google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: செப்டம்பர் 2022

திங்கள், 26 செப்டம்பர், 2022

குடிப்பதைத் தடுப்போம்

 

குடிப்பதைத் தடுப்போம்

  _நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை 

 

குடிப்பதைத் தடுப்பதே

கோடிகோடி புண்ணியம்

அடிப்பினும் பொறுத்துநாம்

அன்புகொண்டு வெல்லுவோம்! . .(குடி)

 

மக்களை வதைத்திடும்

மனைவியை உதைத்திடும்

துக்கமான கள்ளினைத்

தொலைப்பதே துரைத்தனம். . .(குடி)

 

பித்தராகி ஏழைகள்

பேய்பிடித்த கோலமாய்ப்

புத்திகெட்டுச் சக்தியற்றுப்

போனதிந்தக் கள்ளினால். . .(குடி)

 

பாடுபட்ட கூலியைப்

பறிக்குமிந்தக் கள்ளினை

வீடுவீட்டு நாடுவிட்டு

வெளியிலே விரட்டுவோம்! . .(குடி)

 

கஞ்சியின்றி மனைவிமக்கள்

காத்திருக்க வீட்டிலே

வஞ்சமாகக் கூலிமுற்றும்

வழிபறிக்கும் கள்ளினை . . .(குடி)

 

மெய்தளர்ந்து மேனிகெட்டுப்

போனதிந்தக் கள்ளினால் ;

கைநடுக்கங் கால்நடுக்கங்

கண்டதிந்தக் கள்ளினால். . .(குடி)

 

தேசமெங்கும் தீமைகள்

மலிந்ததிந்தக் கள்ளினால் ;

நாசமுற்று நாட்டினார்

நலிந்ததிந்தக் கள்ளினால். . .(குடி)

 

குற்றமற்ற பேர்களும்

கொலைஞராவர் கள்ளினால் ;

கத்திகுத்துச் சண்டைவேண

கள்ளினால் விளைந்தவே. . .(குடி)

 

குற்றமென்று யாருமே

கூறுமிந்தக் கள்ளினை

விற்கவிட்டுத் தீமையை

விதைப்பதென்ன விந்தயே! . .(குடி)


 

அண்ணன் என்னடா தம்பி என்னடா

அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே.

தாயும் பிள்ளையும் ஆனபோதிலும் வாயும் வயிறும் வேறடா,
சந்தைக் கூட்டத்தில் வந்த மந்தையில்
சொந்தம் என்பதும் ஏதடா,
சொந்தம் என்பதும் ஏதடா.

அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே.

பெட்டைக் கோழிக்கு கட்டுச் சேவலை
கட்டி வைத்தவன் யாரடா
அவை எட்டுக் குஞ்சுகள் பெற்றெடுத்ததும்
சோறு போட்டவன் யாரடா
சோறு போட்டவன் யாரடா.

வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதும்
வருந்தவில்லையே தாயடா.
மனித ஜாதியில் துயரம் யாவுமே
மனதினால் வந்த நோயடா,
மனதினால் வந்த நோயடா.

அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே.

வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய்
வந்து சேர்கிறார் பாரடா
கை வறண்ட வீட்டிலே உடைந்த பானையை
மதித்து வந்தவர் யாரடா,
மதித்து வந்தவர் யாரடா.

பணத்தின்மீதுதான் பக்தி என்றபின்
பந்தபாசமே ஏனடா.
பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும்
அண்ணன் தம்பிகள் தானடா,
அண்ணன் தம்பிகள் தானடா.

படம்: பழநி, ஆண்டு: 1965, பாடலாக்கம்: கவியரசர் கண்ணதாசன், பாடியவர்: T.M. செளந்தரராஜன்.

ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

பாப்பாப் பாட்டு

ஓடி விளையாடு பாப்பா! - நீ
      ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!
கூடிவிளையாடு பாப்பா! - ஒரு
      குழைந்தையை வையாதே பாப்பா!.       1

சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
      திரிந்து பறந்துவா பாப்பா!
வன்னப் பறவைகளைக் கண்டு - நீ
      மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா!       2

கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
      கூட்டி விளையாடு பாப்பா!
எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு
      இரக்கப் படவேணும் பாப்பா!       3

பாலைப் பொழிந்து தரும், பாப்பா! - அந்தப்
      பசுமிக நல்லதடி பாப்பா!
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
      மனிதர்க்குத் தோழனடி பாப்பா!       4

வண்டி இழுக்கும் நல்ல குதிரை, - நெல்லு
      வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு, - இவை
      ஆதரிக்க வேணுமடி பாப்பா!       5

காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
      கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
      வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா!       6

பொய்சொல்லக் கூடாது பாப்பா! - என்றும்
      புறஞ்சொல்ல லாகாது பாப்பா!
தெய்வம் நமக்குத்துணை பாப்பா! - ஒரு
      தீங்குவர மாட்டாது பாப்பா!       7

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
      பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர்
      முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!       8

துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
      சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்த தெய்வ முண்டு - துன்பம்
      அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!       9

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா! - தாய்
      சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா!
தேம்பி யழுங்குழந்தை நொண்டி - நீ
      திடங்கொண்டு போராடு பாப்பா!       10

தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற - எங்கள்
      தாயென்று கும்பிடடி பாப்பா!
அமிழ்தில் இனியதடி பாப்பா! - நம்
      ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!       11

சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே - அதைத்
      தொழுது படித்திடடி பாப்பா!
செல்வம் நிறைந்த ஹிந்துஸ் தானம் - அதைத்
      தினமும் புகழ்ந்திடடி பாப்பா!       12

வடக்கில் இமயமலை பாப்பா! - தெற்கில்
      வாழும் குமரிமுனை பாப்பா!
கிடக்கும் பெரிய கடல் கண்டாய் - இதன்
      கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா!       13

வேத முடையதிந்த நாடு - நல்ல
      வீரர் பிறந்த திந்த நாடு
சேதமில் லாதஹிந்துஸ் தானம் - இதைத்
      தெய்வமென்று கும்பிடடி பாப்பா!       14

சாதிகள் இல்லையடி பாப்பா! - குலத்
      தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!
நீதி,உயர்ந்தமதி,கல்வி - அன்பு
      நிறைய உடையவர்கள் மேலோர்.       15

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் - தெய்வம்
      உண்மையென்று தானறிதல் வேணும்
வயிர முடைய நெஞ்சு வேணும் - இது
      வாழும் முறைமையடி பாப்பா!       16 

            _மகாகவி சுப்ரமணிய பாரதியார் 




உலக நீதி

உலக நீதி - ஆசிரியர்: உலகநாதர்

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
     
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
     
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
     
போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளிபங்கன்
     
மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே.       #1

நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்
     
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்
     
நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
     
அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம்
மஞ்சாரும் குறவருடை வள்ளிபங்கன்
     
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.       #2

மனம்போன போக்கு எல்லாம் போக வேண்டாம்
     
மாற்றானை உறவு என்று நம்ப வேண்டாம்
தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
     
தருமத்தை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்
சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம்
     
சினந்து இருந்தார் வாசல் வழிச் சேர வேண்டாம்
வனம் தேடும் குறவருடை வள்ளிபங்கன்
     
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.       #3

குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்
     
கொலை களவு செய்வரோடு இணங்க வேண்டாம்
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்
     
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்
கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்
     
கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்
மற்று நிகர் இல்லாத வள்ளிபங்கன்
     
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.       #4

வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம்
     
மனையாளை குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம்
வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்
     
வெஞ்சமரில் புறம் கொடுத்து மீள வேண்டாம்
தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்
     
தாழந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
வாழ்வாரும் குறவருடைய வள்ளி பங்கன்
     
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.       #5

வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம்
     
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்
     
முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்
வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்
     
வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்
சேர்ந்த புகழாளன் ஒரு வள்ளி பங்கன்
     
திருக்கை வேலாயுதனைச் செப்பாய் நெஞ்சே.       #6

கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்
     
கணக்கு அழிவை ஒருநாளும் பேச வேண்டாம்
பொருவார் தம் போர்க்களத்தில் போக வேண்டாம்
     
பொது நிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்
இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்
     
எளியோரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்
குருகாரும் புனம் காக்கும் ஏழை பங்கன்
     
குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே.       #7

சேராத இடம் தனிலே சேர வேண்டாம்
     
செய்த நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்
ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்
     
உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்
பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
     
பிணைபட்டுத் துணை போகித் திரிய வேண்டாம்
வாராரும் குறவருடை வள்ளி பங்கன்
     
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.       #8

மண் நின்று மண் ஓரம் சொல்ல வேண்டாம்
     
மனம் சலித்து சிலிக்கிட்டுத் திரிய வேண்டாம்
கண் அழிவு செய்து துயர் காட்ட வேண்டாம்
     
காணாத வார்த்தையை கட்டுரைக்க வேண்டாம்
புண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம்
     
புறம் சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
மண் அளந்தான் தங்கை உமை மைந்தன் எங்கோன்
     
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.       #9

மறம் பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
     
வாதாடி வழக்கு அழிவு சொல்லை வேண்டாம்
திறம் பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்
     
தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
     
ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்
குறம் பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்
     
குமரவேள் நாமத்தை கூறாய் நெஞ்சே.       #10

அஞ்சு பேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்
     
அது ஏது இங்கு என்னில் சொல்லக் கேளாய்
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் தன் கூலி
     
சகல கலை ஓதுவித்த வாத்தியார் கூலி
வஞ்சமற நஞ்சு அறுத்த மருத்துவச்சி கூலி
     
மகா நோவுதனைத் தீர்த்த மருத்துவன் கூலி
இன்சொல்லுடன் இவர் கூலி கொடாத பேரை
     
ஏதெது செய்வானோ ஏமன்றானே.       #11

கூறாக்கி ஒரு குடியைக் கெடுக்க வேண்டாம்
     
கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்
தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்
     
துர்ச்சனராய் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்
     
வெற்றியுள்ள பெரியாரை வெறுக்க வேண்டாம்
மாறான குறவருடை வள்ளி பங்கன்
     
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.       #12

ஆதரித்துப் பலவகையால் பொருள்கள் தேடி
     
அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி
ஓதுவித்த வாசகத்தால் உலகநாதன்
     
உண்மையாய்ப் பாடிவைத்த உலக நீதி
காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்
     
கருத்துடனே நாள்தோறும் களிப்பினோடு
போதமுற்று மிக வாழ்ந்து புகழும் தேடிப்
     
பூலோகம் உள்ள அளவும் வாழ்வார் தாமே.       #13

உலக நீதி முற்றும்.


ஏன் இப்படி?

இவ்வளவு சிறியதாக இந்தத் தேங்காய் ஏன் இருக்கிறது?