google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: மஞ்சள் காமாலை

சனி, 24 மார்ச், 2018

மஞ்சள் காமாலை


மஞ்சள் காமாலை என்பது ரத்தத்தில் பிளிருபின் அளவு அதிகமாக இருப்பதாகும்.
பிளிருபின் (Bilirubin)
நம் உடலில் உள்ள  ரத்த  சிவப்பு அணுக்களின் ஆயுள் முடியும்போது மண்ணீரலில் சிதைக்கப்படும். அப்போது சிவப்பணுவில் உள்ள  ஹீமோகுளோபின், ஹீம் மற்றும் குளோபின் எனத் தனித்தனியாகப் பிரிக்கப்படுகின்றன. ஹீமில் உள்ள  இரும்புச் சத்து மறுசுழற்சிக்கு எடுத்துக்கொள்ளப்படும். மீதம் உள்ள கழிவு பிளிருபின்.மண்ணீரலில் இருந்து இந்த பிளிருபின் கல்லீரலுக்கு செல்லும்.பித்தப்பையில் சேகரிக்கப்படும். பித்தப்பையில் இருந்து, பித்தநீரோடு சிறுகுடல் வழியாக வெளியே சென்றுவிடும். பிளிருபின் ஓர் கழிவு மட்டுமே என்பதால், அது மலம் வழியாக வெளியேறும். சிறிதளவு பிளிருபின் உறிஞ்சப்பட்டு மறுசுழற்சியில் சிறுநீர் வழியாகவும் வெளியேறும்.
பிளிருபின் உடலில் இருந்து வெளியேறுவதில் ஏதாவது பிரச்னை ஏற்படும்போது , அது நம் உடலில் தேங்கிவிடும், பிளிருபின் மஞ்சள் நிறமி என்பதால், நம் உடலில் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது..
சுகாதாரச் சீர்கேடு
சுகாதாரமற்ற உணவுகளைச் உட்கொள்ளும்போது, ஹெபடைட்டிஸ் ஏ, இ போன்ற வைரஸ்கள் உடலுக்குள் சென்று கல்லீரலைப் பாதித்து, மஞ்சள் காமாலையை  ஏற்படுத்துகின்றன.
ஃபீகல் ஓரல் வைரஸ் மூலமாக ஹெபடைட்டிஸ் ஏ வைரஸ் பரவும். ஒருவர்  மலம் கழித்துவிட்டு, கையைச் சரியாகக் கழுவாமல் உணவைத் தொடும்போது, உணவு வழியாக இந்த வைரஸ் பரவும்.
ஹெபடைட்டிஸ் ஏ வைரஸுக்குத் தடுப்பூசி உள்ளது. ஹெபடைட்டிஸ் இ-க்கு தடுப்பூசி இல்லை.
ஹெபடைட்டிஸ் ஏ, இ வைரஸ் காரணமாக மஞ்சள் காமாலை வருபவர்களுக்கு, பசி குறையும், உணவைப் பார்த்தாலே வெறுப்பு ஏற்பட்டு, குமட்டல் வரும். கண்கள் மஞ்சளாக இருக்கும், சிறுநீர் மஞ்சளாகப் பிரியும்.
மஞ்சள் காமாலை  நான்கைந்து நாட்கள் முதல் ஓரிரு வாரம் உடலில் இருந்துவிட்டு பின்னர் போய்விடும். இவர்கள்  எளிதில் செரிமானமாகும் உணவைச் சாப்பிட்டு, மருத்துவர் சொல்லும் அறிவுரைகளைக் கடைப்பிடித்தால் குணமாகிவிடும்.
ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ்
ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் ரத்தம் மூலமாகப் பரவும். சுகாதாரமற்ற ஊசிகளைக்கொண்டு பச்சை குத்துதல், காதுகுத்துதல், ஒருவர் பயன்படுத்திய ஊசி, பிரஷ், ஷேவிங் பிளேடு போன்ற வற்றை மற்றவர்கள் பயன்படுத்துதல் போன்றவற்றால் இந்த வைரஸ் பரவும். ஹெபடைட்டிஸ் பியைத் தடுக்க இப்போது தடுப்பூசி இருக்கிறது. ஆனால், சி வைரஸுக்கு தடுப்பூசி இல்லை. இந்த வைரஸ் காரணமாக வரும் மஞ்சள் காமாலையை நவீன உயர் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்.
மருந்து
நாம் உட்கொள்ளும் உணவு, மருந்து என அனைத்தும் செரிமானம் ஆகி, கிரகிக்கப்பட்டு கல்லீரலுக்குத்தான் செல்லும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருள் ஒவ்வாமையாக இருக்கும்.
எந்த உணவு அல்லது மருந்து என்பதைக் கண்டுபிடித்து அதை நிறுத்தினாலே, மஞ்சள் காமாலை குணமாகிவிடும்.
ஆல்கஹால்
மதுவின் காரணமாக மஞ்சள் காமாலை ஏற்படும். ஆல்கஹால் காரணமாக கல்லீரல் பாதிக்கப்படுவது கல்லீரல் 80 சதவிகிதம் பாதிக்கப்பட்ட பின்னர்தான் தெரியும்.  கல்லீரல் சுருக்க நோய் வந்த பின்னர்  பிளிருபின் சரியாக வெளியேற்றப்படாமல் மஞ்சள் காமாலை வந்தால், காப்பாற்றுவது கடினம்.
கில்பர்ட் சிண்ட்ரோம்
வெகுசிலருக்கு  கல்லீரல் சோம்பலாகச் செயல்படுவதை கில்பர்ட் சிண்ட்ரோம்என்கிறோம். இவர்களுக்கு ரத்தத்தில் பிளிருபின் கொஞ்சம் அதிகமாக இருக்கும். சளி, காய்ச்சல் என ஏதாவது நோய் இருக்கும் சமயங்களில் மட்டும்  மஞ்சள் காமாலை ஓரிரு நாட்கள் அதிகமாக இருக்கும், பின்னர் தானாகவே சரியாகிவிடும்.
பித்தக்குழாய் அடைப்பு (Obstructive Jaundice)
பித்தப்பையில் உருவாகும் கற்கள் சிலநேரம் பித்த நாளத்தில் அடைப்பை ஏற்படுத்தினால், மஞ்சள் காமாலை   ஏற்படும். இவர்களுக்குக் குளிர் காய்ச்சல் வரும், வாந்தி வரும், வயிறு வலிக்கும். ரத்தத்தில் பிளிருபின் அளவு மிக அதிகமாக  இருக்கும்.  சிகிச்சை மூலம் பித்தக்குழாயில் இருக்கும் கற்களை அகற்றினால், மஞ்சள் காமாலை மறைந்துவிடும்.
கணையத்தின் தலைப்பகுதியில் அழற்சி, கட்டிகள் உருவானாலும் பித்தக்குழாயில் இருந்து பிளிருபின் வெளியேற்றம் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை வரும்.
இவர்களுக்கு ஆரம்பத்தில் வலி இருக்காது, உடல் எடை குறையும், பசியின்மை இருக்கும். சிகிச்சை செய்வதன் மூலம் பாதிப்பில் இருந்து தப்பலாம்.
அதீத சிவப்பணு அழிவு (Increased Hemolysis)
அளவுக்கு மீறி சிவப்பணுக்கள் உடைந்தால், ரத்தத்தில் பிளிருபின் அளவு அதிகரித்துவிடும். இதனால் மஞ்சள் காமாலை வரக்கூடும். இந்த பிளிருபின் கரையாத வகையாகும். ரத்த சோகை உள்ளவர்கள் அதற்குரிய சிகிச்சை எடுத்தால் மஞ்சள் காமாலை சரியாகிவிடும்.
இவை தவிர, உடலில் இரும்பு, தாமிரச்சத்து அதிகமாக இருப்பவர்கள், நோய் எதிர்ப்புச் சக்தி பிறழ்வு (Autoimmune Hepatitis)  உள்ளவர்களுக்கு அரிதாக மஞ்சள் காமாலை ஏற்படலாம்.
மஞ்சள் காமாலை வந்தால்
எதனால் மஞ்சள் காமாலை வருகிறது என்பதை அறிந்து, அதற்குரிய சிகிச்சை அளித்தால், கண்டிப்பாகக் குணப்படுத்த முடியும். முன்னெச்சரிக்கை, முறையான பரிசோதனை, முழுமையான சிகிச்சை இவை மூன்றும் இருந்தால், மஞ்சள் காமாலை நோயை விரட்ட முடியும்.
அறிகுறிகள்
மஞ்சள் காமாலை முதலில் கண்ணில்தான் வெளிப்படுகிறது. கண்களில் மிகவும் மெல்லிய வெள்ளை நிறப் பகுதி ஸ்க்லீரா. பிளிருபின் அதிகமாக இருந்தால் ஸ்க்லீரா பாதிக்கப்பட்டு மஞ்சள் நிறத்துக்கு மாறும்.
நாக்கு, மேல் அன்னம், உள் உதடு, கைகள் போன்றவற்றில் மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றும். பித்தநீர் சரியாக வெளியேறாது. எனவே, பித்த உப்பு உடலில் தங்கிவிடும். பிளிருபின், பித்த உப்புடன் சேர்ந்தால், தோலில் அரிப்பு ஏற்படும்.
பசியின்மை, உணவைப் பார்த்தாலோ, உணவு வாசனையை நுகர்ந்தாலோகூட குமட்டல் உணர்வு இருக்கும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், மஞ்சள் காமாலை இருக்கலாம்.
மஞ்சள் காமாலையைத் தடுக்க
மது அருந்துவதை நிறுத்த வேண்டும்.
சாப்பிடுவதற்கு முன்பாகவும் சாப்பிட்ட பின்னரும் கண்டிப்பாகச் சுத்தமாகக் கை கழுவ வேண்டும்.
சாலை ஓரங்கள், சாக்கடை ஓரங்களில் உள்ள கடைகளில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
காய்கறி, பழங்கள் போன்ற எதையும் சுத்தமாகக் கழுவிய பிறகுதான் வெட்ட வேண்டும்.
கழிவறைக்கு அருகில் சமையல் பொருட்களை வைக்கக் கூடாது, சமைக்கவும் கூடாது. கழிவறையை அவ்வப்போது சுத்தம் செய்வது அவசியம்.
கழிவறையைப் பயன்படுத்திய பின், சிறுநீர் கழித்த பின், கைகளை நன்றாக கிருமி நாசினி பயன்படுத்தி கழுவ வேண்டும்.
நகம் வளர்க்கக் கூடாது. நகம் கடிக்கக் கூடாது.
நேரத்துக்குச் சாப்பிட வேண்டும். குறிப்பாக, காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.
நண்பர்கள், உறவினர்கள் என யாருடைய பிரஷ், ஷேவிங் செட் போன்றவற்றையும் பயன்படுத்தக் கூடாது.
ஒருமுறை பயன்படுத்தக்கூடிய ஊசியையே பயன்படுத்த வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

கள்ளுண்ணாமை

கள்ளுண்ணாமை குறள் 921 இலிருந்து 930 முடிய குறள் 921: உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார் . பொருள்:...