எதிர்ப்புக்கு பணிந்தது அழகப்பா பல்கலைக்கழகம்
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் நாடகம் ஒன்றைக் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் தனது பாடத்திட்டத்திலிருந்து நீக்கியும் பிறகு சேர்த்தும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் முதுகலைத் தமிழ் பாடத்திட்டத்தில் அண்ணாதுரை எழுதிய ’நீதி தேவன் மயக்கம்’ என்கிற நாடகம் இடம்பெற்றிருந்தது. நாடகத்துக்கான விளக்கக் கையேடு வாங்குவதற்கு மாணவர்களின் பொருளாதாரம் சிக்கலாக இருக்கிறது என்கிற அடிப்படையில் அந்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுத்தலைவர் தலைமையிலான குழு அந்த நாடகத்தை பாடத்திட்டத்திலிருந்து நீக்கி உத்தரவிட்டது. அதற்கு மாற்றாக அரு.ராமகிருஷ்ணன் எழுதிய ‘ராஜ ராஜ சோழன்’ நாடகத்தை இடம்பெறச்செய்தது. இதையடுத்து, ராமாயணம் மற்றும் மகாபாரதம் குறிப்பிடும் தொன்மங்களை அண்ணாதுரையின் நாடகம் கேள்விக்குள்ளாக்குகிறது. அதன் அடிப்படையில்தான் பாடத்திட்டத்திலிருந்து அந்த நாடகம் நீக்கப்பட்டிருப்பதாக அரசியல் கட்சிகளும் கொள்கையாளர்களும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். இந்துத்துவ அமைப்புகளின் தூண்டுதலால்தான் பல்கலைக்கழகம் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகவும் இதன் பின்னணியில் இருக்கும் முக்கிய நபர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. எதிர்ப்பை அடுத்து ஒரே நாளில் மீண்டும் தனது பாடத்திட்டத்தில் ’நீதி தேவன் மயக்கம்’ நாடகத்தை மீண்டும் சேர்த்து பல்கலைக்கழக நிர்வாகக் குழு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக பாடத்திட்ட வளர்ச்சி டீன் ராஜமோகனிடம் பேசியபோது, ``காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை தனது பாடத்திட்டத்தை மாற்றும். இடைப்பட்டகாலங்களில் பல்கலைக்கழகங்களின் கீழ்வரும் கல்லூரிகளின் தேவைக்கேற்ப பாடத்திட்டங்களில் சிறு திருத்தங்களை மேற்கொள்ளும். ‘நீதி தேவன் மயக்கம்’ நாடகத்தின் விளக்கத்தைப் படிக்க மாணவர்களுக்கு மூன்று புத்தகங்கள் தேவையாக இருக்கிறது. ஒரு நாடகத்துக்கு மூன்று புத்தங்களை வாங்கிப் படிக்கும் அளவுக்குப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ்வரும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் வசதியானவர்கள் இல்லை. அதனால் அந்த நாடகத்தை நீக்குவது குறித்து கல்லூரிகளிலிருந்து கோரிக்கை வந்தது. அதையடுத்துதான் இடைக்கால மாற்றமாக அந்த நாடகத்தை நீக்கலாம் என்று பல்கலைக்கழக நிர்வாகக்குழு முடிவெடுத்தது. ஆனால், இந்த விஷயம் வேறு விதமாக அணுகப்பட்டதால் நாடகம் நீக்கப்பட்டது அரசியலானது. அதனால் மாணவர்களின் கல்வியை எக்காரணத்தைக் கொண்டும் அரசியல் பாதித்துவிடக்கூடாது என்கிற எண்ணத்தில் மீண்டும் அந்த நாடகத்தை பாடமாகச் சேர்த்து முடிவெடுத்தோம். மற்றபடி இதில் எவ்வித அரசியல் தலையீடும் இல்லை” என்றார்.
நன்றி:
வெளியிடப்பட்ட நேரம்:13:50 (12/11/2018)
கடைசி தொடர்பு:13:50 (12/11/2018)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.