ஓடி விளையாடு பாப்பா! - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!
கூடிவிளையாடு பாப்பா! - ஒரு
குழைந்தையை
வையாதே பாப்பா!. 1
சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
திரிந்து
பறந்துவா பாப்பா!
வன்னப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா! 2
கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு
பாப்பா!
எத்தித் திருடுமந்தக் காக்காய்
- அதற்கு
இரக்கப் படவேணும்
பாப்பா! 3
பாலைப் பொழிந்து தரும், பாப்பா!
- அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா!
வாலைக் குழைத்துவரும் நாய்தான்
- அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா! 4
வண்டி இழுக்கும் நல்ல குதிரை,
- நெல்லு
வயலில் உழுதுவரும்
மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு, - இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா!
5
காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும்
நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா! 6
பொய்சொல்லக் கூடாது பாப்பா! - என்றும்
புறஞ்சொல்ல
லாகாது பாப்பா!
தெய்வம் நமக்குத்துணை பாப்பா!
- ஒரு
தீங்குவர
மாட்டாது பாப்பா! 7
பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள
லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர்
முகத்தில்
உமிழ்ந்துவிடு பாப்பா! 8
துன்பம் நெருங்கிவந்த போதும் -
நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்த தெய்வ முண்டு -
துன்பம்
அத்தனையும்
போக்கிவிடும் பாப்பா! 9
சோம்பல் மிகக்கெடுதி பாப்பா!
- தாய்
சொன்ன சொல்லைத்
தட்டாதே பாப்பா!
தேம்பி யழுங்குழந்தை நொண்டி -
நீ
திடங்கொண்டு போராடு பாப்பா! 10
தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று
கும்பிடடி பாப்பா!
அமிழ்தில் இனியதடி பாப்பா! - நம்
ஆன்றோர்கள்
தேசமடி பாப்பா! 11
சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே -
அதைத்
தொழுது படித்திடடி
பாப்பா!
செல்வம் நிறைந்த ஹிந்துஸ் தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா! 12
வடக்கில் இமயமலை பாப்பா! - தெற்கில்
வாழும் குமரிமுனை
பாப்பா!
கிடக்கும் பெரிய கடல் கண்டாய்
- இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா! 13
வேத முடையதிந்த நாடு - நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு
சேதமில் லாதஹிந்துஸ் தானம் - இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா! 14
சாதிகள் இல்லையடி பாப்பா! - குலத்
தாழ்ச்சி
உயர்ச்சி சொல்லல் பாவம்!
நீதி,உயர்ந்தமதி,கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள்
மேலோர். 15
உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் -
தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்
வயிர முடைய நெஞ்சு வேணும் - இது
வாழும் முறைமையடி
பாப்பா! 16
_மகாகவி சுப்ரமணிய பாரதியார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.