தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012
உடன்பிறப்பே,
பேரவையில் நியாயமான பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூறுகளையும், ஆதார மற்ற குற்றச்சாட்டுகளையும் சொல்லும்போது உரிய பதில் அளிப்பதற்கும் பேரவைத் தலைவரோ, ஆளுங்கட்சியோ வாய்ப்பு அளிக்காத நிலையில், ஏற்கனவே திட்ட மிட்டபடி, அ.தி.மு.க.வின் தோழமைக் கட்சியைச் சேர்ந்த ஒருவரைப் பேசுமாறு பேரவைத் தலைவரே 19-4-2012 அன்று அழைக்கிறார். உடனே அவர் எழுந்து, அரசைப் புகழோ புகழ் என்று புகழ்ந்து பேச, அதைத் தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா எழுந்து, ஒரு நீண்ட அறிக்கையினைப் படித்ததோடு, அதனைச் செய்தியாளர் களுக்கும் அளித்துள்ளார்கள். அந்த நீண்ட அறிக்கை முழுவதும் தைத் திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு நான் அடுக்கடுக்கான ஆதாரங்களோடு எழுதிய தற்கும், ஜெயலலிதா தெரி வித்த பதில்கள் எல்லாம் எவ்வளவு தவறானவை என்பதை நிரூபித்து எழுதியதற்கும் விளக்கம் என்ற பெயரால் எழுதிப் படித்த “சமாளிப்புகள்” தானே தவிர அடிப்படையில் அவற்றில் எதுவும் உண்மை இல்லை.
அரசு விழாவில் ஜெயலலிதா பேசும்போது, தமிழ் மொழியை உலகம் முழுவதும் பரப்பு வதற்காக அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இரண்டு உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி னோம் என்று சொன்னதால், தி.மு. கழக ஆட்சிக் காலத்திலும் இரண்டு உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தினோமே, அதுமட்டும் தமிழ் மொழியை உலகம் முழுவதும் பரப்புவதற் காக அல்லவா? என்று கேட்டிருந்தேன். அதற்கு நேரடியாகப் பதில் சொல்லத் தெரியாத ஜெயலலிதா, கோவையில் நடைபெற்ற மாநாடு கருணாநிதியின் சுய விளம்பரத்திற்காக நடத்தப்பட்ட “தன்னல தம்பட்ட மாநாடு” என்றும் பேரவையிலே கூறியிருக்கிறார்.
பொதுவாக பேரவையில் 110வது விதியின் கீழ் அறிக்கை படிக்கும்போதும், யாரோ ஒரு உறுப்பினர் ஒரு ஐயத்தை எழுப்பி அதற்குப் பதில் அளிக்கின்ற போதும் குற்றச்சாட்டுகள் இருக்கக் கூடாது என்பது மரபு. மரபுக்கும், அ.தி.மு.க. அரசுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறீர்களா? அவர்களுக்கு மரபாவது, மண்ணாங்கட்டியாவது? இருந்தாலும் முதல் அமைச்சர், பேரவையிலேயே படித்திருக்கிறாரே; நான் விளக்கம் தராமல் இருக்கலாமா? அம்மையார் ஜெயலலிதா நடத்திய தஞ்சை உலகத் தமிழ் மாநாட்டிலே பாடிய வாழ்த்துப் பாடலிலேயே ஜெயலலிதா பெயரை பல இடங்களிலே பாராட்டிக் குறிப்பிட்டே பாடப் பட்டது. ஆனால் கழக அரசு நடத்திய கோவை மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பா என்னால் எழுதப்பட்டதே தவிர, அந்தப் பாடலில் என்னைப் பற்றிய பாராட்டு எதுவுமே கிடையாது. தஞ்சையில் அம்மையார் ஜெயலலிதா நடத்திய மாநாட்டிற்காக வருகை தந்த இலங்கைத் தமிழ் அறிஞர் கா. சிவத்தம்பி உட்பட பலர் மாநாட்டில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவே இல்லை. இன்னும் சொல்லப்போனால் வெளிநாட்டுத் தமிழறிஞர்கள் எல்லாம் விரட்டப்பட்டார்கள் என்று ஏடுகளிலேயே அப்போது செய்தி வந்தது. ஆனால் கோவையில் கழக அரசு நடத்திய மாநாட்டிற்கு ஜார்ஜ் ஹார்ட், அஸ்கோ பர்போலா, வாசெக், கா. சிவத்தம்பி, உல்ரிக் நிக்லாத், கிரிகோரி ஜேம்ஸ், அலெக்சாண்டர் துதியான்கி, ஆண்ட்ரீஸ் கத்தோலியஸ், சீன நாட்டைச் சேர்ந்த கலையரசி, தாமஸ் லேஇல்லை. இன்னும் சொல்லப்போனால் வெளிநாட்டுத் தமிழறிஞர்கள் எல்லாம் விரட்டப்பட்டார்கள் என்று ஏடுகளிலேயே அப்போது செய்தி வந்தது. ஆனால் கோவையில் கழக அரசு நடத்திய மாநாட்டிற்கு ஜார்ஜ் ஹார்ட், அஸ்கோ பர்போலா, வாசெக், கா. சிவத்தம்பி, உல்ரிக் நிக்லாத், கிரிகோரி ஜேம்ஸ், அலெக்சாண்டர் துதியான்கி, ஆண்ட்ரீஸ் கத்தோலி யஸ், சீன நாட்டைச் சேர்ந்த கலையரசி, தாமஸ் லேமன் ஆகிய வெளி நாட்டு அறிஞர்கள் எல்லாம் வருகை தந்து பாராட்டினார்கள். முன்வரிசையிலே அமர்ந்திருந்தார் கள். ஆனால் ஜெயலலிதா, முன் வரிசையிலே என் குடும்பத்தினரும், தி.மு.க.வைச் சேர்ந்த “தலை சிறந்த தமிழறிஞர்களும்” அமர்ந்திருந்ததாக கிண்டல் செய்துள்ளார். என்னுடைய குடும்பத்தினர் முன் வரிசையிலே அமர்வதே பழித்துப் பேசப்படக்கூடிய பாவகரமான ஒன்றா? தி.மு.க.வில் தமிழறிஞர்களே கிடையாதா? அ.தி.மு.க.விலே தான் தலை சிறந்த தமிழறிஞர்கள் எல்லாம் இருக்கிறார் களா? என்னுடைய குடும்பத்தினர் முன் வரிசை யிலே அமரலாமா என்று கேட்கின்ற ஜெயலலிதா சட்டப்பேரவையிலே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு தன் உடன்பிறவாச் சகோதரியை அழைத்து வந்து மரபுக்கு மாறாக துணை சபாநாயகர் அமர வேண்டிய இடத்திலே உட்கார வைத்தாரே, அது எந்த வகை யிலே சரியானது? ஜெயலலிதாவே பேரவைத் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டாரே; அது எவ்வகை மரபு என்பதை ஜெயலலிதாதான் விளக்க வேண்டும்.
சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பேசிய ஜெயலலிதா பௌர் ணமி எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ, அந்த நட்சத்திரத்தின் பெயர்தான் மாதத்தின் பெயராக அமைந்துள்ளது என்று கூறியதையொட்டி, சித்திரை, கார்த்திகை மாதங்களைத் தவிர மற்ற மாதங்கள் எல்லாம் நட்சத்திரங்களின் பெயர்களில் இல்லையே என்று நான் கேட்டிருந்தேன். அதற்கு பேரவையில் பதிலளித்த முதலமைச்சர் ஜெயலலிதா, அந்தப் பெயர்கள் எல்லாம் திரிந்து மாதங்களாகி விட்டன என்று வழக்கம்போல சமாளிக்கப் பார்த்திருக்கிறார். உதாரணமாக விசாகம் என்பது வைகாசியாகவும் - அனுஷம் என்பது ஆனியாகவும் - பூராடம் என்பது ஆடியாகவும் - திருவோணம் என்பது ஆவணியாகவும் - மிருகசீர்ஷம் என்பது மார்கழியாகவும் - பூசம் என்பது தையாகவும் - மகம் என்பது மாசி மாதமாகவும் - உத்திரம் என்பது பங்குனியாகவும் வார்த்தைகள் திரிந்து விட்டதாகச் சொல்லி யிருக்கிறார்.
தமிழறிஞர்கள் இந்த மேதா விலாச விளக்கத்தை ஏற்க முடிந்தால் சரி! சென்னப்பட்டி னம் சென்னை என்று மருவியதைப் போலத்தான் இந்தச் சொற்கள் எல்லாம் மாறிவிட்டன என்கிறார். நன்றாகவே காதில் பூ சுற்ற முயன்றிருக்கிறார்! நான் மேலும் கேட்கிறேன்; நட்சத்திரங்களின் பெயர்கள் எல்லாம் திரிந்துதான் மாதங்களின் பெயர்களாக உள்ளன என்று கூறும் ஜெயலலிதா அவர்களே, இந்தப் பெயர்கள் எல்லாம் திரிந்தன என்றால், நட்சத்திரங்களின் பெயர்களை மட்டும் ஏன் பழைய பெயரிலேயே உச்சரிக்கிறார்கள்? நட்சத்திரங்களின் பெயர்களும் அல்லவா திரிந்து வழங்கப்பட்டிருக்க வேண்டும்?
தொல்காப்பியர் “திங்கள் முன்வரின் இக்கே சாரியை” - இகர ஈற்று மாதப் பெயர்கள் (ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி, மாசி, பங்குனி) - “இக்கு” சாரியை பெறும் என்றும் “திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன” ஐகார ஈற்று மாதப் பெயர்கள் (சித்திரை, கார்த்திகை, தை) முன் சொன்னவாறு இக்கு சாரியை பெறும் என்றும் கூறியுள்ளாரே, அப்படியென் றால் இந்தப் பெயர்கள் எல்லாம் தொல்காப்பியர் காலத்திலேயே திரிந்து விட்டன என்று ஜெயலலிதா சொல்கிறாரா?
அதுபோலவே சங்க இலக்கியங்களில் எல்லாம் மாதப் பெயர்கள் இடம் பெற்றுள்ளனவே, அப்படியென்றால் சங்க இலக்கியங்களுக்கு முன்பாகவே ஜெயலலிதா சொல்வதைப்போல நட்சத்திரங்களின் பெயர்கள் எல்லாம் இத்தகைய மாதப் பெயர்களாக திரிந்து விட்டனவா?
ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டு மலரிலே சிறுவை நச்சினார்க்கினியன் எழுதிய ஒரு கட்டுரையை அம்மையார் ஜெயலலிதா மேற்கோள் காட்டிப் பேசியிருந்த காரணத்தால், அதே கட்டுரையின் முதல் பகுதியில், அதே சிறுவை நச்சினார்க்கினியன் தை மாதம் பற்றி எழுதியதை அப்படியே வரி பிறழாமல் குறிப்பாக “நாம் தைத் திங்களையே ஆண்டின் முதல் திங்களாய்க் கணக்கெடுத்துச் செயற்படுத்து வோம்” என்று அவர் எழுதியிருக்கிறார் என்று நான் பதிலாகத் தந்திருந்தேன். தற்போது அம்மையார் முன் பக்கத்தில் சிறுவை நச்சினார்க்கினியன் என்று தெரிவித்துள்ள கருத்தைப் பற்றி தான் எதுவும் சொல்லவில்லை என்று அப்படியே புறமுதுகிட்டுள்ளார். நச்சினார்க்கினியன் பற்றி நூற்றாண்டு விழா மண்டபத்திலே முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டாரா இல்லையா? அதே நச்சினார்க் கினியன் தைத் திங்களையே ஆண்டின் முதல் திங்களாகச் செயல்படுத்தலாம் என்று சொல்லியிருக்கிறாரா இல்லையா? அதைத் தான் தி.மு. கழக அரசு, தமிழறிஞர்கள் சொன்னதையெல்லாம் ஒப்புக்கொண்டு சட்டத்தைக் கொண்டு வருகிறோம் என்று கூறியதே தவிர தானாக இட்டுக்கட்டி எதையும் செய்துவிடவில்லை.
“வாழ்வியற் களஞ்சியம்” என்ற நூலில் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்றுதான் குறிப் பிடப்பட்டிருக்கிறதே தவிர, “தை பிறந்தால் புத்தாண்டு பிறக்கும்” என்று குறிப்பிடப்பட வில்லை என்று சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா! என்ன செய்வது? ஜெயலலிதா போன்றவர்கள் எல்லாம் முதலமைச்சராக வருவார்கள், அவர்களுக்கு இப்படியெல்லாம் சந்தேகம் வரும் என்பது அந்த நூலாசிரியருக்குத் தெரியவில்லை போலும்! ஆனால் நான் இந்தப் பதிலை எழுதும்போது கொட்டை எழுத்துக்களில், தமிழ் ஆண்டின் தொடக்கமே தை முதல் நாள் என்றும், அதுவே விழாவாகச் சிறப்பித்துச் செய்யப்படு கின்றது என்றும் அந்த நூலிலே உள்ளது என்பதை எழுதிக் காட்டியிருக்கிறேன். இந்தப் பொருள் புரியாமல் தை பிறந்தால் வழி பிறக்கும் என்றுதான் அதிலே உள்ளது என்று ஜெயலலிதா பேரவையில் உண்மைக்குப் புறம்பாகச் சொல்லியிருக்கிறார்.
அடுத்து ஜெயலலிதா “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி” என்ற நூலினை மேற் கோள் காட்டி, அந்த நூலில் தமிழாண்டின் தொடக்க மாதம் தை என்று குறிப்பிட்டிருப்ப தாகக் கூறியிருக்கிறார் திரு. கருணாநிதி, அந்த நூலில் 113வது பக்கத்தில் “இச்செய்தி தமிழ் ஆண்டு எனும் நூலிலிருந்து தொகுக்கப்பட்டது” என்றிருப்பதை தனக்கு வசதியாக திரு. கருணாநிதி மறைத்துவிட்டார்” என்று பேரவையிலே படித்துக் காட்டியிருக்கிறார். தமிழக அரசினால் - தமிழக அரசின் செலவில் - முதலமைச்சர் ஜெயலலிதாவின் அணிந் துரையுடன் வெளியிடப்பட்ட “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி” யிலேயே தை என்பதற்குப் பொருளாக “தமிழாண்டின் தொடக்க மாதம், திருவள்ளுவராண்டின் தொடக்க மாதம்” என்றெல்லாம் இருப்பதை நான் சுட்டிக்காட்டியிருந்தேன். அந்தச் செய்தி தமிழ் ஆண்டு எனும் நூலிலிருந்து தொகுக்கப்பட்டது என்பதை நான் மறைத்துவிட்டேன் என்கிறார் ஜெயலலிதா. சொற்பிறப்பியல் பேரகர முதலியில் பொரு வெளியிடப்பட்ட “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி” யிலேயே தை என்பதற்குப் பொருளாக “தமிழாண்டின் தொடக்க மாதம், திருவள்ளுவ ராண்டின் தொடக்க மாதம்” என்றெல்லாம் இருப்பதை நான் சுட்டிக்காட்டியிருந்தேன். அந்தச் செய்தி தமிழ் ஆண்டு எனும் நூலிலிருந்து தொகுக்கப்பட்டது என்பதை நான் மறைத்துவிட்டேன் என்கிறார் ஜெயலலிதா. சொற்பிறப்பியல் பேரகர முதலியில் பொருள் கூறும்போது, அதை எந்தப் புத்தகத்திலிருந்து எடுத்தாண்டு இருக்கிறோம் என்பதை விளக்கியிருக்கிறார்கள். அதிலே என்ன தவறு? இன்னும் சொல்லப்போனால், அம்மையார் அரை வாக்கியத்தைத்தான் எழுதியுள்ளார். முழு வாக்கியத்தையும் நான் கூறுகிறேன். அதாவது “திருக்குறள் மணி புலவர் இறைக்குருவனார் இயற்றிய திருவள்ளுவர் ஆண்டு அல்லது தமிழ் ஆண்டு எனும் நூலிலிருந்து இச்செய்தி தொகுக்கப் பட்டது” என்று உள்ளது. ஆக நான் கூறியதற்கு மற்றும் ஓர் ஆதாரமாக புலவர் இறைக் குருவனார் அவர்களும் தை மாதம் தமிழாண்டின் தொடக்க மாதம் என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பதைத்தானே அம்மையார் ஜெயலலிதா ஒப்புக் கொண்டிருக்கிறார். இறைக்குருவனார் போன்ற புலவர் பெருமக்கள் எல்லாம் தெரிவித்த யோசனையை ஏற்றுத்தான் இந்தச் சட்டத்தை நான் பிறப்பித்தேன் என்பது உறுதியாகிறதா; அல்லவா? இறைக்குருவனார் கருத்தை யேற்றுத்தானே அந்த நூலில் அந்தப் பொருளை இடம் பெறச் செய்திருக்கிறார்கள். அந்த நூலை முழுவதும் படித்து விட்டுத்தானே முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் அந்நூலுக்கு அணிந்துரை கொடுத்தார்? இப்போது அவரே அந்தக் கருத்தை மாற்றிக் கொள்ளலாமா? தமிழ்நாட்டில் இருக்கின்ற தமிழ் அறிஞர்களே, புலவர்களே, சான்றோர்களே அம்மையார் வைத்த வாதம் சரியா? நான் தருகின்ற விளக்கம் சரியா? என்பதை சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் இருந்து நீங்களே பதில் கூறுங்கள்.
அடுத்து முதலமைச்சர் ஜெயலலிதா மிகத் தெளிவாக ஒரு ஐயத்தைக் கேட்டிருக்கிறார். 1963ஆம் ஆண்டு நான் சட்டப்பேரவையில் உரையாற்றியதைக் குறிப்பிட்டு, அப்போதே திருவள்ளுவர் தை மாதத்தில்தான் பிறந்தார் என்று கூறி ஏன் விடுமுறை நாளாக அந்த நாளை அறிவிக்குமாறு கேட்கவில்லை என்று கேட்டுள்ளார். தமிழறிஞர்களும், புலவர்களும் என்னிடம் 1963ஆம் ஆண்டுக்கு முன்பே இந்தக் கோரிக்கையைச் சொல்லியிருப்பார்களானால் நான் அப்போதே அதைக் கூறியிருக்க முடியும். அவர்களிடம் இதைக் கேட்டால், 1969ஆம் ஆண்டுக்குப் பிறகு அண்ணா மறைந்து நீ முதலமைச்சராக ஆவாய் என்று எங்களுக்கு எப்படித் தெரியும் என்பார்கள்? இந்தக் கேள்விக்குத்தான் நான் மயிலை கூட்டத்திலேயே தெளிவாக; “சூரியன் கிழக்கே உதிக்கிறது, மேற்கே மறைகிறது என்று முன்பு சொன்னார்கள். பிறகுதான் விஞ்ஞானிகள் அது தவறான கூற்று, சூரியன் ஒரே இடத்தில் தான் இருக்கிறது; பூமிதான் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் சுற்றுகிறது என்று கூறியபிறகு அதை ஏற்றுக் கொண்டோம். அதைப்போலவே பூமி தட்டையாக உள்ளது என்று சொல்லப்பட்டது. பிறகு விஞ்ஞானிகள் கண்டு பிடித்துச் சொன்ன பிறகு, பூமி உருண்டை என்பதை ஏற்றுக் கொண்டோம். ஏன் இதை முன்பே சொல்ல வில்லை என்றா கேட்க முடியும்?” என்று குறிப்பிட்டேன்.
அதுமாத்திரமல்ல; இதிலே எந்த ஆண்டு முடிவெடுக்கப்பட்டது என்பது பிரச்சினையல்ல. “தினமணி” நாளிதழில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்த திரு. சாமி தியாகராசன் எனக்குக் கூட கடிதம் ஒன்றை, 1921ஆம் ஆண்டில் மறைமலை அடிகள் தலைமையில் பச்சையப்பன் கல்லூரியில் பேசி முடிவெடுத்தார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லையே என்று எழுதியிருந்தார். எப்போது முடிவெடுத்தார்கள் என்பதைவிட என்ன முடிவெடுத்தார்கள் என்பதுதான் முக்கியம். முடிவெடுத்தவர்கள் யார் என்பதுதான் முக்கியம். அந்த அடிப்படையில்தான் கழக ஆட்சியில் முடிவெடுக் கப்பட்டது. இதிலே உள்ள முக்கிய குறையே; தமிழர்களுக்கு என்று முறையான வரலாறு இல்லை என்பதுதான். இந்தக் குறை என்னால் மாத்திரமல்ல; நம்முடைய தமிழறிஞர்கள் பலராலும், வரலாற்றுப் பேராசிரியர்களாலும் உணரப்பட்டது.
பொறியாளர் வே. வரதராசன் அவர்கள் எழுதிய “தமிழர் நாகரீகம்” என்ற நூலில் “1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் தலைமையில் தமிழ் அறிஞர்களும், சான்றோர் களும், புலவர்களும் ஒன்று கூடி ஆராய்ந்து திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவதென முடிவெடுத்தனர். திருவள்ளு வர் காலம் கி.மு. 31 என்றும் அதையே திருவள்ளுவர் ஆண்டு தொடக்கம், தைத் திங்கள் முதல் நாள் (பொங்கல் திருநாளில்) எனவும் முடிவெடுத்தனர்” என்றுள்ளது.
1937ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் - தந்தை பெரியார், உமாமகேசு வரனார், பேராசிரியர் கா. சுப்பிரமணியன், தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், தமிழ்த் தென்றல் திரு.வி.க., மறைமலை அடிகளார், பி.டி. ராஜன், ஆற்காடு ராமசாமி முதலியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை அழகிரி போன்றோர் கலந்து கொண்ட அவையில் - தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்று நாவலர் சோமசுந்தர பாரதியார் தனது தலைமையுரையில் வலியுறுத்தியிருக்கிறார்.
9-5-1971இல் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் தலைமையில் திருச்சியில் நடைபெற்ற தமிழகப் புலவர் குழுவின் முப்பதாம் கூட்டத்தில் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா என முடிவு செய்யப்பட்டது.
மேலும் கடந்த இரண்டு நாட்களாக நமது “விடுதலை” நாளிதழில் அமெரிக்காவில் நாசா விண் மையத்தில் பணியாற்றும் பிரபல விஞ்ஞானி முனைவர் நா. கணேசன் அவர்கள் எழுதிய நீண்ட கட்டுரையில் இந்தப் பொருள் பற்றி விரிவான விளக்கங்களையும், எந்தெந்தப் புலவர்கள், தமிழறிஞர்கள் கடந்த காலத்தில் தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று தெரிவித்தார்கள் என்றும் எழுதப்பட்டுள்ளது. இந்தப் புலவர் பெருமக்கள் எல்லாம் தெரிவித்த யோசனைகளின் அடிப்படையிலே தான் - எந்த ஆண்டு அந்த யோசனை தெரிவிக்கப்பட்டது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்ற உண்மை அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதால் 2008இல் நான் இவற்றையெல்லாம் அறிந்து ஆய்ந்த பிறகு முடிவெடுத்து அறிவித்தேன் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா பேரவையில் விடுத்துள்ள அறிக்கையில் நான் முறையாக எதையும் ஆய்வு செய்யாமல், தன்னிச்சையாக, தான்தோன்றித்தனமாக சட்டத்தை இயற்றினேன் என்று கூறியிருக் கிறார். தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதை தற்போது சித்திரைத் திங்கள் என்று அம்மையார் மாற்றியிருப்பது தான் எதையும் ஆய்வு செய்யாமல் காழ்ப்புணர்வோடு செய்யப்பட்ட செயல். அவர்தான் தன்னிச்சையாக, தான்தோன்றித் தனமாக தமிழினத்தைத் திசை திருப்பும் வகையில் நடந்து கொண்டுள்ளார் என்பதைத் தமிழக வரலாறு ஒருநாள் நிச்சயமாக மெய்ப்பிக்கும்! தமிழர்களின் சரியான அடையாளத்தை அழித்திட முற்படுவது அக்கிரமம்! அதற்குப் பொய்யான நியாயம் கற்பித்திட முயலுவதும் புல்லர்கள் சிலர் புயம் தட்டிப் புறப்படுவதும் அராஜகம் என்பதை உண்மைத் தமிழர் விரைவில் உணர்ந்தே தீர்வர்!
அன்புள்ள,
மு.க.