ஏறு தழுவல்
ஆயர்கள்
புலி முதலிய கொடிய விலங்குகளிடமிருந்து
தம் பசு முதலிய இனங்களைக்
காக்க வேண்டிய நிலையில் இருந்தனர்.
மேலும் நாட்டின் எல்லைப் பகுதி காடு.
பகைவரின் தாக்குதலுக்கு முதலில் உட்படுவதும் அப்பகுதியே,
ஆதலால் அவர்கள் வீரம் உடையவராக
விளங்க வேண்டியிருந்தது. எனவே ஆயர், தம்
மகளை மணக்க வரும் ஆடவர்
வீரம் மிக்கவராய் விளங்க வேண்டும் என
எண்ணினர். ஆகையால் ஏறு தழுவும் நிகழ்ச்சியை ஏற்படுத்தினர்.
ஏறு தழுவுதல் என்பது சீறிப் பாயும்
காளைகளைத் தழுவி அடக்குதல் ஆகும்.
ஆயர் ஏறுகளின் கொம்பைக் கூர்மையாகச் சீவிப் பரந்த வெளியான
ஏறு தழுவும் இடத்தில் விடுவர்.
இளைஞர் போட்டி போட்டு ஏறு
தழுவ முயல்வர். ஏறு தழுவிய ஆயனுக்குத்
தம் பெண்ணை மணம் முடித்துத்
தருவர் ஆயர்.
ஏறு தழுவல் காட்சிகளை நல்லுருத்திரன்
பாடிய முல்லைக் கலிப் பாடல்களில் விரிவாகக்
காணலாம்.
ஓஒ!
இவள்,பொருபுகல் நல்ஏறு கொள்பவர் அல்லால்
திருமாமெய்
தீண்டலர்
-கலித்தொகை-102:
9-10
பொருபுகல்
= போர் செய்வதில் விருப்பம் உடைய; ஏறு = காளை
போர் செய்யும் விருப்பம் உடைய நல்ல காளையை
அடக்குபவரே அல்லாமல் வேறு யாரும் இவளது
மெய் தீண்டத்தக்கவர் அல்லர் என்பது இதன்
பொருள். ஆயர்குலப் பெண் ஏறு தழுவும்
ஆடவனையே விரும்பி மணப்பாள் என்பதை இது உணர்த்துகிறது.
ஆடு, மாடுகள் இருக்கும்இடத்தையும், ஏறு தழுவும்
இடத்தையும் தொழு என்பர். ஏறு
தழுவுவதற்கு முன் நீர்த்துறைகளிலும், மரத்தடிகளிலும்
உள்ள தெய்வங்களை வழிபடுவது மரபு. வீரம் அற்றவனை
ஆயர்குலப் பெண்டிர் விரும்ப மாட்டார்கள்.
காளையின்
கொம்புக்கு அஞ்சுபவனைஆயர்மகள்அடுத்த பிறவியில் கூடக் கணவனாக ஏற்கமாட்டாள்.
இக்கருத்தை,
கொல்லேற்றுக்
கோடுஅஞ்சு வானை மறுமையும்
புல்லாளே
ஆய மகள்
-கலித்தொகை-
103: 63-6)
கோடு =
கொம்பு; புல்லாள் = தழுவ மாட்டாள்
என்னும் கலித்தொகை
அடிகள் எடுத்துரைக்கின்றன.
இளைஞர்கள்
ஏறு தழுவும் காட்சியைக் காணும்
தோழியும் தலைவியும் பேசிக் கொள்ளும் உரையாடலில்
அக்காட்சி அழகாக விரிகிறது.
ஆயர் காளைகளைத் தொழுவில் விடுகின்ற போது வாத்தியங்கள் முழங்குகின்றன.
மகளிர் வரிசையாக நிற்கின்றனர். தொழுவில் ஆயர் பாய்ந்தபோது தூசி
கிளம்புகிறது; தொழுவில் பாய்ந்த ஆயர் காளைகளின்
கொம்புகளைப் பிடித்தனர்; தம் மார்பில் பொருந்தும்படி
தழுவினர். அவற்றின் கழுத்தில் அடங்கினர்; கொண்டை (திமில்) முறியும்படி
தழுவினர்; தோளுக்கு நடுவே காளையின் கழுத்தைப்
புகும்படி விட்டனர்; காளைகள் ஆயர்களைக் கீழே
வீழ்த்தின; நீண்ட கொம்புகளால் சாகும்படி
குத்தின; மொத்தத்தில் கோபமுற்ற காளை எமனைப் போல்
விளங்கியது.
இக்காட்சிகளைக்
கலித்தொகை 105 ஆம் பாடல் விரிவாகக்
காட்டுகிறது.
ஏறு தழுவல் முடிந்தபின் உறவினர்
இசைவுடன் திருமணம் நிகழ்த்துவதே ஆயர் குல வழக்கமாகத்
தெரிகிறது.
சங்க இலக்கியத்தில், கலித்தொகையில் மட்டுமே ஏறு தழுவல்
நிகழ்ச்சி இடம் பெறுகின்றது என்பது
குறிப்பிடத் தக்கது.
ஏறு தழுவுவதற்கும் சல்லிக்கட்டுக்கும் சில வேறுபாடுகளே உள்ளன.
முல்லை நிலத்து மக்களாகிய ஆயரிடம்
மட்டுமே ஏறுதழுவுதல் இடம்பெற்றது. தற்போது சல்லிக்கட்டில் ஆயர்
மட்டுமின்றிப் பல திறத்தவரும் பங்கேற்கிறார்கள்.
ஏறு தழுவல், மஞ்சு விரட்டு
அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு)
சல்லி என்பது விழாவின் போது
மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம்
செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும்
வழக்கத்தில் உள்ளது. அதோடு, ஐம்பது
ஆண்டுகளுக்கு முன்பு
புழக்கத்தில் இருந்த 'சல்லிக் காசு'
என்னும் இந்திய நாணயங்களைத் துணியில்
வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை
அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும்.
இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிக்கட்டு'
என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து 'ஜல்லிக்கட்டு'
ஆனது என்றும் கூறப்படுகிறது.
சல்லிக்கட்டு
தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு
விதமாக நடைபெறுகிறது.
வேலி ஜல்லிக்கட்டு: வேலி மஞ்சுவிரட்டு எனப்படும் விளையாட்டில் ஒரு திடலில் காளைகள்
அவிழ்த்துவிடப்படுகின்றன. அவை எந்தக் கட்டுப்பாடும்
இல்லாமல் ஓடுவதும் அவற்றை இளைஞர்கள் விரட்டுவதும்
நடைபெறுகிறது.
வாடிவாசல்
ஜல்லிக்கட்டு: மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல்
வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச்
சென்று அதன் திமில் மீது
தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள்.
வடம் ஜல்லிக்கட்டு: வட தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற
பெயரில், இருபது அடி
நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை
ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும்
அதன் முன்னே நின்று கொம்பில்
உள்ள பரிசுப் பணத்தை எடுக்க
முயல்கிறார்கள்.
பழந்தமிழ்
இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரிகத்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல்
(மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ்
இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர
விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக்கூடிய
காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால்
‘கொல்லேறு தழுவுதல் என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது.
புது தில்லி தேசியக் கண்காட்சியகத்தில்
பாதுகாக்கப்படும் சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில்
ஒரு காளை உருவமும் அதை
அடக்க முயலும் வீரரை அக்காளை
தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கி.மு. இரண்டாயிரம் ஆண்டு
அளவிலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது என்று ஐராவதம் மகாதேவன்
போன்ற அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆயர்கள்
என்னும் யாதவர்கள் இந்தியா
முழுவதும் பரவி வாழ்கின்றனர் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.