google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil

சனி, 22 ஜூன், 2024

கள்ளுண்ணாமை

கள்ளுண்ணாமை குறள் 921 இலிருந்து 930 முடிய

குறள் 921:

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்

கட்காதல் கொண்டொழுகு வார்.

பொருள்:

மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல; மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்.

குறள் 922:

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்

எண்ணப் படவேண்டா தார்.

பொருள்:

மது அருந்தக் கூடாது; சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம்.

குறள் 923:

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்

சான்றோர் முகத்துக் களி.

பொருள்:

கள்ளருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.

குறள் 924:

நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்

பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.

பொருள்:

மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்கு ஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும்.

குறள் 925:

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து

மெய்யறி யாமை கொளல்.

பொருள்:

ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப், போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத மூடத்தனமாகும்.

குறள் 926:

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

பொருள்:

மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம்.

குறள் 927:

உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்

கள்ளொற்றிக் கண்சாய் பவர்.

பொருள்:

மறைந்திருந்து மதுவருந்தினாலும் மறைக்க முடியாமல் அவர்களது கண்கள் சுழன்று மயங்குவதைக் கண்டு ஊரார் எள்ளி நகையாடத்தான் செய்வார்கள்.

குறள் 928:

களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து

ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.

பொருள்:

மது அருந்துவதே இல்லை என்று ஒருவன் பொய் சொல்ல முடியாது; காரணம், அவன் மது மயக்கத்தில் இருக்கும் போது அந்த உண்மையைச் சொல்லி விடுவான்.

குறள் 929:

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்

குளித்தானைத் தீத்துரீஇ அற்று.

பொருள்:

குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான்.

குறள் 930:

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்

உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.

பொருள்:

ஒரு குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்த பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப் பார்க்க மாட்டானா?

ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012

உடன்பிறப்பே,

பேரவையில்  நியாயமான  பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூறுகளையும், ஆதார மற்ற குற்றச்சாட்டுகளையும் சொல்லும்போது உரிய பதில் அளிப்பதற்கும் பேரவைத் தலைவரோ, ஆளுங்கட்சியோ வாய்ப்பு அளிக்காத நிலையில், ஏற்கனவே திட்ட மிட்டபடி, அ.தி.மு.க.வின் தோழமைக் கட்சியைச் சேர்ந்த ஒருவரைப் பேசுமாறு  பேரவைத் தலைவரே 19-4-2012 அன்று அழைக்கிறார்.   உடனே அவர் எழுந்து,  அரசைப் புகழோ புகழ் என்று  புகழ்ந்து பேச, அதைத் தொடர்ந்து   முதலமைச்சர் ஜெயலலிதா  எழுந்து,  ஒரு நீண்ட அறிக்கையினைப் படித்ததோடு, அதனைச் செய்தியாளர் களுக்கும் அளித்துள்ளார்கள்.   அந்த நீண்ட அறிக்கை முழுவதும்  தைத் திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு நான் அடுக்கடுக்கான  ஆதாரங்களோடு  எழுதிய தற்கும், ஜெயலலிதா தெரி வித்த பதில்கள் எல்லாம் எவ்வளவு தவறானவை என்பதை நிரூபித்து எழுதியதற்கும் விளக்கம் என்ற பெயரால் எழுதிப் படித்த “சமாளிப்புகள்” தானே தவிர அடிப்படையில்  அவற்றில்  எதுவும் உண்மை இல்லை.

அரசு விழாவில் ஜெயலலிதா பேசும்போது,  தமிழ் மொழியை உலகம் முழுவதும்  பரப்பு வதற்காக அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இரண்டு உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி னோம் என்று சொன்னதால்,  தி.மு. கழக ஆட்சிக் காலத்திலும் இரண்டு உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தினோமே,  அதுமட்டும்  தமிழ் மொழியை உலகம் முழுவதும் பரப்புவதற் காக அல்லவா? என்று கேட்டிருந்தேன். அதற்கு நேரடியாகப் பதில் சொல்லத் தெரியாத ஜெயலலிதா,  கோவையில் நடைபெற்ற மாநாடு கருணாநிதியின் சுய விளம்பரத்திற்காக நடத்தப்பட்ட “தன்னல தம்பட்ட மாநாடு” என்றும்  பேரவையிலே  கூறியிருக்கிறார்.

பொதுவாக பேரவையில் 110வது விதியின் கீழ் அறிக்கை படிக்கும்போதும், யாரோ ஒரு உறுப்பினர் ஒரு ஐயத்தை எழுப்பி அதற்குப் பதில் அளிக்கின்ற போதும் குற்றச்சாட்டுகள் இருக்கக் கூடாது என்பது மரபு. மரபுக்கும், அ.தி.மு.க. அரசுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறீர்களா? அவர்களுக்கு மரபாவது, மண்ணாங்கட்டியாவது? இருந்தாலும் முதல் அமைச்சர், பேரவையிலேயே படித்திருக்கிறாரே;  நான் விளக்கம் தராமல் இருக்கலாமா?    அம்மையார் ஜெயலலிதா நடத்திய தஞ்சை உலகத் தமிழ் மாநாட்டிலே பாடிய வாழ்த்துப் பாடலிலேயே  ஜெயலலிதா பெயரை  பல இடங்களிலே பாராட்டிக் குறிப்பிட்டே பாடப் பட்டது.   ஆனால் கழக அரசு நடத்திய கோவை மாநாட்டில்  தமிழ்த்தாய் வாழ்த்துப் பா என்னால் எழுதப்பட்டதே தவிர, அந்தப் பாடலில் என்னைப் பற்றிய பாராட்டு எதுவுமே கிடையாது.  தஞ்சையில் அம்மையார் ஜெயலலிதா நடத்திய மாநாட்டிற்காக வருகை தந்த  இலங்கைத் தமிழ் அறிஞர் கா. சிவத்தம்பி உட்பட பலர் மாநாட்டில் கலந்துகொள்ள  அனுமதிக்கப்படவே இல்லை.   இன்னும் சொல்லப்போனால் வெளிநாட்டுத் தமிழறிஞர்கள் எல்லாம்  விரட்டப்பட்டார்கள் என்று ஏடுகளிலேயே அப்போது செய்தி வந்தது.    ஆனால் கோவையில் கழக அரசு நடத்திய மாநாட்டிற்கு  ஜார்ஜ் ஹார்ட்,  அஸ்கோ பர்போலா,  வாசெக்,  கா. சிவத்தம்பி, உல்ரிக் நிக்லாத்,  கிரிகோரி ஜேம்ஸ், அலெக்சாண்டர் துதியான்கி,  ஆண்ட்ரீஸ் கத்தோலியஸ்,  சீன நாட்டைச் சேர்ந்த கலையரசி,  தாமஸ் லேஇல்லை.   இன்னும் சொல்லப்போனால் வெளிநாட்டுத் தமிழறிஞர்கள் எல்லாம்  விரட்டப்பட்டார்கள் என்று ஏடுகளிலேயே அப்போது செய்தி வந்தது.    ஆனால் கோவையில் கழக அரசு நடத்திய மாநாட்டிற்கு  ஜார்ஜ் ஹார்ட்,  அஸ்கோ பர்போலா,  வாசெக்,  கா. சிவத்தம்பி, உல்ரிக் நிக்லாத்,  கிரிகோரி ஜேம்ஸ், அலெக்சாண்டர் துதியான்கி,  ஆண்ட்ரீஸ் கத்தோலி யஸ்,  சீன நாட்டைச் சேர்ந்த கலையரசி,  தாமஸ் லேமன் ஆகிய வெளி நாட்டு அறிஞர்கள் எல்லாம்  வருகை தந்து பாராட்டினார்கள். முன்வரிசையிலே அமர்ந்திருந்தார் கள்.  ஆனால் ஜெயலலிதா, முன் வரிசையிலே என் குடும்பத்தினரும்,  தி.மு.க.வைச் சேர்ந்த “தலை சிறந்த தமிழறிஞர்களும்” அமர்ந்திருந்ததாக கிண்டல் செய்துள்ளார்.   என்னுடைய குடும்பத்தினர் முன் வரிசையிலே அமர்வதே பழித்துப் பேசப்படக்கூடிய பாவகரமான ஒன்றா? தி.மு.க.வில்  தமிழறிஞர்களே கிடையாதா?  அ.தி.மு.க.விலே தான் தலை சிறந்த தமிழறிஞர்கள் எல்லாம் இருக்கிறார் களா?   என்னுடைய குடும்பத்தினர் முன் வரிசை யிலே அமரலாமா என்று கேட்கின்ற ஜெயலலிதா  சட்டப்பேரவையிலே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு தன் உடன்பிறவாச் சகோதரியை அழைத்து வந்து மரபுக்கு மாறாக  துணை சபாநாயகர் அமர வேண்டிய இடத்திலே உட்கார வைத்தாரே,  அது எந்த வகை யிலே சரியானது? ஜெயலலிதாவே  பேரவைத் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டாரே;  அது எவ்வகை மரபு என்பதை ஜெயலலிதாதான் விளக்க வேண்டும்.

சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பேசிய ஜெயலலிதா பௌர் ணமி எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ,  அந்த நட்சத்திரத்தின் பெயர்தான் மாதத்தின் பெயராக அமைந்துள்ளது என்று கூறியதையொட்டி,  சித்திரை, கார்த்திகை மாதங்களைத் தவிர  மற்ற மாதங்கள் எல்லாம்  நட்சத்திரங்களின் பெயர்களில் இல்லையே  என்று நான் கேட்டிருந்தேன். அதற்கு பேரவையில் பதிலளித்த முதலமைச்சர் ஜெயலலிதா, அந்தப் பெயர்கள் எல்லாம் திரிந்து மாதங்களாகி விட்டன என்று வழக்கம்போல சமாளிக்கப் பார்த்திருக்கிறார். உதாரணமாக  விசாகம் என்பது வைகாசியாகவும்  -  அனுஷம் என்பது  ஆனியாகவும்  - பூராடம் என்பது ஆடியாகவும்  -  திருவோணம்  என்பது ஆவணியாகவும்  -   மிருகசீர்ஷம் என்பது  மார்கழியாகவும் -  பூசம் என்பது  தையாகவும் - மகம் என்பது  மாசி மாதமாகவும் - உத்திரம் என்பது பங்குனியாகவும் வார்த்தைகள் திரிந்து விட்டதாகச் சொல்லி யிருக்கிறார்.

தமிழறிஞர்கள்  இந்த மேதா விலாச விளக்கத்தை  ஏற்க  முடிந்தால் சரி!   சென்னப்பட்டி னம் சென்னை என்று மருவியதைப் போலத்தான் இந்தச் சொற்கள் எல்லாம் மாறிவிட்டன என்கிறார்.  நன்றாகவே  காதில் பூ சுற்ற முயன்றிருக்கிறார்! நான் மேலும் கேட்கிறேன்;  நட்சத்திரங்களின் பெயர்கள் எல்லாம்  திரிந்துதான் மாதங்களின் பெயர்களாக உள்ளன என்று கூறும் ஜெயலலிதா அவர்களே,  இந்தப் பெயர்கள் எல்லாம் திரிந்தன என்றால்,  நட்சத்திரங்களின் பெயர்களை மட்டும் ஏன் பழைய பெயரிலேயே உச்சரிக்கிறார்கள்?   நட்சத்திரங்களின் பெயர்களும் அல்லவா திரிந்து வழங்கப்பட்டிருக்க வேண்டும்?

தொல்காப்பியர் “திங்கள் முன்வரின் இக்கே சாரியை”  -  இகர ஈற்று மாதப் பெயர்கள்  (ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி, மாசி, பங்குனி) -  “இக்கு” சாரியை பெறும் என்றும்  “திங்களும்  நாளும்  முந்து கிளந்தன்ன”  ஐகார ஈற்று மாதப் பெயர்கள் (சித்திரை, கார்த்திகை, தை) முன் சொன்னவாறு  இக்கு சாரியை பெறும் என்றும் கூறியுள்ளாரே, அப்படியென் றால்  இந்தப் பெயர்கள் எல்லாம் தொல்காப்பியர் காலத்திலேயே திரிந்து விட்டன என்று ஜெயலலிதா சொல்கிறாரா?

அதுபோலவே சங்க இலக்கியங்களில் எல்லாம் மாதப் பெயர்கள் இடம் பெற்றுள்ளனவே, அப்படியென்றால்  சங்க இலக்கியங்களுக்கு முன்பாகவே ஜெயலலிதா சொல்வதைப்போல நட்சத்திரங்களின் பெயர்கள் எல்லாம் இத்தகைய மாதப் பெயர்களாக திரிந்து விட்டனவா?

ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டு மலரிலே  சிறுவை நச்சினார்க்கினியன் எழுதிய  ஒரு கட்டுரையை அம்மையார் ஜெயலலிதா  மேற்கோள் காட்டிப் பேசியிருந்த  காரணத்தால்,  அதே கட்டுரையின்  முதல் பகுதியில்,  அதே சிறுவை நச்சினார்க்கினியன்  தை மாதம்  பற்றி  எழுதியதை அப்படியே வரி பிறழாமல்  குறிப்பாக   “நாம் தைத் திங்களையே ஆண்டின்  முதல் திங்களாய்க் கணக்கெடுத்துச் செயற்படுத்து வோம்”  என்று அவர் எழுதியிருக்கிறார் என்று நான் பதிலாகத் தந்திருந்தேன்.  தற்போது அம்மையார் முன் பக்கத்தில் சிறுவை நச்சினார்க்கினியன்    என்று தெரிவித்துள்ள கருத்தைப் பற்றி தான் எதுவும் சொல்லவில்லை என்று அப்படியே புறமுதுகிட்டுள்ளார்.   நச்சினார்க்கினியன் பற்றி நூற்றாண்டு விழா மண்டபத்திலே முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டாரா இல்லையா? அதே நச்சினார்க் கினியன்  தைத் திங்களையே ஆண்டின் முதல் திங்களாகச் செயல்படுத்தலாம் என்று சொல்லியிருக்கிறாரா இல்லையா?  அதைத் தான்  தி.மு. கழக அரசு,  தமிழறிஞர்கள்  சொன்னதையெல்லாம் ஒப்புக்கொண்டு சட்டத்தைக் கொண்டு வருகிறோம் என்று கூறியதே தவிர தானாக இட்டுக்கட்டி எதையும் செய்துவிடவில்லை.

“வாழ்வியற் களஞ்சியம்”  என்ற  நூலில் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்றுதான் குறிப் பிடப்பட்டிருக்கிறதே தவிர, “தை பிறந்தால் புத்தாண்டு பிறக்கும்” என்று குறிப்பிடப்பட வில்லை என்று சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா!   என்ன செய்வது?   ஜெயலலிதா போன்றவர்கள் எல்லாம் முதலமைச்சராக வருவார்கள், அவர்களுக்கு இப்படியெல்லாம் சந்தேகம் வரும் என்பது அந்த நூலாசிரியருக்குத் தெரியவில்லை போலும்!   ஆனால் நான் இந்தப் பதிலை எழுதும்போது  கொட்டை எழுத்துக்களில், தமிழ் ஆண்டின் தொடக்கமே  தை  முதல்  நாள் என்றும்,  அதுவே விழாவாகச் சிறப்பித்துச் செய்யப்படு கின்றது என்றும் அந்த நூலிலே உள்ளது என்பதை எழுதிக் காட்டியிருக்கிறேன்.     இந்தப் பொருள் புரியாமல்  தை பிறந்தால் வழி பிறக்கும் என்றுதான் அதிலே உள்ளது என்று ஜெயலலிதா பேரவையில் உண்மைக்குப் புறம்பாகச் சொல்லியிருக்கிறார்.

அடுத்து  ஜெயலலிதா “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி” என்ற நூலினை  மேற் கோள் காட்டி,  அந்த நூலில்  தமிழாண்டின்  தொடக்க மாதம் தை என்று குறிப்பிட்டிருப்ப தாகக் கூறியிருக்கிறார்  திரு. கருணாநிதி,  அந்த நூலில்  113வது பக்கத்தில்  “இச்செய்தி  தமிழ் ஆண்டு எனும் நூலிலிருந்து தொகுக்கப்பட்டது” என்றிருப்பதை தனக்கு வசதியாக  திரு. கருணாநிதி மறைத்துவிட்டார்” என்று  பேரவையிலே  படித்துக் காட்டியிருக்கிறார்.    தமிழக அரசினால் -  தமிழக அரசின் செலவில் - முதலமைச்சர் ஜெயலலிதாவின் அணிந் துரையுடன் வெளியிடப்பட்ட  “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி” யிலேயே  தை என்பதற்குப் பொருளாக “தமிழாண்டின் தொடக்க மாதம்,  திருவள்ளுவராண்டின் தொடக்க மாதம்”  என்றெல்லாம் இருப்பதை நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.   அந்தச் செய்தி  தமிழ் ஆண்டு எனும் நூலிலிருந்து தொகுக்கப்பட்டது என்பதை நான் மறைத்துவிட்டேன் என்கிறார் ஜெயலலிதா.   சொற்பிறப்பியல் பேரகர முதலியில்  பொரு வெளியிடப்பட்ட  “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி” யிலேயே  தை என்பதற்குப் பொருளாக “தமிழாண்டின் தொடக்க மாதம்,  திருவள்ளுவ ராண்டின் தொடக்க மாதம்”  என்றெல்லாம் இருப்பதை நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.   அந்தச் செய்தி  தமிழ் ஆண்டு எனும் நூலிலிருந்து தொகுக்கப்பட்டது என்பதை நான் மறைத்துவிட்டேன் என்கிறார் ஜெயலலிதா.   சொற்பிறப்பியல் பேரகர முதலியில்  பொருள் கூறும்போது,  அதை எந்தப் புத்தகத்திலிருந்து  எடுத்தாண்டு இருக்கிறோம் என்பதை விளக்கியிருக்கிறார்கள். அதிலே என்ன தவறு? இன்னும் சொல்லப்போனால்,  அம்மையார்  அரை வாக்கியத்தைத்தான் எழுதியுள்ளார்.  முழு வாக்கியத்தையும் நான் கூறுகிறேன்.  அதாவது  “திருக்குறள் மணி புலவர் இறைக்குருவனார் இயற்றிய திருவள்ளுவர் ஆண்டு அல்லது  தமிழ் ஆண்டு எனும் நூலிலிருந்து இச்செய்தி தொகுக்கப் பட்டது”  என்று உள்ளது. ஆக  நான் கூறியதற்கு மற்றும் ஓர் ஆதாரமாக புலவர் இறைக் குருவனார் அவர்களும் தை மாதம்  தமிழாண்டின் தொடக்க மாதம் என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பதைத்தானே  அம்மையார் ஜெயலலிதா ஒப்புக் கொண்டிருக்கிறார்.   இறைக்குருவனார் போன்ற புலவர் பெருமக்கள் எல்லாம் தெரிவித்த யோசனையை ஏற்றுத்தான் இந்தச் சட்டத்தை நான் பிறப்பித்தேன் என்பது உறுதியாகிறதா; அல்லவா? இறைக்குருவனார் கருத்தை யேற்றுத்தானே அந்த நூலில் அந்தப் பொருளை இடம் பெறச் செய்திருக்கிறார்கள்.   அந்த நூலை முழுவதும் படித்து விட்டுத்தானே  முதலமைச்சர்  ஜெயலலிதா அம்மையார் அந்நூலுக்கு  அணிந்துரை கொடுத்தார்?  இப்போது அவரே அந்தக் கருத்தை மாற்றிக் கொள்ளலாமா?  தமிழ்நாட்டில் இருக்கின்ற  தமிழ் அறிஞர்களே, புலவர்களே,  சான்றோர்களே  அம்மையார் வைத்த வாதம் சரியா? நான் தருகின்ற விளக்கம் சரியா? என்பதை  சமன்  செய்து சீர்தூக்கும் கோல் போல் இருந்து நீங்களே  பதில்   கூறுங்கள்.

அடுத்து  முதலமைச்சர் ஜெயலலிதா மிகத் தெளிவாக ஒரு ஐயத்தைக் கேட்டிருக்கிறார்.   1963ஆம் ஆண்டு  நான் சட்டப்பேரவையில் உரையாற்றியதைக் குறிப்பிட்டு, அப்போதே திருவள்ளுவர் தை மாதத்தில்தான் பிறந்தார் என்று கூறி ஏன் விடுமுறை நாளாக அந்த நாளை அறிவிக்குமாறு கேட்கவில்லை என்று கேட்டுள்ளார்.   தமிழறிஞர்களும், புலவர்களும்  என்னிடம் 1963ஆம் ஆண்டுக்கு முன்பே இந்தக் கோரிக்கையைச் சொல்லியிருப்பார்களானால் நான் அப்போதே அதைக் கூறியிருக்க முடியும்.   அவர்களிடம் இதைக் கேட்டால், 1969ஆம் ஆண்டுக்குப் பிறகு அண்ணா மறைந்து நீ முதலமைச்சராக ஆவாய் என்று எங்களுக்கு எப்படித் தெரியும் என்பார்கள்? இந்தக் கேள்விக்குத்தான் நான் மயிலை கூட்டத்திலேயே தெளிவாக; “சூரியன் கிழக்கே உதிக்கிறது, மேற்கே மறைகிறது என்று முன்பு சொன்னார்கள்.  பிறகுதான் விஞ்ஞானிகள் அது தவறான கூற்று,  சூரியன் ஒரே இடத்தில் தான் இருக்கிறது;  பூமிதான் தன்னைத் தானே சுற்றிக்  கொண்டு, சூரியனையும் சுற்றுகிறது என்று கூறியபிறகு அதை ஏற்றுக் கொண்டோம். அதைப்போலவே  பூமி தட்டையாக உள்ளது என்று சொல்லப்பட்டது.  பிறகு விஞ்ஞானிகள் கண்டு பிடித்துச் சொன்ன பிறகு, பூமி உருண்டை என்பதை ஏற்றுக் கொண்டோம். ஏன் இதை முன்பே சொல்ல வில்லை என்றா கேட்க முடியும்?”  என்று குறிப்பிட்டேன்.

அதுமாத்திரமல்ல; இதிலே எந்த ஆண்டு முடிவெடுக்கப்பட்டது என்பது பிரச்சினையல்ல.    “தினமணி” நாளிதழில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்த திரு. சாமி தியாகராசன் எனக்குக் கூட கடிதம் ஒன்றை, 1921ஆம் ஆண்டில் மறைமலை அடிகள் தலைமையில் பச்சையப்பன் கல்லூரியில் பேசி முடிவெடுத்தார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லையே என்று எழுதியிருந்தார்.   எப்போது முடிவெடுத்தார்கள் என்பதைவிட என்ன முடிவெடுத்தார்கள் என்பதுதான் முக்கியம்.    முடிவெடுத்தவர்கள் யார் என்பதுதான் முக்கியம். அந்த அடிப்படையில்தான் கழக ஆட்சியில் முடிவெடுக் கப்பட்டது.  இதிலே உள்ள முக்கிய குறையே;  தமிழர்களுக்கு என்று முறையான வரலாறு இல்லை என்பதுதான்.  இந்தக் குறை என்னால் மாத்திரமல்ல; நம்முடைய தமிழறிஞர்கள் பலராலும், வரலாற்றுப் பேராசிரியர்களாலும்  உணரப்பட்டது.

பொறியாளர் வே. வரதராசன் அவர்கள் எழுதிய “தமிழர் நாகரீகம்” என்ற நூலில் “1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் தலைமையில் தமிழ் அறிஞர்களும், சான்றோர் களும், புலவர்களும் ஒன்று கூடி ஆராய்ந்து திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவதென முடிவெடுத்தனர்.  திருவள்ளு வர் காலம் கி.மு. 31  என்றும் அதையே திருவள்ளுவர் ஆண்டு தொடக்கம், தைத் திங்கள் முதல் நாள் (பொங்கல் திருநாளில்) எனவும் முடிவெடுத்தனர்” என்றுள்ளது.

1937ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் - தந்தை பெரியார், உமாமகேசு வரனார், பேராசிரியர் கா. சுப்பிரமணியன், தெ.பொ. மீனாட்சிசுந்தரனார்,  தமிழ்த்  தென்றல் திரு.வி.க., மறைமலை அடிகளார், பி.டி. ராஜன்,  ஆற்காடு ராமசாமி முதலியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை அழகிரி போன்றோர் கலந்து கொண்ட அவையில்  - தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம்  என்று நாவலர் சோமசுந்தர பாரதியார் தனது தலைமையுரையில் வலியுறுத்தியிருக்கிறார்.

9-5-1971இல் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் தலைமையில் திருச்சியில் நடைபெற்ற  தமிழகப் புலவர் குழுவின் முப்பதாம் கூட்டத்தில் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா என முடிவு செய்யப்பட்டது.

மேலும் கடந்த இரண்டு நாட்களாக நமது “விடுதலை” நாளிதழில் அமெரிக்காவில் நாசா விண் மையத்தில் பணியாற்றும் பிரபல விஞ்ஞானி முனைவர் நா. கணேசன் அவர்கள் எழுதிய நீண்ட கட்டுரையில்  இந்தப் பொருள் பற்றி விரிவான விளக்கங்களையும், எந்தெந்தப் புலவர்கள், தமிழறிஞர்கள் கடந்த காலத்தில்  தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று தெரிவித்தார்கள் என்றும் எழுதப்பட்டுள்ளது. இந்தப் புலவர் பெருமக்கள் எல்லாம் தெரிவித்த யோசனைகளின் அடிப்படையிலே தான் -  எந்த ஆண்டு அந்த யோசனை தெரிவிக்கப்பட்டது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்ற உண்மை அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதால்  2008இல் நான் இவற்றையெல்லாம் அறிந்து ஆய்ந்த பிறகு முடிவெடுத்து  அறிவித்தேன் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.   

ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா பேரவையில் விடுத்துள்ள அறிக்கையில்  நான் முறையாக எதையும் ஆய்வு செய்யாமல், தன்னிச்சையாக, தான்தோன்றித்தனமாக சட்டத்தை இயற்றினேன் என்று கூறியிருக் கிறார்.   தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு  என்பதை தற்போது சித்திரைத் திங்கள் என்று அம்மையார் மாற்றியிருப்பது தான் எதையும் ஆய்வு செய்யாமல் காழ்ப்புணர்வோடு செய்யப்பட்ட செயல். அவர்தான் தன்னிச்சையாக, தான்தோன்றித் தனமாக தமிழினத்தைத் திசை திருப்பும் வகையில் நடந்து கொண்டுள்ளார் என்பதைத்  தமிழக வரலாறு ஒருநாள்  நிச்சயமாக மெய்ப்பிக்கும்!  தமிழர்களின் சரியான அடையாளத்தை அழித்திட முற்படுவது அக்கிரமம்! அதற்குப் பொய்யான நியாயம் கற்பித்திட முயலுவதும்  புல்லர்கள் சிலர் புயம் தட்டிப் புறப்படுவதும் அராஜகம் என்பதை உண்மைத் தமிழர் விரைவில் உணர்ந்தே தீர்வர்!


அன்புள்ள,

    மு.க.







நன்றி: https://nganesan.blogspot.com/2012/06/tamil-new-year-debate-murasoli.html?m=1 

வெள்ளி, 29 மார்ச், 2024

புனித வெள்ளி துக்க வெள்ளியா?

 புனித வெள்ளி, துக்கம், தவம் மற்றும் உண்ணாவிரதம் ஆகியவற்றைக் கடைப்பிடிக்கும் ஒரு நாளாகும். இயேசு கிறிஸ்துவின் கடைசி இரவு உணவு நாளே பெரிய வியாழன் ஆகும். அன்றிலிருந்து ஈஸ்டர் வரை துக்கம் கடைப்பிடிக்கப்படும். ஈஸ்டர் ஞாயிறு அன்று மாலை பிரார்த்தனையுடன் துக்கம் நிறைவடையும். ஈஸ்டர் என்பது, இயேசு கிறிஸ்து மீண்டும் உயிர்த்தெழுந்த காலம் என்பதால் அந்த நாள் கொண்டாட்டத்திற்குரிய நாளாகக் கருதப்படுகிறது.

Good Friday is called Good Friday because, Christians believe, there is something very good about it: It is the anniversary, they say, of Jesus suffering and dying for their sins. “That terrible Friday has been called Good Friday because it led to the Resurrection of Jesus and his victory over death and sin and the celebration of Easter, the very pinnacle of Christian celebrations,” the Huffington Post suggests.

வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

குடும்ப விளக்கு ஐந்தாம் பகுதி

 பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய


"குடும்ப விளக்கு"


 ஐந்தாம் பகுதி

முதியோர் காதல்


அறுசீர் விருத்தம்

மூத்த பிள்ளை முதியவரோடு

வேடப்பன் தம்பி யான
      வெற்றிவேல், மனைவி யோடு
வேடப்பன் வாழ்ந் திருந்த
      வீட்டினில் வாழு கின்றான்,
வேடப்ப னோ,தன் தந்தை
      வீட்டினிற் குடும்பத் தோடு
பீடுற வாழு கின்றான்.
      பெற்றவர் முதுமை பெற்றார்!

முதியோருக்கு மருமகள் தொண்டு

வேடப்பன் மனைவி யான
      நகைமுத்து மிகவும் அன்பாய்
வேடப்பன் தந்தை தாய்க்கு
      வேண்டுவ தறிந்தே அன்னார்
வாடுதல் சிறிதும் இன்றி
      வாய்ப்புறத் தொண்டு செய்வாள்;
ஆடிய பம்ப ரங்கள்
      அல்லவா அம்மூத் தோர்கள்?

தலைக்கடை அறையில் மணவழகர் தங்கம்

தலைக்கடை அறைக்குள் அந்தத்
      தளர்மண வழகர் ஓர்பால்
இலக்கியம் படிப்பார்! இன்பத்
      துணைவியார் கேட்டி ருப்பார்!
உலர்ந்தபூங் கொடிபோல் தங்கத்(து)
      அம்மையார் ஒருபால் குந்திப்
பலஆய்வார்; துணைவர் கேட்பார்;
      துயிலுவார்; பழங்கா லத்தார்.

மணவழகர் உடல்நிலை

மணவழ கர்க்கு முன்போல்
      வன்மையோ தோளில் இல்லை!
துணைவிழி, ஒளியு ம் குன்றக்
      கண்ணாடித் துணையை வேண்டும்;
பணையுடல், சருகு! வாயிற்
      பல்லில்லை! மயிர்வெண் பட்டே!
உணவெலாம்! பாலின் கஞ்சி;
      உலவுதல் சிறிதே ஆகும்.

தங்கத்தம்மையார் உடல்நிலை

நன்னிலாக் கதிர்போல் கூந்தல்
      நரைத்தது. கொண்டை யிட்டு
முன்னிலா முகில்உண் டாற்போல்
      முகத்தொளி குறைய லானார்!
அன்புடல் அறத்தால் தோய்ந்த
      ஆயிரம் பிறைமூ தாட்டி
மன்னுசீர் அன்னாள் மெய்யோ
      வானவில் போற்கூ னிற்றே!

முதியோர் அறைக்கு மக்கள் பேரர் வந்து போவார்கள்

இருபெரு முதியோர் தம்மைத்
      தலைக்கடை அறைசு மந்து
பெரும்பேறு பெற்ற தன்றோ!
      பிள்ளைகள், அவர்ம னைமார்
வருவார்கள்; அறங்கேட் பார்கள்.
      மற்றுள பேர்த்தி பேரர்
வருவார்கள் அளவ ளாவி
      மணியோடு பள்ளி செல்வார்.

இரு முதியோர் நிரம்பிய உள்ளம்

மைந்தர்க்குக் கல்வி சேர்த்தோம்
      மகள்மார்க்கும் அவ்வா றேயாம்
எம்தக்க கடன்மு டித்தோம்
      இனிதாக வாழு கின்றோம்;
முந்துறச் சுற்றத் தார்க்கும்
      செய்வன முழுதும் செய்தோம்;
இந்தநாள் வரைக்கும் வாய்மை
      இம்மியும் மறந்த தில்லை.

நாட்டுக்கு நலம் செய்தோம்

இந்நாட்டின் நலனுக் காக
      நல்லறம் இயற்றி வந்தோம்.
எந்நாளும் பிறர்க்குத் தீமை
      எங்களால் நடந்த தில்லை.
சின்னதோர் நன்று செய்தார்
      திறம்மறந் தறியோம் என்றே
இன்னிசை பாடும் அன்னார்
      இரண்டுள்ளம் இன்பம் கொள்ளும்.

முதியோளே வாழ்கின்றாள் என் நெஞ்சில்

விதைத்திட்டேன் அவளின் நெஞ்சில்
      என்றனை! நேற்றோ? அல்ல;
இதற்குமுன் இளமை என்ப
      தென்றைக்கோ அன்றைக் கேநான்!
கதையாகிக் கனவாய்ப் போகும்
      நிகழ்ந்தவை; எனினும் அந்த
முதியோளே வாழு கின்றாள்
      என்நெஞ்சில் மூன்று போதும்.

இருக்கின்றாள் அது எனக்கின்பம்

புதுமலர் அல்ல; காய்ந்த
      புற்கட்டே அவள்உ டம்பு!
சதிராடும் நடையாள் அல்லள்
      தள்ளாடி விழும் மூதாட்டி!
மதியல்ல முகம்அ வட்கு
      வறள்நிலம்! குழிகள் கண்கள்!
எதுஎனக் கின்பம் நல்கும்?
      "இருக்கின்றாள்" என்ப தொன்றே!

நினைக்கின்றாள் நினைக்கின்றேன் நான்

இனிக்கின்ற தமிழை அன்னாள்
      இசைக்கின்ற ஆற்றல் இல்லை.
தனித்துள்ளேன் ஒருபால்! அன்னாள்
      தனித்துள்ளாள் மறுபு றத்தே!
எனைக்கண்டும், என்னைத் தொட்டும்
      பயில்கிலாள்; எனினும் என்னை
நினைக்கின்றாள், நினைக்கின் றேன்நான்;
      நிலைக்கின்ற தென்பால் இன்பம்!

அன்புள்ளம் காணுகின்றேன்
அகத்தின்பம் காணுகின்றேன்

என்பும்நற் றோலும் வற்ற,
      ஊன்றுகோல் இழுக்கி வீழத்
தன்புது மேனி, காலத்
      தாக்கினால் குலைய லானாள்.
என்முது விழிகா ணற்கும்
      இயலாதே! எனினும் அன்னாள்
அன்புள்ளம் காணு கின்றேன்!
      அகத்தி ன்பம் காணு கின்றேன்!

பேரர் அம்மாயி என்றழைப்பர்
அது கேட்பேன் இன்பம் செய்யும்

செம்மா துளைபி ளந்து
      சிதறிடும் சிரிப்பால் என்னை
அம்மாது களிக்கச் செய்வாள்
      அதுவெலாம் அந்நாள்! இந்நாள்
அம்மணி நகைப்பும் கேளேன்
      ஆயினும் பேரர் ஓர்கால்
"அம்மாயீ" என்பார்! கேட்பேன்
      அமிழ்தினில் விழும்என் நெஞ்சம்!

அன்னை என்றழைப்பர் மக்கள்
இன்புறும் என்றன் நெஞ்சம்


இன்னிழை பூண்டி ருப்பாள்
      அத்தான்என் றழைப்பாள் என்னை
நன்மொழி ஒன்று சொல்வாள்
      நான்இசை யாழே கேட்பேன்!
அன்னவை அந்நாள்! இந்நாள்
      அன்னவள் தன்னை நோக்கி,
'அன்னாய்' என் றழைப்பார் மக்கள்
      அதுகேட்பேன்; இன்பம் கொள்வேன்!

அவள் உள்ள உலகம்
எனக்கு உவப்பூட்டும்


உயிர்ப்பினை நிலைநி றுத்தும்
      நன்மழை; உலக நூலைச்
செயிர்ப்பற நீத்தார்* செய்வார்;
      செவ்வேஅவ் வறநூல் தன்னை
முயற்சியிற் காப்பார் மன்னர்.
      எனக்கென்ன இனி?அம் மூதாட்டி
உயிர்வாழ்வாள் ஆத லற்றான்
      உவப்பூட்டும் எனக்கிவ் வையம்!

(*நீத்தார் - துறந்தார்)

அவர் வாழ்வது
அவள்மேல் வைத்த காதல்


வாழாது வாழ்ந்து மூத்த
      மணவழ குள்ளம் இ·தே!
ஆழாழிப் புனல்அ சைவை,
      ஆர்ப்பினை எண்ணி டாது
வீழுற அதனில் வீழ்த்தும்
      இருப்பாணி போல்அ வள்மேல்
காழுற மனத்தில் வைத்த
      காதலால் வாழு கின்றார்!

என் நெஞ்ச மெத்தையில் துயிலுகின்றான்

காம்பரிந் திட்ட பூவைக்
      கட்டிலில் பரப்பி, மேலே
பாம்புரி போலும் மேன்மைப்
      பட்டுடை விரித்துப் போட்டால்,
தீம்பாலைப் பருகி அன்பன்
      சிறக்கவே துயில்வான் இன்றும்
மேம்பாட்டிற் குறைவோ? நெஞ்ச
      மெத்தையில் துயிலு கின்றான்.

நெஞ்சக் காட்டில் உலவும் மான்

பாங்குற மணியும் பொன்னும்
      பதித்தபாண் டியன்தேர் போல
ஈங்கிந்தத் தாழ்வா ரத்தில்
      எழிலுற உலவா நிற்பான்;
ஏங்குமா றில்லை இன்றும்
      என்னிரு கண்நி கர்த்தோன்
நீங்காமான் போல்என் நெஞ்சக்
      காட்டினில் உலவு கின்றான்.

என் நெஞ்சில் தேன்மழை அவன்

மெய்யுற வாய்சு வைக்க
      விழி,அழ குண்ண, மூக்கு
வெய்யசந் தனத்தோள் மோப்ப,
      விளைதமிழ் காது கேட்க,
ஐயன்பால் புலன்கள் ஐந்தால்
      அமிழ்தள்ள வேண்டும்! இந்நாள்
பெய்கின்றான் என்நெஞ் சத்தில்
      தேன்மழை, பிரித லின்றி!

அவனைச் சுமக்க மனம் ஓயாது

அறம்செய்த கையும் ஓயும்
      மக்களை அன்பால் தூக்கிப்
புறம்போன காலும் ஓயும்!
      செந்தமிழ்ப் புலவர் சொல்லின்
திறம்கேட்ட காதும் ஓயும்!
      செயல்கண்ட கண்ணும் ஓயும்!
மறவனைச் சுமக்கும் என்றன்
      மனமட்டும் ஓய்த லில்லை.

அயலவன் கண்படாமல் காத்து வந்தேன்

வெயில்பட்டால் உருகிப் போகும்
      மெழுகினால் இயன்ற பாவை!
பெயும்மழை பட்ட போதே
      கரையும்கற் கண்டின் பேழை!
புயல்பட்டால் நிலைகொள் ளாத
      பூம்பொழில்! என்ம ணாளன்
அயலவள் கண்பட் டால்சீர்
      அழியும்என் றன்பால் காத்தேன்.

தப்பொன்றும் இன்றி என் தமிழனைக் காத்தேன்

தொப்பென்ற ஓசை கேட்டால்
      துயருறும் என்றும், சாற்றில்
உப்பொன்று குறைந்தால் உண்ணல்
      ஒழியுமே என்றும், ஒன்றை
ஒப்பெனில் ஒப்பா விட்டால்
      உடைபடும் உள்ளம் என்றும்
தப்பொன்றும் இன்றி என்றன்
      தமிழனை அன்பாற் காத்தேன்.

எத்தீமை நேருமோ? என்று நினைப்பாள் மூதாட்டி

தற்காத்துத் தற்கொண் டானைத்
      தான்காத்துத் தகைமை சான்ற
சொற்காத்துச் சோர்வி லாளே
      பெண்என்று வள்ளு வர்தாம்
முற்சொன்ன படியே என்றன்
      முத்தினைக் காத்து வந்தேன்.
எத்தீமை மனக்கு றைச்சல்
      எய்துமோ எனநி னைப்பேன்!

எனக்குக் கொடுப்பதைத் தாத்தாவுக்குக் கொடு

அகவல்

பாட்டியே, சிறுமலைப் பழங்கள் இந்தா
என்று பேரன் ஈய வந்தான்.
தம்பியே உன்றன் தாத்தா வுக்குக்
கொடுபோ! என்று கூறிக்
கொடுக்கப் போவதைக் கூர்ந்துநோக் குவளே!

பொரிமாத் தந்தார் உண்டாள்
நாணிப்போனார் தம்மிடம்

வலக்கால் குத்திட்டும், இடதுகால் மடித்தும்,
உட்கார்ந் திலக்கியம் உற்று நோக்கிடும்
மணவழ கர்தம் மனையாள் நினைவாய்க்
கணுக்கால் கையூன் றியபடி ஊன்றுகோல்
துணையடு தம்,தலை யணைக்கீழ் வைத்த
பொதிந்த பொரிமாப் பொட்டணம் தூக்கி
எழுந்தார். விழிப்புடன் விழுந்து விடாமே
நடந்து,தம் துணைவியை நண்ணினார்.அப்போது
மருமகள் நகைமுத்து வந்து, "மாமா
என்ன வேண்டும்? ஏன் வந்தீர்கள்?
என்னிடம் கூறினால் யான்செய் யேனா?"
என்றாள். பொரிமா இடையில் மறைத்தும்
தன்துணை மேலுள்ள அன்பை மறைத்தும்
ஒன்று மில்லை ஒன்று மில்லை
என்று சொல்லொணாத் துன்பம் எய்தினார்!
மருகி போனாள். கிழவர் துணைவியின்
அருகுபோய்ப் பொரிமா அவளிடம் நீட்டி
உண்ணென்று வேண்டி நின்றார்!
உண்டாள்; நாணிப் பிரிந்தார் உவந்தே!

அவள் தனிச்செல்ல
மணவழகர் பொறார்


தங்கம் கொல்லைக்குத் தனியே செல்வதை
மணவழகு நோக்க மனது பொறாராய்
மருகியை அழைப்பார்; மருகி வந்து,தன்
துணைவிக்குத் துணைசெயக் கண்டால்
தணிவார் தமது தணியா நெஞ்சமே.

அவனுக்குத் தொண்டு செய்தலே அவளுக்கின்பம்

மணவழ கர்தாம் மறுபுறம் நகர்ந்தால்
அணிமையிற் சென்றே அன்பன் படுக்கையைத்
தட்டி, விரிப்பு மாற்றித் தலையணை
உறைமாற் றுவாள் அவள்; மணந்தநாள்
பெறுவதைப் பார்க்கிலும் பெறுவாள் இன்பமே.

முன்னாள் நடந்ததை மூதாட்டி இந்நாள் நகைமுத்திடம் இயம்புவாள்

ஒருநாள் மாலைப் பெருமூ தாட்டி
நடந்த ஒன்றை நகைமுத் தாளிடம்
மிகுமகிழ்ச் சியுடன் விளம்ப லுற்றாள்;
செம்பில் எண்ணெயும் சீயக் காயும்
ஏந்தி மணாளரை எழுந்திரும் என்றேன்.
"உனக்கேன் தொல்லை உன்றன் பணிச்சியை
எண்ணெய் தேய்க்க அனுப்புக" என்றார்.
"நானே அப்பணி நடத்துவேன்" என்றேன்.
"மானே, மெல்லிடை வஞ்சியே, நீபோய்க்
கிளியுடன் பேசியும் ஒளியாழ் மிழற்றியும்
களியுடன் இருப்பாய் கவலைஏன்?" என்றார்.
அறவே மறுத்ததால் அறைக்குச் சென்றேன்.
பின்னர்ஓர் பணிச்சி என்மணா ளர்க்கே
எண்ணெய் இட்டுத் தண்சீ யக்காய்
தேய்த்து வெந்நீர் சாய்த்துத் தலைமுடி
சிக்கறுத் திருந்தாள். திடும்என அங்கே
என்றன் மாமியார், "என்னன்பு மகனே,
ஏதுன் மனைவி இப்ப ணிச்சியை
உனக்கு முழுக்காட்ட ஒப்பிய"தென்றார்.
அதற்கென் மணாளர், "ஆம்அவள் என்னை
எண்ணெய்இட் டுக்கொள எழுந்திரும் என்றாள்.
ஒப்பேன் என்றேன். உடனே உட்சென்று
இப்ப ணிச்சியை அனுப்பினாள்" என்றார்.
அப்படி யாஎன் றன்புறு மாமியார்
இப்புறம் திரும்பி எதிரில் நோக்க,
முக்கா டிட்டே முகம்மறைத் தபடி
சிக்கறுத் திருந்த சிறிய பணிச்சியைத்
"தங்கத் திடத்தில் சந்தனம் கொடுத்தே
இங்கே அனுப்படி" என்றார். பணிச்சி
அகலும் போது முக்கா டகன்றது.
தங்கமே பணிச்சி என்பதை
அங்கென் மாமியார், அன்பர்கண் டனரே!

மணிமொழியாரிடம் மணவழகர்

மனத்தில் மாசு வராமையே அறம்எனும்
வள்ளுவர் வாய்மொழி மறந்தறி யேன்நான்;
அறம்எனல் இல்லறம் துறவறம் ஆக
இருவகை என்பதை ஒருகாலும் ஒப்பேன்;
அறம்எனப் பட்டதே இல்வாழ்க் கைஎன்றார்
வள்ளுவர் ஆதலால்! உள்ளம் கவர்ந்த
ஒருத்தி உளத்தை உரிமையாய்க் கொண்டேன்.
அதுதான் மணமென அறிஞர் கூடிப்
புதுவாழ்வு பெறுகெனப் புகன்றனர் வாழ்த்தே.
இடும்பை தீர்ப்பவள் என்மனை! அவள்என்
குடும்ப விளக்கு! வேறேது கூறுவேன்?
என்பால் அன்பை நிரம்ப ஏற்றவள்
நன்மக்க ளீன்று நலமுறக் காத்தாள்;
நவையறு கல்வியால் நன்மக் கள்தமை
அவையினில் முதன்மை அடையச் செய்தேன்;
அறவழி யாலே நிறைபொருள் ஆக்கினேன்.
நெஞ்சினில் உற்றிடும் நிலைவேறு பாட்டால்
நொடிதொறும் நொடிதொறும் நூறுநூ றாயிரம்
இறப்பும் பிறப்பும் எய்தும் அன்றோ?
எய்தவே இன்பம் ஏகலும் மீளலும்
அடையும் அன்றோ? அவ்வா றின்றி
அலைகடல் சூழ்நில வுலகில் இந்நாள்
நிலைத்த இன்பம் பெற்றதென் நெஞ்சம்!"
எனமண வழகர் இயம்பிய அளவில்,
"இதற்குமுன் நிகழ்ந்த இன்ப நிகழ்ச்சிகள்
உண்டெனில் அவற்றில் ஒன்று கூறுக!"
எனமணி மொழியார் இனிது கேட்டார்.
நன்றென அழகர் நவில லானார்:

இளமையில் நடந்த இன்ப நிகழ்ச்சி

"படித்தும் கேட்டும், பாடியும் ஆடியும்
இருந்த நண்பர் பிரிந்து போகவே,
என்றன் அறையில் யான்தனிந் திருந்தேன்.
நிலாமுகத் தாள்என் நெஞ்சைத் தொட்டாள்.
தனிமையை நெஞ்சு தாங்க வில்லை.
தனித்திருக் கின்றிரோ தக்க நண்பருடன்
இனித்திருக் கின்றிரோ என்றுபார்த் துவர
என்னை அனுப்பினாள் என்றன் தலைவி
என்றாள் தோழி என்னெதிர் வந்து!
போய்ச்சொல் என்றேன், போனாள்; மீண்டும்
வந்து, தலைவனே, வஞ்சி சோறுகறி
ஆக்கு கின்றாள். அடுப்பில் சோறு
கொதிக்கின்ற தெ"ன்று கூறினாள். "இங்கே
குளிர்கின்றதோ" எனக் கூறி அனுப்பினேன்.
"இறக்கும் நேரம்" என்றாள் வந்து!
"வாழும் நேரமோ இங்கு மட்டும்?"
என்றேன். சென்றாள். உடனே என்றன்
இனிய அமிழ்து தனிஎனை அடைந்தாள்.
"அத்தான் பொறுப்பீர் அடுப்பில் வேலை
முடித்தோடி வருவேன்" என்று மொழிந்தாள்.
"தோழிபார்க் கட்டும் சோறாக் கும் பணி"
என்றேன். அதற்கவள், என்முகம் தாங்கி
"தலைவர் விருப்பம் தலைவி அறிவாள்;
பொறுப்பிலாத் தோழி அறிவ துண்டோ?"
என்றாள். "மாமியார் இல்லையா?" என்றேன்.
"அந்தோ அந்தோ?" என்றுதன் அங்கையால்
தன்வாய் மூடித் "தளர்ந்த கிழவியை
அடுப்பில் விட்டுத் தடித்த மருமகள்
கொழுந னோடு கொஞ்சினாள் என்று
வையம் இகழுமே" என்று, வஞ்சி
தொடக்க மருத்துவ மாகமுத் தமொன்று
கொடுத்துக் குடுகுடென்று கடிதே ஓடிச்
சமையல் முடித்துத் தமிழோ
அமிழ்தோ எனச்சோ றிட்டழைத் தாளே!

மணிமொழியார் நிலைத்த இன்பமாவ தெப்படி என்றார்

"உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடிநினைந் தெண்ணுவ" என்று
மூத்தாள் ஔவை மொழிந்த வண்ணம்
என்றும் மக்களின் எண்ணம் பலவாம்;
எண்ணம் தோற்பதும் ஈடே றுவதும்
ஆகும். அதனால், அகத்தின் நிலைமை
நல்லதும் ஆகும்; நலிவதும் ஆகும்.
இவற்றையே நொடிதோறும் ஏற்படு கின்ற
ஆயிரம் ஆயிரம் பிறப்பிறப் பென்றீர்.
இவைகளே நிலையா இன்பதுன் பங்கள்!
"நிலைத்த இன்பம் நேர்ந்த தென்றீரே
வழுத்துவீர் அதை"என மணிமொழி கேட்டார்;
அதுகேட் டழகர் அறிவிக் கின்றார்;
"செம்மலர் பறிக்கச் செல்வதும் இலைநான்!
சேறும் பூசித் திரும்பலும் இல்லை.
பற்றில்லை; தீமை உற்றதும் இல்லை.
தீமையில் லாவிடம் இன்பம் திகழும்,
என்ன என்னிடம் மீதி என்றால்.
ஒன்றே! ஒன்றே! அதன்பெயர் உயிர்ப்பாம்.
அவ்வு யிர்ப்போ அன்பி ருப்பதால்
இருக்கின் றதுவென இயம்புவர் வள்ளுவர்;
'அன்பின் வழிய துயிர்நிலை' அறிக.
என்றன் அன்புக் குரியவர் எவரெனில்
மனைவி, மக்கள், பேரர், உறவினர்.
ஆயினும் மனைவி,என் அன்புக் கருகில்
இருப்பவள், என்மேல் அன்புவைத்(து)
இருப்பவள்" என்றார் மணவ ழகரே

மணவழகர் இரவு நன்றாகத் தூங்கினையோ என்றார்

அறுசீர் விருத்தம்

சேவல்கூ விற்று; வானம்
      சிரித்தது; நூற்றைந் தாண்டு
மேவிய அழகர் கண்கள்
      விரிந்தன! கிழவி யாரின்
தூவிழி மலர்ந்த! ஆங்கே
      துணைவனார் துணையை நண்ணிப்
"பாவையே தூக்கப் பொய்கை
      படிந்தாயோ இரவில்" என்றார்.

அயர்ந்து தூங்கியதாகத் தங்கம் சாற்றினாள்

குடித்தோமே பாலின் கஞ்சி;
      குறட்பாவின் இரண்டு செய்யுள்
படித்தோமே, அவற்றி னுக்கு
      விரிவுரை பலவும் ஆய்ந்து
முடித்தோமே! மொணமொ ணென்று
      மணிப்போறி சரியாய்ப் பத்தும்
குறித்தது துயின்றேன்;இப்போ(து)
      அழைத்தீர்கள் விழித்தேன் என்றாள்.

தம் தூக்க நலம் சொல்வார் தள்ளாத கிழவர்

நிறையாண்டு நூறும் பெற்ற
      நெடுமூத்தாள் இதனைக் கூற
குறைவற்ற மகிழ்ச்சி யாலே
      அழகரும் கூறு கின்றார்:
நிறுத்தினோம் நெடிய பேச்சை
      பொறி,மணி பத்தே என்று
குறித்தது துயின்றேன் சேவல்
      கூவவே எழுந்தேன் என்றார்.

கிழவர் உடனிருப்பதில் கிழவிக்கு நாணம்

புதுக்காலை; குளிர்ந்த காலைப்
      போதிலே உனைநெ ருங்கி
இதுபேசும் பேறு பெற்றேன்
      என்றனன் கிழவோன்! அன்னாள்
எதிர்வந்த அமிழ்தே, அன்பே
      யான்பெற்ற இன்பம் போதும்
அதோ நகைமுத்து வந்தாள்
      நமைக் காண்பாள் அகல்வீர் என்றாள்.

நூற்றைந்து ஆண்டுவரை நீவிர் வாழக் காரணம் என்ன?

எண்சீர் விருத்தம்

மற்றொருநாள் காலையிலே மணிமொழியார் வந்தார்;
      மணவழகர் அன்போடு வரவேற்புச் சொன்னார்.
"இற்றைநாள் நூற்றைந்தா ண்டாயின உமக்கே
      இத்தனைநாள் உயிர்வாழக் காரணந்தான் என்ன?
சற்றதனை உரைத்திடுக!" எனக்கேட்டார் மொழியார்.
      "எந்தைதாய் நல்லொழுக்க முடையவர்கள்; என்னைக்
கற்றவரில் ஒருவன்என ஆக்கிவைத்தார்; நானும்,
      கருத்தினிலும் சேர்த்தறியேன் தீயழுக்கம் கண்டீர்.

நன்மனைவியுடையார் எல்லாம் உடையார்

இவையன்றி நானடைந்த மனைவியோ என்றால்
      எனக்கினியாள்! என்னிரண்டு கண்களே போல்வாள்;
நவையில்லாள்; நான்வாழத் தன்னுயிரும் நல்கும்
      நாட்டத்தாள்; அவளாலே என்வாழ்க்கை காத்தேன்;
அவளாலே நல்லொழுக்கம் தவறாமை காத்தேன்;
      அவளாலே என்குடும்பம் மாசிலதாய்ச் சற்றும்
கவலையிலா தாயிற்று; நன்மனைவி உடையார்!
      கடலுலகப் பெரும் புகழும் வாழ்நாளும் உடையார்!

உலக அமைப்புக்கு இலேசு வழி

இவ்வுலகில் அமைதியினை நிலைநாட்ட வேண்டின்
      இலேசுவழி ஒன்றுண்டு பெண்களைஆ டவர்கள்
எவ்வகையும் தாழ்த்துவதை விட்டொழிக்க வேண்டும்.
      தாய்மையினை இழித்துரைக்கும் நூலும்ஒரு நூலா?
செவ்வையுற மகளிர்க்குக் கல்விநலம் தேடல்
      செயற்பால யாவினுமே முதன்மைஎனக் கொண்டே
அவ்வகையே செயல்வேண்டும்! அறிவுமனை யாளால்
      அமைதியுல குண்டாகும் என்ன இதில் ஐயம்!

மகளிர் ஒழுக்கம் பூண்டால் மருத்துவ நிலையமே வேண்டாம்

மகளிரெல்லாம் கல்வியறி வொழுக்கமுள ராயின்
      மருத்துவமே வேண்டாவாம்; பிணிமூப்பு வாரா.
மகளிரெல்லாம் அரசியலைக் கைப்பற்றி ஆண்டால்
      மாநிலத்தில் போரில்லை; சாக்காடும் இல்லை;
துகளில்லா ஒருசிறிய உலகுண்டு கேட்பீர்
      தொல்லையில்லா அவ்வுலகம் யான்வாழும் இல்லம்.
பகையில்லை. அங்கின்மை இல்லை,பிணி இல்லை
      பழியில்லை, என்துணைவி அரசாண்ட தாலே".

உங்கட்குப்பின் உங்கள் குடும்பம் எப்படி நடக்கும்?

என்றுரைத்தார் மணவழகர்; இதைஎல்லாம் கேட்ட
      எழிலான மணிமொழியார்" உங்கட்குப் பின்னர்
நன்றுகுடித் தனம்நடக்கக் கூடுமோ?" என்றார்
      "நான்நல்லன், என்மனைவி நனிநல்லள்; நாங்கள்
என்றும்மன நலம்உடையோம். ஆதலினால் அன்றோ,
      எம்மக்கள் நல்லவர்கள்; எம்மக்கள் கொண்ட
பொன்னுறவைப் பெற்றோரும் நல்லர்நனி நல்லர்
      பொலியும்இனி யும்குடும்பம்" என்றுரைத்தார் அழகர்.

தள்ளாத கிழப்பருவத்தில் இன்பம் எய்துதல் உண்டு

"கையிலே வலிவில்லை காலில்வலி வில்லை;
      கண்ணில்ஒளி இல்லைநாச் சுவையறிய வில்லை;
மெய்யூறும் இல்லைஒலி காதறிய வில்லை;
      விலாஎலும்பின் மேற்போர்த்த தோலுமில்லை; நீவிர்
செய்வதொரு செயலில்லை; இன்பமுறல் ஏது?
      தெரிவிப்பீர்" என்றுமணி மொழியார்தாம் கேட்கத்
துய்யமுது மணவழகர் உடல்குலுங்கச் சிரித்துச்
      சொல்லலுற்றார், முதியோளும் நகர்ந்துவந்துட் கார்ந்தாள்.

இன்புறும் இரண்டு மனப்பறவைகள்

"வாய்மூக்குக் கண்காது மெய்வாடி னாலும்
      மனைவிக்கும் என்றனுக்கும் மனமுண்டு கண்டீர்
தூய்மையுறும் அவ்விரண்டு மனம்கொள்ளும் இன்பம்
      துடுக்குடைய இளையோரும் படைத்திடுதல் இல்லை.
ஓய்வதில்லை மணிச்சிறகு! விண்ணேறி, நிலாவாம்
      ஒழுகமிழ்து முழுதுண்டு பழகுதமிழ் பாடிச்
சாய்வின்றிச் சறுக்கின்றி ஒன்றையன்று பற்றிச்
      சலிக்காதின் பங்கொள்ளும் இரண்டுமனப் பறவை.

இருமனம் இரு மயில்கள்;
தேன்சிட்டுகள்; கிளிகள்; அமிழ்தின் கூட்டு

"அருவியெலாம் தென்பாங்கு பாடுகின்ற பொதிகை
      அசைதென்றல் குளிர்வீசும் சந்தனச்சோ லைக்குள்
திரிகின்ற சோடிமயில் யாமிரண்டு பேரும்;
      தெவிட்டாது காதல்நுகர் செந்தேன்சிட் டுக்கள்!
பெருந்தென்னங் கீற்றினிலே இருந்தாடும் கிளிகள்!
      பெண்இவளோ ஆண்நானோ எனவேறுவேறாய்ப்
பிரித்துணர மாட்டாது பிசைந்தகூட் டமிழ்து!"
      பேசினார் இவ்வாறு; கூசினள் மூதாட்டி.

அவள் தூங்கவில்லை இரவுமணி பத்தாகியும்

அறுசீர் விருத்தம்

மாநில மக்கள் எல்லாம்
      தூங்கும்நள் ளிரவில், தங்கம்
ஏனின்னும் தூங்க வில்லை?
      இருநுனி தொடவ ளைக்கக்
கூனல்வில் போலே மெய்யும்
      கூனிக்கி டந்த வண்ணம்
ஆனதோ மணிபத் தென்றாள்
      மணிப்பொறி அடிக்கக் கேட்டே.

அவனிடம் நகர்ந்து செல்லுகிறாள்

"அவன்துயின் றானோ?" என்னும்
      ஐயத்தால் தான்தூங் காமல்
கவலைகொள் வாளை எங்கும்
      காண்கிலோம் இவளை அல்லால்!
துவள்கின்ற மெய்யால் தன்கைத்
      துடுப்பினால் தரைது ழாவித்
தவழ்கின்றாள் தன்ம ணாளன்
      படுக்கையைத் தாவித் தாவி.

ஒரு தலையணையில் அருகருகு கிடந்தார்கள்

"வருகின்றா யோடி தங்கம்
      வா"என்றோர் ஒலிகேட் கின்றாள்.
சருகொன்று காற்றால் வந்து
      வீழ்ந்தது போலே தங்கப்
பெரியாளும் பெரியான் அண்டைத்
      தலையணை மீது சாய்ந்தாள்.
அருகரு கிருவர்; மிக்க
      அன்புண்டு; செயலே இல்லை!

இருவர் களிப்பும் இயம்பு மாறில்லை

ஒளிதரும் அறைவி ளக்கும்!
      ஒளிக்கப்பால் இவர்கள் வாழ்வார்!
வெளியினை இருளும் கௌவும்
      இருட்கப்பால் விளங்கு கின்றார்!
எளிதாகத் தென்றல் வீசும்
      என்பயன்? அவர்அங் கில்லை
களித்தன மனம்இ ரண்டும்
      கழறுமா றில்லை அ·தே.

மனவுலகில் இருவர் பேச்சுக்கள்

இருமனம் அறிவு வானில்
      முழங்கின இவ்வா றாக
"பெரியோளே என்நி னைப்பால்
      தூங்காது பிழைசெய் கின்றாய்"
"உரியானே, எனையே எண்ணி
      உறங்காது வருந்து கின்றாய்"
"பெருந்தொல்லை தூக்க மின்மை"
      "நற்றூக்கம் பெரிய இன்பம்!"

என் நினைவைவிட்டுத் தூங்குக

அரைநாளின் தூக்க மேஇவ்
      வாறின்பம் அளிக்கு மானால்
ஒருநாளின் முழுதும் தூங்கல்
      ஒப்பிலா இன்பம் அன்றோ?
"அரிவையே என்றன் நெஞ்சை
      அள்ளாதே தனியே தூங்கே."
"உரியானே என்ம னத்தைப்
      பறிக்காதே உறக்கங் கொள்வாய்"

நெடிய தூக்கம்
நீடிய இன்பம்

தூங்கினார் கனவும் அற்ற
      தூக்கநல் லுலகில்! பின்னர்
ஏங்கினார் விழித்த தாலே!
      இன்பமே விரும்ப லானார்!
தூங்குவோம்! நிலைத்த இன்பம்
      துய்ப்போம்நாம் என்றார்! நன்றே
தூங்குகின் றார்நல் லின்பம்
      தோய்கின்றார் வாழ்கின் றாரால்!

முற்றும்.


குடும்ப விளக்கு நான்காம் பகுதி

 பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய

"குடும்ப விளக்கு"

 நான்காம் பகுதி

மக்கட் பேறு

அறுசீர் விருத்தம்

"நகைமுத்து வேடப் பன்தாம்
      நன்மக்கள் பெற்று வாழ்க!
நிகழுநாள் எல்லாம் இன்பம்
      நிலைபெற! நிறைநாட் செல்வர்
புகழ்மிக்கு வாழ்க வாழ்க!"
எனத் தமிழ்ப் புலவர் வாழ்த்த
நகைமுத்து நல்வே டப்பன்
      மணம்பெற்று வாழ்கின் றார்கள்.

*மிகுசீர்த்தித் தமிழ வேந்தின்
      அரசியல் அலுவற் கெல்லாம்
தகுசீர்த்தித் தலைவ னான
      வள்ளுவன் அருளிச் செய்த
தொகுசீர்த்தி அறநூ லின்கண்
      சொல்லிய தலைவி மற்றும்
தகுசீர்த்தித் தலைவன் போலே
      மணம் பெற்றின்புற் றிருந்தார்!

*"மிகுசீர்த்தி........வள்ளுவன்" என்றது
எதற்கு எனில் வள்ளூவன் என்பது
அந் நாளில் அரசியல் அலுவலகத்தின்
தலைவனுக்குப் பெயர் என்பதைக்
குறிப்பதாகும்.

நாளெலாம் இன்ப நாளே!
      நகைமுத்தைத் தழுவும் வேடன்
தோளெலாம் இன்பத் தோளே:
      துணைவியும் துணைவன் தானும்
கேளெலாம் கிளைஞர் எல்லாம்
      போற்றிட இல்ல றத்தின்
தாளெலாம் தளர்தல் இன்றி
      நடத்துவர் தழையு மாறே!

பெற்றவர் தேடி வைத்த
      பெருஞ்செல்வம் உண்டென் றாலும்,
மற்றும்தான் தேட வேண்டும்
      மாந்தர்சீர் அதுவே அன்றோ?
கற்றவன் வேடப் பன்தான்
      கடல்போலும் பலச ரக்கு
விற்றிடும் கடையும் வைத்தான்
      வாழ்நாளை வீண்நாள் ஆக்கான்!

இனித்திட இனித்தி டத்தான்
      எழில்நகை முத்தி னோடு
தனித்தறம் நடாத்து தற்குத்
      தனியில்லம் கொண்டான்! அன்னோன்
நினைப்பெல்லாம் இருநி னைப்பாம்:
      கடைநினைப் பொன்று; நல்ல
கனிப்பேச்சுக் கிள்ளை வாழும்
      தன்வீட்டின் கருத்தொன் றாகும்.

மூன்றாந்தெ ருவில மைந்த
      பழவீட்டில் அன்பு மிக்க
ஈன்றவர் வாழு கின்றார்.
      இடையிடை அவர்பாற் சென்றே
தேன்தந்த மொழியாள் தானும்
      செம்மலும் வணங்கி மீள்வார்;
ஈன்றவர் தாமும் வந்தே
      இவர்திறம் கண்டு செல்வார்.

நல்லமா வரசும், ஓர்நாள்
      நவில்மலர்க் குழலாள் தானும்
வில்லிய னூரி னின்று
      மெல்லியல் நகைமுத் தைத்தம்
செல்வியை மகளைப் பார்க்கத்
      திடும்என்று வந்து சேர்ந்தார்.
அல்லிப்பூ விழியாள் தங்கம்
      வேடப்பன் அன்னை வந்தாள்.

இங்கிது கேள்விப் பட்டே
      எதிர்வீட்டுப் பொன்னி வந்தாள்.
பொங்கிய மகிழ்ச்சி யாலே
      நகைமுத்தாள் புதிதாய்ச் செய்த
செங்கதிர் கண்டு நாணும்
      தேங்குழல், எதிரில் இட்டே
மங்காத சுவைநீர் காய்ச்ச
      மடைப்பள்ளி நோக்கிச் சென்றாள்.

அனைவரும் அன்பால் உண்டார்.
      மலர்க்குழல், பொன்னி தன்னைத்
தனியாக அழைத்துக் காதில்
      சாற்றினாள் ஏதோ ஒன்றை!
நனைமலர்ப் பொன்னி ஓடி
      நகைமுத்தைக் கலந்தாள்! வந்தாள்!
'கனிதானா? காயா?' என்று
      மலர்க்குழல் அவளைக் கேட்டாள்.

முத்துப்பல் காட்டிப் பொன்னி
      மூவிரல் காட்டி விட்டுப்
புத்தெழில் நகைமுத் தின்பால்
      போய்விட்டாள்; இதனை எண்ணிப்
பொத்தென மகிழ்ச்சி என்னும்
      பொய்கையில் வீழ்ந்தாள் அன்னை;
அத்தூய செய்தி கேட்ட
      தங்கமும் அகம்பூ ரித்தாள்.

மலர்க்குழல் தன்ம ணாளன்
      மாவர சிடத்தில் செய்தி
புலப்பட விரல்மூன் றாலே
      புகன்றனள். அவனும் கேட்டு
மலைபோலும் மகிழ்ச்சி தாங்க
      மாட்டாமல் ஆடல் உற்றான்!
இலாதவர் தமிழ்ச்சீர் பெற்றார்
      எனஇருந் தார்எல் லோரும்.

'நகைமுத்து நலிவு றாமல்
      நன்றுகாத் திடுங்கள்' என்று
மிகத்தாழ்ந்து கேட்டுக் கொண்டாள்
      மலர்க்குழல்! 'மெய்யாய் என்றன்
அகத்தினில் வைத்துக் காப்பேன்
      அஞ்சாதீர்' என்றாள் தங்கம்.
நகைமுத்துச் சுவைநீர் தந்தாள்.
      நன்றெனப் பருகி னார்கள்.

மாலையாய் விட்ட தென்றும்
      மாடுகன் றுகளைப் பார்க்க
வேலைஆள் இல்லை என்றும்
      விளம்பியே வண்டி ஏற
மூலைவா ராமல் மாடு
      முடுகிற்றே! அவர்கள் நெஞ்சோ
மேலோடல் இன்றிப் பெண்ணின்
      வீட்டையே நோக்கிப் பாயும்.

"இன்றைக்கே நம்வீட் டுக்குத்
      திரும்பிட ஏன்நி னைத்தாய்?"
என்றுமா வரசு கேட்டான்;
      "எனக்கான பெண்டிர்க் கெல்லாம்
நன்றான இந்தச் செய்தி
      நவிலத்தான் அத்தான்" என்றாள்.
"என்தோழ ரிடம்சொல் லத்தான்
      யான்வந்தேன்" என்றான் அன்னோன்.

தங்கமோ மகனை விட்டுத்
      தன்வீடு வந்து சேர்ந்தாள்;
அங்குநாற் காலி ஒன்றில்
      அமர்ந்தனள்; உடன்எ ழுந்தாள்
எங்கந்தச் சாவி என்றாள்?
      ஈந்தனர் இருந்த மக்கள்
செங்கையால் திறந்தாள் தோட்டச்
      சிறியதோர் அறையை நாடி.

எழில்மண வழகன் வந்தான்
      தங்கத்தின் எதிரில் நின்றான்.
"விழிபுகா இருட்ட றைக்குள்
      என்னதான் வேலை? இந்தக்
கழிவடைக் குப்பைக் குள்ளே
      கையிட்டுக் கொள்ளு வானேன்?
மொழியாயோ விடை எனக்கு?
      மொய்குழால்" என்று கேட்டான்.

அறையினில் அடுக்கப் பட்ட
      எருமூட்டை அகற்றி, அண்டை
நிறைந்திட்ட விறகைத் தள்ளி
      நெடுங்கோணி மூட்டை தள்ளிக்
குறுகிய இடத்தி னின்று
      குந்தாணி நீக்கி அந்தத்
துறையிலே கண்டாள் பிள்ளைத்
      தொட்டிலை எடுக்க லானாள்.

"நகைமுத்தாள்" என்று கூறி
      நடுமூன்று விரலைக் காட்டித்
"துகள்போகத் துடைக்க வேண்டும்
      தொட்டிலை" என்றாள் தங்கம்.
மகிழ்ந்தனன்! எனினும், 'பிள்ளை
      மருமகள் பெறவோ இன்னும்
தொகைஏழு திங்கள் வேண்டும்
      இதற்குள்ஏன் தொட்டில்?" என்றான்.

"பேரவா வளர்க்கும் என்பார்
      பேதமை! அதுபோல் நீயும்
பேரனைக் காண லான
      பேரவாக் கொண்ட தாலே,
சீருற மூன்று திங்கட்
      கருக்கொண்ட செய்தி கேட்டுக்
காரிருள் தன்னில் இன்றே
      தொட்டிலைக் கண்டெ டுத்தாய்".

எனமண வழகன் சொன்னான்
      ஏந்திழை சிரித்து நாணி
இனிதான தொட்டி லைப்போய்
      ஒருபுறம் எடுத்துச் சார்த்தித்
தனதன்பு மணாள னுக்குச்
      சாப்பாடு போடச் சென்றாள்;
தனிமண வழகன் வந்து
      தாழ்வாரத் தேஅ மர்ந்தான்.

உணவையும் மறந்து விட்டான்;
      தெருப்பக்கத் தறையின் உள்ளே
பணப்பெட்டி தனிலே வெள்ளிப்
      பாலடை தேடு தற்குத்
துணிந்தனன்; அறையில் சென்றான்.
      பெட்டியைத் தூக்கி வந்து
கணகண வெனத்தி றந்தான்.
      கைப்பெட்டி தனைஎ டுத்தான்.

அதனையும் திறந்தான் உள்ளே
      ஐந்தாறு துணி பிரித்து
முதுமையாற் சிதைந்து போன
      மூக்குப்பா லடையைக் கண்டான்.
எதிர்வந்து நின்றாள் தங்கம்.
      "பார்த்தாயா இதனை!" என்றான்.
மதிநிகர் முகத்தாள் "யானும்
      மணாளரும் ஒன்றே" என்றாள்.

நகைமுத்தாள் மூன்று திங்கள்
      கருவுற்ற நல்ல செய்தி
வகைவகை யாகப் பேசி
      மகிழ்ச்சியில் இரவைப் போக்கிப்
பகல்கண்டார். மாம னாரும்
      நகைமுத்தைப் பார்த்து மீண்டார்.
அகல்வாளோ தங்கம்? அங்கே
      நகைமுத்தோ டிருக்க லானாள்.

"சூடேறிற் றாவெந்நீர் தான்?
      விளவிடு சுருக்காய்" என்று
வேடப்பன் சொன்னான், அன்று
      விடிந்ததும் நகைமுத் தின்பால்!
கூடத்தில் இருந்த தங்கம்
      "கூடாது கூடா தப்பா
வாடவே லைவாங் காதே
      வஞ்சிமுன் போலே இல்லை".

எனக்கூறித் தானே சென்று
      வெந்நீரை எடுத்து வந்தாள்;
மனமலர் சிறிது வாட
      விழிமலர் அவன்மேல் ஓட
நனைமலர்க் குழலாள் ஆன
      நகைமுத்தாள் தன்ம ணாளன்
இனிதாகக் குளிப்ப தற்கே
      இயன்றவா றுதவச் சென்றாள்.

"நகைமுத்து முன்போல் இல்லை
      நலியச்செய் யாதே" என்று
புகன்றனர் அன்னை யார். ஏன்
      புகன்றனர்? எனத்த னக்குள்
புகன்றனன். எனினும் தன் கைப்
      புறத்துள்ள நகைமுத் தாளைப்
புகல்என்றும் கேட்டா னில்லை
      பொழுதோடக் கேட்போம் என்றே.

பொழுதோட, இரவு வந்து
      பொலிந்தது மணிவி ளக்கால்!
எழுதோவி யத்தாள் அன்பால்
      எதிர்பார்த்தாள்! கடையைக் கட்டி
முழுதாவ லோடு சாவி
      முடிப்புடன் வேடன் வந்தான்;
தொழுதோடி 'வருக' என்ற
      சொல்லோடு வரவேற் றாள்பெண்.

பிள்ளையின் வரவு கண்டு
      சிலசில பேசித் தங்கம்
உள்ளதன் நகைமுத் தின்பால்
      சொல்லென உரைத்துச் சென்றாள்;
"கிள்ளையே! நகைமுத் தாளே!
      கிட்டவா; என்றன் தாயார்
துள்ளிப்போய் தாமே வெந்நீர்
      தூக்கிவந் தார்கள் அன்றோ?

"நகைமுத்து முன்போல் இல்லை
      நலிவுசெய் யாதே, என்று
புகன்றனர் அன்றோ?" என்றான்
" பொன்னே அ·தென்ன?" என்று
மிக ஆவலோடு கேட்டான்.
      தன்மூன்று விரல்கள் காட்டி
முகநாணிக் கீழ்க்கண் ணாலே
      முன்நின்றான் முகத்தைப் பார்த்தாள்.

'கருவுற்றுத் திங்கள் மூன்று
      கண்டாயா?' எனவே டப்பன்
அருகோடித் தழுவிப் "பெண்ணே
      அறிவிப்பாய்" என்றான்; "ஆம் ஆம்
இருநூறு தடவை கேட்பீர்!"
      எனக்கூறி அடுக்க ளைக்குப்
பரிமாறச் சென்றாள்! காளை
      மகிழ்ச்சியிற் பதைத்தி ருந்தான்.

நான்சிறு பையன் அல்லேன்
      நான்தந்தை! என்ம னைவி
தான்மூன்று திங்க ளாகக்
      கருவுற்றாள்! தாய்மை உற்றாள்!
வான்பெற்ற நிலவைப் போல
      வந்தொரு குழந்தை என்னைத்
தேன்பெற்ற வாயால் அப்பா
      எனத்தாவும் திங்கள் ஏழில்.

பெற்றதாய் மடியின் மீது
      யாழ்கிடப் பதுபோல் பிள்ளை
உற்றிடும்; அம்மா என்னும்;
      அவ்விசை, அமிழ்தின் ஊற்றாம்!
கற்றார்போல் அக்கு ழந்தை
      கண்டுதாய் கைப்பு றத்தில்
நற்றமிழ்ப் பால் குடிக்க
      நகர்த்தும்தன் சிவந்த வாயை.

அணைத்துக்கொண் டிடுவாள் அன்னை
      அமிழ்தச்செம் பினையும், தன்பால்
இணைஇதழ் குவிய உண்ணும்
      இளங்குழந் தையையும் சேர்த்தே
அணிமேலா டையினால் மூடி
      அவள்இடை அசைப்பாள்! அன்பின்
பணிகாண்பேன் வையம் பெற்ற
      பயனைக்கண் ணாரக் காண்பேன்.

எனப்பல வாறு வேடன்
      எண்ணத்தின் கள்அ ருந்தி
மனைநல்லாள் அழைக்கத் தேறி
      உணவுண்ண மகிழ்ந்து சென்றான்;
இனிதான உணவு நாவுக்
      கினிதாகும்; கருக்கொண் டாளின்
புனைமேனி காணு கின்றான்.
      புத்துயிர் காணு கின்றான்.

அகவல்

மகள்கரு வுற்ற மகிழ்ச்சிச் செய்தியை
மாவரசு தானும் மலர்க்குழல் தானும்
வில்லிய னூரில் சொல்லா இடம்எது?
நகைமுத்துக் கருவுற்ற நல்ல செய்தியை
அறிந்தோர் அனைவரும் வந்து வந்து
தத்தம் மகிழ்ச்சியும் வாழ்த்தும் தந்து
சென்றார்; அவர்கள் திண்ணையில் தன்னுடன்
அதையே பேசி அமர்ந்திரா ததுதான்
மாவர சுக்கு வருத்தம் தந்தது!

தெருவிற் செல்லும் மகளிரை அழைத்துக்
"கருவுற் றாள்என் கண்ணிகர் பெண்ணாள்;
காணச் சென்றேன் காலையில்; கண்டே
உடனே திரும்பினேன்; உடல்வலிக் கின்றதே
என்ன செய்யலாம்" என்பாள் மலர்க்குழல்;
வேலைக் காரிகள் வேறெது பேசினும்
பெண்கரு வுற்ற பெருமையே பேசுவாள்.
"இந்த வூட்டில் முந்திமுந் திஒரு
பேரன் பொறக்கப் போறான். ஆமாம்
இஞ்சி மொளைக்கப் போவுது. நல்ல
எலுமிச் சம்பழம் பழுக்க இருக்குது.
நல்ல வூட்டில் எல்லாம் பொறக்கும்
குடுகுடு குடுகுடு குடுகு டுகுடும்"
என்று குடுகுடுப்பைக் காரன் இயம்பினான்!
வழக்கம் போல்அவன் வந்து சொன் னாலும்
மலர்க்குழ லுக்கும் மாவர சுக்கும்
ஏற்பட்ட மகிழ்ச்சி இயம்பவோ முடியும்?
அழுக்குப் பழந்துணி அவன்கேட்டு நின்றான்.
புதுவேட்டி தந்து, 'போய்நா டோறும்
இதுபோல் சொல்லி இதுபோல் கொள்"என்று
மாவரசு சொன்னான்; மலர்க்குழல் சொன்னாள்;
எழில்வே டப்பனை ஈன்றோர் தாமும்
நகைமுத் தாளின் நற்றந்தை தாயாரும்
கருவுற் றாள்மேல் கண்ணும் கருத்துமாய்
நாளினை மகிழ்ச்சியோடு நகர்த்தி வந்தனர்.
பாளைச் சிரிப்பினாள் பசும்பொற் பலாப்பழம்
மடியிற் சுமந்தபடி, "பத்தாம் திங்களின்"
முடிமேல் தன்மலர் அடியை வைத்தாள்.
வில்லிய னூரை விட்டுத் தன்னருஞ்
செல்வி யுடனிருந்து மலர்க்குழல் செய்யும்
உதவி உடலுக்குயிரே போன்றது!
மாவரசு நாடோறும் வந்து வந்து
நாவர சர்களின் நல்ல நூற்களும்
ஓவியத் திரட்டும், உயர்சிற் றுணவும்,
வாங்கித் தந்து, மகள்நிலை கண்டு
போவான், உள்ளத்தைப் புதுவையில் நிறுத்தி;
நீடு மணிப்பொறி ஆடுங் காய்போல்
தங்கம், தன்வீடு தன்மகன் வீடு
நாடுவாள் மீள்வாள் மணிக்குநாற் பதுமுறை.
அயலவர் நாடும் அன்னை நாடும்
இனிப்பில் இருநூறு வகைபடச் செய்த
அமிழ்தின் கட்டிகள், அரும்பொருட் பெட்டிகள்
வாங்கி வந்து மணவழ கன்தான்
"இந்தா குழந்தாய்" என்றுநகை முத்துக்கு
ஈந்து போவான், இன்னமும் வாங்கிட!

கறந்தபால் நிறந்திகழ் கவின்உடை பூண்ட
மருத்து வச்சி நாடொறும் வருவாள்.
நகைமுத் தாளின் உடல்நிலை நாடித்
தகுமுறை கூறித் தாழ்வா ரத்தில்
இருந்தபடி இருப்பது கூடா தென்றும்
உலாவுக என்றும் உரைத்துச் செல்கையில்,
வீட்டின் வெளிப்புறத்து நின்று வேடப்பன்,
"நகைமுத் துடம்பு நன்று தானே?
கருவுயிர்ப் பதில்ஒரு குறை யிராதே?
சொல்லுக அம்மா, சொல்லுக அம்மா!"
என்று கேட்பான்; துன்பமே இராதென
நாலைந் துமுறை நவின்று செல்வாள்.

அயலகத்து மயில்நிகர் அன்புத் தோழிமார்
குயில்மொழி நகைமுத்தைக் கூடி மகிழ்ந்து
கழங்கு, பல்லாங் குழிகள் ஆடியும்
எழும்புகழ்த் திருக்குறள் இன்பம் தோய்ந்தும்
கொல்லை முல்லை மல்லிகை பறித்தும்
பறித்தவை நாரிற் பாங்குறத் தொடுத்தும்
தொடுத்தவை திருத்திய குழலிற் சூடியும்
பாடியும் கதைகள் பகர்ந்தும் நாழிகை
ஓடிடச் செய்வார் ஒவ்வொரு நாளும்;
நன்மகளான நகைமுத் துக்குப்
பிறக்க இருப்பது பெண்ணா ஆணா
என்பதை அறிய எண்ணி மலர்க்குழல்
தன்னெதிர் உற்ற தக்கார் ஒருவர்பால்
என்ன குழந்தை பிறக்கும் என்று
வீட்டு நடையில் மெல்லக் கேட்டாள்;
பெரியவர் "பெண்ணே பிறந்து விட்டால்
எங்கே போடுவீர்?" என்று கேட்டார்.
"மண்ணில் பட்டால் மாசுபடும் என்றுஎன்
கண்ணில் வைத்தே காப்பேன் ஐயா"
என்று மலர்க்குழல் இயம்பி நின்றாள்.
"ஆணே பிறந்தால் அதைஎன் செய்வீர்?"
என்று கேட்டார் இன்சொற் பெரியவர்.
"ஆணையும் அப்படி ஐயா" என்று
மலர்க்குழல் மகிழ்ந்து கூறி நின்றாள்.
"பெண்ணே ஆயினும் ஆணே ஆயினும்
பிறத்தல் உறுதி" என்றார் பெரியவர்.
இதற்குள் உள்ளே இருந்தோர் வந்தே
குறிகேட்ட மலர்க்குழல் கொள்கை மறுத்துச்
சிரித்தனர்! வீட்டினுள் சென்றார்.
வருத்தியது இடுப்புவலி நகைமுத் தையே.

எண்சீர் விருத்தம்

பறந்ததுபார் பொறிவண்டி சிட்டுப் போலப்
      பழக்கமுள மருத்துவச்சி தனைஅ ழைக்க!
உறவின்முறைப் பெண்டிர்பலர் அறைவீட் டுக்குள்
      ஒண்டொடியாள் நகைமுத்தைச் சூழ்ந்தி ருந்தார்;
நிறைந்திருந்தார் ஆடவர்கள் தெருத்திண் ணைமேல்;
      நிலவுபோல் உடைபுனைந்த மருத்து வச்சி
பொறிவண்டி விட்டிறங்கி வீட்டுட் சென்றாள்;
      புதியதோர் அமைதிகுடி கொண்ட தங்கே.

பேச்சற்ற நிலையினிலே உள்ளி ருந்து
      பெண்குழந்தை! பெண்குழந்தை!! என்ப தான
பேச்சொன்று கேட்கின்றார் ஆட வர்கள்;
      பெய்என்ற உலகுக்குப் பெய்த வான்போல்
கீச்சென்று குழந்தையழும் ஒலியும் கேட்டார்;
      கிளிமொழியாள் மலர்க்குழலும் வெளியில் வந்து
"மூச்சோடும் அழகோடும் பெண்கு ழந்தை
      முத்துப்போல் பிறந்ததுதாய் நலமே" என்றாள்.

அச்சமென்னும் பெருங்கடலைத் தாண்டி ஆங்கோர்
      அகமகிழ்ச்சிக் கரைசேர்ந்தார்! கடையி னின்று
மிச்சமுறக் கற்கண்டு கொண்டு வந்தார்;
      வெற்றிலையும் களிப்பாக்கும் சுமந்து வந்தார்;
மெச்சிடுவா ழைப்பழத்தின் குலைகொ ணர்ந்தார்;
      மேன்மேலும் வந்தார்க்கும் வழங்கி னார்கள்;
பச்சிளங் குழந்தைக்கும் தாய்க்கும் வாழ்த்துப்
      பாடினார் மகளிரெல்லாம் தாழ்வா ரத்தில்.

அறுசீர் விருத்தம்

ஈரைந்து திங்க ளாக
      அகட்டினில் இட்டுச் சேர்த்த
சீரேந்து செல்வந் தன்னை
      அண்டையிற் சேர்த்துத் தாய்க்கு
நேரேமெல் லாடை போர்த்து
      நிலாமுகம் வானை, நோக்க
ஓராங்கும் அசையா வண்ணம்
      கிடத்தியே ஒருபாற் சென்றார்.

சென்றஅம் மகளிர் தம்மில்
      தங்கம்போய்த் தன்ம கன்பால்
"உன்மகள் தன்னைக் காண
      வா" என அழைக்க லானாள்;
ஒன்றும்சொல் லாம லேஅவ்
      வேடப்பன் உள்ளே சென்றான்;
தன்துணை கிடக்கை கண்டான்;
      தாய்மையின் சிறப்புக் கண்டான்.

இளகிய பொன்உ ருக்கின்
      சிற்றுடல், இருநீ லக்கண்,
ஒளிபடும் பவழச் செவ்வாய்
      ஒருபிடிக் கரும்பின் கைகால்
அளிதமிழ் உயிர்பெற் றங்கே
      அழகொடும் அசையும் பச்சைக்
கிளியினைக் காணப் பெற்றான்
      கிடைப்பருஞ் செல்வம் பெற்றான்.

"நகைமுத்து நலமா" என்றான்
      "நலம்அத்தான்" என்று சொன்னாள்.
"துகளிலா அன்பே! மிக்க
      துன்பமுற் றாயோ!" என்றான்.
"மிகுதுன்பம் இன்பத் திற்கு
      வேர்" என்றாள். களைப்பில் ஆழ்ந்தாள்.
"தகாதினிப் பேசல், சற்றே
      தனிமைகொள்" என்றான்; சென்றான்.

சிற்சில நாட்கள் செல்ல
      நகைமுத்து நலிவு தீர்ந்தாள்;
வெற்பினில் எயில்சேர்ந் தாற்போல்
      மேனியில் ஒளியும் பெற்றாள்.
கற்பாரின் நிலையே யன்றிக்
      கற்பிப்பார் நிலையும் உற்றாள்!
அற்றைநாள் மகளும் ஆகி
      அன்னையும் ஆனாள் இந்நாள்.

பெயர்சூட்டு விழாந டத்த
      அறிவினிற் பெரியோர் மற்றும்,
அயலவர் உறவி னோர்கள்
      அனைவர்க்கும் அழைப்புத் தந்தார்.
வெயில்முகன் வேடப் பன்தன்
      வீடெலாம் ஆட வர்கள்
கயல்விழி மடவார் கூட்டம்
      கண்கொள்ளாக் காட்சி யேஆம்.

ஓவியப் பாயின் மீதில்
      உட்கார்ந்தோர் மின்இ யக்கத்
தூவிசி றிக்காற் றோடு
      சூழ்பன்னீர் மணமும் பெற்றார்.
மூவேந்தர் காத்த இன்ப
      முத்தமிழ் இசையுங் கேட்டார்.
மேவும்அவ் வவையை நோக்கி
      வேடப்பன் வேண்டு கின்றான்.

"தோழியீர் தோழன் மாரே,
      வணக்கம்!நற் றூய்த மிழ்தான்
வாழிய! அழைப்பை எண்ணி
      வந்தனிர்; உங்கள் அன்பு
வாழிய! இந்த நன்றி
      என்றும்யாம் மறப்போம் அல்லோம்.
ஏழையோம் பெற்ற பெண்ணுக்கு
      இடுபெயர் விழாநன் றாக!

இவ்விழாத் தலைமை தாங்க
      இங்குள்ள அறிவின் மூத்தோர்
செவ்விதின் ஒப்பி எங்கள்
      செல்விக்குப் பெயர் கொடுக்க!
எவ்வெவர் வாழ்த்தும் நல்க!
      இறைஞ்சினோம்" என்ற மர்ந்தான்.
"அவ்வாறே ஆக" என்றே
      நகைமுத்தும் உரைத் தமர்ந்தாள்.

அங்குள்ள அறிவின் மூத்தோர்
      அவையிடைத் தலைமை பெற்றே,
"இங்குநம் நகைமுத் தம்மை
      வேடப்பர் இளம்பெண் ணுக்கே
உங்களின் சார்பில் நான்தான்
      ஒருபெயர் குறிப்பேன்" என்றார்.
"அங்ஙனே ஆக" என்றார்
      அவையிடை இருந்தோர் யாரும்.

அப்போது நகைமுத் தம்மை
      அணிமணி ஆடை பூண்டு
முப்பாங்கு மக்கள் காண
      முத்துத்தேர் வந்த தென்னக்
கைப்புறம் குழந்தை என்னும்
      கவின்தங்கப் படிவம் தாங்கி
ஒப்புறு தோழி மார்கள்
      உடன்வர அவைக்கண் வந்தாள்.

கரும்பட்டு மென்மயிர் போய்க்
      காற்றொடும் ஆடக் கண்டோர்.
விரும்பட்டும் என்று சின்ன
      மின்நெற்றிக் கீழ்இ ரண்டு
சுரும்பிட்ட கருங்கண் காட்டி
      எறும்புகொள் தொடர்ச்சி போலும்
அரும்பிட்ட புருவம் காட்டி
      அழகுகாட் டும்கு ழந்தை!

எள்ளிளஞ் சிறிய பூவை
      எடுத்துவைத் திட்ட மூக்கும்
வள்ளச்செந் தாம ரைப்பூ
      இதழ்கவிந் திருந்த வாய்ப்பின்
அள் இரண் டும்சி வப்பு
      மாதுளை சிதறச் சிந்தும்
ஒள்ளிய மணிச்சி ரிப்பும்
      உவப்பூட்டும் பெண்கு ழந்தை.

அன்னையி னிடத்தி னின்று
      வேடப்பன், அருமைச் செல்வி
தன்னைத்தன் கையால் வாங்கித்
      தமிழ்ப்பெரி யார்பால் தந்தான்.
"என்அன்பே இளம்பி ராட்டி"
      எனவாங்கி அணைத்து, மற்றும்
முன்னுள்ளார் தமக்கும் காட்டி,
      முறைப்பட மொழிய லுற்றார்;

"வானின்று மண்ணில் வந்து
      மக்களைக் காக்கும்; அ·து
தேன்அன்று; கரும்பும் அன்று;
      செந்நெல்லின் சோறும் அன்று;
ஆன்அருள் பாலும் இன்றே;
      அதன்பெயர் அமிழ்தாம்! தொன்மை
ஆனபே ருலகைக் காக்க
      அமிழ்வதால் மழைய· தேயாம்.

தமிழரின் தமிழ்க்கு ழந்தை
      தமிழ்ப்பெயர் பெறுதல் வேண்டும்.
அமையுறும் மழைபோல் நன்மை
      ஆக்கும்இக் குழந்தைக் கிந்நாள்
அமிழ்தென்று பெயர் அமைப்போம்
      அமிழ்தம்மை நாளும் வாழ்க!
தமிழ்வாழ்க! தமிழர் வாழ்க!"
      என்றனர் அறிவில் மூத்தார்.

"அமிழ்தம்மை வாழ்க!" என்றே
      அனைவரும் வாழ்த்தி னார்கள்.
அமிழ்தம்மைப் பெயர்ப்பு னைந்த
      அன்புறு குழந்தை தன்னை
எமதன்பே எனவே டப்பன்
      இருகையால் வாங்கி யேதன்
கமழ்குழல் நகைமுத் தின்பால்
      காட்டினான் கையால் அள்ளி.

அமிழ்தம்மா எனஅ ணைத்தே
      அழகிக்கு முத்தம் தந்தாள்!
தமிழர்க்கு நன்றி கூறி
      வெற்றிலை பாக்குத் தந்து
தமிழ்பாடி இசைந டத்தி
      வேடப்பன் தன்கை கூப்ப
"அமிழ்தம்மை நாளும் வாழ்க",
      எனச்சென்றார் அனைவர் தாமும்.

இருகாலைச் சப்ப ளித்தே
      இடதுகைப் புறத்தில், அன்பு
பெருகிடத் தலையை ஏந்திப்
      பின்உடல் மடியில் தாங்கி
மருவியே தன்பாற் செப்பு
      வாய்சேர்த்து மகள்மு கத்தில்
ஒருமுத்து நகைமுத் தீந்தாள்.
      உடம்பெல்லாம் மகிழ்முத் தானாள்.

அமிழ்துண்ணும் குழந்தை வாயின்
      அழகிதழ் குவிந்தி ருக்கும்
கமழ்செந்தா மரைய ரும்பு
      கதிர்காண அவிழ்மு னைபோல்!
தமிழ்நலம் மனத்தால் உண்பார்
      விழிஒன்றிற் சார்வ தில்லை;
அமிழ்துண்ணும் குழந்தை கண்ணும்
      அயல்நோக்கல் சிறிதும் இல்லை.

உண்பது பிறகா கட்டும்
      உலகைப்பார்க் கின்றேன் என்று
துண்ணென முகம்தி ருப்பித்
      தூயதாய் முகமே காணும்;
கண்மகிழ் திடும்செவ் வாயின்
      கடைமகிழ்ந் திடும்;இவ் வையம்
உண்மையாய்த் தன்தாய் என்றே
      உணர்வதால் உளம்பூ ரிக்கும்.

விரிவாழைப் பூவின் கொப்பூழ்
      வெள்விழி யின்மேல் ஓடும்
கருவண்டு விழியால் சொல்லும்
      கதைஎன்ன என்றாள் அன்னை;
சிரித்தொரு பாட்டுச் சொல்லித்
      திரும்பவும் மார்ப ணைந்து
பொருட்சிறப் பையும்வி ளக்கும்
      பொன்னான கைக்கு ழந்தை.


"மண்ணாண்ட மூவேந் தர்தம்
      மரபினார் என்ம ணாளர்
பெண்ணாளுக் களித்த இன்பப்
      பயனாய்இப் பெருவை யத்தார்
உள்நாண அழகு மிக்க
      ஒருமகள் பெற்றேன்" என்றே,
எண்ணியே அன்னை தன்'பால்'
      உண்பாளின் முகத்தைப் பார்த்தாள்.

மணிவிழி இமையால் மூடி
      உறக்கத்தில் நகைம றைத்துத்
தணிவுறும் தமிழர் யாழ்போல்
      தன்மடி மேல்அ மைந்த
அணியுடல் குழந்தை கண்டாள்
      அன்புடன் இருகை ஏந்திப்
பணியாளர் செய்த தொட்டிற்
      பஞ்சணை வளர்த்த லானாள்.

ப·றொடை வெண்பா

தன்மகளின் பெண்ணைத் தனிப்பெருமைப் பேர்த்திதனை
இன்ப அமிழ்தை இணையற்ற ஓவியத்தைத்
தங்கம் எடுத்துத் தலையுச்சி தான்மோந்து
மங்கா மகிழ்ச்சியினால் மார்போ டணைத்திருந்தாள்!

அங்கந்த வேளையிலே அன்பு மகள்பெற்ற
திங்கட் பிறையைச் செழுமணியைப் பேர்த்திதனைக்
காண மலர்க்குழலும் வந்தாள் கடிதினிலே!
பாட்டிமார் வந்தார் பழம்பாட்டுப் பாடிடுவார்

கேட்டு மகிழலாம் என்று கிளிப்பேச்சுத்
தோழிமார் தாழ்வாரத் தொட்டிலண்டை வந்தமர்ந்தார்.
உள்ளவர்கள் எல்லாரும் தங்கத்தின் கைப்புறத்தில்
உள்ள குழந்தை யுடன்கொஞ்ச முந்துவதைத்

தங்கம் அறிந்தாள் தனதிடத்தில் உள்ள ஒரு
பொங்கும் அமிழ்தைப் பொன்னான தொட்டிலிலே
இட்டாள் நகைமுத்தை இன்னிசையால் தாலாட்ட
விட்டாள் விளைந்த தொருபாட்டு.

தாயின் தாலாட்டு

பொன்னே மணியே புதுமலரே செந்தேனே
மின்னே கருவானில் வெண்ணிலவே கண்ணுறங்கு!

தன்னே ரிலாத தமிழே தமிழ்ப்பாட்டே
அன்னைநான்; உன்விழியில் ஐயம் ததும்புவதேன்?

என்பெற்ற அன்னையார் உன்பாட்டி இன்னவர்கள்
உன்தந்தை அன்னை உயர்பாட்டி இன்னவர்கள்!

என்னருமைத் தோழிமார் உன்தாய்மார் அல்லரோ?
கன்னற் பிழிவே கனிச்சாறே கண்ணுறங்கு!

சின்னமலர்க் காலசையச் செங்கை மலர்அசைய
உன்கண் உரைப்பதென்ன என்கண்ணே கண்ணுறங்கு!

தோழிமார் தாலாட்டு

தொகைமுத்துத் தொங்கலிட்ட தொட்டிலிலே அன்பே
நகைமுத்தின் பெண்ணான நன்முத்தே மானே!

தகையாளர் வையத்தில் தந்த திருவே
தொகைபோட்டு வாங்க ஒண்ணாத் தூய்அமிழ்தே கண்வளராய்!

கன்னங் கரிய களாப்பழத்தின் கண்ணிரண்டும்
சின்னஞ் சிறிய ஒளிநெற்றித் தட்டிலிட்டே

இன்னும் எமக்கே இனிப்பூட்டிக் கொண்டிருந்தால்
பொன்"உறக்க நாடு" புலம்பாதே கண்மணியே!

தங்கத் திருமுகத்தின் தட்டினிலே உன்சிரிப்பைப்
பொங்கவைத்தே எம்உளத்தைப் பொங்கவைத்துக் கொண்டிருந்தால்

திங்கள் முகத்துன் சிரிப்போடு தாம்கொஞ்ச
அங்"குறக்க நாட்டார்" அவாமறுத்த தாகாதோ?

செங்காந்த ளின்அரும்போ சின்னவிரல்? அவ்விரலை
அங்காந்த வாயால் அமிழ்தாக உண்கின்றாய்!

கொங்கை அமிழ்து புளித்ததோ கூறென்றால்
தெங்கின்பா ளைச்சிரிப்புத் தேனை எமக்களித்தாய்!

பஞ்சுமெத்தைப் பட்டு பரந்த ஒரு மேல்விரிப்பில்
மிஞ்சும் மணமலரின் மேனி அசையாமல்

பிஞ்சுமா விண்விழியைப் பெண்ணே இமைக்கதவால்
அஞ்சாது பூட்டி அமைவாகக் கண்ணுறங்காய்!

தங்கத்துப் பாட்டி தாலாட்டு

ஆட்டனத்தி யான அருமை மணாளனையே
ஓட்டப் புனற்கன்னி உள்மறைத்துக் கொண்டுசெல்லப்

போதுவிழி நீர்பாயப் போய்மீட்டுக் கொண்டுவந்த
ஆதிமந்தி கற்புக் கரசியவள் நீதானோ?

செல்வத் தமிழ்வேந்தர் போற்றும் செந்தமிழான
கல்விக் கரசி கலைச்செல்வி ஔவை

இனியும் தமிழ்காத்தே இந்நாட்டைக் காக்க
நினைத்துவந்தாள் என்னிலவள் நீதானோ என்கிளியே?

நாட்டு மறவர்குல நங்கையரைச் செந்தமிழின்
பாட்டாலே அமிழ்தொக்கப் பாடிடுவாள் நற்காக்கைப்

பாடினியார் நச்செள்ளை பார்புகழும் மூதாட்டி
கூடி உருவெடுத்தார் என்றுரைத்தால் நீதானோ?

அண்டும் தமிழ்வறுமை அண்டாது காக்கவந்த
எண்டிசையும் போற்றும் இளவெயினி நீதானோ?

தக்கபுகழ்ச் சோழன் தறுகண்மை பாடியவள்
நக்கண்ணை என்பவளும் நீதானோ நல்லவளே!

கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முற்றோன்றி மூத்த குடியின் திருவிளக்கே!

சற்றேஉன் ஆடல் தமிழ்ப்பாடல் நீநிறுத்திப்
பொற்கொடியே என்னருமைப் பொன்னேநீ கண்ணுறங்காய்!

மலர்குழல் பாட்டி தாலாட்டு

உச்சி விளாம்பழத்தின் உட்சுளையும் கற்கண்டும்
பச்சைஏ லப்பொடியும் பாங்காய்க் கலந்தள்ளி

இச்இச்சென உண்ணும் இன்பந்தான் நீ கொடுக்கும்
பிச்சை முத்துக் கீடாமோ என்னருமைப் பெண்ணரசே!

தஞ்சைத் தமிழன் தரும்ஓ வியம்கண்டேன்
மிஞ்சு பலிவரத்தின் மின்னும்கல் தச்சறிவேன்

அஞ்சுமுறை கண்டாலும் ஆவலறா உன்படிவம்
வஞ்சியே இப்பெரிய வையப் படிவமன்றோ

முகிழாத முன்மணக்கும் முல்லை மணமும்
துகள்தீர்ந்த சந்தனத்துச் சோலை மணமும்

முகநிலவு மேலேநான் உன்உச்சி மோந்தால்
மகிழ மகிழ வருமணத்துக் கீடாமோ?

தமிழர் தனிச்சிறப்பு யாழின் இசையும்
குமிக்கும் ஒருவேய்ங் குழலின் இசையும்

தமிழின் இசையும் சரியாமோ, என்றன்
அமிழ்தே, மலர்வாய்நீ அங்காப்பின் ஓசைக்கே;

இன்பத்து முக்கனியே என்னன்பே கண்ணுறங்கு
தென்பாண் டியர்மரபின் செல்வமே கண்ணுறங்காய்!

பிள்ளையைத் தூக்கும் முறை

அகவல்

நடுப்பகல் உணவுக்கு நல்வே டப்பன்
இல்லில் நுழைந்தான் "என்கண் மணியே
என்றன் அமிழ்தே" என்று கூவியபடி!
மைப்புரு வத்து மங்கை நகைமுத்துக்
கைப்புறத் தில்தன் கட்டழகு சுமந்து
வந்துதாழ் வாரத்தில் மணவாளனிடம்
காட்டி நின்றாள்! கண்டவே டப்பன்
அடங்கொணா மகிழ்ச்சியால் அருமை மகளை
எடுக்க விரைந்தான். "அதுதான் இயலாது!
கொள்அன்று; கொத்த மல்லி அன்று;
பிள்ளை அத்தான்" என்றாள் பெற்றவள்.
"பிள்ளையைத் தூக்கும் பெருந்திறம் தானும்
கொள்ளவே சொல்லிக் கொடு"வெனக் கேட்டான்.
வேடப்ப னுக்கு விளக்குவாள் துணைவி:
"ஆழியில் உருவமான அழகுமட் கலத்தை
இயற்றி யோர்க்கே எடுப்பது முடியும்;
சுட்டமட் கலத்தை எவரும் தூக்கலாம்!
இறுகா அமிழ்தின் இளகல் உடம்பை
உறுத்தாமல் தூக்க ஒருதிறம் வேண்டும்.
இன்னும் சொல்வேன் நன்று கேட்க:
குளநீர்த் தாமரை குழந்தையின் இளந்தலை!
அம்மலர்த் தண்டே அழகிய 'மெல்லுடல்'
தண்டுடல் மலர்த்தலை தாங்குமோ அத்தான்?
தலைஉடல் இரண்டையும் ஒருங்கு தாங்கி
உலைஅமிழ்தை வறியவள் ஒருத்திதூக் கல்போல்
தவறாது தூக்குவது தலையா கியகடன்
தெரிந்ததா அத்தான்" என்றாள் தெரிவை;
"கற்றேன் கணக்கா யரேகற் றபடி
நிற்கும் படியும் நிகழ்த்துக" என்றான்.
தூக்கிக் காட்டினாள் தோகை
தூக்கினான். "சரி" எனச் சொன்னாள் துணைவியே.

தந்தையின் தவறு

அறுசீர் விருத்தம்

வேடப்பன் உணவ ருந்தி
      மகளோடு விளையா டற்குக்
கூடத்தில் வந்து பார்த்தான்
      தூங்கிடும் குழந்தை கண்டான்!
தேடக்கி டைத்தல் இல்லாச்
      செல்வமே என்றெ டுத்தான்
வாடப் புரிந்த தாலே
      மகள்வீறிட் டழுதல் கண்டான்.

நகைமுத்து விரைந்து வந்தாள்
      "குழந்தையின் நலிவு நீங்கத்
தகும்படி தொட்டில் தன்னில்
      தாலாட்டித் தூங்கச் செய்தேன்;
அகத்தினில் அன்பு கொண்டீர்
      ஆயினும் குழந்தை தன்னை
மிகத்துன்பம் அடையச் செய்தீர்;
      விலக்கஇச் செய்கை" என்றாள்.

"குழந்தைதான் தூங்கும் போது
      எழுப்பினால் குற்ற மென்ன?
அழுதிடும் குழந்தைக் கான
      ஆறுதல் தூக்கந் தானோ?
ஒழுங்கோடு குழந்தை ஓம்பல்
      உனக்குத்தான் தெரியும் போலும்!
முழங்காதே பேச்சை வாயை
      மூடென்றான்" வேடப் பன்தான்.

அன்புள்ள துணைவன் ஆங்கே
      இதுசொல்லிக் கடைக்குச் சென்றான்;
துன்புற்றாள் நகைமுத் தாளும்
      துணைவரின் சினமே எண்ணி;
என்பெற்ற குழந்தைக் காகத்
      துணைவரின் வெறுப்பை ஏற்றேன்;
அன்பரைத் திருத்து தற்கும்
      அன்புதான் தூண்டிற் றென்னை.

இப்படி நினைத்தா ளாகி
      இல்லத்துப் பணிமு டித்தும்
கைப்புறக் குழந்தை தன்னைத்
      தோளிலே போட்டுக் காத்தும்
அப்புறம் பகலைத் தள்ளி
      இரவினில் அன்ப னுக்கே
ஒப்புறத் துணைபு ரிந்தும்
      இரவினில் உறங்கச் சென்றாள்.

படுக்கையின் விரிப்பு மாற்றிப்
      பக்கத்தில் குழந்தைக் கான
துடைக்கின்ற துணிகள் தேடித்
      தூயபல் விரிப்பும் தேடி
விடிவி ளக்கும் திருத்தி
      விலாப்புறத் திற்கு ழந்தை
குடித்தபால் எடுத்தல் கண்டு
      குட்டையால் தூய்மை செய்தே;

உடலினை ஒருக்க ணித்தே
      குழந்தையை மார்போ டொட்டித்
தடமலர் வலக்கை தன்னைத்
      தலைக்கணை மீது வைத்தும்
இடதுகை குழந்தை மேலே
      வில்லைப்போல் வளைய இட்டும்
கடுகள வசைதல் இன்றிக்
      கண்வளர் கின்றாள் அன்னை!

தாய்மையின் ஆற்றல்

அன்றுநள் ளிரவில் வேடன்
      விழித்தனன்; அருகில் உள்ள
தன்மனை தன்கு ழந்தை
      நிலைமையை நோக்க லானான்;
"என்மனை ஒருக்க ணித்தே
      இடக்கையைக் குழந்தை மீதில்
சின்னக் கூடார மாக்கிச்
      சேல்விழி துயில்கின் றாளே.

ஒருநூலே புரண்டா ளேனும்,
      தெருவினை ஒக்கச் செய்யும்
உருளையின் கீழ்ம லர்போல்
      ஒழியுமே பெற்ற பிள்ளை!
தெரியவே இல்லை இ·து
      தெரிவைக்கே" எனவே டப்பன்
அருகிலே அமர்ந்தி ருந்தான்
      அகன்றிட மனம்வ ராமல்!

மங்கையை எழுப்பு தற்கு
      வழியன்று கண்ட றிந்தான்:
அங்கவள் களைந்தெ றிந்த
      மலர்கண்ணி யைஅன் னாளின்
திங்களின் முகத்தில் போட்டான்!
      சேயிழை விழித்தா ளில்லை.
இங்கினிக் குழந்தை தன்னை
      எழுப்புவேன் என நினைந்தே;

மலர்கண்ணி தனில்அ விழ்ந்த
      மலரிதழ் ஒன்றைத் தூக்கம்
கலைத்திடக் குழந்தை மீது
      போட்டனன்! தாயின் கைதான்
மலரிதழ் தனைத் துடைத்து
      மற்றும்தன் இடம்போ யிற்றே!
தலைவனோ இதனைக் கண்டான்;
      தாய்மையின் ஆற்றல் கண்டான்.

தலைவிக்கு மதிப்புச் செய்தான்;
      தாய்மைக்கு வணக்கம் செய்தான்.
இலைஎன்பால் குழந்தை காக்கும்
      ஆற்றல்எட் டுணையும் என்றான்;
தலைமட்டும் இரண்டென் றாலும்
      குழந்தையும் தாயும் ஒற்றைக்
குலையேயாம்; உயிரும் ஒன்றே!
      உள்ளத்தின் கூறும் ஒன்றே!

எனக்கென்ன தெரியும் தாய்க்கும்
      இளங்குழந் தைக்கு முள்ள
மனத்திடத் தொடர்பு? மற்றும்
      வாயினாற் பேசார்; தாயும்
தனதரும் குழந்தை தானும்
      கண்ணாலும் மனத்தி னாலும்
தனித்துப்பே சிக்கொள் கின்றார்
      என்றுபோய் தான்து யின்றான்.

ஓராண்டு

வான்பார்த்துக் கிடந்த மேனி
      மண்பார்த்துக் கவிழ்ந்தும், பின்னர்
தேன்பார்த்த மலர்க்கை யூன்றிச்
      செம்மையாய்த் தவழ்ந்தும் நின்றும்
தான்பார்க்க அங்கும் இங்கும்
      தள்ளாடி நடந்தும், கெண்டை
மீன்பார்த்த கண்ணாள் பெண்ணாள்
      ஓராண்டு மேவல் உற்றாள்.

பட்டுப்பா வாடை கட்டிப்
      பச்சைப்பூச் சட்டை இட்டுக்
கட்டிய முல்லைக் கண்ணி
      கரும்பாம்பின் பின்னல் தன்னில்
நெட்டுறச் சூட்டி, நெற்றி
      நேர்உறச் சுட்டி வைத்து,
விட்டனள் அமிழ்தை ஆடத்
      தாழ்வார மீதில் அன்னை!

ஓடி வா

சிந்து கண்ணி

அமிழ்தே அமிழ்தே ஓடிவா-என்
அன்பின் விளைவே ஓடிவா
தமிழின் சுவையே ஓடிவா-என்
தங்கப் பாப்பா ஓடிவா
கமழும் பூவே ஓடிவா-என்
கண்ணின் மணியே ஓடிவா
குமியும் புகழே ஓடிவா-என்
குத்து விளக்கே ஓடிவா

பச்சைக் கிளியே ஓடிவா-என்
பாடும் தும்பி ஓடிவா
அச்சுப் பெண்ணே ஓடிவா-என்
ஆடும் கொடியே ஓடிவா
மெச்சும் குயிலே ஓடிவா-என்
விரியும் சுடரே ஓடிவா
தச்சுத் திறமை ஓடிவா-என்
தங்கப் புதையே ஓடிவா

வள்ளத் தேனே ஓடிவா-என்
வானம் பாடி ஓடிவா
வெள்ளப் பாலே ஓடிவா-என்
வீட்டு விளக்கே ஓடிவா
துள்ளும் கன்றே ஓடிவா-என்
தோகை மயிலே ஓடிவா
அள்ளும் சுளையே ஓடிவா-என்
அன்பின் கனியே ஓடிவா

முத்து நிலாவே ஓடிவா-என்
மும்மைத் தமிழே ஓடிவா
கத்தும் கடலே ஓடிவா-என்
கட்டிக் கரும்பே ஓடிவா
தொத்தும் கிளியே ஓடிவா-என்
தூண்டா விளக்கே ஓடிவா
கொத்துப் பூவே ஓடிவா-என்
குழந்தை அமிழ்தே ஓடிவா

செல்வப் பொருளே ஓடிவா-என்
செந்தா மரையே ஓடிவா
கல்விப் பொருளே ஓடிவா-என்
காவிரி ஆறே ஓடிவா
முல்லைக் கொடியே ஓடிவா-என்
மூசைத் தங்கம் ஓடிவா
அல்லிப் பூவே ஓடிவா-என்
அன்பின் அமிழ்தே ஓடிவா

தென்றற் காற்றே ஓடிவா-என்
செவ்விள நீரே ஓடிவா
குன்றாச் சுவையே ஓடிவா-என்
கொள்ளா அழகே ஓடிவா
ஒன்றா உணர்வே ஓடிவா-என்
ஓவியக் கனவே ஓடிவா
மன்றின் மணியே ஓடிவா-என்
மல்லிகை மலரே ஓடிவா

பாடும் சிட்டே ஓடிவா-என்
பருகும் சாறே ஓடிவா
நாடும் திருவே ஓடிவா-என்
நடைஓ வியமே ஓடிவா
சூடும் தாரே ஓடிவா-என்
சோலை நிழலே ஓடிவா
வாடா மலரே ஓடிவா-என்
வஞ்சிக் கொடியே ஓடிவா

தண்டை குலுங்க ஓடிவா-என்
சங்கத் தமிழே ஓடிவா
கெண்டை விழியே ஓடிவா-என்
கிள்ளை மொழியே ஓடிவா
பெண்டிர்க் கரசி ஓடிவா-என்
பேறே உயிரே ஓடிவா
ஒண்டொடியாளே ஓடிவா-என்
ஓடைப் புனலே ஓடிவா

அறுசீர் விருத்தம்

வேடப்பன் வந்தான் அங்கே
      விளையாடும் குழந்தை கண்டான்;
ஓடச்செய் கின்றாய் காலும்
      ஓயாதோ குழந்தைக் கென்றான்;
கோடைக்குக் குளிரே 'நான் ஓர்
      குதிரை, நீஅரசி' என்றான்;
கூடத்தில் மண்டி போட்டான்
      குழந்தையை முதுகில் கொண்டான்.

அப்பாக் குதிரை

சிந்துக் கண்ணி

அப்பாக் குதிரை ஆட்டக் குதிரை
அஞ்சாக் குதிரை ஏய் ஏய் ஏய்
தப்பாக் குதிரை தாவும் குதிரை
தளராக் குதிரை ஏய் ஏய் ஏய்
சப்பைக் குதிரை இல்லை இல்லை
தமிழக் குதிரை ஏய் ஏய் ஏய்
ஒப்பும் குதிரை ஓயாக் குதிரை
ஒற்றைக் குதிரை ஏய் ஏய் ஏய்!

பேசும் குதிரை பெருத்த குதிரை
பிழையாக் குதிரை ஏய் ஏய் ஏய்
தோசைக் குதிரை சோற்றுக் குதிரை
சோராக் குதிரை ஏய் ஏய் ஏய்
மீசைக் குதிரை வெற்றிக் குதிரை
வேட்டைக் குதிரை ஏய் ஏய் ஏய்
தேசுக் குதிரை தெற்குக் குதிரை
சேரன் குதிரை ஏய் ஏய் ஏய்!

சோறூட்டல்

அகவல்

உருக்கிய நெய்யும் பருப்பும் இட்ட
சோற்றுடன் மிளகுநீர் துளியள வூற்றிச்
சிறிய வள்ளத்தில் சேர்த்தெ டுத்துக்
குழந்தைக்குக் காக்கை காட்டி
விழுங்க வைப்பாள் மென்னகை முத்தே.

சிந்து கண்ணி

காக்கா காக்கா கண்ணாட்டி
கைப்பிள் ளைக்குச் சோறூட்டி
பாக்கியை நீஅள் ளிக்கொண்டே
பறந்து போஎன் கற்கண்டே.
ஆக்கிய சோறென் சிட்டுக்கே
அதுவா வேண்டும் எட்டிப்போ
தூக்கிக் கொண்டா போய்விடுவாய்?
சுருக்காய் வாங்கும் இன்னொருவாய்.

உன்வாய் பெரிய ஒளிவாயாம்
ஒண்டொடி வாய்தான் கிளிவாயாம்
தன்னால்உண்ணும் என்தங்கம்
தண்ணீர் குடிக்க வா அஞ்சும்?
சொன்னால் கேட்கும் என்பட்டும்
சோற்றை உண்ணும் இம் மட்டும்
இன்னும் காக்கா நெருங்கிவா
இதையும் உண்டு பறந்துபோ.

நிலாக் காட்டல்

அறுசீர் விருத்தம்

மேற்றிசை ஒளிவெள் ளத்தில்
      வீழ்ந்தது செங்க திர்போய்த்
தூற்றிய முத்துக் கொல்லை
      முழுநிலாத் தோற்றம் கண்டார்
காற்றிலோர் குளிரும் கண்டார்
      மாடியில், நிலாமுற் றத்தில்
ஏற்றினார் அமிழ்தைப் பெற்றார்
      எழில்நிலாக் காட்டு கின்றார்.

சிந்துக் கண்ணி

நிலா நிலா வாவா-ஒளி
நிறைவி ளக்கே வா வா
உலா வினாய் விண்ணில்-நீ
ஒளிபு ரிந்தாய் கண்ணில்
குலா வலாம் நாட்டில்-இனிக்
கொஞ்ச லாம்என் வீட்டில்
பலா மரம் உண்டு-நற்
பழமெ லாம்கற் கண்டு
நிலா நிலா வாவா-ஒளி
நிறைவி ளக்கே வாவா

அழகெ லாம்எ னக்கே-என்
அன்பெ லாம்உ னக்கே
முழுநி லாஎன் பூவே-உன்
முத்த மொன்று தேவை
பழக லாம்இ றங்கு-நற்
பைந்த மிழுண் டிங்கு
விழியி லேஒ ளிர்ந்தாய்-என்
மெய்யி லேகு ளிர்ந்தாய்
நிலா நிலா வாவா-ஒளி
நிறைவி ளக்கே வாவா

வானம் நீலத் தோப்பு-நீ
மங்கா தமத் தாப்பு
கூனி மீன்கள் மின்னும்-ஒளிக்
குட்டை நீஎன் றெண்ணும்
சீனத் துப்பால் கோப்பை-நீ
சிரிப்பு முகத்தையும் சாய்ப்பை
கானல் வெளியும் குளிரும்-கண்
காண மனமும் ஒளிரும்
நிலா நிலா வாவா-ஒளி
நிறைவி ளக்கே வாவா

விண்ணக் கடலில் தெப்பம்-நீ
விரித்த இலையில் அப்பம்
உண்ணக் குவித்த தளியல்-நீ
உரித்த கிழங்கின் அளியல்
பண்ணும் வெள்ளித் தட்டு-நீ
பச்ச ரிசியின் பிட்டு
வெண்பட் டான குடையே-நீ
விழுங்கி டும்பா லடையே
நிலா நிலா வாவா-ஒளி
நிறைவி ளக்கே வாவா

பேச்சு

அகவல்

மரப்பா வைகள் வைத்துவிளை யாடும்
அமிழ்தொடு நகைமுத் தமர்ந்தி ருந்தாள்;
மாவரசும் வந்தான்; மகள்வர வேற்றாள்
அமிழ்தை நோக்கி"நான் யாரம்மா?" என்றான்.

அமிழ்தம் "ஐயா" என்றாள். அதனால்
குன்றி யதுமுகம் கொதித்தது நெஞ்சம்
மாவர சுக்கு! மகளை நோக்கி
'யான் அயலானா? ஏன்என்னைத் தாத்தா
என்று சொல்ல வில்லை' என்றான்.
அதுகேட்டுத் "தாத்தா" என்றாள் அமிழ்து.
முகமும் மலர்ந்தது! மாவரசுக்(கு)
அகமும் மலர்ந்தது! நகைமுத்தும் அங்ஙனே!

தேவை

அகவல்

காலை உணவுண்டு கடைக்குப் புறப்படும்
வேடன் "என்ன வேண்டும்" என்றான்;
அமிழ்துதன் தேவையை அறிவிக் கின்றாள்;
"கோழி" "நாயிக் குட்டி" "அம்மா"
இதுகேட்டு நகைமுத் தியம்பு கின்றாள்;
"அத்தான் குழந்தை, 'அம்மா' என்றால்
என்போல் இன்னுமோர் அம்மா
அன்று கேட்டது! பொம்மை அம்மாவே."


குறளில் கோயில் இல்லை

அகவல்

நாடி முத்து வேடப் பனிடம்
"இன்றி யமையா ஒன்றுக் காகக்
கடன்பத்து ரூபாய் கொடு"வென்று கேட்டான்;
வேடன் கொடுப்பதாய் விளம்பினான்.அதற்குள்
அமிழ்து, திருக்குறள் ஒன்றை அங்கையில்
தூக்கி வந்து தொப்பென்று போட்டுக்
"கோவிலு காட்டுப்பா" என்று கூறினாள்.
"குறளில் கோயிலே இல்லை யம்மா"
என்றான் வேடன். இதனைக் கேட்ட
நாடி முத்து நவிலு கின்றான்:
"தில்லைக் கோயிலுக்குச் செல்ல எண்ணியே
பத்து ரூபாய் பணம்உன்னைக் கேட்டேன்.
கோயில் இல்லையா குறளில்?
ஆயில்என் பணத்துக் கில்லை அழிவே!"

சேறும் சோறும் தேன்

அகவல்

அறையில் தூங்கி யிருந்த அமிழ்து,
சிறகுவிரித் துதறிச் செங்கா லன்னம்
நடைதொடங் கியதென நடந்து, தாழ்வாரத்(து)
இடையி லிருந்த மைக்கூட்டை எடுத்து
கொல்லையில் முல்லைக் கொடியின் அடியில்
சாய்த்து நீலம் சார்ந்த சேற்றால்
சிற்றில் ஒன்று செய்து முடித்தபின்
தந்தை உண்ணும் தயிரின் சோற்றை
அங்கையால் அள்ளி ஆஆ என்றாள்!
அப்பனும் வாய்திறந் ததைவாங்கி உண்டான்;
தொடர்ந்து நடந்த திந்தத் தொண்டு,
சின்னவள் அன்னை யான திறத்தை
நகைமுத்துக் கண்டு மிகமகிழ்ந் திருந்தாள்.
சேறும் சோறும் தந்தைக்குத் தேனே!
நீலத் தயிரும் நிலாநிறத் தயிரே!
"அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்"எனச் செப்பிய
வள்ளுவர் வாய்ச்சொல் பொய்என
விள்ளுவர் உளரோ விரிநீர் உலகிலே!

அன்பு பெருகுக

அகவல்

அன்னை தங்கம் அமிழ்தொடு பேசித்
தலைக்கடை அறையில் நிலைக்கண் ணாடியின்
முன்னின்று தன்எழில் முகம்பார்த் திருந்தாள்.
தனித்துவே டப்பன் தாழ்வாரத் திருந்தான்.
இனிக்க அமிழ்தும் எதிர்வந்து நின்றாள்!
சுவரி லேதன் உருப்படம் தொங்கியது
கண்ட அமிழ்து கனிவாய் திறந்து
"இதில்நான் சின்னவள். இப்போது பெரியவள்"
என்றாள், "ஆம் ஆம்" என்றான் தந்தை!
"எப்படிப் பெரியவள் ஆனேன்" என்றாள்.
"உருப்படம் எடுக்கையில் ஓராண் டுனக்கே.
இப்போது மூன்றாண் டாயின" என்றான்.
"ஆண்டுகள் எப்படித் தாண்டும்" என்றாள்.
"நேரம் போகப் போக நேரே
ஆண்டும் போகும் அல்லவா" என்றான்.
"நேரம் போவதை நேரில் பார்க்கக்
கூடுமோ" என்று கூறினாள் அமிழ்து;
"பார்இதோ மணிப்பொறி நேரம்ஓ டுவதை
இருமுள் ஓடிக் காட்டும்" என்றான்.
"முள்ஓட வில்லையே" என்று மொழிந்தாள்.
"ஓடுவது தெரியாது ஓடுகின் றதுநாள்,
வளர்வது தெரியாது வளர்கின் றாய்நீ"
என்றுவே டப்பன் இயம்பு கின்றான்.
தங்கமும் தனது தலைமுடி நோக்குவாள்,
"நரைப்பது தெரியாது நரைக்கின் றதுமுடி"
என்று தனக்குள் இயம்புகின்றாள்.
"பழுப்பது தெரியாது பழுக்கின் றதுபழம்"
என்று கொல்லையில் இருந்து நகைமுத்தும்
பத்துத் திங்கள் நிறைந்த பலாப்பழம்*
தாங்கி நடந்து, தன்இடை நோவதாய்
ஏங்கி மாமியிடம் இசைக்க லானாள்.
"பெருகுவது தெரியாது பெருகுகின் றதுஉயிர்"
என்பதும் உண்மை போலும்!
அன்பு பெருகுக வைய அமைதிக்கே!

(*பலாப்பழம் - கருநிறைந்த வயிறு)

நடந்து வந்த கரும்பு

அகவல்

நல்வே டப்பனின் இல்லம் நிறைந்தது.
மாவரசு மலர்க்குழல் வந்திருந் தார்கள்;
மற்றும் இவர்களின் மக்களும் இருந்தனர்.
வேடப் பன்ஓர்பால் வீற்றிருக் கின்றான்.

எழில்நகை முத்தும் ஈன்றதன் நீலப்
பூவிழிச் செவ்விதழ்ப் புதுஇள மைந்தனை
"இளஞ் சேரன்"வாஎன இருகையில் ஏந்தி
ஒருபுறம் மயிலென உலவு கின்றாள்.

புகைப்படம் எடுக்கும் புலவரும் வந்தார்
முற்றத்தில் இருக்கை வரிசையில் முடித்தார்
யாவரும் வரிசையில் இருக்க லுற்றார்!
அமிழ்தம் எங்கே அனைவரும் எழுந்தார்.
அறையெல்லாம் பார்த்தார் அங்கெல்லாம் இல்லை.
கொல்லையில் நிலவுசெய் முல்லைக் கொடியும்
சின்னஞ் சிறிய செங்கதிர் போல
மன்னிய சாமந்தி மலர்ந்த செடியும்
குலுங்கு நீலாம்பரக் குள்ளச் செடியும்,
முத்துச் சிரிப்பு முழுப்பொன் னாடை
கருவிழி இவைபூத்த கட்டிக் கரும்பும்
அங்கே கூடி அழகுசெய் திருப்பதைக்
கண்டனர்; கண்ணே என்றுகை யேந்தினர்;
நீலாம்பரம் அங்ஙனே நின்றி ருந்தது!
முல்லைக் கொடியும் நல்ல சாமந்தியும்
அங்ஙனே நின்றி ருந்தன ஆயினும்,
கைதூக்கி 'அப்பா' என்று கனிதமிழ்க்
கட்டிக் கரும்பு மட்டும் கலகலத்
தண்டை பாடத் தாவி வந்தாள்.
புகைப்படப் புலவர், வகைப்பட எவரையும்
முற்றத்தில் உட்கார வேண்டினார்
உற்று நோக்கினார் உருக்கவர் பெட்டியே!*

(*உருக்கவர் பெட்டி - காமிரா)

புகைப்படம்

அகவல்

நடுநாற் காலியில் நகைமுத்துக் கைப்புறம்
அன்பிளஞ் சேரன் அண்டையில் அமிழ்து
வேடன் முதலியோர் பீடுற அமைந்தார்.
பொருந்திய வண்ணம் புறத்தின் அழகைப்
புகைப்படம் எடுத்தே; அகத்தின்
மகிழ்ச்சியை வான்படம் எடுக்க விட்டே.

திராவிட மக்கள் வாழிய

அகவல்

அமிழ்து சரியாய் ஆறாண் டடைந்தாள்;
தமிழ்தரும் தனித்தமிழ்ப் பள்ளி சென்றே
அதோவரு கின்றாள் அங்கைச் சுவடியோடு;
வேடன் நகைமுத்து வீட்டில் அப்போதில்
இளஞ்சே ரனைநீ யார்என்று கேட்டுப்
பதிலை எதிர்பார்த் திருந்தார். அவனோ
தன்மார்பு காட்டி 'நான் தம்பி' என்றான்.
"தமிழன் என்றுநீ சாற்றடா தம்பி"
என்றே இயம்பி அமிழ்து வந்தாள்.
வாழிய தமிழ மக்கள்!
வாழிய நற்றமிழ் வையகம் இனிதே!



கள்ளுண்ணாமை

கள்ளுண்ணாமை குறள் 921 இலிருந்து 930 முடிய குறள் 921: உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார் . பொருள்:...