தொலைவிலிருந்து வரும் காட்டு ஆறு.
குறிப்பு:   நச்சினார்க்கினியர் உரை இரண்டு மலையினின்றும் வீழ்ந்து, இரண்டு ஆற்றிடைக் குறையச் சூழ் வந்து கூடுதலின் முத்து வடமாயிற்று.  இது மெய்யுவமம்.  பெருக்கால் கோடுகள் வருந்தலின் உழந்தவென்றார்.
பதவுரை:  மணி மலை நீலமணியையுடைய மலைகள், பணைத்தோள் மூங்கிலாகிய தோள்களையுடைய, மாநில பெரிய நிலம், மடந்தை இளம் பெண், அணி முலை அழகிய மார்பு, துயல்வரூஉம் ஆரம் போல அசையும் முத்து மாலையைப் போல, செல் புனல் உழந்த ஓடும் நீராலே வருந்திய, சேய்வரல் கான் யாற்று தொலைவிலிருந்து வரும் காட்டு ஆறு
கொல் கரை நறும் பொழில் குயில் குடைந்து உதிர்த்த
புதுப்பூஞ் செம்மல் சூடி, புடை நெறித்து,   5
கதுப்பு விரித்தன்ன காழ் அக நுணங்கு அறல். (4-6)
பொருளுரை:  ஆற்றின் நீரினால் இடிக்கப்படும் கரையில் உள்ள நறுமணமுடைய சோலையில் உள்ள குயில்கள் தங்கள் அலகினால் குத்திக் கீழே உதிர்த்த புதிய வாடல் மலர்களைச் சூடிய, பக்கங்கள் சுருண்ட நிலமகளின் கூந்தல் விரிந்திருப்பது போல இருந்தது கருமையான நுண்ணிய மணல்.
குறிப்பு:  கூந்தலைப் போன்ற மணல் ஐங்குறுநூறு 345 – கதுப்பு அறல், கலித்தொகை 32 – எஃகு இடை தொட்ட கார்க் கவின் பெற்ற ஐம்பால் போல் மை அற விளங்கிய துவர் மணல், சிறுபாணாற்றுப்படை 6 – கதுப்பு விரித்தன்ன காழ் அக நுணங்கு அறல்.
பதவுரை:  கொல் கரை ஆற்றின் நீரினால் இடிக்கப்படும் கரை, நறும் பொழில் நறுமணமுடைய சோலை, குயில் குடைந்து உதிர்த்த புதுப்பூ குயில் குத்தி உதிர்த்த புதிய மலர்கள், செம்மல் சூடி வாடல் மலர்களைச் சூடி, புடை நெறித்து பக்கங்கள் நெளிந்து, பக்கங்கள் சுருண்டு, கதுப்பு விரித்து அன்ன கூந்தல் விரிந்திருப்பது போல, காழ் அக நுணங்கு அறல் கருமையான நுண்ணிய மணல்

இளைப்பாறும் பாணன்
அயில் உருப்பு அனைய ஆகி ஐது நடந்து
வெயில் உருப்புற்ற வெம்பரல் கிழிப்ப,
வேனில் நின்ற வெம்பத வழி நாள்,
காலை ஞாயிற்றுக் கதிர் கடா உறுப்ப,  10
பாலை நின்ற பாலை நெடு வழி,
சுரன் முதல் மராஅத்த வரி நிழல் அசைஇ, (7-12)
பொருளுரை:  இரும்பில் உள்ள வெப்பத்தைப் போன்ற சூட்டையுடைய பரல் கற்கள் தங்கள் கால்களைக் கிழித்ததால், மெல்ல நடந்து சென்று, வேனில் காலத்தின் வெப்பமான காலை நேரத்தில், காலைக் கதிரவன் தன் கதிர்களால் வெப்பத்தைச் செலுத்த, பாலைத் தன்மையைக் கொண்ட நீண்ட பாலை வழியையுடைய சுரத்தில் உள்ள கடம்ப மரத்தின் வரிகளாக உள்ள நிழலில் தங்கி,
பதவுரை:  அயில் உருப்பு அனைய இரும்பில் உள்ள வெப்பத்தைப் போன்ற, ஆகி ஆகி, ஐது நடந்து மெல்ல நடந்து சென்று, வெயில் உருப்புற்ற வெம்பரல் வெயிலின் வெப்பத்தையுடைய சூடான பரல் கற்கள், கிழிப்ப கிழிக்க, வேனில் நின்ற வெம்பத வழிநாள் வேனில் காலத்தின் வெப்பமான நாள், காலை ஞாயிற்று காலைக் கதிரவன், கதிர் கதிர்கள், கடா உறுப்ப வெப்பத்தைச் செலுத்த, பாலை நின்ற பாலைத் தன்மையைக் கொண்ட, பாலை நெடு வழி நீண்ட பாலை வழி, சுரன் முதல் பாலை நிலத்தில், மராஅத்த வரி நிழல் அசைஇ கடம்ப மரத்தின் வரிகளாக உள்ள நிழலில் தங்கி

விறலியரின் அழகு
ஐது வீழ் இகு பெயல் அழகு கொண்டு அருளி,
நெய் கனிந்து இருளிய கதுப்பின், கதுப்பு என
மணிவயின் கலாபம் பரப்பி பலவுடன்   15
மயில் மயில் குளிக்கும் சாயல், சாஅய்
உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ,
வயங்கு இழை உலறிய அடியின் அடி, தொடர்ந்து
ஈர்ந்து நிலம் தோயும் இரும் பிடித் தடக் கையின்
சேர்ந்து உடன் செறிந்த குறங்கின், குறங்கு என   20
மால் வரை ஒழுகிய வாழை, வாழைப்
பூ எனப் பொலிந்த ஓதி  (13-22)
பொருளுரை:  மென்மையாக விழும், தாழ்வாகப் பெய்யும் மழை மேகத்தின் அழகுடன் இருந்த எண்ணெய்த் தடவிய கரிய கூந்தலையும், கூந்தலைப் போன்ற நீலமணியைப் போன்ற கண்ணினையுடைய தோகையைப் பரப்பி ஆடும் ஆண் மயில்கள் விறலியரின் அழகுக்கு ஒப்பாகத் தாம் இல்லையே என்று தங்கள் பெண் மயில்கள் பின் மறைக்கும் மென்மையையும், ஓடித் தளர்ந்த வருந்திய நாயின் நாக்கைப் போன்று நல்ல அழகு உடைய அணிகலன் இல்லாத பொலிவு இழந்த அடியினையும், தொடர்ந்து நிலத்தில் பொருந்திய கரிய பெண் யானையின் பெரிய தும்பிக்கையைப் போல் உடன் சேர்ந்த நெருங்கிய தொடைகளையும், தொடையைப் போலத் திரண்டு, உயர்ந்த மலையில் வளரும் அழிதல் இல்லாத வாழையின் பூவைப் போன்று பொலிந்த கூந்தல் முடிச்சும்,
குறிப்பு:  விறலியர் ஆடவும் பாடவும் வல்ல பெண்கள்.  பொருநராற்றுப்படை 40 – இரும் பிடித் தடக் கையின் செறிந்து திரள் குறங்கின், பொருநராற்றுப்படை 42 – வருந்து நாய் நாவின் பெருந்தகு சீறடி.  நற்றிணை 225 – வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை மெல் இயல் மகளிர் ஓதி அன்ன.  நற்றிணை 252 – முயல் வேட்டு எழுந்த முடுகு விசைக் கத நாய் நல் நாப் புரையும் சீறடி.  ஒழுகிய வாழை (21) – நச்சினார்க்கினியர் உரை –  ஒழுங்குபட வளர்ந்த வாழை, பொ. வே. சோமசுந்தரனார் உரை இடையறவு படாது ஒன்றன் பின் ஒன்றாய்க் கிளைத்து வாழும் இயல்பினுடைய வாழை மரம்.  குறங்கு என (20) –  பொ. வே. சோமசுந்தரனார் உரை மகளிர் தொடையைப் போலத் திரண்ட வாழை, வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை –  தொடையைப் போலத் திரண்ட வாழை, செறிந்த குறங்கின் குறங்கு (20) நச்சினார்க்கினியர் உரை ஒரு குறங்குடனே ஒரு குறங்கு நெருங்கியிருக்கின்ற குறங்கினையும்.
பதவுரை:  ஐது வீழ் இகு பெயல் மென்மையாக விழும் தாழப் பெய்யும் மழை, அழகு கொண்டு அருளி எழிலுடன் அருளி, நெய் கனிந்து இருளிய கதுப்பின் எண்ணெய்த் தடவிய கரிய கூந்தலையும், கதுப்பு என கூந்தலைப் போன்றமணி வயின் கலாபம் பரப்பி நீலமணியைப் போன்ற கண்ணினையுடைய தோகையைப் பரப்பி, பலவுடன் –  மயில் மயில் குளிக்கும் பல மயில்கள் மறைக்கும், சாயல் மென்மை, சாஅய்  உயங்கு நாய் ஓடித் தளர்ந்த வருந்திய நாய், நாவின் நாக்கைப் போன்று, நல் எழில் நல்ல அழகு, அசைஇ வருத்தி, வயங்கு இழை ஒளியுடைய அணிகலன்கள், உலறிய பொலிவு இழந்த, அடியின் –  அடியினையும், தொடர்ந்து ஈர்ந்து நிலம் தோயும் தொடர்ந்து நிலத்தில் பொருந்திய, இரும் பிடி பெரிய பெண் யானை, கரிய பெண் யானைதடக் கையின் பெரிய தும்பிக்கையைப் போல், சேர்ந்து உடன்  செறிந்த குறங்கின் உடன் சேர்ந்த நெருங்கிய தொடையைப் போல, குறங்கு என தொடையைப் போல் திரண்டு, மால் வரை உயர்ந்த மலை, ஒழுகிய ஒழுங்கான, வாழை (வாழ் ஐ) அழிதல் இல்லாத வாழ்தலையுடைய, வாழைப்பூ என வாழைப் பூவைப் போன்று, பொலிந்த ஓதி பொலிந்த கூந்தல் முடிச்சும்
நளிச்சினை வேங்கை நாள் மலர் நச்சி
களிச் சுரும்பு அரற்றும் சுணங்கின், சுணங்கு பிதிர்ந்து
யாணர்க் கோங்கின் அவிர் முகை எள்ளிப்   25
பூண் அகத்து ஒடுங்கிய வெம்முலை, முலை என
வண்கோட் பெண்ணை வளர்த்த நுங்கின்
இன் சேறு இகுதரும் எயிற்றின், எயிறு என
குல்லை அம் புறவில் குவி முகை அவிழ்ந்த,
முல்லை சான்ற கற்பின், மெல் இயல்,  30
மட மான் நோக்கின், வாணுதல் விறலியர் (23-31)
பொருளுரை:  அடர்ந்த கிளைகளையுடைய வேங்கை மரத்தின் அன்று மலர்ந்த மலர் என்று விரும்பி, அதன் தேனை உண்டு களித்த வண்டுகள் ஆரவாரிக்கும் மஞ்சள் தேமலையும், மஞ்சள் தேமல் சிதறினாற்போல் புதிதாக மலர்ந்த மலர்களையுடைய கோங்க மரத்தின் விளங்குகின்ற மொட்டுக்களை எள்ளி நகையாடும் அணிகலன் கிடக்கின்ற விருப்பம் தருகின்ற முலையும், முலையைப் போன்ற பெரிய குலையையுடைய பெண்ணை வளர்த்த நுங்கில் உள்ள இனிய நீரைப் போன்று ஊறலுடைய பற்களையும், பற்களைப் போன்ற கஞ்சங் குல்லையுடைய அழகிய காட்டின்கண்ணே குவிந்த அரும்புகள் மலர்ந்த முல்லை மலர்களைச் சூடுதற்கு அமைந்த கற்புடைமையையும், மான் போன்ற நோக்கையும், ஒளியுடைய நெற்றியையும் உடைய, ஆடலிலும் பாடலிலும் சிறந்த விறலியரின்
குறிப்பு:  அகநானூறு 274 – முல்லை சான்ற கற்பின், நற்றிணை 142 – முல்லை சான்ற கற்பின், பரிபாடல் 15 – முல்லை முறை, சிறுபாணாற்றுப்படை 30 – முல்லை சான்ற கற்பின்சிறுபாணாற்றுப்படை 169 – முல்லை சான்ற.  அகநானூறு 240 – கோங்கு முகைத்தன்ன குவி முலை.
பதவுரை:  நளிச் சினை வேங்கை அடர்ந்த கிளைகளையுடைய வேங்கை மரம், நாள் மலர் நச்சி அன்று மலர்ந்த மலர் என்று விரும்பி, களி சுரும்பு அரற்றும் தேனை உண்டு களித்த வண்டுகள் ஆரவாரிக்கும், சுணங்கின் மஞ்சள் தேமலையும், சுணங்கு மஞ்சள் தேமல், பிதிர்ந்து சிதறி, யாணர் கோங்கின் புதிதாக மலர்ந்த மலர்களையுடைய கோங்க மரம், அவிர் முகை விளங்குகின்ற மொட்டுக்கள், எள்ளி எள்ளி, பூண் அகத்து  ஒடுங்கிய அணிகலன் கிடக்கின்ற, வெம்முலை விருப்பம் தருகின்ற முலை, முலை என முலையைப் போன்று, வண் கோள் பெண்ணை வளர்த்த நுங்கின் இன் சேறு பெரிய குலையையுடைய பெண்ணை வளர்த்த நுங்கில் உள்ள இனிய நீர், இகுதரும் வடிகின்ற, எயிற்றின் தரும் பற்களையும், எயிறு என பற்களைப் போன்று, குல்லை கஞ்சங் குல்லை, அம் புறவில் அழகிய காட்டில், குவி முகை குவிந்த மொட்டுக்கள், அவிழ்ந்த மலர்ந்த, முல்லை சான்ற கற்பின் முல்லை மலர்களைச் சூடுதற்கு அமைந்த கற்புடைமையும், மட மான் நோக்கின் மான் போன்ற நோக்கினுடைய, வாள் நுதல் ஒளியுடைய நெற்றி, விறலியர் ஆடலிலும் பாடலிலும் சிறந்த விறலியர்

விறலியரின் காலைத் தடவி விடும் இளையர்கள்
நடை மெலிந்து அசைஇய நல்மென் சீறடி,
கல்லா இளையர் மெல்லத் தைவரப் (32 – 33)
பொருளுரை:  நடை தளர்ந்து ஓய்ந்த அழகிய மென்மையான சிறிய அடியினைக் கற்று அறியாத இளைஞர்கள் மெதுவாகத் தடவ,
பதவுரை:  நடை மெலிந்து அசைஇ நடை தளர்ந்து ஓய்ந்த, நல் மென் சீறடி அழகிய மென்மையான சிறிய அடிகள், கல்லா இளையர் கல்வி கற்காத இளைஞர்கள், மெல்லத் தைவர மெதுவாகத் தடவ

பரிசில் பெற்ற பாணன் குடும்பத்துடன் வந்த பாணனைச் சந்திக்கிறான்
பொன் வார்த்தன்ன புரியடங்கு நரம்பின்
இன்குரல் சீறியாழ் இடவயின் தழீஇ,   35
நைவளம் பழுநிய நயந்தெரி பாலை
கைவல் பாண்மகன், கடன் அறிந்து இயக்க,
இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇ,
துனிகூர் எவ்வமொடு, துயர் ஆற்றுப்படுப்ப,
முனிவு இகந்து இருந்த, முதுவாய் இரவல (34-40)
பொருளுரை:  பொற்கம்பிகளை நீட்டினாற்போல உள்ள முறுக்கின நரம்பின் இனிய ஓசையையுடைய சிறிய யாழை இடது பக்கமாகத் தழுவி, நட்டப்பாடை என்னும் பண் நிறைந்த இனிமை தெரிகின்ற பாலை யாழை இயக்குதல் தெரிந்த முறைமையை அறிந்து, அசையாத உலகத்தில் பரிசில் தருவாரை விரும்பி, வள்ளல்கள் இல்லாததால் வெறுப்பு மிக்க வருத்தத்துடன் பாணன் இயங்க, வறுமைத் துயரம் உன்னைக் கொண்டு போவதால், வழி வருத்தம் தீர்ந்திருந்த, பேரறிவு உடைய பரிசில் நாடுபவனே, நான் கூறுவதைக் கேட்பாயாக!
குறிப்பு:  இயங்கா வையத்து (38) – நச்சினார்க்கினியர் உரை –  வள்ளியோர் இன்மையின் பரிசிலர் செல்லாத உலகத்தே.  இனி இயங்கும் வையம் சகடமாகலின் உலகத்திற்கு இயங்கா வையமென வெளிப்படை கூறிற்றுமாம்.  வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை அசைதல் இல்லாத பூமியிலே.
பதவுரை:  பொன் வார்த்து அன்ன புரியடங்கு நரம்பின் இன்குரல் சீறியாழ் பொற்கம்பிகளை நீட்டினாற்போல உள்ள முறுக்கின நரம்பின் இனிய ஓசையையுடைய சிறிய யாழ், இடவயின் தழீஇ இடது பக்கமாகத் தழுவி, நைவளம் பழுநிய நட்டப்பாடை என்னும் பண் நிறைந்த, நயந்தெரி பாலை இனிமை தெரிகின்ற பாலை யாழ், கைவல் பாண்மகன் கடன் அறிந்து இயக்க இயக்குதல் தெரிந்த முறைமையை அறிந்து, இயங்கா வையத்து அசையாத உலகத்தில், இயங்கும் உலகத்தில், (இயங்கா வையம் இயங்காத வண்டியாகிய உலகம், பூவா வஞ்சி என்றும்  சூடா வஞ்சி என்றும் வஞ்சி நகரைக் குறித்தல் போன்று), வள்ளியோர் நசைஇ பரிசில் தருவாரை விரும்பி, துனி கூர் எவ்வமொடு வெறுப்பு மிக்க வருத்தத்துடன், துயர் ஆற்றுப்படுப்ப வறுமைத் துயரம் கொண்டு போவதால், முனிவு இகந்து இருந்த வழி வருத்தம் தீர்ந்திருந்த, முதுவாய் இரவல பேரறிவு உடைய பரிசில் நாடுபவனே

சேர நாட்டின் வளமை
கொழுமீன் குறைய ஒதுங்கி, வள் இதழ்க்
கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை,
பைங்கறி நிவந்த பலவின் நீழல்,
மஞ்சள் மெல் இலை மயிர்ப் புறம் தைவர,
விளையா இளங்கள் நாற, மெல்குபு, பெயரா,   45
குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளும் (41-46)
பொருளுரை:  கொழுத்த மீன் வெட்டப்படும்படி நடந்து, வளப்பமான இலைகளையுடைய செங்கழுநீர் மலரை மேய்ந்த, பெரிய வாயையுடைய எருமை, மிளகுக் கொடி படர்ந்த பலா மரத்தின் நிழலில், மஞ்சளின் மெல்லிய இலை தனது மயிரையுடைய முதுகினைத் தடவ, முற்றாத இளங்கள் மணக்கும்படி, மென்று அசையிட்டு, காட்டு மல்லிகையாகிய படுக்கையில் உறங்கும்.
குறிப்பு:  மெல்குபு பெயரா (45) – பொ. வே. சோமசுந்தரனார் உரை மென்று அசையிட்டு.
பதவுரை:  கொழு மீன் குறைய ஒதுங்கி கொழுத்த மீன் துணியும்படி நடந்து, வள் இதழ் கழுநீர் மேய்ந்த வளப்பமான இலைகளையுடைய செங்கழுநீர் மலரை மேய்ந்த, கய வாய் எருமை பெரிய வாயையுடைய எருமைபைங்கறி நிவந்த பலவின் நீழல் மிளகுக் கொடி படர்ந்த பலா மரத்தின் நிழல், மஞ்சள் மெல் இலை  மயிர்ப்புறம் தைவர மஞ்சளின் மெல்லிய இலை மயிரையுடைய முதுகினைத் தடவ, விளையா இளங்கள்  நாற முற்றாத இளங்கள் மணக்கும்படி, மெல்குபு பெயரா மென்று அசையிட்டுகுளவிப் பள்ளிப் பாயல் கொள்ளும் காட்டு மல்லிகையாகிய படுக்கையில் உறங்கும்
குட புலம் காவலர் மருமான் ஒன்னார்
வட புல இமயத்து வாங்கு வில் பொறித்த,
எழு உறழ் திணி தோள், இயல் தேர்க் குட்டுவன்,
வருபுனல் வாயில் வஞ்சியும் வறிதே, அதாஅன்று (47-50)
பொருளுரை:  மேற்குத் திசையைக் காக்கும் சேர மன்னரின் குடியில் பிறந்தவன், பகைவருடைய வடபுலத்தின்கண் உள்ள இமய மலையின் மேல் சேரரின் சின்னமான வளைந்த வில்லினைப் பொறித்த, கணைய மரத்தை ஒத்த திண்ணிய தோள்களையுடைய, ஓடும் தேரையுடைய குட்டுவனின், பெருகி வரும் நீரினையும் வாயிலையுடைய வஞ்சி நகரத்தில் கிடைக்கும் பரிசும் சிறிதே.  அது மட்டும் அல்லாது,
பதவுரை:  குடபுலம் காவலர் மருமான் மேற்குத் திசையைக் காக்கும் சேரர் குடியில் பிறந்தவன், ஒன்னார் வடபுலம் இமயத்து வாங்கு வில் பொறித்த பகைவருடைய வட புலத்தின்கண் உள்ள இமய மலையின் மேல் வளையும் வில்லினைப் பொறித்த, எழு உறழ் திணி தோள் கணைய மரத்தை ஒத்த திண்ணிய தோள்கள், இயல் தேர்க் குட்டுவன் ஓடும் தேரையுடைய குட்டுவன், புனையப்பட்ட தேரையுடைய குட்டுவன், வரு புனல் பெருகி வரும் நீர், வாயில் வாயில், வஞ்சியும் வஞ்சி நகரமும், வறிதே சிறிதே, அதாஅன்று அது மட்டும் அல்லாது

பாண்டிய நாட்டின் பெருமை
நறவுவாய் உறைக்கும் நாகு முதிர் நுணவத்து
அறைவாய்க் குறுந்துணி அயில் உளி பொருத,
கை புனை செப்பம் கடைந்த மார்பின்,
செய்பூங் கண்ணி செவி முதல் திருத்தி,
நோன் பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த (51-55)
பொருளுரை:  மலர்கள் தேனைச் சொட்டும் இளமை முதிர்ந்த நுணா மரத்தினது வெட்டின சிறிய மரக்கட்டைத் துண்டுகளில், இரும்பு உளியால் குடைந்து கையினால் செம்மையாகக் கடைந்து செய்த மாலையை மார்பில் அணிந்தும், நெட்டியால் செய்யப்பட்ட மாலையைச் செவி அடியில் சூடி, நோன் பகட்டு உமணர் வலிமையான காளைகளையுடைய உப்பு வணிகருடைய வண்டியுடன் வந்த,
குறிப்பு:  செய்பூங் கண்ணி செவி முதல் திருத்தி (54) – நச்சினார்க்கினியர் உரை கிடேச்சையாற் செய்த பூவினையுடைய மாலையைச் செவியடியில் நெற்றி மாலையாகக் கட்டி.
பதவுரை:  நறவுவாய் உறைக்கும் தேனை மலர்கள் சொட்டும், நாகு முதிர் இளமை முதிர்ந்த, நுணவத்து நுணா மரத்தின், அறைவாய்க் குறுந்துணி அயில் உளி  பொருத வெட்டிய வாயையுடைய சிறிய மரத்துண்டுகளை உளியால் கடைந்து, கை புனை செப்பம் கடைந்த கையினால் செம்மையாகக் கடைந்து செய்த, மார்பின் மார்பில், செய் பூங் கண்ணி நெட்டியால் செய்த மலர்க்கண்ணி, செவி முதல் திருத்தி செவி அடியில் நெற்றி மாலையாகச் சூடி, நோன் பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த வலிமையான எருத்தினையுடைய உப்பு வணிகருடைய வண்டியுடன் வந்த
மகாஅர் அன்ன மந்தி, மடவோர்
நகாஅர் அன்ன நளி நீர் முத்தம்,
வாள் வாய் எருந்தின் வயிற்றகத்து அடக்கி,
தோள் புற மறைக்கும் நல்கூர் நுசுப்பின்
உளர் இயல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற   60
கிளர் பூண் புதல்வரொடு, கிலுகிலி ஆடும் (56-61)
பொருளுரை:  பிள்ளைகளைப் போன்ற பெண் குரங்கு ஒன்று, மடப்பத்தையுடைய மகளிரின் பற்களை ஒத்த, செறிந்த அழகான முத்துக்களை உள்ளே அடக்கிய, வாளின் வாயைப் போன்ற வாயையுடைய கிளிஞ்சலை, நுண்ணிய இடையையும், பின்புறத்தை மறைக்கின்ற அசையும் ஐந்து பகுதியாகப் பிரிக்கப்பட்ட கூந்தலையுமுடைய உப்பு வணிகரின் மனைவி பெற்ற, விளங்குகின்ற அணிகலன்களை அணிந்த புதல்வர்களுடன், கிலுகிலுப்பை ஆகக் கொண்டு விளையாடும்.
குறிப்பு:  நளி நீர் (57), நச்சினார்க்கினியர் உரை- செறிந்த நீர்மையுடைய, – உ. வே. சாமிநாதையர் உரை, குறுந்தொகை 368  – செறிந்த நீர்.
பதவுரை:  மகாஅர் அன்ன பிள்ளைகளைப் போல, மந்தி பெண் குரங்கு, மடவோர் நகாஅர் அன்ன மடப்பத்தையுடைய மகளிரின் பற்களை ஒத்த, நளி நீர் முத்தம் செறிந்த நீர்மையுடைய முத்து, செறிந்த நீரின் முத்து, செறிந்த அழகான, வாள் வாய் வாளின் வாய், எருந்தின் கிளிஞ்சலின், வயிற்றகத்து அடக்கி உள்ளே அடக்கி, தோற்புறம் மறைக்கும் பின்புறத்தை மறைக்கும், நல்கூர் நுசுப்பின் நுண்ணிய இடையையுடைய, உளர்  இயல் ஐம்பால் அசைகின்ற ஐந்து பகுதியாகப் பிரிக்கப்பட்ட கூந்தல், உமட்டியர் உப்பு வணிகரின் மனைவி, ஈன்ற பெற்ற, கிளர் பூண் புதல்வரொடு கிலுகிலி ஆடும் விளங்குகின்ற அணிகலன்களை அணிந்த புதல்வர்களுடன் கிலுகிலுப்பை விளையாடும்
தத்து நீர் வரைப்பின் கொற்கைக் கோமான்,
தென் புலம் காவலர் மருமான் ஒன்னார்
மண் மாறு கொண்ட மாலை வெண்குடை
கண்ணார் கண்ணி கடுந்தேர்ச் செழியன்,  65
தமிழ் நிலைபெற்ற தாங்கு அரு மரபின்
மகிழ்நனை மறுகின் மதுரையும் வறிதே, அதாஅன்று (62-67)
பொருளுரை:  நிறைந்த நீரை எல்லையாகவுடைய கொற்கையின் மன்னன், தென்னாட்டின் மன்னர் குடியைச் சேர்ந்தவன், பகைவரின் நிலங்களைக் கொண்டவன், முத்து மாலையை அணிந்தவன், வெண்குடை உடையவன், கண்ணுக்கு அழகாகத் தோன்றும் மலர்ச்சரத்தை அணிந்தவன், விரைந்து செல்லும் தேரையுடைய பாண்டியனின் தமிழ் வீற்றிருந்த, பெறுதற்கு அரிய மரபையுடைய, மகிழ்வைத் தருகின்ற தெருக்களையுடைய மதுரையில் பெறும் பரிசும் சிறிதே. அது மட்டும் அல்ல,
பதவுரை:  தத்து நீர் வரைப்பு நிறைந்த நீரை எல்லையாகவுடைய, கொற்கைக் கோமான் கொற்கையின் மன்னன், தென் புலம் காவலர் மருமான் தென்னாட்டின் மன்னர் குடியைச் சேர்ந்தவன், ஒன்னார் மண் மாறு கொண்ட பகைவரின் நிலங்களைக் கொண்ட , மாலை முத்து மாலை, வெண்குடை வெண்குடை, கண்ணார் கண்ணி கண்ணுக்கு அழகாகத் தோன்றும் மலர்ச்சரம், கடுந்தேர்ச் செழியன் விரைந்து செல்லும் தேரையுடைய பாண்டியன், தமிழ் நிலைபெற்ற தாங்கு அரு மரபின் தமிழ் வீற்றிருந்த பெறுதற்கு அரிய மரபையுடைய, மகிழ்நனை மறுகின் மதுரையும் மகிழ்வைத் தருகின்ற தெருக்களையுடைய மதுரையும், வறிதே சிறிதே, அதா அன்று அது மட்டும் அல்ல
சோழ நாட்டின் பெருமை
நறு நீர்ப் பொய்கை அடை கரை நிவந்த
துறு நீர்க் கடம்பின் துணை ஆர் கோதை,
ஓவத்து அன்ன உண் துறை மருங்கில்,   70
கோவத்து அன்ன கொங்கு சேர்பு உறைத்தலின் (68-71)
பொருளுரை:  நறுமணமான நீரையுடைய பொய்கையின் அடைத்த கரையில் நிற்கும் செறிந்த தன்மையை உடைய கடம்ப மரத்தின் இணைதல் நிறைந்த மாலையைப் போன்று பூத்த மலர்களின், இந்திரகோபத்தைப் போன்று தோன்றும் மலர்த் தாது உதிர்ந்ததால், காண்பதற்கு ஓவியத்தைப் போன்று உள்ள குடிக்கும் நீரையுடைய துறையின் அருகில்,
குறிப்பு: துணை ஆர் கோதை (69) –  பொ. வே. சோமசுந்தரனார் உரை கடம்பின் பூ புனைந்த மாலை போறலின், துணை ஆர் கோதை என்றார்.  நச்சினார்க்கினியர் உரை கோதை போல பூத்தலிற் கோதை என்றார்.
பதவுரை:  நறு நீர்ப் பொய்கை அடைகரை –  நறுமணமான நீரையுடைய பொய்கையின் அடைத்து நிற்கும் கரை, நிவந்த துறு நீர்க் கடம்பின் செறிந்த தன்மையை உடைய கடம்ப மரத்தின், துணை ஆர் கோதை இணைதல் நிறைந்த மாலையைப் போன்று பூத்த மலர்கள், ஓவத்து அன்ன ஓவியத்தைப் போன்று, உண் துறை மருங்கில் குடிக்கும் நீரையுடைய துறையின் அருகில், கோவத்து அன்ன பட்டுப்பூச்சியைப் போன்று, இந்திர கோபம், மூதாய், தம்பலம், கொங்கு சேர்பு உறைத்தலின் மலர்த் தாது உதிர்ந்ததால்
வருமுலை அன்ன வண்முகை உடைந்து
திருமுகம் அவிழ்ந்த தெய்வத் தாமரை,
ஆசு இல் அங்கை அரக்குத் தோய்ந்தன்ன,
சேயிதழ் பொதிந்த செம் பொற்கொட்டை,   75
ஏம இன் துணை தழீஇ, இறகு உளர்ந்து
காமரு தும்பி காமரம் செப்பும் (72-77)
பொருளுரை:  எழுகின்ற முலையை ஒத்த பெரிய அரும்பு நெகிழ்ந்து அழகிய முகம் போல மலர்ந்த தெய்வத் தன்மையுடைய தாமரை, குற்றமில்லாத உள்ளங்கையில் அரக்கைத் தோய்த்தாற்போல் உள்ள சிவந்த இதழ்கள் சூழ்ந்த, செம்பொன்னால் செய்தாற்போல் உள்ள நடுப்பகுதியின் மீது, தன்னுடைய இன்பமான இனிய துணையைத் தழுவி, சிறகை அசைத்து விருப்பமுடைய ஆண் தும்பிகள் சீகாமரப் பண்ணை இசைக்கும்.
பதவுரை:  வருமுலை அன்ன வண் முகை உடைந்து திருமுகம் அவிழ்ந்த தெய்வத் தாமரை எழுகின்ற முலையை ஒத்த பெரிய அரும்பு நெகிழ்ந்து அழகிய முகம் போல மலர்ந்த தெய்வத் தன்மையுடைய தாமரை, ஆசு இல் அங்கை அரக்குத் தோய்ந்தன்ன குற்றமில்லாத உள்ளங்கையில் அரக்கைத் தோய்த்தாற்போல், சாதிலிங்கம், சேயிதழ் பொதிந்த செம்பொற் கொட்டை சிவந்த இதழ் சூழ்ந்த செம்பொன்னால் செய்தாற்போல் உள்ள நடுப்பகுதி, ஏம இன் துணை தழீஇ தன்னுடைய இன்பமான இனிய துணையைத் தழுவிஇறகு உளர்ந்து காமரு தும்பி சிறகை அசைத்து விருப்பமுடைய தும்பிகள், காமரம் செப்பும் சீகாமரப் பண்ணை இசைக்கும்
தண் பணை தழீஇய தளரா இருக்கை,
குணபுலம் காவலர் மருமான், ஒன்னார்
ஓங்கு எயில் கதவம் உருமுச்சுவல் சொறியும்   80
தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தடக்கை,
நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பியன்,
ஓடாப் புட்கை உறந்தையும் வறிதே, அதாஅன்று (78-83)
பொருளுரை:  மருத நிலம் சூழ்ந்த நிலையான குடியிருப்பையுடைய கிழக்கின்கண் உள்ள நிலத்தின் மன்னர் குடியில் பிறந்தவன்.  இடி தன்னுடைய கழுத்தினால் உரசும் கதவையுடைய பகைவரின் உயர்ந்த தொங்கும் கோட்டையை அழித்தவன் சோழன்.  ஒளியுடைய கடகம் அணிந்த பெரிய கைகள் உடையவன்.  தான் தேடாது அடைந்த நல்ல புகழையுடையவன்.  நல்ல தேர்களையுடைய சோழனின் குடிமக்கள் நாட்டை விட்டு விலகாத சோழ நாட்டின் உறந்தையில் கிடைக்கும் பரிசும் சிறிதே.  அது மட்டும் அல்ல,
குறிப்பு:  தூங்கு எயில் (81) – திரிபுர அசுரர்கள் தெய்வத்தன்மை உடைய மூன்று மதில்களை வரத்தால் பெற்று, அவற்றுள் பாதுகாப்போடு இருந்து கொண்டு, தாங்கள் நினைத்தவாறு பறந்து சென்று பல இடங்களைப் பாழ்படுத்தி, தேவர்களை வருத்தியதால், சிவபெருமான் அம்மதில்களை எரித்து அழித்தான்.
பதவுரை:  தண் பணை தழீஇய தளரா இருக்கை குண புலம் மருத நிலம் தழுவிய (சூழ்ந்த) நிலையான குடியிருப்பையுடைய கிழக்கின்கண் உள்ள நிலம், காவலர் மருமான் மன்னர் குடியில் பிறந்தவன், ஒன்னார் ஓங்கு எயில் கதவம் உருமு  சுவல் சொறியும் ஓங்கி உயர்ந்த பகைவரின் கோட்டைக் கதவில் தன் கழுத்தினால் தாக்கும் இடி, தூங்கு எயில் எறிந்த தொங்கும் கோட்டையை அழித்த, தொடி விளங்கு தடக்கை ஒளியுடைய கடகம் அணிந்த பெரிய கைகள், நல்லிசை நாடா தான் தேடாது அடைந்த நல்ல புகழ், நற்றேர்ச் செம்பியன் நல்ல தேர்களையுடைய சோழன், ஓடாப் புட்கை ஓடாமைக்குக் காரணமான வலிமை, உறந்தையும் உறந்தையும், வறிதே சிறிதே, அதாஅன்று அது மட்டும் அல்ல

கடையெழு வள்ளல்களின் சிறப்பு
பேகன்
வானம் வாய்த்த வளமலைக் கவாஅன்
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகனும் (84-87)
பொருளுரை:   மழை பொய்க்காமல் பெய்ததால் செழிப்பாக உள்ள மலைப் பக்கத்தில் குளிரால் அது வருந்துகிறது என்று எண்ணி, ஒரு காட்டு மயிலுக்குத் தன் போர்வையைக் கொடுத்த, பெறுவதற்கு அரிதான, அழகையுடைய, ஆவியர் குடியில் பிறந்த அண்ணலும், பெரிய மலையின் தலைவனுமான பேகனும்,
பதவுரை:  வானம் வாய்த்த மழை பொய்யாமல் பெய்ததால், வளமலைக் கவாஅன் வளமான பக்க மலையில், கான மஞ்ஞைக்கு காட்டு மயிலுக்கு, கலிங்கம் நல்கிய ஆடையைக் கொடுத்த, போர்வையைக் கொடுத்த, அருந்திறல் பெறுவதற்கு அரிதான, அணங்கின் அழகையுடைய, ஆற்றலுடைய, ஆவியர் பெருமகன் ஆவியர் குடியில் பிறந்த அண்ணல், பெருங்கல் நாடன் பெரிய மலையின் தலைவன், பேகனும் பேகனும்

பாரி
……………சுரும்பு உண
நறு வீ உறைக்கும் நாக நெடு வழிச்
சிறு வீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்கு வெள்ளருவி வீழும் சாரல்   90
பறம்பின் கோமான் பாரியும் (87 – 91)
பொருளுரை:  வண்டுகள் உண்ணுவதற்காகத் தேனைச் சொட்டும் நறுமணமான மலர்களையுடைய நாக மரங்கள் கொண்ட நீண்ட வழியில் உள்ள, சிறிய இலைகளையுடைய முல்லைக் கொடிக்குத் தன் பெரிய தேரினைக்  கொடுத்தவனும், நிறைந்த வெள்ளை அருவிகள் மலைச் சரிவிலிருந்து விழும் பறம்பு மலையின் மன்னனுமான பாரியும்,
பதவுரை:  சுரும்பு உண வண்டுகள் உண்ணுவதற்காக,  நறு வீ நறுமணமான மலர்கள்,  உறைக்கும் சொட்டும், கொட்டும்,  தழைக்கும், நாக நாக மரங்கள், (சுரபுன்னை மரங்கள்), நெடு வழி நீண்ட பாதை,  சிறு வீ முல்லைக்கு சிறிய மலர்களையுடைய முல்லைக் கொடிக்கு, பெருந்தேர் பெரிய தேர், நல்கிய கொடுத்த, பிறங்கு நிறைந்த, ஒளியுடைய, ஒலிக்கும், வெள்ளருவி வெள்ளை அருவி,  வீழும் விழும், சாரல் மலைச் சரிவு, பறம்பின் கோமான் பாரியும்  பறம்பு மலையின் மன்னனான பாரியும்,

காரி
……………………… கறங்கு மணி
வால் உளைப் புரவியொடு வையகம் மருள
ஈர நல் மொழி இரவலர்க்கு ஈந்த,
அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடு வேல்
கழல் தொடித் தடக் கை காரியும் (91-95)
பொருளுரை:  ஒலிக்கும் மணிகளையுடைய வெள்ளைப் பிடரி மயிரையுடைய குதிரைகளுடன், உலகத்தோர் வியக்கும்படி, அன்பான நல்ல சொற்களைப் பொருள் வேண்டி வருபவர்களுக்கு அளிப்பவனும், சினம் மிகுந்த சிறப்புடைய அச்சத்தை உண்டாக்கும் பெரிய வேலினை உடையவனும், அசையும் கடிகைகளையுடைய (வளையல்களையுடைய) பெரிய கைகளையுடைய காரியும்,
பதவுரை:  கறங்கு மணி ஒலிக்கும் மணிகள், வால் உளைப் புரவியொடு வெள்ளைப் பிடரி மயிரையுடைய குதிரைகளுடன், வையகம் மருள உலகத்தோர் வியக்க, ஈர நல் மொழி அன்பான நல்ல சொற்கள், இரவலர்க்கு பொருள் வேண்டி வந்தவர்களுக்கு, ஈந்த கொடுத்த, அழல் சினம்,  திகழ்ந்து சிறந்து, இமைக்கும் மின்னும், அஞ்சுவரு அச்சம் உண்டாக்கும், நெடு வேல் பெரிய வேல்,  கழல் தொடி சுழலும் தொடி, தடக் கை காரியும் பெரிய கைகளையுடைய காரியும்

ஆய் அண்டிரன்
…………… நிழல் திகழ்
நீல நாகம் நல்கிய கலிங்கம்
ஆல் அமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த
சாவம் தாங்கிய சாந்து புலர் திணி தோள்
ஆர்வ நன் மொழி ஆயும் (95-99)
பொருளுரை:  ஒளியுடன் விளங்கும் நீல மணியையும், பாம்பு கொடுத்த ஆடையையும், ஆல மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் சிவனுக்கு விருப்பத்துடன் கொடுத்தவனும், வில்லைத் தாங்கிய சந்தனம் உலர்ந்த தோளினை உடையவனும், ஆர்வத்துடன் நல்ல சொற்களைக் கூறுபவனுமான ஆயும்,
பதவுரை:  நிழல்  திகழ் ஒளியுடன் விளங்கும், நீல நீலமணி,  நாகம் நல்கிய பாம்பு கொடுத்த, கலிங்கம் ஆடை, ஆல் அமர் செல்வற்கு ஆல மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் சிவனுக்கு, அமர்ந்தனன் கொடுத்த விருப்பத்துடன் கொடுத்த , சாவம் வில், தாங்கிய தாங்கிய, சாந்து புலர் சந்தனம் உலர்ந்த, திணிதோள் உறுதியான தோள், ஆர்வ நன்மொழி ஆயும் ஆர்வமுடைய  நல்ல சொற்களையுடைய ஆயும்,

அதிகன்
……………………….. மால் வரைக்
கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லி   100
அமிழ்து விளை தீம் கனி ஒளவைக்கு ஈந்த,
உரவுச் சினம் கனலும் ஒளி திகழ் நெடுவேல்
அரவக்கடல் தானை அதிகனும் (99-103)
பொருளுரை:  உயர்ந்த மலையின் கமழும் பூக்களையுடைய மலைச் சரிவில் உள்ள அழகான அமிர்தமாகிய, விளைந்த இனிய நெல்லிக்கனியை, ஒளவைக்குக் கொடுத்தவனும், சினம் பொருந்திய பெரிய வேலையும் கடலைப் போன்ற படையை உடையவனுமாகிய அதிகனும்
பதவுரை:   மால் வரை உயர்ந்த மலை, பெருமையுடைய மலை, கமழ் மணக்கும், பூஞ்சாரல் பூக்களையுடைய மலைச் சரிவு, கவினிய அழகான, நெல்லி நெல்லிகாய், அமிழ்து அமிர்தம், விளை முற்றிய, தீம் கனி இனிய கனி, ஒளவைக்கு ஈந்த ஒளவைக்குக் கொடுத்த, உரவுச் சினம் கனலும் வலிமை உடைய சினம் பொருந்திய, ஒளி திகழ் ஒளியுடன் விளங்கும், நெடுவேல் பெரிய வேல், அரவக்கடல் தானை ஒலிக்கும் கடலைப் போன்ற படையும், அதிகனும் அதிகனும்

நள்ளி
…………………………. கரவாது
நட்டோர் உவப்ப நடைப் பரிகாரம்
முட்டாது கொடுத்த முனை விளங்கு தடக்கை,   105
துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடுங்கோட்டு
நளி மலை நாடன் நள்ளியும்  (103-107)
பொருளுரைதங்கள் மனதில் உள்ளதை மறைக்காது அன்புடன் இருப்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையை இடையூறு இல்லாது நன்றாக வாழ்வதற்காக எல்லையில்லாது கொடுத்தவனும், போரில் வெற்றி பெற்ற பெரிய கைகளையுடையவனும், துளியையுடைய மழை பொய்யாது பொழியும், காற்றுத் தங்கும் உயர்ந்த சிகரங்களையுடைய அடர்ந்த நாட்டையுடைய நள்ளியும்,
பதவுரை:   கரவாது மறைக்காது, நட்டோர் நண்பர்கள், உவப்ப மகிழும்படி, நடைப்பரிகாரம் இடையூறுகள் நீங்கி வாழ்க்கையை வாழ்வதற்கு, முட்டாது எல்லை இல்லாது, கொடுத்த கொடுத்த, முனை விளங்கு போரில் வெற்றி பெற்ற, தடக்கை பெரிய கைகள், துளி மழை பொழியும் மழைத் துளி பெய்யும், வளி துஞ்சு காற்றுத் தங்கும், நெடுங்கோட்டு உயர்ந்த சிகரங்களையுடைய, நளி மலை நாடன் நள்ளியும் அடர்ந்த மலைகளையுடைய நாட்டின் தலைவன் நள்ளியும்,

ஓரி
…………………….. நளி சினை
நறும் போது கஞலிய நாகு முதிர் நாகத்து
குறும் பொறை நல் நாடு கோடியர்க்கு ஈந்த,
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த   110
ஓரிக் குதிரை ஓரியும் (107-111)
பொருளுரைஅடர்ந்த கிளைகளில் நறுமணமான மலர்கள் நெருங்கி இருந்த இளமை முதிர்ந்த சுரபுன்னை மரங்களையும் சிறிய மலைகளையும் உடைய நிலங்களைக் கூத்தாடுபர்களுக்குக் கொடுத்தவனும், காரி என்ற பெயரையுடைய குதிரையையுடைய காரி என்பவனோடு போரிட்டவனும், ஓரி என்ற பெயரையுடைய குதிரையையுடைய ஓரியும்,
குறிப்பு:  காரிக்கும் ஓரிக்கும் நடந்த போர் பற்றின குறிப்புகள், அகநானூறு 209, நற்றிணை 320, சிறுபாணாற்றுப்படை (110-111) ஆகிய பாடல்களில் உள்ளன. ஓரியைக் கொன்று, பின் ஓரியின் கொல்லி மலையைச் சேர மன்னனுக்குப் பரிசாகக் காரி கொடுத்தான் (அகநானூறு 209).
பதவுரை:  நளி அடர்ந்த, சினை மரத்தின் கிளைகள், நறும் போது நறுமணமான மலர்கள், கஞலிய நெருங்கின, பொலிந்த, நாகு இளமை, முதிர் முதிர்ந்த, நாகத்து சுரபுன்னை மரங்களுடைய, குறும் பொறை சின்ன மலைகள், நல்நாடு –  நல்ல நிலங்கள், கோடியர்க்கு கூத்தாடுபவர்களுக்கு, ஈந்த ஈன்ற, காரிக் குதிரை காரி என்ற பெயரையுடைய குதிரை, காரியொடு காரியுடன், மலைந்த போரிட்ட, ஓரிக் குதிரை ஓரியும் ஓரி என்ற பெயரையுடைய குதிரையையுடைய ஓரியும்
……………………. என ஆங்கு
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள்  (111-112)
பொருளுரை:  என அந்த ஏழு பேர், எழுந்த போர்களில் வெற்றி அடைந்தவர்கள், கணைய மரம் போன்ற திண்மையான தோள்களை உடையவர்கள்.
பதவுரை:  என ஆங்கு எழு சமம் கடந்த என அங்கு ஏழு பேர் எழுந்த போர்களில் வெற்றி பெற்றோர், எழு உறழ் திணி தோள் கணைய மரம் போன்ற திண்மையான தோள்களை உடையவர்கள்

நல்லியக்கோடனின் ஈகைச்சிறப்பு
எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம்,
விரிகடல் வேலி வியலகம் விளங்க,
ஒரு தான் தாங்கிய உரனுடை நோன் தாள் (113-115)
பொருளுரை:  கடையெழு வள்ளலால் மேற்கொண்ட ஈகையாகிய பாரத்தை, பரந்த கடலை வேலியாகக் கொண்ட அகன்ற உலகம் தழைக்க, ஒருவனாகத் தானே பொறுத்த வலிமையுடைய முயற்சியை உடையவன்.
பதவுரை:  எழுவர் பூண்ட ஈகை ஏழு பேர் மேற்கொண்ட ஈகை, செந்நுகம் பாரம், விரிகடல் வேலி வியலகம் விளங்க  – பரந்த கடலை வேலியாகக் கொண்ட அகன்ற உலகம் தழைக்க, ஒரு தான் தாங்கிய உரனுடை நோன் தாள் ஒருவனாகத் தானே பொறுத்த வலிமையுடைய முயற்சியை உடையவன்
நறு வீ நாகமும், அகிலும், ஆரமும்,
துறை ஆடு மகளிர்க்குத் தோள் புணை ஆகிய,
பொரு புனல் தரூஉம் போக்கறு மரபின்,
தொல் மா இலங்கைக் கருவொடு பெயரிய,
நல் மா இலங்கை மன்னருள்ளும், 120
மறு இன்றி விளங்கிய வடு இல் வாய்வாள்
உறு புலித் துப்பின் ஓவியர் பெருமகன்,
களிற்றுத் தழும்பு இருந்த கழல் தயங்கு திருந்து அடி
பிடிக்கணம் சிதறும் பெயல் மழைத் தடக்கை
பல் இயக் கோடியர் புரவலன் (116-125)
பொருளுரை:  நறுமணமுடைய மலர்களை உடைய சுரபுன்னை, அகில், சந்தனம் ஆகிய மரங்களின் துண்டுகளை நீராடும் துறையில் உள்ள பெண்களின் தோள்களுக்குத் தெப்பமாகக் கொண்டு வந்து தரும், கரையை இடிக்கின்ற ஆற்றினையுடைய, தொன்மையான பெருமைமிக்க இலங்கையின் பெயரை  நகரம் தோன்றிய பொழுதில் இருந்து கொண்ட, அழித்தற்கு அரிய மரபை உடைய, மாவிலங்கையின் சிறந்த மாவிலங்கை மன்னர்கள் பலருள்ளும் மறு இல்லாது விளங்கும், பழியில்லாத குறியைத் தப்பாத வாளினையுடைய, புலியைப் போன்ற மிகுந்த வலிமையுடையவன் அவன்.  ஓவியர் குடியில் பிறந்த பெருமான்.  களிற்றைச் செலுத்தியதால் ஏற்பட்ட தழும்பு உடைய அசையும் வீரக் கழல்களை அணிந்த திருத்தமான அடிகளையும், பெண் யானைகளை வாரி வழங்கும் மழையைப் போன்ற வள்ளன்மையுடைய பெரிய கைகளையும் உடையவன். பல இசைக் கருவிகளையுடைய கூத்தர்களைப் பாதுகாப்பவன்.
குறிப்பு:  புறநானூறு 176 – பெரு மாவிலங்கைத் தலைவன் சீறியாழ் இல்லோர் சொன்மலை நல்லியக்கோடனை. தொல் மா இலங்கைக் கருவொடு பெயரிய நல் மா இலங்கை (119) –  இரா.  இராகவையங்கார் உரை கருப்பித்தபோதே (நகரத்தை அமைக்கத் தொடங்கியபோதே) பழமையான பெருமையினையுடைய இலங்கையென்னும் பேரைப் பெற்றதுமான நன்றாகிய பெருமையையுடைய இலங்கை, நச்சினார்க்கினியர் உரை கருப்பித்த முகூர்த்தத்திலே பழையதாகிய பெருமையையுடைய இலங்கையின் பெயரைப்பெற்ற நன்றாகிய பெருமையுடைய இலங்கை, பொ. வே. சோமசுந்தரனார் உரை ராவணன் ஆண்ட வலி மிக்க பழைய இலங்கை என்றவாறு.  புறநானூறு பாடல் 158 – இதில் கடையெழு வள்ளல்களைப் பற்றின குறிப்பு உள்ளது.
பதவுரை:  நறு வீ நாகமும் அகிலும் ஆரமும் நறுமணமுடைய மலர்களை உடைய சுரபுன்னையும் அகிலும் சந்தனமும், துறை ஆடு மகளிர்க்குத் தோள் புணை ஆகிய நீராடும் துறையில் உள்ள பெண்களின் தோள்களுக்குத் தெப்பமாக, பொரு புனல் தரூஉம் கரையை இடிக்கின்ற நீர் கொண்டு வந்து தரும், போக்கறு  மரபின் அழித்தற்கு அரிய மரபை உடைய, தொல் மா இலங்கை தொன்மையான பெருமை மிக்க  இலங்கை, கருவொடு பெயரிய நகரத்தை அமைக்கத் தொடங்கியபோதே, நல் மா இலங்கை சிறந்த மாவிலங்கை, மன்னருள்ளும் மன்னர்கள் பலருள்ளும், மறு இன்றி விளங்கிய மறு இல்லாது விளங்கிய, வடு இல் வாய்வாள் பழியில்லாத குறியைத் தப்பாத வாள், உறுபுலித் துப்பின் புலியைப் போன்ற மிகுந்த வலிமையுடன், ஓவியர் பெருமகன் ஓவியர் குடியில் பிறந்த பெருமான், களிற்றுத் தழும்பு இருந்த கழல் தயங்கு திருந்து அடி களிற்றைச் செலுத்தியதால் ஏற்பட்ட தழும்பு உடைய கழல் அணிந்த திருத்தமான அடிகள், பிடிக் கணம் சிதறும் பெயல் மழைத் தடக்கை பெண் யானைகளை வாரி வழங்கும் மழையைப் போன்ற வள்ளன்மையுடைய பெரிய கைகள்பல் இயம் கோடியர் புரவலன் பல இசைக் கருவிகளையுடைய கூத்தர்களைப் பாதுகாப்பவன், பேர் இசை பெரும் புகழ்

பரிசு பெற்ற பாணன் மன்னனைப் பாடிச் சென்ற முறை
………………………………………………………..பேர் இசை
நல்லியக்கோடனை நயந்த கொள்கையொடு,
தாங்கரு மரபின், தன்னும், தந்தை
வான் பொரு நெடு வரை வளனும் பாடி,
முன் நாள் சென்றனம் ஆக (125-129)
பொருளுரை:  பெரும் புகழையுடைய நல்லியக்கோடனைக் காண்பதற்கு, விரும்பிய கொள்கையுடன்மற்றவர்களால் பொறுத்தற்கு அரிய மரபையுடைய அவனைப் பற்றியும் அவனுடைய தந்தையைப் பற்றியும் அவனுடைய வானைத் தீண்டும் உயர்ந்த மலையின் வளமையையும் பற்றிப் பாடி சில நாட்களுக்கு முன் நாங்கள் அவனிடம் சென்றோமாக,
பதவுரை:  பேர் இசை நல்லியக்கோடனை நயந்த கொள்கையொடு பெரும் புகழையுடைய நல்லியக்கோடனைக் காண்பதற்கு விரும்பிய கொள்கையுடன், தாங்கு அரு மரபின் மற்றவர்களால் பொறுத்தற்கு அரிய மரபையுடைய, தன்னும் தந்தை வான் பொரு நெடு வரை வளனும் பாடி முன் நாள் சென்றனம் ஆக அவனைப் பற்றியும் அவனுடைய தந்தையைப் பற்றியும் அவனுடைய வானைத் தீண்டும் உயர்ந்த மலையின் வளமையையும் பற்றிப் பாடி சில நாட்களுக்கு முன் நாங்கள் சென்றோமாக

நல்லியக்கோடனைக் காணுமுன்
இருந்த வறுமை நிலை
……………….. இந்நாள்
திறவாக் கண்ண சாய் செவிக் குருளை,   130
கறவாப் பால் முலை கவர்தல் நோனாது,
புனிற்று நாய் குரைக்கும், புல்லென் அட்டில் (129-132)
பொருளுரை:  இந்த நாளில் திறக்காத கண்களையுடைய வளைந்த காதுகளையுடைய குட்டிகள், தாயின் பால் சுரக்காத முலைகளிலிருந்து பால் பெறாததால், அதைப் பொறுக்க முடியாது அண்மையில் ஈன்ற தாய் நாய் குரைக்கும், புன்மையுடைய எங்கள் அடுக்களையில்.
பதவுரை:  இந்நாள் திறவாக் கண்ண சாய் செவிக் குருளை இந்த நாளில் திறக்காத கண்களையுடைய வளைந்த காதுகளையுடைய குட்டிகள், கறவாப் பால் முலை கவர்தல் பால் சுரக்காத முலைகளிலிருந்து நோனாது பொறுக்க முடியாது, புனிற்று நாய் குரைக்கும் அண்மையில் ஈன்ற நாய் குரைக்கும், புல்லென்  அட்டில் புன்மையுடைய எங்கள் அடுக்களை
காழ் சோர் முது சுவர்க் கணச் சிதல் அரித்த
பூழி பூத்த புழல் காளாம்பி,
ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல்,   135
வளைக் கை கிணை மகள், வள் உகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை,
மடவோர் காட்சி நாணிக் கடை அடைத்து,
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும்,
அழி பசி வருத்தம் வீட………… (133-140)
பொருளுரை:  கூரையின் கைம்மரம் தளர்ந்து விழும் பழைய சுவரில் கூட்டமாகிய கரையான் அரித்த புழுதியில் உட்துளையுடைய காளான் பூத்த, வருந்துவதற்குக் காரணமான மெலிந்த இடையையும், வளையல் அணிந்த கையையும் உடைய என் கிணைப் பறையை அடிக்கும் மனைவி, அவளுடைய பெரிய நகத்தினால் கிள்ளிக் கொணர்ந்த குப்பையில் வளரும் வேளைக்கீரையை  உப்பு இல்லாமல் வேக வைத்து, பழித்துப் பேசுபவர்கள் காண்பதை நாணி, கதவை அடைத்து விட்டுப் பெரிய சுற்றத்தார் கூட்டத்துடன் ஒன்றாக இணைந்து உண்ணும் நிலைமையையுடைய அழிக்கும் பசியினால் உண்டான வருத்தம் நீங்க,
குறிப்பு:  கிணைமகள் (136) – நச்சினார்க்கினியர் உரை –  கிணைப் பறை கொட்டுவோனுடைய மனைவி, மகள்.
பதவுரை:  காழ் சோர் முது சுவர் கூரையின் கைம்மரம் தளர்ந்து விழும் பழைய சுவரில், கணச் சிதல் அரித்த  பூழி கூட்டமாகிய கரையான் அரித்த புழுதி, பூத்த புழல் காளாம்பி  –  உட்துளையுடைய காளான் பூத்தஒல்குபசி  உழந்த ஒழுங்கு நுண் மருங்கில் வருந்துவதற்குக் காரணமான மெலிந்த இடை, வளைக் கை கிணைமகள் கையில் வளையல் அணிந்த கிணையை அடிக்கும் பெண், உகிர்க் குறைத்த குப்பை வேளை பெரிய நகத்தினால் கிள்ளின குப்பையில் வளரும் வேளைக் கீரைஉப்பிலி வெந்த உப்பு இல்லாமல் வெந்த, மடவோர் காட்சி நாணி பழித்துப் பேசுபவர்கள் காண்பதை நாணி, கடை அடைத்து கதவை அடைத்து, இரும்பேர்  ஒக்கலொடு பெரிய சுற்றத்தார் கூட்டத்துடன், ஒருங்கு உடன் மிசையும் ஒன்றாக இணைந்து உண்ணும், அழி பசி வருத்தம் வீட அழிக்கும் பசியினால் உண்டான வருத்தம் நீங்க

நல்லியக்கோடனின் வறுமை போக்கிய வள்ளன்மை
…………………. பொழி கவுள்
தறுகண் பூட்கைத் தயங்கு மணி மருங்கின்
சிறுகண் யானையொடு, பெருந்தேர் எய்தி,
யாம் அவண் நின்றும் வருதும். (140-143)
பொருளுரை:  மதம் வடிகின்ற கன்னத்தையுடைய, விரைந்துக் கொல்லுதல் செய்யும் அசையும் மணியை உடைய சிறிய கண்களையுடைய யானையுடன், பெரிய தேரினையையும் அடைந்து, அங்கிருந்து நாங்கள் வருகின்றோம்.
பதவுரை:  பொழி கவுள் மதம் வடிகின்ற கன்னம், தறுகண் பூட்கைத் தயங்கு மணி மருங்கின் சிறு கண் யானையோடு விரைந்துக் கொல்லுதல் செய்யும் அசையும் மணியை உடைய சிறிய கண்களையுடைய யானையுடன், பெருந்தேர் எய்தி அவண் நின்றும் வருதும் பெரிய தேரினை அடைந்து அங்கிருந்து நாங்கள் வருகின்றோம்

பாணனின் ஆற்றுப்படுத்தும் பண்பு
……………………… நீயிரும்
இவண் நயந்து இருந்த இரும்பேர் ஒக்கல்
செம்மல் உள்ளமொடு செல்குவிர் ஆயின் (143-145)
பொருளுரை:  நீங்களும் இங்கு உங்களை விரும்பி இருக்கும் பெரிய சுற்றத்துடன், உயர்ந்த உள்ளத்துடன் செல்வீர் ஆயின்,
பதவுரை:  நீயிரும் இவண் நயந்து இருந்த இரும்பேர் ஒக்கல் நீங்களும் இங்கு உங்களை விரும்பி இருக்கும் பெரிய சுற்றத்துடன், செம்மல் உள்ளமொடு செல்குவீர் ஆயின் உயர்ந்த உள்ளத்துடன் செல்வீர் ஆயின்

எயிற்பட்டினத்திற்குச் செல்லும் வழியும் பரதவர் தரும் விருந்தும்
அலை நீர்த் தாழை அன்னம் பூப்பவும்,
தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும்,
கடுஞ்சூல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும்,
நெடுங்கால் புன்னை நித்திலம் வைப்பவும்,
கானல் வெண் மணல் கடல் உலாய் நிமிர்தர,   150
பாடல் சான்ற நெய்தல் நெடு வழி
மணி நீர் வைப்பு மதிலொடு பெயரிய
பனி நீர்ப் படுவின் பட்டினம் படரின் (146-153)
பொருளுரை:  அலையும் நீரையுடைய கடற்கரையில் அன்னத்தைப் போன்ற மலர்களைத் தாழை பூக்கவும், வேனில் காலத்தின் துவக்கத்தில் மலர்ந்த செருந்தி மலர்கள் கண்டாரைப் பொன்னென மருளச் செய்யவும், முதிர்ந்த சூலையுடைய முள்ளிச் செடிகள் நீலமணியைப் போன்ற மலர்களைப் பூக்கவும், நெடிய தாளினையுடைய புன்னை மரங்கள் முத்துப் போன்ற அரும்புகொள்ளவும், கடற்கரையின் வெண்மணலில் கடல் நீர் படர்ந்து ஏற, புலவர் பாடும்படியான சிறப்புடைய நெய்தல் நிலத்தில் உள்ள நீண்ட வழியில் நீலமணியைப் போன்ற நீர் சூழ்ந்த இடங்களையும் மதிலையும், குளிர்ந்த நீரையுடைய குளங்களையும் உடைய எயிற்பட்டினத்திற்குச் செல்வீர் ஆயின்,
பதவுரை:  அலை நீர்த் தாழை அன்னம் பூப்பவும் அலையும் நீரையுடைய கடற்கரையில் அன்னத்தைப் போன்ற மலர்களைத் தாழை பூக்கவும், தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும் வேனில் காலத்தின் துவக்கத்தில் மலர்ந்த செருந்தி மலர்கள் கண்டாரைப் பொன்னென மருளச் செய்யவும்கடுஞ்சூல் முண்டகம்  கதிர் மணி கழாஅலவும் முதிர்ந்த சூலையுடைய முள்ளி நீலமணியைப் போல பூக்கவும், நெடுங்கால் புன்னை நித்திலம் வைப்பவும் நெடிய தாளினையுடைய புன்னை மரங்கள் முத்துப் போல் அரும்புகொள்ளவும், கானல் வெண்மணல் கடல் உலாய் நிமிர்தர கடற்கரையின் வெண்மணலில் கடல் படர்ந்து ஏற, பாடல் சான்ற நெய்தல் நெடுவழி  – புலவர் பாடும்படியான சிறப்புடைய நெய்தல் நிலத்தில் உள்ள நீண்ட வழி, மணிநீர் வைப்பு மதிலோடு பெயரிய நீலமணியைப் போன்ற நீர் சூழ்ந்த ஊர்களையுடைய மதிலையுடைய, பனி நீர்ப் படுவின் பட்டினம் குளிர்ந்த நீரையுடைய குளங்களையுடைய எயிற்பட்டினம், படரின் செல்வீர் ஆயின்
ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்தன்ன,
வீங்கு திரை கொணர்ந்த விரை மர விறகின்,   155
கரும் புகைச் செந்தீ மாட்டிப் பெருந்தோள்
மதி ஏக்கறூஉம் மாசு அறு திருமுகத்து
நுதி வேல் நோக்கின் நுளை மகள் அரித்த
பழம் படு தேறல் பரதவர் மடுப்ப,
கிளை மலர்ப் படப்பைக் கிடங்கில் கோமான்,   160
தளை அவிழ் தெரியல் தகையோற் பாடி
அறல் குழல் பாணி தூங்கியவரொடு,
வறல் குழல் சூட்டின் வயின்வயின் பெறுகுவீர் (154-163)
பொருளுரை:  உயர்ந்த ஒட்டகம் துயில் கொண்டிருந்தாற்போல் மிகுந்த அலைகள் கொண்டு வந்து குவித்த நறுமணமுடைய அகில் மரத்தின் விறகினால் கரிய புகையையுடைய சிவந்த நெருப்பைக் கொளுத்தி, பெரிய தோளினையும் நிலாவும் ஏங்கும்படியான மாசற்ற அழகிய முகத்தில் கூர்மையான வேலைப் போன்ற கண்களையும் உடைய பரதவர் பெண் அரித்த பழையதாகிய கள்ளைப் பரதவர் உங்களுக்குக் கொணர்ந்துக் குடிக்கக் கொடுப்பார்கள்.  மலர்க் கொத்துக்களையுடைய தோட்டங்களை உடைய கிடங்கில் என்னும் ஊர்க்கு மன்னன், அரும்பு அவிழ்ந்த (மலர்ந்த) மாலையை அணிந்த நல்லியக்கோடனைப் பாடி, தாள இறுதி உடைய குழலின் தாளத்திற்கு ஆடும் விறலியருடன் நீங்கள் உலர்ந்த குழல் மீன் குழம்பைப் பெறுவீர்.
பதவுரை:  ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்தன்ன உயர்ந்த ஒட்டகம் துயில் கொண்டிருந்தாற்போல், வீங்கு திரை கொணர்ந்த மிகுந்த அலைகள் கொணர்ந்த, விரை மர விறகின் கரும் புகைச் செந்தீ மாட்டி நறுமணமுடைய அகில் மரத்தின் விறகினால் கரிய புகையையுடைய சிவந்த நெருப்பைக் கொளுத்திபெருந்தோள் மதி ஏக்கறூஉம் மாசு அறு திரு முகத்து நுதி வேல் நோக்கின் நுளைமகள் –  பெரிய தோளினையும் நிலாவும் ஏங்கும்படியான மாசற்ற அழகிய முகத்தில் கூர்மையான வேலைப் போன்ற கண்களையுடைய பரதவர் பெண், அரித்த பழம்படு பரதவர் மடுப்ப அரித்த பழையதாகிய கள்ளைப் பரதவர் உங்களுக்குக் கொணர்ந்துக் குடிக்க கொடுப்பார்கள், கிளை மலர்ப் படப்பைக் கிடங்கில் கோமான் மலர்க் கொத்துக்களை உடைய தோட்டங்களை உடைய கிடங்கில் என்னும் ஊர்க்கு மன்னன், தளை அவிழ் தெரியல் தகையோன் பாடி அரும்பு அவிழ்ந்த (மலர்ந்த) மாலையை அணிந்த நல்லியக்கோடனைப் பாடி, அறல் குழல் பாணி தூங்கியவரொடு தாள இறுதி உடைய குழலின் தாளத்திற்கு ஆடும் விறலியருடன், வறல் குழல் சூட்டின் பெறுகுவீர் உலர்ந்த குழல் மீன் குழம்பைப் பெறுவீர்.

தொடர்ச்சி அடுத்த பதிவில்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012 உடன்பிறப்பே, பேரவையில்  நியாயமான  பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூ...