‘டெங்கு’ (Dengue) எனும் வைரஸ் கிருமியால் ஏற்படும் காய்ச்சல்
என்பதால், இதற்கு `டெங்குக்
காய்ச்சல்’ என்று பெயர். `டெங்கு' என்ற ஸ்பானிய
மொழிச் சொல்லுக்கு, `எலும்பு முறிவுக்
காய்ச்சல்’ என்று பொருள்.
அதாவது இந்தக் காய்ச்சலின்போது, எலும்பு முறிவு ஏற்பட்டதுபோல கடுமையான வலி தோன்றும்.
இந்த வைரஸ் கிருமிகளில் மொத்தம் நான்கு வகைகள் உள்ளன. ஒரு
வகை வைரஸால் டெங்கு உண்டாகி குணமான பின்னர், வாழ்நாளில் திரும்பவும் அதே வைரஸால் பாதிப்பு இருக்காது.
அதற்கான எதிர்ப்புச் சக்தி உடலில் உருவாகி இருக்கும். அதே நேரத்தில், மற்ற வகை வைரஸ்
வகையால் டெங்கு ஏற்படலாம்.
எப்படிப் பரவும்?
கொசுவால் மட்டுமே பரவுகிறது. ‘ஏடிஸ் எஜிப்தி’ (Aedes Aegypti) எனும் கொசுக்கள்
நம்மைக் கடிக்கும்போது, டெங்கு
உண்டாகிறது. கொசு கடித்த ஒரு வாரத்துக்குள் நோய் ஏற்படும்.
எப்படிப் பரவாது?
இது தண்ணீர், காற்று மூலம் பரவாது. டெங்கு பாதித்த ஒருவரின் இருமல், தும்மல்
போன்றவற்றால் மற்றவருக்கும் அது பரவுவதில்லை.
ஏடிஸ் கொசு
ஏடிஸ் கொசு கறுப்பு நிறமுடையது. இதன் சிறகுகளில் வெள்ளை
நிறப் புள்ளிகள் காணப்படும். இவற்றில் பெண் கொசு மட்டும்தான் மனிதனுக்கு இந்த நோயை
பரப்புகிறது. இனச்சேர்க்கைக்குப் பின்னர், பெண் கொசுவுக்கு முட்டை முதிர்ச்சியடைய மனிதர்களின்
ரத்தத்தில் உள்ள புரதச்சத்து தேவைப்படும். இதனால், மனித ரத்தத்தை உறிஞ்சும். டெங்குக் கொசுக்கள் சுத்தமான நீர்நிலைகளில் வளரக்கூடியவை. பகலில் கடிக்கும்.
யாருக்கு ஆபத்து அதிகம்?
எல்லோருக்கும் இந்த நோய் வரலாம். குறிப்பாக, குழந்தைகளுக்கும், நோய் எதிர்ப்புச்
சக்தி குறைந்தவர்களுக்கும் எளிதில் வரும்.
அறிகுறிகள்
திடீரென கடுமையான, அதிகமான தலைவலி, கண்களுக்குப் பின்புறம் வலி, கண் விழி சிவந்து, வெளிச்சத்தைப்
பார்க்க முடியாமல் கண் கூசுதல், உடலில் சிவப்புப் புள்ளிகளும் தோன்றும். இதோடு, எலும்புகளை
முறித்துப்போட்டதைப்போல கடுமையான வலி எல்லா மூட்டுகளிலும் ஏற்படுவது இந்த நோயின்
முக்கிய அறிகுறிகள்.
உயிரிழப்பு எப்போது ஏற்படும்?
பெரும்பாலானோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்ட ஏழு நாள்களில்
சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் டெங்கு வைரஸ் மிக மோசமான பாதிப்பை
ஏற்படுத்தலாம். டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை (Platelets) அழித்துவிடும்.
இவை ரத்தம் உறைவதுக்கு உதவக்கூடியவை. ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை குறையும்போது, அது நுரையீரல், வயிறு போன்ற உறுப்புகளிலும்
பல் ஈறு, சிறுநீர்ப்
பாதையிலும் ரத்தக் கசிவை ஏற்படுத்தக்கூடும். உரிய மருத்துவச் சிகிச்சை
கிடைக்கவில்லை என்றால் உயிரிழப்பும் ஏற்படலாம்.
என்ன சிகிச்சை?
டெங்குக் காய்ச்சலுக்குஆங்கில வைத்தியத்தில் இன்னும்
மருந்து கண்டுபிடிக்கப்படவில்லையென்றாலும், சித்த வைத்தியம் உண்டு என்று நம்பப்படுகிறது.
நோயுற்ற காலத்தில்
நோயாளி நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். அதிக அளவில்
நீர்ச்சத்து உணவுகளை உட்கொள்ள வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
பால், பழச்சாறு, இளநீர், கஞ்சி போன்ற திரவ
உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
தடுக்க என்ன வழி?
டெங்குவிலிருந்து தற்காத்துகொள்ள தடுப்பூசி எதுவும் இல்லை.
கொசுக்களை ஒழிப்பது ஒன்றே வழி. கொசு வளர வாய்ப்பு இல்லாதவாறு வீட்டையும்
சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும். வீட்டைச் சுற்றியும்
தெருவிலும் நீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். குடம், தண்ணீர்
தொட்டிகளில் சேமித்துவைக்கும் நீரை கொசு புகாதபடி மூடிவைத்துப் பயன்படுத்த
வேண்டும். வீட்டுக்குள்
கொசு வர முடியாதபடி ஜன்னல்களில் கொசுவலை பொருத்தலாம். கொசு எதிர்ப்புக் களிம்பை
உடலில் பூசிக்கொள்ளலாம். கொசுவிரட்டி, கொசுவலையைப் பயன்படுத்தி கொசுக்கடியிலிருந்து
தப்பிக்கலாம். கை, கால் முழுக்க
மறைக்கும் வகையில் ஆடைகளை அணியலாம்.