பூப்புச் சடங்கு
முனைவர் சி.சுந்தரேசன்
துறைத்தலைவர்
நாட்டுப்புறவியல் துறை
துறைத்தலைவர்
நாட்டுப்புறவியல் துறை
பெண் பிறந்துள்ள குடும்பத்தில் பெருமையாகவும் மகிழ்வாகவும் நடைபெறுகின்ற ஓர் சடங்கு பூப்புச் சடங்காகும். சிறுமி என்ற நிலையைக் கடந்து தாய்மைக்குத் தயாராகும். காலக் கட்டத்தைப் பெண்ணானவள் தொடும் போது ஏற்படும் நிகழ்வுதான் பூப்படைதல் ஒரு பெண் பூப்படைந்து விட்டால் அதை வயசுக்கு வந்துட்டா, பருவம் அடைஞ்சிட்டா, தெரண்டுட்டா, பெரிய பெண்ணாயிட்டா, பேரன் பிறந்திட்டான், சமஞ்சிட்டா, பெரிய மனிசியாயிட்டா என்று பலவாறு கூறப்படுகிறது.
பூப்படைந்த அன்று செய்யும் சடங்கு
பெண் தனது உடல் வாகைப் பொருத்துப் பருவமடையும் தன்மை நிகழ்கிறது. முற்காலத்தில் பதினாறு வயதைத் தொட்டவுடன் பெண் பருவமடைவாள். இப்பொழுது உடல் வாகைப் பொருத்து அமைகிறது. பூப்பு எய்திய பெண்ணைத் தீட்டு என்ற பெயரால் பதினாறு நாள் வரை தனிமைப்படுத்துவார்கள்.
அதைக் “கன்னித் தீட்டு” என்று அழைப்பார்கள். பூப்பு எய்திய பெண்ணைப் பதினாறு நாள் வரை தனிமைப்படுத்தி, பின்பு தங்கள் குடும்பத்தாருடன் சேர்த்துக்கொள்கின்றனர்.
பெண் பூப்படைந்தவுடன் அதைப் பயத்தோடும் அச்சத்தோடும் தாய் அல்லது சுற்றியுள்ளவர்களிடம் தெரிவிப்பாள். அவர்கள் உடனே வண்ணாத்தியிடம் சொல்லி அழைத்து வருவார்கள். வண்ணாத்தி வந்து பார்த்து உறுதி செய்த பிறகே மற்றவர்களுக்கு தெரிவிப்பார்கள். அந்த வேளையில் தாயும் தந்தையும் பூப்படைந்த பெண்ணை நேராக பார்ப்பதில்லை.
தாய்மாமனுக்குத் தெரிவித்தல்.
பெண் பூப்படைந்த நிகழ்வை அப்பெண்ணின் தந்தை அல்லது உறவுக்காரர்கள் யாராவது தாய்மாமன் வீட்டிற்குச் சென்று தெரிவிப்பார்கள், அன்று மாலையில் மாமன் வீட்டார் அவர்களுடைய உறவுக்காரர், ஊரார்கள் போன்றோர் சீர் வரிசையுடன் வந்து பெண்ணுக்குத் தண்ணி ஊற்றிச் செல்வார்கள்.
தண்ணீர் ஊற்றி அலங்கரித்தல்
பூப்படைந்த
பெண்ணை முக்காலியில் அமரவைத்து சுமங்கலிப் பெண்கள் மூன்று அல்லது ஐந்து பேர் சேர்ந்து குளிப்பாட்டுவார்கள்.
எவ்வாறெனில் சல்லடையை அப்பெண்ணின் தலைக்கு மேல் பிடித்துக்கொள்வார்கள்.
பிறகு சொம்பில் குவளையில் இருக்கும் மஞ்சள் கலந்த தண்ணீரை மொண்டு சல்லடையில் ஊற்றுவார்கள். அந்தத் தண்ணீர் பெண்ணின் தலையில் பட்டு உடல் முழுவதும் நனையும். பிறகு தூய்மையான தண்ணீர் மூலம் பெண்ணை நீராடச் செய்வார்கள். அதன் பின் புத்தாடையை உடுத்தி அலங்காரம் செய்து பந்தலில் உள்ள நாற்காலியில் பெண்ணை அமரவைத்து மாமன் வாங்கி வந்த மாலையைக் கழுத்தில் போட்டுச் சடங்கு தொடங்கும்.
குச்சிக் கட்டுதல்
தாய்மாமன்
கையால் பச்சை மட்டையை வெட்டி படல் முடைந்து திண்ணையில் ஓர் ஓரமாகக் குச்சிக் கட்டுவார். அவரைத் தவிர வேறுயாரும் கட்டுவது கிடையாது. சடங்கு முடிந்து பூப்படைந்த பெண்ணை குச்சிக்குள் அமரச்செய்து வேப்பிலை கதிரருவாள், விளக்கமாறு இவற்றைக் கையில் கொடுப்பார்கள். அவற்றோடு உலக்கையையும் நல்ல விளக்கையும் வைத்திருக்கச் சொல்வார்கள். பூப்பெய்திய பெண் எந்தப் பொருளையும் தொட அனுமதி கிடையாது. பதினாறு நாள் தீட்டு முடிந்து வீட்டுக்குள் அனுமதிக்கப்படுகிறாள். இந்தப் பதினாறு நாள் வரை வண்ணாத்தி தரும் ஆடையை உடுத்த வேண்டும்.
பூப்பெய்திய பெண்ணின் உணவு
பதினாறு
நாள் குச்சிக்குள் இருக்கும் பெண்ணுக்கு நாள்தோறும் காலையில் வெறும் வயிற்றில் நாட்டுக்கோழி முட்டை கொடுக்கப்படுகிறது. முட்டையைக் குடித்தவுடன் அந்த முட்டையின் ஓட்டை வாங்கி அதனுள் நல்லெண்ணெய் ஊற்றி நிரப்பி அதையும் குடிக்கச் சொல்லுவார். உளுத்தங்கஞ்சி, மிளகுத்தூள், இட்லி, வடை, பழ வகைகள், கருப்பட்டி போன்றவை கொடுக்கப்படும்.
சடங்கு சுற்றுதல்
பதினாறு
நாள் முடிந்து பெண்ணை வீட்டுக்குள் அழைக்கும் நிகழ்ச்சிக்குச் சடங்கு சுற்றுதல் என்று பெயர். இது “புண்ணிய தானம் செய்தல்” என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. அன்று காலையில் பெண்ணை அழைத்து எண்ணெய் தேய்த்து நீராடச் செய்து, வீடு வாசல் கழுவி, வீட்டிற்குள் கோமியம் தெளித்து, பூப்பெய்திய பெண் அமர்ந்திருந்த குடிசையை எடுத்துத் தோட்டத்தில் போட்டுக் கொளுத்தி, அது எரியும் போது பெண்ணை மூன்று முறை தாண்டச் சொல்வார்கள். இரவு தாய்மாமன் சீரெடுத்து வந்து சடங்கு சுத்தி, பெண்ணை வீட்டுக்குள் அழைத்து விட்டுப்போவார்.
கொடி போடுதல்
சடங்கன்று
வண்ணாத்தி “நெறிவள்ளிக் கொடி” மூன்று அல்லது ஐந்து கொண்டு வருவார். அந்தக் கொடியை ஏழு பேர் பிடித்துக் கொண்டு பெண்ணை நுழையச் செய்து, கீழே இறக்கி பெண்ணைத் தாண்டச் செய்வார். மூன்று முறை செய்த பிறகு பெண்ணின் தலையைச் சுற்றி வீட்டுக் கூரைமேல் அக்கொடியைத் தூக்கிப் போடுவார்கள். அப்போதுதான் பெண்ணை வீட்டு தீட்டு முழுமையாகப் போய்விடும்.
அம்மிக்கல்லைப் (குழவி) பெண்ணின் கையில் கொடுத்து அங்கும் இங்கும் ஆட்டச் செய்வார். வேப்பிலை, விளக்கமாறு இரண்டையும் கொண்டு தலையிலிருந்து கால் வரை அடிப்பார்கள். படி நிறைய நெல் வைத்து, அதன் மேல் நல்ல விளக்கைக் கொளுத்தி பெண்ணின் கையில் கொடுத்து, ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அழைப்பார்கள். பின்பு உணவு சாப்பிட்டு அவரவர் வீட்டுக்குச் சென்று விடுவார்கள். ( தகவலாளர் சி.புண்ணிய மூர்த்தி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்ப் பல்கலைக்கழகம் ).
நன்றி:http://www.tamilvu.org/ta/tdb-titles-cont-folklore-html-poopu-sadag-340123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.