VIDEO
Video from: https://www.youtube.com/watch?v=YvfoHmwS8Qc
குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் :
பெரியாரைத் துணைக்கோடல்
குறள் 441:
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல் .
கலைஞர் மு . கருணாநிதி உரை :
அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து , அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் .
மு . வரதராசனார் உரை :
அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை , கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும் .
சாலமன் பாப்பையா உரை :
அறத்தின் நுண்மையை அறிந்து , குறிப்பிட்ட துறையிலும் வளர்ந்த அறிவுடையவரின் நட்பை , அதன் அருமையையும் , அதைப் பெறும் திறத்தையும் அறிந்து பெறுக .
பரிமேலழகர் உரை :
அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை - அறத்தினது நுண்மையை அறிந்து தன்னின் மூத்த அறிவுடையாரது கேண்மையை , தேர்ந்து திறன் அறிந்து கொளல் - அரசன் அதனது அருமையை ஓர்ந்து , கொள்ளும் திறன் அறிந்து கொள்க .
( அறநுண்மை நூலானேயன்றி , உய்த்துணர்வானும் அறிய வேண்டுதலின் , ' அறம் அறிந்து ' என்றார் . மூத்தல் - அறிவானும் சீலத்தானும் காலத்தானும் முதிர்தல் . அறிவுஉடையார் நீதியையும் உலகஇயலையும் அறிதலை உடையார் . திறன் அறிதலாவது நன்கு மதித்தல் , உயரச் செய்தல் , அவர் வரை நிற்றல் என்பன முதலாக அவர் பிணிப்புண்ணும் திறன் அறிந்து செய்தல் ).
மணக்குடவர் உரை :
அறத்தின் பகுதியறிந்து முதிர்ந்த அறிவுடையாரது கேண்மையை அவரவர் செய்தியாகிய திறங்களை யறிந்து ஆராய்ந்து கொள்க .
இது புரோகிதரைக் கூட்டுமாறு கூறிற்று .
திருக்குறளார் வீ . முனிசாமி உரை :
அறத்தினது சிறப்பினையறிந்து தன்னைவிட மூத்த அறிவுடைய பெரியார்களது நட்பின் அருமையினையறிந்து தனக்குத் துணையாகக் கொள்ளுதல் வேண்டும் .
Translation:
As friends the men who
virtue know, and riper wisdom share,
Their worth weighed well,
the king should choose with care.
Explanation:
Let (a king) ponder well
its value, and secure the friendship of men of virtue and of mature knowledge.
குறள் 442:
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல் .
கலைஞர் மு . கருணாநிதி உரை :
வந்துள்ள துன்பத்தைப் போக்கி , மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும் .
மு . வரதராசனார் உரை :
எண் வந்துள்ள துன்பத்தை நீக்கி , இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும் .
சாலமன் பாப்பையா உரை :
வந்த துன்பங்களைப் போக்கும் வழி அறிந்து போக்கி , அவை திரும்பவும் வராமல் முன்னதாகவே காக்கும் ஆற்றல் மிக்கவரை , அவருக்கு வேண்டியதைச் செய்து , துணையாகப் பெறுக .
பரிமேலழகர் உரை :
உற்ற நோய் நீக்கி - தெய்வத்தானாக மக்களானாகத் தனக்கு வந்த துன்பங்களை நீக்குமாறு அறிந்து நீக்கி ; உறாமை முற்காக்கும் பெற்றியார் - பின் அப்பெற்றியன வாராவண்ணம் முன் அறிந்து காக்கவல்ல தன்மையினையுடையாரை ; பேணிக்கொளல் - அரசன் அவர் உவப்பன செய்து துணையாகக் கொள்க . ( தெய்வத்தான் வரும் துன்பங்களாவன : மழையினது இன்மை மிகுதிகளானும் , காற்று தீ , பிணி என்ற இவற்றானும் வருவன . அவை கடவுளரையும் தக்கோரையும் நோக்கிச் செய்யும் சாந்திகளான் நீக்கப்படும் . மக்களான் வரும் துன்பங்களாவன : பகைவர் , கள்வர் , கற்றறிந்தார் , வினை செய்வார் என்றிவர்களான் வருவன . அவை சாம பேத தான தண்டங்கள் ஆகிய நால்வகை உபாயத்துள் ஏற்றதனால் நீக்கப்படும் . முற்காத்தலாவது : தெய்வத்தான் வருவனவற்றை உற்பாதங்களால் அறிந்து அச்சாந்திகளால் காத்தலும் , மக்களான் வருவனவற்றை அவர் குணம் , இங்கிதம் , ஆகாரம் , செயல் என்பனவற்றுள் அறிந்து , அவ்வுபாயங்களுள் ஒன்றால் காத்தலும் ஆம் ; ஆகவே புரோகிதரையும் அமைச்சரையும் கூறியவாறாயிற்று . இங்கிதம் - குறிப்பால் நிகழும் உறுப்பின் தொழில் . ஆகாரம் - குறிப்பின்றி நிகழும் வேறுபாடு . உவப்பன - நன்கு மதித்தல் முதலியன . இவை இரண்டு பாட்டானும் பெரியாரது இலக்கணமும் , அவரைத் துணையாகக் கோடல் வேண்டும் என்பதூஉம் , கொள்ளுமாறும் கூறப்பட்டன .) .
மணக்குடவர் உரை :
அரசர் தமக்குற்ற நோயை விடுவித்துப் பின்பு துன்பமுறாமல் முன்னே காக்கவல்ல தன்மையுடையாரை விரும்பிக் கொள்க .
பெற்றியாரென்று பொதுப்படக்கூறினமையால் , இது மந்திரிகளைக் கூட்டுமாறு கூறிற்று .
திருக்குறளார் வீ . முனிசாமி உரை :
தனக்குவரும் துன்பங்களை நீக்கும் வழியறிந்து நீக்கி , பிறகு அவ்வாறான துன்பங்கள் தனக்கு வாராதபடி முன் அறிந்து காக்கவல்ல தன்மையுடையவர்களை அவர்கள் மகிழ்வதைச் செய்து துணையாகக் கொள்ளுதல் வேண்டும் .
Translation:
Cherish the
all-accomplished men as friends,
Whose skill the present ill
removes, from coming ill defends.
Explanation:
Let (a king) procure and
kindly care for men who can overcome difficulties when they occur, and guard
against them before they happen.
குறள் 443:
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல் .
கலைஞர் மு . கருணாநிதி உரை :
பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும் .
மு . வரதராசனார் உரை :
பெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல் , பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும் .
சாலமன் பாப்பையா உரை :
துறைப் பெரியவர்களுக்கு அவர் விரும்புகின்றவற்றைச் செய்து , அவரைத் தமக்கு உரியவராகச் செய்து கொள்வது அரிய பேறுகளுள் எல்லாம் அரிது .
பரிமேலழகர் உரை :
பெரியாரைப் பேணித் தமராக் கொளல் - அப்பெரியவர்களை அவர் உவப்பன அறிந்து செய்து தமக்குச் சிறந்தாராகக் கொள்ளுதல் , அரியவற்றுள் எல்லாம் அரிது - அரசர்க்கு அரிய பேறுகள் எல்லாவற்றுள்ளும் பெரிது .
( உலகத்து அரியனவெல்லாம் பெறுதற்கு உரிய அரசர்க்கு இப்பேறு சிறந்தது என்றது . இதனான் அவையெல்லாம் உளவாதல் நோக்கி .).
மணக்குடவர் உரை :
செய்தற்கரியன வெல்லாவற்றினும் அரிதே ; தம்மின் முதிர்ந்த அறிவுடையாரை விரும்பித் தமக்குச் சுற்றமாகக் கொள்ளுதல் .
பெரியாரைக் கொளலென்பது மந்திரி புரோகிதரைக் கூட்டிக் கொள்கை .
திருக்குறளார் வீ . முனிசாமி உரை :
ஆற்றல் மிகுந்த பெரியார்களை அவர் மகிழ்வன செய்து தமக்குச் சிறந்த துணையாகக் கொள்ளுதல் , அரிய செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் அரிதானதாகும் .
Translation:
To cherish men of mighty
soul, and make them all their own,
Of kingly treasures rare,
as rarest gift is known.
Explanation:
To cherish great men and
make them his own, is the most difficult of all difficult things.
குறள் 444:
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை .
கலைஞர் மு . கருணாநிதி உரை :
அறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும் .
மு . வரதராசனார் உரை :
தம்மைவிட ( அறிவு முதலியவற்றால் ) பெரியவர் தமக்குச் சுற்றத்தராகுமாறு நடத்தல் , வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும் .
சாலமன் பாப்பையா உரை :
அறிவு முதலியவற்றால் தம்மைக் காட்டிலும் சிறந்த துறை அறிவுடையவரைத் தமக்கு உரியவராகக் கொண்டு , அவர் காட்டும் வழியில் நடப்பது , வலிமையுள் எல்லாம் முதன்மை ஆனதாகும் .
பரிமேலழகர் உரை :
தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் - அறிவு முதலியவற்றால் தம்மின் மிக்கார் தமக்குச் சிறந்தாராகத் தாம் அவர் வழிநின்று ஒழுகுதல் , வன்மையுள் எல்லாம் தலை - அரசர்க்கு . எல்லா வலி உடைமையினும் தலை .
( பொருள் , படை , அரண்களான் ஆய வலியினும் இத்துணைவலி சிறந்தது என்றது . இவர் அவற்றான் நீக்கப்படாத தெய்வத்துன்பம் முதலியனவும் நீக்குதற்கு உரியர் ஆகலின் ).
மணக்குடவர் உரை :
தம்மின் மிக்க அறிவுடையார் தமக்குத் தமராக ஒழுகுதல் , வலியானவை யெல்லாவற்றினும் தலையான வலி .
திருக்குறளார் வீ . முனிசாமி உரை :
அறிவு முதலியவற்றினால் தம்மைவிட மிகுந்தவர்களைத் தமக்குச் சிறந்தவராகக் கொண்டு நடந்து கொள்ளுதல் எல்லா வலிமைகளைக் காட்டிலும் தலைமையானதாகும் .
Translation:
To live with men of
greatness that their own excels,
As cherished friends, is
greatest power that with a monarch dwells.
Explanation:
So to act as to make those
men, his own, who are greater than himself is of all powers the highest.
குறள் 445:
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல் .
கலைஞர் மு . கருணாநிதி உரை :
கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்து கூறும் அறிஞர் பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மை பயக்கும் .
மு . வரதராசனார் உரை :
தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால் , மன்னவனும் அத்தகையாரைக் ஆராய்ந்து நட்புக்கொள்ள வேண்டும் .
சாலமன் பாப்பையா உரை :
தன்னைச் சூழ இருப்பவரைக் கண்ணாகக் கொண்டு அரசு இயங்குவதால் அப்படியே சூழும் துறைப் பெரியவரையே துணையாகக் கொள்க .
பரிமேலழகர் உரை :
சூழ்வார் கண் ஆக ஒழுகலான் - தன் பாரம் அமைச்சரைக் கண்ணாகக் கொண்டு நடந்தலான் , மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் - அரசன் அத்தன்மையராய அமைச்சரை ஆராய்ந்து தனக்குத் துணையாகக் கொள்க . ( இரண்டாவது விகாரத்தால் தொக்கது . தானே சூழவல்லனாயினும் அளவிறந்த தொழில்களான் ஆகுலம் எய்தும் அரசன் பாரம் அதுவே தொழிலாய அமைச்சரான் அல்லது இனிது நடவாமை பற்றி , அவரைக் கண்ணாகக் கூறினார் . ஆராய்தல் அமைச்சியலுள் சொல்லப்படும் இலக்கணத்தினர் என்பதனை ஆராய்தல் . இவை மூன்று பாட்டானும் பெரியாரைத் துணைகோடலின்சிறப்புக் கூறப்பட்டது .).
மணக்குடவர் உரை :
அரசன் தன்னைச் சூழ்ச்சியாற் கொல்ல நினைப்பாரைத் தானுஞ் சூழ்ச்சியாற் கொல்லவல்லவனாதல் காரியமெண்ண வல்லார் தனக்குக் கண்ணாக வொழுகலான் .
திருக்குறளார் வீ . முனிசாமி உரை :
அரசனது பாரம் தன்னைச் சூழ்ந்துள்ள பெரியார்களைக் கண்ணாகக் கொண்டு நடத்தலால் , அவன் அவ்வாறு சூழ்ந்துள்ளவர்களை ஆராய்ந்து தனக்குத் துணையாகக் கொள்ள வேண்டும் .
Translation:
The king, since counsellors
are monarch's eyes,
Should counsellors select
with counsel wise.
Explanation:
As a king must use his
ministers as eyes (in managing his kingdom), let him well examine their
character and qualifications before he engages them.
குறள் 446:
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில் .
கலைஞர் மு . கருணாநிதி உரை :
அறிவும் , ஆற்றலும் கொண்ட ஒருவன் , தன்னைச் சூழவும் அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது .
மு . வரதராசனார் உரை :
தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல ஒருவனுக்கு , அவனுடைய பகைவர் செய்யக்கூடிய தீங்கு ஒன்றும் இல்லை .
சாலமன் பாப்பையா உரை :
தகுதி மிக்க துறைப்பெரியவரை நட்பாகக் கொண்டு , அவர் காட்டும் வழியில் நடப்பவரைப் பகைவர் ஏதும் செய்ய இயலாது .
பரிமேலழகர் உரை :
தக்கார் இனத்தனாய்த் தான் ஒழுக வல்லானை - தக்காராகிய இனத்தை உடையவனாய்த் தானும் அறிந்து ஒழுக வல்ல அரசனை , செற்றார் செயக் கிடந்தது இல் - பகைவர் செய்யக் கிடந்ததொரு துன்பமும் இல்லை .
( தக்கார் : அறிவு ஒழுக்கங்களால் தகுதியுடையார் . ஒழுகுதல் : அறநீதிகளின் நெறி வழுவாமல் நடத்தல் வஞ்சித்தல் , கூடினவரைப் பிரித்தல் , வேறு பகை விளைத்தல் என்ற இவற்றானும் , வலியானும் பகைவர் செய்யுந் துன்பங்கள் பலதிறத் ¢ த ஆயினும் , தானும் அறிந்து , அறிவார் சொல்லும் கொண்டொழுகுவான்கண் அவற்றுள் ஒன்றும் வாராது என்பார் , ' செற்றார் செயக்கிடந்தது இல் ' என்றார் .).
மணக்குடவர் உரை :
தகுதியுடையா ரினத்தானாய்த் தானும் அவரோ டொக்க ஒழுகவல்லவனைப் பகைவர் செய்யக் கிடந்ததொருநெறி யில்லை .
இஃது இவனைப் பகைவரால் வெல்ல லொண்ணா தென்றது .
திருக்குறளார் வீ . முனிசாமி உரை :
தகுதியான பெரியார்களின் துணையினை உடையவனாகித் தானும் அறிந்து நடந்துகொள்ள வல்லவர்க்குப் பகைவர் செய்யக் கூடியதொரு துன்பம் இல்லையாகும் .
Translation:
The king, who knows to live
with worthy men allied,
Has nought to fear from any
foeman's pride.
Explanation:
There will be nothing left
for enemies to do, against him who has the power of acting (so as to secure)
the fellowship of worthy men.
குறள் 447:
இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர் .
கலைஞர் மு . கருணாநிதி உரை :
இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்று நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு ?
மு . வரதராசனார் உரை :
கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர் .
சாலமன் பாப்பையா உரை :
தீயன கண்டபோது நெருங்கிச் சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொண்டு செயல்படுபவரைக் கெடுக்கக் கூடியவர் எவர் ?.
பரிமேலழகர் உரை :
இடிக்கும் துணையாரை ஆள்வாரை - தீயன கண்டால் நெருங்கிச் சொல்லும் துணையாந் தன்மையை உடையாரை இவர் நமக்குச் சிறந்தார் என்று ஆளும் அரசரை , கெடுக்கும் தகைமையவர் யார் - கெடுக்கும் பெருமை உடைய பகைவர் உலகத்து யாவர் ?
( தீயன : பாவங்களும் நீதியல்லனவும் துணையாம் தன்மையாவது , தமக்கு அவையின்மையும் , அரசன்கண் அன்புடைமையும் ஆம் . அத்தன்மை உடையார் நெறியின் நீங்க விடாமையின் , அவரை ஆளும் அரசர் ஒருவரானும் கெடுக்கப்படார் என்பதாம் . ' நெருங்கிச் சொல்லும் அளவினோரை ' என்று உரைப்பாரும் உளர் . இவை இரண்டு பாட்டானும் அதன் பயன் கூறப்பட்டது )
மணக்குடவர் உரை :
குற்றங் கண்டால் கழறுந் தன்மை யுடையாரைத் தமக்குத் தமராகக் கொள்ள வல்லாரைக் கெடுக்குந் தகைமையுடையார் உலகத்து யாவர் . இது கேடில்லை யென்றது .
திருக்குறளார் வீ . முனிசாமி உரை :
தீயன கண்டால் நெருங்கிச் சொல்லும் தன்மையுடைய பெரியார்களை , இவர்கள் தமக்குச் சிறந்தார் என்று கொள்ளுபவர்களைக் கெடுக்கும் பெருமையுடைய பகைவர் யாவர் உளர் ?.
Translation:
What power can work his
fall, who faithful ministers
Employs, that thunder out
reproaches when he errs.
Explanation:
Who are great enough to
destroy him who has servants that have power to rebuke him ?.
குறள் 448:
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும் .
கலைஞர் மு . கருணாநிதி உரை :
குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும் .
மு . வரதராசனார் உரை :
கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன் , தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான் .
சாலமன் பாப்பையா உரை :
தீயன கண்டபோது கடிந்து சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொள்ளாத பாதுகாப்பு அற்ற அரசு , அதைக் கெடுப்பார் இல்லாமலேயே தானாகவே கெடும் .
பரிமேலழகர் உரை :
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் - சுழறுதற்கு உரியாரைத் தனக்குத் துணையாகக் கொள்ளாமையின் காவலற்ற அரசன் , கெடுப்பார்இலானும் கெடும் - பகையாய்க் கெடுப்பார் இல்லையாயினும் தானே கெடும் .
(' இல்லாத , ஏமரா ' என்பன பெயரெச்ச அடுக்கு . கெடுப்பார் உளராவர் என்பது தோன்ற , ' இலானும் ' என்றார் . தானே கெடுதலாவது : பாகனில்லாத யானைபோல நெறியல்லா நெறிச் சென்று கெடுதல் .).
மணக்குடவர் உரை :
கழறுவாரை யில்லாத காவலில்லாத அரசன் தன்னைப் பகைவராய் வந்து கெடுப்பார் இல்லையாயினும் தான் வேண்டியவாறொழுகிக் கெடும் . இஃது உயிர்க்குக் கேடு வருமென்றது .
திருக்குறளார் வீ . முனிசாமி உரை :
நெருங்கிப் புத்தி சொல்லும் பெரியார்களைத் துணையாகக் கொள்ளாத காவலற்ற அரசன் , பகையாய்க் கெடுப்பவர்கள் இல்லாவிட்டாலும் தானே கெடுவான் .
Translation:
The king with none to
censure him, bereft of safeguards all,
Though none his ruin work,
shall surely ruined fall.
Explanation:
The king, who is without
the guard of men who can rebuke him, will perish, even though there be no one
to destroy him.
குறள் 449:
முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை .
கலைஞர் மு . கருணாநிதி உரை :
கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை , முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும் .
மு . வரதராசனார் உரை :
முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை , அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை .
சாலமன் பாப்பையா உரை :
முதல் இல்லாதவர்களுக்கு அதனால் வரும் லாபம் இல்லை , அதுபோலவே தன்னைத் தாங்கும் துறைப் பெரியவர் துணை இல்லாத அரசுக்கு அவர்களால் வரும் பயனும் இல்லை .
பரிமேலழகர் உரை :
முதல் இலார்க்கு ஊதியம் இல்லை - முதற்பொருள் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லையாம் , மதலையாம் சார்பு இலார்க்கு நிலை இல்லை - அதுபோலத் தம்மைத் தாங்குவதாம் துணையில்லாத அரசர்க்கு அதனான் வரும் நிலையில்லை .
( முதலைப் பெற்றே இலாபம் பெறவேண்டுமாறு போலத் தாங்குவாரைப் பெற்றே நிலை பெறவேண்டும் என்பதாம் . நிலை : அரச பாரத்தோடு சலியாது நிற்றல் ).
மணக்குடவர் உரை :
முதலில்லாதார்க்கு இலாபமில்லையானாற் போலத் தாங்குதலாகிய சார்பு இல்லாதர்க்கு அரசு நிலைநிற்றல் இல்லை .
திருக்குறளார் வீ . முனிசாமி உரை :
முதற்பொருள் இல்லாத வணிகர்களுக்கு அதனால் வரும் ஊதியம் இல்லையாகும் . அதுபோலத் தம்மைத் தாங்குவதாம் துணை இல்லாதவர்களுக்கு அதனால் வரும் உறுதியான நிலை இல்லையாகும் .
Translation:
Who owns no principal, can
have no gain of usury;
Who lacks support of
friends, knows no stability.
Explanation:
The There can be no gain to
those who have no capital; and in like manner there can be no permanence to
those who are without the support of adherents.
குறள் 450:
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல் .
கலைஞர் மு . கருணாநிதி உரை :
நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும் .
மு . வரதராசனார் உரை :
நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும் .
சாலமன் பாப்பையா உரை :
துறைப் பெரியவர் நட்பைப் பெறாமல் அதை விட்டுவிடுவது , தனியனாய் நின்று , பலரோடும் பகை கொள்வதைக் காட்டிலும் , பல பத்து மடங்கு தீமை ஆகும் .
பரிமேலழகர் உரை :
பல்லார் பகை கொள்ளலின் பத்து அடுத்த தீமைத்து - தான் தனியனாய் வைத்துப் பலரோடும் பகை கொள்ளுதலின் பதிற்று மடங்கு தீமை உடைத்து ; நல்லார் தொடர் கைவிடல் - அரசன் பெரியாரோடு நட்பினைக் கொள்ளாதொழிதல் .
( பலர் பகை ஆயக்கால் ' மோதி முள்ளொடு முட்பகை கண்டிடல் , பேது செய்து பிளந்திடல் ' ( சீவக . விமலை .32) என்பவையல்லது , ஒருங்கு வினையாக் குறித்துச் செய்தாலும் ஒருவாற்றான் உய்தல் கூடும் . நல்லார் தொடர்பை விட்டால் ஒருவாற்றானும் உய்தல் கூடாமையின் , இது செய்தல் அதனினும் தீது என்பதாம் . இவை மூன்றுபாட்டானும் அது செய்யாத வழிப்படும் குற்றம் கூறப்பட்டது .).
மணக்குடவர் உரை :
பலரோடு பகைகொண்டால் எவ்வளவு துன்பமுறும் ; அதனினும் பத்துமடங்கு துன்பமுறும் ; பெரியாரைத் துணையாகக் கொள்ளாதொழியின் .
திருக்குறளார் வீ . முனிசாமி உரை :
பெரியார்களது நட்பினைக் கொள்ளாமல் விட்டுவிடுதல் என்பது , பலரோடும் பகைமையினைக் கொள்ளுவதை விடப் பத்து மடங்கு தீமையுடையதாகும் .
Translation:
Than hate of many foes
incurred, works greater woe
Ten-fold, of worthy men the
friendship to forego.
Explanation:
It is tenfold more injurious
to abandon the friendship of the good, than to incur the hatred of the many.