google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil

ஞாயிறு, 30 ஜனவரி, 2022

பெண்வழிச் சேறல்

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது.
901

மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர், சிறந்த பயனை அடையமாட்டார், கடமையைச் செய்தலை விரும்புகின்றவர் வேண்டாத பொருளும் அதுவே.

பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்.
902

கடமையை விரும்பாமல் மனைவியின் பெண்மையை விரும்புகின்றவனுடைய ஆக்கம், பெரியதொரு நாணத்தக்க செயலாக நாணத்தைக் கொடுக்கும்.

இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.
903

மனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை ஒருவனுக்கு எப்போதும் நல்லவரிடையே இருக்கும் போது நாணத்தைத் தரும்.

மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்தல் இன்று.
904

மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.

இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.
905

மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.

இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்.
906

மனைவியின் தோளுக்கு அஞ்சி வாழ்கின்றவர் தேவரைப் போல் இவ்வுலகில் சிறப்பான நிலையில் வாழ்ந்த போதிலும் பெருமை இல்லாதவரே ஆவர்.

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.
907

மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தை தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது.

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர்.
908

மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தமது நண்பர்க்கு உற்ற குறையையும் செய்து முடிக்க மாட்டார், அறத்தையும் செய்ய மாட்டார்.

அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்.
909

அறச் செயலும் அதற்குக் காரணமாக அமைந்த பொருள் முயற்சியும், மற்ற கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை.

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்(கு) எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.
910

நன்றாக எண்ணுதல், பொருந்திய நெஞ்சத்தோடு தக்க நிலையும் உடையார்க்கு எக்காலத்திலும் மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை.

இறந்தவருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி

என் அப்பா திரு மு. நடராஜன் ஆச்சாரி. அவர் வயது மூப்படைந்து 
தன் 93 ஆம் வயதில் 15.08.2021 அன்று காலமானார். 

முன்னதாக அவருக்கு 26.06.2021 இல் பொன்னமராவதி புதுப்பட்டியில் அவர் வாழ்ந்த வீட்டிலேயே கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. அதனால் நன்மையே.

இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்படவில்லை.

மகன்களும் மகளும் மருமகனும் சூழ 
இயற்கை எய்தினார்.

அவரது இறப்பை நான் ஆன்லைனில் பதிவு செய்து இருக்கிறேன். அதற்கான ரெஃபரன்ஸ் நம்பர் 38238 ஆகும். இன்னும் ஊருக்குப் போய் இறப்புச் சான்றிதழைப் பெறவில்லை.

ஆனால் அவர் இரண்டாம் முறையாக காரையூரில் தடுப்பூசி போட்டுக் கொண்டார் என சில மாதங்களுக்கு முன்பு சர்ட்டிபிகேட் வந்தது. அதை கோவின் இணையதளத்தில் சொல்லி நீக்கினேன். 

ஆனால் அவர் இரண்டாம் தடுப்பூசியை 29.01.2022 ஆம் தேதி அன்று பொன்னமராவதியில் போட்டுக் கொண்டார் என்று மறுபடியும் சர்ட்டிபிகேட் வந்துள்ளது.

மீண்டும் நான் இதை கோவின் தளத்துக்குச் சென்று சொல்ல வேண்டியுள்ளது. அப்படிச் செய்தால் மறுபடியும் சில நாட்களுக்குப் பின் ஒரு நாளில் எங்கோ போட்டுக் கொண்டார் என்று வருமா?

சொல்லாமல் இருந்தால் பின்னர் மூன்றாம் ஊசி போடப்பட்டது என்று வருமா?
மறைந்தவரின் பழைய ஃபோட்டோ.

 பிற பின்பு
அன்புடன்
ஆறுமுகம் நடராஜன்
தற்போது மதுரையிலிருந்து.

புதன், 26 ஜனவரி, 2022

கொடியது, இனியது, பெரியது, அரியது

முருகன் கொடியது, இனியது, பெரியது, அரியது எவை என்று ஒளவையாரிடம் கேட்டான். அதற்கு ஒளவையார் விடையாக நெடிய வெவ்வேலோய், தனிநெடு வேலோய், எரிதவழ் வேலோய், வரி வடிவேலோய் என்று தொடங்கும் நான்கு பாடல்களைப் பாடினார்.

முருகனே வேலை ஏந்தியுள்ள வேலவன் ஆவான். 

கொடியது

கொடியது கேட்கின் நெடியவெவ் வேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது;
அதனினும் கொடிது இளமையில் வறுமை;
அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்;
அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்;
அதனினும் கொடிது இன்புற
அவர்கையில் உண்பதுதானே.

இந்த உலகில் மிகவும் கொடுமையானது வறுமைதான். அந்த வறுமையும் இளமைப் பருவத்தில் வந்தால் மிக மிகக் கொடுமையானது. அத்தகைய வறுமையை விடக் கொடுமையானது தீராத கொடிய நோய் ஆகும். தீராத கொடிய நோயைவிடக் கொடுமையானது அன்பே இல்லாத பெண்ணுடன் வாழ்வது. அதைவிடக் கொடுமையானது அந்தப் பெண்ணிடம் உணவைப் பெற்று உண்பது ஆகும்.

இனியது

இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
இனிது இனிது ஏகாந்தம் இனிது;
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்;
அதனினும் இனிது அறிவினர்ச் சேருதல்;
அதனினும் இனிது அறிவுள்ளாரைக்
கனவினும் நனவினும் காண்பது தானே!

இந்த உலகில் மிகவும் இனிமையானது தனிமையில் இருப்பதுதான். அதைவிட இனிமையானது இறைவனை வணங்குவது. இறைவனை வணங்குவதை விட அறிவு உடையவர்களைச் சேர்ந்து வாழ்வது இனிமையானது. அதைவிட இனிமையானது கனவிலும் நனவிலும் அறிவு உடையவர்களைப் பார்த்துக் கொண்டு இருப்பது ஆகும்.

பெரியது

பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்!
பெரிது பெரிது புவனம் பெரிது;
புவனமோ நான்முகன் படைப்பு;
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்;
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்;
அலைகடல், குறுமுனி அங்கையில் அடக்கம்;
குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன்;
கலசமோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்;
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்;
உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்;
இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்;
தொண்டர் தம்பெருமை சொல்லவும் பெரிதே!

உலகில் மிகப்பெரியது இந்த உலகம்தான்.  இந்த உலகமோ நான்முகனால் படைக்கப்பட்டது. எனவே நான்முகன்தான் பெரியவன். நான்முகனோ திருமாலின் கொப்பூழில் (தொப்புள்) தோன்றியவன். திருமாலோ அலைகடலில் தூங்குகிறவன். திருமாலைத் தாங்கும் கடல்தான் பெரியது என்றால், அந்தக் கடலும் அகத்தியனின் உள்ளங்கையில் அடங்கியது. அந்த அகத்தியரும் கலயம் எனப்படும் சிறு மண்குடத்தில் அடங்கி இருந்தவர். அந்தக் கலயமோ இந்தப் பூமியில் உள்ள மண்ணால் செய்யப்பட்டது. பூமிதான் பெரியது என்றால், இந்தப் பூமியை ஆதிசேடன் என்னும் பாம்பு தனது ஒரு தலையில் தாங்கியிருக்கிறது. அந்தப் பாம்பை, சிவபெருமானின் மனைவியாகிய உமா என்னும் உமையவள், தனது விரலில் மோதிரமாக அணிந்துள்ளாள். அந்த உமையவளோ சிவனது உடலின் ஒரு பாதியில் ஒடுங்கியிருக்கிறாள். அந்தச் சிவனோ அடியவர்களின் உள்ளத்தில் ஒடுங்கியிருக்கிறான். எனவே அடியவர்களின் பெருமைதான் உலகில் பெரியது.

அரியது

அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிது அரிது மானிடர் ஆதல் அரிது;
மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது.
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது;
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வராயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே.

உலகில் மிகவும் அரியது மானிடராகப் பிறப்பது தான். மானிடராகப் பிறந்தாலும் கூன், குருடு, செவிடு முதலிய குறைகள் இல்லாமல் பிறத்தல் அரியது. இந்தக் குறைகள் நீங்கிப் பிறந்தாலும் அறிவும் கல்வியும் விரும்பிக் கற்றவனாக ஆதல் அரியது. அறிவும் கல்வியும் பெற்றாலும் பிறருக்குக் கொடுக்கும் ஈகையும் நோன்பும் உடையவராய் இருத்தல் அரியது. ஈகையும் நோன்பும் உடையவராக வாழ்கின்றவர்களுக்கு வான்உலகப் பெருவாழ்வு கிடைக்கும்.

பெரியவை எவை?

1. உலகத்தை விடப் பெரியது எது?
2. கடலை விட ஆழமானது எது?
3. மலையை விடப் பெரியது எது?

பதில்களாக மூன்று குறள்கள்:

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் 
நன்மை கடலின் பெரிது.

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் 
மலையினும் மாணப் பெரிது.

கருத்து:

1. உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.

2. இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிடப் பெரிதாகும்.

3.  நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.

செவ்வாய், 25 ஜனவரி, 2022

கொடி ஏற்றுதலும் பறக்கவிடுதலும் வேறுபாடு

சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றுவதைப் போல குடியரசு தினத்தன்று செய்வது இல்லை. இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது.

சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றப்படும். அதாவது கொடியானது கொடிக்கம்பத்தின் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் இருந்து மேல் நோக்கி ஏற்றப்பட்டு, கொடியை மடித்திருந்த சுருக்கு அவிழ்க்கப்பட்டு பறக்கவிடப்படும். இது கொடி ஏற்றுதல் (Flag hoisting) எனப்படும் . 

குடியரசு தினத்தன்று தேசியக் கொடி பறக்கவிடப்படும். அதாவது, முன்னரே கம்பத்தின் உச்சியில்  ஏற்றிக் கட்டப்பட்டுள்ள  கொடி, சுருக்கு அவிழ்க்கப்பட்டுப் பறக்கவிடப்படும். இது "கொடியைப் பறக்கவிடுதல்" (flag unfurling) எனப்படும்.

We hoist the flag on Independence Day, but unfurl it on Republic Day.


திங்கள், 24 ஜனவரி, 2022

புதிர்

இரண்டு அப்பாக்கள் தங்களுடைய மகன்களுக்கு ரொக்கப் பரிசு கொடுத்தனர். ஒருவர் தன் மகனுக்கு 150 ரூபாயும், மற்றொருவர் 100 ரூபாயும் கொடுத்தார்கள். இரண்டு மகன்களும் சேர்ந்து தங்கள் கையிருப்பை எண்ணிப் பார்த்தபோது, மொத்தமாக 150 ரூபாயே இருந்தது. இது எப்படி?

விடை :
தாத்தா, தன் மகனுக்கு 150 ரூபாய் கொடுக்கிறார். அதிலிருந்து அப்பா (தாத்தாவின் மகன்), தன் மகனுக்கு (தாத்தாவின் பேரனுக்கு) 100 ரூபாயைத் தருகிறார். எனவே, மொத்தமே 150 ரூபாய்தான்.


வியாழன், 20 ஜனவரி, 2022

மூன்றாம் முறை தடுப்பூசி

மூன்றாம் கோவிட் தடுப்பூசியை இன்று நான் போட்டுக் கொண்டேன். இது பூஸ்டர் டோஸ். முன்ஜாக்கிரதைக்காகப் போடப்படுவது. ஒரே சான்றிதழில் மூன்று முறை போட்டுக்கொண்ட விபரம் உள்ளது.
அன்புடன் 
பொன்னமராவதி புதுப்பட்டி ஆறுமுகம் நடராஜன், மதுரை சம்பந்தர் ஆலங்குளத்தில் இருந்து.

சிவபெருமான் எமனை உதைத்தார்

  திருக்கடையூரில் சிவபெருமான் மார்க்கண்டேயனைக் காக்க எமனை உதைத்த வீரட்ட நிகழ்வு  மிருகண்டு முனிவருக்கும் அவரது மனைவி மருத்துவதிக்கும் பல கால...