google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: நம்பமுடியாத கதை

வியாழன், 10 நவம்பர், 2022

நம்பமுடியாத கதை

   ஃபேஸ்புக்கில் வரும் நம்பமுடியாத கதை 

   ராமாயணத்தில் உண்மையில் மறைக்கப்பட்ட கதாநாயகி யார் என்றால் லட்சுமணனுடைய மனைவி ஊர்மிளா தான். ஏனெனில் கணவன் லட்சுமணன், ராமனுடன் காட்டுக்குச் சென்றவுடன் 14 வருடங்கள் மாமியாருக்காக, தன் வாழ்க்கையைத் தியாகம் செய்தவள்.

   வால்மீகி, கம்பர் இருவரும் இந்தக் கதாபாத்திரத்தை இருட்டடிப்பு செய்து விட்டனர் என்றுதான் தோன்றுகிறது. ஜனகமகாராஜாவின் தத்து மகள் தான் சீதை. ஆனால் ஜனகரின் உண்மையான மகள் ஊர்மிளா! ஜனகரின் தம்பி குஜஸ்த்வஜாவின் மகள் மாண்டவி. இவள் பரதனை மணந்தவள். இன்னொரு மகள் ஸ்ருகீர்த்தி. இவள் சத்ருக்கனை மணந்தவள்.

  இந்த நான்கு சகோதரிகளும் புகுந்த வீட்டில் மகிழ்ச்சியாக இல்லை! இதற்குத்தான் ஒரே வீட்டில் அக்கா, தங்கையைத் திருமணம் செய்து தருவதற்கு இந்தக் காலத்தில் மிகவும் தயங்குவார்கள். மேலும் லட்சுமணனின் மனைவி ஊர்மிளா உண்மையில் மறைக்கப்பட்ட கதாநாயகி மட்டுமல்லாது, கணவனின் 14 ஆண்டு காலத் தூக்கத்தையும், தானே வாங்கிக் கொண்டு கணவனுக்காக வாழ்ந்தவள்.

   காட்டில் ராமனும் சீதையும் குடிலில் உறங்கிக் கொண்டிருந்தபோது குடிலுக்கு வெளியே லட்சுமணன் உறங்காமல் காவல் காத்துக் கொண்டிருப்பான். அப்போது நித்திராதேவி, லட்சுமணனை உறங்க வைக்க முடியாமல் மிகவும் திணறுவாள். அவள் லட்சுமணனிடம் சொல்கிறாள், "இதோ பார், நீ இப்படி உறங்காமல் இருக்கவே முடியாது. நான் உன்னை விட்டு விலக வேண்டுமானால் நீ உன் தூக்கத்தை வேறு ஒரு நபரிடம் பகிர்ந்து கொள். உன்னை விட்டு விடுகிறேன்" என்கிறாள். உடனே லட்சுமணன், "நீ என் மனைவி ஊர்மிளாவிடம் சென்று நான் கூறியதாய் என் தூக்கத்தையும் அவளையே எடுத்துக் கொள்ளச் சொல். நிச்சயம் அவள் ஒப்புக் கொள்வாள்" என்கிறான். நித்திராதேவியும் அப்படியே ஊர்மிளாவிடம் சென்று விஷயத்தைக் கூற, அவளும் கணவனின் நிலைமையைப் புரிந்து கொண்டு, அவன் தூக்கத்தையும் தானே வாங்கிக் கொண்டு, அந்த 14 வருடங்களில் பெரும் பகுதியைத் தூங்கியே கழித்தாள்.

    அவள் அப்படிச் செய்ததன் காரணமாகத்தான் லட்சுமணனால் ராவணன் மகன் இந்திரஜித்தை, கண்ணுக்குப் புலப்படாமல் போர் புரிகின்ற அவனை, கொல்ல முடிந்தது! அது எப்படி என்றால் இந்திரஜித்தை கொல்ல வேண்டுமானால் ஒருவன் 14 ஆண்டுகள் தூங்காமல் கண் விழித்திருக்க வேண்டும் என்று ஒரு தெய்வ நிபந்தனை இருந்து வந்தது. ஊர்மிளா கணவனின் தூக்கத்தை வாங்கிக் கொண்டதால் தான் அது சாத்தியமாயிற்று. ஊர்மிளாவின் உதவி என்பது நம்முடைய மூதாதையர்களின் கண்ணுக்குத் தெரியாத உதவியைப் போன்றது. அது வெளி உலகிற்குத் தெரியாமலேயே போய்விடும் தன்மையைக் கொண்டது. 

  இப்படி நம் வாழ்க்கையிலும் நமக்குத் தெரியாமல் கூட சிலர் உதவி புரிந்திருப்பார்கள். அது கடைசி வரை தெரியாமலும் போகக் கூடும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012 உடன்பிறப்பே, பேரவையில்  நியாயமான  பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூ...