google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: ஜூன் 2018

வியாழன், 21 ஜூன், 2018

வாமன ஜயந்தி


அம்ருதம் பருகியதால், தேவர்களின் கை ஓங்கியிருந்ததால், தோற்றுப்போன மஹாபலி சக்ரவர்த்தி, அசுரர்களின் வல்லமையை அதிகரித்து, தேவர்களை வெல்ல, தன் குரு சுக்ராச்சார்யரிடம் யோசனை கேட்டான். அவருடைய ஆலோசனையின்படிவிச்வஜித்என்ற பெரிய யாகத்தைத் தவவலிமை மிக்கவர்களைக் கொண்டு செய்வித்தபோது, யாக குண்டத்திலிருந்து குதிரைகள் பூட்டிய ஒரு தங்கரதமும், ஏராளமான அஸ்திரங்களும், கவசங்களும் பலிக்குக் கிடைத்தன. தவிர, பாட்டனார் பிரகலாதன் வாடாத மாலையையும், சுக்ராச்சாரியார் ஒரு சங்கையும் மஹாபலிக்கு அளித்தனர். மகிழ்ச்சியடைந்த மஹாபலி அதன்பின் மிகுந்த பலத்துடன் இந்திரபுரியை அடைந்து நகரை முற்றுகையிட்டு இந்திரனைப் போருக்கு வரும்படி அழைத்தான். யாகத்தின் மூலம் கிடைத்த தேர், கவசம், அஸ்திரங்களாலும், சுக்ராச்சார்யரின் அநுக்ரஹத்தாலும் பித்ருக்களின் ஆசிகளாலும் பலம் பெற்றுள்ள மஹாபலியை வெற்றிகொள்ள முடியாத நிலையில் இந்திரன் இருந்ததால், எல்லாத் தேவர்களும் இந்திரலோகத்தைவிட்டு வெளியேறிச் சென்று விட்டார்கள். மஹாபலி இந்திரபுரியைத் தலை நகராகக் கொண்டு மூவுலகங்களையும் தனது வசமாக்கிக்கொண்டான்.

தேவமாதாவான அதிதி தேவி, தேவர்கள் சொர்க்க ராஜ்யலக்ஷ்மியைத் திரும்பப் பெறுவதற்காகப்பயோ விரதம்அனுஷ்டித்து, ஸ்ரீமன் நாராயணனைப் பரம பக்தியுடன் பூஜித்து, ஜபம் செய்து வழிபட்டாள். ஆதிபுருஷனான பகவான் அவள் தவத்தால் மகிழ்ந்து, தானே அவளுக்குப் புத்திரனாகப் பிறந்து, சத்ருக்களை ஜயித்து, அபகரிக்கப்பட்ட ராஜ்யத்தை தேவர்களுக்கு மீட்டுத் தருவதாக அனுக்ரஹித்தார். அதிதி அதன்படி தன் பதி கச்யப பிரஜாபதிக்குத் தொண்டு செய்துகொண்டு வாழ்ந்தாள். உரிய காலத்தில் ஸ்ரீ ஹரியின் அம்சம் அவளிடத்தில் புகுந்து, கர்ப்பமானாள்.

ஸ்ரீயப்பதியான மஹாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ வாமனர், கச்யப மஹரிஷி - அதிதிதேவி தம்பதிக்கு, பாத்ரபத மாதத்தின் சுக்ல பக்ஷ துவாதசியில், அபிஜித் முகூர்த்தத்தில், திருவோண நக்ஷத்திரத்தின் முதல் பாதத்தில், ‘விஜய துவாதசிஎன்று கூறப்படும் சுபதினத்தில் ஸூர்யபகவான் உச்சிவேளையிலிருந்த சமயத்தில், சதுர்புஜங்களுடன், சங்கு-சக்ர-கதாதாரியாக, நீலமேக சியாமளராக, மகர குண்டலங்கள், கங்கணம், தோள்வளைகள், ஒட்டியாணம், நூபுரம், கௌஸ்துபமணி, வனமாலை, ஸ்ரீவத்ஸம், ரத்னகிரீடம் இவற்றால் அழகே உருவானவராக, கோடி ஸூர்யபிரகாசத்துடன் புத்திரனாக ஜனித்தார். தம்பதிகள் பேரானந்தம் அடைந்துஜய விஜயீ பவஎன்று குழந்தையைப் போற்றினர். அவர்கள் கண்ணெதிரே, பகவான் தன் அவதாரத் தோற்றத்தை மாற்றிக்கொண்டு குள்ளமான குழந்தையானார்.

கச்யப முனிவர் வாமனருக்கு முறைப்படி ஜாதகாதி கர்மாக்களைச் செய்தார். தக்க வயதில் உபநயனமும் செய்வித்தார். ஸூர்யபகவான் வாமனருக்குக் காயத்ரீ மந்திரத்தை உபதேசித்தார். அதிதிதேவி கௌபீனத்தையும், பிரஹஸ்பதி பூணூலையும், கச்யபர் மௌஞ்சிமேகலையையும், பூமிதேவி மான்தோலையும், சோமன் பலாச தண்டத்தையும், ஆகாசதேவதை குடையையும், பிரும்மதேவர் கமண்டலத்தையும், ஸரஸ்வதிதேவி ஜபமாலையையும், ஸப்தரிஷிகள் தர்ப்பைகளையும், குபேரன் பிக்ஷா பாத்திரத்தையும், அம்பிகை உமாதேவி பிக்ஷையும் அளித்தார்கள். இவ்வாறிருக்க பலி சக்கரவர்த்தி பிருகு வம்சத்து முனிவர்களைக் கொண்டு அச்வமேத யாகத்தைச் செய்தான். அந்த யாகசாலைக்குள் பகவான் வாமனர், குடை, தண்டம், கமண்டலம் சகிதம் பிரவேசித்தார்.

மஹாபலியும் பிருகு முதலான முனிவர்களும் எழுந்திருந்து வாமனருக்கு அஞ்சலி செய்து மிக்க மரியாதையுடன் வரவேற்றனர்.

மஹாபலி வாமனருக்குப் பாத பூஜை செய்துபிரும்மபுத்திரரே! தாங்கள் எதையோ யாசிக்க வந்திருக்கிறீர்கள் போலும்! என்னென்ன வேண்டுமோ, எதெது விருப்பமோ அவையெல்லாவற்றையும் கேளுங்கள், தருகிறேன்என்று வினயத்துடன் கூறினான்.

வாமனர் பலி சக்ரவர்த்தியை நோக்கிஅசுரேக்திரா! உன் வம்சம், கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் வம்சம்! எனக்கு எவ்வளவு தேவையோ அதை மட்டும் கேட்கப் போகிறேன். என் காலால் அளக்கப்படும் மூன்றடி பூமியை உன்னிடம் யாசிக்கிறேன்என்றார்.

அப்படியே தருகிறேன்என்று சொல்லித் தீர்த்த பாத்திரத்தைக் கையிலெடுத்தவுடன் சுக்ராச்சார்யார் அவனைத் தடுத்துவிரோசனின் புத்திரனே! வந்திருப்பது, மாயையால் பிரம்மசாரி வேஷம் பூண்ட ஸ்ரீ ஹரி! உன் பதவியைப் பறித்து இந்திரனுக்கு அளிக்கப்போகிறான். இந்தத் தானத்தைச் செய்யாதேஎன்றார்.

குருதேவா! நான் வாக்கை மீறமாட்டேன்! இந்தப் பிரம்மசாரி கேட்ட நிலத்தைக் கொடுத்தே தீருவேன்எனக்கூற, சுக்ராச்சார்யார் கோபமுற்று அவனைச் சபித்தார். பிறகு மஹாபலி தன் பத்தினி நீர்வார்க்க, “மூன்றடி நிலத்தை உமக்குத் தானமளிக்கிறேன்என்று கூறித் தீர்த்தத்தைத் தாரைவார்த்தான். மஹாபலியைப் புகழ்ந்த தேவர்கள் புஷ்பமாரி பொழிந்தனர்.

வாமனர் யாசித்த மூன்றடி நிலத்தைத்தருகிறேன்என்று வாக்குறுதியளித்த மஹாபலிச் சக்ரவர்த்தி பார்த்துக்கொண்டிருக்கும் போதிலே, அந்த வாமனர் அற்புதமாகப் பூமிக்கும் ஆகாயத்திற்குமாக வளர்ந்தார். ஈரேழு லோகங்களில் என்னென்ன உண்டோ அத்தனை தாவர, ஜங்கம பிரபஞ்சத்தையும் அந்த உருவத்தில் மஹாபலி கண்டான். ஆச்சரியப்பட்டான். தேஜோ மயமாகப் பிரகாசித்த விராட புருஷன், தனது ஒரு காலடி பாதத்தால் பூலோகத்தை அளந்தார். அவரின் இரண்டாவது காலடி சொர்க்க லோகம், மஹர் லோகம், ஜனோ லோகம், தபோ லோகத்தையும் தாண்டி, சத்திய லோகம்வரை அளந்தது. ஆகாசமும் திசைகளும் அவரது சரீரத்தால் ஆக்கிரமிக்கப்பட்டன.

மூன்றாவது அடிக்கு நிலம் எங்கேஎனக் கேட்டபோது. மாறாத மனதுள்ள மஹாபலி, சற்றும் பின்வாங்காமல் பகவானைப் பார்த்துசிரேஷ்டரே! என் வாக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது. நான் எதற்கும் பயப்படவில்லை; வருந்தவுமில்லை; என் பாட்டனார் பிரகலாதர் தங்களைச் சரணடைந்ததுபோல, என் புண்ணிய வசத்தால் உம்மைப் பணிகிறேன். ஆதலால் எனது சிரசின்மேல் தங்களின் மூன்றாவது அடியை வைப்பீர்களாகஎன்று கூறினான்.

பிரம்மாதி தேவர்கள் அங்கு பிரஸன்னமானார்கள்! பகவான் ஸ்ரீஹரிபிரும்மதேவா! ஜயிக்க முடியாத மாயையை இந்த மஹாபலி ஜயித்துவிட்டான். ஆசார்யனால் தடுக்கப்பட்டுச் சபிக்கப்பட்டபோதிலும், திட விரதனாக உண்மையைக் கைவிடவில்லை. எந்தவிதத் தொந்தரவுகளுமில்லாத ஸுதல் லோகத்தில் ஸாவர்ணி மன்வந்தரம் வரும்வரையில், ஞாதிகளால் சூழப்பட்டு, க்ஷேமமாக இருப்பான். பிறகு ஸாவர்ணி மன்வந்தரத்தின் இந்திரனாக ஆவான்என்று கூறிவிட்டு, மஹாபலியை அனுக்ரஹித்தார்.

ஸுதல லோகத்தில் உனது பேரன் பலியுடன் சந்தோஷமாக இரும்என்று பிரகலாதனையும் அனுக்ரஹித்தார். பிரகலாதனும் பகவானை நமஸ்கரித்து விடைபெற்று ஸுதல லோகத்துக்குச் சென்றார்.

தங்களுடைய பக்தர்களுக்குக் கிடைக்கும் புருஷார்த்தங்கள் அடியேனுக்கும் ஸித்தித்தனஎன்று சொல்லி, மஹாபலி ஸ்ரீஹரியையும் சிவனையும், பிரும்மதேவரையும், பிரகலாதரையும் நமஸ்கரித்துவிட்டு, பரம ஆனந்தத்தோடு ஸுதல லோகத்தை அடைந்தான். பிறகு பகவான் தேவேந்திரனுக்குச் சொர்க்கத்தை மீட்டுக்கொடுத்தார். பிரம்மாதி தேவர்கள் விஷ்ணுவின் ஆச்சர்யகரமான செயலைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

வாமன ஜயந்தியன்று பகவான் வாமனருக்க மூன்று தடவை ஜலத்தை அர்க்யம் கொடுத்தால் புண்ணியம் சேரும்.

தொகுப்புசின்மயா நகர் சு. கிருஷ்ணஸ்வாமி

From



ஏன் இப்படி?

இவ்வளவு சிறியதாக இந்தத் தேங்காய் ஏன் இருக்கிறது?