google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: ஏப்ரல் 2019

சனி, 27 ஏப்ரல், 2019

முதல் திருமுறை முதலாம் பாடல்




முதல் திருமுறை பாடல் எண்: 1 திருப்பிரமபுரம்

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

திருப்பிரமபுர மென்பது சீர்காழி, இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பிரமபுரீசர். தேவியார் - திருநிலைநாயகி.


பொழிப்புரை:

தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச்சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்தகள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ!

குறிப்புரை:

தோடுடையசெவியன் என்பது முதலாக உள்ளங்கவர்ந்தகள்வனுடைய சிறப்பியல்புகள் தெரிவிக்கப்பெறுகின்றன. பிள்ளையாருடைய அழுகைக் குரல் சென்று பரந்து திருமுலைப்பால் அருளச் செய்தது திருச்செவியாதலின் அதனை முதற்கண் தெரிவிக்கிறார். உலகுயிர்கள் துன்பம் நீங்கி இன்பம் அடைதலே பொருளாக, பாடல் பரமனார் திருச்செவியில் சென்று சேர, திருச்செவியை முதற்கண் சிறப்பித்தார் என்பது, `பல்லுயிரும் களிகூரத் தம் பாடல் பரமர்பால் செல்லுமுறை பெறுவதற்குத் திருச்செவியைச் சிறப்பித்து` என்ற சேக்கிழார் வாக்கால் தெரியலாகும். தோடுடையசெவி என்றதால் இடப்பாகத்துச் செவி என்பது குறிக்கப்பெறுகின்றது. கருணைக்கேற்றது, தாய்தழீஇய இடப்பக்கமாதலின், அதனை முற்கூறினார். `தோடு கூற்று பித்தா மூன்றும் பீடுடைத்தேசிகன் பேரருள் ஆகும்` என்பதால் இது ஞானதேசிகனது திருவருட்டிறத்தை விளக்குவதாகும். சொரூபசிவம் மூவகை ஆன்மாக்களுக்கும் மூவகையால் அநுக்கிரகித்து மும்மலங்களையும் போக்கி அருளாரமுதத்தை உண்பித்தருளும் முறையில், சகலான்மாக்களுக்குப் படர்க்கையில் தோன்றிப்புரியும் குருவருளைக் குறிப்பதாகுமென்று `குரு அருளும்` (அகத்தியர் தேவாரத் திரட்டு) என்ற பாடலும் குறிக்கிறது.

மூன்றுவயதுக் குழந்தையாகிய ஞானசம்பந்தப்பிள்ளையார் தீவிரதர அன்புகொண்டு சன்மார்க்க நெறியாகிய நாயக நாயகித் தன்மையில் எடுத்த எடுப்பிலேயே ஈடுபடுகின்றார். உமையொருபாகனாக ஒரு பெண்ணோடு இருந்த பயில்வால் என்னுள்ளங்கவர்கின்றார் என நயந்தோன்றக் கூறியவாறு. விடையேறி-தாம் கண்ட காட்சி இடபாரூடராதலின் அதனைக் குறித்தபடி. தூவெண்மதி-தூய்மையான வெண்ணிறம் பொருந்திய மதி. மதிக்குத் தூய்மை களங்கமின்மை, இருள் ஒளியைச் சாராதவாறு போலக் களங்கம் இறைவனையும், அவனருள் பெற்றாரையும் சாராது. தூய்மை மனத்திலும் வெண்மை புறத்திலும் நிகழ்வது ஆதலின், இங்கே குறிப்பிடும் மதி நாம் காணும் சந்திரன் போன்று பிராகிருத சந்திரன் அல்லன் என்பது தெளியத்தக்கது. அன்றியும் ஒரு கலைப் பிறையாதலின் களங்கத்திற்கு இடமில்லை என்பதுமாம். இறைவன் சுடலைப் பொடி பூசுதல்: சர்வசங்கார காலத்து எல்லாவுலகமும் தத்தங் காரணத்துள் முறையே ஒடுங்க-காரணங்கள் யாவும் இறுதியாக இறைவனிடம் ஒடுக்கப் பெறும்போது நிகழ்வது. மகாசங்காரமாவது, நிவர்த்தியாதி பஞ்ச கலைகளிலும் அடங்கிய எல்லாப் புவனங்களையும் சங்கரிக்கின்ற நிலை. அப்போதுதான் எல்லாம் சுடலைக் காடாகும்.
உள்ளங்கவர்தலாவது அவனையன்றி உளங்கள் அறியாவாறு ஆட்கொள்ளுதல். ஏடு-இதழ். மலரான்-பிரமன். பிரமன் வழிபாடு செய்த தலமாதலின் இறைவற்குப் பிரமபுரீசர் என்பதும் தலத்திற்குப் பிரமபுரம் என்பதும் பெயராயிற்று. பிரமாபுரம் எனவே பிரமன் வழிபட்ட தலம் என்பது விளங்குதலின் மலரான் என்பது பிரமனைக் குறியாது என்றும், இந்நாயனாரே முற்காலத்து ஏடுடைய மலரால் பூசித்த காரணம் பற்றி இங்ஙனம் கூறினார் என்றும் சதாசிவச் செட்டியாரவர்கள் கருதினார்கள். பீடு-பெருமை. மேவிய-தாமே விரும்பி எழுந்தருளியுள்ள. இறைவன் நித்யசுதந்திரன் ஆதலின் இங்ஙனம் கூறப் பெற்றது. பெம்மான்-பெருமான் என்பதன் திரிபு. கள்வன் பெருமானாகிய இவன் அன்றே எனக் கூட்டுக. ஏறி, பூசி என்பன பெயர்ச்சொற்கள். வினையெச்சமாக்கி, கவர்கள்வன் என்ற வினைத்தொகையின் நிலைமொழியோடு முடிப்பாரும் உண்டு.

இத் திருப்பாடலுக்கு உரை எழுதிய கயப்பாக்கம் திரு.சதாசிவச்செட்டியார் அவர்கள் `விடையேறி` என்பது நித்யத் தன்மையை வேண்டிய அறக்கடவுளை வெள்விடையாகப் படைத்து ஊர்தியாகக் கொண்டதால் சிருஷ்டியும், `மதிசூடி` என்பது சந்திரனுக்கு அபயம் தந்து திருமுடியில் ஏற்றிக் காத்ததால் திதியும், `பொடிபூசி` என்பது சர்வசங்காரகாலத்து நிகழ்ச்சியை அறிவித்தலால் சங்காரமும், `கள்வன்` என்பது இறைவன் எல்லா உயிர்களிடத்தும் நீக்கமற நிறைந்திருந்தும் அவைகள் வினைப்போகங்களை நுகர ஒளித்து நிற்பதால் திரோபவமும், `அருள்செய்த` என்பது அனைவருக்கும் அருள் செய்யும் அநுக்கிரகமும் ஆகிய ஐந்தொழிலையும் விளக்கும் குறிப்பு என்பார்கள்.

ஸ்ரீமத் செப்பறைச் சுவாமிகள் அவர்கள், `தோடுடைய செவியன்` முதலாயின இறைவனது எண்குணங்களாகிய சிறப்பு இயல்புகளை உணர்த்துவன என்றும், `பிரமாபுரம்` `விடையேறி` முதலியன இறைவனது தசாங்கங்களைக் குறிப்பால் உணர்த்தி நிற்பன என்றும், `விடையேறி` `பொடிபூசி` `உள்ளங்கவர்கள்வன்` என்பன முறையே இறைவனுடைய மூன்று திருமேனிகளாகிய உருவம் அருஉருவம் அருவம் என்ற மூன்றையும் குறித்து நிற்பன என்றும், எழுதியுள்ளார்கள். சேக்கிழார் சுவாமிகள் `மறைமுதல் மெய்யுடன் எடுத்த எழுதுமறை` என்பதால் பிரணவத்தின் முதலாகிய ஓங்காரத்தைச் சிவசக்தியின் உண்மைச்சொரூபமாகிய தகரவித்தையின் அடையாளமாகிய `த்` என்பதோடு சேர்த்து `தோ` என்று தொடங்கியதாகக் குறிப்பிடுவார்கள். பன்னிரண்டாம் திருமுறையில் `உலகெலாம்` என்று முடிவதனையும் இதனோடு சேர்த்துத் திருமுறை முழுவதுமே வேத மூலமாகிய பிரணவத்துள் அடங்கியது என்பது குறிப்பு.

தேவாரத்திற்கும் வேதத்திற்கும் உள்ள ஒற்றுமையை உணர்த்த, வேதம் பயின்ற மரபில் வந்து தமிழ்வேதம் தந்த இவர்கள், தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோ தயாத் என்ற காயத்திரி மந்திரத்தின் முதலெழுத்தாகிய தகரத்தின் மீது பிரணவத்தின் முதலெழுத்தாகிய ஓகாரத்தைச் சேர்த்துத் தொடங்கியிருப்பது அறிந்து இன்புறற்குரியது.
குருவருள்: `தோடுடைய செவியன்` என்றமையால் அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்பதை முதலில் உணர்த்தி, அதனால் ஒருதெய்வ வழிபாட்டை நிலைநிறுத்துகிறார் ஞானசம்பந்தர். தோடுடைய செவியே `ஓம்` என்ற பிரணவ சொரூபமாய் உள்ளதையும் காட்டி அருளுகிறார்.

`ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த பீடுடைய பிரமாபுரம்` என்பது பிரமன் பூசித்தமைக்கு இரங்கிய பெருமான் அருள் செய்ததையே குறிக்கும். இதை வலியுறுத்துவார் போன்று `சேவுயரும் திண்கொடியான் திருவடியே சரண் என்று சிறந்த அன்பால் நாவியலும் மங்கையொடு நான்முகன்தான் வழிபட்ட நலங்கொள் கோயில்` எனப் பிள்ளையார் மேகராகக் குறிஞ்சிப் பண் பாடலிலும் விளக்கியுள்ளார். இதனால் `ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த` என்பது ஞானசம்பந்தர் ஏடுடைய மலரால் தான் வழிபட்டு அருள்பெற்றதாகக் கூறல் முறையாகாது என்பதை உணரலாம்.

பதிக வரலாறு :

பண் : நட்டபாடை


சோழ நாட்டிலே, சீகாழியிலே, தவம்பெருகும் கவுணிய குலத்தில், சிவதீட்சை பெற்ற வேதியர்குல திலகராகிய சிவபாத இருதயருக்கும் பகவதியம்மையாருக்கும் வேதநெறி தழைத் தோங்க, மிகுசைவத் துறைவிளங்க, சித்திரைமாதத்துத் திரு வாதிரைத் திருநாளிலே திருமகனார் ஒருவர் தோன்றினார். இவருக்கு மூன்றாமாண்டு நடக்கும்பொழுது ஒருநாள் சிவபாத இருதயர் சீகாழிக் கோயிலுள் இருக்கும் பிரமதீர்த்தத்தில் நீராடச் சென்றார். குழந்தையும் அழுது கொண்டே உடன் சென்றது. சிவபாத இருதயர் உடன் வந்த சிறுவரைக் குளக்கரையில் உட்கார வைத்து, நீருள்மூழ்கி `அகமர்ஷணம்`1 என்னும் திருமந்திரத்தைச் செபித்துக் கொண்டிருந்தார். அங்ஙனம் அவர் மூழ்கியதும் உடல் தந்தையைக் காணாது சிறிதும் தனித்திரார் என்ற வியாசத்தால் முழுமுதல்தந்தையாகிய சிவபெருமானது திருவடிகளை முறைப் படி வழிபட்ட பண்டையுணர்வு மூண்டெழ, பிள்ளையார் திருத் தோணிச்சிகரம் பார்த்து, `அம்மே! அப்பா!` என அழுதார். இவ்வொலி திருத்தோணி மலையில் வீற்றிருக்கும் அம்மை யப்பர் திருச்செவியில் சென்று சேர்ந்தது. முன்னிலைமைத் திருத் தொண்டு முன்னி, அவர்க்கருள் புரிவதற்காகப் பெருமான் பொருவிடைமேல் அம்மையுடன் எழுந்தருளினார். எவ்வுலகும் தொழநின்ற மலைக் கொடியைப் பார்த்து, `துணை முலைகள் பொழிகின்ற பாலடிசில் பொன்வள்ளத்து ஊட்டுக` என ஆணை தந்தார். அப்படியே அம்மையாரும் கறந்தருளி, எண்ணரிய சிவ ஞானத்தின்னமுதம் குழைத்து `உண்அடிசில்` என ஊட்டினார்; கண்ணீரைத் துடைத்தார்; அழுகையை அகற்றினார். உயிர்த் தந்தையும் தாயுமாகிய இவர்களே திருமேனி தாங்கி வெளிப் பட்டுவந்து இங்ஙனம் அருளப் பெற்றமையால் இவர் ஆளுடைய பிள்ளையார் எனவும் தேவர் முதலானோர்க்கும் அறிய முடியாத சிவஞானம் சம்பந்திக்கப் பெற்றமையால் திருஞானசம்பந்தர் எனவும் அழைக்கப் பெறுவாராயினார். செப முடித்து நீராடிக் கரையேறிய சிவபாத இருதயர் கடை வாய் வழிந்து கிடக்கின்ற பாலைக் கண்டு ``நீ யார் தந்த பாலை உண்டாய்? எச்சில் மயங்கிட உனக்கு இது இட்டாரைக் காட்டு` என்று சிறுகோல் கொண்டு ஓச்சி உரப்பினார். குழந்தை யாகிய பிள்ளையார் கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிக்க வலக் கையைச் சிரத்தின் மேலுயர்த்தி, வானிடமெல்லாம் பரவி நிற்கும் ஒளியோடு விடையின்மீது பண்ணிறைந்த அரு மறைகள் பணிந் தேத்த, பரமகருணையின் வடிவாகிய பராசக்தியோடு நின்ற அருள் வண்ணப் பெருமானைச் சுட்டிக் காட்டினார். உளம் நிறைந்து வழிந்த உயர் ஞானத்திருமொழியால் இத்திருப் பதிகத்தைப் பாடியருளினார்.

திருச்சிற்றம்பலம்

ஏன் இப்படி?

இவ்வளவு சிறியதாக இந்தத் தேங்காய் ஏன் இருக்கிறது?